Skip to content
Post Views: 6,095


நிறம் பாராத காதல்
__________________________
அத்தியாயம் 4
“டேய் தம்பி.. மாமா என்ன பண்ணாலும் அது நம்ம நல்லதுக்கா தான் இருக்கும். நீ கோவப்படாம கொஞ்சம் அமைதியா இருக்க பழகு.” என்ற மாயாவோ மாறனின் சட்டை காலரை சரி செய்தாள்.
Advertisement
“என்ன? நம்ம நல்லதுக்கு பண்ணுறாரா!? எது நல்லது? யாரோ ஒரு மாப்பிளையை வேணான்னு சொல்லிட்டு வீட்டை விட்டு ஓடி வந்த பெண்ணை நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டு வந்தது மட்டும் இல்லாம, அம்மாகிட்ட அவ தான் இந்த வீட்டு மருமகன்னு உன் புருஷன் போடுற ட்ராமா நமக்கு நல்லதா?” என்ற ரணதீரன் மேலும் மாறனை கோவமாக நெருங்கிச் சென்றதும், மாறன் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்துக் கொண்டவன், “இப்போ என்ன மச்சான் உங்க பிரச்சனை? சொல்லுங்க கேப்போம்.” எனப் பொறுமையாகக் கேட்டான்.
“உண்மையைச் சொல்லுங்க. யாரு அந்தப் பொண்ணு?” என்று ரணதீரன் கேக்க, “சொன்னேனே வைதேகி என் தங்கச்சி.” என்று மாறன் சொல்ல,
“அத்த…” என்று கர்ஜனையுடன் அழைத்த ரணதீரனின் குரலில் சப்த நாடியும் அடங்கியவராய் கீதா அவன் முன் வந்து நின்றார்.
“உங்க பையன் சொல்றது உண்மையா ? அந்தப் பொண்ணு இவரோட தங்கச்சியா?” என்ற ரணதீரனின் கேள்விக்கு, “ஆ.. ஆமா.. ஹ்ம். ஹ்ம்ம்.. இல்ல..” என்று இரண்டு பக்கமும் தலையாட்டிய கீதாவுக்கு ஒரு நொடி எமனே கண் முன் வந்து சென்றான்.
Advertisement
“ப்ச்..என்ன இது? ஆமாவா இல்லையா?” என மீண்டும் ரணதீரன் கேக்க, “அந்தப் பொண்ணு என் பையனுக்குத் தங்கச்சி தான். ஆனா அந்தப் பொண்ணுக்கும் என் புருஷனுக்கும் எந்த வித சம்மந்தமும் இல்ல, அந்தப் பொண்ணுக்கும் என் தங்கச்சி சாந்திக்கும் கூட எந்தச் சம்மந்தமும் இல்லை?” என்ற கீதாவின் பதிலில் மாறன் தன் தலையில் தானே அடித்துக்கொண்டான்.
Advertisement
“என்ன ? அம்மாவும் புள்ளையும் ட்ராமா பண்ணுறீங்களா?” என்ற ரணதீரனின் முன் நெஞ்சை நிமிர்த்தி நின்ற மாறன், “ட்ராமா போடணும்னு எங்களுக்கு எந்த அவசியமும் இல்லை. உனக்கு இப்போ என்ன சந்தேகம்? வைதேகி யாருன்னு தானே உனக்குத் தெரியணும்?” என்று மாறன் நிதானமாகக் கேட்டான்.
“அவ யாரா இருந்தாலும் எனக்குக் கவலை இல்லை. அவ இந்த வீட்டுல இருக்கக் கூடாது. இப்போவே போய் நான் அவளை இங்க இருந்து வெளிய துரத்துறேன்.” என்ற ரணதீரன் தன் அன்னையின் அறையை நோக்கி நடந்தான்.
“போ..போய்ச் சொல்லு.. போய்ச் சொல்லி உன் அம்மாவுக்கு நீயே எமனாக மாறிடு.” என்ற மாறனின் வார்த்தையில் ரணதீரன் அதே இடத்தில் அசையாமல் நின்று விட்டான்.
Advertisement
“ஏன் நிக்குற? போய் உன் அம்மாகிட்ட எதையாவது பேசி அந்தப் பொண்ணை இங்க இருந்து அனுப்பிடு. ஆனா அந்தப் பொண்ணு போனா உன் அம்மா சாப்பிடாம, மாத்திரை போடாம படுத்த படுக்கையா ஆகிடுவாங்க பரவாயில்லையா?” என்ற மாறனின் கேள்வியில் ரணதீரன் அவனை முறைத்தபடியே நின்று இருந்தான்.
