Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Naayagano Naanariyaen

நாயகனோ நானறியேன் – நாயகன்18

       “ஏன் மாமா நீ வேற கல்யாணம் பண்ணிக்கலை” என்ற மகிழின் கேள்வியில் இவ்வளவு நேரம் இருந்த இதம் மறைந்து.. ஒரு கணமான மௌனம் பேரிரைச்சலாய் ஒலிக்க.. அவளை விழி திறந்து பார்த்தான் நந்தா.

        இத்தனைக்கும் வாயைத் திறந்து ஒரு வார்த்தை பேசி விடவில்லை.. வெறும் பார்வைக்கே அவள் கண்கள் கலங்க.. நிமிர்ந்து அமர்ந்தவன்.. தன் நெற்றியில் இருந்த அவள் கரங்களைப் பற்றி அவளை முன்புறம் அழைத்தான்.

         அவளும் மெதுவாக வர.. தன் நீட்டியிருந்த கால்களில் அவளை அமர வைத்தவன் “இப்போ சொல்லு.. என்ன சொன்ன” என நிதானமாக வினவினான்.. உணர்வற்ற ஒரு குரலில்.

       ‘அவன் தானே தப்புப் பண்ணியிருக்கான்’ என்ற அசட்டுத் துணிச்சல் தலைதூக்க.. கலங்கிய கண்களை மறைத்து “உன்னை இன்னொரு கல்யாணம் பண்ணிக்கலையான்னு கேட்டேன்” என்றாள்.



Advertisement

      அவள் கண்ணீரையும்.. அதை கணப் பொழுதில் சுதாரித்துக் கொண்டதையும் உணர்ந்தாலும் அவனும் “இன்னொரு கல்யாணம்.. சரி தான்.. ஆக மொத்தம் உனக்கும் எனக்கும் நடந்தது கல்யாணம்னு புரியுதே.. அது வரைக்கும் சந்தோஷம்.. ஆனா திடீர்னு ஏன் இப்படி ஒரு கேள்வி.. என் அழகைப் பாத்து உன்கிட்ட யாராவது ரெகமண்டேஷன் வந்தாங்களா” என்றாள் அவனும் விளையாட்டுப் போல பேச்சில் அவளுக்கு ஒரு கொட்டும் வைத்து.

      அது அவளுக்கும் புரிய “ஆசை தான்.. தலை எல்லாம் நரைமுடி தெரியுது.. அரைக் கிழவன் ஆகிட்டியே.. வயசு போகுதேன்னு சொன்னேன்” என்றாள் மகிழ் நக்கலாக.

      அதில் சிறிது கூட முகம் மாறாமல் “இதை எல்லாம் என்னை டெஸ்ட் பண்ண கேக்கறியா.. இல்லை.. உன்னை நீயே டெஸ்ட் பண்ணிக்கிறியா” என்றான் நந்தா.. அவள் அமைதியாகி விட

Advertisement

      சிறு சிரிப்புடன் “புரியுது தானே.. எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சு.. என்னை விட்டு என் மனைவி பிரிஞ்சு இருந்தாலும்.. அவ மட்டும் தான் எனக்கு” என சிறு பிள்ளைக்குச் சொல்வது போல விளக்க.. அவளிடம் எந்த பிரதிபலிப்பும் இல்லை.

Advertisement

      அது அவளும் அறிந்தது தானே.. அவன் அவளைத் திருமணம் செய்ய கையாண்ட முறை மட்டுமே தவறு.. மற்றபடி அவனை வேறு குறை எதுவும் சொல்லிவிட முடியாது தான்.. ஆனாலும் அவளுக்கு அவன் மேல் உள்ள கோவத்தை எதில் காட்டுவது எனப் புரியவில்லை.

       இதில் இருந்து விடுபடத்தான் தோன்றுகிறது.. இவ்வளவு நாட்களாக படிப்பு என்ற இலக்கு இருந்தது.. இனி அடுத்து என்ன.. இவனை மன்னிக்கவும் முடியவில்லை.. இவனை விட்டுத் தள்ளியும் போக முடியவில்லை.

