21 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
Post Views:2,007
ஷோபா குமரனின் உன் பாதியும்
என் மரணத்தின் மீதியும்
அத்தியாயம் 21
Advertisement
.
பெரும் நேசத்திற்குக் காதல் எனப் பெயர் வைக்க மனம் ஆசை கொண்டால்… வைத்துக் கொள்ளட்டுமே…
Advertisement
Advertisement
திறந்திருந்த ஜன்னலின் வழியே வேகமாக வீசிய காற்று ரகுவின் கேசத்தை நாலாபக்கமும் பறக்க விட்டுக் கொண்டிருந்தது. காற்றின் இரைச்சலும், தங்களைக் கடந்து செல்லும் வாகனங்களின் சத்தமும் காதை பிளந்தாலும் அது எதுவும் ரகுவின் செவிட்டுக் காதுகளை எட்டவில்லை. ‘கண்ணாடிய ஏத்தவா?’ எனக் கேட்க நினைத்து மகன் பக்கம் திரும்பிய நகுலன், மகனின் புன்னகை முகம் கண்டு அதைக் கேட்காதே சாலையின் பக்கம் தன் கவனத்தை வைத்தார்.
வருண் மற்றும் நிவேதா பாண்டிச்சேரியில் இருக்க, மூத்த மகனுக்காக மாமனாரின் காரை எடுத்துக் கொண்டு திருச்சியை நோக்கிக் கிளம்பிவிட்டார் நகுலன். மூன்று நாள்களாகக் கடுகடுக்கவில்லை என்றாலும் இப்படியான பரவசம் மகனின் முகத்தில் நகுலன் பார்க்கவில்லை. இன்று, வானத்தைப் பார்த்துச் சிரிக்கிறான். எதையோ எண்ணி தலை அசைக்கிறான். பார்க்கவே அவ்வளவு அழகாக இருக்க, மகனின் பரவசநிலையைக் கலைக்கத் தகப்பனுக்கு மனம் இல்லை. அப்படி என்ன தான் அந்த திருச்சியில் இருக்கிறது இவனுக்கு?
Advertisement
அம்மாச்சி மற்றும் தாத்தாவைப் பார்க்கப் போவதால் இந்தப் பரவசமா? இல்லை திருச்சியில் இருக்கும் தோழர்களை நினைத்துப் பூரிக்கிறானா? உண்மையிலுமே நகுலனுக்கு மகனின் மனநிலையின் காரணம் தெரியவில்லை. சாதாரணத் தகப்பன் மகனாக இருந்திருந்தால் நகுலன் கேட்டிருப்பார். ஆனால் இவர்கள் இருவரும் தாமரையும் தண்ணீரும் ஆகிற்றே. எப்படிக் கேட்பார்?
தகப்பனோடு மட்டுமல்ல, குடும்பத்தில் இருக்கும் அனைவரோடும் அப்படித் தான் ரகு. வேண்டுமென்று அவன் தள்ளி நிற்கவில்லை. அவனால் ஒன்றமுடியவில்லை அவ்வளவே. அவனை ‘அவன்’ குடும்பத்தினரிடம் இருந்து பிரித்தவர்களிடம் அவனால் ஒட்ட முடியவில்லை என்பதே நிஜம். பாட்டி தாத்தாவோடு இருக்க விட்டிருந்தால்… அப்பா, சிற்றன்னை, தம்பி, தங்கை என ஒரு நல்ல உறவை ஏற்படுத்தியிருப்பானோ என்னவோ.
ரகுவால் அவர்களோடு சுமுகமாக வாழ முடிந்தது. ஆனால் அதில் எல்லைக் கோடு இருந்தது. எல்லைக் கோடு என்றால்? “அம்மாக்கு ஃபின்லேன்ட் எம்பசில வேல கிடைச்சிருக்கு. இப்போ அம்மா போகட்டும், நீ ட்வெல்த் முடிக்கவும் நாம எல்லாரும் கிளம்பிடுவோம்” என அப்பா கூறியதும், “நீங்க எல்லாம் போங்க, நான் வரல. நீங்க ஊர் ஊரா போர இடத்துக்கு எல்லாம் என்னால வரமுடியாது ப்பா. நான் திருச்சிக்கு போறேன். பாட்டி வீட்டுல இருந்து காலேஜ் போறேன்” எனக் கூறும் அளவிற்கு அவன் எல்லைக் கோடு இருந்தது.
இத்தனை வருடங்கள் திருச்சியை விட்டுத் தள்ளி இருந்தது போதும் என அவன் நினைத்தான். ஆனால் காலம் அப்படி நினைக்கவில்லை. அவர்கள் மூவரும் ஃபின்லாந்து கிளம்பும் முன்பே நகுலனின் அன்னை காலமானார். ரகுவின் அப்பா வழி தாத்தா தனித்துப் போனார். தனித்து நிற்கும் அவரை ரகுவால் தனித்து விடமுடியவில்லை. கான்பூரில் இருக்கும் தாத்தாவைக் காணச் சென்றவன் அவரோடே இருந்து கொண்டான்.
