Skip to content
Post Views: 3,506
நான் தேடும் காதல் நீ….13
தனது படுக்கையில் படுத்திருந்த ராஜாங்கத்திற்கு இன்று தான் கண்கள் ஒளிர்வுடன் இருந்தது. தன் பேரன் தீர்த்தாவை கண்டிப்பாக கூட்டிவருவேன் என்று கூறியதிலிருந்து சற்று தெம்புடன் இருந்தார் மனிதர்.அதுவும் இன்று தீர்த்தாவும்,சிவன்யாவும் வருகிறார்கள் என்று நிமலன் கூறியிருக்க நொடிக்கு ஒருதரம் அவரின் பார்வை வாயில் கதவில் படிந்து மீண்டு கொண்டிருந்தது.அந்த நேரத்தில் தான் நிமலனும்,தீர்த்தாவும் சேர்ந்தார் போல் வந்தனர்.அவர்களின் பின்னே சிவன்யா வந்து கொண்டிருந்தாள்.
ராஜாங்கத்திற்கு நிமலனையும்,தீர்த்தாவையும் தவிர மற்றவர்கள் கண்ணிற்கு தெரியவில்லை.இருவரின் ஜோடி பொருத்ததை தான் பார்த்தபடி இருந்தார்.அதற்குள் அவரை நொருங்கிவிட்ட நிமலன்,
“தாத்தா…இதோ உங்க பேத்திங்களை கூட்டிட்டு வந்துட்டேன்….”என்று இருவரையும் அறிமுகம் செய்ய,இருவரையும் அருகே அழைத்தவர் இருவரின் தலையிலும் கை வைத்து ஆசிர்வாதம் செய்தார்.தீர்த்தாவிற்கு அவரை பார்த்ததும் தன் தாத்தாவின் நியாபகம் தான் வந்தது.எத்தனை எத்தனை கஷ்டங்கள் தாங்கள் பட்டிருப்போம் அவர் ஒருவர் எங்கள் வாழ்வில் இல்லை என்றால்.அதனை நினைத்தவளின் கண்கள் கலங்க,
Advertisement
“நாச்சி தாத்தா நியாபகம் வந்துடுச்சா….”என்று நிமலன் அவளை பார்த்து கேட்க,தீர்த்தா எந்த பதிலும் தரவில்லை,ஆனால் சிவன்யாவிற்கு அவளின் நாச்சி தாத்தாவை யாருக்கும் விட்டு தர மனமில்லை அதனால்,
“அவரு ஒண்ணும் உங்க தாத்தா இல்லை….எங்க தாத்தா….”என்று சிறு பிள்ளை போல கூற அங்கு கூடியிருந்த அனைவருமே சிரித்துவிட்டனர்.
“ஆமா ஆமா…உன் தாத்தா தான்….”என்று நிமலன் சிரித்தபடியே கூற,தீர்த்தா இது உனக்கு தேவையா என்பது போல சிவன்யாவை பார்த்து வைத்தாள்.
Advertisement
“இல்ல க்கா அது….”என்று ஏதோ கூற வந்தவளை,
Advertisement
“போதும் இப்ப எதுவும் பேசாத….”என்று பல்லிடுக்கில் கூற,
“எப்ப பாரு அவளை மிரட்டிட்டு தான் இருப்பியா நீ….”என்று நிமலன் தீர்த்தாவிடம் கேட்க,அவனை முறைத்தவள்
“ஆமா நான் அப்படி தான்….நாங்க கிளம்புறோம்….”என்று கூற,அதுவரை இருந்த இளக்கமான சூழல் மாறியது,
Advertisement
“தீர்த்தாமா….கொஞ்ச நேரம் என்கூட இருடா…உன்கிட்ட பேசனும்….”என்று ராஜாங்கத்தின் குரல் மிக தீனமாக ஒலித்தது.
“கொஞ்ச நேரம் இரு….தாத்தாவுக்காக ப்ளீஸ்….”என்று நிமலன் கூற,அவனையே ஆச்சிரியமாக பார்த்துக் கொண்டு இருந்தார் செல்வம்.இப்படியெல்லாம் பேசுபவன் இல்லை நிமலன்.அவனின் வார்த்தைகளில் எப்பொதும் தெளிவும்,அழுத்தமும் இருக்கும் இதுபோல் எல்லாம் கெஞ்சி எல்லாம் பார்த்தது இல்லை.
