“ரொம்ப வருஷம் கழிச்சு அப்பா இப்ப தான் பிரீயா கிளம்புறாங்க. அதை போய் நான் கெடுப்பேனா? நீங்க ஜாலியா போயிட்டு வாங்கப்பா” என்று தாயிடம் தொடங்கி தந்தையிடம் முடித்தாள் அபிநயா.
சரியாக அந்த நேரம், “குருவிற்கு பிடிக்குமேன்னு கொஞ்சம் பால்கோவாவும் முறுக்கும் இதுல வச்சிருக்கேன். எடுத்து வச்சுக்கோ வேலு“ என்று வந்தார் சொர்ணம்.
“இதெல்லாம் பிளைட்ல எடுத்துட்டு போக விடமாட்டாங்க” என்றார் அஞ்சனா கடுப்பாக.
மாமியாராவது தன்னை போக சொல்லி சொல்லுவார் என்று எதிர் பார்த்திருக்க, அவரும் மகன் மட்டும் செல்வதாக கூறவும் சரி என்று அமைதியாக இருந்துவிட்டார்.
நேற்றே நந்தன் போன் போட்டு சொல்லி இருந்தான், “ஆச்சி உன் மருமக எங்க அப்பா மட்டும் போற கடுப்புல, ஸ்னாக்ஸ் எல்லாம் எடுத்துட்டு போக விடாம எதாவது செய்வாங்க, பிளைட்ல எடுத்துட்டு போக முடியாதுன்னு சொன்னாலும் சொல்லுவாங்க… ஹாண்ட் லக்கேஜ்ல டொமெஸ்டிக் பிளைட்ல எடுத்துட்டு போகலாம். அதனால நீங்க அனுப்புங்க” என்று கூறி இருந்தான்.
அதையே சற்று நயமாக மாற்றி கூறினார் சொர்ணம் பாட்டி.
“நந்து தான் சொல்லி கொடுத்திருப்பான். எல்லாம் கூட்டு களவாணிங்க..” என்று முனுமுனுத்துக்கொண்டே உள்ளே சென்றுவிட்டார் அஞ்சனா.
கும்பகோணத்தில் நிலைமை இப்படி என்றால் அங்கே தஞ்சாவூரில்…
“இப்ப நீங்களும் உங்க மச்சானும் மட்டும் போயே ஆகனும்னு என்ன கட்டாயம். லீவ் கிடைச்சதும் எல்லாரும் சேர்ந்தே போனா என்ன?” என்று ஆனந்தனை உலுக்கி கொண்டிருந்தார் மஞ்சுளா.
“உன்னையும் தான் கூப்பிட்டேன். நீ தானே வரமுடியாதுன்னு சொன்ன?”
“சொன்னா? சரின்னு விட்டுட்டு கிளம்பிடுவீங்களா?”
“இப்ப என்ன மஞ்சு? அடுத்த முறை நீயும் அஞ்சுவும் போயிட்டு வாங்களேன்”
“உங்க பொண்ணு நடத்துற ஒன்டு குடித்தனத்தை நீங்களே போய் பார்த்துட்டு வாங்க. நானும் பார்க்கிறேன், உங்க பொண்ணு எப்படி உங்களை கவனிக்கிறான்னு? அவளுக்கு சரியா ஒரு தோசை சுட தெரியுமா முதல்ல … பொண்ணு வீட்டுக்கு போறோம்னு ரொம்ப தான் பண்ணுறீங்க”என்று நொடித்துக்கொண்டு உள்ளே சென்றுவிட்டார் மஞ்சுளா.
ஆனந்தனும் வடிவேலுவும் அருணாவையும் குருவையும் காண ஹல்த்வானி செல்வதாக இருக்கின்றார்கள்.
அஞ்சனா மஞ்சுவிடம், ‘நாமளும் போகலாம்’ என்று கூறியதற்கு மஞ்சுதான், “நம்ம கெத்தை விட கூடாது அஞ்சு, முதல்ல வரலைன்னு சொல்லுவோம். நம்மளை விட்டுட்டு எப்படியும் போக மாட்டாங்க. கொஞ்சம் கெஞ்சி கேட்கட்டும். அப்புறமா கிளம்புவோம்” என்றிருந்தார்.
