Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

3 பேர் 2 காதல் 1 கனவு

3..2..1 Episode 12. எதுவும் கடந்து போகும்!

காலச் சக்கரம் யாரையும் சட்டை செய்யாமல் வேகமாகச் சுழல, தேர்வுக்கு இரண்டு வாரங்களே இருந்தன. மூச்சு விடுவதைக் கூட மறந்த மாணவர்கள், படிப்பதை நிறுத்தவில்லை.

தேர்வுக்கு எவ்வளவு தயாராகப் படித்திருந்தாலும், கல்லூரிபோல பாடங்களைப் படித்து முடித்ததும் வரும் மனநிறைவு கார்த்திக்கு வரவே இல்லை. மாறாக, படிக்க படிக்க பயம் அதிகரித்துக்கொண்டே இருந்தது. படித்தது அனைத்தும் மறந்தது போலவும், ஒன்றுமே படிக்காதது போலவும், மாறி மாறி பயங்கள் ஏற்பட, நிலவின் ஒளியை நாடி நள்ளிரவில் மொட்டை மாடிக்குச் சென்றாள் கார்த்தி.

ரம்மியமான இரவை நிலவோடும் நட்சத்திரங்களோடும் மௌனமாக அவள் கழிக்க, அங்கு உலவிய ஆழ்ந்த மௌனத்தைக் கலைத்தபடி யாரோ மாடியேறும் கால்சத்தம் அவளுக்குக் கேட்டது. தான் விடுதியில் சேர்ந்த நாளிலிருந்து மொட்டைமாடிக்குத் தன்னைத் தவிர யாருமே வந்து பார்க்காததால், யாராக இருக்கும் என்று யோசித்தபடியே படிக்கட்டை நோக்கிப் பார்வையைச் செலுத்தினாள் அவள்.

ஆர்ப்பாட்டம் இல்லாத கதிரின் முகம் தெரிந்ததும், கதிகலங்கி போனாள். பெண்கள் விடுதிமாடிக்கு அவன் ஏன் வருகிறான் என்று குழப்பமாக இருந்தாலும், இனி தான் அங்கிருப்பது நல்லதல்ல என முடிவு செய்து மாடியை விட்டுக் கீழே செல்ல படிகள் பக்கம் வந்தாள் கார்த்தி.



Advertisement

”கொஞ்சம் நில்லு கார்த்தி. உன்கிட்ட பேசத்தான் இங்க வந்தேன்!”, கதிர் கூற, வியப்பும், அதிர்ச்சியும் ஒருசேர நகராமல் நின்றாள் கார்த்தி. அருகில் இருந்த தூண்மீது சாய்ந்தபடி அவன் அமர, அவன் எதிரே இருந்த சுவரில் சாய்ந்தபடி அவளும் அமர்ந்தாள்.

”எப்படி ஆரம்பிக்கிறதுன்னு தெரியல!.. நாளை விடிஞ்சா இன்டர்வியூ முடிவுகள் வந்துடும். அதுல நான் வெற்றி பெற்றாலும், தோற்றாலும் முழு வாழ்க்கையும் மொத்தமாக மாறிடும். அதனால இந்த இரவும், இன்னைக்கு நான் சொல்ற விஷயங்களும் ரொம்ப முக்கியம்!”, தயங்கியபடியே கதிர் கூற, முதல்முறையாக தயங்கி நிற்கும் அவனைப் பார்க்க, கார்த்திக்கு ஆச்சரியமாக இருந்தது.

