Skip to content
Post Views: 4,141
மார்கழி – 5
விடிந்ததற்கான அடையாளமாய் பாத்திரங்கள் உருளும் சத்தம் செவி நுழைய, பட்டென்று கண்களைத் திறந்தாள் இயலணி. இருக்கும் இடமும் நடந்த நிகழ்வுகளும் ஒன்றன் பின் ஒன்றாய் அணிவகுத்து நினைவடுக்கின் முன்வரிசைக்கு வர, கண்கள் அவசரமாய் கட்டிலுக்குச் சென்றது. அவளுக்கு முதுகு காட்டியபடி போர்வைக்குள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் அறிவழகன். திகுதிகுவென எறிந்த கண்களை துடைத்துக்கொண்டே தரையிலிருந்து எழுந்தாள் இயலணி.
குளிருக்கு இதமாய் போர்த்தியிருந்த புடவை முந்தானையை தோளிலிருந்து பின்தள்ளியவள் எழுந்து நின்று நலுங்கியிருந்த புடவையை சரிசெய்ய, தங்க வளையல்களுடன் ஜோடி சேர்ந்திருந்த கண்ணாடி வளையல்கள் ஓசை எழுப்பியது. கோவிலுக்கு சென்ற பிற்பாடு ஒற்றை வளையலாய் இருக்க வேண்டாமென யாரிடமோ சொல்லி வளையல் வாங்கி கொடுத்திருந்தாள் தாமரை. இப்போது அது அதிகம் ஓசை எழுப்பவது போல் தோன்ற உடனே அதனை கழற்றியவள் கழுத்தில் இருந்த காசு மாலையையும் சேர்த்து பத்திரமாக அங்கிருந்த மேசையில் வைத்தாள். அன்னிச்சையாய் கண்கள் அவனிடம் சென்று மீண்டது. அனுமதி கேளாமலேயே மனம் முந்தைய இரவை அசைபோட்டது.
முத்தமிட்டு அத்தை மகள் பெயரை சொன்னதில் நொந்து பெண்மையை வெறுத்து இயலாமையுடன் நின்றவளை ஆட்கொள்ள முயன்ற அறிவழகனுக்கு அவளின் தளர்வு வெற்றிக்களிப்பை கொடுத்திருக்க வேண்டும், அவளுள் மூழ்கி மதி மயங்கி முன்னேறும் முன் விலகியிருந்தான். அவன் விலகலில் மனைவி விழித்துக்கொண்டு வீறுகொள்ளும் முன் கட்டிலில் சென்று படுத்தும்விட்டான். தன்னை மீட்டுக்கொண்டு பெண் நிமிர்ந்த போது அவனது முதுகுதான் தரிசனம் கொடுத்தது. தன்னைப் பற்றி கூறி மன்னிப்பு வேண்டி வாழ்க்கையை சுமூகமாக்கிக்கொள்ள நினைத்த அவளின் யோசனைகள் அனைத்தும் தவிடுபொடியாகி கணவன் மீது அதிருப்தி எழுந்தது இயலணிக்கு.
Advertisement
அன்பானவன், இனிமையானவன், இலகுவானவன், அக்கறையானவன், நிதானமானவன், நியாயமானவன், உத்தமன் என்று நேசம் கொண்ட மனது பாரபட்சமின்றி அவனுக்கு பட்டங்களை வாரி வழங்கி களித்திருக்க, அது அனைத்தும் காற்றில் கரைந்து மாயமானது போலிருந்தது. தான் இதுவரை பார்த்து சலனம் கொண்ட ஆடவன் இவனில்லை. அப்போது யார் இவன்? தன் செயலின் வெளிப்பாடினில் உருவான எதிர்மறையானவனோ? அத்தனை கண்ணியமான மனிதனுள் இப்படியொருவனா என்று அதிர்ந்து அமர்ந்திருந்ததில் பாதி இரவு கடந்திருந்தது. பின்னிரவிலோ உடல் அயர்ந்து உறக்கம் தழுவியிழுந்தது. விடிந்த பிற்பாடு மணி என்ன என்று கூட தெரியாத தயக்கத்துடன் வெளியே சென்றாள்.
