Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நான் மீட்டிடும் வீணையே

நான் மீட்டிடும் வீணையே 9

அத்தியாயம்

உன்னை நினைவு படுத்தும்

என்பதாலேயே தனிமையை

வெறுக்குறேன் நான்!!!



Advertisement

“அது அவர் பெருந்தன்மை மா. ஆனா அவர் கிட்ட மன்னிப்பு கேக்க கூட எனக்கு தகுதி இல்லை மா”, என்றாள் பூங்கொடி.

Advertisement

“இப்படி சொன்னா என்ன அர்த்தம் பூவு?”

Advertisement

“தெரியலை மா”

Advertisement

“அவனை வரச் சொல்லவா? அவன் கூப்பிட வந்தா வருவியா?”, என்று தேவகி கேட்கும் போது மணியம்மையும் அவரின் மருமகள்களும் உள்ளே வர இவர்களின் பேச்சு தடை பட்டது.

அதன் பிறகு இருவராலும் தனித்து பேச முடியவில்லை. பூங்கொடி மனதில் என்ன இருக்கிறது என்று தெரியாமலே கிளம்பிச் சென்றார் தேவகி.

பூங்கொடியை அழைக்க தான் தேவகி வந்திருக்கிறார் என்று எண்ணிய மணியம்மை அவர் தனியே கிளம்பிப் போகவும் குழம்பிப் போனார்.

தேவகி வீட்டுக்குச் சென்றதும் “என்ன தேவகி மருமக வரலையா?”, என்று கேட்டார் கதிரவன்.

“வரலைங்கண்ணா”

“அவ இன்னும் இவனை புரிஞ்சிக்கலையா? இன்னும் மாறன் மேல கோபத்துல தான் இருக்காளா?”

“இல்லை, அவ தப்பை உணர்ந்துட்டா. ஆனா அவன் முகத்துல எப்படி முழிக்கிறதுன்னு அழுறா”

“அப்படியா? சரி விடு. அவ மனசு மாறிருச்சுல்ல? இவனைப் போகச் சொல்லுவோம்”, என்றவர் மணிமாறன் வரவுக்காக காத்திருந்தார்.

அவன் வந்ததும் அவனை அழைத்தார். “என்னப்பா?”, என்ற படி அவர் அருகில் அமர்ந்தான்.

“இப்ப நேரம் ஆகிருச்சு. நாளைக்கு காலைல மருமகளைப் போய் கூட்டிட்டு வா”

“போங்கப்பா. நான் போக மாட்டேன்”

“அவ மனசு மாறிட்டா டா”

“அது உங்க கற்பனை பா”

“இல்லை டா. இன்னைக்கு தேவகி அவளைப் பாக்க போயிருந்தா. தேவகி நீயே சொல்லு மா”, என்று கதிரவன் சொல்ல அனைத்தையும் சொன்னார் தேவகி.

“சரிப்பா, நாளைக்கு போறேன்”, என்று சொல்லி விட்டு அறைக்குச் சென்றவனுக்கு அவள் மேல் கோபமாக வந்தது.

“என் கிட்ட எதுக்கு அவ மன்னிப்பு கேக்கணும்? ஒரு கால் பண்ணி கூப்பிட வான்னு சொன்னா போகப் போறேன்? இன்னும் அவ என் கிட்ட ஏன் உரிமையா இருக்க மாட்டிக்கா? நான் என்ன யாரோ ஒருத்தனா?”, என்று எரிச்சலுடன் எண்ணிக் கொண்டவன் “நாளைக்கு வாடி உனக்கு இருக்கு”, என்று கருவிக் கொண்டான்.

அங்கே பூங்கொடியோ அழுத படி தான் இருந்தாள். அழுது அழுது அன்று இரவே காச்சலில் விழுந்தாள்.