வாகனம் ஊருக்குள் நுழைந்தது. ரகுவின் மனம் வேகமாக அடித்துக்கொள்ள ஆரம்பித்தது. மனம் துள்ளிக் குதித்தது. அவன் திருச்சி மண். ஐந்து வருடங்களுக்குப் பின் அவன் தாய் வீடு செல்கிறான். சற்று நேரத்தில், அவன் அம்மா… ஐயா… பேபி என அனைவரையும் கண்களுக்குள் நிரப்பிக் கொள்ளலாம். சிறகுகள் இல்லாது பறக்க முடியாதா? அடுத்த பத்து நிமிடங்களை எப்படி நகர்த்துவதாம்? மனம் ஆர்ப்பாட்டம் செய்தது.
வலது பக்கத் திருப்பம்… நேரே செல்லவேண்டும்… இங்கு இடது… நாங்கள் விளையாடிய காலி மனை… அடுத்த திருப்பத்தில் எங்கள் பள்ளி வளாகம் என மனம் பார்க்க இருக்கும் காட்சிகளை எல்லாம் வரிசையாக ஒப்பித்து மகிழ்ந்தது.
விளையாடிக் கொண்டிருந்த பெண் ஒருத்தி, அவள் கையில் இருந்த தண்ணீரை எதிரில் இருந்த பெண் மீது தெளித்துக் கொண்டிருந்தாள். பள்ளியின் கடைசி நாள் ரகுவின் நினைவில் வந்து சென்றது.
பன்னிரண்டாம் வகுப்பின் கடைசி தேர்வை முடித்து வெளியே வந்த அன்றும் இப்படித் தான் நீரை ஒருவர் மேல் மற்றவர் ஊற்றினர். அன்று பிள்ளைகளிடையே அத்தனை ஆரவாரம். பள்ளி வளாகம் முழுவதும் கேள்வித் தாள்கள் பறந்தன. கையிலிருந்த பாட்டிலில் இருந்த தண்ணீர் மற்றவர் மேல் தெளிப்பதும் குதிப்பதுமாக இடமே அல்லோல பட்டது. மாற்றி மாற்றி தோழர்களின் சட்டையில் தோன்றியதை எல்லாம் எழுதி… கை ஒப்பம் இட்டு… கிறுக்கி… இத்தோடு பள்ளி வாழ்க்கையிலிருந்து விடுதலை என ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அனைத்துப் பாடங்களையும் ரகு நன்றாகவே எழுதியிருந்தான். அடுத்து என்ன படிக்க வேண்டும், என்ன வேலை புரியவேண்டும் என்பதில் அவன் உறுதியாகவே இருந்தான். “மருத்துவம்” என்றார் தகப்பன். “ஏரோஸ்பேஸ் என்ஜினியரிங்” என்றான் மகன். “என் வாழ்க்கை என் முடிவு” என்றதே வென்றது.
அவனுக்கான முடிவுகள் அனைத்தும் ரகுவே எடுத்தான். தங்கை தம்பியோடு சுமுகமாகச் சென்றாலும், அவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக மட்டுமே இருந்தான். என்ன முயன்றும் அவன் முழு மனதோடு அவர்களோடு ஒட்டி உறவாட முடியவில்லை. அவன் மனம் முழுவதும் திருச்சியை நோக்கியே சென்றது. ஆனால்… இதோ இந்த ஐந்து வருடங்களில் ஒரு முறை கூட திருச்சிக்குச் செல்லவில்லை. கடலளவு ஆசை இருந்தாலும், “தனியா எல்லாம் அனுப்ப முடியாது. தாத்தா பாட்டி வருவாங்க” என அப்பா முடித்துவிட்டார்.
ஒரு முறை தாத்தாவும் பாட்டியும் வந்து சென்றனர். தில்லியின் குளிர் தாங்க முடியாது சென்றவர்கள், அதன் பின் வர மறுத்துவிட்டனர். பள்ளி வாழ்க்கை முடிந்து கல்லூரிக்குள் ரகு கால் மிதிக்கும் வேளை, ரகு தில்லியில் இருந்து கான்பூருக்கு புலன் பெயர, ரகுவின் குடும்பம் ஃபின்லாந்து சென்றது.
