Skip to content
Post Views: 4,029
நான் தேடும் காதல் நீ….9
அந்த இடம் முழுவதும் குளிரூட்டியால் குளிர்ந்து இருந்த போதும் அந்த குளிரை அனுபவிக்க முடியவில்லை தீர்த்தாவால்.மனது சற்று முன் நடந்த நிகழ்விலேயே நின்றது.செல்வத்தை காண அமர்ந்திருந்தவளுக்கு கதிரின் அழைப்பு வர அதை ஏற்கும் முன் சதாசிவத்தின் வருகை.அவரிடம் பேசிக் கொண்டிருக்கும் போதே இரண்டு அழைப்புகள் தொடர்ந்து வர,கதிர் தான் என்று நினைத்து கத்திவிட்டாள்.ஆனால் மறுமுனையில் கேட்ட குரலில் அவளின் உயிர் துடித்து அடங்கியதை அவளே அறிவாள்.
அமரன் பேசுவான் என்று தீர்த்தா எதிர்பார்க்கவில்லை அதே சமயம் அவனிடம் பேசவும் விரும்பவில்லை பிறகு பேசுகிறேன் என்று கூறி வைத்துவிட்டாள்.ஆனால் கைகள் இரண்டும் அவனிற்கு மீண்டும் அழைப்பு விடுக்க சென்றுவிட கண்களை மூடியவளின் முன் அவனின் மறுப்பு தோன்றவும் மனது மீண்டும் இறுகியது.
இதுவே முதல் முறை அமரனை தவிர்த்து அவள் செய்யும் முதல் காரியம் எப்போதும் எது செய்வது என்றாலும் இவளாகவே அவனிடம் சென்று கூறிவிடுவாள்.சில நேரங்களில் அவனிடம் இதை நீ தான் செய்து தர வேண்டும் என்ற கட்டளைகளும் அடங்கும்.அவன் சில நேரங்களில் கேட்பது போல் இருக்கும் சில நேரங்களில் கேட்காதது போல் இருக்கும் ஆனால் அவள் கூறிய விடயத்தை நடத்தி முடித்திருப்பான்.இது எல்லாம் இருவருக்குள்ளும் இருக்கும் புரிதல்.இந்த புரிதல் தீர்த்தாவிற்கு காதலாக மாறியது தான் இங்கு பிழையானது.
Advertisement
தனக்கு ஏற்பட்ட ஈர்ப்பு அவனுக்கும் ஏற்பட வேண்டும் என்ற கட்டாயம் இல்லையே.அது தான் தீர்த்தாவின் மனதை அறுத்தது.இந்த பாழாய் போன காதல் என்ற ஒன்றால் அழகான நட்பை இழந்தது போல் இருந்தது.அவன் தனக்கு நண்பன் மட்டும் தான் என்று மனதும்,மூளையும் கூறினாலும் அவனை கண்ட நொடி அனைத்தும் மறந்து அவளில் உள்ள காதல் மட்டுமே வெளிபடுகிறது.சஞ்சலம் புகுந்த நெஞ்சத்தில் இனி நட்பு என்ற வார்த்தைக்கு இடம் இல்லை என்ற நிதர்சனம் புரிந்து போனது அதனால் தன்னை ஒதுக்கிக் கொள்ள முயன்று கொண்டிருந்தாள்.
“தீர்த்தா…..”என்ற சதாசிவத்தின் உயர்ந்த குரலில் கலைந்தவள்,
“ஆங்…அங்கிள்….”
Advertisement
“என்னமா ஆச்சு…இவ்வளவு நேரமா கூப்பிடுறேன்….செல்வம் வந்துட்டான்…நம்மளை கூப்பிடுறாங்க…..ஏதோ யோசனையில இருக்க…நீ ஒண்ணும் கவலைபடாதமா…நான் பார்த்துக்குறேன்….செல்வத்தை எனக்கு தெரியும் நான் பேசிக்கிறேன் நீ வா….”என்று கூற,தீர்த்தா அவரின் பேச்சை முழுதாக கவனிக்காமல் சரி என்று விட்டு முன்னே நடக்க ஆரம்பித்துவிட்டாள்.
