Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நான் மீட்டிடும் வீணையே

நான் மீட்டிடும் வீணையே 4

அத்தியாயம் 4

எந்தன் தனிமை துயரை

விரட்டி விடுகிறது

உந்தன் அருகாமை!!!



Advertisement

சரியென்று தலையசைத்தவள் மாற்றுடையை எடுத்துக் கொண்டு அவசரவசரமாக குளிக்கச் சென்றாள். அவள் அவசரமாக குளித்து விட்டு வெளியே வர அவன் கண்கள் அவளையே மொய்த்தது. புது புடவையில் புத்தம் புது தாலி மின்ன தலையில் கட்டிய துண்டுடன் எந்தக் அலங்காரமும் இல்லாமல் நின்றவளிடம் இருந்து பார்வையை எடுக்கவே அவனால் முடியவில்லை.

Advertisement

அவன் தன்னைப் பார்க்கவும் அவளும் அசையாமல் நின்றாள். முதலில் சுதாரித்தது அவன் தான். “கொடி எனக்கு ஒரு காபி கொண்டு வரியா?”, என்று அவன் கேட்டதும் “சரி”, என்று சொல்லி விட்டுக் கீழே சென்றாள்.

Advertisement

சமையல் அறையில் தேவகி இருக்க தயக்கமாக அவள் அருகே சென்று நின்றாள்.

Advertisement

“வாடாம்மா”, என்று அன்பாக அழைத்தார் தேவகி.

அவர் அருகில் சென்று நின்றாள். “ஏதாவது வேணுமா மா?”, என்று அவர் கேட்க “அது,… அது வந்து…. நீங்க”, என்று இழுத்தாள்.

“நான் உனக்கு சித்தி முறையாகனும் மா. சித்தினு சொல்லு”

“அதெல்லாம் வேண்டாம்”, என்று பூங்கொடி பட்டென்று சொன்னதும் தேவகி முகம் ஒரு மாதிரி போனது.

“சித்தின்னாலும் அம்மான்னு தானே அர்த்தம்? நான் அம்மானே உங்களைக் கூப்பிடுறேன்”, என்று பூங்கொடி சொல்ல தேவகிக்கு பயங்கர திகைப்பு.

“என்ன சொன்ன?”, என்று அவர் அதிர்வாக கேட்க “அம்மானு சொன்னேன். சொல்லலாம் தானே?”, என்று கேட்டாள் பூங்கொடி.

“கண்ணே, என்னோட இந்த ஜென்மமே பூர்த்தி அடைஞ்ச மாதிரி இருக்கு மா”, என்று சொல்லி அவளைக் கட்டிக் கொண்டு அழுது விட்டார். “ஐயோ முதல் நாளே அழ வைத்து விட்டோமே?”, என்று பூங்கொடிக்கு கவலையாக போனது.

“எனக்கு குழந்தையை கொடுக்குறதுக்கு முன்னாடியே என் கணவர் போய் சேந்துட்டார் மா. அன்னைல இருந்து விதவையா தான் இருக்கேன். அதையும் மீறி எனக்கு ஒரு மக இருந்துருக்க கூடாதான்னு ஏக்கம் இருந்துட்டே தான் இருக்கு. ஆனா இன்னைக்கு உன்னோட அந்த ஒரு வார்த்தைல அந்த ஏக்கம் காணாம போச்சு. இனி அம்மானே சொல்லு டா. இனி நீ தான் எனக்கு மக. காப்பி தரவா? குடிக்கிறியா?”

“குடிக்கிறேன் மா. அதுக்கு முன்னாடி அவங்க காபி கேட்டாங்க”

“இரு ரெண்டு பேருக்குமே தரேன். ரூமுக்கு போய் குடிங்க. அதுக்கு முன்னாடி சாமி கும்பிட்டிட்டு தலையை காய வை. நான் அதுக்குள்ள போட்டு வைக்கிறேன்”, என்று சொன்னதும் சாமி அறைக்குச் சென்று விளக்கேற்றி வைத்தாள் பூங்கொடி.

