Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Naayagano Naanariyaen

நாயகனோ நானறியேன் – நாயகன்19

அறிவழகன் ரகுவையும் நந்தாவையும் நெருங்கவும்.. இருவரும் எழுந்து நின்றனர்.. நந்தாவை பள்ளி மூலம் ஏற்கனவே தெரிந்திருக்க.. ரகுவை மகிழின் தாத்தாவை வைத்து அடையாளம் சொன்னவர் “ரொம்ப நன்றி தம்பி.. நீங்க ரெண்டு பேரும் இல்லைனா என் பொண்ணு நடு ரோட்டில தனியா நின்னிருப்பா.. அவளையும் இங்க கூட்டிட்டு வந்து எனக்கும் தகவல் சொன்னிங்க” என நன்றி சொன்னவர்

“பாருங்க தம்பி.. பெத்தவங்க வேண்டாம்னு தூக்கி எறிஞ்சுட்டுப் போனா.. கோவம் இருந்தாலும் எங்கியாவது போய் நல்லா இருந்தா சரின்னு விட்டேன்.. இப்படி வந்து நிக்கிறாளே.. இந்த வயசுல இப்படி ஒரு நிலைமையா என் பொண்ணுக்கு.. அந்தக் கடவுளுக்கு கண் இல்லை தான் போல.. நான் எப்படி அவளை தேத்துவேன்னே தெரியலை தம்பி” என ஏகத்துக்கும் கலங்கினார் மனிதர்.

அதற்குள் மருத்துவர் அழைக்க அவர் சென்றுவிட.. அவரது கைத்தடிகள் தாய்க்கும் மகளுக்கும் காவலாக நின்றிருந்தனர்.. ரகுவிற்கு ஓனரிடம் இருந்து ஃபோன் வர அந்த அழைப்பில் கலைந்தவன் எடுத்துப் பேச.. அவர் உடனடியாக வரச் சொன்னார்.

அந்தப் பெண்ணிடம் என்னவென்று சொல்வது என தயங்கிய இருவரும் அந்த அம்மாவிடம் மட்டும் தாங்கள் கிளம்புவதாகச் சொல்லிச் செல்ல.. எதிரில் முத்துக்குமரன் வந்து கொண்டிருந்தான்.. ரகு அவனை கண்டு கொள்ளாமல் கடக்க.. நந்தா மட்டும் சற்றே யோசித்தவன் மருத்துவமனை தகவல் சொல்லியிருக்கும் என்றபடி வெளியே சென்றான்.



Advertisement

ரகு ஏதோ யோசனையிலேயே காரின் அருகில் செல்ல.. நந்தாவிற்கு மனது கேட்கவில்லை.. இப்படியே சென்றால் இவனுக்கு ஏதேனும் ஆகிவிடும் போல என பயந்தவன்.. அவன் அருகில் சென்று அழைத்தான்.

“மாமா.. மாமா.. யோவ்.. ஏன் இப்படி இருக்க” என அவன் கவனத்தை மீட்க.. ரகுவோ “இவனையும் என்னால காப்பாத்த முடியலை மாப்ளை.. அந்தப் பிள்ளையும் ரேவதி மாதிரி ஆகிடுச்சே” என்றான் கண்ணில் நீர் திரையிட..

இப்போது ரகு மேல் நந்தாவிற்கு கோவம் எழவில்லை.. ஒருவித பரிதாபம் தான் வந்தது.. தப்பிற்கு தண்டனை பெற்று அதனை கடந்து வருவது கூட எளிது போல.. இத்தனை வருடங்களாகக் குற்றவுணர்ச்சியோடு வாழ்கிறானே.. எனத் தோன்றியது.

Advertisement

“என்ன செய்யச் சொல்ற மாமா.. நீ அதையே நினைச்சு வண்டி ஓட்டி நீயும் வந்து ஹாஸ்பிட்டல்ல படுத்துக்காதே.. ஒழுங்கா ஓட்டு” என அதட்டியவன்.. அவன் கையை அழுத்த.. தலையசைத்த ரகு காரை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டான்.

