Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நின் விழிகளில் கண்டேன் நேசம்

நின் விழிகளில் கண்டேன் நேசம் – 03

“ஸ்ரீ..” என அறைக்குள்ளிருந்து இரண்டாவது தடவையாக குரல் கொடுத்துப் பார்த்தாள் தமயந்தி.



Advertisement

இன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் வழமை போல் இருவருமாக எங்காவது வெளியே சென்று ஒன்றாக நேரம் செலவு செய்து விட்டு வரலாம் என்று மகளை அழைத்தும் அரைமணி நேரமாகி விட்டது.

Advertisement

வேறு நாட்களாக இருப்பின், தான் அழைக்கவில்லை என்றாலும் அவளாகவே வந்து எங்காவது சென்று விட்டு வரலாம் எனக் கெஞ்சும் போது, இன்று தானே அழைத்தும் கூட கண்டு கொள்ளாமல் இருக்கிறாளே என மனக் கவலை கொண்டவள் கட்டியிருந்த சேலையின் ப்ளீட்ஸை சரி செய்தபடி ஹாலுக்கு வந்தாள்.

Advertisement

ஐந்தரை அடி உயரத்தைக் கொண்டவளின் தழைத்த கருங்கூந்தல் முழங்காலைத் தொடும் அளவுக்கு நீண்டிருக்கும். அதை அழகாகப் பின்னி, பின்னர் கொண்டையிட்டு இருந்தாள்.

Advertisement

அழகாக, மிக நேர்த்தியாக கட்டப்பட்டிருந்த சேலையின் இளசிவப்பு நிறம், செயற்கை நிறப்பூச்சுகள் இடைப்படாத அவளது பூவிதழ்களின் வண்ணத்தை ஒத்திருந்தது.

மணிக்கட்டில் கைகடிகாரத்தைக் கட்டியபடி, மகளை அழைக்க வாய் திறந்தவளின் செவிப்பறையில் வந்து மோதியது ஸ்ரீயின் குரல்.

யாரிடமோ உரையாடிக் கொண்டிருந்தவளின் குரல் மிகத் தாழ்ந்து, கிசுகிசுப்பாக ஒலிப்பதை கேட்டு நின்ற இடத்திநின்று நகராமல் புருவம் நெறிய, அவளது பேச்சுக்குக் காது கொடுத்தாள் தமயந்தி.

“அப்போ நீ நாளைக்கு ஸ்கூல் வர மாட்டியாடி? ப்ளீஸ் வாயேன்..” எனக் கெஞ்சும் குரல் ஸ்ரீயின் தோழி கீர்த்தி உடையது என்பதை சரியாகவே கண்டு கொண்ட தமயந்தி..

“இல்ல கீர்த்தி! நான் வரல.. உனக்கு கணக்குல ஏதோ டவுட்ஸ் இருக்குனு சொன்னேல? அந்த ஃபார்முலா என்னனு நான் சொல்லி தர்றேன் வா..” என்று ஸ்ரீ கூறியதைக் கேட்டதும்,

‘ஏன் நாளைக்கு ஸ்கூல் வர மாட்டேன்னு சொல்லுறா?’ என யோசித்தாள்.

அவளது யோசனைக்கு முற்றுப்புள்ளி வைப்பது போல், “ஏன் வர மாட்டேன்னு சொல்றே ஸ்ரீ? அந்த கணக்கு வாத்தி உன்னைத் திரும்பவும் திட்டும்னு பயப்படறியா?” என்று சோகமாக வினவினாள் கீர்த்தி.

“எக்ஸாம்ல ஃபர்ஸ்ட் மார்க்கு வாங்கின சந்தோசமே போச்சு கீர்த்தி, கணக்கு வாத்தியால.. அதான் நான் முடியாதுனு சொல்லுறேன்ல? அப்பறம் ஏன் அவரு நீ போய் தான் ஆகணும்னு என்னை போர்ஸ் பண்ணனும்? அதுவுமில்லாம எல்லார் முன்னாடியும் அசிங்கப்படுத்தவும் செய்றாரு..” என்ற ஸ்ரீயின் குரல் கரகரத்து ஒலிப்பதை வைத்தே அவள் அழுகிறாள் எனப் புரிந்து கொண்ட தமயந்தியின் மனம் பலவீனமாகத் துடித்தது.