“எனக்கு உங்க கூட கொஞ்சம் பேசனும்….”என்றவரின் கைகள் நடுக்கத்துடன் நீள,தீர்த்தா அவரின் பக்கத்தில் வந்தாள் கூடவே சிவன்யாவும்.இருவரின் கைகளையும் பற்றிக் கொண்டவர் அதில் தன் தலை வைத்து மன்னிப்பு கேட்க மிகவும் சங்கடமான சூழல்,
“இது இதெல்லாம் வேண்டாம்….”என்றவளின் குரலே மிக பலவீனமாக ஒலித்தது.
“தாத்தா என்னதிது….எந்திரிங்க…உங்களை ரொம்ப ஸ்டையின் பண்ணிக்காதீங்க……”என்று நிமலன் அவரை நிமர்த்தி அமர வைக்க,
“இல்லப்பா….இல்ல எனக்கு எந்த கஷ்டமும் இல்லை….என்னைவிட இந்த இரண்டு பிள்ளைகளும் தான் பெரிய பெரிய கஷ்டத்தையெல்லாம் பார்த்துட்டாங்க….அதுக்கு நானும் ஒரு காரணம்…..”என்றவரின் பார்வை செல்வத்தை துளைத்தது.அவர் பார்வையின் வீரியத்தை தாங்க முடியாமல் செல்வம் தலைகுனிய,
“இனி நீங்க தலைகுனிஞ்சாலும் ஒண்ணும் மாற போறது இல்லை….இனி மாற்றம் வரணும்னா அது என் பேரனால தான் முடியும்….அவன் தான் செய்வான்….”என்றவரின் கண்கள் தீர்த்தாவையும்,நிமலனையும் ஆசையாக வருட,செல்வத்துக்கு புரிந்தது தன் மாமனாரின் மனநிலை.அவருமே இதை பற்றி தானே பேச நினைத்துக் கொண்டிருந்தார்.
நிமலனுக்கு இதெல்லாம் புரியவில்லை,
“ஆமா தாத்தா…நான் இனி அடிக்கடி உங்க பேத்தியை இங்க கூட்டிட்டு வரேன்….”என்று சிரித்தபடி கூற,
“என்ன அடிக்கடி வரனுமா….”என்று சிவன்யா பீதியுடன் பார்க்க,தீர்த்தாவோ நிமலனை முடிந்த மட்டும் முறைத்துக் கொண்டிருந்தாள்.அவளுக்கு ராஜாங்கத்தின் மனநிலை புரியவில்லை.ஏதோ வயது முதிர்வால் பேசிக் கொண்டிருக்கிறார் என்று தான் நினைத்தாள்.
“அதெல்லாம் வேண்டாம்டா பேரா…என் பேத்திகளை என்கூடவே வச்சிக்க நான் ஒரு யோசனை வச்சிருக்கேன்….அதுக்கு நீ தான் உதவி பண்ணும்…”என்று பூடமாக கேட்க,மற்ற நாளாக இருந்தால் நிமலன் இதையெல்லாம் கவனித்து இருப்பானோ என்னவோ இன்று தீர்த்தாவை சீண்டுவதில் கவனமாக இருந்ததால் கவனிக்க தவறிவிட்டான்.தீர்த்தாவும் இங்கு வருவதா வேண்டாமா என்ற குழப்ப நிலை அத்துடன் அமரனின் புறக்கணிப்பு என்று இரு மனசுழலில் மாட்டிக் கொண்டதால் அவளும் கவனிக்கவில்லை.ஆனால் அங்கிருந்த பெரியவர்கள் அனைவரும் கவனித்துவிட்டனர்.சதாசிவம் முதற்கொண்டு ராஜாங்கத்தின் மனநிலை புரிந்துவிட்டது.
