Skip to content
Post Views: 4,966
✨நிறம் பாராத காதல்✨
✨அத்தியாயம் 8
“மிஸ் சித்ரா”என்ற விக்ரமை பார்த்து,
“என் பெயர் உங்களுக்கு எப்படி தெரியும்!?”என்று கேட்டுக்கொண்டே விக்ரம் அருகே பதற்றத்துடன் விரைந்து வந்தாள் வைதேகி.
“ஓ!! அப்போ என் பெரியம்மா சொன்னது போல உங்க பெயர் வைதேகி இல்லையா?” என்று கேட்ட விக்ரமுக்கு தன்னை பற்றிய விவரங்கள் தெரிந்து இருக்கக்கூடும் என்று நினைத்த வைதேகி,
“அதுவும் என் பெயர் தான்.” என்றாள்.
Advertisement
“கனடாவில் சித்ரா, அதுவும் டாக்டர் சித்ரா!! அப்புறம் இங்க வைதேகி, இவ்ளோ தானா!! இல்லை வேற பெயர் இருக்கா?” என்று விக்ரம் கிண்டலாகக் கேட்டான்.
தன்னை பற்றி விக்ரமுக்கு எந்த அளவுக்கு உண்மை தெரியும் என்ற பயத்தில் வைதேகி பதட்டத்துடன் நின்று இருந்தவள் அழகில் விக்ரமின் மனம் அவள்வசம் கொஞ்சம் கொஞ்சமாகத் தடம் புரள ஆரம்பித்தது.
எவ்வளவு கட்டுப்படுத்தியும் அவன் விழிகள் அவளைச் சிறையெடுப்பதை அவனால் கட்டுப்படுத்த முடியவே இல்லை. இத்தனை வருடங்களில் இதுவரை எந்தப் பெண்ணையும் பார்த்து அவளைத் தன்னவளாக்கி கொள்ள வேண்டும் என்ற எண்ணம் விக்ரமுக்கு தோன்றாத நிலையில் ரணதீரனின் இல்லத்தில் முதல் முறை வைதேகியை பார்த்ததுமே விக்ரமுக்கு அவனை மீறி அவன் இதயத்தில் வைதேகியின் அழகிய வதனம் பதிந்து விட்டது.
Advertisement
வைதேகியை தன்னவளாக விக்ரம் நினைத்துப் பார்க்கும் முன்னே அவளை ரணதீரனின் வருங்கால மனைவி என்று வேதநாயகி அறிமுக படுத்தி வைத்ததும் அவனால் அந்த வார்த்தையை ஜீரணிக்கவே முடியவில்லை.
வைதேகியின் பதற்றம், மாறனின் சமாளிக்கும் பேச்சு என்று விக்ரமின் மூளையில் ஏதோ ஒன்று சரியில்லையென எச்சரித்ததும் விக்ரம் வைதேகியை பற்றிய விவரங்களைச் சேகரிக்க ஆரம்பித்தவனுக்கு அவளைப் பற்றிய ரகசியம் தெரிந்த பின்பு வைதேகி மேல் இன்னும் அதிகமாக அவனுக்கு ஈர்ப்பு ஏற்பட்டு இருந்தது.
அந்த ஈர்ப்புக்கு பெயர் காதல் என்று அவன் பெயர் சூட்டும் முன்னே வைதேகியிடம் சில உண்மைகளைக் கேட்டுத் தெரிந்துக்கொள்ள வேண்டும் எண்ணினான்.
Advertisement
“சரி சொல்லுங்க வைதேகி, அப்போ உங்களுக்கும் மாறன் மாமாவுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை அப்படி தானே?” என்று விக்ரம் கேட்டதும், “ஆமா…எந்தச் சம்மந்தமும் இல்லை” என்று சொன்னவள், எப்படி அவள் மாறனை சந்தித்தாள் என்ற உண்மையை விக்ரமிடம் மறைக்காமல் சொல்லி இருந்தாள்.
