Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorizedநின் விழிகளில் கண்டேன் நேசம்

நின் விழிகளில் கண்டேன் நேசம் – 02



Advertisement

சூரியக் கதிர்கள் முகத்தில் பட்டு கண்களைக் கூசச் செய்ததும், கொட்டாவி விட்டு சோம்பல் முறித்தவாறே விழி மலர்ந்தாள் ஸ்ரீ.

தேநீர் கப்புடன் ஜன்னல் நிலைப்படியில் சாய்ந்து நின்றபடி இயற்கையை வெறித்துக் கொண்டிருந்த தாயைக் கண்டதும் உட்சாகம் வரப் பெற்றவள், காலை வாழ்த்துச் சொல்லவென வாய் திறந்த போது தான், தமயந்தி அடிக்கடி கன்னங்களைப் புறங்கையால் துடைத்து விட்டுக் கொள்வது தெரிந்தது அவளுக்கு.

Advertisement

Advertisement

அன்னையின் கண்ணீர் கண்டு, சிறியவளின் உட்சாகம் வடிந்து மனம் கனத்தது.

‘ஐம் சாரி அம்மா. என்னால தான் நீங்க அழுதுட்டு இருக்கீங்க..’ எனத் தன் மீதே குற்றம் சுமத்திக் கொண்டவள் சத்தம் எழுப்பாமல் மெல்ல எழுந்து சென்று தாயைப் பின்னிருந்து கட்டிக் கொண்டாள்.

Advertisement

“குட் மார்னிங் ஸ்ரீகுட்டி.” என்றவளின் குரல் வேதனையில் கரகரத்தது. அவசரமாக தொண்டை செருமி குரலை சரிப்படுத்திக் கொண்டவள் ஏதோ கூற வாயெடுக்க..

“நாம சென்னைக்கு போகவே வேணாம் அம்மா. இந்த போட்டி இல்லைனா என்ன.. என்னோட படிப்பறிவு மொத்தமாவே இல்லாம போய்டுமா.. இன்னொரு வாய்ப்பு எனக்கு கிடைக்காமலா போகும்?” என்று கேட்டாள் ஸ்ரீ.

அவளின் விழிநீர் தமயந்தியின் முதுகை நனைத்தது.

பதறிப் போனவள், “ஸ்ரீகுட்டி” என்ற அழைப்புடன் மகளின் மணிக்கட்டைப் பற்றி இழுத்து, தன் கண் பார்வைக்கு முன் நிறுத்தினாள்.

தவறு செய்த பள்ளி மாணவியாய் தலை குனிந்து நின்றவளின் தாடைத் தொட்டு நிமிர்த்தி, அவளது ஈரம் படிந்த கன்னங்களைத் துடைத்து விட்டவள், “நீ ஏண்டி அழறே?” என்று கேட்டாள் வலிய புன்னகைத்தபடி.

“ஏன்னா உங்க அழுகைக்கு நானே காரணம் ஆகிட்டேன்ல அம்மா?” என்று விசும்பலோடு கேட்டவளின் அன்பில் தாயுள்ளம் நெகிழ்ந்தது.

“ஐயோ என் செல்லம்! யாருடி உன்னால நான் அழுவுறேன்னு சொன்னா?” எனக் கொஞ்சலுடன் கேட்டு மகளை வாரி அணைத்த தமயந்தி,

“என் சுயநலத்துக்காக உன்னோட திறமையை என் காலுக்கு கீழ புதைக்க மனசு விட மாட்டேங்குது. அதுக்குனு என்னால சென்னைக்கு போகவும் முடியல ஸ்ரீகுட்டி. அதை நினைச்சு தான் மருகுறேன்.” என்றாள் தவிப்புடன்.

“ஏன் அம்மா அங்க போக முடியாதுங்குறிங்க?” நெடு நாளாக மனதை அரித்த கேள்வியை வாய் விட்டே கேட்டவள் தாயை தயக்கமாக ஏறிட்டாள்.

தமயந்தியிடமிருந்து ஒரு விரக்திச் சிரிப்பு வெளிப்பட்டது.

“நான் பிறந்தது எங்கேனு சொல்லத் தெரியாது. ஆனா வளர்ந்தது மொத்தமும் சென்னைல தான் ஸ்ரீகுட்டி. அந்த சென்னை எனக்குத் தந்த இனிமையான தருணங்களை விட.. கசப்பான, மறக்க முடியாத வேதனையான அனுபவங்கள் தான் அதிகம்.

