Skip to content
Post Views: 4,444
நிறம் பாராத காதல்
அத்தியாயம் – 25(1)
ரணதீரனின் மனநிலையை வைதேகி விவரித்துச் சொன்னதுமே மாயாவின் கண்கள் கலங்கியது.
“தீரன் ஓவியங்களை நண்பர்களாக நினைப்பது ஹல்லூசினேஷன்.
ஓவியங்கள் அவரிடம் பேசுவதாகக் கருதுவது ஆடியட்டரி ஹல்லூசினேஷன்.
அவர் எண்ணங்களை ஓவியங்களுடன் தொடர்புபடுத்துவது ரியாலிட்டி டிஸ்டோர்சியன்.
இப்படிப்பட்ட மனநிலை மாற்றத்தில் தான் ரணதீரன் பாதிக்கப்பட்டு இருக்கிறார்” என்று தெளிவாக எடுத்துரைத்தாள் வைதேகி.
Advertisement
ரணதீரனின் செய்கையில் முன்பே வேலுவிற்கு சந்தேகம் இருந்த நிலையில்,”ராணா இந்த மனநோயிலிருந்து மீள என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான்.
“மனநல ஆலோசனை, முறையான சிகிச்சை, மருந்துகள் ஆகியவற்றின் மூலம் தீரன் முழுமையாக மீள முடியும்,
தீரனை தனிமையில் விடாமல் எப்பொழுதும் நாம் அவருடன் இருக்க வேண்டும். அவருடைய சுகத் துக்கங்களை பகிர்ந்து கொள்வதற்கு தோழியாகவும் மனைவியாகவும் நான் இருக்கின்றேன் என்று அவர் நம்ப வேண்டும்” என்றாள் வைதேகி.
தன் தம்பிக்காகவே வைதேகியை இறைவன் அனுப்பி வைத்துள்ளான் என்று நினைத்த மாயாவின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது.
Advertisement
“நீங்கக் கவலைப்படாதீங்க அண்ணி. இப்போ தீரனுக்கு இருக்கிற ஒரே பிரச்சனை அவருடைய தாழ்வு மனப்பான்மை தான்” என்றாள் வைதேகி.
Advertisement
“அதைத் தகர்த்த நம்ம என்ன பண்ணறது?”என்று மாறன் கேட்டான்.
“அவர் எப்போ தாழ்வு மனப்பான்மையில் மூழ்கிறாரோ அப்போதுதான் அவர் காதில் தன் நண்பன் பேசுவதாக நினைத்து அவர் மூளையில நெகட்டிவ் தாட்ஸ் உருவாகுது. அதனால அவரை ரொம்ப யோசிக்க விடாமல், அதே சமயம் அவருக்கே தெரியாமல் ஒரு சில மருந்துகளை எல்லாம் அவரை உட்கொள்ள வைத்தால் கண்டிப்பா ரணதீரனும் நார்மலான வாழ்க்கையை வாழத் தொடங்கிடுவாரு” என்று வைதேகி வாக்குறுதி கொடுத்தாள்.
“அவனுக்கே தெரியாமல் எப்படி மருந்து தர முடியும்?”என்று பொம்மி சந்தேகமாகக் கேட்டதும்,
“நான் ஏன் இருக்கேன்!? அதெல்லாம் நான் பார்த்துப்பேன்” என்றாள் வைதேகி.
Advertisement
“ஏன் வைதேகி! அப்போ ராணா உன்னைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டான்னா?” என்று மாயா வருத்தத்துடன் கேட்தும் வைதேகி அவளைப் பார்த்து அர்த்தமாகச் சிரித்தாள்.
“அண்ணி…தீரன் என்னைக் காதலிக்கிறாரு. அது எனக்கு நல்லாவே தெரியும். சீக்கிரமா அவரே எங்க திருமணத்தை நடத்தி வைக்கச் சொல்லுவாரு” என்ற வைதேகியின் நம்பிக்கையைப் பார்த்து அனைவரும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
“அண்ணா… தீரனுக்கு இப்படியொரு பிரச்சனை இருக்குன்னு அவருக்கோ, அத்தைக்கோ தெரிய வேண்டாம்.
நானே தீரனை குணப்படுத்துவேன்”
என்று வைதேகி சொல்ல, அதே தருணம் அந்த அறையிலிருந்து சோர்வாக வெளியே வந்தான் ரணதீரன்.