Advertisement

பெருமூச்சுடன் தன் வண்டிக்கு அருகில் செல்ல.. சாவியைக் காணாமல் தேடியவன்.. உள்ளேயே வைத்துவிட்டோமோ என எண்ணி மருத்துவமனை உள்ளே சென்றான்.

அங்கிருந்த காத்திருப்பு நாற்காலியில் தான் அது இருந்தது.. அதை எடுக்க அருகில் செல்ல “எதுக்கு இவ்வளவு அவசரமா பண்ணிங்க.. எதாவது பிரச்சனை” என அறிவழகனிடம் பேசிக் கொண்டிருந்த குமரன் நந்தாவைப் பார்த்ததும் அமைதியாகிட..

அவனைத் திரும்பிப் பார்த்த அறிவழகன் “கூறுபோட்ட உடம்பை வீட்டுக்கு கொண்டு போய் மட்டும் நான் என்ன செய்யப் போறேன் தம்பி.. இங்கேயே எல்லாம் முடிச்சிடுங்க.. அவசரமாக எடுத்த முடிவு தான்.. வேற வழி இல்லை.. என் பொண்ணைப் பாருங்க.. மீதி சாங்கியத்தை எல்லாம் நான் வீட்டோட பண்ணிக்கிறேன்” என அழ ஆரம்பித்தார் அறிவழகன்.

Advertisement

நந்தாவுக்கு ஏதோ சரியாகப் படவில்லை.. ஆனாலும் மேற்கொண்டு அவனாலும் யோசிக்க முடியாமல் அந்த அனுப் பெண்ணின் அழுகை அவனை அங்கிருந்து விரட்டியது.. அவரிடம் தலையசைத்தவன்.. நேராக வீட்டிற்குத் தான் சென்றான்.

காலையில் சென்ற பேரன் முன் மதியத்திலேய வீட்டிற்கு வர.. அதுவும் ரத்தக் கறையுடன் வர பதறிப் போன சாரதா “என்னப்பா ராஜா.. என்ன ஆச்சு.. துணியெல்லாம் இரத்தம்” எனக் கேட்க.. ரேவதியும் அவன் அம்மாவும் கூட அவனைக் கேள்வியாகப் பார்த்தனர்.

அனைவருக்கும் பொதுவாக “எனக்கு ஒன்னும் இல்லை.. தலை முழுகிட்டு வரேன்.. ம்மா.. என் டிரெஸ் மட்டும் ஒரு செட் எடுத்துப் போடுங்க” என வீட்டைச் சுற்றிக் கொண்டு கொல்லைப் புறம் சென்றான்.

குளித்துவிட்டு வந்தவனுக்கு அவன் அம்மா சகுந்தலை ஜூஸ் கொண்டு வந்து கொடுக்க.. அதைப் பருகியவன்.. அப்பத்தா மடியில் தலை வைத்துப் படுத்தவாறே “சின்னப் பொண்ணு அப்பத்தா.. இருபது இருபத்தியொன்னு தான் இருக்கும்.. கல்யாணம் ஆகி ஒரு மாசம் தான் ஆச்சாம்.. அவ கண்ணு முன்னாடியே புருஷன் லாரியில அடிபட்டு.. அது கதறலைக் கண் கொண்டு பாக்க முடியலை” என்றவனின் முகம் வேதனையில் கசங்கியது.

“யார் வீட்டுப் பொண்ணுப்பா.. நம்ம ஊரா இல்லை அசலூரா” என அப்பத்தா விசாரிக்கவும்..

“பொண்ணு நம்ம பக்கம் தான்.. அவங்க அப்பா கூட போன ஆட்சியில எம்.பியா இருந்தாரே.. அறிவழகன்னு.. லவ் மேரேஜாம்.. அவங்க அம்மா அதுக்கும் மேல அழறாங்க” என அடையாளம் கூறிக் கொண்டிருக்க..