”நாளைக்கு நான் ஐ.பி.எஸ். ஆனாலோ, இங்கே வசந்தி, மிருணாளினி, என எல்லாரும் ஐ.ஏ.எஸ். ஆனாலோ, நாங்க எல்லாருமே உன் அறிவுகிட்ட நிக்கும்போது உனக்குக் கால் தூசுதான்! கார்த்தி,  அறிவில எல்லாரையும்விட நீ பல படிகள் எப்பவும் மேல நிக்கிற.. தினமும் பல பல புத்தகங்களைப் படிக்கிறதும், அதை மறக்காமல் இருக்கிறதும், ஒவ்வொரு தலைப்பிலும் நீ சிந்திக்கிற விதமும், அந்த சிந்தனைக்குள்ள இருக்குற ஆழமும், எங்க யாராலயும் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது. அவ்வளவு அறிவு இருந்தும், சில விஷயங்கள்ல நீ திணறுனது தெரிஞ்சுதான் உன்னைத் திருத்த சில சமயங்களில் கடுமையான நடந்துகிட்டேன்.  ஒவ்வொரு முறை உன்கிட்ட நான் கடுமையாக நடக்கிற போதும், அதைச் சவாலாக எடுத்துக்கிட்டு, அடுத்தமுறை நானே அசந்து போற அளவுக்கு நீ செய்த ஒவ்வொரு விஷயத்தையும், இப்போ நினைச்சால்கூட பிரமிப்பாக இருக்குது. ஒருவேளை, உன்கிட்ட அன்பாகச் சொல்லியிருந்தால் எவ்வளவுதூரம் அது உன்னை பாதிச்சிருக்குன்னு எனக்குத் தெரியல. ஆனால், கடிந்துகொண்டதால ரொம்ப சீக்கிரமே நீ மெருகேறின. நான் உன்னைக் காயப்படுத்தனும்னு எதுவுமே செய்யல. அப்படிக் காயப்படுத்தியிருந்தால், ஐ அம் ரியலி சாரி!”, அவன் கூற, உடனே அவள் தடுத்தாள். அந்த ரம்மியமான இரவில், அவன் கூறிய வார்த்தைகள் அவளுக்கு வினோதமாகவே இருந்தது. மனதில் ஒரு ஓரத்தில் ஒளிந்துகொண்டிருந்த இன்ப உணர்ச்சியானது அவளை அறியாமல் வெளியே வந்தது.

Advertisement

”ஐயோ! சார்.. நீங்க சாரி எல்லாம் கேட்க வேணாம். நான் உங்கள தவறாகவே எடுத்துக்கல. இதச் சொல்லவா இவ்வளவு தூரம் வந்தீங்க? நான் கூட பயந்தே போயிட்டேன்! நீங்க எனக்கு ஒரு கிருஷ்ண பரமாத்மா மாதிரி… எனக்குப் பிரச்சனை வரும்போதெல்லாம் காப்பாத்தி இருக்கீங்க. அன்னைக்கு மெரினா பீச்ல நீங்க இல்லாம இருந்திருந்தால், நான் இன்னைக்கு இங்க நின்னுக்கிட்டு இருக்க மாட்டேன். இரண்டு வாரத்தில் வரப்போற எக்ஸாம் என் வாழ்க்கையில் இருந்திருக்காது. நீங்க செய்த உதவிக்கெல்லாம், நான் எப்படி உங்களுக்கு நன்றி சொல்லணும்னு தெரியாம தடுமாறிக்கிட்டு இருக்கேன்.. நீங்க சாரி சொல்லி என்னை இன்னும் கஷ்டப்படுத்துறீங்க!”, கார்த்தி கலக்கத்தோடு கூறினாள்.

Advertisement

”நான் சாரி சொல்ல மட்டும் இங்க வரல!”, அவன் கூறி நிறுத்த, கார்த்தி அவனை மேலும் அதிர்ச்சியோடு பார்த்தாள்.

”நான் நேராவே கேட்கிறேன். உன் காலேஜ் முதல் வருஷம் போட்டிக்காக சென்னை வந்தபோது, என்ன நடந்துச்சு கார்த்தி?”, அவன் வலுவாகக் கேட்க, கார்த்தியின் கைகள் நடுங்கத் தொடங்கின. குளிர்ந்த கடல் காற்றை தோற்கடித்துக்கொண்டு, வியர்வை வழிய ஆரம்பித்தது. முழு உடம்பும் நடுங்கத் தொடங்க, எழுந்து சுவரின் மீது கைகள் ஊன்றி அவன் எதிர்ப்புறம் திரும்பி நின்றாள்.

அவன் கேட்ட கேள்வி தீப்பிழம்பாய் கார்த்தியின் உள்ளே பொங்கிக் கொண்டிருந்த ஆழ்மனதின் காயங்களை, எரிமலையாய் வெடித்து வெளியே இழுத்து வந்தது. வார்த்தைகள் வர மறுத்து விசும்பல்களுக்கு வழி வகுக்க, கதிர் மேலும் தொடர்ந்தான்.

