Skip to content
Post Views: 4,558
அத்தியாயம் 28
“ ஏன் பாட்டி.. பாப்பாக்கு சோப் வேண்டாம் சொல்றீங்க? ” என்றான் கந்தகுரு கம்லா பாட்டியிடம்.
Advertisement
“சோப்பை விட இந்த மாதிரி கடலை மாவுல குளிக்க வைக்கிறது தான் நல்லது. பாப்பா சருமம் பட்டு மாதிரி இருக்கும்”
“எங்க ஊர்ல கூட இப்படி தான் பாட்டி செய்வாங்க, ஆனா கடலை மாவா பயித்தம் பருப்பு மாவான்னு எனக்கு தெரியலை”
Advertisement
Advertisement
ஒரு மாதம் முன்பே, கடலை பருப்பை கழுவி, காய வைத்து, அதை மில்லில் கொடுத்து அரைத்து, பின் அதை சலித்து எடுத்து வைத்திருந்தார் பாட்டி.
”போதும் குரு, மெல்ல கழுத்துல ஒரு கை வைச்சு இப்ப குப்பற படுக்க வச்சுக்கோ.. ஹான்.. இப்ப முதுகுல மாவை வச்சு தேய்ப்பா..
Advertisement
மெதுவா.. இப்ப தண்ணீர் ஊத்து.. “
குரு அருணாவின் தங்கத்தை முதல் ஒரு வாரம் ருக்மணி குளிக்க வைத்தார். இரண்டு நாட்களாக நான் குளிக்க வைக்கிறேன் பாட்டி, சொல்லி கொடுங்க என்று குரு கற்றுக்கொண்டிருக்கிறான்.
ருக்மணியும் பாட்டியும் இவர்கள் வீட்டில் தான் பெருபான்மையான நேரம் இருக்கிறார்கள். குருவும் பாட்டியும் குழந்தையை குளிக்க வைக்க, ருக்குமணி அருணாவிற்கு உதவி செய்துகொண்டிருந்தார்.
இன்றோடு குழந்தை பிறந்து ஒன்பது நாட்கள் ஆகின்றது.
உத்தரகண்ட் மாநிலத்தில், ஐந்தாவது நாள் ‘பச்சுவ்ளி’ (Pachauli) என்ற சடங்கு செய்வார்கள். குழந்தைக்கும் அம்மாவுக்கும் தலைக்கு குளிக்க வைத்து, சிறு பூஜை செய்து, பாட்டு பாடி வீட்டோடு செய்வார்கள். அடுத்து ஆறாம் நாள் (Chhati) சத்தி என்ற சடங்கு. வீடு வாசல் எல்லாம் சுத்தம் செய்து, தோரணங்கள் கட்டி அலங்காரம் செய்து, அக்கம் பக்கம் உள்ளவர்களை எல்லாம் அழைத்து சிறு விருந்து ஒன்று ஏற்பாடு செய்யப்படும்.
அணைத்து சம்பிரதாயங்களும் கம்லா பாட்டி சொல்ல சொல்ல அதன்படியே செய்தார்கள்.
ஒன்பதாம் நாள் சடங்கை “நவன்” என்று அழைப்பார்கள். அன்று ஐந்தாம் நாள் செய்ததை போலவே தாய் சேய் இருவருக்கும் தலைக்கு ஊற்றி, சிறு பூஜை செய்யப்படும்.
அதற்கான ஏற்பாடுகளை தான் செய்து கொண்டிருந்தார்கள் அருணா வீட்டில்.
அம்மாவும் மகளும் குளித்து முடித்து வந்தார்கள்.
குரு தன் செல்ல மகளுக்கும் தன் செல்லம்மாவிற்கும் சாம்பிராணி புகையை பக்குவமாய் காண்பித்தான்.
சரியாக அப்பொழுது ஊரில் இருந்து அனைவரும் வந்து சேர்ந்தார்கள்.
ஊரில் இருந்து அனைவரும் ஏற்கனவே புக் செய்திருந்த படி இன்று தான் வருகின்றார்கள். தீடீர் என்று இரயில் டிக்கெட்டோ பிளைட் டிக்கெட்டோ கிடைக்கவில்லை.