“ம்…நினைத்தேன், என்னடா இது ரணதீரனுக்கு இப்படி அழகு தேவதை மனைவியான்னு அப்போவே நினைச்சேன்” என்று விக்ரம் கிண்டலாகச் சொல்ல, “வேதநாயகி அம்மாவுக்காகத் தான் மாறன் அண்ணன் அப்படியொரு பொய்யைச் சொல்லச் சொன்னாரு.” என்று தயக்கத்துடன் சொன்னாள் வைதேகி.
“நீங்க வேதநாயகி பெரியம்மாவுக்காகப் பொய் சொல்லுறது இருக்கட்டும், ஆனா ரணதீரன் அண்ணனுக்கு நீங்கப் பொய் சொல்றிங்கனு தெரியுமா?” என்று கேட்டான் விக்ரம்.
Advertisement
“தெரியும்.நான் ஒரு மாசத்துல கனடாவிற்கு போயிடுவேன்னு ரணதீரன் சார்கிட்ட மாறன் அண்ணன் அப்போவே சொல்லிட்டாரு, ரணதீரன் சாரும் அவங்க அம்மாவுக்காகத் தான் என்னை அந்த வீட்டுல இருக்க சம்மதம் சொல்லிருக்காரு.” என்று வைதேகி சொன்னாள்.
“அப்போ உங்களுக்கும் ரணதீரன் அண்ணனுக்கும் கல்யாணம் நடக்காது அப்படித்தானே!!?” என்று மனதளவில் சந்தோஷத்தைச் சுமந்தபடி விக்ரம் கேக்க, “ஐயோ கல்யாணம் நடக்காது, அவருக்கு என்னைக் கண்டாலே பிடிக்காது.” எனப் பதறிப்போய் சொன்னாள் வைதேகி.
“ஓ!! அவருக்கு உங்களைப் பிடிக்காதா? காலக்கொடுமை தான்.”என்ற விக்ரம் தன் பாக்கெட்டில் இருந்த விசிட்டிங் கார்டை எடுத்து வைதேகி முன் நீட்டியவன், “இதுல என் போன் நம்பர் இருக்கு, உங்களுக்கு எப்போ எந்த ஹெல்ப் வேணும்னாலும், எந்த நேரமா இருந்தாலும் எனக்குப் போன் பண்ணுங்க.” என்றவனின் கையிலிருந்து தயக்கத்துடன் வைதேகி கார்டை வாங்கிக்கொண்டாள்.
“இப்போதைக்கு மாறன் மாமாவுக்கு உங்களைப் பற்றிய உண்மை எனக்குத் தெரியும்னு சொல்லிடாதீங்க. அவரு சொன்னது போலவே உங்களைக் கனடாவிற்கு அனுப்ப அவரால என்ன பண்ண முடியுமோ அவரு அதைப் பண்ணட்டும். நானும் என் பக்கத்துல இருந்து உங்க மாமா ரங்கராவை எப்படி முடிச்சி விடலாம்னு பார்த்துக்குறேன்.” என்ற விக்ரமின் வார்த்தைகள் வைதேகிக்கு மேலும் தெம்பை கொடுத்தது.
“ஆமா இங்க என்ன காட்டுல தனியா சுத்திகிட்டு இருக்கீங்க?” என்று விக்ரம் கேட்டதும் தான் கீதாவிற்கு தண்ணீரை தேடி வந்த நியாபகம் இவளுக்குத் திரும்பியது.
“நானும் கீதா அம்மாவும் ரணதீரன் சார் கூட வந்தோம். அவரோட வண்டி பஞ்சர் ஆகிடுது” என்ற வைதேகி கீதா அம்மாவிற்காக தண்ணீர் வாங்க வந்ததை சொன்னாள் .
“இங்க கடை ஏதும் இருக்காது, என் வண்டியில தண்ணி இருக்கு. நீங்கப் பைக்ல ஏறுங்க நானே கீதா அத்தைகிட்ட உங்களை அழைச்சிட்டு போறேன்” என்று விக்ரம் சொன்னதும் வைதேகியும் மறுத்துப் பேசாமல் விக்ரமின் இருசக்கர வாகனத்தில் ஏறிக்கொண்டாள்.
