Skip to content
Post Views: 5,122
நிறம் பாராத காதல்
அத்தியாயம் 10
வைதேகி ரணதீரனிடம் வம்படியாக அவன் கால் சட்டைப்பையில் இருந்த கொலுசை எடுக்க முயற்சி செய்தவள் கால் தடுமாறி மொத்தமாக அவனின் மார்பில் சாய்ந்தாள்.
இந்தக் காட்சியைப் பார்த்தபடி அறைக்குள் வந்த மாறன், “இங்க என்ன நடக்குது?” என்று கேட்டதும் நிலைமை புரிந்து ஒருவரை ஒருவர் விலகி நின்றார்கள்.
Advertisement
“மாமா…இந்த மேடம் தொல்லையை என்னால ஜீரணிக்கவே முடியல, அம்மாவுக்காகத் தான் இவங்க இம்சையை பொறுத்து போறேன், எப்போதும் நான் என் பொறுமையை கடைபிடிக்க மாட்டேன், என்னைப் பற்றி உங்களுக்குத் தெரியும் தானே, உங்க புது தங்கச்சிகிட்ட என் விஷயத்துல தலையிட வேண்டாம்னு சொல்லி வையுங்க.”என்ற ரணதீரன் கோவமாக அந்த அறையிலிருந்து வெளியேறினான்.
அவன் சென்ற பாதையை அதே கோபத்துடன் பார்த்து இருந்த வைதேகி,”அண்ணா… உங்க மச்சான் கால் சட்டையில ஒரு கொலுசு இருக்கு அதை வாங்கி தாங்க” என்றாள்.
“என்னமா சொல்ற, உன் கொலுசு ராணா கிட்ட இருக்கா?” என்று மாறன் கேக்க, “இல்ல அண்ணா…இன்னைக்கு காலையில உங்க மச்சான் ஜீப் பஞ்சர் ஆகிடுது, அப்போ நேத்து நைட் நான் ஒரு கருப்பு நிற காரை உங்க பங்களாவில் பார்த்தேன்னு சொன்னேனே, அந்தக் காருல டிரைவர் வேலு எங்களை அழைச்சிட்டு போக வந்தாரு” என்று வைதேகி இன்று காலை நடந்த விடயங்களை எல்லாம் மாறனிடம் சொல்லி முடித்தாள்.
Advertisement
“என்ன கருப்பு காருல வேலு வந்தானா?” என்ற மாறன் ஒரு நொடி யோசித்தான்.
Advertisement
“அண்ணா… இன்னோரு விஷயம் கூடச் சொல்ல மறந்துட்டேன், நேத்து இன்ஸ்பெக்டர் விக்ரம் ரம்யா என்ற பொண்ணை காணோம்னு உங்ககிட்ட விசாரிக்க வந்தாரு தானே! அந்தப் பொண்ணு இன்னைக்கு இறந்து போயிட்டாங்க” என்று வைதேகி சொன்னதும், “என்ன ரம்யா செத்துட்டாளா?”என்ற கீதா உறக்கம் கலைந்து இவர்கள் அருகே வந்து நின்று கொண்டார்.
“என்ன வைதேகி சொல்லுற! ரம்யா இறந்துட்டாங்களா?” என்று மாறனும் கேக்க, “ஆமா…ரம்யா இறந்துட்டாங்க, அந்தக் கொலை சம்மந்தமா நான் உங்ககிட்ட விசாரிக்கணும்” என்று விசாரணைக்காக வாசலில் வந்து நின்ற விக்ரம் சொன்னவன், தன் கையில் உடல்க்கூர் ஆய்வு சம்மம்தப்பட்ட ஆவணங்களைக் கையோடு எடுத்து வந்து இருந்தான்.
“விக்ரம்… உள்ள வா” என்று மாறன் அழைக்க, விக்ரமின் கண்கள் அந்த இடத்தை ஒரு காவல்துறை அதிகாரியாகச் சுற்றி வந்தது.