“என்ன தீரா! இப்போ உடம்பு எப்படி இருக்கு?”என்று வைதேகி கேட்டதும்,
“ஏய்… நீ ஏன் எனக்கு ஊசி போட்ட?” என்று கேட்டான் ரணதீரன்.
“தீரா…இப்ப ஒரு புதுவிதமான வைரஸ் பரவுது. அதுக்காக நாங்க எல்லாரும் தடுப்பூசி எடுத்துக்கிட்டோம். உங்களுக்கு ஊசின்னா பயம்னு கேள்விப்பட்டேன். அதான் நீங்க அசந்த நேரத்துல போட்டேன்”
என்று கண்கள் சிமிட்டி அழகாய் சூழ்நிலயை சமாளித்தாள் வைதேகி.
“அது சரி! பொம்மியை பரிசோதனை பண்ணியாச்சா? இப்ப அவங்க எப்படி இருக்காங்க?” என்று ரணதீரன் கேட்டான்.
“அக்கா நல்லா இருக்காங்க. இனி அவங்களுக்கு பிடித்த வேலை ஒன்றை ஏற்பாடு பண்ணி கொடுத்தால் போதும்” என்ற வைதேகி வேலுவின் காரில் ஏறி அமர்ந்து கொண்டாள்.
மருத்துவமனையிலிருந்து அனைவரும் வேதநாயகியின் பங்களாவிற்கு சென்றார்கள்.
ரணதீரன் அவன் பங்களாவிற்கு சென்றால்தானே அவன் ஓவியங்களிடம் பேச நேரிடும் என்று எண்ணிய வைதேகி கடுகளவும் அவனை விட்டுப் பிரியக் கூடாது என்று முடிவெடுத்தாள்.
உறங்கும் நேரத்தில் மட்டும் ரணதீரன் தன் பங்களாவிற்கு செல்லும் முன்னே அவன் உட்கொள்ளும் சாப்பாட்டில் அவனுக்கான மருந்தைச் சேர்த்து ரணதீரனை சாப்பிட வைத்ததால் இரவு நேரங்களில் எந்த வித மன குழப்பமும் இல்லாமல் உறங்கி எழுந்தான் ரணதீரன்.
அடுத்து வந்த சில நாட்களிலும் எந்த நேரமும் ரணதீரனை சுற்றி குடும்பமாக அமர்ந்து வேடிக்கையாகப் பேசுவது மட்டுமில்லாமல், அவ்வப்போது தன் காதலையும் ரணதீரனிடம் வெளிப்படுத்திக் கொண்டு இருந்தாள் வைதேகி.
விரைவில் ரணதீரனுக்கும் வைதேகிக்கும் திருமணத்தை முடித்து வைக்க வேண்டும் என்று ஆசை கொண்ட வேதநாயகியிடம், ‘முதலில் அவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட பிறகு திருமண தேதியைக் குறித்து விடலாம்’ என்று நம்பிக்கை தெரிவித்தான் மாறன்.
மாறனின் வார்த்தைக்கு ஏற்ப, முன்பை விட அதிகமாகவே ரணதீரன் வைதேகி உடன் நேரத்தைச் செலவழித்தவன் அவ்வப்போது வைதேகி காதலில் மயங்கித் தான் போனான்.
மனநல மருத்துவரான வைதேகிக்கு ரணதீரனின் பிரச்சனையைச் சரி செய்து அவனை நல்வழி படுத்துவது சுலபமாகத்தான் இருந்தது.
இப்படியாக ரெண்டு வாரம் கடந்தது.
அன்றைய தினம் வீட்டில் உள்ள அனைவரும் ஒவ்வொரு வேலையாக வெளியே சென்று இருந்தார்கள்.
மாயா தன் குழந்தையுடன் விளையாடிக் கொண்டு இருந்தாள்.
வைதேகி தன் அறையிலிருந்து வெளியே வந்தவள்,”தீரா!போகலாமா?” என்று கேட்டாள்.
“என்ன வைதேகி வெளிய கிளம்புறியா?” என்று மாயா கேக்க, “ஆமா அண்ணி. தீரனும் நானும் என் தாத்தா பாட்டியைப் பார்த்துட்டு வரப் போறோம்” என்றாள் வைதேகி.