சமையலறையில் சத்தம் கேட்க, பழைய அறையிலிருந்த பையிலிருந்து உடை எடுத்துக்கொண்டு பின்னே சென்றவள் துணிகளை அலசிவிட்டு குளிக்கும் பொருட்டு தண்ணீரை மேலே ஊற்ற, தை மாத குளிர் மார்கழியாய் நீரில் இறங்கி இருந்தது. சிலிர்த்து நடுங்கிய உடலில் ஊசியாய் நீரை மொண்டு ஊற்றி வேகமாக குளித்து வெளியே வந்தவளுக்கு சற்று தள்ளி கொல்லைப்புற வாயிலில் அவளை பார்த்துக்கொண்டே நின்றிருந்த மேகலா தென்பட்டார். அவரைக் கண்டதும் இவளின் கால்கள் பின்னிக்கொள்ள, மேகலாவின் விழிகள் பக்கவாட்டில் சென்று மீண்டது. இயலணியும் அவர் பார்வையைத் தொடர அங்கு சுடுநீர் தயாராய் இருந்தது.
‘முன்னாடியே சொல்லியிருந்தா இப்படி ஐஸ் பாத் எடுத்திருக்க மாட்டேன்ல.’ என்ற அவளின் முணுமுணுப்பை காதில் வாங்க அங்கு மேகலா இல்லை. உள்ளே சென்றிருந்தார்.
Advertisement
பெருமூச்சுடன் துவைத்த துணிகளை காயவைத்துவிட்டு தயக்கத்துடன் சமையல் அறையை எட்டிப்பார்த்தாள் இயலணி. அவளின் வரவு உணர்ந்த மேகலா ஏற்கனவே கலந்து வைத்திருந்த காபி டம்ளரை அவளை பார்த்துக்கொண்டே நகர்த்தி வைக்க, தனக்குத்தான் என்று புரிந்து கொண்டவள் விரைந்து சென்று எடுத்துக்கொண்டாள். பெரிதாக கனம் இருப்பது போல் இருகைகளும் டம்ளரை பிடித்துக்கொள்ள, விழிகள் அடிக்கடி மேகலாவிடம் சென்று வந்தது. வேலையின் பொருட்டு மேகலா அங்குமிங்குமாய் நடக்க, சற்று நகர்ந்து ஓரமாக நின்று காபி குடித்த இயலணி டம்ளரை கழுவி வைத்தாள். வேலையில் கவனம் இருந்தாலும் ஒரு கண்ணை மருமகளிடம் வைத்திருந்த மேகலா ஒரு தேங்காய் மூடியும் தட்டும் எடுத்து வைக்க, விழிகளை சுழலவிட்ட இயலணி அரிவாள்மனையை தேடி எடுத்து கீழே அமர்ந்து துருவ ஆரம்பித்தாள். கொட்டாவி விட்டபடி வந்த தாமரையின் புருவங்கள் இக்காட்சியைக் கண்டு உயர்ந்தது.
Advertisement
“இன்னும் தூக்கம் போகலையா உனக்கு?” மகளிடம் கேள்வியும் பார்வை மருமகளிடமும் இருக்க, “போதும்.” என்றிருந்தார் மேகலா.
“என்ன போதும்?” புரியாது பார்த்த தாமரைக்கு இயலணி எழவும் விஷயம் புரிந்தது.
“இன்னைக்கு கோவிலுக்கு போகணும். புடவை எடுத்து ஹால்ல வச்சிருக்கேன் கட்டிக்கோ தாமரை.” என்றதும் தாமரையின் பார்வை இயலணியிடம் செல்ல, சங்கடமாய் பார்த்தாள் இயலணி.
Advertisement
“ப்ளவுஸ்?”
“முகூர்த்த புடவைக்கு அளவு கொடுத்தப்போவே எல்லாத்துக்கும் போடுற மாதிரி ரெண்டு ப்ளவுஸ் தைக்க சொல்லியிருந்தேன். அதுவும் அங்க தான் இருக்கு. நேத்தி போட்டிருந்த நகையெல்லாம் இன்னைக்கு ஒருநாள் போட்டிருக்கணும். வீட்டுக்காரனை எழுப்பி சீக்கிரம் கிளம்பு தாமரை. சாப்பிட்டுட்டு உடனே கிளம்பி ராகுகாலம் முன்னாடி போகணும்.” அனைத்தையும் அவளை பாராமலேயே சொல்ல, இயலணிக்கு செய்தி சரியாய் சென்று சேர்ந்தது. தயக்கத்துடன் கூடத்திற்கு சென்று புடவையை எடுத்துக்கொண்டு அறைக்குச் சென்றாள். அறிவழகன் அசையாது உறக்கமே என் வேலையென இருக்க, அவனை எப்படி எழுப்பவென்ற குழப்பத்தில் தேக்கம் கொண்டாள்.