“நான் உதவி பண்ணாம…வேற யார் தாத்தா பண்ணுவா…..சொல்லுங்க செஞ்சிடலாம்….”என்று தீர்த்தாவை சீண்டல் பார்வை பார்த்துக் கொண்டே அவன் கூற,
“எனக்கு தெரியும் ராஜா…நீ இதை தான் சொல்லுவனு…..”என்றவர் அடுத்து பேசும் முன்,
“மாமா…உங்களுக்கு மாத்திரை சாப்பிடனும் இல்ல டையம் ஆகுது….இருங்க கொண்டுவர சொல்லுறேன்….”என்ற செல்வம் மாமனாரிடம் நெருங்கி வர,தீர்த்தாவும்,சிவன்யாவும் நகர்ந்து கொண்டனர்.
ராஜாங்கத்தின் காதருகில் குனிந்த செல்வம்,
“மாமா…நான் நினைச்சதை நீங்க பேசிட்டீங்க…ஆனா மேற்கொண்டு நான் பேசிட்டு சொல்லுறேன்…….அவசரபட வேண்டாம்…..”என்று மிக மெல்லிதாக கூற,
“நான் போறதுக்குள்ள என் பேரன்,பேத்தி கல்யாணத்தை பார்க்கனும்…நீங்க தான் இதை செய்யனும்….”என்றவரின் பார்வை எதிரில் நின்று பேசிக் கொண்டிருந்த இருவரிடம் தான்.
“கண்டிப்பா நல்லது நடக்கும்னு நம்புவோம்….நாங்க வெளில இருக்கோம்….என்று கூற,
“நாங்க கிளம்புறோம்…நேரமாகுது….”என்று தீர்த்தாவும் இதற்காக தான் காத்துக் கொண்டிருப்பது போல் கூறிவிட்டு வெளியில் சென்றுவிட.
“யப்பா….கார மொளகா….உன்னை பத்திரமா நானே டிராப் பண்ணுறேன்….ஓரு அரைமணிநேரம் இருந்துட்டு போ….”என்று பேசிக் கொண்டே நிமலன் தீர்த்தாவின் பின் சென்றான்.அவர்கள் சென்றவுடன் அடுத்த நொடி சதாசிவம் செல்வத்திடம் வெடித்துவிட்டார்.
“என்னடா நடக்குது இங்க….என்ன நினைச்சிக்கிட்டு இருக்க நீ…..”என்று சதாசிவம் மற்ற இருவரையும் பிடித்துவிட்டார்.ஏதோ வயோதிகம் பார்க்கவேண்டும் என்று தான் தீர்த்தாவை இங்கு கூட்டி வந்தது ஆனால் இங்கு இவர்கள் பேசுவதை பார்த்தவுடன் அவருக்கு இரத்த அழுத்தம் கூடி தான் போனது.
“நான் ஏதோ பிள்ளைகளை பார்க்கனும் கூட்டி வந்தா என்ன வேலை பார்த்துக்கிட்டு இருக்க நீ….இதெல்லாம் சரியில்லை இனி என்ன சொன்னாலும் நான் கூட்டிட்டு வரமாட்டேன்….”என்று சத்தம் போட,
“டேய் நான் சொல்லுறத கேளுடா….என் மனசுல உள்ளதை மாமா பேசிட்டார்….”
“ஓகோ….அப்ப சார் முன்னாடியே இந்த யோசனையில தான் வர சொன்னதா….நீ திருந்தவே மாட்டல்ல….”என்றவரின் கை பிடித்த செல்வம்,
“நான் சொல்லுறத ஒரு நிமஷம் கேளு…அப்புறம் முடிவு எடு….ப்ளீஸ்….என் கூட வா….”என்று அவரை பக்கத்தில் இருக்கும் தன் தனிப்பட்ட அறைக்கு அழைத்து சென்றார்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
“தம்பி வெங்காய லோடு ஏத்தியாச்சு…எந்ததெந்த கடைக்கு போடனும் லிஸ்ட கொடுங்க போட்டுட்டு வந்துடுறேன்….”என்று அமரனின் முன் வேலையாள் ஒருவர் நின்று கொண்டு கேட்டு கொண்டிருக்க அவனோ ஏதோ தீவிர யோசனையில் அமர்ந்திருந்தான்.அவரோ இருமுறை அழைத்து பார்த்துவிட்டு வெளியே வேலையில் இருந்த கதிரிடம் கேட்க,
“இப்ப தான சொல்லிக்கிட்டு இருந்தான்…ஏன் உள்ள இல்லையாண்ணா….”
