Skip to content
Post Views: 5,699
அலட்சியத்தின் சுவையை அனைவரையும் உணர வைத்திருந்தாள் பவ்யா. நீ நடந்து கொள்ளும் முறையைப் பொறுத்து தான் எனது உணர்வின் வெளிப்பாடு இருக்கும் என்பதை சொல்லாமல் சொல்லி இருந்தாள் செயல்களின் ஊடாக. அக்கறைக்கும் அர்த்தமற்ற அரவணைப்பிற்குமான வித்தியாசம் பவ்யாவின் சொற்கள் மூலம் தரங்கினிக்கு வலிக்க வலிக்க கற்றுக் கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது தேசிகன் வீட்டில்.
பவ்யாவின் பேச்சு கேட்டபடியே வந்த தேசிகன் பவ்யா என்று அதட்டியதில் அவள் பயம் கொள்ளாமல் நின்றதாகட்டும் யார் கேட்டாலும் என்னிடம் பதில் உண்டு என்று ஒரு பாவனையை செலுத்தியதாகட்டும் வளர்மதிக்கும் தேசிகனுக்கும் கூட சற்று அதிர்வைத் தான் ஏற்படுத்தி இருந்தது.
Advertisement
உள்ளதை உள்ளபடி பேசினாள் பவ்யா.
Advertisement
“அவங்க உங்க அண்ணன் பொண்ணு மூத்த மருமகள் னு எந்த இடத்தில் வேணும்னாலும் இருக்கட்டும் ஐ டோன்ட் கேர் அபவுட் இட். ஆனா அவங்களுக்கு என்ன மாதிரி வேலை சொல்றீங்களோ சேமா என் கிட்டயும் சொல்லுங்க. இந்த பாரபட்சம் காட்டி வலுக்கட்டாயமாக வேலையை திணிக்கிற வேலை இருந்தா அதுக்கு நான் ஆள் கிடையாது மாமா.”என்றவள்
Advertisement
“நான் ஒரு நாள் சமைச்சா மறுநாள் அவங்க செய்யட்டும். ஈகுவல் சமையலா இருக்கணும். அப்படி செஞ்சா தாராளமாக நானும் செய்றேன் இல்லையா டெய்லி சேர்ந்தே செய்வோம் னா வேலையை பிரிச்சு செய்யலாம். சும்மா நான் மட்டும் கிச்சனில் வேகணும். அவங்க நாசூக்காக காய் கட் பண்ணிட்டு போக இருந்தா சரியா வராது. எனக்கும் பிள்ளை இருக்கான் தானே… நான் அவனையும் பார்க்க வேண்டாமா”என்றாள் வெடுக்கென்று.
Advertisement
“நீ என் மேல பொறாமைப்பட்டு தான் இப்படி பேசற”
“உங்க மேல பொறாமைபடறதுக்கு நீங்க ஒண்ணும் எலிசபெத் மகாராணியும் இல்லை. அய்யோ பாவம் னு பரிதாபப்படுற நோயாளியும் இல்லை. நீங்க இங்க மருமகள் னா எனக்கும் அதே போஸ்டிங் தான்.”என்றாள் தரங்கினியிடம் திரும்பி
“ப்ப்ச் இதோப் பாருங்க ம்மா அவங்க அவங்க வேலையை சரியா செய்ங்க. வேலை முடிச்சு வீட்டுக்கு வர்ற ஆம்பளைங்க நிம்மதியா இருக்கிறதா இல்லையா”என்று தேசிகன் சலிக்க
“இதுக்கு பதில் இது இல்லையே மாமா. நீங்க நிம்மதியா இருக்க நினைச்சா வீட்டு விஷயத்தையும் கவனிக்க தான் வேணும். பிஸ்னஸ் ல ஒரு குடைச்சல் னா கண்டுக்காம விட்டுடுறிங்களா என்ன”என்றவள் “இன்னும் ஒரு வாரம் பார்ப்பேன் இதே தொடர்ந்தால் தனியா போறோம் நாங்க”என்று சொல்லி விட்டு அவளறைக்குச் சென்று விட தேசிகனின் பார்வை தீபனைத் தொட்டு மீண்டது.