ஒன்றாய் இருந்த மூன்று மாதங்களும் சார் என்றே அழைத்துப் பழக்கம். இப்போது அப்படி அழைப்பது அபத்தம் என்று புரிந்தாலும் உரிமையெடுத்து அழைக்குமளவுக்கு அவர்கள் உறவும் இல்லை என்ற யோசனையில் அவனையே வெறித்துப் பார்த்து நிற்க, அவளின் தொடர் பார்வையை உணர்ந்தது போல் புரண்டு படுத்து தானாக விழித்தான் அறிவழகன். கண்களை தேய்த்துக்கொண்டே கையை மெத்தையில் ஊனி எழ, எதிர்ப்பட்ட இயலணியைப் பார்த்ததும் அவன் விழிகள் எரிச்சல் காட்டியது. அவன் முகச்சுழிப்பில் சுயம் பெற்றவள், “கோவிலுக்கு போகணுமாம் சீக்கிரம் கிளம்பச் சொன்னாங்க உங்க அம்மா.” என்று எங்கோ பார்த்துச் சொல்ல,
“இது ஒண்ணுதான் குறைச்சல் இப்போ.” என்றபடியே எழுந்தவன் அவளை பாராமல் கடுகடுவென்று மாறிவிட்ட முகத்துடன் வெளியேறினான்.
நிம்மதியடைந்தவளாய் வேகமாக புடவை மாற்றிக்கொண்டு சமையலறை சென்றுவிட்டாள் இயலணி. நேரடியாய் பேசாவிட்டாலும் சின்ன சின்ன வேலைகளில் மருமகளை ஈடுபடுத்திக்கொண்டார் மேகலா. தேவையற்ற அனாவசிய பேச்சுக்கள் எதுவுமின்றி அக்குடும்பம் அவர்கள் ஊர் கோவிலுக்கு கிளம்பிச் சென்றது. இறுக்கம் காட்டினாலும் பல்லை கடித்துக்கொண்டு கோவிலில் அரங்கேறிய சம்பிரதாயங்களை செய்தான் அறிவழகன். மனைவி கைப்பிடிப்பதாகட்டும், குங்குமம் இடுவதாகட்டும், மாலை மாற்றுவதாகட்டும் எதிலும் இயந்திரத்தன்மை வெளிப்பட்டது கணவனிடத்தில். முந்திய தின குற்றவுணர்வு பின்சென்று அலைக்கழிப்பு வந்தமர்ந்து கொண்டது பெண்ணவள் மனதில். இனி வாழ்க்கை என்னவாகப் போகிறது என்ற தடுமாற்றம் இருவரிடமும் இருந்தது. சாமர்த்தியமாக அதனை மறைத்தபடி இருவரும் சுற்றிவர, ஆட்டோவில் வீடு வந்து இறங்கும் நேரம் இவர்களை இடுங்கும் பார்வை பார்த்துக்கொண்டு வாயிலில் நின்றிருந்தான் வேந்தன்.
நண்பனுக்கு சளைக்காத பார்வை வீசிய அறிவழகன், ‘இவனால் தானே எல்லாம்.’ என்ற கோபத்தோடு வேந்தனை நெருங்க,
“வாடா புது மாப்பிள்ளை. சொல்லாம கொள்ளாம கல்யாணம் பண்ணிட்ட…” இழுத்து ஒட்ட வைத்த புன்னகையோடு அறிவழகன் தோள் சுற்றி கையிட்டு நிறுத்தியிருந்தான் வேந்தன்.
வேந்தனின் கரம் தோளில் அழுந்த, “வாடா நல்லவனே… உன்னைத்தான் தேடிட்டு இருந்தேன்.” என்று பற்களை கடித்தான் அறிவழகனும்.
“நானும் உன்னைத்தான் தேடிட்டு இருந்தேன் நல்லவனே.”
“நண்பன்னு உன்னை சேர்த்ததுக்கு உன்னால என்ன பண்ண முடியுமோ அதை பண்ணிட்ட.” வார்த்தையின் பின் வஞ்சம் இருந்தது அறிவழகனிடம்.
“அதே தான் நண்பா… நம்புனதுக்கு உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிட்ட.”