“ஆனா நீ ஏன் போக மாட்டேன்னு சொல்றே ஸ்ரீ? உனக்கு தான் ஸ்கூல் காம்பெடிஷன்ஸ்ல கலந்துக்க ரொம்ப ஆர்வம் இருக்குமே..”

“ப்ச்! ரீசன்லாம் கேட்காத.. எனக்கு பிடிக்கல, அவ்ளோ தான்..” என அத்துடன் அந்தப் பேச்சைக் கத்தரித்தவளின் குரலில் உறுதி தொனித்தது.

தன்னை தோழியிடம் விட்டுக் கொடுக்காமல் பேசிய மகளை நினைத்தவாறு அங்கிருந்து சத்தமின்றி நகர்ந்தவளுக்கு நெஞ்சம் வலித்தது. சேனையொன்று இதயத்துக்கு மேலால் படையெடுத்து செல்கிறதோ என சந்தேகிக்கும் அளவுக்கு இதயம் கனத்தது.

“ஐம் சாரி ஸ்ரீகுட்டி!” என துக்கத்தில் தொண்டை அடைக்க முணுமுணுத்த தமயந்தி அறைக்குள் வந்து, “ஸ்ரீ..” என்று அழைத்தாள், முன்பை விட சற்று சத்தமாக!

“வந்துட்டேன் அம்மா..” என்றவளின் குரல் தமயந்தியை வந்தடைய முன்னரே மூச்சிறைக்க ஓடி வந்த ஸ்ரீ,

“கூப்பிட்டீங்களா?” என்று கேட்க, மகளின் தலையை ஆதூரத்துடன் வருடிக் கொடுத்தாள் தமயந்தி.

“அம்மா லேட் ஆகுது. சீக்கிரம் போகலாம் வாங்க! இல்லைனா உங்களோட டைம் ஸ்பென்ட் பண்ணுறதுக்கு இன்னுமொரு வாரம் வெயிட் பண்ணனும் நான்..” எனப் பரபரத்தவள்,

“கீர்த்தி வந்திருந்தா அம்மா.. ஏதோ டவுட்ஸ் இருக்காம். அதைக் கிளியர் பண்ணிட்டு போக!” என்றாள்.

“அப்படியா.. எங்கே அவ?”

“இப்போ தான் கிளம்பினா.. நீங்க வாங்க, போவோம்!” என தமயந்தியின் கைப்பற்றி இழுத்துக் கொண்டு அங்கிருந்து ஓட்டமும் நடையுமாக வீட்டை விட்டு வெளியே வந்தாள் ஸ்ரீ.

கடற்கரை, பூந்தோட்டம், தியேட்டர் என எல்லா இடமும் சுற்றி விட்டு இருவரும் வீட்டை அடையும் போது நன்றாகவே இருட்டி விட்டிருந்தது.

வந்ததும் மதிய வேளையில், இரவுக்குமாய் சேர்த்து சமைத்து வைத்த உணவை சூடு காட்டி தானும் உண்டு, ஸ்ரீயையும் சாப்பிட வைத்தவள் சுத்தமாகிக் கொண்டு கட்டிலில் விழும் போது, கூரை விட்டத்தை வெறித்தவாறு எதையோ யோசித்துக் கொண்டிருந்த ஸ்ரீ,

“அம்மா..” என்று அழைத்தாள், ஒரு மாதிரியான குரலில்.

“என்னடா ஸ்ரீகுட்டி?” என்று கேட்டவள் அவிழ்ந்திருந்த கூந்தலை அள்ளிக் கொண்டையிட்டவாறே, “என்னாச்சு? ஏன் உன் ஃபேஸ் இவ்ளோ டல்லாருக்கு?” என்று கேட்டாள் சந்தேகமாக!

“முதல்ல இப்படி படுத்துக்கோங்க. அப்பறம் சொல்லுறேன்!”

போர்வையால் மேனியை முழுவதுமாக போர்த்திக் கொண்டு தலையணையில் தலை சாய்த்த தமயந்தி, விளக்கை அணைத்து விட்டு மகளின் முகம் நோக்கினாள்.

சாரளம் வழியாக கசிந்து வந்த நிலவொளியின் வெளிச்சத்தில் தெரிந்த ஸ்ரீயின் முகம், அவளுக்கு தன் இதயத்தைத் திருடிச் சென்ற கள்வனை நினைவூட்டியது.

நெடு மூச்செறிந்து தன் நினைவை புறந்தள்ள முனைந்தபடியே, “என்ன ஸ்ரீகுட்டி?” என்று கேட்டாள் அன்னையவள்.