“பவி பேசறது எனக்கு தப்பா படலைப்பா”என்றான் தீபன்.
தேசிகனின் மனது ஆழியனிடம் சென்று நின்றது.
“நான் ரதி கிட்ட பேசறேன் ப்பா . கண்டிச்சு வைக்கிறேன்”என்று சொல்லும் அவனின் பாங்கில் தான் வளர்மதியின் அலட்சியம் அதிகம் ஆனதோ. தீபன் மனைவிக்கு தந்த ஆதரவை ஆழியன் எதனால் தரவில்லை என்று யோசிக்க வளர்மதியின் குரல் அதைத் தடுத்தது.
“சாப்பாடு எடுத்து வை வளரு”என்று அவர் உள்ளே செல்ல வளர்மதி தரங்கினியிடம் ஏதோ முணுமுணுப்பது குரலில் மட்டும் கேட்டது.
லேசான முட்டலும் மோதலுமாக அனைவரும் அமைதி மார்க்கமாக உணவருந்தி முடித்து உறங்க செல்ல இரவுப் பொழுது நீளாமல் விடிந்திருந்தது.
முகத்திருப்பலும் ஒதுக்கமுமாய் வீட்டு மருமகள்கள் இருக்க வளர்மதிக்கு விழி பிதுங்கியது வீட்டில் இருந்த சூழல் கண்டு. நீரதியை அதட்டிப் பேசி ஏதேதோ செய்தவரால் பவ்யாவிடம் செயலால் கூட ஒதுக்கம் காட்ட முடியவில்லை . தன் நிலையில் சரியாக இருந்தவளை திட்டவும் முடியாமல் தானே செல்லம் கொடுத்து கெடுத்து வைத்த மூத்த மருமகளிடம் பேசவும் முடியாமல் தடுமாறி நின்றவர் ஒரு வாரத்திலேயே தனிக்குடித்தனம் செல்லுங்கள் என்று சொல்லி விட்டார். பெரும்பாலான கூட்டுக்குடும்பம் உடைவது பாரபட்சம் என்ற ஒரு உளியினால் தானோ.
பவ்யா எதையும் தலையில் இட்டுக் கொள்ளவில்லை. மாடியில் தனக்கான சமையலறையைக் கட்டி கொடுங்கள் செல்கிறேன் என்று கூறி விட்டாள்.
“அப்போ நான் தான் மாமனார் மாமியாருக்கு செஞ்சு போடணுமா… நீங்க எல்லாம் கழண்டுக்குவீங்களா”என்று கேட்டது வேறு யாரும் அல்ல. வளர்மதி தூக்கி வைத்துக் கொண்டாடிய அவரது அண்ணன் மகள் தரங்கினியே தான்.
பவ்யா அப்படியே வளர்மதியை பாதாதிகேஷம் அளந்தாள். அவளின் பார்வையை உணர்ந்தாரோ என்னவோ “இந்த ஒரு மாசம் பொறுத்துக்கங்க இதுக்கு ஒரு முடிவு கட்டறேன்”என்றபடி உள்ளே போய் விட்டார்.
பொன்னி நடப்பதை பார்த்தபடியே இருந்தவர் மகனிடம் பேச வேண்டும் என்று நினைத்தார்.
ஒற்றை மகனை பெற்ற பொன்னிக்கு மருமகளோடு பெரிதாக வாக்குவாதம் வந்ததில்லை. ஏனெனில் அவர் தூக்கி வளர்த்த பிள்ளை வளர்மதி. பெண் பிள்ளைக்கு ஆசையாய் காத்திருந்த வேளை தேசிகன் பிறந்த மறு வருடம் கருத்தரித்து உற்சாக மனநிலையில் இருந்தவருக்கு ஒன்பது மாதம் நிறைவுற்ற நிலையில் பிள்ளையோடு சேர்த்து வயிற்றில் கட்டியும் வளர விளைவு வலியும் வேதனையுமான சிக்கல் பிரசவம். இரண்டும் சேர்ந்து வளர்ந்ததில் பிரச்சினை ஆகி பெண் பிள்ளை இறந்து பிறக்க கர்பப்பையும் சேர்த்தே எடுக்க வேண்டிய நிலை வந்துவிட்டது பொன்னிக்கு. பெரிதாய் மனமுடைந்து போன பெண்மணிக்கு ஒளிரும் மின்மினியாய் வந்தவள் தான் அவரின் ஒன்று விட்ட அண்ணன் மகள் வளர்மதி.