அன்று மணியம்மைக்கு சரியாக உறக்கம் வரவே இல்லை. அவர் மனதில் ஏதேதோ எண்ணங்கள் அணிவகுத்தது. மகள் இங்கே வந்து இருப்பதும், வீட்டுக்கு வரும் மருமகன் அவளை ஏக்கமாக பார்ப்பதும், அதுவும் இந்த நான்கு நாட்களில் அவர் இங்கே வராததும், தேவகியின் வருகையும், மகளின் கண்ணீர் முகமும் அவரைப் போட்டுக் குழப்பியது.

மகள் தூங்குகிறாளா என்று பார்க்க அவளுடைய அறைக்குச் சென்றார். அங்கே அவர் போன போது “என்னை மன்னிச்சிருங்க. என்னை மன்னிச்சிருங்க”, என்று பூங்கொடி புலம்புவது கேட்டது.

“போன் பேசுறாளா? எதுக்கு இந்த மன்னிப்பு?”, என்று மனதில் எண்ணிக் கொண்டு “ஏட்டி மாப்பிள்ளை கிட்ட பேசிட்டு இருக்கியா?”, என்று கேட்டார். அவளிடம் இருந்து எந்த சத்தமும் வர வில்லை என்றதும் அவளை நெருங்கினார்.

அவளோ தூக்கத்தில் அனத்திக் கொண்டிருந்தாள். அவசரமாக அவள் நெற்றியைக் தொட்டுப் பார்த்தார். தீ பட்டது போல கொதித்தது .

“ஐயோ பிள்ளைக்கு காச்சல் அடிக்குது”, என்றவர் அவசர அவசரமாக சமையல் அறைக்குச் சென்று தண்ணீரை கொதிக்க வைத்து எடுத்து வந்து அவள் நெற்றியில் பத்து போட்டார்.

ஆனால் சிறிது நேரத்தில் அவள் உடல் ஜன்னியால் தூக்கி தூக்கி போட பதறியவர் அடுத்த நொடி “கேசவா”, என்று அலறினார்.

“கேசவா… மணி…. வரதா… துரை…. யாராவது வாங்க டா”, என்று அவர் கத்த அடுத்த நொடி அனைவரும் பதட்டதுடன் அங்கே வந்தார்கள். வந்தவர்களுக்கு பூங்கொடியின் நிலைமை பேரதிர்ச்சியைக் கொடுத்தது.

“வரதா காரை எடு டா, மணி என் கூட வா. அம்மா நீயும் வா. மத்தவங்க எல்லாம் இங்கயே இருங்க. துரை எல்லாரையும் பாத்துக்கோ டா. நாங்க நம்ம நீலமேகம் டாக்டர் கிட்ட போறோம். ஏன்னா அவர் வீடு தான் ஆஸ்பத்திரி மேலயே இருக்கு. நீ மாப்பிள்ளைக்கு தகவல் சொல்லிரு. நாளைக்கு சொல்லலைன்னு பேச்சு வரக் கூடாது”, என்று சொல்லிக் கொண்டே தங்கையை தூக்கிக் கொண்டு காருக்கு சென்றார் கேசவன். அதற்குள் வரதன் காரைக் கிளப்பி இருக்க மணியம்மையும் மணிவாசகமும் ஏறியதும் கார் கிளம்பியது.

பெண்களை படுக்க போகச் சொல்லி அனுப்பிய தம்பிதுரை மணிமாறனை அழைத்தான். தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்த மணிமாறன் அப்போது அவளது தலையைணையை கட்டி பிடித்த படி படுத்திருந்தான். அவன் கண் அசந்த நேரம் அவன் போன் அடித்தது.

“இன்னேரம் யார் கால் பண்ணுறா?”, என்ற குழப்பத்துடன் எடுத்துப் பார்த்தான். ‘துரை மச்சான்’ என்று வரவும் “என்ன இந்த நேரத்துல கூப்பிடுறார்? கொடிக்கு எதுவுமா?”, என்று எண்ணி பதட்டத்துடன் அதை எடுத்தவன் “மச்சான் சொல்லுங்க, என்ன இந்நேரம்?”, என்று கேட்டான்.