“அட! நேத்து நீ அம்மாகிட்ட சொன்னதை நான் மறந்தே போயிட்டேன். சரி சரி பார்த்துப் போயிட்டு வாங்க” என்ற மாயா தன் தோளில் விளையாடியப்படியே உறங்கிக்கொண்டு இருந்த சிறுமியுடன் அவள் அறைக்குச் சென்றாள்.
மாயா சென்றதும்,”தீரா கிளம்பலாமா?என்று மீண்டும் வைதேகி கேட்க,
அவள் அழகினை மௌனமாக ரசித்தபடியே நின்றிருந்த ரணதீரன், தன்னை சற்று ஆஸ்வாஸப் படுத்திக்கொண்டு வாசலில் நின்ற ஜீப்பை நோக்கி நடந்தான்.
இப்போதெல்லாம் வைதேகியை ரணதீரன் ரசிக்கத் தொடங்கியிருந்தான். அவளின் அருகாமையில் இவனுக்கு ஒரு நிம்மதி இருந்தது. அவள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும், அவள் காதல் பார்வையும், அவனுள் புதைய தொடங்கியது.
இவ்வளவு மாற்றங்கள் அவனுள் நிகழ்ந்திருந்தாலும், தனது உணர்வுகளை வெளிப்படுத்தும் இடத்தில் மட்டும், என்னவோ ஒரு நெருடல் அவனைக் ஆட்க் கொண்டிருந்தது.
வைதேகியின் பாட்டி வீட்டை நோக்கி ஜீப்பை ஓட்டிக்கொண்டிருந்தாலும், அவன் கருப்பு கண்ணாடிக்குள் மறைந்திருந்த கண்கள் அவளையே தேடிக் கொண்டிருந்தன.
அவள் அருகிலிருந்தால் போதும் என்கிற பாசத்தோடு, ஒவ்வொரு முறையும் சுண்டியிழுக்கப்பட்டது போல் அவளையே ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.
“தீரா… அடிக்கடி என்னைப் பார்த்துக்கிட்டே, மறுபடியும் வண்டியை நீங்கப் பள்ளத்துல இறக்கிடாதீங்க” என்றாள் வைதேகி அவன் கள்ளபார்வையை ஏற்கெனவே அறிந்து கொண்டவள் போல.
“நான் ஏன் உன்னைப் பார்க்கப் போறேன்” என்றவன் தனக்குள் சிரித்தப்படியே வைதேகியின் பாட்டி வீட்டை நோக்கித் தன் ஜீப்பை விரட்டினான்.
இருவரிடத்திலும் மௌனம் நிறைந்து இருக்க, “ஏன் தீரா… நீங்கச் சின்ன வயசுல யாரையாவது காதலிச்சு இருக்கீங்களா?” என்று கேட்டாள் வைதேகி.
“ஏன்!? சொன்னால் சேர்த்து வைக்கப் போறியா?” என்று கேட்டான்.
“ஐயோ… அவளை உங்ககூட சேர்த்து வைச்சிட்டா அப்புறம் என் கழுத்துல யாரு தாலி கட்டுவாங்க!?” என்று பதற்றத்துடன் பேசுவதை போலப் பாவனை செய்தாள்.
“ஏன்… உனக்கு என்ன குறை! நீ இப்போ ஓகே சொன்னால் கூட உன்னைக் கல்யாணம் பண்ணிக்க எத்தனையோ ஹீரோக்கள் ரெடியா தான் இருப்பாங்க” என்றவனின் கன்னத்தைப் பிடித்துக் கோவமாகக் கிள்ளினாள் வைதேகி.
“ஆ…வலிக்குது டி!” என்று வலியால் ரணதீரன் கத்தியதும், “இப்படியே நீங்கப் பேசிட்டு போனால் அடுத்து கதம் கதம் தான்” என்று தன் வலது கையால் அவன் கழுத்தை சீவுவது போலப் பாவனை காட்டினாள் வைதேகி.
அவளின் செய்கையைப் பார்த்துச் சிரித்தவன், “ஆமா நீ யாரைவது லவ் பண்ணிருக்கியா?”என்று கேட்டான்.
“என் அப்பா மேல எனக்கு அலாதி பிரியம். அவருக்குப் பிறகு நான் உங்களைத் தான் ரொம்ப ரொம்ப அதிகமா நேசிக்கிறேன்” என்றவளின் வார்த்தையைக் கேட்டு ரணதீரனின் இதயத்தில் இதமான உணர்வு எழுந்தது.