Advertisement
“என்னாச்சு விக்ரம்… வைதேகி சொல்றது உண்மையா? ரம்யா இறந்துட்டாங்களா?” என்று மாறன் பதட்டறதுடன் கேக்க, “உண்மை தான், இன்னைக்கு விடியல் காலைத் தான் உயிர் போய் இருக்கு, யாரோ அவங்க வாயை மூடி மூச்சு விடாதப்படி சாகடிச்சு இருக்காங்க.” என்றவனின் வார்த்தையைக் கேட்டு அனைவரின் முகமும் மாறிப் போனது.
“யாரு ரம்யாவை சாகடித்து இருப்பாங்க?” என்று கீதா கேக்க,”இனி தான் கண்டுபிடிக்கணும், நான் கூட ஏதோ காதல் விவகாரம்ன்னு தான் நினைச்சேன், ஆனா இப்போ இந்தக் கேஸ் வேற மாதிரி நகருது” என்ற விக்ரம் தன் கையில் இருந்த ஆவணங்களை மாறன் முன் நீட்டினான்.
“என்ன இது?” என்று மாறன் கேக்க,
“கிட்டத்தட்ட மூணு மணி நேரம் ரம்யாவை கொடுமை பண்ணி தான் சாகடித்து இருக்காங்க, அதுவும் இல்லாம” என்று விக்ரம் ஒரு கணம் தன் வார்த்தையை நிறுத்தினான்.
“என்னாச்சு!?”என்று வைதேகி கேக்க,
“அவங்க வயத்துல இரண்டு மாசம் பிள்ளையோட தான் இறந்து போயிருக்காங்க” என்று விக்ரம் சொன்னதும்,அங்குள்ள அனைவருக்கும் தூக்கி வாரிப் போட்டது.
“என்ன விக்ரம் சொல்றிங்க!? மாசமா இருக்குற பெண்ணையா சாகடித்து இருக்காங்க?”என்று மாறன் கோவமாகக் கேட்டதும், “ஆமா. அதுவும் இல்லாமல் அந்தப் பொண்ணு கழுத்துல தாலி கயிறும் இருந்துச்சு” என்றான் விக்ரம்.
“எனக்கு ஒண்ணுமே புரியல, ஆனா ரம்யா பக்கத்து ஊருன்னு தானே சொன்னிங்க, அப்போ இங்க எப்படி அவங்க சடலம் கிடைச்சு இருக்கும்?” என்று மாறன் சந்தேகமாகக் கேக்கும் தருணம் ரணதீரன் ஜீப் சாவியுடன் இவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தான்.
விக்ரமனை காவல்துறை ஆடையில் பார்த்த ரணதீரனின் புருவம் இடுங்க, “மாமா… இந்தக் கம்பெனிக்குள்ள ஏன் போலீஸ் வரணும்?” என்று கேட்ட ரணதீரன் வைதேகியை எரிப்பதை போல முறைத்தான்.
“ரம்யா கொலை வழக்குல உங்கள விசாரிக்க வந்து இருக்கேன்” என்று விக்ரம் சொல்ல, “ரம்யாவுக்கும் இந்தக் கம்பெனிக்கும் என்ன சம்மந்தம்?” என்று கேட்டான் ரணதீரன்.
“என்ன விளையாடுறிங்களா!? ரம்யா உங்க கம்பெனில வேலை பார்த்ததா தானே மாறன் மாமா சொன்னாரு” என்ற விக்ரமின் பார்வையில் ஆரம்பத்தில் இருந்தே ரம்யாவின் வழக்கில் ரணதீரன் மீது சந்தேகம் இருக்க தான் செய்தது.
“உங்க கூட விளையாட நீங்க என்ன நான் கட்டிக்க போற பொண்ணா இன்ஸ்பெக்டர்?” என்று ரணதீரன் கிண்டலாகக் கேட்டதும், “ஆமா ஆமா கட்டிக்க போற பொண்ணுகிட்ட நீ கச்சிதமா பேசிட்டாலும் இந்தப் பூமி தாங்காது” என்று மனதிற்குள் எப்போதும் போலவே ரணதீரனை வசைபாடினார் கீதா.