“பூவுக்கு திடீர்னு உடம்புக்கு முடியாம போச்சு”

“என்ன சொல்றீங்க?”

“ஜன்னி கண்டுருக்கு மாப்பிள்ளை. அண்ணன் அவளை ஆஸ்பத்திரி கொண்டு போயிருக்கு”

“எந்த ஆஸ்பத்திரி”, என்று விசாரித்து விட்டு போனை வைத்தவன் தந்தையை எழுப்பினான். தேவகியும் எழுந்து வந்து விட்டார். அவர்களிடம் விஷயத்தை சொல்ல அவர்களும் அதிர்ந்து போனார்கள்.

அடுத்த கால் மணி நேரத்தில் மூவரும் அந்த ஹாஸ்பிட்டலுக்கு கிளம்பி விட்டார்கள். இவர்கள் போன போது பூங்கொடி தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தாள்.

“என் மருமகளுக்கு என்ன ஆச்சு கேசவன்?”, என்று கேட்டார் கதிரவன்.

“திடீர்னு ஜன்னி வந்துருச்சுங்க மாமா. உள்ள டாக்டர் பாத்துட்டு இருக்காங்க”, என்றார் கேசவன்.

தேவகி மணியம்மையிடம் விசாரித்தார். “ரெண்டு நாளா என் பிள்ளை முகமே சரி இல்லை தேவகி. யார் கண்ணு பட்டுச்சுன்னு தெரியலை. நீ போனதுக்கப்புறம் கூட அழுதுட்டே தான் இருந்தா. நான் போய் கேட்டதுக்கு ஒண்ணும் இல்லைன்னுட்டா. சரியா சாப்பிடவும் இல்லை. தூங்குறாளா இல்லையான்னு பாக்க தான் அவ அறைக்கு போனேன். பிள்ளை அனத்திக்கிட்டே கிடந்தா. மாப்பிள்ளை கிட்ட பேசுறான்னு நினைச்சு பக்கத்துல போனா அனல் அடிக்குது. வெந்நீர் வச்சு ஒத்தடம் கொடுத்தா காச்சல் குறையும்னு பாத்தேன். ஆனா தூக்கி தூக்கி அடிச்சிருச்சு”, என்று புலம்பினார்.

“சரியாகிரும் அக்கா”, என்று அவருக்கு ஆறுதல் சொன்னார் தேவகி. ஆனால் வந்ததில் இருந்து மணிமாறன் வாயை திறக்கவே இல்லை. அவன் மனம் முழுக்க அவளுக்கு ஒன்றும் ஆகி விடக் கூடாது என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தது. அவன் கண்களில் இருந்த வேதனையைப் பார்த்த வரதன் “அவளுக்கு ஒண்ணும் ஆகாது மாப்பிள்ளை. நீங்க கலங்காதீங்க”, என்றான்.

கதிரவன் மகனை குற்றம் சாட்டும் பார்வை பார்த்தார். “நீ போய் அவளை பார்த்திருந்தால் அவளுக்கு இப்படி நடந்திருக்காது”, என்று அவர் பார்வை சொன்னது. அது உண்மை என்பதால் அவன் தலை குனிந்தான்.

எல்லாரையும் பயமுறுத்தி விட்டு காலையில் தான் கண் விழித்தாள் பூங்கொடி. வரதன் வீட்டினருக்கு தகவல் சொல்ல வெளியே சென்று விட்டான். மற்ற அனைவரும் அவளைக் காண உள்ள சென்றார்கள்.