இருவரும் மறைமுக வார்த்தையாடலில் ஈடுபட, திகைப்புடன் பார்த்து நின்றாள் இயலணி.
“உள்ள கூப்பிட்டு பேசு அறிவு.” வந்திருப்பவன் யார் என்ற ஆராய்ச்சியுடன் இவர்களை கடந்து சென்ற அவன் தந்தை மாறன் சொல்லிவிட்டு செல்ல, தோளில் இருந்த வேந்தனின் கையை தட்டிவிட்டான் அறிவழகன்.
“ரொம்பத்தான் பிகு.”
“வந்துத்தொல.” என்ற அறிவழகன் முன்னே செல்ல, தங்களுக்கு பின் தேங்கி நின்ற இயலணியை அழுத்தமாக பார்த்துவிட்டு நகர்ந்தான் வேந்தன்.
வேந்தனின் வரவில் பின் சென்றிருந்த குற்றவுணர்ச்சி முன்னிடத்தை பிடித்துக்கொள்ள, உருவமில்லா ஐயம் ஒன்று உருண்டது இயலணியுள். கைகளை பிசைந்தபடி அப்படியே நின்றுவிட்டாள். எவ்வளவு நேரம் வெளியே நிற்க முடியும் ஓரிருவர் பார்வை இவளை தொட்டு மீள, உள்ளிருந்த நாத்தனாரும் யோசனையாய் இவளை பார்த்துச் சென்றாள்.
‘ம்ச், இனி நடந்ததை மாத்த முடியாது இயலு.’ என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு அன்னநடையிட்டு உள்ளே செல்ல,
“கோயம்புத்தூர்ல இன்ஸ்பெக்டரா இருக்கேன். இந்த பக்கம் ஒரு வேலையா வந்தேன் அப்படியே அறிவையும் பாத்துட்டு கிளம்பலாம்னு வந்தா இப்படி ஷாக் கொடுக்கிறான் நண்பன்.” என்று சொல்லிக்கொண்டிருந்தான் வேந்தன்.
“ஆமாபா. அவசரமா பண்ண வேண்டிய சூழல் யாருக்கும் சொல்லாம சின்னதா பண்ணிட்டோம்.” என்றார் மாறன்.
தாமரை அவனுக்கு எதுவோ குடிக்க கொடுத்துவிட்டு செல்ல, “வெளில போயிட்டு வந்துர்றோம்.” என்றபடி அறிவழகன் எழுந்தான்.
இதற்குத் தானே காத்திருந்தேன் என்பது போல் பட்டென்று எழுந்த வேந்தன் அறிவழகனைத் தொடர, வாயிலில் நின்ற இயலணியை கண்டுகொள்ளாமல் அறிவழகன் கடந்து சென்றதை கவனித்தபடி கடந்தான் வேந்தனும்.
ஊரின் எல்லையில் ஆள் நடமாட்டம் குறைவாய் இருக்கும் பகுதிக்கு வந்ததும் வராததுமாக நண்பர்களின் இடையே எகிறல்கள் துவங்கின.
“எல்லாம் உன்னால தான்டா.” அறிவழகனின் குற்றச்சாட்டிற்கு சற்றும் சலிக்காத பார்வை வேந்தனிடம்.
“முக்கியான கேஸ் விஷயமா ஒரு வாரம் வெளியூர் போயிட்டு வந்து பார்த்தா என்னடா பண்ணி வச்சிருக்க நீ?”
“நீ ஏன்டா போன் எடுக்கல?” பிரச்சனை பெரிதானதும் வேந்தனுக்கு அழைக்க முயன்றிருந்தான் அறிவழகன். வேலை நிமித்ததில் தவறவிட்டதாக பதில் கூறியவன், “உனக்கு போன் போட்டா ஸ்விட்ச் ஆப்ன்னு வருது. சொல்லாம கொள்ளாம உன்னை யாரு அந்த பொண்ணை இங்க கூட்டிட்டு வர சொன்னது?”