இன்னொரு தடவை இந்த மண்ணுல காலடி எடுத்து வைக்க மாட்டேன்னு உறுதி எடுத்து, மண்ணை அள்ளி காறி துப்பிட்டு வந்தவ நான்.. திரும்ப அதே மண்ணுல கால் பதிக்க தன்மானம் இடம் தர மாட்டேங்குது ஸ்ரீகுட்டி..”

தாயின் கன்னத்தில் எம்பி முத்தமிட்ட ஸ்ரீ, “உங்களுக்கு பிடிக்காத அந்த சென்னையை நானும் வெறுக்கறேன் அம்மா..” என்று கூற,

“நீ ரொம்ப நல்லாப் படிச்சு பெரியாள் ஆகணும். என்னால தான் முடியல. அம்மாவோட ஆசையை நீயாவது நிறைவேத்தனும் ஸ்ரீகுட்டி..” என அவளின் கன்னத்தில் தட்டிக் கூறினாள் தமயந்தி.

“நான் டாக்டர் ஆகுவேன் அம்மா.. அன்னைக்கு எல்லார் கிட்டயும் சத்தமா சொல்லுவேன், என்னோட அம்மா தான் எனக்கு எல்லாமேனு! எனக்காக மட்டுமே அவங்க வாழ்ந்தாங்கனு மார் தட்டிப் பெருமையா சொல்லிக்குவேன்..”

தமயந்தி கீழுதட்டைக் கடித்து கண்ணீரை கட்டுப்படுத்த முயன்றாள்.

“இன்னைக்கு வரைக்கும் என்னோட அப்பா யார்னு நீங்க சொல்லல. அழுத கண்ணோட கெஞ்சி கேட்டப்போவும் நீங்க அவரை எனக்கு அடையாளங் காட்டல. கேட்டு கேட்டு நானும் ஓய்ஞ்சு போய்ட்டேன் அம்மா..

இப்போ சொல்றேன், கேளுங்க. எனக்கு யாருமே வேணாம். நீங்க மட்டும் போதும். நினைவு தெரிஞ்சதுல இருந்து ஒருநாளாவது என்னைப் பார்க்க வராத அவரை எனக்கு கொஞ்சம் கூட பிடிக்க..”

“ஷ்ஷ்!” அவசரமாக அவளின் வாயைத் தன் கரம் கொண்டு மூடியவள், “அப்படி சொல்லாத ஸ்ரீகுட்டி. அப்பாவுக்கு உன்னை ரொம்பப் பிடிக்கும்!” கலங்கும் விழிகளுடன் சொன்னாள்.

“சத்தியத்தை மட்டுமே பேசுனு கத்து தந்த நீங்களே பொய் சொல்லுறிங்களே அம்மா..”

“ஸ்ரீகுட்டிக்கு அம்மா மேல நம்பிக்கை இல்லையா? நான் சத்தியத்தை தான் பேசுறேன். அவருக்கு நான்னா உலகம். நீன்னா உயிரு..”

இமைகளை படபடவென சிமிட்டியவள், “அப்போ ஏன் அவரு உங்களையோ என்னையோ பார்க்க ஒரு வாட்டி கூட இங்கே வரல அம்மா?” என்று கேட்க, பதில் கூற முடியாமல் திணறியவளின் கரங்கள் வேதனை மிகுதியில், பற்றியிருந்த ஸ்ரீயின் தோள்களில் அதீத அழுத்தம் கொடுத்தன.

வலியில் முகம் சுணங்கினாள் ஸ்ரீ.

தமயந்தியின் சிவந்த கண்களும், பற்களுக்கு இடையே சிறைப்பட்டிருந்த கீழிதழும் அவளின் வேதனையின் அளவை மகளுக்கு எடுத்துச் சொல்லின.

“அம்மா, ஐம் சாரி!” என்று கொண்டே வேகமாக அவளை அணைத்துக் கொண்ட ஸ்ரீ, “ஐ ப்ரோமிஸ்! இனிமே அப்பாவைப் பத்தி கேட்கவோ, சென்னையைப் பத்தி பேசவோ மாட்டேன்..” என்று சொல்லியவாறே தாயின் சேலைத் தலைப்பில் தன் முகத்தைக் துடைத்தாள்.