ஆனால் இவர்கள் வரவில்லை என்று கூறியதும், உடனே சரி என்று கூறிவிட்டு வடிவேலுவும் ஆனந்தனும் கிளம்புவதாக கூறி விட்டனர்.
சிறு குழந்தைகள் பள்ளி சுற்றுலா செல்ல எப்படி உற்சாகமாக இருப்பார்களோ, அப்படி இருந்தார்கள் இருவரும்.
சொர்ணம் பாட்டிக்கூட “என்ன வேலா.. ரொம்ப வருஷத்திற்கு பிறகு உன்னை இப்படி சின்ன பையனாட்டம் பார்க்கிறேன்” என்று மகிழ்ச்சியாக கூறினார்.
பாரு பாட்டிக்கு பொறுக்கவில்லை.
“என்னடா.. பெருசா சீமைக்கு போறவனாட்டம் இந்த ஆட்டம் போடற. உன் மாப்பிளை நடத்துற டீ கடையை பார்க்க இந்த ஆட்டம் அதிகம்” என்று நொடித்துக்கொண்டார்.
ஆனால் ஆனந்தனும் சரி, வடிவேலுவும் சரி எதையும் காதில் போட்டுக்கொள்ளவில்லை. மகிழ்ச்சியாக கிளம்பினார்கள்.
அஞ்சு மஞ்சு காதில் புகை வந்தது தான் மிச்சம்.
குருவை சந்தித்த இந்த சில மாதங்களில் அஞ்சுவும் மஞ்சுவும் தங்கள் வேலையை காட்டாமல் இல்லை. ஆனால் இவர்கள் போட்ட அனைத்து பால்களையும் அருணா அழகாக கேட்ச் பிடித்தாள். இருவராலும் எதையும் முன்போல சாதிக்க முடியவில்லை. அருணா நினைத்ததையே செய்தாள். முன் போல இல்லாமல் குரு தன் செல்லம்மா பக்கம் பக்கபலமாக நின்றான்.
குரு டீ கடை வைத்திருப்பதை அறிந்து சிறியவர்களுக்கு எந்த வருத்தமும் இருக்க வில்லை. மிகுந்த மகிழ்ச்சியே. “இப்ப இது மாதிரி பிசினஸ் தான் ட்ரெண்டே. இது தெரியாமா எந்த காலத்துல இருக்காங்களோ நம்ம மம்மீஸ்?” என்று அவர்களுக்குள் பேசிக்கொண்டார்கள்.
அவர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியாக இப்பொழுது நேரடியாக தொலைபேசியில் உரையாடி கொள்கின்றார்கள்.
சொர்ணம் பாட்டியும் இருவரிடமும் கைபேசியில் பேசிக்கொள்கிறார். பாரு பாட்டிக்கு அவ்வளவு ஆதங்கம். அவரால் டீ கடை வைத்திருப்பதை எல்லாம் ஜீரணித்து கொள்ளவே முடியவில்லை. அதானல் அவர் இவர்களுடன் பேசுவதில்லை.
——
ஒருவழியாக இரு ஆண்களும் அருணாளினி கந்தகுரு வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள்.
‘அருணாம்மா’ என்று மகளை தோளோடு அணைத்துக்கொண்டார் ஆனந்தன்.
சில நிமிடங்கள் தேவைப்பட்டது அப்பாவிற்கும் மகளிற்கும். கிட்டத்தட்ட ஓராண்டுக்கு பிறகு இருவரும் நேரில் சந்திக்கிறார்கள் அல்லவா?
“பத்து மணி ஆச்சு.. சீக்கிரம் குளிச்சிட்டு வாங்கப்பா இரண்டு பேரும்” என்று கூறினான் குரு.
“என்னடா நீ.. வீட்ல இருக்க.. கடைக்கு போகல?”
“காலை வேலை முடிஞ்சுதுப்பா. கடையில பசங்க இருக்காங்க. அவங்க சுத்தம் செய்வாங்க, அடுத்து மாலை நாலு மணிக்கு தான் திரும்ப கடை. நான் மதியம் போல இன்னிக்கு போனா போதும்.”