ஏதோ விசேஷம் என்று அண்ணன் வீட்டிற்கு சென்றவரை முதல் பார்வையில் ஈர்த்த குழந்தை அவர் துக்கத்திற்கு வடிகாலாகிப் போக குழந்தையோடு பாசப் பயிரை வளர்க்க வளர் பொன்னியின் வாழ்வில் தவிர்க்க முடியாத ஆளாய் மாறிப் போனார். வளர்மதி இவரோடு ஒட்டிக் கொண்ட நாளில் இருந்து என் மருமகள் இவள் என்று சொல்ல இருக்க பொன்னியின் செல்வ வளமை வளர்மதி பெற்றோரை எதையும் சிந்திக்க விடாமல் இதை ஒப்புக் கொள்ள வைத்ததில் தேசிகனின் மனைவி ஆகிப் போனார் வளர்மதி. தான் சிறுவயதில் கேட்டு மறுக்காத அண்ணன் குடும்பத்துடன் ஒரு ஒட்டுதல் உருவாகி இருக்க அவர்களின் வாரிசுகள் மீதும் அதே பற்று தொடர்ந்து விட்டது பொன்னிக்கு. கண்மூடித்தனமான பாசம் மருமகள் எது செய்தாலும் சரியென்று தலையாட்டி வைக்க வைத்து விட்டது பொன்னியை. வளர்மதியுமே எவ்விடத்திலும் பொன்னியை விட்டுக் கொடுக்காமல் இருக்க பிரச்சினை ஏதுமின்றி தேசிகன் குடும்பம் முன்னேறியது. மூன்று ஆண் பிள்ளைகள் ஒன்று போனாலும் ஒரு பெண் பிள்ளை என்று அந்த காலத்தில் கச்சிதமான குடும்ப சங்கிலியை உருவாக்கிக் கொண்ட தேசிகனிடம் ‘மூணு ஆணு முச்சந்தியில சோறு ‘என்று கிண்டல் தொனி பேசியவர்கள் மத்தியில் மூன்று மகன்களையும் ஃபெவிகால் போட்டு ஒட்டிய கணக்காக ஒற்றுமை வண்டியை ஓட்ட செய்தவருக்கு, ஓட்டை எல்லாம் குடும்பத்திற்குள் என்று தெரியவில்லை. ஒரு கடலின் நீரையே தன் ஒற்றை சுண்டு விரலால் அடைத்து ஊர் மக்களை காப்பாற்றிய ஆலிவர் ட்விஸ்ட் போல அல்லாமல் விழுந்த ஓட்டையை தன்னால் ஆன மட்டும் பெரிதாக்கி வெள்ளம் தலைக்கு மேல் போகிற வரை இருந்து விட்டார் வளர்மதி.
பொறுத்திருந்த நீரதிக்கு வெள்ளம் மூச்சு முட்டியதில் அங்கிருந்து தப்பிச் செல்ல வழி கிடைத்ததும் தப்பிக்க சுனாமியே வந்தாலும் சூப்பரா நீந்துவோம் என்று கூட்டுக் குடும்பத்தில் வளர்ந்த பவ்யா தன்னை நங்கூரமிட்டு நிலை நிறுத்திக் கொள்ள தரங்கினி ஒரு ஊறிப் போன மரக்கட்டை வெள்ளத்திற்கு ஏற்ப கடலையே ஆட்டுவிக்க நினைக்க வளர்மதி எனும் சூறாவளி சுழன்று அடித்ததில் தானும் தனிக்குடித்தனம் செல்வேன் என்று ஒரு ஓரம் ஒதுங்கினாள். சூறாவளியை அமைதிப் படுத்தத் தான் ஆளை யாரையும் காணவில்லை.
இன்னும் அது வெள்ளம் வந்த கடலுக்குள்ளேயே சுழன்று கொண்டிருக்கிறது.