அப்பத்தாவும் “ஆமாப்பா.. உன் அப்பாரு சாவுக்கு வந்திருக்காப்ல.. உங்கப்பனைப் போகச் சொல்லனும்.. சும்மாவா.. பழுத்தோலை இருக்கையில குருத்தோலை போனா யாரால தான் தாங்கிக்க முடியும்.. எல்லாம் விதிப்பா” என அவனைத் தேற்றியவரிடம்

“ரகு கார்ல தான் போயிருக்காங்க போல.. அவனும் அதைக்கண்டு பயந்து போயிட்டான்.. எங்கிட்டையே எனக்கு அந்தப் புள்ளை அழுகையைப் பாத்து ரேவதி மாதிரி இருக்குன்னு கண் கலங்கிட்டான்.. எனக்கும் அப்படித்தான் தோணுச்சு” அவன் நார்மலாக இருந்திருந்தால் இதையெல்லாம் பேசியிருக்க மாட்டான்.. ஆனால் என்னவோ மனம் முழுக்க குழப்பத்தில் உழன்று கொண்டிருக்க.. ரேவதி இருப்பதையும் மறந்து ரகுவைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தான்.

இத்தனை நேரம் அருகில் இருந்த ரேவதி எழுந்து தன் தையல் மெஷின் நோக்கிச் செல்ல.. அப்பத்தா அவளைப் பார்த்தபடியே “நீ ரத்தக் கறையோட வரவும்.. உனக்கு எதாவதோன்னு நான் பயந்தே போயிட்டேன் சாமி.. அதுக்குத் தகுந்த மாதிரி இந்த சின்னக் குமரி வேற தாலியைக் கழட்டி எறிஞ்சுட்டுப் போயிட்டாளே.. நல்லவேளை அப்படி ஒன்னும் இல்லை” என்றவாறே தலைக்கு மேலே கையைத் தூக்கி கும்பிடு ஒன்று போட..

அப்பத்தா மடியில் இருந்து எழுந்த நந்தா அவரை முறைத்து “அவளைக் குறை சொல்லலைன்னா உனக்கு தின்ன சோறு செரிக்காதே.. நான் பண்ண காரியம் அப்படி.. அவளைப் பேசாதே” என சண்டைக்கு வரவும்

ஆச்சரியமாக மோவாயில் கை வைத்த அப்பத்தா “அடேய்.. என்ன ஆனாலும் ஒரு பொம்பளை தாலியைக் கழட்டலாமா.. புருஷன் உயிரோட இருக்கையில.. அவ உன்னையை கல்லுக்கு சமானமா நினைக்கும் போதே இப்பிடி.. இதுல உனக்கு நல்ல பொண்டாட்டி கிடைச்சிருந்தா என்ன ஆகியிருக்கும்” என நொடித்துக் கொள்ள.. ரேவதி கலகலவென நகைக்கத் துவங்கினார்.

அவளது சிரிப்பில் அங்கிருந்த கணமான சூழ்நிலை சற்றே தளரவும்.. ரேவதியே “சீக்கிரமா அவளைக் கூட்டிட்டு வாடா ராஜா.. அப்புறம் உன் அப்பத்தா வாயை அவ அடக்குவா” என்க

நந்தாவோ “நானா அத்தை மாட்டேன்கிறேன்.. உன் மக தான் பிடி கொடுக்கவே மாட்டேன்றா.. என்னத்தை சொல்ல” என்றான் சோகமாக.. அப்பத்தா “அதானே.. அவளை வேலைக்கு எடுக்கும் போதே உங்கப்பன் சொன்னான்.. பாத்துடா அவளைக் கூப்படறேன்னு போய் அவ அப்பன்ட்ட மாட்டிக்காதே” என நொடித்துக் கொள்ள

சகுந்தலை “என்ன ராஜா இதெல்லாம்.. மறுபடியும் கண்ணாகிட்ட வம்பு பண்றியா” என அதட்ட.. அப்பத்தாவை முறைத்தவன் “ம்மா.. உனக்கு மருமக வேணுமா வேண்டாமா” என அம்மாவிடம் கேட்க.. “வேண்டாம்னு எப்படி டா சொல்லுவாங்க.. நாங்க பாத்து பண்ணியிருந்தாக் கூட இந்நேரம் பேரன் பேத்தி பாத்திருப்போம்.. அதென்ன அத்தனை பிடிவாதம் ஒரு புள்ளைக்கு.. அந்த விஷயத்தில எனக்கு கண்ணா மேல கோவம் தான்டா” எனக் கூற.. அப்போது அவன் அப்பா சரவணன் வர அந்தப் பேச்சு அப்படியே நின்று போனது.