“என்ன இந்தப் பொண்ணு தண்ணீர் வாங்க தாய்லாந்த் போயிருக்கா? ஐயோ கடவுளே மசாலா பாலுக்கு ஆசைப்பட்டு இப்போ ஒருவாய் தண்ணீக்கு ஏங்க வேண்டியதா போச்சே” என்று கீதா புலம்பியவரின் எதிரே விக்ரமனுடன் வைதேகி வந்து இறங்கினாள்.
“என்னமா நீ தண்ணீர் வாங்க தனியா போயிட்டு இப்போ இந்தத் தடி தாண்டவராயன் கூட வந்து இறங்குறியே தண்ணீ எங்கம்மா?” என்று கீதா கேட்டதும் விக்ரம் அவர் முன்னே தண்ணீர் பாட்டிலை நீட்டினான்.
தாகம் தீர நீரை பருகிய கீதா, “ஆமா நீ என்னப்பா போலீஸ் வேலைக்குப் போகாம உன் வருங்கால அண்ணிகூட வந்து இருக்க, ஏன் இன்னைக்கு உனக்கு வேலை லீவா?” என்ற கீதாவின் வார்த்தையில் உள்ள வருங்கால அண்ணி என்ற சொல் விக்ரமை கடுப்பாக்கியது.
“யாருக்கு யார் அண்ணி?” என்று விக்ரம் கோவமாகக் கேட்டதும்,
“அதானே!! யாருக்கு யாரு அண்ணி?
நானே இவனுக்கு அண்ணன் இல்லை, அப்புறம் எப்படி வைதேகி மேடம் இவனுக்கு அண்ணியாக இருக்க முடியும்?” என்று கேட்டுக்கொண்டே இவர்களின் அருகே நடந்து வந்த ரணதீரனின் பார்வை கோவமாக விக்ரம் மீது பதிந்து இருக்க, வைதேகியோ அவனைப் பார்த்ததுமே கீதாவின் அருகே சென்று நின்றுக்கொண்டாள்.
“நான் உங்கள அண்ணனாக நினைச்சா போதுமா? நீங்க என்னைத் தம்பியா நினைக்க வேணாமா?”என்று கேட்ட விக்ரமனை பார்த்துச் சத்தமாகச் சிரித்தான் ரணதீரன்.
“இவனுக்குச் சிரிக்கக் கூடத் தெரியுமா!?” என்று கீதா ரணதீரனை கேள்வியாகப் பார்த்து இருக்க, “என்னை அண்ணனா நினைக்கிற நீ தானே உன் நண்பனுங்க கூடச் சேர்ந்து அண்டங்காக்கான்னு என்னை கேலி பண்ண?” என்று ரணதீரன் கேட்டதும் விக்ரம் பதில் சொல்லாமல் அமைதியாக நின்று இருந்தான்.
“நீங்கயெல்லாம் பால் வண்ண நிறம், நான் கருப்பு தான், அதுவும் மைக்கருப்பு தான், என்னை மாதிரி ஆளை நீ என்னைக்கும் அண்ணனாகவும் நினைக்க வேண்டாம், வைதேகி மேடமை நீ அண்ணியாகவும் எண்ண வேண்டாம்.” என அழுத்தமாகச் சொன்னான் ரணதீரன்.
“நீங்கச் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் வைதேகியை நான் அண்ணியா நினைக்கவே மாட்டேன்.” என்ற விக்ரம் கீதா அருகே நின்று இருந்த வைதேகியை காதல் பார்வை பார்த்தவன், ஒரு மார்க்கமாகத் தன் இருசக்கர வாகனத்தை அங்கிருந்து விரட்டியவனை வெறுப்பாகப் பார்த்து இருந்தான் ரணதீரன்.
“என்ன வைதேகி? அந்த விக்ரம் உங்கிட்ட எதாவது கேள்வி கேட்டானா?”என்று கீதா கேக்க, இல்லையென்ற ரீதியில் தலை அசைத்தாள் வைதேகி.
