Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நின்னோடு தமியனாய்

நின்னோடு தமியனாய் 4

அத்தியாயம் 4

பிருந்தாவை ஒருவழியாக சமாதானப்படுத்திய பூபதி, நேராக குறிஞ்சி ஆண்டவர் கோவிலுக்கு அழைத்துச் சென்றான்.

மாலை நேரத்தின் மென்மையான குளிர் காற்று, மலைகளின் மண்வாசனையை காற்றின் மூலம் கூகல் முழுவதும் பரப்பியது.மேலும் கோவிலைச் சுற்றி வளர்ந்திருந்த நீலக்குறிஞ்சி செடிகள் காற்றில் மெதுவாக அசைந்தன. தூரத்தில் கோவிலின் மணி ஓசை ஒலித்தது, “ஓம் சரவணபவ…” என்ற மந்திர ஒலியும் அந்த மலை முழுவதும் எதிரொலித்தது.

காலணிகளை கழற்றி, இருவரும் மெதுவாக கர்ப்பகிரகத்தை நோக்கி நடந்தனர். பூபதியின் அருகில் நடந்தாலும், இன்னும் முகத்தைத் திருப்பியே வைத்திருந்தாள் பிருந்தா. அவளின் கோபம் இன்னமும் குறைய வில்லை என்பதை அவன் உணர்ந்தான்.



Advertisement

கர்ப்பகிரகத்தின் முன் நின்றதும், ஐயர் பூஜைத் தட்டை வாங்கிக் கொண்டு புன்னகையுடன்,”யார் பெயருக்கு அர்ச்சனை?” என்றார்.

ஒரு நொடி கூட யோசிக்காமல், “பிருந்தா… சிம்ம ராசி.” என்றான் பூபதி.

அவள் அவனை ஒரு கணம் திரும்பிப் பார்த்தாள். அந்த பார்வையில் இன்னும் சிறு கோபமும், அதைவிட அதிகமான உரிமையும் தெரிந்தது.

Advertisement

அர்ச்சனை முடிந்ததும், ஐயர்,”வேறு யாருக்காவது?” என கேட்டார்.

Advertisement

“இல்லங்க…” என பூபதி சொல்லப் போக,

அவசரமாக,”பூபதி… தனுசு ராசி. அவருக்கும் சேர்த்து அர்ச்சனை பண்ணுங்க.” என்றாள் பிருந்தா.

பூபதி அவளைப் பார்த்து மெல்ல சிரித்தான்.

Advertisement

“என்மேல கோபம் இருந்தாலும்… சாமி முன்னாடி  கூட என்னை விட்டுக் கொடுக்க மனசு வரலையா?”என அவளிடம் மெல்ல கேட்க…

மீண்டும் ஒரு முறைப்பு பரிசாக கிடைத்தது.

ஐயர் தீபாராதனை காட்டி மணி அடிக்க, இருவரும் கண்களை மூடினர்.

அந்த சில நொடிகளில்… அவர்களின் உலகமே நின்று போனது.ஒருவர் உலகில் மற்றவர் நலன் முன்னதாக நின்றது.

கண்களை மூடியபடி பிருந்தா மனதிற்குள் வேண்டினாள்.”முருகா… இன்னைக்கு போலவே எப்பவும் எங்க இருவருக்குள்ளும் அன்பும், புரிதலும் குறையாமல் இருக்கட்டும். எந்த சோதனை வந்தாலும், எங்க காதல் மட்டும் என்றும் மாறாமல் இருக்கனும்.”

அதே நேரத்தில் பூபதி வேண்டிக் கொண்டான்.முருகா!வாழ்க்கையோட ஏற்ற இறக்கத்திலும்,நல்லது கெட்டதுலையும், வெற்றி தோல்விலையும் நாங்க ஒருத்தரை ஒருத்தர் விட்டுக் கொடுத்துக்க கூடாது. அதற்கான மனப் பக்குவத்தை எங்களுக்கு கொடு”

மணி ஓசையோடு தீபத்தின் ஒளி அவர்கள் முகத்தில் விழுந்தது.

கண்களைத் திறந்த இருவருக்கும் ஐயர் விபூதியும், குங்குமமும் கொடுத்தார். இருவரும் அதை வாங்கி தங்கள் நெற்றியில் வைத்துக் கொண்டனர்.

பின் பிரகாரத்தை அமைதியாகச் சுற்றி வந்த இருவரும், கோவில் படிக்கட்டில் அருகருகே அமர்ந்தனர்.

மலைக்காற்று அவளது மல்லிகைப்பூவை வருடிச் செல்ல, அதன் மணம் பூபதியை வந்து தொட்டது.சிறிது நேரம் இருவரும் எதுவும் பேசவில்லை.

அந்த அமைதியைக் கலைத்தான் பூபதி.