“உங்களை வேதனைப் படுத்துற அந்த ரெண்டு விஷயத்தைப் பத்தியும் இனி நான் வாய் திறக்க மாட்டேன் அம்மா..”

மறுப்பாக தலை அசைத்தவள், “நீ நினைக்கிறது தப்பு ஸ்ரீகுட்டி. நான் இன்னைக்கு வரைக்கும் வாழுறதுக்கு காரணம் நீ தான்னா, உயிர்ப்போட வலம் வருவது அவரோட வாழ்ந்த அழகான நினைவுகள் தரும் சுகத்தால!” என்றிட,

“செ.ன்..னை?” என இழுத்து நிறுத்தினாள் ஸ்ரீ.

“என் வாழ்க்கை தொலைஞ்ச இடம். அந்த இடம் தந்த ஒரே ஒரு விலை மதிக்க முடியாத உறவு, உங்க அப்பா மட்டுந்தான்!” என்றவளின் முகம், அடி நெஞ்சை தொட்டு விட்டுச் சென்ற அவனவளின் நினைவில் பூவென மலர்ந்தது.

••••••••

இஸ்திரி போட்டு ஹேங்கரில் தொங்க வைக்கப்பட்டிருந்த வெள்ளை நிற சட்டையை அணிந்து கொண்டு கண்ணாடி முன் வந்து நின்றான் விஷ்வஜித் ஷைலேந்திரன்.

“இன்னைக்கு சண்டே! அதைக் கூடவா மறந்துட்டிங்க மாமா?” என கேலியாகக் கேட்டுக் கொண்டு அருகில் வந்து நின்ற நேத்ராவை நக்கலாகப் பார்த்தவன் தலை முடியை ஸ்டைலாக கோதி விட்டவாறு,

“உன் அளவுக்கு எனக்கு மறதியெல்லாம் இல்ல நேத்ரா. இப்போ கூட பாரு, நீ அடுப்புல எதையாவது வைச்சிட்டு தான் இங்கே கதை அளக்க வந்திருப்பே!” என்றான்.

“ம்க்கும்!” என நொடித்துக் கொண்டவள் அப்போது தான் நினைவு வந்தவளாக,

“ஐயையோ!” எனப் பதறிக் கொண்டு அங்கிருந்து ஓட்டமும் நடையுமாக வெளியேற, காற்றில் மிதந்து வந்து நாசியை நிறைத்த கருகும் வாசனையை உணர்ந்ததும் முன் நெற்றியில் அறைந்து கொண்டான் விஷ்வா.

வெள்ளை சட்டைக்கு மேலால் கருநீல வண்ண கோர்ட்டைப் போட்டவன் அதன் முன்னிரு பட்டன்களை இழுத்து மூடியவாறு அறையை விட்டு வெளியே வர, “டாடி..” என்ற அழைப்புடன் அவனின் காலை கட்டிக் கொண்டான் நிகித்ரன்.

“நிக்கி பாய்!” என்ற அழைப்புடன் மகனின் உயரத்துக்குக் குனிந்தவன், “என்னாச்சு? ஏன் சோகமா இருக்கே..” என்று குரலில் மென்மையைத் தேக்கிக் கேள்வி தொடுத்தான்.

“இன்னைக்கு சண்டே.. ப்ளே கிரௌண்ட் போகணும்ங்குறதை மறந்துட்டிங்களா டாடி?” என கேட்டவனின் உப்பிய கன்னங்களில் மெதுவாகத் தட்டியவன்,

“அது ஈவினிங் பார்த்துக்கலாம்டா..” என்றிட, முகம் விகசிக்க சரியெனத் தலை அசைத்தான் நிகித்ரன்.

“சாப்பாடு ரெடி!..” என டைனிங் டேபிளருகே நின்று கொண்டு குரல் கொடுத்த நேத்ராவின் பார்வை, சிறியவனையும், கோர்ட் சூட் சகிதம் நெடுநெடுவென வளர்ந்திருந்தவனையும் விட்டகல மறுத்தது.

“எதை கருக்கிப் போட்ட?” என்று கேட்டவாறு உணவு மேஜை நோக்கி நடந்தவனின் முகம் அஷ்டகோணலாக மாறிப் போயிருந்தது.