Advertisement

”உனக்கு ஞாபகம் இருக்குதான்னு தெரியல கார்த்தி… நீ முதல் முதல்ல கிளாசுக்கு வந்துகிட்டு இருந்தபோது, தெரியாம உன் மேல மோதிட்டேன். திரும்பி சாரி சொல்லலாம்னு பார்த்தபோது நீ ஒருமாதிரி நடுங்கிப்போய் நின்னுக்கிட்டு இருந்த… சாதாரணமாக தெரியாத ஒருத்தர் மோதினால் வர்ற கோபம் உன்கிட்ட வரல. அதுக்குப் பதிலாக, அருவருப்போடு நடுங்கிட்டு நின்ன. எனக்குத் தெரிஞ்சுது… நான் மோதினதனால வந்த அருவருப்பு இல்ல அது, வேற ஏதோ ஒரு விஷயத்தை நினைச்சு உனக்குள்ள ஏற்பட்ட அருவருப்பு அது. அதே அருவருப்பைதான் பீச்ல மறுபடியும் என்மீது மோதும்போதும் நான் பார்த்தேன். ஏன் இப்படி நடந்துக்கிறன்னு நான் குழம்பின போதுதான், உன் அண்ணன் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. நீ காலேஜ் படிச்சபோது போட்டிக்காகச் சென்னைக்கு வந்துபோன பிறகு, ஆறு மாசம் யார்கிட்டயும் சரியா பேசாம இருந்திருக்க… இது சாதாரண விஷயமில்ல கார்த்தி! வாழ்க்கை முழுக்க நடந்த ஏதோ ஒரு விஷயத்த நினைச்சு எவ்வளவு நாள்தான் உன்னையே நீ துன்புறுத்திக்கப் போற? எவ்வளவு நாள் ஓடிக்கிட்டே இருக்கப் போற? நடந்ததை வெளியே சொல்லவாவது உனக்கு தைரியம் வரணுமில்ல? நீ தானே சொன்ன, நான் உன்னோட கிருஷ்ண பரமாத்மான்னு… அப்போ என்கிட்ட சொல்லு! அன்னைக்கு என்ன நடந்துச்சு?”, அவன் திடமாக கேட்க, அவனை ஆமோதிப்பதுபோல ஒரு பலத்த காற்று வேகமாக வீசி ஓய்ந்தது.

விசும்பலை நிறுத்திக்கொண்டு, தயங்கியபடியே கார்த்தி பேச தொடங்கினாள். ”போட்டி முடிஞ்சு பஸ்ஸுக்காக காலேஜ் பக்கம் இருந்த ஒரு சிறிய பேருந்து நிறுத்தத்துல நின்னுக்கிட்டு இருந்தேன். பாத்ரூம் போகலாம்னு பக்கத்துல இருந்த பெட்ரோல் பங்குக்கு போனேன். அப்போ, அங்கிருந்த நாலு பேர்…”, அதற்குமேல் பேச முடியாமல் அழுகை பொத்துக்கொண்டு வர, சுவற்றில் சாய்ந்தபடி கதறி அழுதாள் கார்த்தி.

”போதும் கார்த்தி… இதுக்கு மேல நீ எதுவும் சொல்ல வேணாம்! இதைப் பத்தி வேற யார்கிட்டயாவது சொன்னியா? உன் அண்ணன், அம்மா, அப்பான்னு யார்கிட்டயாவது இதைப்பத்தி பேசியிருக்கியா?”, அவன் கனிவாக கேட்க, கண்களைத் துடைத்துக்கொண்டு, தொடர்ந்து அழுததால் ஏற்பட்ட விசும்பல்களைக் கட்டுப்படுத்தியவாறு பதிலளித்தாள் கார்த்தி. “யார்கிட்டயும் சொல்லல… வீட்டுல தெரிஞ்சா உடைஞ்சே போயிடுவாங்க! அப்புறம் என்னோட படிப்பையும் அப்பவே நிறுத்தியிருப்பாங்க!… அது நடந்த அடுத்த நாள், நிலைகுலைந்து நான் கிடந்தப்போ அந்த வழியில வந்த ஒரு நல்ல குடும்பம் என்னை எதேச்சையாகப் பார்த்தாங்க. போலீஸ்ல தகவல் சொல்லலாம்னு அவங்க பேசுனது எனக்குக் கேட்டது. என்னால பேச முடியலன்னாலும் முழு பலத்தையும் வரவழைச்சு, போலீஸ்கிட்ட மட்டும்போக வேணாம்னு கெஞ்சி அழுதேன். என் மேல பரிதாபப்பட்டு, அவங்களுக்குத் தெரிஞ்ச டாக்டர்கிட்ட அழைச்சிட்டுப்போய், போலீஸ் கேஸ் எதுவும் வராதபடி சிகிச்சை கொடுத்தாங்க. ஒரு வாரம் சிகிச்சை எடுத்துக்கிட்டேன். மற்ற மாணவிகள் கூட தங்கி, ஒரு வாரத்துல ஊருக்குத் திரும்பி வந்துடுவேன்னு, என் வீட்டுல சொல்லி சமாளிச்சிருந்தேன். ஒரு வாரம் கழிச்சு காயத்தோடு என்னைப் பார்த்ததும் வீட்டில பயந்தே போயிட்டாங்க. வழியில் ஒரு சின்ன விபத்து நடந்துச்சுன்னு சொல்லி அவங்களைச் சமாதானப்படுத்தினேன்…எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு பெரிய துயரம் நடக்கணும்னு நினைச்சு நினைச்சு எவ்வளவு நாள் நான் அழுதிருக்கேன் தெரியுமா?”, மீண்டும் விம்மி அழத்தொடங்கினாள் கார்த்தி.

