Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நிறம் பாராத காதல்.

நிறம் பாராத காதல் 13 1

✨நிறம் பாராத காதல்✨

✨அத்தியாயம். 13

தன்னை பார்த்துச் சிரித்த பெண்ணைக் கண்டு வைதேகி பயந்து போனாள்.

“அக்கா பயப்புடாதிங்க “என்று அந்தப் பெண் சொல்ல, நீலு இங்க என்ன பண்ற வீட்டுக்குப் போ “என்று கத்திக்கொண்டு அங்கே வந்தான் வேலு.



Advertisement

“போ மாமா நான் போகமாட்டேன் நீ வீட்டுக்கு வா நான் போறேன்”என்று அந்தப் பெண் சொல்ல, “வைதேகி நீ தூங்காம இங்க என்னமா பண்ற? “என்று கேட்டுக்கொண்டே மாறன் இவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்தவனை பார்த்து நீலு என்ற பெண் வேலுவின் பின்னே ஒளிந்து கொண்டாள்.

“அண்ணா இங்க என்ன நடக்குது இத்தனை மணிக்கு இவங்க எல்லாம் ஏன் இங்க அலைஞ்சிகிட்டு இருக்காங்க”என்று வைதேகி பயத்தில் கேட்டதும், “வேலு நீ நிலுவை அழைச்சிட்டு போ “என்று கோவமாகச் சொன்னான் மாறன்.

“நீலு நீ வீட்டுக்குப் போ நான் நாளைக்கு காலையில வரேன் “என்று வேலு சொல்ல, அந்தப் பெண்ணோ முடியாது என்று தலையை அசைத்ததும் வேலு அந்தப் பெண்ணைக் குண்டுக்கட்டாகத் தூக்கிக்கொண்டு போய் மரத்தடியின் கீழ் நின்று இருந்த கருப்பு காரில் வீசியவன், “நான் இவளைக் கொண்டு போய் வீட்டுல விட்டுட்டு வரேன் “என்ற வேலு அங்கிருந்து தன் காரை எடுத்துக்கொண்டு கிளம்பி இருந்தான்.

Advertisement

“அண்ணா என்ன இது ,இங்க என்ன தான் நடக்குது, நேத்து நான் பார்த்துப் பயந்த ஒரு உருவத்துக்குச் சொந்தமான பெண்ணைத் தான் உங்க மச்சான் பொம்மின்னு பெயர் சொல்லி உள்ளே அழைச்சிட்டு போறாரு, நேத்து நான் இந்த டிரைவர் காரில் தூக்கி வீசியதாகச் சொன்ன அந்தப் பெண்ணைத் தான் இப்போ அதே டிரைவர் இங்க இருந்து அழைச்சிட்டு போறாரு, ஐயோ இங்க என்னதான் அண்ணா நடக்குது “என்று புரியாமல் வைதேகி குழப்பத்துடன் மாறனை கேள்வி  கேட்டுக்கொண்டு இருந்தாள்.

Advertisement

“பாப்பா இங்க இருந்து நம்ம எதையும் பேச வேண்டாம். நீயும் நானும் பேசுறதை என் மச்சான் பார்த்துகிட்டு இருப்பான் நீ வா நம்ம உள்ள போகலாம் “என்ற மாறன் வைதேகியை அவன் இருக்கும் பங்காளவிற்குள் அழைத்துச் செல்ல ,இந்தக் காட்சியை த் பங்களாவில் அமர்ந்தபடி சிசிடிவி வழியே பார்த்து இருந்த ரணதீரனின் அருகே கையில் தூரிகையை பிடித்துக்கொண்டு பொம்மி என்ற முப்பத்தி ஐந்து வயதான பெண்மணி சில ஓவியங்களைக் கருப்பு வண்ணத்தில் தீட்டிக்கொண்டு இருந்தார்.

வைதேகியை மாறன் பங்காளவிற்குள் அழைத்துச் சென்றவன் “பாப்பா நீ என் ரூமுக்கு வா” என்று அழைக்க, வைதேகியும் தயக்கத்துடனே மாறனின் அறைக்குச் சென்றாள்.

“மாமா மணி ஆகுது எங்க போனீங்க நீங்க, ஏய் வைதேகி என்னமா மறுபடியும் எதையாவது பார்த்துப் பயந்துட்டியா” என்று மாயா கேட்க, “மாயா…நேத்து நைட் வைதேகி பார்த்துப் பயந்தது வேற யாரையும் இல்ல பொம்மியை தான்” என்றான் மாறன்.