“இங்க வந்தனைக்கு போன் உடைஞ்சிச்சுருச்சு… ம்ச்… நீதான அந்த பொண்ணை வெளிய அனுப்பாம பாத்துக்கோனு சொல்லி விட்டுட்டு போன. மூணு மாசமா அந்த பொண்ணை தனியா விட யோசிச்சிட்டு இங்க கூட தங்காம காலையில வந்துட்டு ராத்திரி கிளம்பி போயிட்டு இருந்தேன். பொங்கல் லீவுலையும் அப்படியே இருக்க முடியுமா? நாலு நாள் லீவு. அவளை வீட்டுக்குள்ள வச்சி பூட்டிட்டா வரமுடியும்? ஏதாவது ஏடாகூடமா ஆச்சுன்னா எதுக்கு வம்புனு கூட்டிட்டு வந்தேன். இப்போ கூட்டிட்டு வந்ததுதான் வம்பா போச்சு.”
“உன் போனுக்கு லைன் கிடைக்கலைங்கவும் பதறியடிச்சு பஸ் ஏறி வந்து பார்த்தா உன் வீடு பூட்டியிருக்கு. என்ன நினைக்க நானு? உன் ஊர் நியாபகம் இருக்கவும் இங்க வந்துட்டேன். வந்து விசாரிச்சா கல்யாணம் பண்ணிட்டேன்னு சொல்றாங்க. அடைக்கலம்னு வந்த பொண்ணை இப்படி பண்ணி வச்சிருக்க? உன்னை நம்பித்தான அவளை உன்கூட தங்க வச்சேன்.” குற்றம் சுமத்தி வேந்தன் குரல் உயர்த்த, அறிவழகனுக்கு சுள்ளென்று கோபம் தலைக்கேறியது.
“அதை அவகிட்ட கேளு. அடைக்கலம்னு வந்தவ வந்தோமா போனோமான்னு இல்லாம என்னை எப்படி மாட்டிவிட்டிருக்கா பாரு. எங்கிருந்து புடிச்ச அவளை?” எரிச்சல் மிகுதியில் பேசிய அறிவழகன் நடந்ததை சுருங்கச் சொல்ல,
“லூசாடா உங்க குடும்பம்?” பட்டென்று கேட்டிருந்தான் வேந்தன்.
“உனக்கு உதவி பண்ண பாவத்துக்கு இதுவும் சொல்லுவ இன்னமும் சொல்லுவடா.”
“பின்ன என்னடா பொண்ணு யாரு என்னனு விசாரிக்காம இப்படித்தான் கல்யாணம் பண்ணி வைப்பாங்களா? அவங்க அப்பா அம்மாவுக்கு நான் என்னடா பதில் சொல்லுவேன்?”
“அப்பா அம்மா இருக்காங்களா?” என்று புருவம் சுருக்கி யோசனையாக பார்த்தான் அறிவழகன்.
“இருக்காங்களாவா? சுத்தம்… அவ எதுவும் சொல்லலையா?”
“சொல்லிட்டாலும்… ம்ச் அதெல்லாம் தெரிஞ்சிக்குற நிலைமையில நான் இல்லை.” நெற்றியை நீவிக்கொண்ட அறிவழகனின் ஆர்வமின்மை பட்டவர்த்தனமாக வெளிப்பட்டது. அவளால் வாழ்க்கை திசை மாறிச் சென்றதை ஏற்றுக்கொண்டு சமன்பட அவகாசம் தேவைப்பட்டது.
“இப்போ என்ன பண்றதா இருக்க?”
“இல்லை புரியல என்ன பண்ணனும்?” குழப்பத்தின் பலனாய் கண்கள் சுருங்கப் பார்த்தான் அறிவழகன்.
“புடிக்காத பொண்ணை கல்யாணம் பண்ணி இருக்கடா. வாழ்க்கையை இப்படியே ஓட்டிட முடியுமா? என்னைக்குனாலும் புடிச்சி தான ஆகணும். கோவத்தை எல்லாம் மூட்டைகட்டி வச்சிட்டு அவளை பத்தி தெரிஞ்சிக்கோ. அப்புறம் என்ன பண்ணலாம்னு முடிவெடு.”
“இதுல முடிவெடுக்க என்ன இருக்கு? சகிச்சிட்டு இருக்க வேண்டியதுதான். அதுக்கு முன்னாடி என் வலியை உணர வைக்காம விடமாட்டேன். எவ்ளோ திமிரா என் முன்னாடி நிக்குறா தெரியுமா?”
“ப்ச் இப்படி பேசுனா என்ன அர்த்தம். நல்ல பொண்ணுடா. உன் விஷயத்துல தான் என்னவோ இப்படி.”
