Skip to content
Post Views: 5,795
நான் தேடும் காதல் நீ……21(நிறைவு)
வண்ண விளக்குகள் மின்ன அந்த இடமே தேவலோகம் போல் காட்சியளித்தது.ஒரு பக்கம் முதியோர் இல்லங்களுக்கும்,அனாதை பிள்ளைகளுக்கும் உணவுகள் வழங்கப்பட்டு கொண்டிருக்க,
“டேய்….கதிரு….எல்லா வேலையும் ஒழுங்கா போகுதா….நம்ம பசங்ககெல்லாம் சாப்பிட்டாங்கல்ல….”என்று கேட்டபடி அமரன் வர,
“அடேய் நீ மாப்பிள்ளைடா… நீ எங்க இங்க சுத்திக்கிட்டு இருக்க…..”என்று கதிர் கேட்க,
Advertisement
“அவரு மாப்பிள்ளைன்றதை அப்பப்ப மறந்து போயிடுறார் என்ன பன்றது….”என்று வாயில் அதிரசத்தை தின்றபடி கையில் ஒரு அதிரச்சத்துடன் வந்தான் நிமலன்.
“இந்தாங்க பிரோ….”என்று அமரனின் கையில் ஒன்றை கொடுக்க,
“ஏன் எங்களுக்கு எல்லாம் கிடையாதா….”என்று கதிர் கேட்க,
Advertisement
“நான் என் ப்ரோவுக்கு மட்டும் தான் கொடுப்பேன்….நீங்க அவருக்கிட்டேந்து வாங்கிக்கோங்க….”என்று கூற,
Advertisement
“அதுசரி இந்த அண்ணன் தம்பி பாசத்தை என்னால பார்க்க முடியல….”
“பார்க்காதீங்க…..யாரு உங்களை பார்க்க சொன்னா….”என்றவன் அமரனின் தோளின் மீது கை போட்டுக் கொண்டே பேச,
“அட போங்கடா….”என்று கதிர் தான் தன் வேலையை பார்க்க போனான்.
Advertisement
நிமலனுக்கு இந்த திருமணத்தை முடிக்கும் முன் அமரன் நல்ல நண்பனாகிவிட்டான் என்பதை விட சகோதரன் ஆகிவிட்டான் என்று தான் கூற வேண்டும்.கற்பகத்தை ஒருவழியாக சமாளித்து திருமணத்திற்கு ஒப்பதல் வாங்கியதாகட்டும்,தன் வீட்டில் உள்ளவர்களை சமாளித்தாகட்டும் பின் தன் திருமணத்துக்கு போராடிய தாகட்டும்.
ஆம் தீர்த்தா அத்தனை எளிதில் இந்த திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை அவள் வேண்டாம் என்று மறுக்க அமரனோ,
“நீ இப்ப ஒத்துக்கல…நான் அத்தனை பேரு முன்னாடியும் உன்னை தூக்கிட்டு போய் தாலி கட்டுவேன்….என்னை யாரும் தடுக்க முடியாது அது உனக்கே தெரியும்….அதுக்கு அப்புறம் உன் இஷ்டம்…..”என்று ஒரே போடாக போட,
“முடிஞ்சா செய்டா பார்ப்போம்…..”என்று தீர்த்தா அவனிற்கு சளைத்தவள் இல்லை என்று நிரூபிக்க,
“கல்யாணம் பண்ணிக்கிட்டு சண்டை போட்டுக்குங்க….இப்ப தட்டை மாத்தவிடுங்க….”என்று கற்பகம் தான் அகிலாவின் கையில் இருந்து தட்டை வாங்கி தட்டை மாற்றிக் கொண்டார்.அகிலாவிற்கு கொஞ்சம் வருத்தம் தான் ஆனால் அமரனின் முகத்தில் தெரிந்த புன்னகை பார்த்து தன்னை மாற்றிக் கொள்ள முயற்சி செய்தார் அதோடு கற்பகம் முடிவாக கூறியிருந்தார்.
“பிள்ளைகள் விருப்படி தான் வாழ்க்கை அமைய வேண்டும்….நான் என் விருப்பத்தை தாமரைக்கிட்ட திணிச்சதால தான் அவ நம்மளை விட்டு விலகிட்டா……நீயும் அதே தப்பை செஞ்சிடாத அகிலா….”