Advertisement

“அட பாவமே பொம்மியை பார்த்தா நீ மயங்கி விழுந்த “என்று மாயா கேட்க, “அவங்க யாரு!? நடுராத்திரியில் அவங்க ஏன் இந்த வீட்டுக்கு வராங்க “என்று தன் பயத்தை மறைத்துக்கொண்டு சந்தேகத்தைக் கேட்டாள் வைதேகி.

“முதல்ல நீ இப்படி உக்காரு வைதேகி “என்ற மாறன் அவள் எதிரே உள்ள நாற்காலியில் அமர்ந்தவன் அருகே மாயாவும் அமர்ந்து இருக்க, சிறுமி மயில் நிம்மதியாகக் கட்டிலில் உறங்கிக்கொண்டு இருந்தாள்.

“வைதேகி …நீ நேத்து பார்த்த அந்தப் பொண்ணோட பெயர்
பொம்மி, பொம்மியோட அப்பா இந்தப் பங்களாவில் டிரைவர்  வேலை பார்ததாரு, அவர் பெயர் கண்ணையா.ரொம்ப நல்ல மனுஷன்.

என் மச்சான் ரணதீரனுக்கு சின்ன வயசுல இருந்தே நண்பர்கள் இல்லை, காரணம் ரணதீரனின் நிறத்தை வைத்து அவனைக் கூடப் படிக்கிற எல்லோரும் கேலி பண்ணுறதால அவன் தனக்குனு எந்த நட்பும் தேவையில்லைனு முடிவு பண்ணிட்டான்.

ரணதீரனுக்கு ஓவியம்னா உயிர்.அவன் முறையாக ஓவியம் பயிலப் பக்கத்து ஊருக்குப் போய்ப் படிச்சிட்டு வந்தான்.

அப்போ கூட அவன் அங்க யாரிடமும் பேசமாட்டான்.தனிமை தான் அவனுக்கு ரொம்ப பிடிக்கும், அப்போ தான் கண்ணையா மகள் பொம்மி அவங்க அம்மாவை இழந்துட்டு அவங்க அப்பா கூடவே தங்கிடலாம்னு இந்த ஊருக்கு வந்து இருந்தாள்.

பொம்மிக்கும் கண்ணையாவுக்கும் எங்க அத்தை இங்கேயே தோட்டத்து பக்கம் தங்கிக்க வீடு கொடுத்தாங்க, அப்போ தான் பொம்மிகூட என் மச்சான் ரணதீரனுக்கு நட்பு ஆரம்பித்தது, நட்ப்புன்னு சொல்றதை விட, பொம்மியை ரணதீரன் அவனோட அக்காவாகத் தான் நினைத்தான்.

பொம்மியும் ரணதீரனை போலத் தான், தோலின் நிறம் கருப்பு, ஆனா தங்கமான பொண்ணு.திறமையான பொண்ணும் கூட.ரணதீரன் பாதி நேரம் பொம்மி கூடத் தான் இருப்பான்.
பொம்மிக்கு ரணதீரன் தான் ஓவியம் கத்துக்கொடுத்தான்.

பொம்மி மேற்கொண்டு படிக்க என் அத்தை ஏற்பாடு பண்ணாங்க, ஆனா பொம்மியோட அழகையும் நிறத்தையும் காரணம்காட்டி அவ போற இடத்துல எல்லாம் அவளைக் கேலி பொருளா தான் பார்த்தாங்க, கல்யாண வயது கடந்தும் பொம்மியை கல்யாணம் பண்ணிக்க யாருமே முன் வரல.

பொம்மியோட நிலைமையை எண்ணி அவங்க அப்பா ரொம்ப கவலைப்பட்டாரு, பொம்மி தன் அப்பாவைப் பார்த்து ரொம்பவே வருத்தப்பட்டா, பொம்மி சோகமா இருந்தா ரணதீரன் சாப்பிடாம அவளுக்காகக் கஷ்டப்படுவான்.