“அவ்ளோ நல்ல பொண்ணுன்னா உன் வீட்லையே வச்சிருந்திருக்கணும். எதுக்கு என் வீட்டுக்கு கூட்டிட்டு வந்த?”
“டேய், என் அண்ணனுக்கு கல்யாணம்னு சொன்னேனேடா. வீட்ல ஆளுங்க வந்து போகனு இருக்காங்க. அதோட என் வீட்ல தங்க வச்சா ஈஸியா அவளை கண்டுபுடிச்சிடுவாங்க. அவ இங்க இருக்கிறதுதான் சேஃப்.”
“அப்படி என்னத்தை தூக்கிட்டு ஓடி வந்துட்டான்னு இப்படி பொத்தி பொத்தி வச்சி என் தலையில கட்டியிருக்க?” வள்ளென்று விழுந்தான் அறிவழகன்.
“நானா உன்னை கல்யாணம் பண்ணிக்க சொன்னேன்? உன் வீட்ல உண்மையை சொல்லி கல்யாணத்தை நிறுத்தியிருக்க வேண்டியதுதான?”
“அப்படி எந்த உண்மையை நீயும் அவளும் சொல்லிக் கிழிச்சீங்க? அவ என்னடான்னா மூணு மாசமா பாத்தேங்குறா… நீ என்னடான்னா அவளை பத்தி வீட்ல கூட சொல்லாத கொஞ்ச நாள்ல கிளம்பிடுவானு சொன்ன. உங்களை நம்பி உள்ள விட்ட பாவத்துக்கு என்னை மொத்தமா முடிச்சிவிட்டிங்க.”
“சும்மா எங்களையே சொல்லாத. நீ எப்படினு உங்க வீட்டுக்கு தெரியாதா. அவங்க உன்னை நம்பியிருந்தா இந்த பிரச்சனையே வந்திருக்காது. நீயும் ஸ்ட்ராங்கா முடியாதுனு நின்னிருக்கணும்.”
“யாருக்காக நான் ஸ்ட்ராங்கா எதிர்த்திருக்கணும்? என்னை விரும்புனவளே வேண்டாம்னுட்டு போயிட்டா. இனி எதிர்த்து நின்னு என்ன சாதிச்சிருக்க போறேன்?” ஆத்திரம் குறைந்து விரக்தி எட்டிப்பார்க்க, நண்பனுக்காக இறங்கி வந்தான் வேந்தன்.
“இதுவரைக்கும் போனது எல்லாம் விடு. இனிமேதான் நீ கவனமா இருக்கணும். இயல் பொண்ணுக்கு இருக்கிற பிரச்சனையிலேந்து வெளில வரவரைக்கும் நீ துணையா இருக்கணும்.”
“மண்ணாங்கக்கட்டி. அவளே எனக்கு பிரச்சனை தான் இதுல நான் அவளுக்கு துணை நிக்கணுமா. போடா டேய், இருக்கிற ஆத்திரத்துக்கு ஏதாவது செஞ்சிடப் போறேன். கிளம்பி போயிடு.” சினம் தலைக்கேற திரும்பி நின்றவன் இருக்கரத்தையும் இடையில் வைத்து பலமாக மூச்சு வாங்கினான்.
“டேய் அறிவு…”
“போயிடு சொல்லிட்டேன்.”
“ம்ச்… இயல்கிட்ட பேசிட்டு கிளம்புறேன். மூணு மாசம் எப்படி அவளை சேஃப்பா பாத்துக்கிட்டியோ இன்னும் கொஞ்ச நாள் அப்படியே பாத்துக்கோ. எல்லாம் தானா சரியாகும்.” என்று சொல்லிவிட்டு வண்டி அருகே சென்று நிற்க, முகத்தை அழுந்த தேய்த்துவிட்டு வந்து வண்டியை கிளப்பினான் அறிவழகன்.
அமைதியாக வீடு வந்து சேர, வேந்தனின் கண்கள் இயலணியைத் தேடியது. அறிவழகன் குடும்பத்தினரின் நடமாட்டம் மட்டும் தெரிந்தது. பார்வை வட்டத்தில் அவள் சிக்கவில்லை எனவும் நண்பனைப் பார்த்தான் வேந்தன்.
“என்னடா?” நண்பனின் பார்வை புரிந்தாலும் புரியாதது போல் கேட்டான் அறிவு.