சில நொடிகள் யோசித்துவிட்டு கதிர் பேச ஆரம்பித்தான். “நமக்கு ஒன்னு நடக்குதுன்னா, அது நல்லதோ, கெட்டதோ, சும்மா நடக்காது கார்த்தி! அந்த நிகழ்வு நமக்கோ, இல்ல நம்ம மூலமாக யாருக்கோ, ஏதோ ஒரு பாடம் கற்பிக்கத்தான் நடக்குது.”

அவளது எதிர்ப்பக்கத்தில் இருந்து எழுந்து, அவள் அருகில் வந்து அமர்ந்து, மீண்டும் தொடர்ந்தான் கதிர். “நான் கேரளாவிலதான் காலேஜ் படிச்சு முடிச்சேன். அப்போதான் களரியும் படிச்சேன். கூடவே, உலகின் எல்லா தற்காப்புக்கலைகளிலிருந்தும் எடுத்து, ஒன்று சேர்த்து உருவாக்கப்பட்ட இஸ்ரேலின் தற்காப்புக்கலையான ’கிரவ் மாகா’வையும் கத்துக்கிட்டேன். நாலு பேர் என்ன, நாற்பது பேர் வந்தால் கூட உன்னை எப்படி காப்பாத்திக்கணும்னு இப்போ நான் உனக்கு சொல்லித்தர்றேன்.. வா!”, என்று கதிர் எழுந்து அவளை அழைக்க, அவளும் கம்பீரமாக எழுந்தாள்.

”நாம எப்போ, எங்கே இருந்தாலும், அந்த இடத்துல நம்ம விழிப்புணர்வு ரொம்ப முக்கியம். நம்ம சுற்றி யார் இருக்காங்க, சிசிடிவி கேமரா எந்த பக்கம் இருக்குது, நாம இருக்கிற இடத்தில தீப்பிடிச்சால் எந்த வழியில் தப்பிக்கணும்கிறது நமக்கு நல்லாத் தெரிஞ்சு இருக்கணும். தாக்குறவனுக்கும், தாக்கப்படுகிறவனுக்கும் இருக்கிற ஒரே ஒரு வித்தியாசம்.. ’பயம்!’… நம்மள திடீர்னு நாலு பேர் சுற்றி வளைச்சால், பயப்படுறதுதான் மனுஷ இயல்பு! அந்த பயம்தான் தாக்குறவனுக்கு ஆயுதம். ஆனால், நாலு பேர் சுத்தி வளைக்கும்போது எவ்வளவு பயம் உள்ள இருந்தாலும், அந்த பயத்தை வெளியே காட்டாமல், தைரியமா அவங்களப் பார்த்துச் சிரிச்சா, அதுதான் நாம அடிக்கிற முதல் அடி! அப்படிச் செய்யும்போது அவங்க குழம்பிடுவாங்க! அவங்களை எப்படியாவது குழப்பணும். அதுதான் நம்மளோட முதல் இலக்கு! எப்பவும் நம்ம முகத்தைப் பாதுகாக்கிற மாதிரி, குத்துச்சண்டையில நிக்கிற மாதிரி கைகளை வச்சிகிட்டு, கால்களை முன்னும் பின்னும் வச்சு நிக்கணும். அதுதான் ஸ்டேபிள் பொசிஷன். அந்த பொசிஷன்ல நீ நின்னாலே, உனக்கு தற்காப்பு கலை தெரியும்ங்கிறது அவங்களுக்கு தெரிஞ்சுடும்! மறுபடியும் குழம்புவாங்க!”, அவன் நிதானமாக கூற, அவள் முழுகவனத்துடன் கேட்டுக் கொண்டிருந்தாள்.