பாட்டி கையில் குழந்தையை தூக்கி பிடித்திருக்க, குரு இருவருக்கும் சாம்பிராணி புகை காட்டும் காட்சியை பார்பதற்க்கே கவித்துவமாக இருந்தது.
“ராஜாத்தி…”
“அருணாம்மா…”
அஞ்சுவும் மஞ்சுவும் தான் முன்னே நின்று கொண்டிருந்தார்கள்.
மூன்று ஆண்டுகள் கழித்து இப்பொழுது தானே அருணாவை நேரில் சந்திக்கிறார்கள்.
கண்கள் கலங்கியது.. காட்சியும் கலங்கியது..
“வாங்க அம்மா.. வாங்க அத்தை.. வாங்க எல்லாரும் வாங்க” என்று குரு தான் அனைவரையும் வரவேற்றான்.
“ம்மா…
அத்தை..” என்றாள் அருணா மெதுவாக. குரல் கரகரத்தது.
மஞ்சு வந்து மகளை கட்டி பிடித்துக்கொண்டார். கண்களில் இருந்து நிற்காமல் கண்ணீர்.
அஞ்சனாவும் அருகில் வந்து அருணாவின் தலையை வருடிக்கொடுத்தார்.
“பார்த்தீங்களா அப்பா.. என்னை பார்த்தப்ப மட்டும் இரண்டு பேரும் அடிச்சாங்க…. இப்ப செல்லம்மாவை மட்டும் கொஞ்சுறாங்க” என்றான் குரு சூழலை சற்று இலகுவாக்க.
“இந்த குடும்பத்து ஆண்கள் நிலைமை அப்படி ப்பா.. நல்ல வேலை உனக்கு பெண் குழந்தை பிறந்திருக்கு” என்றார் வடிவேலு இழுவையாக.
“எங்க குட்டி ராஜாத்திய கொடு அருணா” என்றார் அஞ்சனா.
“உங்க குட்டி ராஜாத்தி வந்ததும் தான் இந்த ராஜாத்திய பார்க்க மனசு வந்துச்சுல்ல உங்க இரண்டு பேருக்கும்”
முதல் முறையாக அஞ்சும் மஞ்சுவும் அமைதியாக இருந்தார்கள்.
“என்ன மச்சான் அதிசயமா இருக்கு? இரண்டு பேரும் அமைதியால்ல இருக்காங்க” என்றார் வடிவேலு ஆனந்தனிடம்.
“எனக்கும் அதான்யா ஒன்னும் புரியலை. இது புயலுக்கு முன் வரும் அமைதியான்னு தெரியல? பக்கு பக்குன்னே இருக்குய்யா “ என்றார் ஆனந்தன் ரகசிய குரலில்.
“நம்மல எப்பவுமே ஒரு டென்ஷன்லயே வச்சிருக்காங்களே யா.. என்னத்த சொல்ல..”
பாட்டி அனைவரையும் நலம் விசாரித்துவிட்டு, வீட்டிற்கு சென்று பிறகு வருவதாக கூறினார்.
“இருங்க பாட்டி.. பூஜையை முடிச்சிட்டு கிளம்பலாம், என்ன அவசரம்” என்றாள் அருணா உரிமையாக.
கம்லா பாட்டியிடம் அருணாவின் பேச்சிற்கு மறு பேச்சு ஏது?
“மாமா, மாடில ஒரு வீடு காலி ஆச்சு.. ஓனர்கிட்ட சொல்லி, ஒரு வாரத்திற்கு அந்த வீட்டை வாடகைக்கு எடுத்திருக்கோம். மேலே அங்கே கட்டில் மெத்தை எல்லாம் தயார் செய்து வச்சிருக்கோம். அங்கே எல்லாரும் தங்கிக்கலாம். இப்ப மேலயும் கீழயுமா எல்லாரும் சீக்கிரம் குளிச்சிட்டு வாங்க.. இன்னிக்கு பாப்பா பிறந்து ஒன்பதாம் நாள் பூஜை” என்றான் குரு.
அதன் பின் அனைவரும் தயாராகி வரவும், நவன் பூஜையை எளிமையாக முடித்தனர்.