       அவனது பதிலில் உள்ளம் குளிர்ந்தது என்னவோ உண்மை.. அவள் முகத்தில் இப்போது யோசனைகள் தெரியவும் “நீ தாலியை போட்டுக்கலைன்னா கூட நீ மட்டும் தான்டி எனக்கு.. நம்பு” என்றான் உறுதியான குரலில்.

Advertisement

      அவள் பார்வை மாறாமல் இருக்கவும் “மயிலு.. நான் இதுவரைக்கும் உன்கிட்ட மன்னிப்பு எப்படி கேட்கனும்னு சொல்லுன்னு சொல்லியிருக்கேனே தவிர.. மன்னிப்பு கேட்டதில்லை.. இப்பக் கேட்கறேன்.. உன்னை என் கூடவே வச்சுக்கனும்னு அவசரமா நான் பண்ண அந்தக் காரியம்.. இப்படி என்னை விட்டு உன்னை விலக்கி நிறுத்தும்னு நான் நினைக்கலை.. என்னை மன்னிச்சுடு டி” என்றான் உருகும் குரலில்.

     அதில் அனைத்தையும் மறந்து தொலைத்து விடலாம் எனத் தோன்றினாலும் ‘அவன் எப்படி இப்படி நடக்கலாம்’ என்ற நெருடல் இருக்கவே “நீ ஏன் மாமா அப்படிப் பண்ண.. தெரியாம பண்ணேன்னு சொல்லாத.. உனக்கு அந்த வயசு இல்லை அப்ப” என எதிர்கேள்வி கேட்டாள் மகிழ்.

        “தெரிஞ்சு தான் பண்ணேன் மயிலு.. என்னை நீ வேண்டாம்னு சொல்லியிருந்தா நான் விலிகிப் போயிருப்பேன்.. அதென்ன உனக்குக் கொடுக்க மாட்டேன்னு உங்கப்பா சொல்றது.. அதுவும் ரெண்டு பேரும் விருப்பப் படறது தெரிஞ்சும் மனுஷன் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுவாராம்.. இது எந்த ஊர் நியாயம்” என அன்றைய நாளின் நினைவில் பல்லைக் கடித்தான் நந்தா.

      அவனை முறைத்த மகிழ் “எங்கப்பா சொல்லாம வேற யார் சொல்லுவா.. ஏற்கனவே ரெண்டு வீட்டுக்கும் ஏழாம் பொருத்தம்.. இதுல நாம விரும்பறது தெரிஞ்சு.. வாங்க மாப்பிள்ளைன்னு உங்களுக்கு ஆரத்தி எடுத்திருக்கனும்னு சொல்றிங்களா.. நாம தான் பொறுமையா நம்ம பக்க நியாயத்தை சொல்லியிருக்கனும்.. அதை விட்டுட்டு நீங்க தாத்தா ஆகப் போறிங்க.. உங்க பொண்ணைக் கல்யாணம் பண்ணி வைங்கன்னா கேப்பாங்க.. இதை சொல்லும் முன்னாடி ஒரு நிமிஷம் கூட என்னைப் பத்தி யோசிக்கலையா.. உன்னை விரும்பியிருந்தா என்னைப் பத்தி என்ன வேணா நீ சொல்லலாமா.. இத்தனை வருஷத்துக்கு அப்புறமும்.. ஸ்கூல்ல அந்தம்மா என்னென்ன சொன்னாங்க தெரியுமா” என்றவள் கண்கள் கலங்க

    அவள் கன்னம் பற்றி “சொல்லியிருக்கக் கூடாது தான்.. பின் விளைவுகளைப் பத்தி யோசிக்காம.. அப்போதைக்கு அந்த ப்ராப்ளமை சார்ட் அவுட் பண்ணனும்னு மட்டும் தான் நினைச்சேன்.. தப்பு தான்” என உடனே ஒத்துக் கொண்டான் நந்தா.

     அதில் அவள் கோவம் சற்றுத் தணிந்தாலும் முழுமையாக அவளால் அதை மறக்க முடியவில்லை.. அவள் கைகளை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டவன் “இன்னமும் எத்தனை நாளைக்கு இதையே நினைச்சு என்னை விலக்கி வைக்கப் போற.. முடிஞ்சா என்னை மன்னிச்சுடு.. இல்லையா எனக்கு என்ன தண்டனை கொடுக்க நினைக்கறியோ கொடு” என்க.. அவளுக்குமே தனக்கு என்ன வேண்டுமென தெரியவில்லை.