மகனை விட்டுச் சென்ற தகப்பனுக்குத் தவித்தது. தில்லியை விட்டுச் சென்று ஒரு வருடம் கழித்து மகனைக் காண நகுலன் இந்தியா கிளம்ப, பிள்ளைகளும் தந்தையோடு விடுப்பிற்கு கான்பூர் வந்தனர். முதலாம் ஆண்டு கல்லூரி விடுப்பில் திருச்சிக்குச் செல்ல மனக்கோட்டை கட்டி இருக்க, தத்தையும் உடன் பிறப்புகளும் வந்து நின்றால் அவனும் என்ன செய்வான்?
நான்கு நாள்கள் பொறுத்தான். அதற்கு மேலும் பொறுக்க முடியாதவனாக, “திருச்சிக்கு போகணும் ப்பா” என இவன் ஆரம்பிக்க, நகுலனுக்கு எரிச்சல் வந்தது. மகனைக் காண அவர் வந்திருக்க, அவனோ ‘திருச்சி’ என நிலையால் நிற்கிறான்.
இம்முறை “தனியா அனுப்ப முடியாது” வேலை செய்யவில்லை. “இருபது வயசாக போகுது எனக்கு! நான் போய்ட்டு வரேன்” என்றான் மகன்.
“அங்க என்ன டா இருக்கு? அஞ்சு வருஷமா ஒவ்வொரு லீவுக்கும் அங்கப் போகத் துடிக்கிற? இது தான் உன் இடம். நாங்க தான் உன் குடும்பம். ஏன் ஒட்ட மாட்டேன்ற?” என வார்த்தை வலுத்தது.
‘குடும்பம்’ அந்த வார்த்தை ரகுவை வெகுவாய் தாக்கியது. குடும்பத்திற்காக… அன்புக் கரத்திற்காக இவன் தனித்து நின்றிருந்த வேளை, இவனை இழுத்து மார்போடு அணைத்து ‘நீயும் எங்களில் ஒருவன்’ என ஒரு குடும்பத்தை அவன் ஐயா கொடுக்காது போயிருந்தால்… மடி சாய்த்துக் கதை பேசப் பாட்டி இல்லாது போயிருந்தால்… ‘லகு’ எனச் செல்லம் கொஞ்ச பேபி இல்லாது போயிருந்தால்… வயிற்றோடு மனதை நிரப்ப சந்திரிகா அம்மா இல்லாது போயிருந்தால்… ஆசானாய் தாத்தா இல்லாது போயிருந்தால்… இவர்களோடு ஒட்டி இருப்பானோ. ச்ச.. ச்ச… என்ன நினைப்பிது? இவர்கள் இவன் வாழ்வில் இல்லாது போயிருந்தால்… இன்று ரகு என்ற ‘இந்த ஒருவன்’ இருந்திருக்கவே மாட்டான் என்பது தான் உண்மை.
“அங்க என்ன இருக்கா? என்னோட எல்லாமே அங்க தான் இருக்குன்னு சொன்னா உங்களுக்கு புரியுமா? உங்களுக்குன்னு ஒரு குடும்பம் வந்ததும் என்னைக் கூட வச்சுக்க முடியாம குப்பைய தூக்கி போடற மாதிரி தூக்கி போட்டுட்டு போனீங்க… நினைவிருக்கா? அப்போ அங்க என்ன இருந்துதுன்னு விட்டுவிட்டு வந்தீங்க? இப்பவும் அங்க அதே தான் இருக்கு. என்ன உயிரா நேசிச்சவங்கட்ட இருந்து பிரிச்சு இழுத்துட்டு வந்துட்டா, நானும் எல்லாம் மறக்கணுமா? மறக்க முடியாது என்னால. ஐஞ்சு வருஷமா, சின்ன பையன்னு உங்க கைக்குள்ள வச்சிருந்தீங்க. திரும்பவும் உங்க பிழைப்பைப் பார்த்து நீங்க கிளம்பியாச்சு. நான் ஏதாவது சொன்னேனா? ஒரு வருஷமா என் வாழ்க்கைய நான் தான் பாத்துக்கிறேன். உங்களுக்குத் தான் உங்க அப்பாவும் வேண்டாம், உங்க மகனும் வேண்டாம். ஆனா எனக்கு அப்படி இல்ல… எனக்கு வேணும். எனக்கு என் தாத்தா பாட்டி, ஐயா, அம்மா, என் பேபி, என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாருமே எனக்கு வேணும்! அங்க என்ன இருக்குன்னு நான் சொன்னாலும் உங்களுக்கு புரியாது. நான் போகணும் அவ்வளவு தான்” என முதல் முறையாக ரகுவின் சத்தம் அந்த நான்கு சுவருக்குள் ஓங்கி ஒலித்தது.