அங்கேயே மதிய உணவை முடித்துவிட்டு பாட்டியும் ருக்குவும் கிளம்பி சென்றார்கள்.
அவர்கள் சென்றதும், “என்ன டா இது.. நவன் நாவன்னுட்டு .. இந்த ஊர்ல இருந்தா இந்த ஊர் பழக்க வழக்கத்தையா செய்றது. நம்ம முறைப்படி தானே செய்யணும்” என்று ஆரம்பித்தார் அஞ்சு.
“நல்லா கேளு.. நான் எப்படி கேக்கிறதுன்னு யோசிச்சிட்டு இருந்தேன்” என்றார் மஞ்சு.
“நீங்க யாரும் எதுவும் சொல்லலை.. கம்லா பாட்டி அவங்க பழக்கத்தை சொன்னாங்க, பெரியவங்க சொல்றதை செய்றது தப்பில்லைன்னு தான் செஞ்சோம்”
“நாங்க நல்லது சொன்னா தான் உங்களுக்கு பிடிக்காதே? அதான் நாங்க எதுவும் சொல்றது இல்லை”என்றார் மஞ்சு.
“நாங்க சொன்னதை எல்லாம் இதுவரை கேட்டுட்டீங்க பாரு.. நாங்க சொல்லலைன்னா என்ன? நீங்க என்ன செய்யனும்னு ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமே?” என்றார் அஞ்சு.
“அதானே பார்த்தேன், இதோ ஆரம்பிச்சிடங்கா இல்ல?” என்றார் ஆனந்தன்.
“பாருங்க.. நாங்க பேசுனாலே இப்படி தான் எல்லாரும் சொல்றீங்க.. அதான் நாங்க அமைதியா இருக்கோம். என்ன வேணா செஞ்சுக்கோங்க.. இனிமே நாங்க எதுவும் சொல்லல்ல” என்றார் அஞ்சு நொடித்துக்கொண்டே.
அருணா அமைதியாகவே இருந்தாள். முகத்தில் சிறு புன்னகை மட்டும் எப்போதும் இருந்தது.
பின் குழந்தையை ஆசையாக தூக்கி கொஞ்சினார்கள் பெரியவர்கள்.
“குரு பாப்பா அப்படியே உன்னை மாதிரியே இருக்காப்பா“ என்றார் வடிவேலு.
அப்பொழுது, லேசாக குழந்தை மூக்கை சுருக்கினாள்.
“அடடா அப்படியே அருணா மாதிரியே செய்றாளே!” என்றார் ஆனந்தன் ஆசையாக.
உடனே குரு வந்து பார்த்து, குழந்தை ஈரம் செய்திருப்பதை பார்த்து, துணி மாற்றி விட்டான்.
“எப்படி குரு கண்டு பிடிச்ச? பாப்பா அழுகவே இல்லையே?”
“தங்கம் சமத்துப்பா.. அழுக மாட்டாப்பா .. அருணா செய்ற மாதிரி மூக்கை லேசா சுருக்குவா.. அதை வச்சு தான் கண்டு பிடிப்போம்” என்றான் குரு. தகப்பனாக அவனது குரல் அவ்வளவு மகிழ்ச்சியாக ஒலித்தது.
அஞ்சுவும் மஞ்சுவும் வீட்டை சுற்றி பார்த்தனர். சுத்தமாக இருந்தது, நேர்த்தியாகவும் இருந்தது, கொஞ்சம் சிறிய வீடே தவிர வேற குறை என்று சொல்லுவதற்கு இல்லை.
பின் குழந்தையை சிறிய மெத்தை விரித்து கீழே படுக்க வைத்து சுற்றிலும் அனைவரும் அமர்ந்துகொண்டார்கள்.
“நாளை மறு நாள் நாம்கரன், அதாவது பெயர் சூட்டு விழா” என்றான் குரு
பொதுவாக.
நாம்கரனிற்கான ஏற்பாடுகளைஅனைவரும் சேர்ந்து சிறப்பாக செய்தார்கள்.