சாமி கும்பிட்டு விட்டு வரும் போது கதிரவன் வாக்கிங் சென்று விட்டு வந்தார். அவரைக் கண்டதும் “குட் மார்னிங் மாமா”, என்றாள்.

“குட் மார்னிங் மருமகளே”, என்ற படி அவர் சோபாவில் அமர சமையல் அறைக்குச் சென்றவள் “அம்மா, மாமாவும் வந்துட்டாங்க. அவங்களுக்கும் காபி வேணும்”, என்றாள்.

“இந்தா, இதை அண்ணன் கிட்ட கொடுத்துட்டு வந்து உங்களுக்கு எடுத்துக்கோ”, என்று சொல்ல கதிரவனுக்கு எடுத்துச் சென்றாள்.

“தேங்க்ஸ் மா”, என்ற படி அதை வாங்கிக் கொண்டார்.

மீண்டும் அவள் சமையல் அறைக்கு வர ஒரு தட்டில் இரண்டு டம்பளரை வைத்துக் அவளிடம் நீட்டினார் தேவகி. அதை எடுத்துக் கொண்டு திரும்பியவள் திடீரென்று நினைவு வந்தவளாக “அண்ணா அண்ணி எங்க மா?”, என்று கேட்டாள்.

“அவங்க இப்ப தான் டா கிளம்புனாங்க? உங்களை இருந்து கூட்டிட்டு போறேன்னு தான் சொன்னாங்க. நான் தான் அவங்களைப் போகச் சொன்னேன். என்ன தான் அவங்க இங்க இருந்தாலும் அவங்க வீட்ல இருக்குற மாதிரி வராதுல்ல?”

“சரியா செஞ்சீங்க மா. அண்ணாக்கு எப்பவும் வீட்லே இருக்கணும்”

“சரி நீ போய் காபி குடி”, என்று அவர் சொன்னதும் அறைக்கு வந்தாள். அவன் முன்னே நின்றவள் “இந்தாங்க”, என்று நீட்டினாள்.

ஈரக் கூந்தலை விரிய விட்டு நெற்றி வகிட்டில் குங்குமம் மின்ன நின்ற புது மனைவியை ரசித்துப் பார்த்தான் மணிமாறன்.

அவன் பார்த்துக் கொண்டே இருக்கவும் அவள் முகம் சிவந்தது. “ஐயோ இப்படி பாக்காதேயேன்”, என்று அவனிடம் கத்த வேண்டும் போல இருந்தது.

அவன் பார்வையைத் தாங்க முடியாமல் “காபி ஆறுது’, என்று மட்டும் சொன்னாள். “தேங்க்ஸ் கொடி”, என்று சொல்லி அதை வாங்கிக் கொண்டான். அதற்கு பின்னரும் அவன் கண்கள் அவளையே தான் வட்டமிட்டது. அவன் பார்வையை உணர்ந்த அவளுக்கு எப்போது டா இங்கு இருந்து போவோம் என்று இருந்தது.

காபி குடித்து முடித்ததும் டம்பளரை வாங்குவதற்காக அவள் கையை நீட்ட அவனோ அவள் கையை பற்றினான்.

“நான் டம்ளரை தான் கேட்டேன்”, என்று அவசரமாக சொன்னவள் கையை உருவிக் கொள்ள முயன்றாள்.

“நீ ரொம்ப அழகா இருக்க கொடி. அதுவும் இந்த கண்….”, என்று சொல்லிக் கொண்டே வந்தவனின் கை விரல் அவளுடைய இமையை வருட அவனுடைய தீண்டலில் திகைத்து போய் நின்றாள். வெகு நெருக்கத்தில் அவனைக் கண்டவளுக்கு இதயம் எகிறிக் குதிக்கும் உணர்வு தான் வந்தது.

“பிளீஸ் விடுங்க“, என்று அவள் கெஞ்சிய பிறகு தான் அவள் கையை விட்டான். அவசரமாக அங்கே இருந்து ஓடிவிட்டாள் அவள்.