“கூப்பிடேன்.” சங்கடமாய் வேந்தன் பார்க்க, அலட்சியமாக அறிவழகன் சிரிக்க,
“உன் வொய்ப் தான.” என்றதில் பாய்ந்து வந்து வேந்தனின் கழுத்தை பிடித்தான் அறிவழகன், “இன்னொரு வார்த்தை பேசுனா சாவடிச்சிடுவன். வாமான்னு வெத்தலை பாக்கு வச்சி என்னால அவளை கூப்பிட முடியாது. எப்படியும் ஹாலுக்கு வருவா இருந்து பார்த்து பேசிட்டு போ.”
“டேய் நான் ஊருக்கு போகணும்டா. கூப்பிடு அவளை.”
நண்பனின் இறைஞ்சலான பார்வை அறிவழகன் மனதை குளிர்விப்பதாய் இருக்க, எழுந்து சென்று சமையலறையில் பார்த்தான். மேகலாவும் தாமரையும் ஏதோ செய்துகொண்டிருந்தனர். இயலணியைக் காணவில்லை. அவர்களிடம் கேட்கலாம் என்றாலும் மனதிற்கு ஒப்பவில்லை. தான் அவளை தேடுகிறோம் என்று காட்டிக்கொள்ள விரும்பாமல் அமைதியாக அறைக்குச் சென்று பார்த்தான். கீழே படுத்து உறங்கிக் கொண்டிருந்தாள்.
‘என்னை புலம்பவிட்டுட்டு தூக்கம் வேண்டிக் கிடைக்கா இவளுக்கு.’ மனதில் பொருமல் பிறக்க, தன் அலைபேசியில் அதிவேக பாடல் ஒன்றை ஓடவிட்டு அதன் சத்தத்தை கூட்டி அவள் காதருகில் கொண்டு வைக்க, பதறியடித்து எழுந்தாள் இயலணி.
பயத்தில் நெஞ்சை பிடித்துக்கொண்டு அடித்துபிடித்து அவள் எழுந்து அமர்ந்த விதமே அவன் பொருமலைத் தணிக்க, “வெளில வா.” என்றுவிட்டு வெளியேறிவிட, ஒன்றும் புரியாமல் மலங்க மலங்க விழித்து பயத்தில் நெஞ்சை நீவிக்கொண்டாள் இயலணி. வெளியே வேந்தனின் பேச்சுக்குரல் கேட்க, நெஞ்சம் சமன்பட்டது. சுவாசம் சீரானதும் எழுந்து வெளியே வர, கிளம்ப ஆயத்தமாகி எழுந்திருந்தான் வேந்தன்.
“பேசணும்னு சொல்லிட்டு உடனே கிளம்புற?” நண்பனின் திடீர் விடைபெறுதலில் துணுக்குற்று அறிவழகன் பார்க்க, அப்போதுதான் வந்தமர்ந்த தந்தை மாறனை கண் காட்டிவிட்டு இயலணியிடம் தலையசைத்து நகர்ந்தான் வேந்தன்.
“என்னடா?” வெளியே வந்து வண்டியை நகர்த்திய அறிவழகன் கேள்வியாய் பார்க்க, “எல்லாரையும் வச்சிக்கிட்டு இயல்கிட்ட பேசுனா என்ன ஏதுன்னு உங்க வீட்ல யோசிப்பாங்க. நீ முதல்ல இயல்கிட்ட பேசி சமாதானம் ஆகு. பொறுமையா எல்லாத்தையும் வீட்ல சொல்லி பேசலாம். இப்போ பேசுறது சரியா வராது.” என்றதில் அறிவழகனுக்கு அவளைப் பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வம் லேசாக எட்டிப்பார்த்தது.
“அவ்ளோ பயங்கர பிளாஷ்பேக்கா என்ன?”
“அதை நீ அவகிட்ட கேட்டு தெரிஞ்சிக்கோ. இனிமே நான் சொல்றதை விட நீங்க பேசிக்குறது தான் நல்லது.” என்றபடி பின்னால் ஏறி அமர்ந்தான் வேந்தன்.
“ரொம்ப நல்லது. உதவின்னா காலை புடிக்கிறது பிரதி உபகாரம்னா கையை காட்டுறது.”
“முன்னாடி எப்படியோ இப்போ உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சு. அவளை உனக்கு அறிமுகப்படுத்துன நான்கூட இப்போ மூணாவது மனுஷன்தான். நீ இயல்கிட்ட பேசிட்டு சொல்லு.” என்று கழன்று கொள்ள, அதன்பின் இருவருக்கு இடையிலும் பேச்சில்லை.