“இல்ல அண்ணி எனக்கு அந்த மாதிரி எந்த நினைப்பும் இல்லை….என்ன நாம ஏதோ தப்பு பண்ணிட்டோம் அது மட்டும் புரியது….பிள்ளைக பெரியவங்களா வர வரைக்கும் கல்யாணம் பத்தியெல்லாம் நாம பேசக்கூடாது….அது எவ்வளவு பெரிய தப்புனு எனக்கு இப்ப புரியுது….”என்று அகிலா கூற கற்பகமும்,
“நானும் அதை தான் நினைச்சேன்….விடு இனி அதைப்பத்தி பேசவேண்டாம்….”என்று கூறிவிட்டார்.
அமரன் தீர்த்தா திருமணம் கூடிய உடன் செல்வம் கூறிவிட்டார் “என் மருமகள் திருமணத்தை நான் தான் செய்வேன்…..”என்று கூற,தீர்த்தா ஏதோ மறுத்து கூற வரும் முன்,
“நீங்களே செய்ங்க….”என்றுவிட்டான் அமரன்.
“நீ ஏன் ஒத்துக்கிட்ட…..”என்று தீர்த்தா எகிறிக் கொண்டுவர,
“இங்க பாரு பழசை நினைச்சிக்கிட்டே இருந்தா எந்த பிரியோஜனமும் இல்லை….அவரும் வயாசானவர் அதனால தான் நான் ஒத்துக்கிட்டேன்….நீ அமைதியா இரு….”
“நான் இன்னும் கல்யாணத்துக்கு ஒத்துக்கல….”என்று தீர்த்தா கூற,அவளிடம் நெருங்கியவன்,
“உன்னை எப்படி ஒத்துக்க வைக்கனும் எனக்கு தெரியும்….”என்று கூறி யாரும் அறியாமல் உதட்டை குவித்தபடி நெருங்க,
“போடா….”என்று தீர்த்தா தான் தெறித்து ஓட வேண்டியாதிகிற்று.
செல்வம் கூறியது போல் நிமலனுக்கும்,அமரனுக்கு ஒரே மேடையில் திருமணம் என்று முடிவானது.இதோ அவன் காத்துக்கிடந்த நாள் அவனின் முன்னே பட்டு வேட்டி சட்டையில் மணமகனுக்கான அத்தனை அம்சத்துடன் அமரன் அமர்ந்திருக்க தங்க நிற பட்டில் தங்க தாரகையாகவே நடந்து வந்து கொண்டிருந்தாள் அவனின் தீர்த்தா.வெகு நாட்களுக்கு பிறகு அவள் அமரனை அடிக்கண்ணால் பார்த்துக் கொண்டே வர,அமரனின் உடலே சில்லிட்ட உணர்வு.
“தம்பி இங்க பாருங்கோ….அப்புறம் உங்க பொண்டாடியை பாருங்கோ….”என்று ஐயர் கூற,அங்கு உள்ள அனைவரும் சிரித்துவிட்டனர்.தீர்த்தா மலர் பாதம் வதைத்து அமரனின் அருகில் அமர,
“அழகா இருக்கடீ….நான் எப்படி இருக்கேன்….”என்று கேட்க,எப்போதும் பதிலுக்கு பதில் பேசுபவள் இந்த திருமண நிச்சயத்திற்கு பின் அமரன் செய்த காதல் தொல்லையில் பேச்சை முற்றிலுமாக மறந்துவிட்டாள் என்று தான் கூற வேண்டும்.அவள் கடையை தான்டி செல்லும் போது உதடு குவித்து பறக்கும் முத்தம் கொடுத்துவிட்டு செல்வது,வேண்டும் என்றே அவளின் கடைக்குள் நுழைந்து டீ குடிப்பது போல அவளை சீண்டுவது என்று அமரன் செய்த அலும்புகள் ஏராளம்.காதலிக்க தெரியாதவன் என்று நினைத்திருந்தவளுக்கு சிறுசிறுக காதலை உணர்த்தியிருந்தான் அமரன்.
“கெட்டிமேளம்….கெட்டிமேளம்….”என்று ஐயரின் குரலுக்கு மங்கள வாத்தியங்கள் வாசிக்கப்பட,தீர்த்தாவின் கழுத்தில் மங்கள நாணை பூட்டி தன்னவளாக்கிக் கொண்டான் அமரன்.தீர்த்தாவிற்கு ஏன் என்றே தெரியாமல் கண்களில் கண்ணீர் கோடாக இறங்கியது.மாலையை சரிசெய்வது போலவே அவளிடம் குனிந்தவன்,
“ச்சு…அழாத…போட்டோல நல்லா இருக்கமாட்ட…”என்று கூறிவிட்டு அவளின் இடையை கிள்ளிவிட்டுவிட தீர்த்தா அதன் பின் அழுவாளா என்ன.அமரனின் திருமணம் முடிந்தவுடன் நிமலன்,தாமரையின் திருமணமும் நல்லமுறையில் நடந்தேரியது.திருமண சடங்கள் முடித்து இரு ஜோடிகளும் தத்தம் இல்லத்துக்கு பயனப்பட்டனர்.தாமரையுடன் அகிலா,கற்பகம் இருவரும் சென்றனர்.அமரன் கண்டிப்புடன் கூறிவிட்டான் நீங்கள் தாமரையை கவனியுங்கள் என்று.