“ஹலோ… நான் ஒரு இன்ஸ்பெக்டர். நான் கேக்குற கேள்விக்கு நீங்க ஒழுங்கா பதில் சொல்லலைனா அப்புறம் பின் விளைவுகள் ரொம்ப மோசமா இருக்கும்.” என்று விக்ரம் அதிகார தோரணையில் பேசினான்.
“முதல்ல உங்க கேள்வியே தப்பு இன்ஸ்பெக்டர். நீங்க விசாரிக்குற பொண்ணுக்கும் என் கம்பெனிக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை, அதனால இப்போ நீங்க உங்க வண்டியை உருட்டிகிட்டு வந்த வழியே போகலாம்” என்றான் ரணதீரன் அவனுக்கே உரிய கிண்டலான குரலில்.
“என்ன சொல்றிங்க? அப்போ ரம்யா உங்க கம்பெனில வேலை பார்க்கலைய?!” என்று விக்ரம் கேக்க,”அந்த விவரத்தையே நீங்க இன்னும் கண்டுபிடிக்கலையா இன்ஸ்பெக்டர்? ” என்ற ரணதீரன், அவன் அருகே இருந்த இருக்கையில் வாட்டமாக அமர்ந்துக்கொண்டான்.
“மாமா… இவரு என்ன சொல்லுறாரு?நேத்து நீங்கத் தானே ரம்யா உங்க கம்பெனில வேலை பார்த்ததா சொன்னிங்க?” என்று விக்ரம் உண்மையைத் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்ற ஆவலில் கேட்டதும்,
“ரம்யா என் தலைமையில இயங்குற இன்னோரு கம்பெனில தான் வேலை பார்த்தாங்க. ரம்யாக்கும் ராணா கண்காணிப்புல இயங்குற இந்தக் கம்பெனிக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை” என்று மாறன் சொல்ல, ரணதீரனோ சோம்பல் முறித்தபடி விக்ரமை பார்த்துக் கிண்டலாகச் சிரித்தான்.
“அப்போ ரம்யாவை இவருக்குத் தெரியாது அப்படித்தானே” என்று விக்ரம் கேட்டதும்,
“எந்தச் சேமியாவையும் எனக்குத் தெரியாது. அத்த…உங்க தங்கச்சி மகளை அழைச்சிட்டு வாங்க நம்ம கிளம்பலாம்” என்ற ரணதீரன்,
“மாமா… உங்க போலீஸ் மச்சானை உங்க கம்பெனிக்கு அழைச்சிட்டு போய்ப் பேசுங்க, என் கம்பெனிக்குள்ள போலீஸ் வரது இதுவே கடைசியா இருக்கட்டும்” என்ற ரணதீரன் தன் கம்பெனியிலிருந்து வேகமாக வெளியேறியவனை கீதா பின் தொடர்ந்து சென்றார்.
“வைதேகி நீயும் ராணாகூட கிளம்பு. விக்ரம் நீ வா ரம்யா வேலை பார்த்த என் கம்பெனிக்குப் போகலாம்” என்றான் மாறன்.
“அண்ணா… அந்தக் கொலுசு” என்ற வைதேகியை விக்ரம் கேள்வியாகப் பார்க்க, “வைதேகி நீ கிளம்பு, உனக்காக ராணா காத்து இருப்பான்” என்று மாறன் அழுத்தமாகச் சொன்னதும், வைதேகியும் மனதில் குழப்பதுடனே அந்தக் கம்பெனியிலிருந்து வெளியேறினாள்.
விக்ரமை மாறனும் அவன் தலைமையில் இயங்கும் நிறுவனத்துக்கு அழைத்துச் செல்ல, அங்கே ரம்யாவுடன் வேலை செய்த சக ஊழியர்களை விசாரித்த விக்ரமுக்கு ரம்யாவை பற்றிய தகவல் பெரிதாக எதுவும் கிடைத்த பாடுல்லை.