Advertisement
செல்வத்தின் அறையில் இருவரும் நுழைய,
“வாம்மா தீர்த்தா….நல்லாயிருக்கியா…சிவாம்மா எப்படி இருக்கா…..”என்று முகம் நிறைந்த மலர்ச்சியுடன் செல்வம் கேட்க தீர்த்தா எதற்கும் பதில் அளிக்கவில்லை வெறும் தலையாட்டலுடன் முடித்துக் கொண்டாள்.
“சொல்லு சதா….என்ன நீயும் வந்திருக்க…..”என்று வெகு இயல்பாக அவர் சதாசிவத்திடமும் பேச,
Advertisement
“அங்கிள் உங்களுக்கு இவரை நல்லா தெரியுமா….”என்ற தீர்த்தாவிற்கு அப்போது தான் சிவம் சற்று முன் பேசியது மண்டையில் ஓட அதிர்ச்சியாக அவரை பார்த்தாள் அதை உணர்ந்த அவரும்,
“நானும்,செல்வமும் பள்ளி தோழர்கள்….”என்று தன் கூற,தீர்த்தா இதற்கு என்ன வினையாற்றுவது என்று புரியாமல் நின்றாள்.சிவத்தை சிறு வயது முதல்லே அவளுக்கு தெரியும் தன் தாத்தாவுடன் நெருக்கமாக இருப்பவர் அதனாலே அவரின் மீது தனி மரியாதை உண்டு.ஆனால் இன்று அவரும் தன்னிடம் பொய் கூறியிருக்கிறார் என்று நினைத்து கோபமும்,பயமும் தான் வந்தது.
“நான் கிளம்புறேன்….”என்று கலங்கிவிட்ட குரலுடன் கூற,
“ம்மா தீர்த்தா இரு….அவசரபடாத….”என்று சிவம் கூற,
“யம்மாடி தீர்த்தா இருமா…போயிடாத….”என்று செல்வமும் அவளை நிறுத்த பார்க்க அவள் யாரின் பேச்சை கேட்காமல் கதவை திறக்க முயல,
“நான் செல்வத்தோட நண்பன்னு உங்க தாத்தாவுக்கு முன்னவே தெரியும்…அவரு தான் உன் கிட்ட எதுவும் சொல்ல வேண்டாம்னு சொன்னார்…அதோட நாங்க ஸ்கூல் படிச்சவரைக்கும் தான் நண்பர்கள்னு சொன்னேன்….”என்ற சிவத்தின் வார்த்தையில் அவளின் கை அப்படியே நின்றுவிட முழுதாக கலங்கிவிட்ட விழிகளுடன் அவரை பார்த்தாள்.
“இதுக்கு தான் அவசரபடாதனு சொல்லுறேன்….நீ கேட்க மாட்டேங்குற….”என்றவர் தீர்த்தாவிற்கு ஒரு நாற்காலியை இழுத்து போட,
“உட்காரு….நாம பேசிட்டு தான் போகனும்….நான் உனக்கு லாயரா தான் இங்க வந்திருக்கேன்….”என்று அழுத்தமாக கூற தீர்த்தாவிற்கும் வேறு வழியிருக்கவில்லையே அமைதியாக அமர்ந்து கொண்டாள்.
“நீ ஏன் நிக்குற உட்காரு…..ஆ…உன் சீட்ல….”என்ற செல்வத்தை பார்த்து சிவம் கூற,
“ஹா ஹா….நீ மாறவேயில்லைடா….”
“நான் எப்போதும் மாறமாட்டேன்…..”என்ற சிவத்தின் குரலில் இருந்த கோபம் செல்வத்திற்கு நன்கு புரிந்தது.
“நான் தப்பு தான் என்னை மன்னிச்சிடுடா சிவா….”என்று உணர்ந்து தான் இதை கூறினார்.