நம்கரன் அன்று ஊரில் இருந்து அபி, நந்தன், ரித்து மூவரும் வந்து விட்டார்கள்.
இங்கே அக்கம் பக்கம் உள்ளவர்களையும் அழைத்திருந்தார்கள்.
அனைவரின் ஆசிர்வாதத்துடன் “சந்தோஷி “ என்று பெயர் சூட்டினார்கள் அவர்கள் தங்கத்திற்கு.
சந்தோஷியை அனைவரும் ஆசையாக மாறி மாறி தூக்கி வைத்து கொண்டாடினார்கள். குருவும் அருணாவும் அனைவரையும் பார்த்து பார்த்து கவனித்தார்கள்.
அங்கே ஏற்கனவே இரண்டு முறை வந்திருந்ததால், வடிவேலுவும் ஆனந்தனும் அனைவரையும் அழைத்து எல்லா இடங்களையும் சுற்றி காண்பித்தார்கள்.
குரு அம்மாவையும் அத்தையையும் அழைத்து சென்று தங்கள் கடையை காண்பித்தான். இருவரிடமும் வரவு செலவுகளை பகிர்ந்துகொண்டான். தொழிலில் வரும் லாபத்தை பார்த்து அம்மாக்களுக்கு திருப்தியே.
அருணாவையும் குழந்தையையும் கண்ணுக்குள் வைத்து பார்த்துக்கொண்டான் குரு. அருணாவையும் குருவையும் பற்றி அங்கு உள்ளவர்கள் எல்லாம் பெருமையாக பேசினார்கள். அருணாளினி கந்தகுருவின் காதலை, காதலின் ஆழத்தை உணர முடிந்தது. அதுவே அஞ்சு மஞ்சு இருவருக்கும் மனதிற்கு ஒரு நிம்மதியை கொடுத்தது.
ஒரு வாரம் சென்றதே தெரியவில்லை.
அன்று மாலை அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.
“அப்புறம் குரு, என்ன முடிவு செஞ்சிருக்கீங்க?” என்று ஆரம்பித்தார் அஞ்சனா.
“எதை பத்திமா கேக்கறீங்க?”
“இல்ல, இப்ப தான் எல்லாம் நல்ல படியா நடக்குதே.. இனியும் ஏன் நீங்க இந்த ஊர்ல இருக்கனும், நானும் அத்தையும் உங்க விஷயத்துல தலை இடலை.. பேசாமா அங்கேயே வந்துடுங்களேன்?”
“ஆமா அருணா.. குழந்தையை வச்சிக்கிட்டு இந்த குளிர் பிரதேசத்துல எதுக்கு இருக்கனும்?அங்கேயே வந்துடுங்களேன்” என்றார் மஞ்சுளா.
“இல்லம்மா, குளிர் காலத்துல தான் குளிரும். அப்புறம் வெய்யில் காலம் நல்லாத்தான் இருக்கு. அதுவும் இல்லாம எங்களுக்கு இந்த குளிர் பழக்கம் ஆயிடுச்சு”
“இன்னும் கொஞ்ச நாள்ல நந்தனுக்கு கல்யாணம் செய்யணும்.. அடுத்து அபி.. இன்னும் நல்லது கெட்டது எல்லாம் வரும்” என்று அஞ்சு சொல்லவும்
“அதுக்கும் நாங்க அங்க வரத்துக்கும் என்ன ம்மா?” என்றான் குரு
“அதானே அத்தை.. விசேஷம்னா ஒரு வாரம் முன்னமே நாங்க வந்திட போறோம்” என்றாள் அருணா.
“உங்க கடையை விட்டுட்டு வருவீங்களா ?”
“இப்ப முன்ன மாதிரி இல்ல அத்தை.. இப்ப வேலைக்கு நல்ல நம்பிக்கையான ஆட்கள் எல்லாம் இருக்காங்க. அதனாலே ஒரு வாரம் பத்து நாள் நடுவில வர முடியும்”
“இப்ப என்ன சொல்றீங்க.. இந்த ஊரை விட்டு வரமாட்டீங்க”
“வந்ததுல இருந்து லா லா லாலலா.. பாடிகிட்டு இருக்காங்களே.. போர் அடிக்குதுன்னு நினைச்சேன்.. அப்பாடி ஆரம்பிச்சிட்டாங்க.. சூப்பர்.. “ என்றாள் ரித்து, அபி, நந்தனிடம்.