மணிமாறன் சாபிட்டுக் கொண்டிருக்க அவன் அருகே அமர்ந்து அவனுக்கு பரிமாறிக் கொண்டிருந்தாள் பூங்கொடி. அதைப் பார்க்க சந்தோசமாக இருந்தது தேவகிக்கு.

“ரெண்டு பேரும் எப்பவும் இப்படி சந்தோஷமா இருக்கணும்”, என்று வேண்டிக் கொண்டு அறைக்குள் சென்று விட்டார். அவர்கள் சாப்பிட்ட பிறகு தான் வெளியே வந்தார். கதிரவனும் அங்கே தான் அமர்ந்திருந்தார்.

“எப்பப்பா கிளம்புறீங்க?”, என்று கேட்டார் கதிரவன். “ஒரு ஒரு மணி நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு போறோம் பா”, என்றான்.

“எதுக்கு அந்த ஒரு மணி நேரம்? அங்க எல்லாரும் உங்களைக் காணும்னு காத்துட்டு இருப்பாங்க மாறா. பூங்கொடி போனா பிள்ளைகளும் சந்தோஷப் படும். இங்க எடுக்குற ரெஸ்டை அங்க போய் எடுங்க”, என்றாள் தேவகி.

“அத்தை சொன்னா அப்பீல் ஏது? நாங்க கிளம்புறோம்”, என்று சொன்னவன் மனைவியை அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டான்.

காரில் இதமான பாடல்களை ஓட விட்டான். அதை அவள் ரசித்த படி வந்தாள். தன்னருகே அமர்ந்திருக்கும் புது மனைவியை ரசித்துப் பார்த்தான். கழுத்தில் புது மஞ்சள் கயிறு மின்ன அதனுடன் ஒரு பெரிய தாலிச் செயினை அணிந்திருந்தாள். அவள் சூடியிருந்த மல்லிகையின் வாசம் அவன் நாசிக்குள் நுழைந்தது.

அவர்கள் வீட்டுக்கு சென்ற போது அனைவரும் வாசல் வந்து வரவேற்றார்கள். மணியம்மை மகளின் முகத்தை பூரிப்புடன் பார்த்தார். இருவருக்கும் ஆலம் சுற்றி வரவேற்று அமர வைத்தார்கள்.

சின்ன பிள்ளைகள் “அத்தை”, என்று கத்திய படி அவளைக் கட்டிக் கொண்டார்கள். அனைத்தையும் சிறு சிரிப்புடன் வேடிக்கை பார்த்தான் மணிமாறன்.

அதன் பின் பெண்கள் அனைவரும் சமையல் அறையில் பம்பரமாக சுழன்று கொண்டிருந்தார்கள். மணிமாறன் ஹாலில் அமர்ந்து மச்சினன்களுடன் பேசிக் கொண்டிருந்தான்.

மதியம் ஒரு மணி ஆனதும் பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த மகளை அழைத்தார் மணியம்மை.

“என்ன கிழவி?”

“நேரம் ஆச்சு டி, மாப்பிளையை சாப்பிட கூப்பிடு”

“அண்ணியைக் கூப்பிடச் சொல்லு மா”

“நீ அவர் கூட இரு டி. நீ இருந்தா தான் அவர் சங்கடம் இல்லாம இருப்பார்”, என்று சொன்னதும் அவனைக் காணச் சென்றாள்.

அவன் அங்கே வாய் மூடாமல் கதை பேசிக் கொண்டிருக்க வரதனும் மணிவாசகமும் ஊம் கொட்டிக் கொண்டிருந்தார்கள்.

“இவனா நம்ம வீட்டில் சங்கடம் எல்லாம் பாப்பான்?”, என்று புன்னகையுடன் எண்ணியவளுக்கு அவன் தன்னுடைய அண்ணன்களுடன் பேசுவது சந்தோசமாகவே இருந்தது.

அவர்கள் அருகில் சென்று நின்றவள் “அண்ணா உங்களை அண்ணி கூப்பிடுறாங்க. வரதண்ணா உன்னை அம்மா கூப்பிட்டுச்சு”, என்றாள்.