” உனக்கு வேணா உன் அம்மாவைப் பற்றிக் கவலையில்லாம இருக்கலாம். ஆனா நாங்க அப்படி இருக்க முடியாது. உனக்கு உன்னோட பிடிவாதம் முக்கியம். அதனால நீ கல்யாணம் வேணான்னு சொல்லுற. ஆனா உனக்கு நல்ல விதமா கல்யாணம் முடியனும்னு உன் அம்மா எத்தனை நாள் சாப்பிடாம விரதம் இருக்காங்கன்னு உனக்குத் தெரியுமா? ” என்ற மாறனின் கேள்விக்கு ரணதீரனிடமிருந்து மௌனம் மட்டுமே விடையாக இருந்தது.
“இங்க பாரு ராணா..வைதேகியை தான் நீ கல்யாணம் பண்ணிக்கணும்னு அத்தை தான் சொல்லிருக்காங்க. ஆனா நான் சொல்லுறேன் இந்தக் கல்யாணம் நடக்காது.” என்ற மாறனை மாயா கீதாவுடன் சேர்ந்து ரணதீரனும் கேள்வியாகப் பார்த்தான்.
“ஆமா.. இந்தக் கல்யாணம் நடக்காது. ஏன்னா வைதேகிக்கு வேற ஒரு பிரச்சனை இருக்கு. இன்னும் ஒரு மாசத்துல வைதேகி இந்த எஸ்டேட்டிலிருந்து போகுறதுக்கு நானே ஏற்பாடு பண்ணிடுவேன். அதுவரைக்கும் வைதேகி தான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்க போறதா அத்தை நம்பட்டும். நம்ம அதுக்குள்ள உனக்கு வேற ஒரு பொண்ணை பார்க்கும் படி தரகர்கிட்ட சொல்லிடலாம். எல்லாம் நம்ம நினைச்ச மாதிரி நடந்தா கண்டிப்பா அத்தை நேரநேரத்துக்கு மாத்திரை போட்டு உடம்ப பார்த்துப்பாங்க.” என்ற மாறனுக்கு அப்போதைக்கு வேதநாயகியின் ஆரோக்கியம் மட்டுமே எண்ணத்தில் இருந்தது.
“நீங்கச் சொல்லுறது எல்லாம் சரிதான் மாமா. ஆனா அந்தப் பொண்ணு யாரு? அவளோட அம்மா அப்பா எங்க இருக்காங்க? அம்மா வேற இனி அந்தப் பொண்ணு இங்கேயே தங்கிக்கட்டும்னு சொன்னாங்களே!! அப்போ அந்தப் பொண்ணை தேடி அவங்க வீட்டில இருக்கிற ஆட்கள் இங்க வரமாட்டாங்களா?” என்று தன் சந்தேகத்தைக் கேட்டாள் மாயா.
“அந்தக் கவலையெல்லாம் உங்களுக்கு வேண்டாம். இன்னும் ஒரு மாசத்துக்கு நான் வைதேகியை நம்ம எஸ்டேட்டில் தான் தங்க வைக்கப் போறேன். இந்த இடைப்பட்ட காலத்துல வேற பொண்ண பார்த்து ரண தீரன் திருமணத்தையும் நானே பேசி முடிச்சிடுறேன்.” என நம்பிக்கையாகச் சொன்ன மாறன் மேற்கொண்டு அங்கே நிற்காமல் தன் அறைக்குள் புகுந்து கொண்டான்.
“டேய் தம்பி மாமா சொல்றதிலும் ஒரு அர்த்தம் இருக்க தான் செய்கிறது. நேத்து அம்மா ஹாஸ்பிடல்ல எப்படி பிரச்சனை பண்ணாங்கன்னு நீயும் பார்த்த தானே” என்று மாயா தன் கணவனுக்குப் பரிந்து பேசினார்.
“நான் கூட மாமா உண்மையாவே அவங்க சித்தி பொண்ண அழைச்சிட்டு வருவார் என்று தான் நினைத்தேன். ஆனா இந்தப் பொண்ண எதுக்காக இங்க அழைச்சிட்டு வரணும்? எனக்கு அவளைப் பார்த்தாலே கோவம் கோவமா வருது ” என்று ரணதீரன் தன் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு தன் கையை ஓங்கி மேசைமேல் அடிக்க. அதுவரை அங்கே நின்று இருந்த கீதா தலைத் தெறிக்க மாறன் சென்ற அறைக்குள் புகுந்து கொண்டார்.