அபியும் நந்துவும் முறைக்கவும்,
“எதுக்கு முறைப்பு.. நம்ம அஞ்சு மஞ்சு மம்மீஸ் இல்லனா ஒரே போர் தான் ப்பா.. அவங்க தான் வாழ்க்கைக்கு ஒரு சுவை சேர்க்கிறாங்க… இப்ப பாருங்க அடுத்து என்ன ஆகுமோ? சண்டை வருமா? வராதான்னு ஒரு டென்ஷன். அதை பார்த்து நமக்கு ஒரு என்டர்டைன்மெண்ட்.. என்ன நான் சொல்றது?”
நந்து, நங்கென்று அவள் தலையில் ஒரு கொட்டு வைத்தான்.
ரித்து தலையை தடவி விட்டுக்கொண்டே, “அபிக்கா.. கவனிச்சீங்களா? அடுத்து நந்துன்னா கல்யாணமாம்”
“ஆமா.. நானும் கவனிச்சேன்.. பொண்ணு பார்த்தாச்சா.. பார்க்க போறாங்களா தெரியலையே?”
“நானே ஒரு பொண்ணை பார்த்து வச்சிருக்கேன், எப்படி சொல்றதுன்னு தான் தெரியல“ என்று உளறிவிட்டான் நந்தன்.
“அடப்பாவி.. யாருடா அண்ணா அது” என்றாள் அபி.
“நம்ம அத்தை இருக்காங்க இல்ல ?”
“ஆமா.. ஆனா அவங்க பொண்ணுக்கு தான் கல்யாணம் ஆயிடுச்சே?” என்றாள் ரித்து அவசரமாக.
“அவங்க பையனே நாலாவது படிக்கிறானே?” என்றாள் அபி.
“என்ன சொல்ல விடறீங்களா? நீங்க இரண்டு பேரும் வர வர அவங்கவங்க அம்மாக்கள் மாதிரி பேசுறீங்க” என்று நந்து சொல்லவும், இப்பொழுது பெண்கள் இருவரும் நங்கென்று நந்தன் தலையில் கொட்டினார்கள்.
“குட்டி சாத்தான்களா “ என்று நந்தன் அலறவும்,
“இங்க எவ்வளவு முக்கியமா பேசிகிட்டு இருக்கோம், அங்க என்ன விளையாட்டு” என்று மஞ்சுளா திட்டவும் மூவரும் கப்சிப்.
“எதுக்கு அஞ்சு இப்ப முதல்ல இருந்து ஆரம்பிக்கிறீங்க இரண்டுபேரும் ?” என்றார் வடிவேலு.
“நாங்க உங்களை மாதிரி உங்க மச்சானை மாதிரி, நேத்து ஒரு பேச்சு இன்னிக்கு ஒரு பேச்சு எல்லாம் பேசுறது இல்லை.. எப்பவுமே ஒரே பேச்சு தான் “
“உனக்கு இது தேவையா ய்யா.. எப்பவும் போல வேடிக்கை பாரும்ம் ..” என்றார் ஆனந்தன்
“இங்க பாருங்க அருணா.. குரு.. ஊர்ல எத்தனை நாளைக்கு தான் நீங்க வெளி நாட்டுல இருக்குறீங்கன்னு பொய் சொல்ல முடியும், சொல்லுங்க?”
“இன்னுமா அப்படி சொல்லிட்டு இருக்கீங்க?”
“ப்ச்ச் ..
ப்ச்ச் ..”
ச் கொட்டினார்கள் அஞ்சுவும் மஞ்சுவும்.
“இப்ப என்ன தான்மா உங்க பிரச்சனை. சந்தோஷிக்கு கல்யாணம் ஆகற வரைக்கும் இதையே பேசுவீங்க போல” என்றாள் ரித்து கடுப்பாக.
“என்ன ரித்து, இவங்க டீ கடை வச்சிருக்காங்கன்னு எப்படி சொல்றது? எங்க இமேஜ் என்ன ஆகும்?”
