Skip to content
Post Views: 3,634
அத்தியாயம் 7
ராமநாதனும் மீனாவும் இவர்கள் வீட்டிற்கு வந்திருந்தார்கள். அனைவரும் அன்று செந்தில் – வள்ளி வீட்டில் கூடியிருந்தார்கள்.
Advertisement
“என்ன ஆயா? என்ன கொண்டுவந்திருக்கீங்க?” என்று ஆரம்பித்தான் கதிர்.
“சீக்கிரம் எடுங்க” என்று உடன் வந்து அமர்ந்தான் சுப்பு.
Advertisement
மீனா ஆயா வந்தால், பிள்ளைகளுக்கு நல்ல பொழுது போக்கு. அவர் வாயை கிளறி வம்பு வளர்த்துக்கொண்டிருப்பர் பேரன்கள்.
Advertisement
“இந்தா, மாவுருண்டையும் சீப்பு சீடையும் கொண்டு வந்திருக்கேன்” என்று சம்படங்களை எடுத்து கொடுத்தார். பாலாவிற்கு மாவுருண்டை என்றாள் மிகவும் இஷ்டம்.
Advertisement
“வெற்றி அண்ணா… வீரா அண்ணா…வாங்க.. ஆயா மாவுருண்டை தராங்கா” என்று பாலா தன் அண்ணன்களை உரக்க அழைத்தான்.
இருவரும் தங்கள் அறையில் படித்துகொண்டிருந்தார்கள். “நீ சாப்பிடு.. அப்புறம் அண்ணன்களுக்கு கொடுக்கலாம்” என்றார் ராமநாதன்.
சின்ன பிள்ளை ஆசை படுவான் என்று மீனாவும் முதலில் அவனுக்கு ஒரு மாவுருண்டை கொடுத்தார்.
கையில் வாங்கி கொண்டு ‘டூர்ர்ர்…’ என்று தன அண்ணன்களின் ரூமிற்கு ஓடினான்.
விசா அடுக்களைக்கு சென்று கிண்ணங்கள் கொண்டு வந்தாள். பின் அவளும், கதிரும் அனைவருக்கும் எடுத்து வைத்து கொடுத்தனர்.
சற்று நேரத்தில் வெற்றியும், வீராவும் வந்துவிட்டனர். பாலா ஒய்யாரமாக தன் வெற்றி அண்ணா தோள் மீது அமர்ந்திருந்தான்.
பொறுப்பான பிள்ளைகள் என்று ஆசையாக பார்த்தார் மீனா. எல்லாம் சாலாவின் வளர்ப்பு என்று நினைத்துக்கொண்டார். பிள்ளைகள் வளர வளர மீனாவும் நல்ல விதமாக மாறினார்.
“ரவைக்கு இங்கனவே எல்லோரும் சாப்பிடுவோம்” என்றார் மீனா. மூன்று வீடுகளிலும் தனி தனியே சமையலுக்கு ஆள் இருந்தனர். அதனால் ஒன்றாக சாப்பிடுவதில் பெரிதாக வீட்டு பெண்களுக்கு வேலை இருக்காது.
ஆண்கள் வேலையில் இருந்து வந்ததும் அனைவரும் சேர்ந்து இரவு உணவு உண்டார்கள்.
“எங்க பெரியப்பச்சி மகன், சுந்தரம் இருக்காரு இல்ல…” என்று ஆரம்பித்தார் ராமநாதன்.
“ஆமாம் அப்பா, அவங்க சம்சாரம் தானே போன மாசம் தவறிட்டாங்க.. நான் தானே அவங்க கல்யாணத்துக்கு கூட நாத்தனார் சடங்கு செஞ்சுகிட்டேன்.” என்றாள் வள்ளி.
“அந்த அண்ணி ரொம்ப அழகு இல்லப்பா.. என்னாச்சு திடீர்னு? அவங்களுக்கு ஒரு பையன் இல்ல.. நம்ம கதிர் பொறந்தப்ப பொறந்தவன், இல்லயா அம்மா?” என்றாள் தெய்வா.
“என்ன அழகு இருந்து என்ன பண்ண? புண்ணியவதி, வாழ கொடுத்துவைக்கலையே?” என்றார் மீனா.
“அய்யா, ஒரு வரி தான் ஆரம்பிச்சீங்க. உங்க துணைவியாரும் மகள்களும் பேச ஆரம்பிச்சிட்டாங்க.. உங்க வாழ்க்கையில நீங்க ரெண்டாவது வரி பேசி இருக்கீங்களா? அதுக்கான வாய்ப்பு எப்பயாச்சும் கிடைச்சிருக்கா?” என்றான் வீரா.
பிள்ளைகள் எல்லாம் ஒரே சிரிப்பு.
“அதானே.. பாவம் அய்யா.. நீங்க சொல்லுங்க அய்யா” என்றாள் விசாகா.
“அவருக்கு அடுத்த மாசம் கல்யாணம் வச்சிருக்காங்க..” என்றார்.
“இப்ப தானே அப்பா அந்த அண்ணி தவறினாங்க.. அதுகுள்ளயா?”
“பொண்டாட்டி செத்தா, மறு நாளே ஆம்பள புது மாப்பிள்ளை” என்றார் மீனா இடக்காக.