அவர்கள் இருவரும் எழுந்து செல்ல அவளைப் பார்த்தான். அவனைப் பார்த்தவள் “அம்மா சாப்பிட கூப்பிட்டாங்க”, என்றாள். சரி என்று சொல்லி அவனும் எழுந்து வந்தான். விருந்து பிரமாதமாக இருந்தது.

பிறகு சாப்பிடுகிறேன் என்று சொன்ன பூங்கொடியை அவன் அருகே அமர வைத்து பரிமாறினார்கள். அவனும் நிறைவாக உண்டான். அடுத்த இரண்டு நாட்கள் அங்கே இருந்து விட்டு இருவரும் கிளம்பினார்கள். அவர்களுடன் பலகாரங்களும் சென்றது.

அடுத்து வந்த நாட்களில் அந்த வீட்டில் ஒன்றி விட்டாள் பூங்கொடி. முதலில் கதிரவனைப் பார்த்து பயம் வந்தாலும் இப்போதெல்லாம் அவரிடம் நன்றாகவே பேசினாள்.

மணிமாறனிடம் மட்டும் அவளால் எவ்வளவு முயன்றும் ஒட்ட முடியவில்லை. அவன் வீட்டில் இல்லாத போது மிகவும் சந்தோஷமாக வளைய வந்தாள். அவன் வந்ததும் ஏதோ ஒரு கூச்சம் அவள் மனதை அழுத்த அமைதியாகி விடுவாள்.

“பிள்ளை வீட்டுக்குள்ளே இருக்கு பா. கோவிலுக்கு அழைச்சிட்டு போ. இன்னைக்கு பிரதோஷம் வேற”, என்றார் தேவகி.

முதல் முறையாக அவனுடன் வண்டியில் பயணிக்கிறாள் பூங்கொடி. அவள் என்னமோ வேடிக்கை பார்த்த படி தான் சென்றாள். அவன் தான் அவளுடைய அருகாமையில் தவித்துப் போனான்.

காற்றின் வேகத்தில் அவளுடைய சேலை அவனை உரசியது. அவளது கூந்தல் முடிகள் அவன் பின்னங்கழுத்தை வருடி அவனுக்கு குறுகுறுப்பை கொடுத்தது.

அவள் வைத்திருந்த மல்லிகையின் வாசனை அவனது நாசியில் நுழைந்து அவனது மனதை மயக்கியது. அவள் அருகாமையில் கிறுகிறுத்துப் போய் தான் வண்டியை செலுத்திக் கொண்டிருந்தான்.

அவள் அருகே நின்று சாமி தரிசனம் செய்யும் போது அவன் மனதில் அப்படி ஒரு அமைதி வந்தது.

அதற்கு அடுத்த நாள் “உன் பெரியத்தை உன்னை விருந்துக்கு கூப்பிட்டா டா. மருமகளை கூட்டிட்டு போயிட்டு வா”, என்றார் கதிரவன்.

“சரிப்பா”, என்றவன் மனைவியைப் பார்த்தான். அவள் தேவகியுடன் ஏதோ சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்க தேவகி முகத்தில் இருந்த நிறைவைப் பார்த்தான். அதைக் கண்டு அவனுக்கு சந்தோஷமாக இருந்தது. அவன் பார்வை போகும் திசையில் கதிரவனும் பார்த்தார்.

“உன் அத்தை முகத்துல இருக்குற சந்தோசத்தைப் பாத்தியா டா மாறா. பூங்கொடி வந்த அப்புறம் தான் தேவகி சந்தோஷமா இருக்குறதைப் பாக்குறேன். அதுவும் பூங்கொடி அம்மான்னு சொன்னா போதும். தேவகி முகத்துல வந்து போற சந்தோசத்துக்கு அளவே இல்லை டா. நல்ல பொண்ணு. அவளை சந்தோஷமா வச்சிக்கோ”, என்றார் கதிரவன். “சரிப்பா”, என்றவன் மனைவியை ரசித்தான்.

