Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நாம் கேட்ட காலங்கள்

நாம் கேட்ட காலங்கள்- 10 

நாம் கேட்ட காலங்கள்- 10 

வெறுக்கிறேன் என்று சொல்லாமல் வெறுக்க வேண்டும் என்று சொல்கிறவளை என்ன செய்ய என்று சிரிப்போடு பார்த்தான் ராஜமகேந்திரன். அவளால் அவனை வெறுக்க முடியாது என்பதை இதை விட எப்படி சொல்ல முடியும்?? 

அதே நேரம் அவளால் அவனை முழுமையாக காதலிக்க முடியாத போராட்டமே இப்படியான வார்த்தைகளால் வடிகால் பெறுகின்றன என்பதை அவனால் உணர முடியவில்லை. 



Advertisement

சொல்லிவிட்டு கணவன் அதிர்வான், பதறுவான் என்று பாவை எதிர்நோக்க, அவனோ, 

Advertisement

“அதான் தெரியுமே” என்றான் தோள் குலுக்கி. முகத்தில் புன்னகை ஆட்சி செய்தது. 

Advertisement

அந்த புன்னகை முகம் பிரசன்னாவை இன்னும் அசைத்தது. பிரசன்னா இயல்பான பெண். சின்ன சின்ன ஆசைகள் உள்ள எதார்த்தமான பெண். அதே நேரம் அவளின் நிமிர்வும், சுயமரியாதையையும் எங்கேயும் விட்டுக்கொடுக்க மாட்டாள். நல்ல பெண்! அதுதான் மகேந்திரனை அவளைப் பார்க்க வைத்தது. 

Advertisement

ஆம்! மகேந்திரனும் பார்த்தான். திலக்கின் தங்கை என்றாலும் அண்ணனை எதிர்த்தவன் என்ற முரட்டுப்பாசமின்றி, பகுத்தறிந்து அவனோடு நட்பு பாராட்டியவளைப் பிடிக்கத்தான் செய்தது. 

பிடிக்கும் என்பதற்காக அவள் பின்னால் செல்வது, அதனை சொல்வது என்று எதையும் மகேந்திரன் செய்யவில்லை. அப்படி செய்யும் ரகமில்லை. பிடிக்கும், அவ்வளவுதான்!

என்று மானசா, ஸ்ரீதரன் முன்பு தனக்காகத்தான் வருகிறேன் என்று பிரசன்ன வர்த்தினி சொன்னாளோ அப்போதுதான் பிரசன்னாவின் பார்வை அவனிடம் தனி என்பதே புரிந்தது. 

அப்போதைக்கு அவனுக்கு அவளின் பிடித்ததைக் குறித்த சிந்தனையே இல்லை. அவன் எண்ணமெல்லாம் தீவிர அரசியலில் இருந்தது. காதல், கல்யாணம் எல்லாம் போக மனமில்லை. இப்படி சொன்னாலும் பிரசன்னாவை கல்லூரி தேர்தலில் ஜெயிக்க வைத்ததில் மகேந்திரனின் பங்கு அதிகம். யாருக்கும் தெரியாமல் செய்திருந்தாலும், அது பிரசன்னாவிற்குத் தெரிந்தது.

வீட்டில் எப்போது தேசிகன் திருமணப் பேச்சை எடுத்தாரோ, தன் நண்பரின் பேத்தி ஊர்மிளாவை மணக்கக் கேட்டாரோ அப்போதே தெளிந்திருந்தான். ஊர்மிளாவை தங்கையாகப் பார்த்தவனுக்கு வேறு பெண்ணைப் பாருங்கள் என்று சொல்ல வரவில்லை. 

அவன் வாழ்வில் பெண் என்றால் பிரசன்னா என்ற முடிவை எடுத்திருந்தான். அதுவரை மகேந்திரன் சொன்னது கேட்டு பிரசன்னா அவனை தொந்தரவு செய்யவே இல்லை. இவளின் விருப்பம் கரைந்து போய்விட்டது போல நினைக்கும் நேரம் ஸ்ரீதரன் மானசா மூலம் அவள் இவன் நினைப்பில் இருக்கிறாள் என்று தெரிய வந்துவிடும். 