“அத்த… விக்ரம் ஒரு போலீஸ். அவன் குற்றவாளிகளைக் கேள்வி கேக்க தானே செய்வான்” என்ற ரணதீரன் வைதேகியை பார்த்து, “என்ன நான் சொல்லுறது சரிதானே?” என்று கிண்டலாகக் கேட்டான்.
“அவரு என்கிட்ட எதுவும் கேக்கல” என்று வைதேகி பொய் சொல்வதை புரிந்துகொண்ட ரணதீரன், “அவன் உங்ககிட்ட என்ன கேட்டிருந்தாலும் எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை மேடம்.” என்றவனை நோக்கி வேகமாகக் கருப்பு நிற கார் விரைந்து வருவதை பார்த்த வைதேகியின் கண்களில் நேற்றைய தினம் அவள் கண்ட காட்சிகள் அணைத்தும் தோன்றி மறைந்தது.
கருப்பு நிறக் காரில் அமர்ந்திருந்த வேலுவை பார்த்து,”என்ன மாப்புள வேலுவை கார் எடுத்துட்டு வரச் சொன்னிங்களா? ஆமா இது யாரோட கார்?”என்ற கீதா, அந்தக் காரை இதற்கு முன் பார்த்ததில்லையே என்று யோசித்தார்.
“ஜீப் நாளைக்கு தான் ரெடி ஆகும், அதனால நம்ம இந்தக் காருல போய்டலாம்”என்ற ரணதீரன் காரின் முன் இருக்கையில் வேலுவின் அருகே அமர்ந்து கொண்டவன், இந்தக் காரைப் பற்றி எதையும் சொல்லாமல் இருக்க,
கீதாவும் வைதேகியும் பின் இருக்கையில் அமர்ந்துக் கொண்டார்கள்.
டிரைவர் வேலு காரை ரணதீரனின் தலைமையில் இயங்கும் நெல்சன் கம்பெனியை நோக்கி விரட்டியவனை வைதேகி சந்தேகத்துடனே பார்த்துக்கொண்டு இருந்தாள்.
“வேலு காருல பாட்டு இருந்தா போட்டு விடு” என்று கீதா சொன்னதும், “ரோட்டுல கூடத் தான் கல் இருக்கு, தலையில போடச் சொல்லவா?” என்று கிண்டலாகக் கேட்டான் ரணதீரன்.
காரின் பின் இருக்கையில் அமர்ந்து இருந்த வைதேகியின் காலுக்குக் கீழே ஒற்றை கொலுசு தென்பட்டதும் அதைக் கையில் எடுத்துப் பார்த்த வைதேகியை முன் இருக்கையில் அமர்ந்தப்படி கண்ணாடி வழியே பார்த்து இருந்தான் ரணதீரன்.
“என்ன அது கொலுசா? எங்க கொடு பாப்போம்” என்ற கீதா வைதேகி கையிலிருந்து கொலுசை வாங்கி பார்த்தவர், “என்ன வேலு யாரோட கொலுசு இது?” என்று கேட்டார்.
“இந்தக் கார் யாரோடது? கொலுசு யாரோடது? காட்டுல இருக்குற செடி கொடி யாருடையதுன்னு உங்களுக்குச் சம்பந்தமில்லாத விஷயங்களைப் பற்றி ஆயிரத்து எட்டு கேள்வி கேட்காம கொஞ்ச நேரம் அமைதியா வாங்க.” என்ற ரணதீரனின் பதிலில் கீதாவுடன் சேர்ந்து வைதேகியும் வாயடைத்து அமர்ந்திருந்தாள்.
அடுத்த பத்து நிமிடத்தில் வேலு விரட்டியக்கார் ரணதீரனின் கம்பெனி வாசலில் நின்றது.
“அத்தை நீங்க வைதேகி மேடைமை அழைச்சிக்கிட்டு உள்ள போங்க, நான் பின்னாடி வரேன்.” என்ற ரணதீரனின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு கீதாவும் வைதேகியை அழைத்துக்கொண்டு நெல்சன் கம்பெனிக்குள் நுழைய, வைதேகி காரில் இருந்த கொலுசைப் பத்திரமாகத் தன் கைக்குள் பதுக்கிக் கொண்டாள்.