அவன் மேலும் தொடர்ந்தான். ”அவங்க குழம்பி நிக்கிற அந்த கொஞ்ச நேரத்துல, நாம என்ன செய்யணும்னு முடிவு செஞ்சுடனும். எப்பவும் ஓடுறதுக்கு வசதியாக ஒரு இடத்துலதான் நாம நிக்கணும். நம்ம கையில நம்ம பக்கத்துல என்ன ஆயுதம் இருக்குதோ அதை தயாராக வச்சுக்கணும். ஆயுதம்னா, துப்பாக்கி, கத்தி மட்டுமில்ல! நம்மக்கிட்ட இருக்கிற பேனா, ஏன், உன் தலையில் இருக்கிற ஹேர்பின்… எதுவாக வேணாலும் இருக்கலாம். அதை விரல் இடுக்குல வச்சிக்கிட்டு, அந்த நாலு பேர்ல ரொம்ப பலவீனமாக இருக்கிறவன் முகத்தில, ஓங்கி ஒரு குத்து விடணும். அவன் சரிஞ்சதும் அடுத்தவனுக்கு ஒரு குத்து. இரண்டு பேரைத் தாக்குன உடனே, அந்த இடத்தை விட்டு ஓடிடணும். மத்தவங்களுக்குக் கோபம் வந்து துரத்துவாங்க. நாம ஓடுறது ஒளியுறதுக்காக இல்ல பலமான ஆயுதங்களைத் தேடுவதற்கு! அப்படி என்ன கிடைச்சாலும் அதைக்கொண்டு அவர்களைத் தாக்கிடலாம். ஒருவேளை, எதுவுமே கிடைக்கலன்னா, நம்மால அவங்களைத் தாக்க முடியலைன்னா, எப்படி நம்ம பாதுகாக்கணும்னு இப்போ நான் சொல்றேன்!”, அவன் கூறி நிறுத்த அவளுக்குப் புல்லரித்தது.

அவனது வார்த்தைகள் அவளுக்குள் அளவிட முடியாத தைரியத்தை உருவாக்கிக் கொண்டிருந்தன. அவள் அவனை இமைக்காத கண்களுடன் பார்த்துக்கொண்டிருக்க அவன் மேலும் தொடர்ந்தான்.

”பாதுகாப்புக்கு ஒரே ஒரு விதிமுறைதான். வளையத்தை உடைப்பது, வளையம் உருவாகாமல் தடுப்பது! நாலு பேர் நம்ம சுத்தி வளைக்கிறது மட்டும் வளையம் இல்ல! உன் கையை இப்படிப் பிடிச்சால்கூட அது ஒரு வளையம்தான். நான் இப்படி பிடிச்சிருக்கும் போது, நீ மேலும் கீழும் கைய நகர்த்தினால் வளையம் உடையாது. இந்த வளையத்த நல்லா பாரு… அதோட பலவீனமான இடத்த முதல்ல கண்டுபிடி. என்னோட பெருவிரல் மற்ற விரல்களோடு சேர்ற இந்த இடம்தான் என் கைவளையத்தோட பலவீனமான இடம்.. அந்த இடத்தை தகர்க்க, சைடுல உன் கையை இழுத்தாலே, வளையம் உடைஞ்சிடும். இப்படி எந்த வளையத்தையும் தகர்க்கலாம். இல்ல, வளையத்திலிருந்து நழுவி வர முயற்சிக்கலாம்!”, அவன் பரவசத்தோடு கூற பிரமித்தபடியே அவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள் கார்த்தி.

தப்பிப்பதற்கும், தாக்குவதற்குமான சூத்திரங்களை நிதானமாக அவன் கற்பித்துக் கொண்டிருந்தான். எந்த இடத்தில் தாக்கினால் மரண வலி ஏற்படும், எந்த இடத்தில் தாக்கக்கூடாது, என்று ஒவ்வொன்றாக விளக்கினான். அவன் கூறிய ஒவ்வொரு குறிப்பையும் கண்கொட்டாமல் கவனித்துக்கொண்டிருந்தாள் அவள்.