ஸ்ரீதரன் வீட்டில் அவனுக்குத் திருமணம் செய்துவைக்க, அதன்பின் அடிக்கடி அவர்கள் வீட்டு விழாவில் பிரசன்னாவும் மகேந்திரனும் சந்தித்தனர். பிரசன்னாவிற்கு அவனிடம் பேச ஆவல் ஆர்ப்பரிக்கும், இருந்தாலும் மகேந்திரன் பார்வை பேசவிடாது. 

அப்படி காத்திருந்து திருமணம் செய்தபின்னும் கூட இவன் என்னைத் தேடவில்லை என்ற ஏக்கம், ஏமாற்றம் பிரசன்னாவை சுழற்றியது. அதனையும்விட மகேந்திரனின் எண்ணவோட்டங்கள் சில சமயம் அவளை பயமுறுத்தின. 

இப்படி அவன் இருந்தால் அவனை வெறுத்துவிடுவோமோ என்ற அச்சம். பிடிக்கவில்லை என்றால் வெறுத்தால் என்ன என்று தோன்றவில்லை. ஏன் தனக்குள் இப்படியான மாற்றங்கள் என்று மறுகினாள். அவனிடம் ஏன் ஒரு மாற்றமுமில்லை என்ற எரிச்சலும் கூட. அவன் மீது தான் கொண்ட காதல் இப்படி தன்னை அலைக்கழித்து இயல்பை இல்லாது செய்ய, அவன் மட்டும் எப்படி அப்படியே இருக்கிறான் என்ற ஆற்றாமை அவளுக்கு.

அவன் அப்படியில்லை என்று யார் அவளிடம் சொல்வது? மாற்றங்கள் இருந்தாலும் அதனை அப்பட்டமாகக் காட்டி மகேந்திரனுக்குப் பழக்கமில்லை. அதனை கண்டுகொள்ளும் அளவு பிரசன்னா அவனிடம் பழகவில்லை என்று சொல்லலாம். 

பழக காலம் அவளுக்குக் கைகொடுக்கவில்லை. 

“தெரிஞ்சு என்னை என்ன செய்றீங்க? இன்னும் இன்னும் ஹர்ட் பண்றீங்க” என்ற பிரசன்னாவின் மனம் போல கைகளும் தடுமாற, வண்டியை கவனமாக சாலையோரம்  நிறுத்திவிட்டாள். 

சிவன்தாங்கலில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் கிளைச்சாலையில் கார் நிற்க, பெருமூச்சோடு அவள் பக்கம் திரும்பியவன்,

“நீ என்னை ஹர்ட் பண்ணலயா?” என்று கேட்டான். அவள் பதில் சொல்லாமல் அவனையே பார்க்க, காரின் ஜன்னலை இறக்கிவிட்டவன் சீட்டை நன்றாக சாய்த்து உட்கார்ந்தான். 

பிரசன்னாவின் புறம் சாவகாசமாக சாய்ந்தபடி பார்த்து, 

“சொல்லு” என்றான் அழுத்தமாக. 

“நான் என்ன செஞ்சேன்?” 

“எனக்கு சொல்ல விருப்பமில்லை. நீ செஞ்சதை சொல்லி உனக்குப் புரியவைக்க இது கோர்ட் இல்லை. என்னோட பாயிண்ட்ஸ் எல்லாம் வச்சு நான் நல்ல லாயர்னு உனக்குக் காட்டுறதை விட உன்னை அப்படியே விட்டு நல்ல ஹஸ்பண்டா இருக்கலாம் நினைக்கிறேன். நீ என்ன சொல்ற?” என்று புருவம் உயர்த்தினான்.

வெளியிலிருந்து இரவின் ஈரக்காற்று ஜில்லென்று இருவரையும் தழுவியது. வாகனங்கள் நெஞ்சாலையில் செல்ல, கிளைச்சாலை இருளில் மூழ்கியிருந்தது.

