Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நான் மீட்டிடும் வீணையே

நான் மீட்டிடும் வீணையே 1 3

“நம்ம பூங்கொடி கிட்ட ஒரு வார்த்தை கேக்க வேண்டாமா மா? பூங்கொடி உனக்கு சம்மதமா?”, என்று கேட்டார்.

“நான் இன்னும் காலேஜ் கூட முடிக்கலை. அதுக்குள்ல எனக்கு கல்யாணம் பேசுறீங்க? எனக்கு இது பிடிக்கவே இல்லை. என்னை படிக்க வைங்க”, என்று கண்ணீருடன் சொன்னாள் பூங்கொடி.



Advertisement

“இன்னும் எதுவும் முடிவாகலை பாப்பா. சும்மா பாக்க வரச் சொல்லுவோம். பிடிச்சிருந்தா தானே மேற்கொண்டு பேசப் போறோம். அதனால பொறுமையா இரு”, என்று தம்பிதுரை சொன்னதும் அவனை முறைத்தாள் பூங்கொடி.

“உன் விசயத்துல நாங்க எதுவும் செய்யக் கூடாதா பாப்பா?”, என்று கேட்டார் கேசவன். அடுத்த நொடி “எனக்கு சம்மதம். நீங்க என்ன சொன்னாலும் கேப்பேன்”, என்று சொன்னவளின் கண்கள் கண்ணீரால் நிறைந்தது.

Advertisement

Advertisement

அவளது கண்ணீரைத் துடைத்து விட்ட கேசவன் “நாங்க உன் நல்லதுக்கு தான் செய்வோம். இப்படி பச்ச குழந்தை மாதிரி அழக் கூடாது சரியா?”, என்று கேட்டார்.

“ம்ம்”, என்று அறை மனதாக தலை அசைத்தாள். உடனே அங்கிருந்து கூட்டம் கலைந்தது. அனைவரும் சென்றதும் பிள்ளைகளும் ஹோம் வொர்க் செய்ய சென்று விட்டார்கள். அங்கிருந்த சோபாவில் அமர்ந்த பூங்கொடி “அவங்களுக்கு என்னைப் பிடிக்க கூடாது”, என்று மனதில் வேண்ட ஆரம்பித்தாள்.

Advertisement

அவளுக்கு ஆடை வடிமைப்பில் அதிக ஆர்வம் உண்டு. அதனால் அந்த பிரிவை எடுத்து படித்து பெரிய அளவில் வர வேண்டும் என்று அவளுக்கு கனவு உண்டு. அதை தான் எடுத்துப் படித்துக் கொண்டிருந்தாள். காலேஜ் முடிய இன்னும் ஒரு வருடம் இருக்க அவளது திறமையை வளர்க்க அவள் மேற்படிப்பும் படிக்க வேண்டும். ஆனால் இப்போது பார்த்து அவர்கள் திருமணம் பற்றி பேசவும் எரிச்சலாக வந்தது. ஆனால் அண்ணனை அவளால் எதிர்க்க முடியாது.

“இந்த வாழ்க்கை உனக்கு வேண்டாம், நீ செத்து விடு”, என்று அவர்கள் சொன்னாலும் அவள் கேட்பாள். அவர்கள் தன்னுடைய நல்லதுக்கு தான் எல்லாம் செய்வார்கள் என்ற நம்பிக்கை இருந்தாலும் இந்த திருமணம் அவளுடைய கனவை சிதைத்து விடுமோ என்று பயந்து போனாள். அதற்கு அடுத்து வந்த நாட்களில் எரிச்சலுடன் சுற்றிக் கொண்டிருந்தாள். அவளது சந்தோஷம் எல்லாம் விடை பெற்றுச் சென்றிருந்தது. பிள்ளைகளிடம் கூட அவள் அதிகம் ஓட்ட வில்லை.

திருமணம் செய்யும் வயதா தன்னுடையது என்று எண்ணி எண்ணி சோர்ந்து போனாள். ஆனால் அம்மாவை எதுத்து பேசும் அவளால் அவளுடைய அண்ணன்களிடம் அப்படி பேச முடியாது.

அவளை குழந்தை என தாங்கும் அவர்களை எப்படி எதிர்த்து பேச என்று தெரியாமல் மௌனமாக உலாவிக் கொண்டிருந்தாள். அவளை தனியே சந்தித்த தாரணி “இப்ப எதுக்கு உம்மணா மூஞ்சி மாதிரி உக்காந்துருக்க? நீ இப்படி இருக்குறதுனால மத்த பிள்ளைகளும் களை இழந்து இருக்குதுக”, என்றாள்.