      ஒன்றும் பேசாமல் அமர்ந்திருந்தவளிடம் “இல்லை.. என்னை பிரிஞ்சு போகனும்னா அதையும் தாராளமா செய்.. ஏன்னா நான் உன்னைக் கல்யாணம் பண்ணும் போது வயசு உனக்கு வயசு இருபது தான்.. இன்னைக்கு உனக்கு என்னைப் பிடிக்காம கூடப் போயிருக்கலாம்.. இல்லை வேற யாராவதை கூட பிடிச்சு” எனப் பேசிக் கொண்டே வந்தவன் அவளின் எரிமலைப் பார்வையில் அமைதியானான்.

      நிஷ்டூரமாக அவனை முறைத்தவள் “இங்க எதுக்கு வந்த” என அதட்ட.. “நீ கோவமா இருக்க.. அதான் உன்னை சமாதானம் பண்ணலாம்னு” என இழுக்க.. அவன் தோளில் நான்கு சாத்து சாத்தியவள் “இப்படி மடியில உட்கார வச்சிகிட்டு வேற யாரையாவது பிடிச்சிருக்கான்னு கேட்கறியே.. நிஜமாவே நீ மன்னிப்பு கேட்கத் தான் வந்தியா.. என்ன அசால்ட்டா சொல்ற தாராளமா பிரிஞ்சு போன்னு.. நீயெல்லாம் திருந்தவே மாட்ட” என மீண்டும் மொத்தினாள்.

      அவள் கைகளைப் பற்றித் தடுத்தவன் “சொதப்புறேனா” எனப் பாவமாகக் கேட்க.. கைகளை வெடுக்கென உருவிக்கொண்டு “ரொம்பக் கேவலமா சொதப்புற” என தலையில் அடித்து முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

       அவள் இடது புறமாகத் திரும்பியிருக்க.. வலது மூக்கில் அணிந்திருந்த மூக்குத்தி பளீரென மின்னி தன் இருப்பை அறிவிக்க.. ஒற்றை விரலால் அதை வருடியவனுக்கு பாலையில் கிடைத்த நீருற்று போல மனம் குளிர.. அவள் முகத்தை அல்லாது.. விழிப் பாவையை மட்டும் அவனை நோக்கித் திருப்பினாள்.

       அதில் அவள் விழி மீது பதிந்த கவனம்.. அப்படியே அவள் புருவ இறுதியில் இருக்கும் மச்சத்திலும் விழ.. அதையும் வருட.. அவன் கையைத் தட்டிவிட்டவள் எழுந்து கொள்ளப் பார்க்க அவள் இடையில் கரம் பதித்து அவள் முயற்சியை மறுக்க.. அவனை முறைத்தவள் “நமக்குள்ள இன்னும் எதுவும் சரி ஆகலை மாமா” என்றாள் கோவமாக.

     அவள் கோவத்தை ஒதுக்கியவன் “சரி ஆகும் போது ஆகட்டும்.. நீ ஏன்டி இப்படி ஆகிட்ட” என்க.. “எப்படி ஆகிட்டேன்.. உங்கப்பத்தா சொன்ன மாதிரி வைட்டா ஹைட்டா இருந்தா தான் உனக்கும் புடிக்குமோ.. அப்பறம் ஏன் மன்னிப்பு கேட்கறேன்.. மாங்கா விக்கிறேன்னு இங்க வந்த.. கிளம்பு” என இப்போது அவன் மடியில் இருந்து எழுந்தே விட்டாள்.

     “அடியே.. அப்பத்தா பத்தி உனக்குத் தெரியாதா.. அது ஏதோ விளையாட்டுக்கு பேசிச்சு.. அதை விடு உன் மாமா வீட்ல சோறு போடலையா..
இல்லை இந்த மாமனை விட்டுப் பிரிஞ்சதால வந்த பசலை நோயா” என்றவாறே அவனும் அவள் அருகில் வர.. “அது ஒன்னு தான் குறைச்சல்.. அதான் என்னைப் போக சொல்லிட்டியே.. போ” கைகளைக் கட்டித் திரும்பிக் கொண்டாள்.