வேந்தனை பேருந்தில் ஏற்றிவிட்டு வந்தவன், “நைட் ஊருக்கு கிளம்புறோம்.” என்று அறிவிக்க, மறுப்புகள் அணிவகுத்தது.
“நல்ல நாள் பாத்துதான் போகணும். இதுவரைக்கும் சமைக்க கொள்ளனு எதுவுமில்லை. அவசரத்துக்கு ஒரு கரெண்ட் அடுப்பு, ஒன்னு ரெண்டு பாத்திரம் தான வச்சிருக்க. குடும்பம் நடத்த அது எப்படி பத்தும்? எல்லாம் வாங்கினப்புறம் பால் காய்ச்சி நல்ல நாள் பாத்து போலாம்.”
“அதுவரைக்கும் வேலைக்குப் போகாம இங்கேயே இருக்கவா?” என்ற முறைப்புடன் எழுந்து நின்ற அறிவழகன், “முடியாதுன்னு சொல்லியும் கட்டாயமா கல்யாணம் பண்ணி வச்சீங்கல்ல. அதோட முடிஞ்சிது உங்க கடமை. இனி நான் பாத்துக்குறேன். நைட் கிளம்பவான்னு கேக்கல கிளம்புறோம்னு சொன்னேன்.” அழுத்தமாய் சொன்னவன் ஓரமாய் ஒடுங்கி நின்ற இயலணியை முறைத்துவிட்டு வெளியே சென்றான்.
“கோவத்துல பண்ணிட்டு இருக்கான். இதெல்லாம் எடுத்தோம் கவுத்தோம்னு செய்யுற விஷயமா மேகலா.” முனகிக்கொண்டே எழுந்த மாறன் நாட்காட்டியை எடுத்து நல்ல நாள் பார்த்தவர், “இன்னும் ரெண்டு நாள்ல வளர்பிறை வருது. அன்னைக்கே குடி வச்சிடலாம். என்னென்ன வாங்கணும்னு லிஸ்ட் போட்டு போய் வாங்கிட்டு வந்துருங்க.” என்று அவர் பங்குக்கு சொல்லிவிட்டு செல்ல, முழித்து நின்றனர் பெண்கள்.
அறிவழகன் கடுங்கோவத்தில் இருக்கிறான் என்று அவன் சொல்லிச்சென்ற விதமே எடுத்துக்காட்டியிருக்க, தந்தையின் பேச்சு எடுபடுமா என்ற சந்தேகம் இருந்தது. மேகலாவுக்கு சட்டென்று எதுவோ தோன்ற கூர்மையாய் மருமகளைப் பார்த்தவர், “இத்தனை நாள் எப்படி சாப்பிட்டீங்க ரெண்டு பேரும்? வீட்டுக்கு தெரியாம சேர்ந்து இருந்த மாதிரி சமையல் செஞ்சு குடும்பம் பண்ணியாச்சா?” இப்படி கேட்க வேண்டும் என்று யோசித்து கேட்கவில்லை. ஒரு வேகத்தில் கேட்டவர் எதிரில் அதிர்ந்து கலங்கி நிற்கும் மருமகளைக் கண்டு துணுக்குற்று கண்களைச் சுருக்க,
“ஒரே கூரைக்குள்ள அண்டினாலும் தெக்கு வடக்கா அவங்கவங்க வேலையை பார்த்துட்டு இருந்தோம். நான் தப்பா வளரல, அவரை நீங்க தப்பாவும் வளக்கலை.” முட்டும் அழுகையை பற்களை கடித்து, தாடை இறுக்கி அடக்கிக்கொண்டு பதில் கூறி நகர்ந்த இயலணிக்கு தான் இங்கு வந்திருக்கவே கூடாது, வந்த பிறகாவது வாயை அடக்கிக்கொண்டு இருந்திருக்க வேண்டும் என்ற எண்ணமே.
அவனது ஆண்மையை களங்கப்படுத்தி அவளது பெண்மையை கேள்விக்குறியாக்கி குடும்பத்தினர் பார்வையில் கீழிறங்கி நிற்கவைத்த இந்த காதல் தேவையா என்ற கேள்விக்கு முதலில் இது காதலா என்ற எதிர்கேள்வி எழும்பி திடுக்கிட செய்தது.
error: Content is protected !!