”இப்போ நான் சொல்லிக் கொடுத்த டெக்னிக்ஸ் ஓரளவு உனக்குப் புரிஞ்சுதுன்னா கூட, எந்த ஒரு சூழலையும் உன்னால எளிதில் கையாள முடியும்! ஆனால், டெக்னிக்ஸ் மட்டும் பத்தாது. அதைச் செயல்படுத்த வலுவான உடல் தேவை. அதனால, தினமும் ஒரு பத்து நிமிஷமாவது உடற்பயிற்சி செய்யணும்! சரி… ரொம்ப நேரமா கிளாஸ் எடுத்துட்டேன். உனக்கு எவ்வளவு புரிஞ்சிருக்குன்னு பார்க்கலாம்! இப்போ, நான்தான் அட்டாக்கர்.. என்னை நீ டிஃபென்ட் செய்யணும்!”, என்று சிரித்தபடியே அவன் சவாலாக அவளை அழைக்க, உற்சாகமாக அவள் தயாரானாள்.

அடங்காத காற்று அறைகூவலிட, அசாதாரணமாக நிகழப்போகும் அன்றைய கதிரவனின் யுத்தத்தைக் காண இரவும், நிலவும் தயாராகின.

எளிதாக தொடங்கிய யுத்தம், அவள் இயல்பாக அவனை எதிர்கொள்ளத் தொடங்க, கொஞ்சம் கொஞ்சமாகக் கடினமானது. கதிர் அமைத்துக்கொண்டிருந்த வளையங்களை, அவனே ஆச்சரியப்படும் வகையில் லாவகமாக அவள் உடைத்தெறிந்துகொண்டிருந்தாள். அவளது புத்தி சாதுர்யம் மட்டுமல்ல, அவளுக்குள்ளிருந்து வெளிப்பட்டுக்கொண்டிருந்த அசாத்திய வலிமையும் உறுதியும் அவனைப் புல்லரிக்கச் செய்தது.

“பாக்குறதுக்குப் பலவீனமாகத் தெரியுற உனக்குள்ள, இவ்வளவு வலு இருக்கும்னு எதிர்பார்க்கவேயில்லை..”, பின்னிருந்து அவன் அவளது கழுத்தை சுற்றிக் கைகளை வளைக்க முயல, அதற்குள் அகப்படாதவாறு நழுவியபடி, “ஒரு புத்தகத்தை அதன் அட்டைய வச்சு மதிப்பிடலாமா?”, சிரித்தபடியே அவள் கூறினாள்.

அவனது இரும்புக் கரங்களால் அவளது வலது கையைச் சுற்றிப் பிடிக்க, அவள் தனது இரண்டு கைகளையும் ஒன்றாகக் கோர்த்து, ஓங்கி இழுக்க, அவனது கைவளையம் தகர்ந்தது.

அடுத்தடுத்து வேக வேகமாக அவன் வளையங்கள் அமைக்க, விவேகமாக அவள் அனைத்தையும் தகர்த்தினாள். நிலவின் ஒளியில் இருநிழல்கள் இரவைக் களவாடிக்கொண்டிருக்க, அதை ரசித்துக்கொண்டிருந்த நட்சத்திரங்கள் நாணத்தில் நகைத்துக் கொண்டிருந்தன.

சட்டென அவள் எதிர்பாராத விதமாக அவன் நடனம் போன்றவொரு அசைவை வெளிப்படுத்த, அவனது எதிர்பாராத செயலால் அவள் வாயடைத்து நின்றபோது, கண்ணிமைக்கும் நொடியில் அவளைச் சுற்றி வளைத்து இறுகக் கட்டியணைத்தான்.

அவள் திமிரிக்கொண்டு தகர்த்து வெளியேற முற்பட, “இது களரி! இந்த வளையத்தை உன்னால உடைக்க முடியாது கார்த்தி”, அவளைக் கட்டுப்படுத்தியவாறு அவன் கூறினான். தனது எல்லா சக்திகளையும் கொண்டு, முழுவலிமையோடு அவள் தாக்க, அவன் சிறிதும் அசையாது அவளை அணைத்து நின்றிருந்தான்.