“வேலு… வேலை முடிஞ்சா காரைக் கிளீன் பண்ணனும்ன்னு தெரியாதா? அந்தக் கொலுசு எப்படி என் காருல வந்துச்சு?” என்று ரணதீரன் கோவமாகக் கேட்டதும்,
“மன்னிச்சுடுங்க நேத்து நைட்டே வேலை முடிந்ததும் காரைக் கிளீன் பண்ணிட்டேன்,
ஆனா இந்தக் கொலுசு எப்படி…” என்று வேலு யோசித்தான்.
“வாயை மூடு..இப்பல்லாம் எந்தக் காரியத்தையும் நீ ஒழுங்கா பண்றது இல்ல, உன் கவனம் எங்க இருக்குன்னு தெரியல, சீக்கிரமா இந்தக் காரைக் கொண்டு போயி எங்க சேர்க்கணுமோ அங்க சேத்துட்டு என் ஜீப்பை ரிப்பேர் பண்ணி இங்க எடுத்துட்டு வா” என்று வேலுவிடம் கோபமாகப் பேசிய ரணதீரன் அவன் தலைமையில் இயங்கும் நெல்சன் என்ற பெயருடைய கம்பெனிக்குள் நுழைந்தான்.
கீதாவும் வைதேகியும் முதலில் கம்பெனிக்குள் நுழைந்ததும்,
“வாங்க மேடம் எப்படி இருக்கிங்க?” என்று ரணதீரனின் உதவியாளர் சேகர் நலம் விசாரித்தவரின் கண்கள் வைதேகியை கேள்வியாகப் பார்த்தது.
“நான் நல்லா இருக்கேன், வேலையெல்லாம் ஒழுங்கா நடக்குதா?” என்ற கீதாவை அங்குள்ள அனைவரும் மரியாதையாக அணுகினார்கள்.
“வேதநாயகி அம்மா நம்ம ரணதீரன் சாரை கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு இன்னைக்கு இந்தக் கம்பெனிக்கு வரப் போறதா காலையிலயே போன் பண்ணி சொன்னாங்க, இவங்க தான் எங்க சின்னமாவா?” என்று சேகர் ஆச்சிரியமாகக் கேட்டார்.
“உங்க சின்னமா யாருன்னு நீங்க உங்க சித்தப்பாகிட்ட கேளுங்க மிஸ்டர் சேகர்” என்ற ரணதீரனின் பதிலில் அங்குள்ள அனைவரும் மட மடவெனத் தன் வேலைகளைச் செய்ய ஆரம்பித்தார்கள்.
“சாரி சார்…பெரியம்மா தான் நீங்கச் சின்னம்மாவை அழைச்சிட்டு வருவீங்க, அவங்கள நம்ப கம்பெனி ஸ்டாப்ஸ்க்கு அறிமுகப் படுத்தி வைக்கச் சொன்னாங்க” என்று சேகர் சொன்னதும்,
“அந்த ஈர வெங்காய கதை எல்லாம் வேலை நேரத்துல பண்ணனும்னு அவசியம் இல்ல. போயி வேலைய பாருங்க” என்ற ரணதீரன் வேகமாக அலுவலத்தில் உள்ள அவன் அறைக்குள் சென்று கதவை அடித்துச் சாத்தினான்.
“இப்படி எல்லாம் நடக்கும் என்று தெரியாமல் இந்தச் சம்மந்தி வேற இவங்க ரெண்டு பேருக்குள்ள காதலை மலர வைக்க நம்பள தூது அனுப்பி இருக்காங்களே!! நம்ம உள்ள போயி ஏதாவது பேசுனா இந்த ரணதீரன் இன்னும் பேய் ஆட்டம் இல்ல ஆடுவான். நமக்கு ஏன் வம்பு மூலையில் நம்ம உட்கார்ந்து ரீல்ஸ் பார்க்கலாம்.” என்று எண்ணிய கீதா அங்கே ஓரமாக இருந்த இருக்கையில் அமர்ந்து தன் கைபேசி மீது கவனத்தை செலுத்தினார்.