” நீ முதல்ல கோவத்தை கட்டுப்படுத்து ராணா. எனக்கென்னமோ மாமா சொல்றதுதான் சரின்னு படுது. அவரே எல்லாத்தையும் பார்த்துப்பாரு. நீ சும்மா பிரச்சனை பண்ணாம கம்பெனிக்குக் கிளம்பி போ. அப்புறம் இன்னொரு விஷயம், நீ என் புருஷனை மரியாதை இல்லாம அடுத்த தடவை பேசினினா தம்பின்னு கூடப் பார்க்கமாட்டேன், தலையிலே குட்டிடுவேன். ” என்று தன் தம்பியைத்.திட்டிய மாயாவும் மாறன் இருக்கும் அறைக்குள் புகுந்துகொண்டார்.
” என்ன இது, முன்ன பின்னத் தெரியாத ஒரு பொண்ண வீட்டுக்குள்ள இந்த மாறன் மாமா அழைச்சிட்டு வந்து இருக்காரு. ஆனா அக்கா அதை என்ன ஏதுன்னு கேட்காம என்னைத் திட்றாங்க. யார் இவ? வந்த முதல் நாளே என் குடும்பத்துக் கிட்ட எனக்குத் திட்டு வாங்கி கொடுக்கிறாள்? இல்ல இல்ல இவள இந்த வீட்டுல விட்டு வெச்சா இன்னும் என்னென்ன பிரச்சனையோ நடக்குமோ? இப்போ என்ன?அம்மாவுக்கும் மாறன் மாமாவுக்கும் தெரிந்து அவளை இந்த வீட்டை விட்டுத் துரத்துனா தானே இவங்களுக்கு கோவம் வரும். இவளை எப்படி தொலைக்கணுமோ அப்படி நானே இங்கே இருந்து துரத்தி விடுறேன்.”
என்று எண்ணிய ரணதீரன் கோபமாகவே எஸ்டேட்டிலிருந்து கிளம்பி அவன் கம்பெனிக்குச் சென்றான்.
வைதேகியை கைபிடித்து தன் அறைக்குள் அழைத்துச் சென்ற வேதநாயகி அவளை ஒரு இருக்கையில் அமர வைத்தார்.
வேதநாயகியின் அறையில் சந்தனமர கட்டில், அழகிய வேலைபாடுகளுடன் செய்த மின் விளக்குகள், வெள்ளி பொருட்கள் என்று அந்த அறையே பிரமாண்டமாக இருந்தது.
சுவற்றில் நெல்சன் மற்றும் வேதநாயகியின் அருகே மாயாவும் ரணதீரனும் சிறுவர் சிறுமிகளாக நின்றிருந்த அழகிய குடும்பப் படமும் அந்த அறைக்கு மேலும் அழகைக் கூட்டி கொடுத்தது.
சற்று அச்சத்துடனே அந்த அறையை ரசித்துக்கொண்டு இருந்த வைதேகியின் கரங்களைச் சட்டென்று பற்றிக்கொண்டார் வேதநாயகி.
“அம்மாடி வைதேகி..உன்கிட்ட மறுபடியும் மறுபடியும் நான் அதே கேள்வியைக் கேட்கிறேன்னு என்னைத் தப்பா நினைக்காத. உனக்கு உண்மையாவே என் மகனைப் பிடிச்சிருக்கா? ஏன்னு கேட்டா அவனுக்கு நான் இதுவரைக்கும் நிறைய பொண்ணுங்கள பார்த்துட்டேன். ஆனா அவனுடைய நிறத்தை வைத்து இந்த வீட்டுக்கு அவங்க மருமகளா வரமுடியாதுன்னு சொல்லிட்டாங்க. சொன்னதோடு மட்டும் இல்லாம எத்தனையோ பெண்கள் ரணதீரனை சபைக்கு நடுவுல நிக்க வச்சி அவன் மனசு கஷ்டப்படுற மாதிரியும் பேசி இருக்காங்க. இப்படி நிறைய விஷயம் அவனைப் பாதிச்சதால தான் அவன் கல்யாணமே வேணான்னு முடிவு எடுத்தான். ஆனா ஒரு அம்மாவா நான் அப்படி இருக்க முடியுமா சொல்லு?” என்ற வேதநாயகியின் கண்கள் கலங்கி இருந்தது.
தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக மாறனின் பேச்சைக் கேட்டு ரணதீரனின் எஸ்டேட்டுக்குள் வந்த வைதேகிக்கு வேதநாயகியின் எதிர்பார்ப்பு புரிந்து இருந்தாலும் அந்த இடத்தில் அவருக்கு ஆறுதல் சொல்ல வார்த்தையின்றி வைதேகி தவித்திருந்தாள்.
“எங்களுக்குப் பணம் காசுச் சொத்து சுகம் எதுக்குமே குறை இல்ல. ஆனா என் மகனுக்கு ஒரு கல்யாணம் நடக்கணும். அது மட்டும் தான் என்னுடைய பிராத்தனை. அதுவும் அவன் மனசை புரிஞ்சுகிட்ட ஒரு பொண்ணு இந்த வீட்டுக்கு மருமகளா கிடைக்கணும்னு நான் வேண்டாத தெய்வமே இல்ல. என் மாப்பிள்ளை மாறனின் புண்ணியத்துல இன்னைக்கு நம்ம வீட்டுக்குள்ள மகாலட்சுமி மாதிரி நீ வந்து இருக்க. உனக்கும் ரணதீரனுக்கும் நல்லபடியா திருமணத்தை முடிச்சு வச்சா எனக்குப் போதும். நான் நிம்மதியா என் கணவன் போன இடத்துக்கே போய்ச் சேர்ந்திடுவேன்.” என்ற வேதநாயகி மீண்டும் கண்கள் கலங்கினார்.
“அம்மா அழாதீங்க..உங்க நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும். உங்களுக்கு உடம்பு சரியில்லைன்னு மாறன் அண்ணன் சொன்னாரு. இப்படி உணர்ச்சிவசப்பட்டால் உங்க உடம்புக்கு தான் பிரச்சனை. தயவு செய்து அழாதீங்க. நமக்கு எது நல்லதோ கடவுள் அதைச் சரியான நேரத்தில் நமக்குக் கொடுப்பாரு.
எல்லாம் நல்லதாகவே நடக்கும் என நம்புவோம்.” என வைதேகி பொதுவாக வேதநாயகிக்கு ஆறுதல் கூற, வைதேகியின் பொறுமையும் பக்குவமும் வேதநாயகியை மேலும் கவர்ந்தது.
“அம்மாடி.. நீ இப்படி நல்ல வார்த்தை பேசும்போதே எனக்குப் பாதி தெம்பு வந்த மாதிரி இருக்கு. நீ ஹாஸ்டல்ல தான் தங்கி இருக்கேன்னு மாப்பிள்ளை சொன்னாரு. இனி இதுதான் உன்னோட வீடு. உனக்கு இங்கே எந்த அறை பிடிச்சிருக்கோ நீ அங்க தங்கிக்கோ. ஹாஸ்டல்ல உன்னுடைய பொருட்கள் ஏதாவது இருந்தா மாப்பிள்ளை கிட்ட சொல்லி எடுத்துட்டு வரச் சொல்லிடலாம். இந்த வீட்ல நீ நிம்மதியா சந்தோஷமா வாழனும். நாளைக்கு நம்ம குடும்ப ஜோசியரை இங்க வர வச்சு உனக்கும் ரணதீரனுக்கும் எந்தத் தேதியில் நிச்சயதார்த்தம் பண்ணலாமுன்னு கேட்டுப் போம். நீ எதுக்கும் கவலைப்பட கூடாது. அம்மா இல்லைன்னு வருத்தப்படவும் கூடாது. உனக்கு அம்மாவா அத்தையா நான் இருக்கேன். உனக்கு என்ன தேவையோ அதைத் தயங்காம அத்தை என்கிட்ட கேட்கணும் புரியுதா.” என வேதநாயகி வைதேகியை தன் மருமகளாகவே முடிவு செய்து அவளிடம் அன்பாகவும் அனுசரணையாகவும் பேச வைதேகிக்கு தான் நெருடாலகவே இருந்தது.
“நான் மறுபடியும் என் பையனை உனக்குக் கல்யாணம் பண்ணிக்க விருப்பமானு கேட்கத் தான் தனியா அழைச்சிட்டு வந்தேன். என்னடா இது அத்தை அடிக்கடி இதே வார்த்தையைக் கேக்குறாங்கன்னு நீ என்னைத் தப்பா நினைக்காத, மாறன் மாப்பிள்ளை எது செஞ்சாலும் அது இந்தக் குடும்பம் நல்லதுக்குன்னு எனக்கு நூறு சதவீதம் தெரியும். இருந்தாலும் ஒரு அம்மாவா என்னுடைய பயமும் நியாயம் தானே.” என வேதநாயகி சொல்ல வைதேகி தலையை அசைத்தாளே தவிர வாயைத் திறந்து ஒரு வார்த்தையும் அதற்கு மேல் பேசவில்லை.