இவர்கள் இருவரும் நண்பர்களைப் போலப் பேசிக்கொண்டு இருக்க, ரணதீரன் விரட்டிய ஜீப்பும் வைதேகியின் பாட்டி வீட்டைச் சென்றடைந்தது.
“நீ உள்ள போ. நான் ஜீப்ல வெயிட் பண்ணுறேன்” என்ற ரணதீரனை பார்த்து,
“இப்போ உள்ள வரிங்களா, இல்லை நான் இங்க இருந்தப்படியே கனடாவிற்கு போகவா?” என்று கோவமாகக் கேட்டாள் வைதேகி.
இவர்கள் இருவரும் வாசலில் நின்றப்படி பேசிக்கொண்டு இருந்ததை பார்த்து,”அம்மாடி சித்ரா உள்ள வா மா… தம்பி நீங்களும் உள்ளே வாங்க” என்று தன் பேத்தியையும் ரணதீரனையும் செண்முகம் வரவேற்றர்.
“தாத்தா எப்படி இருக்கிங்க!?” என்ற வைதேகி சட்டென்று ரணதீரனின் கையைப் பிடித்து வீட்டுக்குள் அழைத்து வந்தவளின் பின்னே இவனும் சிறுபிள்ளையை போல நடந்து வந்தான்.
தன் பேத்தியைப் பார்த்த சந்தோஷத்தில்,
“வா சித்ரா…”என்று அழைத்த வள்ளியும், பவானியும் இவர்களைப் பாசமாக வரவேற்றார்கள்.
ரங்காராவ் இல்லாத வீட்டில் நிம்மதியாகவும் உரிமையாகவும் தன் தாத்தா பாட்டியிடம் சந்தோசமாகப் பேசிக்கொண்டு இருந்தாள் வைதேகி.
இவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து இருக்க,”பாட்டி… நான் கனடாவிலிருந்து எடுத்து வந்த என்னோட லக்கேஜ் எங்கே?” என்று வைதேகி கேட்டதும், “உன் ரூம்ல தான் இருக்கு சித்ரா” என்றார் பவானி.
“தீரா…நீங்கத் தாத்தா பாட்டிகிட்ட பேசிகிட்டு இருங்க. நான் போய் என்னோட திங்ஸ் எல்லாம் எடுத்துட்டு வரேன்” என்றப்படி தன் அறைக்குள் சென்றாள் வைதேகி.
அங்கிருந்த அலமாரியிலிருந்து பல வருடங்களாக இவர்களின் நினைவுகளைச் சுமந்திருக்கும் குடும்ப புகைப்பட ஆல்பங்களை எல்லாம் தன் லக்கேஜில் பத்திரமாக எடுத்து வைத்தாள்.
இதுநாள் வரை ரணதீரனின் அக்கா மாயாவின் அளவைக் கொண்ட ஆடைகளை உடுத்திய வைதேகி, இன்று அவளின் ரசனைக்கேறப்ப அவளுடைய அளவை சரியாகக் கொண்டு தைத்து வைத்திருந்த மஞ்சள் நிற பட்டு ரவிக்கையை எடுத்து அணிந்து கொண்டாள்.
கண்ணாடி முன் நின்று ஒரு நொடி தன்னை பார்த்துக்கொண்ட வைதேகி, அவள் ரவிக்கையின் பின் கழுத்தின் அளவை மேலும் கீழே இறக்கிக் கொண்டவள் மஞ்சள் நிற பாவாடையும் சிவப்பு நிற தாவணியையும் கட்டிக்கொண்டாள்.
கூந்தலை அள்ளி அழகாகக் கொண்டையிட்டு, கம்மல் ஜிமிக்கி அணிந்து கண்ணாடியில் அவளைத் திருப்தியாகப் பார்த்துக்கொண்டவள் தன் அறையின் கதவைத் திறந்துகொண்டு ரணதீரன் முன்னே வந்து நின்றாள்.
இதுவரை வைதேகியை பாவாடை தாவணியில் பார்த்திடாத ஓவியன் ரணதீரனுக்கு அவன் விரல்கள் அவளின் அழகை சித்திரமாகத் தீட்டுவதற்க்காகத் தூரிகையை தேடிக்கொண்டு இருந்தது.