“முதல்ல ஜன்னல சாத்துங்க, ஏற்கெனவே உங்களுக்கு ஜூரம்” என்று பிரசன்னா கடுப்பாக சொல்ல, 

“ம்ஹூம், எனக்குப் பிடிச்சிருக்கு” என்றவனை முறைத்தவள், அவளாகவே லாக் செய்யப்போக, பிரசன்னாவின் கையைப் பிடித்தான் மகேந்திரன். 

“விடுங்க” 

“பிடிச்சதை என்னைக்கும் நான் விட்டதில்லைடி” என்றான் மந்தகாசமான புன்னகையோடு. 

இந்த முறை அந்த புன்னகையைப் பிரசன்னா ரசிக்கவில்லை. மாறாக, 

“நீங்க நல்ல லாயருமில்லை, நல்ல புருஷனும் இல்லை” என்றவள் அவன் முகம் பார்த்து அழுத்தமான குரலில், 

“ஆனா நல்ல அரசியல்வாதி” என்றாள் அந்த நல்ல’வில் நல்ல அழுத்தம் கொடுத்து. 

“ஓஹ், அப்போ நீ நல்ல மனைவியா?” என்றான் கிண்டலாக. 

“முதல்ல நான் என்ன செஞ்சேன் சொல்லுங்க, சும்மா கூட்டத்துல மைக்ல பேசி மயக்கற மாதிரி வேலையெல்லாம் எங்கிட்ட வேண்டாம்” என்றதும் மகேந்திரனிடம் மீண்டும் பெரிய புன்னகை. 

அவனின் மனம் மனைவியின் தன்னை குறித்த ரசனையை ரசித்து அணு அணுவாய்ச் சுவைத்தது. வீட்டின் தலைமகன், தாத்தாவின் செல்லப்பெயரன் என்று இருந்தாலும் சிறு வயதிலிருந்தே அப்பா, அம்மாவின் பணி நிமித்தம் தனியாகவே இருந்து பழகியவன். 

அப்பா, அம்மாவிடம் செல்லமெல்லாம் கிடைக்காது. செல்வமும் செல்வாக்குமிருக்கிறது என்பதால் தறிகெட்டுவிடக் கூடாது எனற கண்டிப்பிருக்கும். அதே நேரம் பாசமான பெற்றோரும் கூட. 

அப்படியிருக்க பெரிதாக யாரின் கவனத்தையும் கவனிப்பையும் விரும்பாது  வளர்ந்தவனுக்கு பிரசன்னாவின் பார்வை தரும் போதை அலாதியானது. அவனை மற்ற பெண்களும் பார்த்திருக்கிறார்கள், அவனும் பார்த்திருக்கிறான். அதெல்லாம் சில நொடிகள். யாரையும் கவனித்து அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காதவனும் கூட. 

நண்பர்கள் கூட பெரிய கூட்டமிருக்காது. ஸ்ரீதரனை தவிர மற்ற நண்பர்களுக்கு அவனைப் பற்றி முழுதாக தெரியாது. 

“அப்போ நான் மைக்ல பேசினா நீ மயங்குவ?” என்றவனின் கேள்விக்குப் பதில் சொல்லாது அவள் முகம் திருப்ப, அவள் கையை விட்டவன் முகம் பற்றினான். 

“இப்படி முறைக்காதடி! இவ்வளவு அக்கறை இருக்கிறவ ஏன் என்னை விட்டுப் போய் மூணு மாசம் உங்க வீட்ல டேரா போட்ட?” என்று மெல்லிய குரலில் கேட்டாலும் அதில் மென்மை இல்லை. 

அவன் பார்வையில் அப்பட்டமான குற்றச்சாட்டு!

“எங்க வீட்ல இருந்தா எனக்கு அக்கறை இல்லைனு ஆகிடுமா?” பிரசன்னாவும் பதிலுக்குப் பேச, 

“பின்ன? உங்க தாத்தா அவரோட கசப்பான அனுபவத்தால எல்லாரையும் சந்தேகப்பட்டா நீயும் என்னை சந்தேகப்படுவியா? அப்படி உங்க அண்ணனை எதாவது செய்யணும்னா எப்பவோ செஞ்சிருக்க மாட்டேனா? இதான் நீ என்னை நம்புறதா? என்னைப் பத்தி இப்படி ஒரு எண்ணம் வச்சுட்டு எந்த இதுக்கு என்னை லவ் பண்ணி கல்யாணம் பண்ணின?” என்றவனின் ஒரு கரம் அவள் முகம் பற்றியிருக்க, இன்னொரு கரம் தோளை அழுத்தியது. 