அமரனும்,தீர்த்தாவும் வீட்டின்னுள் நுழையும் போது அமரனுக்கு தூரத்து உறவான பெண்மணி தான் ஆரத்தி எடுத்து வரவேற்றார்.தீர்த்தாவின் கண்கள் சிவன்யாவை தான் தேடியது.அதை உணர்ந்த அமரன்,
“சிவா….”என்று அழைக்க வீட்டின் உள் அறையில் இருந்து அவள் வர,
“உன் அக்கா உன்னை தான் தேடுறா…”என்றவன் தீர்த்தாவிடம் திரும்பி,
“அவ இங்க தான் இருக்க போறா…நான் அவ கிட்ட முன்னவே பேசிட்டேன்….இனி இங்கிருந்தே காலேஜ் போகட்டும்…..”என்று கூற,
“எல்லாம் உன் இஷ்டமா….”என்று வீம்புக்கு கேட்டவளுக்கு கண்கள் கரித்துக் கொண்டு வந்தது.என்ன தான் தன் காதல் தனக்கு கைகூடி விட்டது என்று மகிழ்ந்தாலும் தன் தங்கையை நினைத்து வருந்திக் கொண்டிருந்தவளுக்கு அமரன் கூறய வார்த்தைகள் அத்தனை நிம்மதியை கொடுத்தன.
அமரனையும்,தீர்த்தாவையும் அமர வைத்து சில சடங்கள் செய்தவுடன்,உறவு பெண் ஒருவர் வந்து,
“நீ போம்மா கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு….”என்றவர்,
“சிவம்மா நீ கூட்டுட்டு போ அக்காவை….”என்று கூற,
“வாக்கா…”என்று ஒரு அறைக்குள் அழைத்து வந்தாள்.அதன் பின் சகதோரிகள் இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருக்க,
“க்கா நீ கொஞ்சம் நேரம் படு….எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு நான் பார்க்குறேன்….”என்று கூற,
“ம்ம் சரிடீ யாராவது வந்தா சொல்லு….”என்றுவிட்டு தீர்த்தா படுத்து அடுத்த பத்து நிமிடத்தில் உறங்கியும் விட்டாள்.அதன் பின் யாரோ அறைக்குள் வந்து பேசுவது போல கேட்டது ஆனால் தீர்த்தாவால் கண்களை திறக்க முடியவில்லை.முயன்று திறக்க முற்படும் நேரம் மென்மையாக யாரோ அவளின் நெற்றியை வருட மீண்டும் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றுவிட்டாள்.தீர்த்தா கண் விழிக்கும் நேரம் அவளின் இடையினை ஒரு வலிய கரம் வளைத்து பிடித்திருக்க அதிர்ந்து விலகியவளை விலகவிடாமல்,
“ம்ம்…தீர்த்து…தூங்கு…..எனக்கு தூக்கம் வருது….”என்று அமரன் தூக்கத்தில் கூறிக் கொண்டிருக்க,தீர்த்தாவிற்கு அதுவரை தெரியாத அவனின் அருகாமை தற்போது தெரிய உடலெல்லாம் சிலிர்த்து அடங்கியது.முயன்று அவனிடம் இருந்து விலகி எழுந்தவள் குளியல் அறைக்குள் சென்று தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வர அமரன் எழுந்திருந்தான்.
“ஏன்டீ எந்திரிச்ச….பிசாசு….”என்று கூறிக் கொண்டே அவனும் குளியலறைக்கு செல்லும் போது அவளை இடிப்பதை போல் வர தீர்த்தா பயந்து நகர,அமரனுக்கு கோபம் தலைதூக்கியது.
“ஏய் என்னடீ……என்ன நினைச்சிக்கிட்டு இருக்க….”என்று கேட்டவாரே அவளின் கைகளை பற்றி இழுத்தவன் அவள் உணரும் முன்பே அவளின் முகம் எங்கும் முத்தமழை பொழிய தீர்த்தா தான் திணறிவிட்டாள்.