“என்ன விக்ரம் ரம்யாவை பற்றி விவரம் எதாவது தெரிந்ததா?” என்று மாறன் கேக்க,
“இங்க யாருக்கும் அந்தப் பொண்ணை பற்றிய விவரம் தெரியல மாமா” என்ற விக்ரமனின் கைபேசிக்கு காவல்துறை உதவியாளரிடம் அழைப்பு வந்ததும், “சரி மாமா இந்த வழக்கு விஷயமா உங்களுக்கு வேற எதாவது விவரம் தெரிந்தால் எனக்குப் போன் பண்ணுங்க” என்ற விக்ரம் மாறனின் கம்பெனியிலிருந்து வெளியேறி இருந்தான்.
“வைதேகி ரம்யாவை பற்றி என்னமோ சொல்ல வந்தாளே, என்னவாக இருக்கும், மதியம் வீட்டுக்குப் போய் என்னன்னு கேப்போம்” என்ற எண்ணத்துடன் மாறன் தன் வேலைகள் மீது கவனம் செலுத்தினான்.
மதிய உணவிற்காக ரணதீரன் தன் ஜீப்பில் கீதா மற்றும் வைதேகியை அழைத்துக்கொண்டு அவன் பங்களாவிற்கு திரும்பிக்கொண்டு இருக்க, அவன் அருகே அமர்ந்து இருந்த வைதேகியோ சந்தேகமாகவே ரணதீரனை முறைத்து பார்த்துக் கொண்டு இருந்தாள்.
“ஏன் மாப்புள்ள… சாப்பிட்ட பிறகு மறுபடியும் நான் உங்ககூட வரணுமா?” என்ற கீதாவை கண்ணாடி வழியே பார்த்துச் சிரித்தவன், “ஏன் அத்த உங்களுக்கு என்கூட வரப் பிடிக்கலையா?”என்று பாவமாகக் கேட்டான் ரணதீரன்.
“ஐயோ அப்படியெல்லாம் இல்லை மாப்புள்ள… ரொம்ப அசதியா இருக்கு, வயசாக்குது தானே கொஞ்சம் ஓய்வு எடுத்தா நல்லா இருக்கும்னு தோணுது”என்று கீதா சொல்ல,”யாருக்கு உங்களுக்கு வயசாகுதா? நம்ப முடியலையே”என்றான் ரணதீரன்.
கீதாவிடம் பேச்சுக் கொடுத்தபடியே தன் ஜீப்பை அடுத்த சில நிமிடங்களிலேயே
அவன் தன் பங்களாவின் முன்னே நிறுத்தியதும், கீதாவும் வைதேகியும் வீட்டுக்குள் செல்ல,”ஒரு நிமிஷம்” என்று தன் விரலைகளை சுண்டி வைதேகியை அழைத்தான் ரணதீரன்.
அவன் அழைப்பில் புருவம் இடுங்க அவனைப் பார்த்தவள், “என்ன?”என்று அவனை முறைப்புடன் தைரியமாகக் கேட்டாள்.
“உள்ள போய் என் அம்மாகிட்ட கொலுசுக் கதை, கார் கதை, பேய் கதைன்னு எதாவது கதை பேசிகிட்டு இருந்தினா அப்புறம் உன் கதைக்கு முடிவுரை எழுதிடுவேன் புரியுதா” என்று மிரட்டும் தோரணையில் அவளை எச்சரித்தவன், வைதேகியை தாண்டிப் பங்களாக்குள் நுழைந்தவனை இவளும் கடுப்பாகப் பின் தொடர்ந்து சென்றாள்.
“அம்மாடி வைதேகி வா வா… என்னமா நம்ம கம்பெனி, எஸ்டேட்ன்னு எல்லா இடத்தையும் சுற்றி பார்த்தியா?” என்ற வேதநாயகி வைதேகியை கைபிடித்து உள்ளே அழைத்துச் செல்ல, “அத்த…” என்று அன்பாக ஓடி வந்து சிறுமி மயிழினி வைதேகியை கட்டிக்கொண்டாள்.