“தீரா…பக்கத்துல ஒரு கோவில் இருக்கு. வாங்க போயிட்டு வரலாம்” என்று வைதேகி அழைத்தாள்.
“ஆமா தம்பி! எங்க குலதெய்வம் ரொம்ப சக்தி வாய்ந்த தெய்வம். போயிட்டு வாங்க” என்று வைதேகியின் பாட்டி சொல்ல, ரணதீரனும் வைதேகியும் அந்த ஊரில் புகழ்பெற்ற அழகநாச்சி அம்மன் கோவிலுக்குச் சென்றார்கள்.
வைதேகியின் அழகில் தன்னை மறந்த ரணதீரன், அந்தக் கோவில் வாசலைப் பார்த்ததுமே அவன் முகத்தில் வேதனை, கோபம், அவமானம் என்று அணைத்தும் ஒரே நேரத்தில் அவன் கண்களில் தெரிந்தது.
“இந்தக் கோவில்!
இல்ல நான் இந்தக் கோவிலுக்கு வரமாட்டேன்” என்ற ரணதீரனை கோவிலுக்குள் வலுக்கட்டாயமாக வைதேகி அழைத்துச் செல்ல, “நான் உள்ளே வரமாட்டேன்” என்று பிடிவாதம் பிடித்தான் ரணதீரன்.
“தீரா… இது தான் எங்க குலதெய்வ கோவில். இங்க எனக்கு ஒரு வேண்டுதல் இருக்கு” என்ற வைதேகி ரணதீரனை அழைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தாள்.
பல வருடங்கள் கடந்து அந்தக் கோவிலைப் பார்த்த ரணதீரனுக்கு அவனின் பதினெட்டு வயதில் இதே கோவிலில் ராமுவால் அவமானப்பட்ட நிகழ்வுகள் தான் நினைவுக்கு வந்தது.
அவன் மனநிலையை அறிந்த வைதேகி,
“ஐயோ தீரா! என் முதுகுல ஏதோ ஓடுற மாதிரி இருக்கு என்னனு பாருங்க” என வேண்டுமென்று சொன்னாள்.
அவள் பதற்றத்தை கண்டு, தன் எண்ணங்களை மறந்தவன்,”என்ன ஆச்சு?”என்றப்படி வைதேகியின் முதுகை பார்க்க, அவள் முதுகில் சிவப்பு நிறத்தில் திரிசூலம் மச்சம் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தான்.
“இந்த மச்சம்!” என்ற ரணதீரனை பார்த்து, “இதுவா! இது நான் பிறந்ததில் இருந்தே இருக்கு தீரா” என்றாள் வைதேகி.
வைதேகியின் வார்த்தையைக் கேட்டு ரணதிரனுக்கு ஒன்றுமே புரியாமல் போனது.
“தீரா…இந்த மச்சத்தை நினைத்தாலே நான் பண்ண தவறு தான் என் நினைவுக்கு வரும்”என்று வருத்தத்துடன் சொன்னாள் வைதேகி.
“என்ன சொல்ற! தவறா?” என்று புரியாமல் கேட்டான் ரணதீரன்.
“ஆமா தீரா! சில வருடத்திற்கு முன்னாடி நான் கனடாவிலிருந்து இங்க வந்திருக்கும்போது, இந்த ஊர் ஓவிய பள்ளியில் சேர்ந்துருந்தேன். ஆனா கனடாவில் அப்பாவுக்கு முக்கியமான வேலைன்னு நாங்க உடனே திரும்ப வேண்டியதா போச்சு.
கனடா கிளம்புவதற்கு முன் இந்தக் கோவிலுக்கு வந்திருந்தேன். அன்னிக்கி இதே கோவில்ல, ஓவிய வகுப்பில் என்கூட படித்த ராமு என் முதுகுல இருந்த மச்சத்தை தொட்டு பார்த்தான்,
ஆனா நான் ராமுன்னு நினைச்சு அப்பாவியான வேற ஒருவரை அடித்து, ரொம்ப பெரிய தவறை பண்ணிட்டேன்”
என்ற வைதேகியின் வார்த்தைகள் ரணதீரனின் காதில் தேனாய் பாய்ந்தது.