“அம்மா.. அது வந்து..” எனத் தயங்கி நிறுத்தியவள், “இன்னைக்கு பார்க் போனோம் இல்ல? அங்க ஒரு ஆன்ட்டி அவங்களோட பிரண்ட் கிட்ட பேசிட்டு இருந்ததைக் கேட்டிங்களா?” என்று வினவினாள்.

“என்ன பேசிட்டு இருந்தாங்க?”

“அப்போ அவங்களோட உரையாடல் கேட்கலையா அம்மா, உங்களுக்கு?”

“என்ன பேசுறே ஸ்ரீ? நான் எதுக்கு தெரியாதவங்களோட உரையாடலுக்கு செவி சாய்க்கனும்.. மேபி, அது அவங்களோட பர்சனலா கூட இருக்கலாம்ல? பின்ன எதுக்கு..” என எரிச்சல் பட்டாள் தமயந்தி.

தன்னுடைய வாழ்க்கைக்குள் நிறைந்திருக்கும் தீர்வு காணப்படாத பிரச்சனைகளும், குணப்படுத்த முடியா வலிகளும் ஏராளம் என்றிருக்கும் போது மற்றவர்களின் உரையாடலை வேறு செவியேற்க தனக்கு எங்கே நேரமிருக்கிறது என கடுப்பாகிப் போனாள்.

“அதில்ல.. இது வேற அம்மா!”

“என்ன?”

“அது.. அந்த ஆன்ட்டி என்ன சொன்னாங்கன்னா, அவங்களுக்கு ஒரே ஒரு பொண்ணு தானாம். நாள் முழுக்க அந்த பொண்ணு அவங்க கூடவே இருந்தாலும், அப்பா ஆபீஸ் விட்டு வந்ததும் அவங்களைக் கொஞ்சமும் கண்டுக்காம விட்டிருவாளாம்னு சொன்னவ.. பொம்பள புள்ளையாச்சே! அப்பா கூட தான் ரொம்ப கிளோஸா பழகும்.. ஒவ்வொரு பொம்பள புள்ளைக்கும் அவங்களோட லைஃப்ல அப்பாங்குறது ரொம்ப முக்கியமான ஒருத்தன் இல்லையானு பேசிக்கிட்டாங்க.

அவங்க பேசிக்கிட்ட மாதிரி உண்மையாவே பொம்பள புள்ளைங்களுக்கு அப்பாவைத் தான் ரொம்ப புடிக்குமா அம்மா?

அப்பாங்குறது பொண்ணுங்க வாழ்க்கைல மிக முக்கியமான ஒருத்தர்னு அவங்க ஏன் சொன்னாங்க? எனக்கு புரியவே இல்ல அம்மா..

எனக்கு இதுநாள் வரைக்கும் உங்களைத் தவிர வேற யாருமே முக்கியம்னு தோணல. அப்பாவைப் பார்க்கணும்னு ஆசை இருக்கே தவிர, அவர் மேல நிறைய கோபமிருக்கு. என்னைப் பார்த்துக்க நீங்களாவது இருக்கீங்க. ஆனா உங்களைப் பார்த்துக்க? தனியா உங்களைத் தவிக்க விட்டது ஏன்னு கண்டிப்பா ஒருநாள் அவர் கிட்ட கேள்வி கேட்பேன் அம்மா..”

‘அந்த ஒருநாள் வரவே வராது ஸ்ரீகுட்டி..’ என்று மனதினுள் விரக்தியாய் நினைத்துக் கொண்ட தமயந்தி, ஏதோ கூற வாயெடுத்த நேரத்தில்..

“அவங்களோட உரையாடல்ல எந்த உண்மைத் தன்மையும் இல்லையோனு தோணுதும்மா..” என்றாள் சோர்ந்த குரலில்.

கீழுதட்டைக் கடித்து விடுவித்த தமயந்தி, “இந்த கேள்விக்கான பதிலை நீ என்கிட்ட எதிர்பார்க்காத ஸ்ரீ. ஏன்னா அப்பா பாசத்தை நானும் கூட உணர்ந்ததில்ல..” என்றாள் உட்சென்ற குரலில்.

“ஆனா ஒன்னு! அப்பாங்குற உறவு என்னைக்கும் ரொம்ப வித்தியாசமானது. ஸ்பெஷலானது. அந்த ஆன்ட்டி சொன்னாப்ல பொம்பள புள்ளைங்க லைஃப்ல அப்பாங்குற கேரக்டர் கொஞ்சம் முக்கியமானது தான் ஸ்ரீகுட்டி.