அங்கே பணிபுரியும் அனைவரும் வைதேகியின் அழகை கண்டு ஒருவருக்கு ஒருவர் ஜாடை பேசிக் கொண்டு இருந்தார்கள்
“இந்தச் சிடு மூஞ்சிக்கு தேவதை மாதிரி ஒரு பொண்ண வேதநாயகி அம்மா பார்த்து இருக்காங்களே!! இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு டா” என்று அங்குள்ள ஒருவன் சொன்னான்.
“அவன் மொத்தமாவே மச்சத்தின் நிறம் தானே டா, அதுவும் இல்லாம பணம் தான் எல்லாத்துக்கும் காரணம். அழகு திறமைன்னு எது இருந்தாலும் நம்மள மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் இவ்வளவு அழகான பொண்ணு கிடைக்குமா!? ஆனா பாரு, அண்டங்காக்கா மாதிரி இருக்கிற ரணதீரனுக்கு பாலை போல வெள்ளையா இருக்கிற இந்தப் பொண்ணு ஜோடி, எல்லாம் பணம் பண்ணுற வேலை.” என்று இன்னொருவன் வயித்தெரிச்சலாகப் பேசினான்.
இப்படியாக ஒருவருக்கொருவர் ஜாடை மாடையாகப் பேசுவதை தன் அலுவலகத்தின் அறையில் அமர்ந்து ரணதீரன் அவனின் கணினிமூலம் பார்த்துக் கொண்டு இருந்தவனுக்கு ஒருவர் பேசும்பொழுது இதழின் அசைவை வைத்து அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை அறிந்து கொள்ளும் திறனும் இருந்தது.
“இப்போ இந்த அழகிய நான் கல்யாணம் பண்ணிக்க போறேன்னு இவனுங்களுக்கு பத்திரிக்கை வச்சு தாம்பூலம் கொடுத்த மாதிரி அவளை என்கூட சேர்த்து வச்சு பேசிகிட்டு இருக்கானுங்க. இதுக்கெல்லாம் காரணம் அம்மா தான். இவ சரியான ஏமாற்றுக்காரின்னு தெரியாமல் அம்மா இவள் மேல மருமகன்னு பாசம் வச்சு என் தலையில கட்டி அனுப்பி இருக்காங்க. இந்த மாறன் மாமாவும் இவளோட நடிப்பை நம்பிட்டாரு”என்று பிணர்த்தியவன் அவளைக் கண்ணாடி வழியே ஒருக்கணம் உற்று பார்த்தான்.
“பார்க்கப் பச்சப்புள்ள மாதிரி இருந்துகிட்டு வந்த ஒரே நாளுல என்னை ரொம்ப டார்ச்சர் பண்றாள்” என்று ரணதீரன் மீண்டும் புலம்பிக் கொண்டிருந்தவனின் நிம்மதியை மொத்தமாக அவளுக்கே தெரியாமல் சிதைத்து இருந்தாள் வைதேகி.
நீண்ட நேரம் தனியாக நின்றிருந்த வைதேகிக்கு என்ன செய்வது என்று தெரியாமல் நெல்சன் கம்பெனியைச் சுற்றி பார்க்கலாம் என்று எண்ணி அங்கிருந்து மேல் தளத்திற்கு சென்றாள்.
ரணதீரன் தலைமையில் இயங்கும்
நெல்சன் கம்பெனி என்பது ஒரு தனித்துவமான நிறுவனம்.
இங்கு ஆடைகள், நகைகள் போன்ற அலங்காரப் பொருட்களை அணிவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஆள் உயர பொம்மைகளைத் தயாரித்து பலக் கடைகளுக்கு விற்பனைக்கு வழங்குகின்றார்கள்.