“தம்பி உள்ள தான் இருக்கு….ஆனா ஏதோ யோசனையாவே இருக்கு நானும் இரண்டு தடவை கூப்பிட்டு பார்த்துட்டேன்….”என்று கூற,
“இவனை…என்னதான் பிரச்சனையோ…”என்று தலையில் அடித்துக் கொண்டு சென்றவன் அவரிடம் கடை முகவரிகளை கொடுத்து அவரை அனுப்பிவிட்டு வந்தான் அமரனிடம்,அமரனோ தன் ஒற்றை விரலால் தன் நெற்றியில் உள்ள தழும்பை கீறியபடி ஆழ்ந்த யோசனையில் இருக்க,
“டேய் அமரா…டேய்….”என்று அவனின் தோள்களை உலுக்க,அதுவரை இருந்த நினைவு அறுபட்டவன்,
“ஆங்…என்ன தீர்த்தா வந்துட்டாளா….”என்று கேட்டவாரே எதிரில் இருந்த கடையை நோட்டம் விட,
“வரலை….”என்ற கதிரின் பதிலில் முகத்தில் இறுக்கம் மேலும் ஏறியது,
“போனா போன இடம்….அறிவுகெட்டவ…போனும் எடுத்துட்டு போனது போல இல்லை….”என்றவன் வார்த்தைகளை தன் பல்லிடுக்கில் யாரும் அறியா வண்ணம் கடித்து துப்ப,கதிருக்கு அமரனின் கோபம் புதிதாக இருந்தது.
“ஏன்டா திட்டுற…..அவளுக்கு என்ன வேலையோ….அதோட அது அவங்க குடும்ப விஷயம் நாம ஏன் தலையிடனும்…..”என்ற கதிருக்கு இப்போது நூலின் பிடி சற்று பிடிபட துவங்கியது,ஆனாலும் நண்பன் அழுத்தக்காரன் ஆகிற்றே அதனால் போட்டு வாங்க நினைத்தான்.சாதாரண நாளாக இருந்தால் அமரன் இதை கண்டு கொண்டிருப்பான் ஆனால் இன்று அவனின் நினைவு முழுவதும் தீர்த்தா நிரம்பியிருக்க அவனால் வேறு எதுவும் யோசிக்க முடியவில்லை.
“குடும்பமாம் குடும்பம்….அவனுங்கள பார்த்தாலே எரிச்சலா வருது….”என்றவன் முகத்தில் கோபம் கூடிக் கொண்டே போனது.
“ஓகோ அப்படி போகுதா விஷயம்…..”என்ற நினைத்த கதிர் நண்பனை மேலும் சீண்டும் நோக்குடன்,
“நீ தானடா சொன்ன இது அவங்க குடும்ப விஷயம்னு….இப்ப ஏன் நீ திட்டிக்கிட்டு இருக்க…”
“கொலவெறில இருக்கேன்….உன்னை கொன்னுட போறேன்….”என்று எடை கல்லை எடுக்க,அவ்வளவு தான் கதிருக்கு விஷயம் புலப்பட்டுவிட,
“அடேய் நண்பா….நிஜமாடா…..”என்று அவனை பாய்ந்து கட்டிக் கொள்ள,
“டேய் லூசு….என்னடா…நானே அவ இன்னும் வரலை கடுப்புல இருக்கேன்…நீ வேற உயிரை எடுத்துக்கிட்டு…”என்று அவனை தள்ள,
“எனக்கு புரிஞ்சு போச்சு…எனக்கு புரிஞ்சி போச்சு….”என்று கதிர் கத்த அவனை மேலும் கீழும் பார்த்தவன்,
“சரிதான் முழுலூசாவே மாறிட்டியா….”என்ற அமரனின் கண்கள் என்னவோ எதிரில் இருந்த கடையின் மீது தான்.காலை சென்றவள் மதியம் தான்ட போகிறது இன்னும் வரவில்லை மனதில் ஏதோ பதட்டம் கூடிக் கொண்டே போனது அமரனுக்கு.