அப்போ பொம்மிக்கு முப்பது வயது இருக்கும், பொம்மியோட சொந்தக்கார பையனே அவளைக் கல்யாணம் பண்ணிக்கிறதா அவங்க அப்பா சொன்னதால பொம்மியை நம்ம வீட்டு பெண்ணாக எண்ணி அத்தையும் சீர் வரிசை பணம்னு மாப்பிளை வீட்டுக்கு அள்ளிக் கொடுத்தாங்க,

போதாக்குறைக்கு ரணதீரனும் பொம்மியை அக்காவாக எண்ணி, அவளுக்கு வரப் போற மாப்பிளைக்கு இவங்க நிச்சிய சமயத்துல கிட்டத்தட்ட பத்து பவுன்க்கு மேல சங்கிலி போட்டான், நிச்சியம் கூட நல்லபடியா தான் முடிந்தது,

கல்யாண தேதியும் குறிச்சிட்டாங்க, விடிந்தால் கல்யாணம், பொம்மியை இங்க இருந்து தான் கோவிலுக்கு அழைச்சிட்டு போக ஏற்பாடு பண்ணோம், திடீர்ன்னு மாப்பிளையோட அம்மா இந்தக் கல்யாணம் நடக்காது என் பையனை நேத்து நைட்டுல இருந்து ஆளையே காணோம்னு ஒப்பாரி வச்சி எல்லோர் தலையிலும் இடியை தூக்கி போட்டாங்க.

மனகோலத்துல இருந்த பொம்மிக்கு எப்படி ஆறுதல் சொல்லுறதுனு தெரியாம நாங்கெல்லாம் தவித்துப் போனபோது, பொம்மியோட அப்பா கண்ணையா தன் மகள் கல்யாணம் மனமேடை வரைக்கும் வந்து நின்னு போனதை தாங்கிக்க முடியாம அதே இடத்துல உயிரையே விட்டுட்டாரு.

கல்யாண வீடு இழவு வீடாக மாறிடுது, தன் அப்பா இறந்ததுமே பொம்மி மனநிலை பாதிக்கப் பட்டு யாரிடமும் பேசாம, ஏன் பகல்ல கூட வீட்டை விட்டு வெளியேவே வராம இருட்டுலயே முடங்கி இருக்க ஆரம்பிச்சாள்.

கண்ணையாவோட இறுதி சடங்கைக் கூட ரணதீரன் தான் முன்ன நின்னு பண்ணினான். பொம்மியோட அப்பா இறந்ததும் அவ அனாதையா ஆகிட்டா, ஆனா அவளுக்கு இன்னவரை தம்பியா, தோழனா, ஏன்! ஒரு அப்பாவா கூட ரணதீரன் தான் இருக்கான்.

பொம்மி பகல்ல தோட்டத்து வீட்டுல இருந்து வெளியே வரவே மாட்டாள், இரவு நேரத்துல தான் நம்ம பங்களாகுள்ள சுத்திகிட்டு இருப்பாள். அத்தை கூட அவளை எங்காவது மனநல காப்பகத்துல சேர்த்து விடலாம்ன்னு சொன்னங்க, ஆனா ரணதீரன் தான் உங்க பொண்ணு இந்த நிலைமையில இருந்தால் அவங்கள இப்படி அனாதையா விட்டுடுவீங்களான்னு கேட்டான்.

பொம்மி என் கூடப் பிறக்காத சகோதரி, அவங்கள நான் பார்த்துக்குறேன்னு சொன்னதோடு மட்டும் இல்லாம கிட்டத்தட்ட நான்கு வருஷமா பொம்மியை ரணதீரன் தான் ஒரு குழந்தையைப் பார்த்துக்கொள்வதை போலப் பார்த்துக் கொண்டு வருகின்றான்” என்று மாறன் நேற்று இரவு வைதேகி பார்த்துப் பயந்த கருப்பு உருவத்துக்குச் சொந்தமான பொம்மியின் கதையைப் பற்றிச் சொல்லி முடித்தான்.

பொம்மியின் கதையைக் கேட்டு வைதேகியின் மனதில் வலி கூடி போனது,

“ஆனா அண்ணா..பொம்மி யாருன்னு சொல்லிட்டீங்க, அப்போ வேலு காருல ஏத்திகிட்டு போன பொண்ணு யாரு?” என்று வைதேகி மேலும் தன் சந்தேகத்தைக் கேட்டதும், “அந்தப் பொண்ணு தான் நீலவேணி” என்றாள் மாயா.