விளைவு இரட்டை புதிய சமையலறை கட்ட ஏற்பாடாகிக் கொண்டிருக்க பழைய சமையற்கூடம் வளர்மதிக்கு என்றானது.
தகவல் பக்கத்து வீட்டு பத்மா மூலம் நீரதிக்குச் செல்ல அவளோ அலையே இல்லாத அக்னி தீர்த்த கடல் அமைதி காத்தாள்.
விஷயம் ஆழியனிடம் அரசல் புரசலாக பகிரப்பட ஆழியன் டிராக் பாசேஜ் போல தன் சீற்றத்தை காட்டி பொங்கி விட்டான்.
“வீட்டை விட்டு போனா எதுவுமே இல்லைனு நீங்களா முடிவு பண்ணுவீங்களா… என்னைப் பார்த்தா எப்படி தெரியுது உங்களுக்கு.”என்று எகிற
“உன்னை நாங்களா வீட்டை விட்டு போக சொன்னோம்”என்று வளர்மதி தன் பங்கிற்கு கத்த
“வீட்டை விட்டு போனா மொத்தமும் விட்டுப் போனதா அர்த்தமா என்ன… அவங்களுக்கு எப்படி செய்றீங்களோ அதுக்கு கொஞ்சமும் குறையாம என் பங்கு வந்தாகணும். இல்லை ஊர் பெரியவர்கள் நாலு பேர் வச்சு நான் பேசுவேன்”என்று சட்டமாய் பதிலிறுத்ததில் பொன்னி தளர்வாக “செல்வம் நீயாடா இது”என்றார்.
“நானே தான் இதுக்காக என் வாய்க்கு வக்கீலா வைக்க முடியும். வீட்டு பெரிய மனுசியா இதை நீங்க தான் பாட்டி சொல்லி இருக்கணும் எங்க உங்களுக்கு தான்”என்றவன் அப்படியே நிறுத்திக் கொண்டான்.
தேசிகன் “பின்னாடி பக்கமும் இதே மாதிரி கட்ட சொல்றேன்”என்றார் மேலும் வாக்குவாதத்தை வளர விடாமல், விரும்பாமல்.
விளைவு இரண்டு கட்டிடம் தற்போது மூன்றானது.
வளரிடம் பேசும் கவிநிலாவுக்கு விஷயம் பகிரப்பட்டதில் பெண்களுக்கும் சொத்தில் உரிமை உண்டு என்று சட்டத்தை கையிலெடுத்து குடும்பத்திற்கே செல்லமாய் இருந்தவள் இன்று தன் அண்ணன்கள் முன் முற்றிலும் விரோதி போல நின்றாள். ஹரிஹரனோ அவளின் நியாயமான உரிமையை கேட்கிறாள் என்று தடுக்காமல் நிற்க நிலாவுக்கு ஆதரவாய் வந்து நின்றவர்களிடம் தேசிகன் இன்னும் சொத்துக்கள் எதுவும் பிரிக்கப்படவில்லை அந்த அளவிற்கு நான் படுத்த படுக்கையாகவும் இல்லை என் உயிர் போன பின் தான் சொத்து பிரியும் என்று எவ்வளவோ முயன்றும் தன் உணர்வுகளை அடக்கி வைக்க முடியாமல் பொங்கி எழுந்து விட்டார்.
வீடே கொண்டாடிய மகள் இன்று ஊரே கைகொட்டி சிரிக்கும்படி செய்து விட்டாளே என்ற ஆதங்கம் மனம் முழுவதும் விரவ விளைவு தேசிகன் உண்மையாகவே படுத்த படுக்கையானார்.
தன்னால் தான் இந்த நிலை தன் தந்தைக்கு என்ற உண்மையை சிறிதும் கிரகிக்காமல் அண்ணி கோபித்துக் கொண்டு சென்றதிலும் அண்ணனின் திடீர் மாற்றத்திலும் அவன் செய்த பிரச்சினையிலும் தான் தந்தை படுத்த படுக்கையானார் என்பதை பரப்புரை செய்ததில் வளர்மதியே ஆடிப் போனார்.