“காலம் தாழ்த்திட்ட……இனி அது அர்த்தமற்றது…..”என்ற சிவத்தின் முகத்தில் எதுவும் இல்லை.ஆனால் செல்வத்திற்கு தான் கஷ்டமாக இருந்தது.தீர்த்தாவிற்கு எதுவும் புரியவில்லை அமைதியாக பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
“என்னமா அப்படி பார்க்குற….அவனும் நானும் நல்ல நண்பர்கள் தான் ஆனா என்னைக்கு இவன் நாச்சி அப்பாவை ஒதுக்குனானோ அன்னைக்கே நானும் இவனை ஒதுக்கிட்டேன்….எனக்கு அப்பா போல இருந்து வழிநடத்தியவரு உன் தாத்தா….அவருக்காக தான் உன் கூட இருந்தேன் இனியும் இருப்பேன்….உன்கிட்ட இதெல்லாம் முன்னாடியே சொல்லனும் சொன்னேன் ஆனா அப்பா தான் வேணாம்னு சொல்லிட்டார்….”என்று சிவம் கூற,அவரை நம்பா பார்த்த தீர்த்தாவை,
“அவன் சொல்லுறது அத்தனையும் நிஜம் தான்மா….அப்பா செத்து ஒரு மாசம் கழிச்சி இவன் என்கிட்ட வந்து அவ்வளவு சண்டை போட்டான்….நான்…எனக்கு அதுக்கு முன்னாடி அதாவது வைதேகி இறந்த அப்பவே புரிஞ்சி போச்சு நான் எவ்வளவு பெரிய தப்பை பண்ணியிருக்கேன்னு….நான் எவ்வளவோ அப்பாகிட்ட மன்னிப்பை யாசிச்சேன் ஆனா அப்பா என்னை கடைசி வரைக்கும் மன்னிக்கவேயில்லை…..இனி இதோ இவன் சொல்லுற மாதிரி நான் கேட்குற மன்னிப்புக்கு மதிப்பு இருக்காதுனு…..எனக்கு புரிஞ்சு போச்சு..”என்று செல்வம் கூறிவிட்டு மேஜையில் இருந்த தண்ணீரை அருந்தி தன்னை சற்று சமன் செய்து கொண்டார் இருந்தும் அவரின் கண்களில் இருந்து இரண்டு சொட்டு நீர் வெளியேறிவிட்டது.
“நாங்க போனதுக்கு அப்புறம் ஓரமா உட்கார்ந்து அழு….இப்ப பேசலாமா….”என்ற சிவத்தை பார்த்து,
“சரிடா நல்லவனே….நீ சொல்லு….”என்ற செல்வமும் நிமிர்ந்து அமர்ந்து கொண்டார்.சிவம் லதா நோட்டீஸ் அனுப்பியதை கூறி நாச்சியப்பனின் உயிலை மேலோட்டமாக கூறியவர்,
“என்னால இதை கோர்ட் வரைக்கும் கொண்டு போய் ஒண்ணுமில்லனு கொண்டு வர முடியும் ஆனா இதுல தீர்த்தா வாழ்க்கையும் அடங்கியிருக்கு இந்த விஷயம் தெரிஞ்சா உன் வொய்ப் என்ன வேணும்னாலும் பண்ணுவாங்க…அதனால தான் உன்னை பார்க்க வந்தேன்…”
“நான் பார்த்துக்குறேன் சிவா…அவளால எந்த பிரச்சனையும் வராது…அதுக்கு நான் பொறுப்பு….”என்று செல்வமு கூற,
“சொல்லாத செயல்ல காட்டு….அப்ப நம்புறேன்….”என்று சிவம் அப்போதும் நம்பாமல் தான் கூறினார்.அவரை பார்த்து விரக்தியான புன்னகை ஒன்றை புரிந்த செல்வம் தலையை மட்டும் ஆட்டி வைத்தார்.