இருவரும் குளித்து வரவும், சுட சுட ஆவி பறக்கும் இட்லி வைத்து அதன் மேலே நெய் மணக்க சாம்பார் ஊற்றி பரிமாறினாள் அருணா.
அத்தனை மிருதுவாக இருந்தது. இருவரும் நன்றாக உண்டனர்.
ஊரில் இருந்து கொண்டு வந்த பொருட்களை எல்லாம் எடுத்து கொடுத்தனர்.
அருணா முகத்தில் புன்னகை வாடவே இல்லை. “இங்க வந்து நல்லா சிவப்பாயிட்ட அருணா” என்றார் ஆனந்தன் மகளிடம்.
“ஏன் மச்சான், நீங்க சொல்ற மாதிரி குருவும் கலரா தான் இருக்கான். அருணாவும் கலரா தான் இருக்கு. நாமளும் இங்க கொஞ்ச நாள் இருந்தா சிவப்பாயிடுவோமா?” என்றார் வடிவேலு.
“நம்மள எல்லாம் சிவப்பு பெயிண்ட்ல முக்குனா தான் சிவப்பு ஆவோம் மச்சான்”
என்றார் ஆனந்தன்.
கலகலப்பாக கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். பின் அருணா சமையல் அறைக்குள் செல்ல எழவும். “மதியத்துக்கு சிம்பிளா சமைச்சா போதும் டா” என்றார் தந்தை.
அருணா லேசாக சிரித்து கொண்டாள்.
“அப்பா மேலே வீட்ல இருக்கறவரு டாக்சி வச்சிருக்காரு. அவர்கிட்ட சொல்லி வச்சிருக்கேன். நாளைக்கு நைனிட்டால் போயிட்டு வாங்க. அருணா உங்க கூட வருவா” என்றான் குரு.
“நீ வரலையா குரு?” என்றார் ஆனந்தன்.
“எனக்கு செவ்வாய் கிழமை தான் லீவ் மாமா. அன்னைக்கு அல்மோரா போகலாம்”
“நாங்க சுத்தி பார்க்கனும்னு இல்லப்பா. உங்களை தான் பார்க்க வந்தோம்” என்றார் வடிவேலு.
“அதுக்குன்னு பத்து நாள் எங்க மூஞ்சியையே பார்த்துட்டு இருக்க முடியாதே மாமா” என்றாள் சிரித்து கொண்டே அருணா அடுப்படிக்குள் இருந்து.
“நீங்களும் மாமாவும் எங்கேயும் போனதே இல்லையேப்பா. இங்க எல்லாம் ரொம்ப அழகா இருக்கும். பார்த்துட்டு வாங்க அப்பா” என்றான் குரு.
“செல்லம்மா, எதாவது உதவி வேணுமா?” என்றான் குரு.
“எல்லாம் ஆச்சு, சொல்ல மறந்துட்டேன். ஒருத்தவங்க இன்னிக்கு அஞ்சு மணிக்கு ஐம்பது டீ வீட்டுக்கு ஆர்டர் கொடுத்தாங்க. நோட்ல எழுதி வச்சிருக்கேன் பாருங்க”
“நான் பார்த்துகிறேன் என்று குரு நோட் எடுத்து பார்த்து குறித்துக்கொண்டான்.
பின் நால்வரும் மதிய உணவு உண்டார்கள்.
‘என் பொண்ணுக்கு இவ்வளவு நல்லா சமைக்க தெரியுமா?’ என்று ஆச்சர்யமாக இருந்தது ஆனந்தனுக்கு.
வெந்தய குழம்பு, கீரை மசியல், தக்காளி ரசம் என்று எளிமையான உணவு மிகவும் சுவையாக இருந்தது.
மதியம் உணவு முடிந்ததும், “நீங்க ஓய்வு எடுங்க, நான் கடைக்கு போயிட்டு வந்துடறேன்” என்று குரு கிளம்பவும், “நானும் வர்றேன்” என்று வடிவேலுவும் உடன் இணைந்து கொண்டார்.