“நான் அப்படி நினைக்கல..ஆனா.. நீங்க அப்போ அண்ணாவை கண்டுக்காம சுய நலமா உங்களுக்கு சீட் வாங்கவும் அண்ணா, தாத்தா எல்லாம் பேசவும் எனக்குக் கவலையாகிடுச்சு” என்ற பிரசன்னாவின் கண்கள் கலங்கின. 

“என்ன கவலை உனக்கு? அவங்க பேசினா உனக்கு அறிவில்லை?” என்றவன் குரலும் கரமும் அழுத்தியதில் பிரசன்னாவிற்கு வலித்தது. 

“நிஜமா நீங்க டைரக்டா அண்ணாவை எதுவும் பண்ணியிருக்க மாட்டீங்கனு தெரியும். பண்ணியிருக்கக் கூடாதுனு நம்பினேன்” என்றதும், 

“அடியே! நம்பினவ ஏன் சந்தேகப்பட்ட?” என்று விடாமல் மகேந்திரன் கேட்க, 

“சந்தேகப்படல, உறுதிப்படுத்திக்கிட்டேன்” என்ற பிரசன்னாவின் பதிலில் மகேந்திரன் வாய்விட்டு சிரித்தான். அதுவரை இருந்த இறுக்கம் தளர, அழுத்தமாக அவளது முகம் பற்றிய கையில் இப்போது இறுக்கமில்லை. மென்மையாக கன்னத்தைத் தட்டியவன், 

“நான் நல்ல அரசியல்வாதினு சொல்லிட்டு நீதான் அப்படி பேசுற, உறுதிப்படுத்துறாங்களாம்” என்று கிண்டல் செய்தவன், 

“நீ என் இடத்துல இருந்திருந்தா, நிச்சயம் நான் இப்படி ஒரு கேள்வியே கேட்கமாட்டேன்” என்று தீர்க்கமாக மகேந்திரன் சொன்னான். 

“நீங்க எதுலயுமே மாட்டிக்க கூடாதுனு ஒரு பதற்றம், அதான் அப்படி பேசிட்டேன். ஜெயிக்கணும்னு நீங்க எதையாவது செய்வேனு சொன்னீங்கதானே? நான் அண்ணாவுக்கு அப்படியான டென்ஷன்ல பேசிட்டேன், நீங்க பொறுமையா, பொறுப்பா அதை ஹாண்டில் பண்ணாம, எனக்கு ஒழுங்கா பதில் சொல்லாம இருந்தீங்க. அதான் நான் கோச்சுக்கிட்டுப் போனேன்” என்றாள் பிரசன்னா. 

“என் நல்ல மனைவியே! நல்லா கேட்டுக்கோ, நான் ஜெயிக்க எதாவது செய்வேனு சொன்னா, அதோட எல்லை எதுன்னு உனக்குத் தெரியணும். இல்லை என்னோட இருந்து கேட்டிருக்கணும். உன் அண்ணனை விட கட்சிக்கு சின்ன வயசுல இருந்தே உழைச்சிருக்கேன். ஆனா, உன் தாத்தாவால திலக் ஈசியா எம்.பி சீட் வாங்கிட்டான். அப்போ எனக்கு கோவம் வராதா? அது பொறாமை இல்லை என்னோட நியாயமான ஆதங்கம். ஒரு இடத்துல நான் அதிக உழைப்பப் போடுறப்போ எனக்கு அதுக்கான அங்கீகாரம் கிடைக்காம அதை இன்னொருத்தன் தட்டிப்பறிச்சா கஷ்டமா இருக்காதா?” 