இந்த நேரத்தில் வீட்டில் இருக்கும் மகனை வியந்து பார்த்தவரிடம் அந்த விபத்து பற்றிச் சொல்லிவிட்டு.. அவன் தன் அறைக்குச் சென்றுவிட்டான்.

*******

அங்கு ரகுவும் ஓனரின் முன் தலை குனிந்து நின்றிருந்தான்.. அவரோ “பெரிய இடத்துப் பையன் சரியா வேலையை மட்டும் செய்வான்னு பாத்தா.. என்னப்பா இப்படிப் பண்ணிட்ட.. நீ கொண்டு போய் விட்டவங்களுக்கு ஆக்சிடென்ட்னா நூத்தியெட்டுக்கு ஒரு ஃபோனைப் போட்டுட்டு அடுத்த வேலையைப் பாக்க வேண்டியதானே.. இப்படி அரை நாள் பொழைப்பையா கெடுப்ப.. போப்பா” எனத் திட்டியவர்.. இன்று விடுப்பு எடுத்துக் கொள்ளச் சொல்ல.. தலையாட்டியபடியே வீடு வந்து சேர்ந்தான்.

*********

அன்று முழுவதும்.. நந்தாவைப் பார்க்காமல் மகிழால் அன்றைய நாளைக் சரியாகக் கடக்கவே முடியவில்லை.. எப்படித்தான் நான்கு வருடங்களை ஓட்டினாள் என்பது தெரியவில்லை.. ஆனால் இந்த ஆறு மாதங்களாக தினமும் ஒரு முறையேனும் கண்ணில் பட்டுவிடுவான்.

அதுவும் நேற்று அவன் அவ்வாறு அனுசரணையாக பேசிச் சென்ற பின்பு.. இன்று அவனைக் காணாமல் சற்றே வாட்டமாக இருக்க.. முத்து இந்த ஒரு வாரமாகவே அப்படித்தான் இருக்கிறாள்.

பள்ளியில் இருந்து வந்த அவர்கள் ஊர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கவும்.. மகிழின் ஃபோன் கூப்பாடு போடவும் சரியாக இருந்தது.. நம்பரைப் பார்த்தவுடன் மகிழ்வாக அட்டெண்ட் செய்து காதில் வைத்தவள்.. மறுபுறம் சொன்ன செய்தியில் மொத்த உற்சாகமும் வடிய.. ஃபோனையே வெறித்தாள்.

முத்து அவள் முகம் பார்த்து.. தன் மௌனச் சிறையில் இருந்து வெளி வந்து “என்ன டி ஆச்சு.. யார் ஃபோன்ல” என விசாரிக்கவும்

“முகில் ஜாதகம் வாங்கினவங்க தான்.. இந்த இடம் ஒத்துவராது.. வா” என நடக்கவும்.. அவள் குரலில் இருந்த சோர்வு முத்துவைத் தாக்க.. அவள் கரம் பற்றி நிறுத்தியவள் “ஏன் ஒத்துவரதாம்.. என்ன சொல்றாங்க” என அழுத்திக் கேட்கவும்..

பெருமூச்சு விட்டவள் “தங்கச்சி வாழாம இருக்க வீட்ல பொண்ணு கொடுக்க மாட்டாங்களாம்.. நாளைக்கு நாத்தனார்க்கு அவங்க பொண்ணு ஊழியம் செய்யுற மாதிரி ஆகுமாம்” என்க..

முத்து எரிச்சலாக “எந்த லூசு டி இப்படிச் சொன்னது.. அவ தான் பொண்ணா.. விடுடி.. நீ அவளை தூக்கிப் போட்டுட்டு வேற பொண்ணு பாரு” என தோழிக்கு தேறுதல் சொன்னாள்.

முகிலை மறுத்ததே அவளுக்கு கோவமாக இருக்கவும்.. இதில் மகிழைக் காரணம் காட்டி மறுத்தது அவர்கள் மேல் அளவில்லாத எரிச்சலும்.. இப்படி அவரை கஷ்டப்படுத்தற மாதிரி இந்தப் பாட்டியும் பேத்தியும் ஏன் பண்றாங்க என இவர்கள் மீதும் கோவம் வந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!