வேதநாயகியும் வைதேகியையும் அவர்கள் அறையிலிருந்து வெளியே வர,
“என்ன அத்த.. மருமககிட்ட என்ன பேசணுமோ பேசி முடிச்சிட்டீங்களா?” என்ற மாறனை பார்த்து வைதேகி பதற்றத்துடன் நின்றிருந்தவளின் பார்வை அந்த வீட்டில் ரணதீரன் எங்கே இருக்கிறான் என்று தேடியது.
“எல்லாமே பேசிட்டோம் மாப்பிள்ளை. எனக்கு வைதேகியை ரொம்ப பிடிச்சிருக்கு. நாளைக்கே நம்ம குடும்ப ஜோசியரை வர வச்சு ரணதீரனுக்கும் வைதேகிக்கும் எந்தத் தேதியில் நிச்சதார்த்தம் வச்சா இவங்க சீரும் சிறப்புமாக வாழ்வாங்கன்னு கேட்டுக்கலாம்.” என வேதநாயகி சொன்னார்.
“நீங்க ஏன் அத்தை அதுக்கெல்லாம் கவலைப்படுறீங்க? இப்போ ஜோசியர் ஊர்ல இல்ல, அவரு வந்ததும் நம்ம எஸ்டேட்டுக்கு வரச் சொல்றேன். அதுக்குள்ள வைதேகி நம்ம ராணாக் கிட்ட பேசிப் பழகட்டும்.” எனச் சூழ்நிலைக்கு ஏற்பப் பேசினான் மாறன்.
“வைதேகி நீ எந்த ரூம்ல தங்க போற? உனக்கு வேணும்னா கீழ ரூம் இருக்கு, மாடியிலேயும் ரூம் இருக்கு, இல்லையா இதோ என் பேத்தி மயிழினி கூடவே நீ தங்கலாம்.” என வேதநாயகி சொன்னதும்,
“அத்தை அத்தை நீங்க என் ரூம்ல தங்கிக்கொங்க. நான் மட்டும் தான் அங்க தனியா இருக்கேன். வாங்க அத்தை.”எனக் குழந்தை மயிழினி வைதேகியின் கையைப் பிடித்து அன்பாக அழைத்தாள்.
“நான் பாப்பா ரூம்லயே தங்கிக்கிறேன் அண்ணா.” என்ற வைதேகி சிறுமி மயிழினியை அன்போடு தூக்கி தன் இடுப்பில் அமர்த்திக் கொண்டாள்.
“நல்லதுமா. அத்தை அப்போ வைதேகி மயில் பாப்பா ரூம்ல தங்கட்டும். நீங்கச் சாப்பிட்டு மாத்திரை போட்டு ரெஸ்ட் எடுங்க. இனி ராணா கல்யாணம் என்னோட பொறுப்புன்னு நீங்கச் சொல்லிட்டீங்க. இதற்கு மேல் நீங்க எந்தக் கவலையும் படக் கூடாது.” என்று மாறன் சொன்னதும் வேதநாயகி மனநிறைவோடு சிரித்தார்.
“சரி சரி..நான் போயி ஓய்வு எடுக்கறேன் நம்ப மதிய வேலை சந்திப்போம்.” என்ற வேதநாயகி அவர் அறைக்குச் சென்றார்.
வேதநாயகியின் தலை மறையும் வரை காத்திருந்த வைதேகி, “அண்ணா இங்கே என்ன நடக்குது? நீங்க என்னை என்ன சொல்லி இங்க அழைச்சிட்டு வந்தீங்க, ஆனா வேதநாயகி அம்மா என்னை மருமகளாவே நெனச்சு அதிகப்படியான அன்பையும் நம்பிக்கையும் என் மேல வைக்கிறாங்க. எனக்குப் பயமாவும் இருக்கு சங்கோஜமாவும் இருக்கு.” என்று வைதேகி பதற்றத்துடன் சொன்னார்.