“நீங்களும் போயிட்டு வாங்களேன் அப்பா” என்று தந்தையின் ஆர்வத்தை பார்த்து அருணா கூறினாள்.
‘என் முகம் பார்த்து நான் நினைத்ததை புரிந்து கொள்கிறாள் என் மகள், ஆனால் என் துணையை அவள் எதிர்பார்த்த போது நான் விட்டுவிட்டேனே” என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை ஆனந்தனால்.
பின் குருவுடன் சொக்கன் டீ ஸ்டால் சென்றனர். கடையின் பெயரை பார்த்ததும் நெகிழ்ச்சியாக இருந்தது வடிவேலுவுக்கு. “மகன் தன் அப்பா பெயர் வச்சிருக்கானே” என்று.
இருவரும் அமைதியாக கடையின் உட்புறம் அமர்ந்துகொண்டார்கள்.
குரு வேலை செய்யும் நேர்த்தியை பார்க்க பார்க்க ஆச்சர்யமாக இருந்தது இருவருக்கும். சரியாக நாலு மணிக்கு ஆட்கள் வர தொடங்கினார்கள். அதற்கு பிறகு பம்பரமாக தான் சுழன்றான் குரு.
இதற்கிடையில் டெலிவரிக்காக பெரிய பெரிய பிளாஸ்களில் தேனீரை நிரப்பி, தனியாக எடுத்து வைத்தான். முன்னே தயாராக வைத்திருந்த ஆர்டர் எண்களை அதன் மேலே ஒட்டி வைத்தான். டெலிவரி செய்யும் பையன் வந்து அதை எடுத்து சென்றான்.
கோலு குருவின் மூன்றாவது கை போல வேலை செய்தான்.
“பார்க்க தத்தி மாதிரி இருக்கான்னு யோசிச்சேன் மச்சான். ஆனா குரு சொல்றதை எல்லாம் சரியா செய்றான் இல்ல” என்றார் ஆனந்தன் வடிவேலுவிடம்.
“ஆமா மச்சான். நம்ம எதாவது உதவி செய்யலாம்னு பார்த்தா. எல்லாம் ஹிந்திலயே பேசுறாங்க. ஒன்னும் புரிய மாட்டேங்குது” என்றார் வடிவேலு.
“டீ கடையில உங்க பொண்ணும் மாப்பிள்ளையும் ஈ ஓட்டறதை பார்க்க போறீங்களான்னு என் பொண்டாட்டி கேட்டப்ப எனக்கு சங்கடமா இருந்தது. இங்க பார்த்தா இல்ல தெரியுது, எவ்வளவு கூட்டம் வருது மச்சான். ஆனா நம்ம குரு எப்படி சுறுசுறுப்பா இருக்கான் பாருங்களேன்”
“உங்க தங்கச்சி மட்டும் என்ன? என் வயித்துல பொறந்துட்டு இப்படி டீ கடை வைக்கனும்னு தோணுது பாருங்க .எங்க அப்பா அந்த காலத்துலே பேங்க் எம்பலாயீ. எல்லாம் உங்க பரம்பரை ரத்தம். உங்க அப்பா காய்கறி கடை வச்சிருந்தார். இவன் டீ கடைன்னு நிக்கிறான்” அப்படி இப்படின்னு எவ்வளவு பேச்சு தெரியுமா மச்சான்.
“நம்ம சொன்னாலும் புரிஞ்சுக்க போறது இல்ல விடுங்க மச்சான். அருணாவையும் குருவையும் இப்ப பார்க்க எவ்வளவு சந்தோசமா இருக்கு தெரியுமா?”
“ஆமா மச்சான், எனக்கும் மனசுக்கு நிறைவா இருக்கு”
இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே, கோலு இருவருக்கும் தேநீர் கொண்டு வந்து கொடுத்தான்.
“எடுங்க சித்தப்பா” என்றான் வடிவேலுவிடம்.
“நீங்களும் எடுங்க மாமா” என்றான் ஆனந்தனிடம்.
இருவரும் ஆங் என்று பார்க்கவும், “நல்லா இருங்க..” என்றான் கோலு.