“இன்னைக்கு தான என் நண்பன் என் மண்டையில பல்பு ஏத்தி இருக்கான்….அதான் மாறிட்டேன் போல….”
“ஏய் ஒழுங்கா பேசு இல்லை கிளம்பு…இல்ல இல்ல முதல்ல அவளுக்கு போன் பண்ணு எங்க இருக்கானு கேளு….”என்று கேட்டுவிட கதிரின் மனது குத்தாட்டம் தான் போட்டது.அதுவும் அமரனின் முகத்தில் தெரிந்த பரிதவிப்பு அவனின் மனதை முழுதாக காட்டிவிட,
“ஏன் மச்சான் என்கிட்ட சொல்லலை…”
“என்னடா சொல்லலை….முதல்ல போன் பண்ணு அவளுக்குனா நீ என்கிட்ட லூசு மாதிரி பேசிக்கிட்டு இருக்க…”என்று அமரன் காய தொடங்க,
“தீர்த்தாவை விரும்புறியா…..”என்ற கதிரின் கேள்வியில் அமரன் செயலற்று தான் நின்றுவிட்டான்.
“அமரா….”என்றவன் தோள்களை தொட்ட கதிர்,
“என்னடா இது தான் உங்க இரண்டு பேருக்குள்ள பிரச்சனையா….எனக்கு கொஞ்சம் சந்தேகம் தான் ஆனாலும் இன்னைக்கு உன் முகம் காட்டி கொடுத்துட்டு….”என்று கூற அமரனால் எதுவும் கூற முடியவில்லை.இதுவரை மற்றவர்கள் கண்களுக்கு தெரியாமல் இருந்த ஒன்று இன்று வெளிவர தொடங்கியிருக்கிறது.
“முதல்ல அவளுக்கு போன் பண்ணு எடுக்குறாளா பாரு….இல்லை அந்த வக்கீலுக்கு போன் பண்ணு…”என்று அமரன் கூறிக் கொண்டே வெளியில் வர,தீர்த்தாவின் கடையின் வாயிலில் நின்றது நிமலனின் கார்.அதிலிருந்து இறங்கிய தீர்த்தா மறுபக்கம் வந்து நிமலனின் தலையில் கொட்டி கொண்டிருக்க அதனை பார்த்த அமரனின் முகம் கோபத்தில் சிவந்துவிட்டது.அதுவரை அவள் இன்னும் வரவில்லை என்ற பயத்தில் இருந்தவனுக்கு இப்போது நிமலனுடன் அவளை பாரக்கவும் உள்ளம் நிதானமின்றி துடிக்க,தனது புல்லட்டை வேகமாக உதைத்து உறுமி சப்தம் எழுப்பினான் எப்போதும் அவனை திரும்பி பார்ப்பவள் இன்று அவனை கவனிக்காமல் வழக்காடி கொண்டிருக்க அவ்வளவு தான் பொறுமை என்பது போல் வேகமாக வாகனத்தை எடுத்து அவளை இடிப்பது போல கடந்து சென்றுவிட்டான்.
ஒரு நிமடம் அந்த இடமே புழுதி படலம் போல் காட்சி அளித்தது தீர்த்தாவிற்க்கு என்ன நடந்ததது என்றே புரியவே சில நிமிடங்கள் எடுத்தது.
“இடியட் இப்படியா வண்டி ஓட்டிட்டு போவான்…ஆர் யூ ஓகே தீர்த்தா….”என்று தள்ளாடிய தீர்த்தாவை கை பற்றி நிப்பாட்ட,தீர்த்தாவிற்கு அப்போது தான் அமரனின் நியாபகம் வந்தது.
“எனக்கு ஒண்ணுமில்ல….நீ பாரு….”என்றவள் விறு விறுவென கடையின் உள்ளே சென்றுவிட்டாள்.
“புரியாத புதிர்களுக்கு காலம் விடை எழுத தொடங்கியிருந்து…”
error: Content is protected !!