இக்கம்பெனியின் தனிச்சிறப்பு என்னவெனில், அவர்கள் தயாரிக்கும் அனைத்து பொம்மைகளும் கருப்புப் நிறத்தில் மட்டுமே உருவாக்கப்படுகின்றன. ஒவ்வொரு பொம்மையும் ஒவ்வொரு கலைப்படைப்பாகவே தோன்றும்.
அவை அழகை மட்டுமின்றி,
ஒருவிதமான கருத்தையும் பறைசாற்றும்.
அழகு எல்லாவற்றிலும் உள்ளது,
ஆனால் நாம் பார்ப்பது நிறத்தை வைத்துத் தான் என்று பலர் நினைக்கும் கருத்தைத் தவிடு பொடியாக்கும் வகையில் தான் இன்றும் நெல்சன் கம்பெனியில் ரணதீரனின் தலைமையில் கருப்பு வண்ண பொம்மைகள் தயாரித்து ஏற்றுமதி ஆகிறது.
வைதேகி பொம்மை தயாரிக்கும் இடத்தைச் சுற்றிப் பார்க்கச் சென்றவளுக்கு அந்தப் பொம்மைகள் அனைத்தும் கருப்பு நிறத்தில் மட்டுமே இருப்பதற்கான காரணம் என்னெவேன்று யோசித்துக்கொண்டே
நீண்ட நிமிடங்கள் அந்த இடத்தைக் கண் இமைக்காமல் பார்த்தவள் கண்ணுக்குக் கிட்டதட்ட அங்கு வேலை செய்யும் நிறைய பெண் பணியாளர்கள் நிறத்தில் கம்மியாகவே தெரிந்தார்கள்.
வேலைகள் வேகமாக நடந்துக் கொண்டு இருந்தது. அங்கே ஒவ்வொரு அறையிலும் விதவிதமான கருப்பு நிற பொம்மைகள் நின்றுக்கொண்டு இருந்தது.
கைக்கால்கள் பொருத்தவேண்டிய பொம்மைகளை ஒரு அறையில் வைத்து இருந்தார்கள். அதைப் பார்த்த வைதேகி அருகே இருந்த இன்னோரு அறைக்குச் சென்றாள். அங்கே இறுதியாகக் கண்காணித்து ஏற்றுமதி செய்ய வேண்டிய பொம்மைகள் எல்லாம் நின்று இருந்தது.
இரண்டு அறைகளைப் பார்த்து முடித்தவளின் கண்ணுக்கு, அப்புறப்படுத்த வேண்டிய பொம்மைகள் என்று எழுதி இருந்த அறை தென்பட்டதும் வைதேகி அந்த அறைக்குள் நுழைய எண்ணும் போதே அந்த அறை பூட்டி இருப்பதை பார்த்தவள் அந்த அறையின் ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தாள்.
அங்கே இரண்டு கருப்பு நிற பொம்மைகள் மட்டுமே இருந்தது. அந்தப் பொம்மைகள் பார்ப்பதற்கு இயல்புக்கு மாறாக இருந்ததை சந்தேகமாக வைதேகி பார்த்துக் கொண்டிருந்த சமயம் “அக்கா….” என்ற குரலைக் கேட்டு வைதேகி சட்டென்று திரும்பிப் பார்த்தவள் எதிரே பள்ளிச் சிறுவன் ஒருவன் நின்றிருந்தான்.
இதே சமயம் பூட்டி இருந்த அறையிலிருந்து பொருட்கள் கீழே விழும் சத்தம் கேட்டு வைதேகி தன் பக்கம் நிற்கும் சிறுவனை மறந்து ஜன்னல் வழியே உற்றுப் பார்க்க, அங்கிருந்த இரண்டு பொம்மைகளில் ஒரு பொம்மையின் கண்கள் அசைவதைப் போல உணர்ந்தவள், மேலும் பதற்றத்துடன் அறையின்னுள் இருக்கும் அந்தப் பொம்மையை உன்னிப்பாக
கவனித்ததும், அந்த அறையில் உள்ள இரண்டு பொம்மைகளில் ஒரு பொம்மையின் விழியின் ஓரம் கண்ணீர் வடிந்தது.
error: Content is protected !!