கேவலமாக அசடு வழிந்த நேத்ரா, “அது ஒன்னுல்ல மாமா. நீங்க உக்காருங்க..” என்று கணவனுக்காக இருக்கையை இழுத்துப் போட்டு, எதிரே இருந்த இருக்கையில் நிகித்ரனைத் தூக்கி அமர்த்தினாள்.

விஷ்வஜித் அமைதியாக உணவில் கவனம் செலுத்தினான்.

அவனையே ரசனை பொதிந்த பார்வை பார்த்திருந்த நேத்ரா, “எங்க கிளம்பிட்டிங்க மாமா?” என்று கேட்டாள், சில நிமிடங்கள் கழித்து.. அவளின் பார்வை மட்டும் மாறவேயில்லை.

“க்ளையன்ட்ஸ் மீட்டிங் நேத்ரா! லண்டன் டீல். வீட்டுல ஏற்பாடு பண்ணலாமானு யோசிச்சிட்டு உனக்கு எதுக்கு சிரமம்னு கெஸ்ட் ஹவுஸ்லயே அர்ரேன்ஞ் பண்ணேன்..”

“இதுல என்ன மாமா சிரமம் இருக்கு?” என்று கேட்டவள் தலை நிமிராமல் சாப்பிடக் கொண்டிருந்தவனிடம், “எப்போ வருவீங்க?” என்று கேட்டாள், இதழில் உறைந்த புன்னகையுடன்..

“கொஞ்சம் லேட்டாகும்னு நினைக்கிறேன்..”

“அப்போ நிக்கியை ஈவினிங் ப்ளே கிரௌண்ட் கூட்டிட்டு போக நேரம் கிடைக்காதா மாமா?”

“அதான் நீ இருக்கியே! அவனைக் கூட்டிட்டு போறதுக்கு என்ன..”

“ஐயோ மாமா.. அவன் உங்களைத் தான் தேடுவான். நான் என்ன காரணம் சொன்னாலும் கண்டிப்பா அவன் ஏத்துக்க போறதில்ல. அதுவுமில்லாம அவனோட ஸ்கூல்ல ஸ்போர்ட்ஸ் மீட் வருது. என்னால எப்படி பிராக்டிஸ் கொடுக்க முடியும் அவனுக்கு?..”

பெருமூச்சுடன் தன்னை உறுத்துப் பார்த்திருந்த மகனின் புறம் தன் பார்வையை செலுத்திய விஷ்வா, “லிஸ்ன், பிக் கை (big guy)! நீ அம்மாவோட ப்ளே கிரௌண்ட்டுக்கு போய் உன் பிரண்ட்சோட விளையாடு. நான் முடிஞ்ச அளவுக்கு சீக்கிரமா மீட்டிங்கை முடிச்சிட்டு அங்க வர ட்ரை பண்ணுறேன்..” என்று தன்மையாய் விளக்க வர,

“எனக்கு பசிக்கல..” என தட்டைப் பின்னால் நகர்த்தி விட்டு அங்கிருந்து வேகமாக எழுந்து ஓடி அறைக்குள் புகுந்து கொண்டான் நிகித்ரன்.

மகனைப் பார்த்திருந்த நேத்ரா, விஷ்வஜித்தைப் பரிதாபமாக ஏறிட்டாள்.

யோசனையுடன் புருவம் நீவியவன், “அவனைப் பார்த்துக்கோ..” என்று விட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்று, மாலை நான்கு மணிக்கே வீடு வந்து சேர்ந்திருந்தான்.

சடுதியாக அவன் இப்படி வந்து நிற்பான் என சற்றும் எதிர்பார்த்திருக்காததால் திகைப்பில் விழி விரித்த நேத்ரா, “ஆனா மீட்டிங் என்னாச்சு மாமா?” எனப் பதட்டம் இழையோடும் குரலில் கேட்டாள்.

“வந்தவங்களோட ரிட்டர்ன் டிக்கெட்டை ஒருநாள் தள்ளி போட சொல்லிட்டு, அவங்களை கெஸ்ட் ஹவுஸ்ல தங்க வைச்சிட்டேன். மீட்டிங் நாளைக்கி போஸ்ட்போன்டட்! வந்தவங்க மதிய சாப்பாட்டை எடுத்ததும் டிரைவரை அழைச்சிட்டு ஊர் சுத்த கிளம்பிட்டாங்க..” என்றவனின் முகத்தில் கோபத்துக்கு பதில் மென்னகை பூத்திருந்தது.