“என்ன வைதேகி ஏன் சோர்வா இருக்க?” என்று மாயா கேக்க,
“என்ன ராணா என் மருமகளை எதாவது திட்டுனியா?” என்று வேதநாயகியும் கேக்க, “அதெல்லாம் இல்லிங்க, நான் நல்லா தான் இருக்கேன்” என்ற வைதேகி தன் எதிரே திமிராக அமர்ந்து இருந்த ரணதீரனை முறைத்து பார்த்து இருந்தாள்.
“வைதேகி… நீ போய்க் கைக்கால் அலம்பிட்டு வா நம்ம சாப்பிடலாம்” என்று வேதநாயகி சொல்ல, “எனக்கு இப்போ பசிக்கல, நான் மாறன் அண்ணன் வந்ததும் சாப்பிடட்டுமா?” என்று வைதேகி சொல்லும் தருணம், “இதோ நானே வந்துட்டேன்” என்றப்படி மாறனும் இவர்களை நோக்கி வந்தவன் கையில் புதியதாகக் கைபேசி ஒன்று இருந்தது.
“ஐ… போன். எனக்கா அப்பா?” என்று குழந்தை மாறன் கையிலிருந்து போனை வாங்கியதும், “உனக்கு இல்ல தங்கம் அது உன் வைதேகி அத்தைக்கு” என்று மாறன் சொல்ல. குழந்தை சிரித்த முகத்துடன் வைதேகியிடம் கைபேசியை கொடுத்தாள்.
“அத்த வைதேகி போன் போன வாரம் ஹாஸ்டல்ல தொலைந்து போயிடுது, அதான் புது போன் வாங்கி வந்தேன்” என்று மாறன் சொன்னதும், “நல்லது மாப்புள்ள, எனக்கும் வைதேகி போன் நம்பரை அனுப்பி வையுங்க, அப்படியே என் மருமகளை நம்ம வாட்ஸ் அப்குரூப்ல சேர்த்து விட்டுடுங்க” என்றார் வேதநாயகி.
“ஆமா ஆமா… இவள் யாரை ஏமாத்திட்டு இங்க வந்து இருக்கானே தெரியல, இவ நம்ம வீட்டு மருமகளா?” என்று தனக்குள் பிணர்த்திய ரணதீரன், “மேடம் சாப்பாடு எடுத்து வைக்கட்டுமா?” என்று வைதேகியை பார்த்துக் கேட்டான்.
“டேய் ராணா… நீ என்னடா என் மருமகளை மேடம்ன்னு கிண்டல் பண்ற மாதிரி கூப்பிடுற” என்று வேதநாயகி கேக்க,
“நீங்கத் தானே அம்மா அவங்கள மரியாதையா அழைக்கச் சொன்னிங்க, அதான் மேடம்ன்னு கூப்பிட்டேன்” என்ற ரணதீரன் மதிய உணவை மேசைமேல் அடுக்கினான்.
இவர்கள் அனைவரும் சாப்பிட்டு முடித்த கையோடு, “அம்மா… அடுத்த மாசத்துல இருந்து நம்ம ஸ்கூல்லையே கம்ப்யூட்டர் கிளாஸ் நடக்க ஏற்பாடு பண்ணனும், அதனால நானும் வேலுவும் அந்த விஷயமா வெளிய போயிட்டு வரோம், வைதேகி மேடம் இதோட நாளைக்கு என்கூட வந்தா போதும்” என்ற ரணதீரன் வேதநாயகியின் பதிலைக் கேக்காமல் வேகமாக அவன் பங்களாவிலிருந்து வேலுவுடன் வெளியேறி இருந்தான்.