“நிலவேணி யாரு?” என்று வைதேகி மீண்டும் கேள்வி எழுப்ப, “என்னதான் பொம்மியை குழந்தையாக எண்ணி ரணதீரன் பார்த்துக் கொண்டாலும், பொம்மிக்கு தேவையான விஷயங்களைப் பண்ண ஒரு பொண்ணோட துணை தேவைப்படுமே, அதான் பொம்மியை குளிப்பாட்டி அவளைப் பார்த்துக்க நீலவேணியை வேலைக்குச் சேர்த்து இருந்தான்” என்று மாறன் சொன்னதும்,

“ஆனா.. அந்தப் பொண்ணை ஏன் வேலு காருல தூக்கி வீசணும்” என்று வைதேகி குழப்பத்துடன் கேட்டாள்.

“அதுவா… இந்த நீலவேணி நம்ம டிரைவர் வேலுவை லவ் பண்ணுறாள்,அவனுக்கும் அவளை ரொம்ப பிடிக்கும், ஆனா ரணதீரனுக்கு கல்யாணம் முடியாமல் வேலு கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லி இருக்கான், அதனால இந்த நீலு பொண்ணு எப்போ பாரு வேலு கூட வம்பு பண்ணி இரவு பகலுனு பார்க்காம என்னை வேலுவை கல்யாணம் பண்ணிக்க சொல்லுங்கன்னு ரணதீரன்கிட்ட பஞ்சாயத்து வச்சிக்கிட்டு இருப்பாள், வேலுவும் பொறுத்து பொறுத்து பார்த்துட்டு அவளைக் குண்டுகட்டா தூக்கி காருல போட்டுக்கிட்டு அவளோட வீட்டுல கொண்டு போய் விட்டுட்டு வருவான்” என்று மாறன் ஒரு வழியாக நேற்றைய இரவு வேலு காரில் தூக்கி வீசிய பெண்ணைப் பற்றிய உண்மையையும் சொல்லி முடித்தான்.

“வைதேகி…என் தம்பி ஒரு விசித்திரமான ஆளு, அவன் எல்லோரிடமும் சிரித்து பேசமாட்டான். ஆனா அவனுக்கு ஒரு ஆளைப் பிடித்துப் போச்சுனா அவங்களுக்காக என்னவேனாலும் பண்ணுவான். நாலு வருஷத்துக்கு முன்னாடி தான் இந்த வேலுவை என் தம்பி ரணதீரனுக்கு தெரியும், ஆனா இப்போ பாரு வேலு டிரைவர் என்பதை மீறி ரணதீரனுக்கு நண்பனாக மாறிட்டான். எங்க யாருக்கும் தெரியாம வேலுவுக்கு புது காரே வாங்கிக்கொடுத்து இருக்கான்”என்று மாயா சொல்ல, பார்த்த கணத்திலிருந்து ரணதீரனின் கோவத்தை மட்டுமே கண்டு அவனைக் கொலையாளியாகப் பாவித்துத் தவறாக எண்ணி இருந்த வைதேகிக்கு தன் முட்டாள் தனத்தை நினைத்து முதல் முறை கோவம் எழுந்தது.

“உனக்கு இன்னோரு விஷயம் தெரியுமா!!என் தம்பியோட பங்களா இருக்கே அங்க இதுவரை நாங்க யாருமே போனது இல்ல, ஏன் என் அம்மா கூடப் போனது இல்ல” என்று மாயா சொன்னதும், “என்ன சொல்லுறீங்க? உங்க அம்மா கூடப் போனது இல்லையா?” என்று ஆச்சிரியமாகக் கேட்டாள் வைதேகி.

“ஆமா வைதேகி, அந்தப் பங்களாக்குள்ள அவன் என்ன தான் பண்ணுவான்னு எங்க யாருக்குமே தெரியாது, இந்த வீட்டுல இருந்து என் பொண்ணு மட்டும் தான் இதுவரை அந்தப் பங்களாக்குள்ள போயிட்டு வந்து இருக்காள், அப்புறம் வேலு, பொம்மி இவங்க ரெண்டு பேர் போவாங்க, எனக்குத் தெரிந்து நீலவேணியை கூட அவன் பங்களாக் குள்ள விடமாட்டான்” என்று மாறன் சொன்னதும், “ஏன் விடமாட்டாரு? ” என்று வைதேகி புரியாமல் கேட்டாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!