“உனக்கு ஏதாவது பேசவோ சொல்லவோ இருக்கா தீர்த்தா….”என்று தீர்த்தாவின் புறம் சிவம் திரும்ப,
“இல்லை….”என்று ஒற்றை வார்த்தையில் முடித்துக் கொண்டாள் அவள்.அவளையே பார்த்துக் கொண்டிருந்த செல்வத்திற்கு மனதில் சிறிய எண்ணம்.எண்ணம் என்பதை விட ஆசை என்று தான் கூற வேண்டும் அது கன நேரத்தில் தோன்றி மறைந்தது.ஆனால் இது நடக்காது என்று அவரே தலை உலுக்கி அந்த எண்ணத்தை ஒதுக்கி கொள்ள,மறைக்க பட்ட ஆசைகள் யாவும் வெளிவரும் நாள் வெகுவிரைவில் என்று அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.நடக்க வாய்ப்பில்லை என்ற நினைத்தது சம்மத்துடன் நடக்கும் என்று அவர் அறியவில்லை.சில நேரங்களில் கடவுளின் கைகளில் நாம் கை பொம்மை தான் போலும் அவர் இழுத்த இழுப்பிற்கு நாம் செல்ல தான் வேண்டும்.இதில் யாரின் வாழ்வு யாருடன் என்று கடவுள் ஒருவரே அறிவார்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
புல்லட்டின் சத்தம் இன்று சற்று வேகமாக தான் கேட்டது அகிலாவிற்கு அவர் வாசலை அடையும் முன் கிரில் கேட்டை கால் உதைத்து திறந்து வந்து கொண்டிருந்தான் அமரன்.முகத்தில் கோபம் தாண்டவம் ஆடியது அதை அவனின் கண்களின் சிவப்பே கூறிவிட,
“என்ன கண்ணா என்ன பிரச்சனை….”என்று அகிலா பதறி கொண்டு கேட்க,
“ச்சு….ஒண்ணுமில்லமா….”என்றவன் மேற்கொண்டு எதுவும் கூறாமல் தன் அறைக்குள் அடைந்து கொண்டான்.கண்மண் தெரியாத கோபம் ஏன் என்று தெரியவில்லை தீர்த்தா பேசவில்லை என்பது மிகவும் பாதித்தது அமரனை.
“கொழுப்பெடுத்தவ….என்கிட்டயே திமிர காட்ட ஆரம்பிச்சிட்டா வரட்டும்….பேசிக்கிறேன்….”என்று மனதிற்குள் திட்டியபடி இருக்க,அவனின் அறை கதவு தட்டப்பட்டது.
“ப்ச்…எல்லாம் இவளால இப்ப இவங்கள வேற சமாளிக்கனும்….”என்று தன் விரலால் நெற்றியில் தேய்து கொண்டவன் இரண்டு நிமிடம் கழித்து தான் கதவை திறந்தான்.
“என்னாச்சு கண்ணா…கடையில எதாவது பிரச்சனையா….”என்று அகிலா கலக்கத்துடன் கேட்க,
“என்ன கண்ணா பேசாம இருக்குற….”என்று கற்பகமும் பயத்துடன் தான் கேட்டார்.இருவருக்குமே பயம் எங்கே இவனும் பாண்டியனை போல் சண்டை சச்சரவு என்று இறங்கிவிடுவானோ என்று.
“அதெல்லாம் ஒண்ணுமில்லைமா….இது வேற….நீங்க பாருங்க….”என்றவன் கற்பகத்திடம் திரும்பி,
“அத்த எனக்கு ஒரு காபி…”என்றுவிட்டு வரவேற்பறையில் இருக்கும் சோபாவில் அமர்ந்துவிட்டான்.அகிலா மகனின் முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றார் எதையோ மறைக்கிறான் என்று மட்டும் புரிந்தது ஆனால் என்ன என்று கேட்டு அவனை தொந்திரவு செய்யவில்லை அவனாக கூறட்டும் என்று விட்டுவிட்டார்.
தன்னை முயன்று சமன் செய்து கொண்டான் இருந்தும் முழுதாக சமன் செய்ய முடியவில்லை புதிதாக எழும் இந்த உணர்வை கண்டு அவனிற்கே சற்று அச்சமாக தான் இருந்தது.என்னதிது என்னை மீறிய ஒரு உணர்வு.தீர்த்தா என்னிடம் பேசவில்லை என்றால் நான் பலவீனம் ஆகிவிடுவேனா அத்தனை பலகீனம் ஆனவானா நான் என்று தன்னையே நிந்தித்துக் கொண்டான்.
“கண்ணா இந்த காபி குடி….”என்று கற்பகம் காபி கொடுக்க அதை வாங்கி மெல்ல பருகிக் கொண்டிருந்தவனிடம்,
“என்ன கண்ணா எதாவது பிரச்சனையா…..ஏன் ஒருமாதிரி இருக்க….”என்று கற்பகம் கேட்க,
“ஒண்ணுமில்ல அத்தை…சரக்கு வர வேண்டியது நேரத்துக்கு வரலை அதான்….”என்றான் அது உண்மையும் கூட அதனால் தான் இன்று மண்டியை நேரம் தாழ்ந்து திறந்தது.