மூன்று மகன்களும் அவர் அருகில் இருக்க கோபமோ தாபமோ தந்தை என்று வருகையில் மூவருமே கலங்கிப் போய் விட்டனர்.
“எனக்கு ஒண்ணும் இல்லைடா அமுதா”என்றவரின் குரலில் சுரத்தே இல்லை.
பிள்ளை படுத்த படுக்கையானதில் பொன்னி நொடிந்து போக வளர்மதியும் மிகவும் தளர்ந்து விட்டார். அந்த அதிகாரம் மெத்தனப் பேச்சு எதுவும் இன்றி தன் வேலையை தானே செய்ய முயன்றதில் பொறுக்காத ஆழியன் வேலைக்கு ஆள் வைத்தானே தவிர மறந்தும் மனைவியை இங்கே கோர்த்து விடவில்லை.
நாட்கள் நகர சமையலறை கட்டி முடிக்கப்பட்டதில் தரங்கினி பவ்யா இருவரும் தனிக்குடித்தனம் சென்று விட்டனர்.
பவ்யா நறுக்கென்று பேசி இருந்தாலும் பெரியவர்களுக்கான உணவில் குறை வைக்கவில்லை. தரங்கினி தனக்கும் முடியவில்லை என்று பேசினாளேத் தவிர ஒரு வேளை கஞ்சி கூட கொடுத்து உதவவில்லை.
வசதி இருந்ததால் மேல் வேலை செய்ய சமையல் செய்து கொடுக்க என்று ஆள் போட்டுக் கொண்டோம் இதுவே பணமும் இல்லாமல் ஆதரவும் இல்லை என்றால் நம் நிலைமை வளர்மதிக்கு நினைக்கும் போதே திக்கென்றது.
நீரதியிடம் ஆழியன் புலம்பி இருக்க அவளும் மனம் கேளாமல் வந்து பார்த்தாள். ஒரு வாரம் போல பிள்ளைகளை வைத்துக் கொண்டு முகம் சுளிக்காமல் உதவி செய்தாள்.
வளர்மதியை பார்க்க வந்த அவரின் அண்ணன் மகள் எதையும் செய்யாமல் இருப்பதில் நேரடியாகவே அவளை பேசி விட்டார்.
“என் தங்கச்சி உன்னை தங்கமா தாங்கினதுக்கு நீ செலுத்தற நன்றி இதுதானா தரு. அவளுக்கு செய்றதை விட உனக்கு இங்கே என்ன வேலை.”என்று கடுகடுக்க
“அப்பா பிள்ளைகளை வச்சுட்டு என்னால இதையும் கவனிக்க முடியலைப்பா”என்று சமாளித்தாள் தரங்கினி.
“என்ன பொல்லாத பிள்ளைங்க ஏன் செல்வம் பொண்டாட்டி செய்யலை. இந்த பவ்யா பொண்ணு செய்யலை. உன் சோம்பேறித்தனத்துக்கு காரணம் தேடாத. என் தங்கச்சியை பார்த்துக்கணும் அவ்வளவு தான். அடுத்த தடவை நான் பார்க்கும் போது அவ நல்லா திடமா எப்போதும் போல வரவேற்கணும்”என்று கடுமையாக பேசியது தரங்கினியிடம் சிறிது வேலை செய்தது.
வளர்மதியை மட்டும் கவனித்தாள் தரங்கினி.
“அதிசயமா இருக்கு”என்ற அமுதன் “காலம் சரியான ரிங் மாஸ்டர் தரு. ஒரு விஷயத்தை நாம செய்யலைன்னா அது நம்மளை அடிச்சு செய்ய வைக்கும். இல்லை வலிக்க வலிக்க ஒரு அனுபவத்தை தந்திடும். இப்பவும் என்னை பெத்தவங்களை நீ பார்த்துக்கோன்னு வாய் திறந்து நான் கேட்க மாட்டேன். உன் இஷ்டம். ஆனா ஒண்ணு மட்டும் சொல்வேன் நமக்கும் வயசு ஆகும். நம்மளையும்”என்று அதோடு நிறுத்திக் கொண்டான்.