வாடி வதங்கிய மலர் போல படுத்திருந்தாள் அவனது மனைவி. அவளையே இமைக்காமல் பார்த்தான். அவளுக்கோ அவனைத் தவிர வேறு யாருமே கண்ணில் தெரிய வில்லை. அவனைக் கண்டதும் அவள் கண்கள் கண்ணீர் வடிக்க வேகமாக அவளை நெருங்கி அவள் கையைப் பற்றிக் கொண்டான். அவனுக்காக தங்களின் ஆசையை ஒதுக்கி வைத்து மற்றவர்கள் ஒதுங்கி நின்றார்கள்.

“என்னை மன்னி…”, என்று அவள் சொல்ல வர அவள் வாயை தன்னுடைய விரலால் மூடியவன் “எதுவும் பேசக் கூடாது. ரெஸ்ட் எடு”, என்று சொல்லி மற்றவர்களை கண்ணால் காட்டினான்.

பின் மற்றவர்கள் விசாரிக்க வேண்டும் என்பதால் விலகிக் கொண்டான். தேவகி “இப்ப எப்படி இருக்கு டா?”, என்று கேட்க சோபையாக சிரித்தாள். மணியம்மை மகளை பிடித்துக் கொண்டு கண்ணீர் வடிக்க தேவகி அவரை வெளியே அழைத்துச் சென்றாள். ஆண்களும் வெளியே செல்ல மணிமாறன் மட்டும் அவள் அருகே சென்று அமர்ந்தான்.

“என்னை மன்னிப்பீங்களா?”, என்று அவள் கேட்க அவளுடைய நடுங்கிய உதடுகளை தன்னுடைய விரலால் பிடித்தவன் “அதைப் பத்தி எதுவும் பேசக் கூடாது”, என்று சொல்லி அவளுடைய உதட்டை விரலால் வருடினான். அவனுக்கு தன் மீது கோபமில்லை என்பதே அவளுக்கு சந்தோசமாக இருந்தது. ஆனால் அவன் தன்னை மன்னித்தானா இல்லையா என்பது மட்டும் அவளுக்கு தெரிய வில்லை.

“காச்சல் குறைஞ்சிருக்கா டி?”, என்று கேட்டவன் அவளது நெற்றியில் கை வைத்தான். அங்கே சகஜமாக இருக்கவே அவளது கழுத்துக்கு அடியில் கை வைத்துப் பார்த்தான். அவன் என்னவோ சாதாரணமாக தான் அந்த செய்கையை செய்தான்.

ஆனால் அவன் கை பட்டதும் தான் அவளுக்கு உள்ளுக்குள் கொதிக்கவே துவங்கியது. அவனுடைய தொடுகை இன்னும் வேண்டும் வேண்டும் என்று ஆசை கொண்டது அவள் மனது.

அவளிடம் இருந்து சத்தம் வராததால் அவளை நிமிர்ந்து பார்த்தான் அவளுடைய கண்களில் இருந்த தேடல், ஒரு வித ஆர்வம், தவிப்பு என அனைத்தும் அவன் கண்ணில் விழுந்தது. இத்தனை நாட்கள் அவன் நெருங்கும் போது அவளது வெட்கம், கூச்சம் இரண்டையும் தான் கண்டிருக்கிறான். இப்போது முதல் முறையாக அவளது ஆர்வத்தைப் பார்க்கிறான்.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்வையால் தின்று கொண்டிருக்க காச்சல் குறைந்திருந்ததால் அவளை வீட்டுக்கு அழைத்துச் செல்லலாம் என்று டாக்டர் சொல்லி விட்டார் என்பதைச் சொல்ல உள்ளே வந்தார் கேசவன்.

தங்களுடன் தான் அவள் வருவாள் என்று மணிமாறன் எதிர் பார்க்க “வா மா போகலாம்”, என்று சொல்லி அவளை கைத்தாங்கலாக எழுப்பி விட்டார் கேசவன்.

அவன் அதிர்ந்து போய் கதிரவனைப் பார்க்க இப்போது உணர்வுகள் பேசும் நேரம் என்பதால் அவனை அமைதியாக இருக்கும் படி கண்ணைக் காட்டினார்.