“வைதேகி… நீ போய் ஓய்வெடுத்துக்கோ போமா” என்று வேதநாயகி சொன்னதும், வைதேகி அவள் அறைக்குச் சென்றவள் ஜன்னல் வழியே இவள் கண்ணுக்குத் தெரியும் ரணதீரனின் சின்னப் பங்களாவை கேள்வியோடு பார்த்து இருந்தாள்.
இதே சமயம்,”உள்ளே வரலாமா?” என்று கேட்டுக்கொண்டே கையில் மடிக்கணினியுடன் மாறனும் மாயாவும் உள்ளே வர, “வாங்க அண்ணா” என்று அழைத்தாள் வைதேகி.
“வைதேகி… இன்னைக்கு உன் விஷயமா தான் நான் பக்கத்து ஊருக்குப் போய் என் நண்பனைச் சந்திச்சிட்டு வந்தேன். உன் வீட்டு ஆளுங்கள பற்றி அவன்கிட்ட விசாரிக்கச் சொல்லி இருக்கேன். அப்புறம் நீ கனடா போறதுக்கு தேவையான சில ஆவணங்கள் வேணும், அது இருந்தா தான் மேற்கொண்டு நான் உனக்குப் பாஸ்போர்ட் ரெடி பண்ண முடியும்” என்ற மாறன் வைதேகி அறையில் இருந்த மேசைமேல் மடிக்கணினியை வைத்து அதன் அருகே அமர்ந்தான்.
“ஏன் மாமா… வைதேகி பொருள் எதுவுமே இவகிட்ட இல்லையே அப்புறம் எப்படி நீங்கப் பாஸ்போர்ட் ரெடி பண்ணுவீங்க!?” என்று மாயா கேக்க, “அதுக்கு தான் இந்த மடிக்கணினியை எடுத்து வந்தேன், ஏன் வைதேகி, உன்னோட விவரங்கள் எல்லாம் நீ எதாவது மெயில் மூலம் சேகரித்து வச்சி இருக்கியா?” என்று கேட்டான் மாறன்.
“இருக்கு அண்ணா… என் மெயில்ல என்னோட எல்லா டீடெயல்ஸும் இருக்கு” என்று வைதேகி சொல்ல, “மெயில் ஐடி போட்டு அக்கௌன்ட் ஓபன் பண்ணி உன் டீடெயல்ஸ் எல்லாம் எடுத்துக்கொடு மா” என்று மாறன் சொன்னதும் வைதேகியும் அவ்வாறே செய்தவள் சில நொடிகளில் அவளின் மெயிலை திறந்து, “இதோ என் விவரம் எல்லாம் இதுல இருக்கு அண்ணா” என்று சில பக்கங்களைக் கட்டினாள்.
“சித்ராவா… உன் பெயர் சித்ராவா!?” என்று மாயா கேக்க,”வீட்டுல தான் வைதேகி, மத்தபடி கனடாவில் நான் வேலை பார்த்த ஹாஸ்பிடல்ல என்னைச் சித்ரான்னு சொன்னா தான் தெரியும்” என்று வைதேகி சொல்ல, “என்ன ஹாஸ்பிடல்லா!? அப்போ நீ டாக்டரா!?”என்று ஆச்சிரியமாகக் கேட்டாள் மாயா.
“அப்போ மட்டும் இல்லை, இப்போவும் வைதேகி டாக்டர் தான்” என்ற மாறன், “வைதேகி நீ இந்த விவரம் மொத்தத்தையும் என் மெயிலுக்கு அனுப்பி விடுமா, இந்தா என் ஈமெயில் அட்ரஸ்” என்ற மாறனின் மெயிலுக்கு அவன் கேட்ட விவரங்களை அனுப்பி வைத்த வைதேகியின் ஈமெயில் டிபியை மாயா உற்று பார்த்தாள்.
“என்ன மாயா… என்ன பாக்குற?” என்று மாறன் கேக்க,
“மாமா… வைதேகி டிபில வச்சிருக்குற ஓவியத்தைப் பாருங்க” என்று மாயா சொல்ல,
“இது… இந்த ஓவியம்!!” என்று மாறன் ஆச்சிரியமாகப் பார்த்தவன்,
“வைதேகி இந்த ஓவியம் உன்கிட்ட எப்படி?” என்று கேட்டான்.