“அதுக்கு தான் இவ்வளவு கோபமா….”
“பின்ன இவனுங்க பண்ணுறதால நமக்கு எவ்வளவு கஷ்டம்….எரிச்சலா வருது….”என்று அமரன் முகத்தில் அத்தனை கோபம் மின்னி மறைய,அதுவரை மகன் ஏதோ தன்னிடம் மறைக்கிறான் என்று நினைத்துக் கொண்டிருந்த அகிலா,
“கண்ணா…இதெல்லாம் தொழில்ல சகஜம்….இப்படி கோபப்பட்டா நமக்கு தான் நட்டமே தவிர அவனுங்களுக்கு இல்லை….நீ பொறுப்பா இருக்கனு தான் மண்டியை உன்னை நம்பி கொடுத்தேன்….”
“என்ன அகி…கண்ணா அப்படியெல்லாம் கிடையாது ஏதோ கொஞ்சம் கோபம் வந்துட்டு அதுக்கு பிள்ளையை சந்தேகபடுவியா நீ…..”என்று கற்பகம் கோபமாக கேட்க,
“இல்லை…அதனால தான் பொறுப்பா நடந்துக்கனு சொல்லுறேன்…..”என்றுவிட்டு அகிலா சென்றுவிட,
“அவ கிடக்குறா கண்ணா….நீ இதையெல்லாம் மனசுல வச்சுக்காத….”என்று கற்பகம் எங்கே அகிலாவை அவன் தவறாக நினைத்துவிடுவானோ என்று கூற,மென்மையாக சிரித்த அமரன்,
“எனக்கு தெரியாத அத்த….நான் அப்படி எல்லாம் நினைக்கலை….அம்மா சொல்லுறது சரி தான் நானும் என் கோபத்தை குறைக்கனும்….”என்று கூறிவிட்டு தன் அறைக்குள் நுழைந்து கொண்டான்.தன் படுக்கையில் அமர்ந்து தன்னை சற்று சமன் செய்து கொண்டான்.காலையில் இருந்த ஒருவித கோபம் எரிச்சல் இப்போது சற்று மட்டு பட்டிருந்தது.
தன்னை தவிர்க்க நினைக்கிறாள் அதோடு நட்பு,காதல் இரண்டிற்கும் இடையில் அல்லாடுகிறாள் என்பது மட்டும் புரிந்தது அமரனுக்கு.ஆனால் இன்று தனக்குள் எழுந்த உணர்வு அது தான் அவனை மிகவும் ஆட்டி வைத்தது.தான் நிதானம் இழுக்கும் அளவுக்கு அவள் தன்னை பாதித்து இருக்கிறாளா என்ற உண்மையை அவன் உணரும் நேரம் மூளையில் எச்சரிக்கை மணி இது நல்லதற்கு அல்ல என்றும் கூறியது.
“என்ன செஞ்சிக்கிட்டு இருக்க அமரா நீ…..இது நல்லதில்ல….அம்மாக்கு மட்டும் இது தெரிஞ்சுது என்ன ஆகும்….எவ்வளவு நம்பிக்கை என் மேல எல்லாம் போயிடும்….இப்ப தீர்த்தா சரியா தான் இருக்கா நீ தான் தப்பு பண்ணுற….அவளை அவ வழியில விட்டுடு அது தான் உனக்கும் அவளுக்கும் நல்லது….”என்று மனதிற்குள் தீர்மானம் எடுத்த பிறகு தான் அமரனால் நிம்மதியாகவே உணர முடிந்தது.உணர்வுகளை மறைக்க தெரிந்து கொண்டால் நாமும் வாழ முடியாது அடுத்தவரையும் வாழ வைக்கமுடியாது.மறைக்கப்பட்ட உணர்வுகளின் போரட்டாம் மனதில் ரணமாக இருந்து கொண்டு தான் இருக்கும்.
“மற்றவர்களுக்கு நாம் நல்லவர்களாக இருந்தால்…..
நமக்கு நாம் கெட்டவர்களாகி விடுவோம்….
சில நேரங்களில் நாம் கெட்டவர்களாக இருப்பதில் தவறில்லை…..”
error: Content is protected !!