அவளை காரில் அமர வைத்த கேசவன் “உடம்பை தேத்தி பூவை வீட்ல கொண்டு வந்து விடுறேன் மாமா. வரேன் மாப்பிள்ளை”, என்று சொல்லி விட்டு காரில் ஏறி அமர்ந்தார்.

அவள் கண்கள் அவனையே நோக்கியது. அவளுக்கும் இது அதிர்ச்சி தான். அவனுடன் தான் செல்வோம் என்று எதிர் பார்த்தாள். அது நடக்காததால் அவனையே பார்த்தாள். அவன் முகத்தில் இருந்த உணர்வுகளை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. தன் மீது கோபமா? ஆதங்கமா? இல்லை வெறுப்பா என்று யோசித்தாள். விடை தான் கிடைக்க வில்லை. அவனோ அவளை தன்னுடன் அழைத்துச் செல்ல முடியவில்லையே என்று தன் மீதே கோபத்தில் இருந்தான்.

கார் அங்கிருந்து கிளம்பிய பின்னரும் அவனையே பார்த்த படி தான் சென்றாள். அவளுடைய பார்வையில் இருந்த துயரில் இந்த பிரிவு கூட நல்லது தான் போல என்று எண்ணி அவனுக்கு சந்தோசமாக தான் இருந்தது.

ஆனாலும் அவன் முகம் வாடி இருக்க “உடம்பு சரியான பிறகு மருமகளை கூட்டிட்டு வரலாம். வா டா”, என்று மகனைத் தேற்றினார் கதிரவன்.

“சரிப்பா”, என்று சொல்லி விட்டு தேவகி மற்றும் கதிரவனை அழைத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்றான்.

பூங்கொடி ஹாஸ்பிட்டலில் இருந்து வீட்டுக்குச் சென்று ஒரு வாரம் ஆகி இருந்தது. உடல் நிலை கொஞ்சம் கொஞ்சமாக சரியானது பூங்கொடிக்கு. ஆனால் அவள் மனதோ அதிகம் பாதிக்க பட்டது.

ஏனென்றால் அவன் அவளைக் காண வரவே இல்லை. அவன் வேலை விஷயமாக வெளியூர் சென்றிருக்கிறான் என்று தேவகி சொன்னார் தான். ஆனாலும் என்னவோ போல தான் இருந்தாள். உணவை மறந்து, குளிக்க மறந்து அவள் ஏதோ இயந்திரம் போல இருக்க மணியம்மைக்கு தான் கவலையாக இருந்தது.

“பிள்ளை மனசுல எதையோ போட்டு மறுகுறாளே? ஒரு வேளை மாப்பிள்ளை வீட்டுக்கு போக நினைக்கிறாளோ?”, என்று எண்ணி மகளைக் காண அவளுடைய அறைக்குச் சென்றார்.

அவள் சோகப் பதுமை போல விட்டத்தை வெறித்த படி இருக்க அவள் அருகில் அமர்ந்து “ஏதாவது சாப்பிடுறியா மா?”, என்று கேட்டார்.

“வேண்டாம் மா”

“மாப்பிள்ளையை வரச் சொல்லவா?”, என்றதும் அன்னையை ஆர்வமாக நிமிர்ந்து பார்த்தாள். அந்த ஆர்வத்தை அன்னையின் கண்கள் கண்டு கொண்டது. மணியம்மையிடம் அதற்கு பதில் சொல்லாமல் “நான் கொஞ்ச நேரம் படுக்குறேன்”, என்று சொல்லி படுத்து விட்டாள் பூங்கொடி.

அவனுக்கோ அன்று பிரிவு நல்லது தான் என்று தோன்றியது. ஆனால் அடுத்த நாளே “அவ ஏன் அங்கே போனா? இங்க வருவேன்னு அவங்க வீட்ல சொல்ல வேண்டியது தானே?”, என்று அவள் மீது கோபமாக வந்தது. அதனால் தான் அவளைக் காணக் கூட செல்ல வில்லை. அவன் இதே ஊரில் தான் இருந்தான். ஆனால் தேவகியிடம் அப்படி சொல்லச் சொன்னான்.