“பாப்பா.. நான் சொல்றத நம்பு. உனக்கு இங்க எந்தப் பிரச்சனையும் இருக்காது. உன்னுடைய சொந்தப் பிரச்சனைகள் தீரும் வர உனக்குப் பாதுகாப்பான இடம் இந்த எஸ்டேட் தான். எங்களை மீறி உன்னை இங்க யாராலும் நெருங்க முடியாது. அதனால நீ கவலைப்படாத. உன் எண்ணப்படி உன்னை இன்னும் ஒரு மாசத்துல கனடாவுக்கு அனுப்ப வேண்டியது என்னோட பொறுப்பு. சரி நீ மயில் ரூம்ல போயி ஓய்வு எடு. நான் ஹாஸ்டல்ல இருந்து உன்னுடைய துணிமணி எடுத்துட்டு வந்ததாகச் சொல்லிச் சில மாற்று உடைகளை வாங்கிட்டு வரேன். எதுக்கும் கவலைப்படாத எல்லாத்துக்கும் அண்ணன் நான் இருக்கேன்.” என்ற மாறன் வைதேகிக்கு ஆறுதல் சொன்னவனாய் எஸ்டேட்டிலிருந்து வெளியேறினான்.
“அத்தை அத்தை வாங்க நான் உங்கள என் ரூமுக்கு அழைச்சிட்டு போறேன்.” என்று சிறுமி வைதேகியை தன் அறைக்கு அழைத்துச் செல்ல, சிறுமி மயிழினியின் அறையில் அவள் மாமா ரணதீரனுடன் எடுத்த புகைப்படங்கள் அங்கங்கே மாட்டியிருப்பதை பார்த்து வைதேகிக்கு பயம் எழுந்தது.
“ஏன் அங்கேயே நிக்கிறீங்க உள்ள வாங்க. ” என்று சிறுமி வைதேகியின் கையைப் பிடித்து உள்ளே அழைத்துச் சென்று கட்டிலில் அமர வைத்ததும், “உள்ள வரலாமா?”
என்ற கேள்வியோடு மாயா உள்ளே நுழைந்தாள்.
மாயாவை பார்த்ததும் கட்டிலிலிருந்து எழுந்த வைதேகி அடுத்து அவள் என்ன கேள்வி கேட்கப் போகிறாள் என்று தயக்கத்துடன் நின்று இருக்க,
“பயப்படாத வைதேகி.. உன்கிட்ட நான் எந்தக் கேள்வியும் கேட்கப் போறது இல்ல. ஏன்னா என் மாமா என்ன செஞ்சாலும் அது இந்தக் குடும்பத்தோட நல்லதுக்குன்னு எனக்குத் தெரியும். இந்தா இதுல என்னுடைய புது துணி இருக்கு. நீ ஏதோ பிரச்சனைல இருக்கன்னு மட்டும் எனக்குத் தெரியுது. நீ கவலைப்படாத, எல்லாம் நல்லதாகவே நடக்கும். ஆனா நீ இங்க இருக்கிற வரைக்கும் என் அம்மா மனசு கஷ்டப்படுற மாதிரி மட்டும் நடந்துக்காத.” என்ற மாயாவும் அனுசரணையாகப் பேசியவர் தன் கையில் இருந்த புத்தாடையை வைதேகியிடம் கொடுத்தபிறகு அந்த அறையிலிருந்து வெளியேறினாள்.
கடந்த பத்து நாட்களில் தன் வாழ்வில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டதை எண்ணி வைதேகியின் கண்கள் தானாகக் கலங்க, எப்படியாவது தான் பிறந்து வளர்ந்த கன்னடா நாட்டிற்கு சென்று விட வேண்டும் என எண்ணிய வைதேகி இப்போதைக்கு ரணதீரனின் எஸ்டேட்டில் பாதுகாப்பாக இருக்க முடிவு செய்தாள்.
அன்றைய தினம் மதிய நேரம் அனைவரும் சாப்பாடு மேசையில் அமர்ந்திருக்க, சிறுமி மயிழினி வைதேகியின் கையைப் பிடித்து அழைத்து வந்தாள்.
சாப்பிடும் இடத்தில் மாறன், கீதா, ரணதீரன், மாயா, வேதநாயகி என்று அனைவரும் அமர்ந்திருந்த வேளையில்
“அம்மா அம்மா.. நம்ம எஸ்டீட்டுக்குள்ள போலீஸ் வண்டி வருது.”
எனப் பணியாளர் ஓடி வந்து சொன்னதும் வைதேகியின் முகம் பயத்தில் இருள் சூழ்ந்ததை அங்கே அமர்ந்து இருந்த ரணதீரன் கண்டு கொண்டான்.
error: Content is protected !!