    அந்தச் செய்கை அவனை ஈர்க்க  “அழகிடி மயிலு நீ.. இப்படியே என் கூட வந்துடுறியா” என்றான் ஏக்கம் சுமந்த குரலில்.

       ஒருமுறை பெற்றவர்களை எதிர்த்துப் பேசியது.. அதன் தொடர்ச்சியாய் வந்த இழப்பு, இடைவெளிகள் என நியாபகம் வர கலங்கிப் போனாள் மகிழ்.

      அவள் கலக்கத்தை உணர்ந்தவன் ஒரு நெடுமூச்சுடன் “இந்த தடவை உன் முடிவா இருக்கட்டும் மயிலு.. உனக்கு எப்ப வரனும்னு தோணுதோ அப்ப என்னைக் கூப்பிடு.. அண்ட்.. அட்வான்ஸ்டா ஒரு சாரி” என தயங்கியவன் நொடியும் தாமதிக்காது அவளை இழுத்து.. அவனை வந்ததில் இருந்து இம்சை செய்த புருவ மச்சத்தின் மீது அழுத்தமாக இதழ் பதித்தான்.

அவள் திகைத்து நிற்கும் போதே “வரவா மயிலு” என சொல்லிவிட்டு கதவைத் திறந்து வெளியே எட்டிப் பார்த்தவன் போயே போய்விட்டான்.. சற்று நேரம் என்ன நடந்தது எனப் புரியாமல் நின்றவள்.. சுயம் பெற்று முதலில் கதவைத் தாழிட்டவள்.. மீண்டும் படுக்கையில் வந்து அமர்ந்தாள்.

     அவள் மனதில் கணவன் மீதிருந்த கோவம் சற்றே குறைந்தது தான்.. ஆனாலும் அவனும் மீண்டும் ஒரு வாழ்வு சாத்தியமா.. இப்போது உள்ள நிலையில் வீட்டினர் ஒன்றும் சொல்ல மாட்டார்கள் தான்.. அது அவர்களின் நடவடிக்கைகளில் தெரிகிறது.

     மறைமுகமாக அனைவரும் அவளை நந்தாவை நோக்கிச் செல்லத்தான் சொல்கிறார்கள்.. ஆனால் தனக்கு அவன் தவறை மன்னிக்கும் மனப் பக்குவம் இருக்கிறதா.. இல்லை விலகியே இருந்தாலும் இதற்கு என்ன தான் தீர்வு என யோசித்துக் கொண்டே இருந்தவளுக்கு எப்போது உறக்கம் வந்ததென்றே தெரியாமல் உறங்கிப் போனாள்.

         இரவை விரட்ட ஏழ்பரியோன் எழுந்த வர.. ரகு வீட்டில்.. குளித்து வந்த ரகு.. பூஜையறையில் சென்று விபூதி வைத்துக் கொண்டு.. அவன் அம்மா.. அக்கா (முத்துக்குமரனின் அம்மா) படங்களுக்கு முன்பு நின்று.. தனக்கு வேலையில் நிதானமும்.. கவனமும் வேண்டும் என வேண்டியவன் காலை உணவு உண்ண வந்து அமர்ந்தான்.

      அங்கு ஏற்கனவே முத்துக்குமரன் டியூட்டிக்கு கிளம்பி.. காலை உணவு உண்டு கொண்டிருக்க.. சற்றே தயங்கியவன்.. அதை ஒதுக்கி அவனாக பரிமாறிக் கொண்டு உண்ணத் துவங்கினான்.

       வேலையில் சேர்ந்த பிறகு ரகுவின் நடவடிக்கைகள் முற்றிலும் மாறிப் போய்தான் விட்டது.. எந்நேரமும் குடி என்றிருந்தவன் இப்போது விடுமுறை நாளில் மட்டுமே.. அதுவும் குடித்துவிட்டு அமைதியாக வீட்டில் வந்து படுத்துக் கொள்வான்.. மகிழின் கண்ணீர் அந்த அளவு அவனை மாற்றியிருந்தது.

     அதுவும் போக.. அவன் ஏற்றிருக்கும் டிரைவர் வேலையில் இந்தக் குடியால் யாருக்கும் தீங்கு நேர்ந்துவிடக் கூடாது என மனக் கட்டுப்பாட்டுடன் இருந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!