“அமரா விடு…டேய் விடு…”என்றவாரே தன் தளிர் கரங்களால் அவனை அடித்துக் கொண்டு இருக்க,சற்று என்று நிறுத்தியவன் அவளின் அதரங்களை சிறை செய்துவிட்டான்.நீண்ட நெடிய இதழொற்றல் தீர்த்தாவுக்கு மூச்சே நின்றுவிடும் போல் ஆனவுடன் அவளை விடுவித்தவன்,
“இனி நான் பக்கத்துல வந்தா ஓடுவ….”என்று கேட்க,பதில் சொல்லும் நிலையில் அவள் இல்லை.
“ஒழுங்கா சொல்லு இல்லை…”என்றபடி மீண்டும் அவளை நெருங்க,இல்லை என்னும் விதமாக தலையாட்டிவிட்டு மருண்டு முழிக்க,
“அழுகுடீ நீ….”என்று அவளின் கன்னம் இரண்டிலும் முத்தத்தை பதித்துவிட்டு சென்றான்.அவன் சென்று சில நிமிடங்கள் வரை தீர்த்தா அப்படியே தான் நின்றாள்.அவள் நிகழ்வுக்கு வரவே சில நிமிடங்கள் பிடித்தது.
“அச்சோ….இவன் முறைச்சு பார்த்ததே தேவலாம் போல இருக்கு……இப்ப காதல்னு சொல்லி ஏதோ பண்ணுறான்…..நான் தான் வசமா வந்து சிக்கிட்டேன் போல….”என்று தனக்குள் கூறிக் கொண்டிருக்க அதே நேரம் குளியல் அறை கதவு திறக்கவும் வாயை மூடிக் கொண்டாள்.
“அது அந்த பயம் இருக்கட்டும்….வா சதாசிவம் அங்கிள் வெளில வெயிட் பண்ணிக்கிட்டு இருக்காங்க நம்மளை பார்க்க….”என்று கூறி அவளை அழைத்துவர,வரவேற்பறையில் சதாசிவம் அமர்ந்திருந்தார்.
“வாங்க அங்கிள்….”
“வாம்மா தீர்த்தா…..இப்ப தான் எனக்கு சந்தோஷமா இருக்கு….இந்தா உன்னோட கடை பத்திரம்,….”என்று அவர் கூறி தீர்த்தாவின் கைகளில் பத்திரத்தை கொடுக்க,
“தேங்க்ஸ் அங்கிள்….”என்றவளின் குரலே கரகரத்துவிட்டது.பின்னே இதறக்காக தான இத்தனை பாடு போராட்டம்.ஏதோ தன் தாயை தேடிய கன்று போல அதனை தன் நெஞ்சோடு அனைத்துக் கொண்டாள்.
“என்னை விட உனக்கு உன் கடை தான் பிடிக்குமாடீ….”என்று அமரன் அவளின் காதில் கிசுகிசுக்க,அவனை முறைத்துவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்.அமரனுக்கு அவளின் செயலில் அத்தனை சிரிப்பு பொங்கியது.சதாசிவம் சிறிது நேரம் அமரனுடன் பேசிவிட்டு சென்றுவிட,அமரன் அகிலாவிற்கு அழைத்துவிட்டான்.
“ஹலோ கண்ணா….”என்ற தாயின் குரலில் அத்தனை தவிப்பு தன் ஒற்றை மகனின் திருமணம் அதில் எத்தனை எத்தனை ஆசைகள் வைத்திருந்தார்.இதோ இப்போது கூட அவனை வீட்டிற்குள் அழைக்கும் போது எப்படி எல்லாம் அழைக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தார்.ஆனால் தான் ஒரு இடத்தில் இருக்க அவன் ஒரு இடத்தில் இருக்க வைத்துவிட்டதே காலம் என்று மனதில் சிறு வருத்தம் மேலோங்கி நின்றது.
“ம்மா….என்ன என் நினைப்பா இருக்கா….”
“ம்ம்…அங்க எல்லாம் நல்லபடியா முடிஞ்சிது தான….”என்று கேட்க,
“வீடியோ அனுப்பியிருக்கேன் பாருங்க….”என்றவன் தாமரை பற்றி விசாரித்தான்.
“இங்க எல்லாம் நல்லபடியா முடிஞ்சிது….நானும் அண்ணியும் இன்னும் கொஞ்ச நேரத்துல கிளம்பிடுவோம்…..”என்று கூற,
“சரிமா எல்லாம் சரியா பார்த்துட்டு வாங்க…நான் நிமலன் கிட்ட பேசிக்கிறேன்….”என்று கூற,சரி என்றுவிட்டு அவர் வைத்துவிட்டார்.