“அவன் தாத்தா, பாட்டிய பாக்க ஆசப்படுறதுல என்ன தப்பிருக்கு? போயிட்டு வாங்க. எப்படியும் வருண் நிவேதாவ புதுச்சேரிக்கு கூட்டிட்டுப் போவ தான? அங்க இருந்து அப்படியே இவன திருச்சிக்கு பஸ் பிடிச்சு போக சொல்லு” என நகுலனின் தகப்பன் ரகுராம், ரகுவிற்காக பேசினார்.
அந்த பெரிய மதில் சுவர் இரும்பு கேட்டின் முன் கார் நின்றது. எப்படியோ… நீண்டுகொண்டே போன ஐந்து நீளமான…. மிக மிக நீளமான வருடங்களுக்குப் பின் ரகு சொந்த மண்ணில் கால் மிதிக்கிறான். மூச்சை உள்ளிழுத்தவனுக்குப் பரமானந்தம்.
பாட்டியும் தாத்தாவும் தோப்பிற்குச் சென்றிருக்க, வீட்டில் வேலையாள் மட்டுமே இருந்தாள். அவள் முன் நின்றிருந்தவனை யார் எனத் தெரியாது முழித்தவளிடம், “மலர் கா… மறந்திடுச்சா?” என்றான் சிரித்தவாரே.
ஏதோ சினிமா படக் கதாநாயகன் போல் நிற்பவனை வாய் பிளந்து பார்த்தவளுக்கு ரகுவை உண்மையிலுமே தெரியவில்லை. பின்னால் நின்றிருந்த நகுலனை வைத்துக் கண்டுபிடித்தாள் மலர். “ரகு தம்பியா?” என விழி விரித்தவள், இருவரையும் உள்ளே அமரவைத்து உபசரிக்க ஆரம்பித்தாள்.
“நீங்க வரதா அம்மா சொல்லவே இல்லியே. சொல்லி இருந்தா நல்லதா சமைச்சு வச்சிருப்பேனே” என அவள் வருத்தம் கொள்ள, “வழியிலயே சாப்பிட்டாச்சுக்கா. சர்ப்ரைசா இருக்கட்டுமேன்னு சொல்லல” என முடித்தான்.
“பெரிய ஐயாவும் அம்மாவும் வர நேரம் தான்…” என வந்தவர்களை மலர் உபசரிக்க, ரகுவிற்கு இருப்புக் கொள்ளவில்லை.
“நான் தோப்பு வரைக்கு போயிட்டு வரேன்” என அப்பாவும் கிளம்பிவிட, அதற்கு மேல் அமர்ந்திருக்கப் பிடிக்காதவனாய் எழுந்தான் ரகு. நீள் கால்கள் இரண்டும் நேரே பின் வீட்டை நோக்கிச் சென்றன. எப்பொழுதும் இல்லாத ஒரு படபடப்பு அவனுள். முழுதாக ஐந்து வருடங்கள் ஆகிற்று அவளைப் பார்த்து… பேசி! மறந்திருக்க மாட்டாள் எனத் தெரியும். பெரிய பெண் ஆகிவிட்டாளே… அதனால் முன்போல் பேசுவாளா? பழகுவாளா? உள்ளுக்குள் ஏதேதோ கேள்விகள்.
வாயில் கதவு திறந்திருந்தது. “ஐயா…” எனக் கதவை மென்மையாகத் தட்டினான். முன்பென்றால் கதவைத் திறந்துகொண்டு வீட்டிற்குள் அந்த வீட்டுப் பிள்ளையாய் ஓடியிருப்பான். “அம்மா” என சந்திரிகாவை கட்டிக்கொண்டு நலம் விசாரித்திருப்பான். ஐயாவின் கைப்பிடித்துக் குதித்திருப்பான். தயக்கமில்லாது வாய் நிறைய ‘பேபி’ என்று அழைத்து, அவளைத் தட்டாமாலை சுற்றி அவள் முன்னால் நிற்பான். இன்று? உள்ளுக்குள் ஒரு தயக்கம்… ஓர் இனிமையான தவிப்பு. ஐந்து வருடத் தவிப்பும் படபடப்பும்.
பின்புற வாசலும் திறந்திருக்க வீட்டினுள் சென்றான். பின் வாயில் கதவை அடையவும் எட்டி வெளியே பார்த்த அதே நேரம் முகம் கழுவி ஈரத்தோடு இவன் பக்கம் திரும்பினாள் அவள். அவள் தான்… அவளே தான்… இதயம் நின்று துடித்தது பதின்ம வயதின் முடிவில் இருந்த காளைக்கு.
எதிர்பாரா நேரத்தில் தன் வீட்டு வாசலில் ஒருவன். காலை ஓரடிப் பின் வைத்து முகத்தில் திகைப்பைக் காட்டியவளின் கண்களில் அப்படி ஒரு மிரட்சியை அவன் எதிர்பார்க்கவில்லை.