“அப்படி இல்ல மீனா, சும்மா வாய் புளிச்சுதோ மாங்காய் புளிச்சுதோன்னு பேசக்கூடாது. அந்த புள்ளைக்கு ரெண்டு வருஷமா கேன்சராம். பாக்காத வையித்தியம் இல்லன்னு சொல்றாங்க. ஒத்த ஆம்புள புள்ள. ரெண்டு வருஷம் அப்பாவும் மகனும் வையித்தியம் பார்த்து ஓஞ்சு போய்ட்டாங்க. மிச்ச வாழ்க்கையாச்சும் வாழ வேண்டாமா? அவன் கல்யாணம் வேணாம்னு தான் சொல்றான்.. எங்க அண்ணனும் அண்ணமுண்டியும் தான் பிடிவாதமா பொண்ணு பார்த்து முடிச்சிட்டாங்க. அந்த பையனையும் வளர்க்கணும் இல்லையா?” என்றார் ராமன்தான் கவலையாக.
சுந்தரம் மிகவும் நல்ல மனிதர். மனைவியை உயிராக நேசித்தார். சென்னையில் கல்லூரி பேராசிரியராக இருக்கிறார், நாற்பத்தி இரண்டு வயது, பதினான்கு வயதில் ஒரு மகன்.
“அதுக்கு நாத்தனார் சடங்கு செய்ய உன்ன கூட்டியார சொல்றாங்க தெய்வா..” என்றார் மீனா.
“ஒரே அண்ணனுக்கு ரெண்டு கல்யாணம். அதுக்கு அக்கா தங்கச்சி டர்ன் போட்டு சடங்கு செய்ய கூப்பிட்றாங்க. நல்ல குடும்பம்” என்று வாய்குள்ளே முனங்கினார் ராஜா.
‘ராஜா’ என்று அருண் கண்டமாக அழைக்கவும் அமைதியாகிவிட்டார். அருணுக்கு அவதூறு பேசுவது பிடிக்காது.
“பொண்ணு யாரு மா?”என்றாள் வள்ளி.
“சாலா உங்க அம்மா ஊரு தான். உங்க அம்மாக்கு தெரியுமான்னு கேட்டு பாரு” என்று சாலாவையும் பேச்சிற்குள் இழுத்துக்கொண்டார் மீனா.
சாலாவிற்கே விவரம் கேட்டவுடன் பெண் வீட்டினரை தெரிந்திருந்தது. மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள். பெண்ணுக்கு முப்பத்தி மூன்று வயது தான். மூன்று பெண் பிள்ளைகள் கொண்ட வீட்டில், செலவில்லாமல் ஒரு திருமணம் நடக்க முடியும் என்பது ஒன்றே அவர்கள் இத்திருமணத்திற்கு ஒத்துக்கொள்ள போதுமானதாக இருந்தது.
சில விஷயங்களை அதிகம் பேசாமல் தவிர்ப்பது தான் நல்லது. சரி என்பதும் தவறென்பதும் அவர் அவர் பார்வைக்கு ஏற்ப மாறுபடும். அதனால் கல்யாணத்திற்கு யார் செல்வது என்று பேச்சை மாற்றவிட்டார் சாலா.
அந்த திருமணத்திற்கு ராஜாவும் தெய்வாவும் செல்வதாக முடிவு எடுத்தார்கள். உடன் விசாகாவை அழைத்து செல்வதாக தெய்வா கூறினார்.
“நானும் விசாவும் ஒரே மாதிரி மேட்சிங் டிரஸ் ஆச்சி” என்று சாலாவிடம் கூறினார்.
“அங்க யாரும் இல்ல வள்ளி, பிள்ளைகளையும் கூட்டிட்டு போவோம்” என்று கூறினார் மீனா.
கல்லூரியில் தனக்கு அன்று பிராக்ட்டிக்கள் எக்ஸாம் என்று கூறினான் வெற்றி. வீரா பதினொன்றாம் வகுப்பு, கதிர் ஒன்பதாம் வகுப்பு. அதனால் இருவரும் லீவு எடுக்க முடியாது என்று கூறினார்கள். அண்ணன்கள் வரலைனா நானும் வரலை என்றான் ஆறாம் வகுப்பு படிக்கும் சுப்பு. நானும் வரலை. “யு.கே.ஜி படிக்கும் போது லீவ் கிடைக்காது “ என்றான் பாலு தன் வெற்றி அண்ணன் மேலே உட்கார்ந்துகொண்டு. இது எப்பொழுதும் நடக்கும் ஒன்று. கல்யாணத்திற்கு வந்தால் போர் அடிக்கும் என்று ஐவர் கூட்டணி கழண்டுகொள்ளும்.
ஆனால் விசாகா அணைத்து கல்யாணங்களுக்கும் செல்வாள். ஆசையாக அழைக்கும் அம்மா சித்திகளுடன் சென்றுவிடுவாள். இது என்ன புதுசா என்று விசாகா அண்ணன்களையும் தம்பியையும் முறைத்தாள்.
‘போங்கடா..’ என்று சலித்துக்கொண்டே “வள்ளி நீயாச்சும் வாயேன் “ என்று அழைத்தார் மீனா.
பிள்ளைகள் அனைவரையும் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று யோசித்தார் வள்ளி.
“அதான் நான் இருக்கேன் இல்ல, நீங்க போயிட்டு வாங்க” என்று சாலா பொறுப்பை எடுத்துக்கொண்டார்.
இப்படியாக விசாகாவை அழைத்துக்கொண்டு சித்தப்பா சித்திகள் செல்வது என்று முடிவானது.
error: Content is protected !!