“இங்கபாருடீ….இது புது இடம் ஒழுங்கா இருந்துக்கோ….நல்லபடியா இரு….”என்று கற்பகம் கூறிக் கொண்டிருக்க,
“நான் பார்த்துப்பேன்….நீங்க எங்க கிளம்புற….நீயும் இனி இங்க தான்….நான் அவர் கிட்ட பேசிட்டேன்….”என்று தாமரை கண்ணாடியில் தன்னை பார்த்துக் கொண்டே கூற,
“கண்ணாவும்,அகிலாவும் இருக்குற இடம் தான் என் இடம்…..அங்க தான் நான் என் கடைசி நிமிஷம் வரைக்கும் இருப்பேன்….நீ எப்ப வேணும்னாலும் என்னை பார்க்க அங்க வா….”என்று கற்பகம் பொறுமையாக கூறினார்.தாமரை திருமணம் நிச்சயம் ஆனாதில் இருந்தே இதை தான் கூறிக் கொண்டிருக்கிறாள் கற்பகம் இப்படி தான் பொறுமையாக பதில் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்.இப்போதெல்லாம் மகளை அதட்டுவதில்லை அமைதியாக கூறிவிட்டு நகர்ந்துவிடுவார்.
“ப்ச்….ம்மா நான் தான் சொன்னேன் தான….”என்று தாமரை ஆரம்பிக்க,
“இங்க பாரு தாமரை நீ என்ன வேணாலும் நினைச்சுக்க எனக்கு அது தான் வீடு….என்னோட சொந்தம்னு சொன்ன அவங்க தான் இது மாறாது…அதனால இதை இதோட விடு….”என்று கற்பகம் கூறிவிட்டு அறையை விட்டு வெளியில் வர,
“ம்மா ம்மா….”என்று அழைத்தபடி வந்த தாமரை எதிரே நிமலன் வரவும் தயங்கி நிற்க,
“அத்த உங்களை தேடி தான் வந்துக்கிட்டு இருந்தேன்…நீங்க கிளம்புனுமாமே….நான் கார் அரேஞ் பண்ணிட்டேன் நல்லபடியா போயிட்டு வாங்க…..அப்புறம் அடிக்கடி இங்க வரனும் அப்படினா மட்டும் தான் நான் அனுப்புவேன் என்று கூற…..”
“சரி மாப்பிள்ளை….கண்டிப்பா வரேன்….”என்றவரின் முகமே இப்போது தெளிந்து இருந்தது.அவர் கூறிக் கொண்டு சென்றுவிட நிமலன் தாமரை முறைத்துக் கொண்டு நின்றான்.
“என்னை எதுக்கு முறைக்கிறிங்க…..நான் என் அம்மாவை என்கூட வச்சுக்கனும் நினைச்சது தப்பா…”என்று கேட்க,
“இல்லை….ஆனா அதுக்கு அவங்களும் சம்மதிக்கனுமே….அவங்களுக்கு அங்க இருக்க தான் பிடிச்சிருக்கு….அப்ப அவங்களை நாம வற்புறுத்த கூடாது…..புரியுதா….”என்று நிமலன் கண்டிப்புடன் கூற,
“சரி….”என்று தாமரை அமைதியாக உள்ளே சென்றுவிட்டாள்.கற்பகம் மருத்துவமனையில் இருந்த போது தாமரை சண்டையிட்டதை அமரனின் மூலம் தெரிந்தவனுக்கு அத்தனை கோபம் தாமரையின் மீது,
“அவங்க உன் அம்மா தாமரை….அவங்களை எப்படி நீ இப்படி பேசலாம்….உன்னை கண்டிச்சா நீ அவங்களை தப்பா பேசுவியா….நாளைக்கு நான் கண்டிச்சா என்னையும் நீ இப்படி தான் பேசுவ அப்படி தான….”என்று கேட்க தாமரை எதுவும் பேசவில்லை.
“இங்க பாரு….உன் அம்மாவோட அருமையை நீ அம்மா ஆகும் போது புரிஞ்சிப்ப….இனி இப்படி ஏதாவது நடந்தது நான் சும்மா இருக்கமாட்டேன்….”என்று எச்சரித்துவிட்டான்.தாமரைக்கு நிமலன் மிகவும் முக்கியம் அவன் தன்னை வெறுத்துவிட்டால் அதை அவளாள் தாங்கி கொள்ள முடியாது அதனால் இனி யாரிடமும் அனாவசியமாக பேசவே வேண்டாம் என்று முடிவுக்கு வந்துவிட்டாள்.
error: Content is protected !!