“நான் சொல்றத ஒரு அஞ்சு நிமிஷம் அமைதியாகக் கேளு கார்த்தி. எனக்குத் தெரியுது, உனக்கு இது எவ்வளவு வலிக்குதுன்னு. எனக்காக, ஒரு அஞ்சு நிமிஷம், என்னை எதிர்க்குறத நிறுத்திட்டு, பொறுமையாக நான் சொல்றத மட்டும் கேளு கார்த்தி… ப்ளீஸ்”, அவளை இறுக அணைத்தவாறே கெஞ்சியபடி அவன் கூற, அவள் பற்களைக் கடித்துக்கொண்டே வெளிவந்த கதறலை நிறுத்தத் தொடங்கினாள். திமிரல் கொஞ்சம் கொஞ்சமாக அடங்க, உடல் நடுக்கம் குறைய, வியர்வையும், கண்ணீரும் மட்டும் விடாது வழிந்து கொண்டிருந்தது.

அவன் நிதானமாகப் பேசத் தொடங்கினான். “நான் தேர்வு, தேர்வுன்னு முழுப்பைத்தியமா மாறின சமயம்தான் கனவுமாதிரி உன்னைப் பார்த்தேன். உன்ன நம்ம அகாடெமில பாத்தப்போ, முதல்தடவை பார்க்கிற மாதிரி தோணல. ஏதோ பல ஜென்மங்களாக பழக்கப்பட்ட மாதிரியிருந்துச்சு. பயத்தோட நடுங்கிட்டிருந்த உன்னைப் பார்த்ததும் நான் துடிச்சுப்போயிட்டேன். நீ யார்னு தேடி, உனக்கு வரலாறு எடுக்குறதா இருந்த உதயன்கிட்ட கெஞ்சி பேசி, நான் உனக்கு வகுப்பு எடுக்க வந்தேன். நீ ஏன் அப்படி நடுங்கின? உனக்கு என்ன ஆகியிருக்கும்னு நான் குழம்பிக்கிட்டிருந்த போது, டிஃபன் சென்டர் முன்னாடி நீ ஒரு பிச்சைக்காரனுக்குச் சாப்பாடு கொடுத்து ரசிச்சுக்கிட்டிருந்த. உன்னை நினைச்சு அழறதா, சிரிக்குறதான்னு தெரியாம உன்னை நானும் ரசிச்சிட்டிருந்தேன். எனக்கும் க்ளாஸ்க்கு லேட் ஆனதாலதான், அன்னிக்கு உன்கிட்ட க்ளாஸ்க்கு லேட் ஆகலையான்னு கேட்டேன். நீ பதிலேதும் சொல்லாமலே போய்ட்ட.

ஹாஸ்டல்ல உனக்கு எதிர்ல அதே ஏழாவது மாடியில இருக்கிற அறை என்னோடதுதான். அது தானா அமைஞ்சுது. நீ நைட் படிச்சிட்டு, மொட்டை மாடிக்குப் போகும்போது நானும் எதிர் மாடிக்கு வருவேன். மறைஞ்சு உன்னை ரசிப்பேன். நீ நிலாவ ரசிக்கும்போது, இந்த கதிரவனுக்கு நிலாமேல பொறாமையாக இருக்கும்.

மகளிர் தினத்துக்கு நீங்க பீச் போறிங்கன்னு தெரிஞ்சுதான் ஒரு வாரத்தில எனக்கு இன்டர்வியூ இருந்தும் கூட நானும் அங்க வந்தேன். நேரம் ஆக ஆக எனக்கு ரொம்ப பதற்றமாகிடுச்சு. உனக்கு எதுவும் ஆபத்து வந்துடக்கூடாதுன்னு துடிச்சுட்டேன். நீ ஓடுறத பாத்துட்டு, எந்த திசையில  நீ வருவன்னு தெரிஞ்சுதான் அங்க வந்து நான் நின்னேன்.

கார்த்தி.. உன்னைப் பார்த்த நிமிஷத்திலேருந்து, ஒவ்வொரு நிமிஷமும் என்னோட வாழ்க்கை உன்னைச் சுத்திதான் ஓடிக்கிட்டிருக்குது. வெட்கத்தை விட்டு சொல்றேன் கார்த்தி. நான் உன்னைக் காதலிக்குறேன்.”, அவன் கூறி நிறுத்த, ஏதோ கனவு போல அது கார்த்திக்கு இருந்தது. ஒரு பலத்த காற்று அடித்து வீசிமுடிக்க, தொடர்ந்த ஒரு சலனமற்ற அமைதியைக் கலைத்தவாறே அவன் மேலும் தொடர்ந்தான்.