“அண்ணி எனக்கு படிக்கணும். கல்யாணம்னு சொன்னதுல இருந்து என்னால நிம்மதியா இருக்க முடியலை. பிள்ளைங்க கிட்ட பொய்யா கூட என்னால சிரிக்க முடியலை. மொத்தத்துல நான் நானா இல்லை”, என்று தன்னுடைய உண்மையான மனநிலையைச் சொன்னாள்.

“உன்னை யார் படிக்க வேண்டாம்னு சொன்னா? நீ தாராளமா படிக்கலாம் பூவு. முதல்ல காலேஜ் முடி. அப்புறம் மேற்படிப்பு முடி. உனக்கு புடிச்ச மாதிரி கடை வை. உன் திறமையைக் காட்டு. யார் உனக்கு தடை போட முடியும்?”

“கல்யாணம் முடிஞ்சா எப்படி படிக்க முடியும்? கொஞ்ச நாள் லீவ் போட்டாலே அந்த செமஸ்டரே போயிரும். அப்படி இருக்க இன்னும் ஒரு வருசத்துல வாங்கப் போற டிகிரியைக் கூட என்னால வாங்க முடியாது”

“முதல்ல முடியாது, நடக்காதுன்னு பேசுறதை நிறுத்து பூங்கொடி. கல்யாணம் முடிஞ்சா எல்லாம் முடிஞ்சிருச்சுன்னு ஏன் நினைக்கிற? உன்னைக் கட்டிக்க போறவர் கிட்ட கேளு பூங்கொடி. கண்டிப்பா அவர் உன்னைப் படிக்க வைப்பார். உன் அண்ணனுங்க எல்லாருமே ரொம்ப சந்தோஷமா இருக்காங்க. அவங்க சந்தோஷத்தை கெடுக்க போறியா நீ?”

“எல்லாரும் சந்தோஷமா இருக்கணும்னு தான் நான் அமைதியா இருக்கேன். வரவங்களுக்கு என்னைப் பிடிக்க கூடாதுன்னு ஆசையா இருக்கு”, என்று பூங்கொடி சொல்ல அவளை கனிவுடன் பார்த்தாள் தாரணி.

மாசுமருவில்லாத பிள்ளை முகம். அவள் வயதுக்கு தேவையான உடல் வளர்ச்சி. பருவப் பெண் எப்படி இருப்பாளோ அப்படி அழகாக இருந்தாள். சுண்டி விட்டால் ரத்தம் அளவுக்கு சிவந்த நிறம், இடையை தாண்டி காடு போல வளர்ந்து நிற்கும் கருங்கூந்தல், மீன் போன்ற அகலமான கண்கள், சின்னதாக இருந்த நாசி, அதுவும் அதன் மீது வீற்றிருந்த ஒரு சின்ன மூக்குத்தி, அவள் அழகை பெருமடங்கு உயர்த்திக் காட்டியது.,

அவளுடைய கன்னத்தில் இருந்த அந்த சிறு பரு கூட அவளை இன்னும் அழகாய் தான் காட்டியது. “உன்னை யாருக்கு டி பிடிக்காது? அப்படி பிடிக்கலைன்னு சொன்னா அவனுக்கு கண் இல்லைனு தான் சொல்லணும்”, என்று மனதில் எண்ணிக் கொண்ட தாரணி “ஒரு வேளை அவங்களுக்கு உன்னைப் பிடிச்சிருச்சுன்னா உன்னைப் படிக்க வைக்க சொல்லி அவங்க கிட்ட உன் அண்ணனுங்களை விட்டு கேக்க சொல்லலாம் சரியா?”, என்று கேட்டாள்.

“அண்ணனுங்க கேட்டாலும் அவங்க முடியாதுன்னு சொல்லிட்டா? எனக்கு பயமா இருக்கு அண்ணி”

“அடி லூசு, கல்யாணம் முடிஞ்சா எல்லா ஆம்பளைங்களும் பொண்டாட்டி பேச்சை தான் கேப்பாங்க. நீயும் அவரை உன் முந்தானைல முடிஞ்சு வச்சிக்கோ”, என்று தாரணி சொல்ல அவள் முகம் சிவந்தது.

“போங்க அண்ணி, கிண்டல் பண்ணாதீங்க”

“உண்மையா தான் சொல்றேன் டா. இப்ப நான் வேலைக்கு போறேன்னு உன் அண்ணன் கிட்ட சொன்னா உன் அண்ணன் என்ன சொல்வார்?”

“சரி போயிட்டு வான்னு சொல்லுவாங்க”

“அதே மாதிரி தான் உனக்கு வரப் போறவரும் சொல்வார் சரியா?”, என்று சொல்லி நாத்தனாரின் மனதை கொஞ்சம் தேற்றினாள்.