“சாமிகிட்ட என்ன வேண்டிக்கிட்டே?”

பிருந்தா அவனைப் பார்த்து சிரித்தபடியே….” வேண்டுதலை வெளியே சொல்லக் கூடாது.” என்றாள்.

“ஏன்?”

“சொன்னா பலிக்காதுன்னு சொல்வாங்க.”

பூபதி குறும்பாக புருவத்தை உயர்த்தி,”அப்படின்னா… எனக்காகத்தான் வேண்டிக்கிட்டேன்னு ஒத்துக்க வேண்டியதுதானே?”

பிருந்தா சிரிப்பை அடக்கிக் கொண்டு,
“அப்படி எல்லா ஒன்னு இல்ல”என்றாள்.

“சரி… நானே நீ என்ன வேண்டுனேனு  சொல்லட்டுமா?”

“என்ன?”

“இந்த ஜென்மம் மட்டும் இல்ல… எல்லா ஜென்மத்திலும் இந்த தொல்லையை எனக்கே கொடுத்துரு முருகா- னு தானே வேண்டிக்கிட்டே.”

“ரொம்ப ஓவரா பேசுறே!”என அவள் அவன் தோளில் மெதுவாக அடித்தாள்.

“உண்மையைத்தானே சொல்றேன்…” என்று அவன் சிரிக்க, அவளும் அதுவரை அடக்கி வைத்திருந்த சிரிப்பை வெளிக் காட்டி… சிரித்துவிட்டாள்.

அந்தச் சிரிப்பைப் பார்த்த பூபதி நிம்மதியாக மூச்சை விட்டான்.

“அப்பாடா… ஒரு வழியா என் ருத்ரகாளி பழைய பிருந்தாவா மாறிட்டா…” என சொல்ல மீண்டும் அவனை அடிக்க….

அவளின் இரண்டு கைகளையும் பிடித்தபடி,”இங்க பாரு குங்குமம் அழிஞ்சிடுச்சு” என அவள் நெற்றியில் கலைந்திருந்த குங்குமத்தை சரி செய்தான்.

குறிஞ்சி ஆண்டவர் கோவிலில் இருந்து வெளியே வந்ததும், “இன்னும் ஒரு இடத்துக்கு போகணும்…” என்று மட்டும் சொல்லிவிட்டு புல்லட்டை ஏரிக்கரையை நோக்கி செலுத்தினான்.

மாலை மெல்ல மெல்ல இரவாக மாறிக் கொண்டிருந்தது. வானம் முழுவதும் நட்சத்திரங்கள் மின்னத் தொடங்கியிருந்தன. ஏரியின் நீரில் நிலவொளி வெள்ளித் துண்டுகளைச் சிதறவிட்டது போல ஜொலித்தது.

வண்டியில் இருந்து இறங்கிய பிருந்தா, அந்தக் காட்சியைப் பார்த்து ஒரு நொடி அப்படியே நின்றுவிட்டாள்.

ஏரிக்கரையின் ஓரத்தில் சிறிய மரமேசை ஒன்று. அதைச் சுற்றி நூற்றுக்கணக்கான மெழுகுவர்த்திகள் வட்டமாக ஏற்றப்பட்டிருந்தன. சிவப்பு, வெள்ளை ரோஜா இதழ்கள் தரை முழுவதும் தூவப்பட்டிருந்தன.

அந்த வட்டத்தின் நடுவில் வெள்ளை நிற கேக். அதில் “ஹேப்பி பர்த்டே மை டியர் டாக்டர்”என அழகாக எழுதப்பட்டிருந்தது.

கண்களில் ஆச்சரியம் மிளிர, மெதுவாக பூபதியைப் பார்த்தாள்.”காலைலே அவ்வளவு நேரம் உன்னை காக்க வெச்சதுக்கு காரணம்  இதுதான்… பிடிச்சிருக்கா?” என்று தயக்கமாகக் கேட்டான்.

அவளின் கண்கள் மெதுவாகக் கலங்கின.”உன்னே…” என அவன் மார்பில் மெதுவாக ஒரு அடி வைத்தாள்.

“கேக் கட் பண்ணலாமா?” என்றான்.

அவனை பார்த்துக் கொண்டே, ‘சரி’ என தலையை மட்டும் ஆட்டினாள்.

பின் இருவரும் சேர்ந்து கேக்கை வெட்டினர்.

பிருந்தா முதல் துண்டை அவனுக்கு ஊட்ட, பூபதி அதில் பாதியை கடித்துவிட்டு, மீதியை அவளுக்கு ஊட்டினான்.

குளிர்ந்த காற்று வீசியது.ஏரியின் அலைகள் மெதுவாக கரையைத் தொட்டன.சில நொடிகள் இருவரும் அமைதியாக அந்த இரவை ரசித்தனர்.

பூபதி மெதுவாக தனது வலது கையை அவள் முன்னே நீட்டினான்.