“இந்த ஏற்பாடெல்லாம்..” என வியப்பாக ஏதோ வினவ வந்தவளைத் தன் பார்வையாலே அடக்கியவன்,

“டாடி..” எனத் தொண்டைக் கிழியும் அளவுக்கு உட்சாகமாக அழைத்தபடி ஓடி வந்தவனை ஆரத் தழுவினான்.

“அட.. இன்னுமேவா நீ ரெடியாகாம இருக்கே.. வெரி பேட் நிக்கி பாய்!”

“நீங்க எங்க கூட வர மாட்டிங்கனு நினைச்சிட்டான். அதான் ப்ளே கிரௌண்ட் போக மாட்டேன்னு அடம் பிடிச்சிட்டு வீட்டோட நிற்க முடிவு பண்ணிட்டான் மாமா..” என்ற தன்னைப் பற்றி புகாரளித்த அன்னையை முறைத்தவாறு,

“டாடி, அம்மா என்னை அடிச்சிட்டாங்க..” என்று குறைபட்டுக் கொள்ள, விஷ்வஜித்தின் பார்வை நேத்ராவின் மீது அழுத்தமாகப் பதிந்தது.

“அதில்ல மாமா.. அவன் ரொம்ப அடம் பிடிச்சான். அதான்!” என் அவசரமாகத் தன் பக்க நியாயத்தை சொல்ல வந்தவளை கை நீட்டிப் பேச விடாமல் தடுத்தவன், “நீ போய் ரெடியாகு நிக்கி..” என்று கூறி மகனை அனுப்பி வைத்து விட்டு நேத்ராவை முறைத்தான்.

“மாமா, அவன் தா..”

“பிடிவாதம் உன்னோட குணம் தானே.. அதில என்ன தவறு கண்டுட்டனு பையனை போட்டு அடிச்சே நேத்ரா?” என்றவனின் குரலில் கோபம் தாண்டவமாடியது.

சட்டென தலை குனிந்தவள், “சொல்றதைக் கேட்கவே மாட்டேங்குறான் மாமா.. இப்போல்லாம் ரொம்ப அடம்! கேட்டதை செஞ்சே கொடுக்கணும் அவனுக்கு. இல்லைனா மூஞ்சை உம்முனு வைச்சிக்கிறான். பார்த்தீங்களா.. இன்னைக்கு கூட அவனால உங்க மீட்..” அவள் மேலே தொடர முன்,

“நிக்கியை எதுவும் சொல்லாத.. அவனோட அப்பா நான்! அவன் என்கிட்ட எதிர்பார்க்குறதை கண்டிப்பா நான் செய்தாகனும். அவனுக்கு ஒரு நல்ல அப்பாவா என்னை இருக்க விடு!” என்று விட்டு அங்கிருந்து அகன்றான் விஷ்வஜித்.

கைவிரல்கள் நகங்களை பற்களுக்கு இரையாக்கியபடி, கணவன் சென்று மறைந்த திசையைப் பார்த்திருந்தாள் நேத்ரா.

இப்போதெல்லாம் அவனை அளவுக்கு அதிகமாகப் பிடிக்கிறதே என வியந்தவள் குங்கும நிறமாக மாறிப் போன கன்னங்களுடன் அறைக்குள் சென்று மறைந்தாள்.

அடுத்த அரைமணி நேரத்தில் மூவருமாக நிகித்ரன் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் சென்று வரும் விளையாட்டு மைதானத்தை நோக்கிப் படை எடுத்தனர்.

டீஷர்ட் மற்றும் சோர்ட் சகிதம் எட்டு வயது மகனுக்கு நிகராக ஓடியாடி விளையாடத் துவங்கிய விஷ்வஜித்தை ரசித்தபடியே மைதானத்தில் இருந்த கல் இருக்கையில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தாள் நேத்ரா.

அவனுக்காக எதை வேண்டும் என்றாலும் செய்யலாம்.. எதையும் இழக்கலாம் என்று தோன்றியது அவளுக்கு.

“உங்களை ரொம்பப் புடிக்குது மாமா..” என்று வை விட்டே முணுமுணுத்தவள் இதழில் உறைந்த புன்னகையுடன் இருக்கையில் சொகுசாய் சாய்ந்தாள்.

பொங்கும் பால் பானை போல் அவளது மனதிலும் நேசம் பெருகிப் பொழிந்தது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!