அவளால் தேற்ற தான் முடிந்தது. ஆனால் பூங்கொடியால் முழுவதுமாக மாற முடிய வில்லை. அவளுக்கு உள்ளுக்குள் பயபந்து உருண்டது. அவர்கள் எப்போது தன்னைப் பெண் பார்க்க வருவார்களோ என்று திக் திக்கென்று இருந்தது. அதற்குள் காலேஜ் திறந்து விட்டால் நல்லது என்று எண்ணினாள். எப்போதும் லீவ் முடிந்தால் காலேஜ் போக வேண்டுமே என்று சோக கீதம் பாடும் பூங்கொடி இந்த முறை சீக்கிரம் லீவ் முடிய வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள்.

ஒவ்வொரு நாளும் கலவரத்துடன் தான் நாட்களைக் கடத்தினாள். லீவ் இன்னும் இரண்டு நாட்கள் இருந்தது. காலேஜ் திறந்ததும் ஹாஸ்டலுக்குள் பதுங்கி விட வேண்டும் என்று ஆசை கொண்டாள். அவள் நினைப்பது நடக்குமா என்ன?

அதே நேரம் சிறைக்குள் இருந்த ஒரு விசாரணைக் கைதியிடம் “ஒழுங்கா உண்மையைச் சொல்லு டா. இன்னும் கொஞ்ச நேரத்துல இன்ஸ்பெக்டர் வந்துருவார். அவர் வேற மாதிரி, நாம நினைக்கிற மாதிரி இருக்க மாட்டார். அவர் விசாரணையே வேற மாதிரி இருக்கும். உடம்புல பிளாஸ்டர் போட்டுட்டு தான் விசாரணையே ஆரம்பிப்பார். உடம்பை பஞ்சர் ஆக்கிக்காத. உன் நல்லதுக்கு தான் சொல்றேன்”, என்றான் சப் இன்ஸ்பெக்டர் வாஜித்.

அவர் சொன்னதைக் கேட்டு அவனுக்கு பயத்தில் வயிறு கலக்கியது தான். ஆனாலும் உண்மையைச் சொல்ல வில்லை. சொன்னால் பல வருடம் ஜெயில் வாசம் என்பதால் அவன் உண்மையைச் சொல்ல கூடாது என்ற முடிவில் இருந்தான்.

அப்போது அந்த ஸ்டேசனுக்குள் நுழைந்தான் மணிமாறன். அனைவரும் எழுந்து அவனுக்கு சலியூட் வைத்தார்கள். தலையாட்டலுடன் அவர்களின் வணக்கத்தை ஏற்றவன் ஆறடி உயரத்தில், உயரத்திற்கேற்ற அளவான உடலுடன் கம்பீரமாக இருந்தான். கோதுமை நிறத்தில் ராஜ தோரணையுடன் இருக்கும் அவனது முகமும் மீசையும் யாவரும் பயந்து மரியாதை கொடுக்கும் விதத்தில் இருக்கும் என்றெல்லாம் சொல்லும் படி எல்லாம் இல்லாமல் சினிமா நடிகர் ஸ்ரீகாந்த் போல இருந்தான்.

போலீஸ் கட் ஹேர் ஸ்டைல், அளவான மீசை, கூர்மையான கண்கள், அழுத்தமான உதடுகள், சாக்லேட் ஹீரோ என்று சொல்லும் அழகு என இருந்தான் மணிமாறன். ஜிம் போய் உடலை கட்சிதமாக வைத்திருந்தான். நேராக அவனது அறைக்குச் சென்றவன் அவசர அவசரமாக தான் போட்டிருந்த சட்டையைக் கழட்டி விட்டு கவரில் கொண்டு வந்திருந்த யூனிபார்ம் சட்டையை அணிந்து கொண்டு வெளியே வந்தான்.

“இன்ஸ்பெக்டர் வரார். நீ இன்னைக்கு செத்த”, என்று வாஜித் சொல்ல அவனைத் திரும்பிப் பார்த்த அந்த கைதிக்கு மணிமாறனைப் பார்த்து பயம் வரவில்லை.

“இவனையா இந்த அளவுக்கு இவர் புகழ்ந்து தள்ளினார்?”, என்று சிரிப்புடன் எண்ணினான் அந்த கைதி. “அப்பாடி அவர் பொய்யான மிரட்டலை நம்பி நான் எந்த உண்மையையும் உளரலை”, என்று எண்ணி சந்தோஷம் வேறு பட்டுக் கொண்டான்.

“எல்லாரும் வேலையைப் பாருங்க. வாஜித் நீங்க மட்டும் இங்க வாங்க”, என்று சப் இன்ஸ்பெக்ட்டரை மட்டும் வரச் சொன்ன மணிமாறன் அவனுடைய இருக்கையில் அமர்ந்தான்.

காதல் தொடரும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!