“என்ன சொல்லுற வைதேகி!? அப்போ உன்னைத் தவறாகத் தீண்டியது ராமுன்னு உனக்குத் தெரியுமா!?” என்ற ரணதீரனின் கண்களில் ஆச்சரியம் மிளிர்ந்தது.
“என்னைத் தொட்டது ராமு தான்னு எங்க டிரைவர் அண்ணன் தான் சொன்னாரு தீரா. உண்மை தெரிஞ்ச பிறகு நான் அடித்தவரை தேடி மன்னிப்பு கேட்கணும்னு நினைச்சேன். ஆனா இன்னவரைக்கும் அவரை நான் பார்க்கவே முடியல” என்ற வைதேகியின் வார்த்தையில் தன் மனதில் உள்ள பாரங்கள் இறங்கியதைப் போல உணர்ந்தான் ரணதீரன்.
கவலையாக நின்று இருந்த வைதேகியை பார்த்து,”அப்போ! என்னை அடித்த அந்த அழகி நீ தானா!?” என்று கேட்டான் ரணதீரன்.
“என்ன சொல்றிங்க தீரா! அப்போ நான் ராமுன்னு எண்ணி உங்களைத் தான் அடிச்சேனா!?”என்று தெரியாததை போலக் கேட்டாள் வைதேகி.
“ஆமா…நீ அடித்தது என்னைத் தான்” என்று ரணதீரன் சொன்னதும்,”உண்மையாவா சொல்றிங்க!? என்னால நம்பவே முடியல தீரா!!” என்று ஆச்சிரியமாகக் கேட்டாள் வைதேகி.
“அட ஆமா வைதேகி, அன்னைக்கு நீ ராமு பண்ண தப்புக்கு என்னைத் தான் அடிச்ச” என்று ஆவேசமாக விளக்கம் சொன்னான் ரணதீரன்.
“சாரி தீரா! எவனோ செய்த தப்புக்கு நான் உங்களைத் தண்டிச்சிட்டேன். அன்னைக்கு நான் உங்கள அடிச்சதுக்காக இன்னைக்கு மன்னிப்பு கேட்டுக்குறேன்” என்ற வைதேகி கைகள் கூப்பி மன்னிப்பும் கேட்டாள்.
“என்ன பண்ற வைதேகி நீ! நீ போய் என்கிட்ட மன்னிப்பு கேக்கலாமா?
ஐயோ! இப்போ நான் எவ்ளோ சந்தோசமா இருக்கேன் தெரியுமா!” என்றவன் முகத்தில் புன்னகை மலர்ந்த வண்ணமாகவே இருந்தது.
“இது கனவா நினைவானே தெரியல வைதேகி!
நீ!
அப்போ நீ தான் அழகியா!?” என்று மீண்டும் நம்பாமல் கேட்டான் ரணதீரன்.
“ஆமா… அழகியும் என் பெயர் தான். இது எங்க குலதெய்வ பெயர்”என்றாள் வைதேகி.
“வைதேகி… உனக்கு ஒன்னு தெரியுமா!
நான் படிச்ச ஓவியபள்ளியில தான் நியும் அழகி என்ற பெயரில் படிக்க வந்த” என்று ரணதீரன் சொன்னதும், அப்போது தான் அந்த உண்மை தெரிந்ததை போல அவனை ஆச்சிரியமாகப் பார்த்தாள் வைதேகி.
“அப்போ எல்லாம் நான் உன்னை மறைந்து இருந்து பார்ப்பேன். உன்கிட்ட பேச எனக்கு ஆசையா இருக்கும். ஆனா ஆசையை விடத் தயக்கம் அதிகமா இருந்ததால கடைசிவரை உன்கூட நான் பேசவே இல்லை”என்ற ரணதீரனை காதலாகவே பார்த்து இருந்தாள் வைதேகி.
“ஆனா அன்னைக்கு எப்படியாவது உன்கூட பேசியே ஆகணும்னு நினைக்கும்போது நீ இனி வரவே மாட்டன்னு ராமு சொன்னதால தான் உன்னைப் பார்க்க இதோ இந்தக் கோவிலுக்கு நான் வந்தேன்” என்ற ரணதீரனின் குரல் திடீரெனக் கவலையாக மாறியது.