தன்னை இந்த உலகத்துலயே ஏமாத்தாத ஒரே ஒரு ஆண் அப்பா தான்ங்குற நம்பிக்கை அசாத்தியமானது. அவளோட ஹீரோவா, ஃபர்ஸ்ட் லவரா, அவளுக்கு ரொம்ப புடிச்ச ஒருத்தரா அப்பாவைத் தவிர வேற யாருமே இருக்க வாய்ப்பில்லை..”

ஸ்ரீக்கு கண்கள் கலங்கியது.

தமயந்தியின் அணைப்பிற்குள் தன்னை சுருட்டிக் கொண்டவள், “அப்போ ஏன் எனக்கு மட்டும் கடவுள் அந்த வரத்தை தரல அம்மா?” என்று முனகலாகக் கேட்டாள்.

சுருக்கென்று நெஞ்சில் முள் தைத்த வலியை உணர்ந்தாள் தமயந்தி.

மகளின் ஆசைகளுக்கு தன் சுயநலத்தால் எல்லை விதித்தாயிற்று! அவளது உரிமைகளைப் பறித்து ஏக்கங்களையும், தவிப்பையும் அவளுக்கு பரிசாகக் கொடுத்தாயிற்று! இன்னும் என்னென்ன செய்யப் போகிறாய் நீ எனக் கேலியாகக் கேலி தொடுத்த மனதுக்கு பதில் கூறத் தெரியாமல் அமைதியாகிப் போன தமயந்தியின் இதழ்களோ,

“அந்த வரத்தைக் கடவுள் கொடுத்ததும் நான் தான் பிடிவாதமா வேணாம்னு வாங்கிக்க மறுத்துட்டேன் ஸ்ரீகுட்டி..” என சத்தமின்றி முணுமுணுத்தது.

வேதனையில் கண்கள் கரித்து, மூச்சு அடைத்தது காரிகைக்கு!

சந்தேகத்தைக் கேட்டு தன் உள்மன ஏக்கத்தையும், தவிப்பையும் தாய்க்கு கடத்திய அவளின் செல்ல மகளோ உறங்கிப் போய் விட, இரவின் வெகு நேரம் கழியும் வரைக்கும் தூக்கம் தொலைத்து யோசனையில் ஆழ்ந்து கிடந்தாள் தமயந்தி.

அவளின் தீராக் கவலைக்கான மருந்து எவ்விடம்.. யாரிடம் உள்ளதோ..

யார் கண்டது?

விடியும் தருணத்தில் உறங்கிப் போனவள் காலையிலே எழுந்து கொண்டாள். தலைக்குக் குளித்து விட்டு, ஈரம் சொட்டிய முடியை விரித்து விட்டுக் கொண்டு கண்ணாடி முன் வந்து நின்றவளுக்கு..

“கூந்தலை விரிச்சு விட்டா நீ ரொம்ப அழகா இருக்க தமா..” எனக் காதருகே தன்னவனின் குரல் கேட்பது போன்ற பிரமை.

தானாகவே தொலைத்துக் கொண்ட வாழ்வை நினைத்து கவலைப்படுவதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை எனப் புரிந்து வைத்திருந்தவளிடம் இருந்து பெருமூச்சு ஒன்று வெளிப்பட்டது.

தூங்கிக் கொண்டிருந்த மகளின் கன்னம் வழித்து முத்தமிட்டவள் கலங்கித் ததும்பிய கண்களோடு சமையலறைக்குள் புகுந்து கொண்டாள்.

தனக்குள்ளே யோசனையில் சுழன்றபடி பத்து நிமிடங்களில் எளிமையாக உப்புமா செய்து எடுத்தவள் சுவற்றில் தொங்கிய கடிகாரத்தைப் பார்த்து விட்டு, “ஸ்ரீகுட்டி..” என்று சத்தம் வைத்தவாறு அறைக்குள் நுழைந்தாள்.

அழகாக உறங்கிக் கொண்டிருந்தவளைப் பார்க்கும் போது தமயந்தியின் இதழ்கள் தானாகவே விரிந்தன. தன் நேசத்துக்குறியவனின் நினைவுகள் என்று அவளிடம் இருப்பது அழகிய நாட்கள் சிலவும், ஸ்ரீயும் மட்டுமே!