“நமக்குள்ள சண்டை இருக்கக் கூடாதுனு நான் சொல்லல, ஆனா என்னோட இருந்து சண்டை போடணும். நான்.. நானா எங்கம்மா கிட்ட கேட்டு உன்னைக் கல்யாணம் பண்ணினேன். நீ இப்படி போனதால நம்மை என்ன நினைப்பாங்க?” பிரசன்னாவிற்குப் புரியவைக்கும் நோக்கோடு பேச, அவளோ அதனை தவறாக புரிந்தாள். இல்லை, அவளின் புரிதல் அவனுக்குப் புரியவில்லை. 

“அப்போ அடுத்தவங்க என்ன நினைப்பாங்கனு உங்களுக்குப் ப்ரஸ்டீஜ் இஷ்யூ. நான் போனது உங்களுக்குப் பிரச்சனையே இல்லை” என்று பிரசன்னா கோபமாகக் கேட்டாள். 

“இசிட்? அப்படி நினைச்சா அப்படியே வச்சிக்கோ!” என்று பொங்கியவன் கார் கதவை திறந்து கொண்டு இறங்கினான். 

பிரசன்னாவும் அவனைப் போல இறங்க பார்க்க, 

“ஷட் அப் அண்ட் சிட்!” என்று அதட்டினான். 

பிரசன்னா அவனது குரலில் அடங்கி அப்படியே கண்மூடி சாய்ந்தவள் மகேந்திரன் குரலில் திடுக்கிட்டு விழித்தாள். 

“இந்த பக்கம் வா” என்று சொல்ல, அவள் புரியாமல் பார்க்க, 

“நான் ட்ரைவ் பண்றேன், இப்படி வா” என்று சொல்லி அவளை உட்காரவைத்து அதன்பின்னே அவன் டிரைவர் சீட் பக்கம் வந்து காரை எடுத்தான். 

இப்போது அவனும் எதுவும் பேசவில்லை, பிரசன்னாவும் அமைதி. வீடு வந்து அறைக்குள் நுழையவும் பிரசன்னா அவனிடம், 

“இதான் என்னோட பிரச்சனை” என்றதும் சட்டையைக் கழற்றியவன் அதனை நிறுத்தி பிரசன்னாவைப் பார்த்தான். 

“உங்க விஷயம்னு வரப்போ அறிவா யோசிக்க வரல, அறிவுக்கெட்டுப்போகுது. யாரும் உங்களை எதுவும் சொல்லிடக் கூடாதுனு பயத்துல நான் என்ன என்னமோ பண்ணிடுறேன். நான் கோவமா போனா நீங்க என்னை மிஸ் பண்ணி, சமாதானம் செஞ்சு உண்மையை சொல்வீங்க நினைச்சேன். சில நேரம் வாயைத் தொறந்து உண்மையை சொல்றதும் தப்பில்லையே. புரிஞ்சிக்கோன்னா எப்படி எனக்குப் புரியும்? புரியலயே” என்றாள் ஆற்றாமையோடு. 

அதற்குள் கண்களில் இருந்து வழிந்த கண்ணீரைத் துடைத்தவள், “உங்களுக்கு என்னை புரிஞ்சதா? இப்ப கூட நானாத்தான் வந்தேன், கேட்டா போனவளுக்கு வரத் தெரியாதான்னு லா பாய்ண்ட் பேசுவீங்க? இதான் நல்ல கணவனுக்கு அடையாளமா? நீயே போன நீயா இறங்கி வரணும்னு நினைக்கிறதுக்குப் பெயர் ஈகோ” என்றவள் மூக்கை உறிஞ்சிக்கொண்டு, 

“நான் இல்லைனாலும் உங்களால எல்லாமே செய்ய முடியுது. எலெக்ஷன்ல நின்னு எம்.பி கூட ஆகிட்டீங்க, ஆனா என்னால ஒன்னுமே முடியல. உங்களோட பேசாம, பார்க்காம எனக்கு..ப்ச் நான் நானாவே இல்லை. நீங்க நீங்களா இருக்கிறதும் நான் நானா இல்லாததும்தான் என்னோட பிரச்சனை” என்றவள் அவன் பதிலை எதிர்ப்பார்க்காது மெத்தையில் படுத்துவிட்டாள். 

மகேந்திரனுக்குள் மனைவியின் வார்த்தைகள் ஒலித்து அவனது உறக்கத்தை விரட்டின. 