“அன்னைக்கு நான் இங்க வந்து உன்கிட்ட பேசலாம்னு நினைக்கும்போது, அந்த ராமு தான் உன்னைத் தப்பான நோக்கத்தில் தொட்டான். ஆனா அவன் அங்கிருந்து ஓடியதும், நீ என்னைத் தவறாக எண்ணி அடிச்சிட்ட” என்ற ரணதீரன் குழந்தைகள் தன் அம்மாவிடம் முறையிடுவதை போல வைதேகியிடம் தன் மனதில் இருப்பதை பேசிக்கொண்டு இருந்தான்.
“அந்த நாளிலிருந்து இப்போது வரைக்கும் அழகி இன்னும் என்னைத் தான் தப்பா நினைச்சுட்டு இருப்பான்னு எண்ணி எத்தனை நாள் இரவு உறக்கம் இல்லாமல் தவித்து இருக்கேன்னு உனக்குத் தெரியுமா?” என்ற ரணதீரனால அன்று அவனுக்கு ஏற்பட்ட அவமானத்திலிருந்து மீண்டு வர முடியவில்லை என்று வைதேகி நன்கு அறிந்து இருந்தாள்.
“ஆனா இப்போ என் அழகிக்கு உண்மை தெரிஞ்சிருச்சு இல்ல! இது போதும் எனக்கு. அதுவும் அறியாத வயசுல நான் பழக ஆசைப்பட்ட அந்த அழகியே நீ தான்னு நினைக்கும் போதே எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு” என்ற ரணதீரனின் முகத்தில் நிம்மதியும் தெரிந்தது.
ரணதீரனின் மன நிலையைப் புரிந்துகொண்ட வைதேகி, அவனை நலமுடன் வாழச் செய்ய விரும்பினாள்.
அவன் 18 வயதில் ‘அழகி’ என்ற ஒரு பெண்ணிடம் ஈர்க்கப்பட்டதும், அந்த உணர்வு காரணமாக அவன் சில அவமானங்களைச் சந்தித்ததும் அவளுக்குத் தெரிந்தது.
பின்னால், ‘அழகி’ தான் தானென்பதை வைதேகி உணர்ந்தாள்.
ரணதீரன் அவமானப்பட்ட அதே கோவிலில், அவனைத் தவறாகப் புரிந்து கொண்டு அவனை அடித்ததற்காக, வைதேகி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று எண்ணினாள்.
அதற்காக ஒரு நிகழ்வைத் திட்டமிட்டு, ரணதீரனுக்கு உண்மை என்ன என்பதை நன்கு புரிய வைக்க முயன்று இப்போது வெற்றியும் பெற்றாள்.
பல வருடங்களாக கருவேலம் செடியைப் போல் ரணதீரனின் இதயத்தை ஆக்கிரமித்து இருந்த அவமானங்கள்,
ஒரே நாளில் வைதேகி அவனுக்காக ஆணிவேரோடு பிடுங்கி வீசி விட்டாள் என்பதை நினைத்து, அவன் மனம் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்தது.
கிட்டத்தட்ட இரண்டு மணி நேரமாக அழகி தான் வைதேகியா என்று தெள்ளதெளிவாகக் கேட்டுத் தெரிந்துகொண்ட ரணதீரனுக்கு அழகி மீண்டும் தன்னிடமே வந்ததை எண்ணி பேரானந்தம் எழுந்தது.
அவன் மகிழ்ச்சியை ரசித்த வைதேகி,
“தீரா… நீங்க அறியாத வயதில் நேசித்த அழகி நான் தானே! இப்போ கூட உங்களுக்கு என் காதலை ஏற்றுக்கொள்ள தோணலையா?” என்றவளின் வார்த்தை முடியும் முன்னே,
அருகே இருந்த செந்தூரத்தை எடுத்து அவள் புருவ மத்தியில் ரணதீரன் வைத்ததும் கோவில் மணி ஒலித்தது.
வைதேகியின் கருவிழிகள் இரண்டும்
ஆனந்தத்தில் உவர்ப்பு நீரால்
நிறைந்து இருந்தது.
ரணதீரனின் சிறுவயது கவனத்தை ஈர்த்த அழகி தான் இப்போது அவனை உயிராய் நேசிக்கும் பேரழகி வைதேகி என்று அறிந்துகொண்ட ரணதீரனுக்கு இந்த நொடியே அவளுக்குத் தான் கணவனாக மாறிட வேண்டும் என்ற எண்ணமும் தோன்றியது.
error: Content is protected !!