சுண்டினால் இரத்தம் வந்து விடுமோ எனும் அளவுக்கு சிவந்து போய் ரோஜா மொட்டென கண்ணுறங்கிக் கொண்டிருந்தவளை நாள் முழுதும் ரசித்துக் கொண்டிருக்கலாம் எனத் தோன்றியது அவளுக்கு.

நீ என் உயிர்த் துளி என்ற கர்வத்தோடு மனம் திறந்து புன்னகைத்தவள், “உனக்காக எதையும் தாங்கிக்கலாம் ஸ்ரீகுட்டி. என் வாழ்க்கையே நீதான்!” என்று முணுமுணுத்தபடி கட்டிலில் அமர்ந்து மகளைத் தட்டி எழுப்ப முயற்சித்தாள்.

வேறு தினங்களில் ஓரிரு அழைப்புகளிலே தூக்கம் கலைந்து எழுந்து விடுபவள் இன்று அரைமணி நேரமாய் எழுப்பியும் அசையாமல் உறங்கிக் கொண்டிருப்பது சந்தேகத்தை வரவழைத்தது அவளுக்கு.

கூடவே, ‘நாளைக்கு நான் ஸ்கூல் வர மாட்டேன்..’ என கீர்த்தியிடம் உறுதி தொனிக்க ஸ்ரீ நேற்றே கூறி வைத்தது வேறு சட்டென்று நினைவில் உதிக்க, துணுக்குற்று நிமிர்ந்தவளின் பார்வை மகளை ஆழமாக ஆராய்ந்தது.

கண்களுக்குள் கருமணி அசைவதை உற்றுக் கவனித்தவளுக்கு மகளின் கள்ளத்தனம் தெரிந்து விட.. கோபத்துக்கு பதிலாக சிரிப்பு தான் வந்தது.

கடினப்பட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டவள் குரலில் கடுமையை சேர்த்து, “ஸ்ரீ, இப்போ எழ போறியா இல்லையா?” என்று கேட்டது தான் தாமதம்! தாயின் குரல் மாற்றம் உணர்ந்து பட்டென்று கண்களைத் திறந்தாள் ஸ்ரீ.

அவளை மூக்கு முட்ட முறைத்த தமயந்தி, “எவ்ளோ நேரமா உன்னைக் கூப்பிட்டுக்கிட்டு இருக்கேன்.. இப்போ பாரு. ரொம்ப லேட்டாச்சு. ஸ்கூல் போகணும் இல்லையா?” என அதட்டினாள்.

பேயறைந்தது போல் அன்னையைப் பார்த்திருந்த ஸ்ரீ, தெளிந்து, “ஆவ்ச்! என் வயித்துக்க வலிக்குதும்மா..” என முகபாவனைகளை மாற்றி தன் நாடகத்தின் முதல் அடியை எடுத்து வைத்தாள்.

கணக்கு வாத்தியாரிடம் திட்டு வாங்கவும், அவரிடம் பேச்சு வளர்த்து முறைப்பையோ அடியையோ வாங்கிக் கொள்ளவும் தெம்பில்லை என்றபடியால் இன்று ஸ்கூலுக்கு போகவே மாட்டேன் என்பதில் உறுதியாக இருந்தாள்.

மகளை உறுத்து விழித்தவள் தன் பாட்டில் கட்டிலை விட்டு எழுந்து சூட்கேஸில் தனக்கும், மகளுக்குமாய் ஓரிரு உடைகளை அடுக்கத் தொடங்கி விட, தன் நடிப்பை ஒருபுறம் தள்ளி வைத்து விட்டு சட்டென்று கட்டிலை விட்டுத் துள்ளி எழுந்தாள் ஸ்ரீ.

“அம்மா..”

“இப்போ அந்த வ..யித்.து வ..லி எங்கே போச்சு ஸ்ரீகுட்டி?”

பதில் கூறத் தெரியாமல் தலை குனிந்தவள், “எங்க போக போறோம்?” என வாய் வரை வந்த வார்த்தைகளை உதிர்க்கத் தயங்கி அமைதி காக்க, அவளை நிமிர்ந்து பார்த்த தமயந்தி, “போய் ரெடியாகு ஸ்ரீகுட்டி..” என்றாள் புன்னகை முகமாய்!

“எங்கே போக போறோம் அம்மா?” என்று கேட்டாள் எதுவும் புரியாமல்.

“சென்னைக்கு..”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!