“இந்த நிமிஷம், நான் உன்னைக் கட்டி அணைச்சிருக்கிற தொடுதல்ல காதலைத் தவிர வேற எதுவும் இல்லை கார்த்தி. இந்தத் தொடுதல் உனக்கு ஏற்பட்ட எல்லாத் தொடுதல்களை விட ரொம்ப பலமானது. ஆழமானது. உனக்கு வாழ்க்கையில என்ன நேர்ந்தாலும், உனக்காக, உனக்காக மட்டும் ஒருத்தன் இருக்கிறான்னு தெரிஞ்சுக்கோ. எப்போல்லாம் உனக்கு அருவருப்பு தோணுதோ அப்போல்லாம், உனக்கு இனிமேல் என்னோட இந்தத் தொடுதல்தான் ஞாபகம் வரும். அது உனக்கு தைரியத்தைக் கொடுக்கும். உனக்குள்ள இருக்குற வலுவை அது எழுப்பிவிடும். நான் உன்னை காதலிக்குறதால, நீ என்னைக் காதலிக்கணும்னு அவசியமில்லை. எனக்கு நீ பதில்கூட சொல்லத் தேவையில்லை. அடுத்த இரண்டு நிமிஷம் அமைதியாக இரு. இந்தத் தொடுதலை முழுமையாக உணர்ந்துட்டுப் போயிடு கார்த்தி…”, அவன் கூறிவிட்டு, அவளை இறுக அணைத்து நிற்க, தீப்பிளம்புகளாய்க் காய்ந்து கிடந்த ரணங்கள் அவளுக்குள் வெடித்துச் சிதறிப் பொசுங்கத் தொடங்கின. வலிகள் வலுவிழக்கத் தொடங்கின. ஆத்மார்த்தமான அவனது அணைப்பு ஆறுதலாக இருந்தது. அந்த ஆறுதல் அவளுக்குத் தேவைப்பட்டது. அவனது அழுத்தமான அணைப்பு அவளின் ஆழமான அழுத்தங்களை அனிச்சையாக அகற்றிக் கொண்டிருந்தது. ஆனந்தத்தின் அணைக்கட்டுகளை நீக்கிக் கொண்டிருந்தது. கனநேரத்தில் கவலைகளைக் களைந்தெறிந்து, கடன்வாங்கிக்கூட கசிய முடியாத வகையில் கண்ணீர்த்துளிகளைக் காணாமல் போகச் செய்திருந்ததது. வார்த்தைகள் மறந்த அந்த கணம், மௌனமானது மோகத்தை மீட்டத் தொடங்கியது.

இருளினை இம்சிக்கும் மின்மினிப்பூச்சி போல, இருண்டிருந்த அவளது இதயத்தில் இமைப்பொழுதில் ஏற்பட்ட மின் அதிர்வுகள் உடல் முழுவதும் பரவி, புதியதாய் ஒரு பரவசத்தை ஏற்படுத்தியது. நடந்துகொண்டிருக்கும் நிமிடங்கள் நிஜம்தானா என்ற சந்தேகத்தை வரவழைத்தது. கற்பனையில் கூட காணமுடியாத அளவு, இவ்வளவு காதலை இவ்வளவு காலமாக ஒருவனால் தேக்கி வைக்க முடியுமாவென வியந்திருந்தாள். கதிரின் காதலில் கரைந்து, அந்த கனத்தின் முழுமையில் கவிழ்ந்து, அவளறியாமல் கிறங்கியிருந்த தருணத்தில், அவன் கரங்களை மெதுவாகத் தளர்த்த, மறந்திருந்த நிஜங்களுக்கு மீண்டுவர மனமில்லாமல்  நின்றிருந்தாள்.

மயக்கத்திலிருந்து முழுவதும் வெளிவர முடியாமல், கிறங்கியபடியே படிக்கட்டுகளை நோக்கி நடக்கத் தொடங்கினாள். அவன் நின்ற இடத்தில் அசையாமல், அவள் செல்வதையே ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான்.

கீழிறங்க முதல் படியில் கால் வைத்த நொடி, சட்டென அவள் திரும்ப, அவன் கண்கள் மூடியபடி அதே இடத்தில் நின்றிருந்தான்.

இன்றைய கனவுகளுக்கான நேற்றைய நெருடல்கள், நினைவில் நிழலாத்தொடங்கின.

***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!