************

அன்பழகனின் வீட்டில் அர்த்தனா மனம் கொந்தளித்தது. 

‘எப்படி என் அப்பாவை அப்படி பேசினான்..?’ என்று நினைக்க நினைக்க தாங்க முடியவில்லை. 

அதைவிட அவன் எப்படி பேசலாம் என்ற உணர்வில் கண்கள் கண்ணீர் உகுத்தன. 

ரஞ்சனுக்கோ அமராவதி பேசியதில் அவ்வளவு வருத்தம். அதைவிட அர்த்தனாவின் மீது பெருங்கோபம். அவன் மீதும் தவறு இருப்பதை மறந்தவன், அதனை தன்னிடமிருந்தே மறைத்து ஆறுதல் தேட வேண்டி, அர்த்தனாவிற்கு அழைத்தான். 

இரவு பத்து மணிக்கு யார் அழைப்பது என்ற எரிச்சலில் அர்த்தனா அலைப்பேசியைப் பார்க்க, ஒளிர்ந்த பெயரில் கசப்பான புன்னகை. 

கன்னத்தை தழுவியிருந்த கண்ணீரைத் தடமின்றி துடைத்தவள் முகம் கழுவி வந்தாள். அதற்குள் அழைப்பு முடிந்து மீண்டும் அழைத்தான் ரஞ்சன். இவள் என்ன திமிராக எடுக்கவில்லை என்ற எரிச்சல் அவனுக்கு, அதை அப்படியே அவளிடம் கடத்திவிட்டால் நிம்மதியாக இருக்கலாம் என்று நினைத்தான். 

“ஹலோ” என்று அழைப்பு ஏற்கப்பட்டதும் சூடாக ரஞ்சன் பேச, 

‘ஹலோ’வில் கூட இப்படி கோபத்தைக் காட்ட முடியுமா என்ற எண்ணம் அர்த்தனாவுக்கு. 

“ஹேய் இருக்கியா?” என்று அவன் மீண்டும் கத்த, 

“ஹலோ! என்ன வேணும் உங்களுக்கு?” என்றாள் அமர்த்தலாக. கோபமில்லை, எதுவுமில்லை அக்குரலில். 

ரஞ்சன் தடுமாறினான். தனக்குத்தான் இந்த போராட்டமா? அவளுக்கு எதுவுமில்லையா? 

“என்ன வேணுமா? எதுக்கு என்கிட்ட பொய் சொன்ன? உன் அப்பா யார்னு என்ட்ட ஏன் மறைச்ச? உன் ஃபேமிலி பேக்ரவுண்ட் என்னனு ஏன் சொல்லல?” என்று வரிசையாகக் கேட்க, 

“உங்க முன்னாடி கண்ணாடி இருந்தா அதே கேள்வியை நீங்க உங்களைப் பார்த்துக் கேட்டுக்கோங்க” என்றாள் அர்த்தனா. 

“என்ன திமிரா?”

“மிஸ்டர், முதல்ல நைட் பத்து மணிக்குக் கால் பண்றதே தப்பு, இதுல இப்படி பேசுறது ரொம்ப தப்பு. போனை வைங்க” என்று அர்த்தனா சொல்ல, 

“ஏன் உண்மையை சொன்னா கோவம் வருதா?” என்ற ரஞ்சன் கேள்வியில், அர்த்தனாவுக்குள் கொந்தளித்தாலும் அதனை காட்டாது, 

“என்ன உண்மை? ஃப்ர்ஸ்ட் என்னைப் பத்தி ஏன் நான் உங்ககிட்ட சொல்லணும்? நீங்க யார் எனக்கு?” என்று கேட்க, ரஞ்சனுக்குப் பற்றிக்கொண்டு வந்தது. 

“ஹலோ, இஞ்சி டீ’தான். புடிங் கேக். ஓகேவா?” என்று புன்னகையோடு கேட்ட அர்த்தனாவை நினைத்துப் பார்த்தான். அவனுக்குப் பிடிக்காத இஞ்சி டீ அத்தனை சுவைத்தது அன்றுதான். 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!