அமுதன் திட்டி இருந்தால் கூட தரங்கினி இறங்கி வந்திருக்க மாட்டாள். அவன் அவளோடான நெருக்கத்தை குறைத்துக் கொள்ள தரங்கினி பயந்தே போனாள் அவனது நடவடிக்கையில்.
மெல்ல மெல்ல தன் அத்தையின் தேவைகளை மட்டும் கவனித்துக் கொள்ள நீரதி தேசிகனை பார்த்துக் கொண்டாள். பவ்யா பொன்னியை கவனிக்க தேசிகன் பொன்னி இருவரும் குற்றவுணர்வில் தவித்தனர். வளர்மதிக்கு தரங்கினி இறங்கி வந்து செய்ததில் கீரிடம் வைத்தது போல் இருக்க மெல்ல மெல்ல திரும்பியது அவரின் இறுமாப்பு.
தேசிகன் மெல்ல மெல்ல தேறிக் கொள்ள பொன்னி வயோதிகமோ இல்லை மகனை கவனித்து கொள்ள ஆள் இருக்கிறது என்ற எண்ணமோ தெரியவில்லை காலதேவனின் கைகளில் சரணடைந்திருந்தார். அதற்கு முன்பே பேரன் பேத்தி என்று ஒவ்வொருவராய் பார்க்க வேண்டும் என்று சொல்லி பார்த்து என்ன நினைத்தாரோ தன் கையில் போட்டிருந்த பவள வளையல்களில் இரண்டை நீரதிக்கும் மற்ற இரண்டை பவ்யாவின் கையிலும் கொடுத்தார். தரங்கினியை அழைத்து சுருக்குப் பையில் இருந்த ஒரு மோதிரத்தை கொடுத்தார்.
கெழவி ஓரவஞ்சனை புடிச்சது என்று முனகினாலும் வாங்கிக் கொண்டாள் தரங்கினி. நிலாவிற்கென எதுவும் கொடுக்காததில் மனச் சுணக்கம் வளர்மதிக்கு.
அடுத்த இரண்டு நாட்களில் அதிகாலையில் தன் வாழ்க்கைச் சக்கரத்தை எவ்வித சுணக்கமும் இன்றி நிறுத்திக் கொண்டார். அன்றைய பொழுதில் அவர் அருகில் இருந்தது என்னவோ நீரதியும் பவ்யாவும் தான்.
அருகிலேயே இருந்து கவனித்துக் கொண்டதில் பொன்னியின் இழப்பு பவ்யாவை வெகுவாக பாதித்திருக்க தன் அப்பத்தாவின் நினைவில் தினமும் இரு முறை அவரை அழைத்து பேசி விடுகிறாள்.
தேசிகன் பெற்றவளின் இழப்பில் துவண்டு போனவர் ஆழியனின் கைகளைப் பிடித்துக் கொண்டு “எங்கம்மா உசுரு போவறப்ப மவனா நான் பக்கத்துல இல்லடா செல்வம். அது மாதிரி என்னையும் அநாமத்தா சாவ விட்ராதடா. பொண்டாட்டி புள்ளையோட வீட்டுக்கு வந்திடுப்பா.”என்று குலுங்கி அழுததில் நீரதியே நாங்கள் இங்கே வந்து விடுகிறோம் என்று உத்தரவாதம் கொடுத்தாள்.
ஆழியனுக்கும் தந்தையின் இந்த இளக்கத்தில் மனம் இளகியது தான். அவனுக்குமே வீட்டிற்கு வந்து விடலாமா என்று தோன்றாமல் இல்லை. ஆனால் மனைவியை மீண்டும் சமையற்கட்டில் அடைக்கவோ மற்றவர்களின் பேச்சுக்களை தாங்க வைக்கவோ துளியும் விருப்பம் இல்லை. இதை அவளிடத்தில் சொல்லியும் இருந்தான்.
“ப்ப்ச் அவ்வளவு பெரிய மனுஷன் கதறி அழும் போது பார்த்துட்டு நிற்க நானென்ன அகோரியா… அவருக்காக நான் தாராளமாக வர்றேன். ஆனா சில கன்டிஷன்ஸோட வர்றேன்”என்று சொல்லி விட்டாள்.
….. தொடரும்.
error: Content is protected !!