“நீ ஏன் டீ கடைன்னு சொல்ற.. அதையே, அவங்க ஒரு பெரிய கஃபே வச்சிருக்காங்கன்னு சொல்லு. நீயே பார்த்த தானே எவ்வளவு வியாபாரம் நடக்குது கடையிலன்னு”
“கஃபே யா?”
“ஆமாம்.. ஒரு கெத்தா இருக்கும் தெரியுமா? “ என்றான் நந்தன் இப்பொழுது.
“அப்படி சொல்லாம் தான்” என்று இழுத்தார் அஞ்சனா.
“மனசு தான்மா எல்லாத்துக்கும் காரணம். அவங்க சந்தோஷமா இருக்காங்க, பாருங்க இப்ப சந்தோஷியும் வந்துட்டா “
அருணாவிற்கும் குருவிற்கும் டீ கடை வைத்திருப்பதாக சொல்வதில் எந்த கவுரவ குறைச்சலும் இல்லை. ஆனால் அதை அம்மாக்களுக்கு புரிய வைக்க முடியாது. அவர்கள் இப்படித்தான்.. என்று அமைதியாக இருந்துவிட்டார்கள் இருவரும்.
ஒரு வழியாக இறங்கி வந்தார்கள் அம்மாக்கள்.
“டேய் அண்ணா..”
“சொல்லு அபி”
“அத்தை வீட்ல யாருண்ணா.. நம்ம அடிக்கடி அங்கே போனது கூட இல்லையே?” என்றாள் அபி மெதுவாக.
“அத்தை வீட்ல மாமாவோட தம்பி ஒருத்தங்க இருக்காங்கல்ல.. அவங்க பொண்ணு.. என் கூட தான் இன்ஜினியரிங் படிச்சா, பேரு தேவசேனா..”
“அடப்பாவி அண்ணா.. காலேஜில் இருந்தே லவ்ஸ் ஆ..” என்றாள் ரித்து.
“மெதுவா பேசுடி அரிசி மூட்டை. நேரம் பார்த்து தான் சொல்லனும், நீங்க இரண்டு பெரும் உளறிடாதீங்க.. ப்ளீஸ்..” என்று இருவர் வாயையும் தற்காலிகமாக அடைத்து விட்டான்.
அஞ்சுவும் மஞ்சுவும் அருணாவையும் குழந்தையையும் அழைத்து செல்வதாக கூறினார்கள்.
குரு, “நாங்களே இரண்டு மாசம் கழிச்சு அங்கே வரோம் மா.. சந்தோஷி கொஞ்சம் வளரணும்ல அவ்வளவு தூரம் ட்ராவல் செய்றதுக்கு” என்றான்.
“இரண்டு பாட்டியும் தாத்தாவும் பாப்பாவை பார்க்கனும்ன்னு சொல்லிட்டே இருக்காங்க.. நீங்க வீடியோகால்லயும் வரமாட்டேங்கிறீங்க” என்றார் அஞ்சு.
“நாங்க மட்டும் இவ்வளவு இறங்கி வரோம்ல.. நீங்க கொஞ்சம் இறங்கி வந்தா என்ன?” என்றார் மஞ்சு.
அருணாவும் குருவும் சிரித்துக்கொண்டார்கள். வேற எதுவும் பதில் சொல்லவில்லை.
வாழ்க்கை கற்றுக்கொடுத்த பாடம். இப்பொழுது வீண் விவாதங்களை தவிர்த்துவிடுகின்றார்கள்.
இவர்கள் பதிலுக்காக காத்துக்கொண்டிருக்கவும், “சீக்கிரம் கண்டிப்பா வந்திடுவோம். பாட்டி குல தெய்வ கோவிலுக்கு போகணும்னு சொல்லி இருக்காங்க.. அதனாலே, நாங்க சீக்கிரமா வரோம்” என்றான் குரு.
அவர்கள் சொன்னதை போலவே சந்தோஷிக்கு மூன்று மாதங்கள் ஆனதும் குருவும் அருணாவும் தமிழகம் வந்தார்கள்.
error: Content is protected !!