திடீரென்று ஏதோ உள்ளுணர்வு உறுத்த திரும்பிப் பார்த்தாள் பூங்கொடி. மணிமாறன் அவளையே பார்த்த படி இருக்கவும் அவள் முகம் சிவந்தது.

“என்ன?”, என்று கண்களால் கேட்டாள்.

“ரூமுக்கு வா”, என்று சைகை செய்து விட்டு அறைக்குச் சென்றான்.  அந்த ரகசிய பாஷை இருவருக்குமே பிடித்தது.

“எதுக்கு இந்நேரம் ரூமுக்கு கூப்பிடுறான்?”, என்று எண்ணியவளுக்கு குறுகுறுப்பாக இருந்தது. அவனைப் பற்றிய நினைவால் அவள் தேவகி சொன்னதைக் கவனிக்க வில்லை.

“பூங்கொடி… பூங்கொடி…”, என்று தேவகி அழுத்தி அழைக்கவும் தான் சுய நினைவுக்கு வந்து அவரைப் பார்த்தாள்.

“என்ன மா… என்ன மா?”, என்று அவள் பதற “என்ன ஆச்சு? திடீர்னு அமைதியாகிட்ட?”, என்று கேட்டார் தேவகி.

“அது ஒண்ணும் இல்லை மா. நீங்க சொன்னதை தான் யோசிச்சிட்டு இருந்தேன்”

“நான் சொன்னதையே நீ கவனிக்கலை. இதுல நான் சொன்னதை யோசிச்சியா? நல்லா இருக்கு போ. என்ன மாறன் உன்னைக் கூப்பிட்டானா?”, என்று புன்னகையுடன் கேட்டார்.

“எப்படி மா கண்டு பிடிச்சீங்க?”

“இதைக் கண்டு பிடிக்க ஜோசியமா பாக்கணும்? புதுசா கல்யாணம் ஆன பொண்ணுக்கு புருசனைத் தவிர வேற என்ன நினைப்பு இருக்க போகுது? அவன் முழியும் சரி இல்லை. அதான் கண்டு பிடிச்சேன். சரி என்னன்னு கேளு போ”, என்று அவர் சொன்னதும் சிறு சிரிப்புடன் அறைக்கு வந்தாள்.

வாசல் வரைக்கும் தான் தைரியம் இருந்தது. உள்ளே செல்ல படபடப்பாக இருந்தது. முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டு உள்ளே சென்றவள் “எதுக்கு கூப்பிட்டீங்க? எனக்கு கீழே நிறைய வேலை இருக்கு”, என்றாள்.

“அப்படீங்களா மேடம்?”, என்று கேட்டுக் கொண்டே அவள் அருகில் வந்தான். அவள் இதயத் துடிப்பின் வேகம் கூட ஆரம்பிக்க “ஆமா, சீக்கிரம் சொல்லுங்க”, என்றாள்.

“அப்படி என்ன வேலை பாக்கப் போறீங்க?”, என்று கேட்டவன் அவளை பின்னால் இருந்து கட்டி அனைத்து அவளுடைய தோளில் தன்னுடைய தாடையை வைத்து அழுத்தினான்.

“பிளீஸ் என்னை விடுங்க. எனக்கு வேலை இருக்கு”, என்று தடுமாற்றத்துடன் சொன்னாள்.

“வேலை வேலைன்னு சொல்ற? என்ன வேலைன்னு சொல்ல மாட்டுக்கியே டி? என்னன்னு சொல்லு விட்டுறேன்”

“வேற என்ன வேலை, சமையல் வேலை தான்”

“அதை அத்தை பாத்துப்பாங்க”

“இல்லை இல்லை, இன்னைக்கு நான் தான் செய்யப் போறேன்”

“எதுக்கு இந்த விஷப் பரீட்சை? அத்தையே செய்யட்டும்”

“நான் நல்லா தான் சமைப்பேன்”, என்று வீம்புடன் சொல்ல நினைத்தாலும் அவனுடைய அருகாமையில் அவள் குரல் குழைந்து தான் வந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!