அவர்கள் குடும்பமே அவளை அழைத்துச் சென்றதால் கதிரவன் மற்றும் தேவகியால் கூட அவளை அழைத்து வா என்று மணிமாறனிடம் சொல்ல முடியவில்லை. கேசவன் கொண்டு வந்து விடுகிறேன் என்று சொன்னதால் பொறுமையாக இருந்தார்கள்.

மகனைக் காண வந்த மணியம்மை “கேசவா”, என்று அழைத்தார்.

“என்ன மா?”

“பாப்பாவை அவ வீட்ல விட்டுட்டு வருவோமா?”

“என்ன மா பேசுறீங்க? அவளுக்கு இன்னும் உடம்பு சரி ஆகலை”

“இல்லைப்பா, அவளுக்கு சரியாகிருச்சு”

“இல்லை மா. அவ சரியா சாப்பிடுறது இல்லை. ஒரு மாதிரி இருக்கா பாருங்க”

“அவ வீட்டுக்குப்  போனா சரியாகிருவான்னு தோணுது பா”

“ஏன் மா, இங்க யாரும் அவளை சரியா பாக்கலையா? நான் விசாரிக்க வா? ஏய் இங்க வா டி”, என்று மனைவியை அழைத்தார்.

“ஐயோ அதெல்லாம் ஒண்ணும் இல்லை டா. என் மருமகளுங்களை தப்பு சொன்னா அந்த கடவுளுக்கே அடுக்காது”

“அப்புறம் ஏன் மா இப்படிச் சொல்றீங்க?”

“பூங்கொடி அவ புருஷன் கூட தான் இருக்கணும். அவ மனசு அவரைத் தான் தேடுது டா”

“என்ன மா சொல்றீங்க?”

“சில விஷயங்களை பொம்பளைங்களால தான் டா புரிஞ்சிக்க முடியும்? அவ தனியா இங்க வந்ததுல இருந்து அவ முகமே சரி இல்லை. ஏதோ ரெண்டு பேருக்கும் சரியில்லைன்னு தோணுது. அது புருஷன் பொண்டாட்டி விவகாரம். ஆனா அவ மாப்பிள்ளை கூட இருந்தா தான் உயிர்ப்போட இருப்பா. அங்க போனாலும் தேவகி அவளைப் பாத்துக்குவா”

“இப்ப என்ன மா பண்ணுறது? காரை எடுக்கவா?”

“நீயும் சின்னவனும் போய் விட்டுட்டு வந்துருங்க. மருமகளையும் கூட்டிட்டு போங்க”

“சரி மா”, என்ற கேசவன் மனைவியையும் தம்பியையும் கிளம்பச் சொல்லி விட்டு தானும் கிளம்பச் சென்றார்.

மணியம்மை மகளைக் காண வந்தார். எதையோ தொலைத்த படி இருந்த மகளைப் பார்க்கும் போது அவருக்கு கஷ்டமாக இருந்தது. ஆனால் அதை முகத்தில் காட்டாமல் “ஏட்டி என்ன படுத்துருக்க? வேற துணி மாத்திட்டு கிளம்பு”, என்றார் .

“நான் வரலை மா”

“சொன்னா கேக்கணும். கிளம்பு”

“அம்மா”

“அம்மா சொன்னா கேப்பியா கேக்க மாட்டியா?”, என்றதும் எரிச்சலுடன் கிளம்பினாள். ஆனாலும் அவள் முகம் சோகமாகவே இருக்க “புருஷன் வீட்டுக்கு போகும் போது அழுது வடிஞ்சா போவ? பவுடர் போடு டி”, என்றதும் அவள் கண்கள் விரிந்தது.

காதல் தொடரும்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!