அந்த ஓவியத்தை பார்த்ததும்,”இந்த ஓவியம் தான் என் அப்பா எனக்குக் கடைசியா வாங்கிக்கொடுத்த பிறந்தநாள் பரிசு” என்று வைதேகி கண்கள் கலங்கினாள்.
“எனக்கு ஓவியம்னா உயிர்,
இந்த ஓவியத்தை நான் பார்த்ததே சென்னையில் ஒரு கண்காட்சியில் தான். அந்தக் கட்டிடம் முழுக்க நிறைய வண்ண ஓவியங்கள் இருந்தாலும், என் கண்களை ஒரே நேரத்தில் கவர்ந்தது அந்த ஒரு கருப்பு நிற ஓவியம் தான்.
ஒரு ஆண் உருவம். முழுக்க கருப்பு நிறத்திலே. முகம் தெளிவா இல்ல, ஆனா கண்கள் மட்டும்…! அதுவும் இந்தக் கண்கள் என்னையே பாய்ந்து விழுங்கப்போற மாதிரி தெரிஞ்சுச்சு. இந்த ஓவியத்தில் இருக்கும் உருவத்தோட நிற வேறுபாடு என்னை இன்னும் அதிகமா ஈர்த்தது. அது ஒரு வலிமை, ஒரு எதிர்பார்ப்பு, ஒரு மாயை மாதிரி இருந்தது. இந்த ஓவியத்துல இருக்குற ஆழமான வலி இதை வரைந்த ஓவியரின் மனதை அப்படியே பிரதிபலிச்ச மாதிரி இருந்துச்சு, இந்த ஓவியத்தை வரைந்த அந்தக் கலைஞனின் பெயர் தெரியல. ஆனா அந்த ஓவியம் என் முகத்தைப் பார்த்துப் பேசுற மாதிரி இருந்துச்சு”என்று டிபியை கணினி வழியே பார்த்து வைதேகி ரசித்துப் பேசிக்கொண்டு இருந்தாள்.
“உனக்கு இந்த ஓவியத்தைத் தீட்டிய கலைஞ்சனை பார்க்கணுமா?” என்று மாறன் கேக்க,
“என்ன அண்ணா இப்படி கேக்குறீங்க!! நம்ம ரசிக்கிற ஒரு விஷயத்தை உருவாக்கிய அந்தப் படைப்பாளி யாருன்னு தெரிஞ்சிக்க நமக்கு ஆசை இருக்க தானே செய்யும், ஆனா என்னால இந்த ஓவியரைக் கண்டு பிடிக்கவே முடியல, இந்த ஓவியத்தை நான் வாங்கிய கண்காட்சியில் விசாரித்தபோது கூட, அந்த ஓவியத்துக்கு உண்டான பணம் ஆதரவற்ற இல்லத்துக்கு அனுப்பி வைக்கப் போறதா சொன்னாங்க. என்னால இப்போவரை அந்த ஓவியரைக் கண்டு பிடிக்க முடியல. ஏன்னா ஓவிய ஆசிரியரின் பெயர் இருக்க வேண்டிய இடத்துல சின்னதா ஒரு கருப்பு நிற பொம்மை மட்டும் தான் இருந்துச்சு” என்ற வைதேகியின் பேச்சைக் கேட்டு மாயா சிரிக்க, மாறன் அவள் ரசனையோடு பேசும்பொழுது ஓவியத்தின் மீது அவளுக்குள்ள காதலை கண்டு வியந்தான்.
“வைதேகி இந்த ஓவியத்தை வரைந்த ஓவியர் வேற யாரும் இல்ல, அவரு” என்று மாயா சொல்லும் முன்னே இவர்கள் இருக்கும் அறையின் கதவை யாரோ வேகமாகத் தட்டினார்கள்.
error: Content is protected !!