“பிருந்தா…”

“ம்…”

“இன்னைக்கு கோவில்ல முருகன் முன்னாடி என்ன வேண்டிக்கிட்டேன் தெரியுமா?.”

“என்ன வேண்டிக்கிட்டே?”

“வாழ்க்கையில எவ்வளவு கஷ்டம் வந்தாலும்… எவ்வளவு சந்தோஷம் வந்தாலும்… நாம ஒருத்தர் ஒருத்தர் விட்டுக் கொடுத்து போகனும்னு. பிரிவுகறே ஒன்னு நம்ம வாழ்க்கையில வரக் கூடாதுனு”

அவளது விழிகள் அவன் விழிகளைச் சந்தித்தன.”நானும் அதைத்தான் வேண்டிக்கிட்டேன்…” என்றாள் மெல்ல.

பூபதி தன் சுண்டுவிரலை அவள் பக்கம் நீட்டி,”அப்போ… ஒரு ப்ராமிஸ்?”என கேட்டான்.

“என்ன ப்ராமிஸ்?”

“எந்த சூழ்நிலையிலும்… கோபம் வந்தாலும்… தவறு நடந்தாலும்… உலகமே எதிர்த்தாலும்… ‘பிரிஞ்சிடலாம்’ன்னு மட்டும் ரெண்டு பேரும் யோசிக்க கூட கூடாது.”

பிருந்தா ஒரு கணம் அவனைப் பார்த்தாள்.

பிறகு தன் சுண்டுவிரலை அவனுடைய சுண்டுவிரலோடு கோர்த்தாள்.

“நானும் ஒரு கண்டிஷன் சொல்றே…”

“சொல்லு…”

“நமக்குள்ள எந்த பிரச்சனை வந்தாலும்… மூனாவது ஆளுக்குத் தெரியறதுக்கு முன்னாடி…நாம ரெண்டு பேருமே உட்கார்ந்து பேசித் தீர்க்கணும்.”

“ப்ராமிஸ்.”

“ப்ராமிஸ்.”

இருவரும் சுண்டுவிரல்களை இணைத்து உறுதி செய்தனர்.

அடுத்த நொடி…

பூபதி அவள் நெற்றியில் மெதுவாக முத்தமிட்டவாறு,”இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மிஸஸ். பூபதி”என்றான்

அவன் வார்த்தைகளை கேட்டு வெட்கத்தில் சிவந்த பிருந்தா, அவன் தோளில் சாய்ந்தாள்.

அவர்களுக்கு முன் அமைதியாக விரிந்திருந்த ஏரியும், மேலே மின்னிய நட்சத்திரங்களும், அந்தக் காதல் உறுதிக்கு சாட்சியாக நின்றன.

நினைவுகளிலிருந்து மீண்டு நிகழ்காலத்திற்கு வந்த பூபதி, கோவிலை நோக்கி காரை ஓட்டிக் கொண்டிருந்தான்.

சில நொடிகள் அமைதியாக காரை ஓட்டியவன், திடீரென…”ச்ச்ரீக்…”என்று சாலை முழுவதும் அதிரும் அளவிற்கு பிரேக் பிடித்தான்.

எதிர்பாராத அதிர்ச்சியில், முன்பக்க இருக்கையில் அமர்ந்திருந்த மூர்த்தியும் பின் சீட்டில் அமர்ந்திருந்த ஜோதியும்,  முன்னால் சாய்ந்து, இருக்கையை இறுகப் பற்றிக் கொண்டனர்.

“என்னப்பா?” என்று பதறியபடி கேட்ட மூர்த்தி, முன் கண்ணாடி வழியாக எட்டிப் பார்த்தார்.

சாலையின் நடுவே, ஒரு பசுமாடு தன் கன்றுக்குட்டிக்கு பால் கொடுத்துக் கொண்டிருந்தது.

கன்று அவசரமாக தாயின் மடியை முட்டி முட்டி பால் அருந்திக் கொண்டிருக்க… தாய் மாடும் அசையாமல், தன் குட்டியை பாசமாக பார்த்துக் கொண்டிருந்தது.

அந்தக் காட்சியைப் பார்த்த பூபதியின் உதடுகளில் மென்மையான புன்னகை மலர்ந்தது.

காரின் இன்ஜினை அணைத்துவிட்டு, ஸ்டீயரிங்கில் சாய்ந்தபடி அந்தக் காட்சியை அமைதியாக ரசித்தான்.

மூர்த்தி கடிகாரத்தைப் பார்த்துவிட்டு,
“பூபதி… ஹார்ன் அடிப்பா. நமக்கு முகூர்த்தத்துக்கு நேரமாச்சு.”என்றார் அவசரமாக.

பூபதி மெதுவாக” ஹார்ன் அடிக்க போவதில்லை” என்றவாறு தலையசைத்தான்.

“இருங்க சார்… இன்னும் இரண்டு நிமிஷம் வெயிட் பண்ணலாம்.”

“ஏன்ப்பா?”

“பசிச்ச குழந்தை சாப்பிடுறப்போ தொந்தரவு பண்ணக் கூடாது. அது மனுஷக் குழந்தையா இருந்தாலும் சரி… இந்தக் கன்றுக்குட்டியா இருந்தாலும் சரி.”

அவன் சொன்ன வார்த்தைகளில் இருந்த மென்மை, ஜோதியையும் மூர்த்தியையும் அமைதியாக்கியது.

சில நொடிகளில், அருகிலிருந்த தேயிலைத் தோட்டத்திலிருந்து ஓடி வந்த வயதான ஒருவர்,”அய்யோ… ரோட்டுக்கு வந்துட்டீங்களா?” என்று சொல்லிக்கொண்டே மாட்டையும் கன்றையும் மெதுவாக ஓட்டிச் சென்றார்.

அவர்கள் சாலையை விட்டு விலகியதும், பூபதி மீண்டும் காரை ஸ்டார்ட் செய்தான்.கார் மெதுவாக முன்னே நகர்ந்தது.

ஜன்னல் வழியே அந்தப் பசுமாட்டை இன்னொரு முறை திரும்பிப் பார்த்தவன், தன்னையும் அறியாமல் புன்னகைத்தான்.

“பசிக்கு முன்னாடி… எல்லா அவசரமும் கொஞ்ச நேரம் காத்திருக்கத்தான் செய்யணும்…” என்று மெதுவாக முணுமுணுத்தபடி ஆக்ஸிலேட்டரை அழுத்தினான்.

வழக்கமாக சந்திக்கும் பார்க்கிற்கு வந்து சேர்ந்தாள் பிருந்தா.

நீலக்குறிஞ்சி மரத்தடியில் இருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தாள்.

மாலைத் தென்றல் அவளது முகத்தை வருடிச் சென்றது. மரத்திலிருந்து உதிர்ந்த குறிஞ்சி மலர்கள் அவளது மடியில் விழுந்தன.

அவற்றை விரல்களால் வருடியபடியே, வெறுமனே ,பார்க்கை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

வழக்கம் போல இந்த முறையும் பூபதி வர தாமதமாக அவன் மேல் கோபம்தான் இருந்தும்…”நான் ஏன் அவனை இவ்வளவு நேசிக்கிறேன்?”என்ற கேள்வி அவள் மனதிற்குள் எழுந்தது.

அடுத்த நொடியே…

அவளது நினைவுகள் பல ஆண்டுகள் பின்னோக்கி ஓடின.

அப்போது அவள் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை முடித்துவிட்டு, தேர்வு முடிவுக்காக ஆவலுடன் காத்திருந்தாள்.

வழக்கம்போல் உயிர்த்தோழி ஐஸ்வர்யாவைப் பார்க்க அவள் வீட்டிற்குச் செல்ல…

அவளோ”ஒரு பத்து நிமிஷம் பிருந்தா… ஃபேக்டரிக்குப் போய் அப்பாகிட்ட பாக்கெட் மணி வாங்கிட்டு வந்துடலாம்…” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றவள், எப்போதும் போல கிளம்புவதற்கு தாமதம் செய்து கொண்டிருந்தாள்.பின் ஒருவழியாக பேக்டரி வந்து சேர்ந்தனர்.

“நீ ஆபீஸ்ல வெயிட் பண்ணு பிருந்தா… நான் அப்பாகிட்ட காசு வாங்கிட்டு இப்பவே வந்துடறேன்…” எனச் சொல்லி உள்ளே சென்றாள்.

பிருந்தாவும் விவி நேஷனல் லெதர் ஃபேக்டரியின் அலுவலக அறைக்குள் சென்று அமர்ந்தாள்.

அந்த அறை முழுவதும் தோலின் மெல்லிய மணமும், புதிதாக தயாரிக்கப்பட்ட கோப்புகளின் வாசனையும் கலந்திருந்தது.

அவள் எதிரே இருந்த சுவரில் பெரிய கடிகாரம் ஒன்று மட்டும் “டிக்… டிக்…” என்று ஓடிக் கொண்டிருந்தது.

அந்த அமைதியை உடைத்து கதவை மெதுவாகத் திறந்து உள்ளே வந்தான்…
பூபதி.

வெள்ளை நிற டி-ஷர்ட்…அடர்நீல நிற ஷார்ட்ஸ்…கழுத்தில் மெல்லிய தங்கச் செயின்…நேர்த்தியாக வெட்டப்பட்ட முடி…

முகத்தில் எந்த விதமான பாவனையும் இல்லாமல், இயல்பாக வந்து பிருந்தா எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்தான்.
–தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!