இப்பொழுதும் அப்படி தான். ஆனால் தன்னிடம் விரால் மீனென துள்ளுவதென்ன, குட்டி பூனை போல் முறைத்து சீறுவதென்ன… ஒரு வகையில் இது கூட சுவாரஸ்யமாக தான் இருந்தது அந்த மருத்துவனுக்கு.
“வீட்டுல இருக்க நேரம் இந்த டிரஸ் ஓகே, வெளிய போறப்போ போட்ட டிரஸ் திரும்ப திரும்ப போட்டுட்டே இருப்பியா?”
“என்கிட்ட காசு இல்ல. வேற கடைக்கு போகலாம்”
“நீ ஒன்னும் குடுக்க தேவையில்லை, இது என் கடமை”
Advertisement
இலக்கியா, “கடமைனா, எந்த வகைல?” அந்த கேள்வி அவனை அப்டியே நிறுத்தியது. அவளை உற்று பார்த்தவன் அந்த விழிகளுக்கு பதில் கொடுக்க முடியாமல் உள்ளே நடக்க, அவன் கரம் பற்றினாள், “கடமைனா?”
தன் கரம் பற்றியிருக்கும் அவளது பஞ்சு விரல்கள் குறுகுறுப்பை உண்டாக்க, அதன் மேல் அவன் பார்வையும் விழுந்தது. சட்டென விரல்கள் பிரித்து தானே உள்ளே நடந்தாள்.
எங்கு செல்கிறோம் என அவளும் கேட்கவில்லை, அவனும் கூறவில்லை. புடவை பக்கம் சென்ற இரண்டு புடவை தேர்தெடுத்திருந்தாள். விலை பற்றி கவனித்தவள் அதிகம் மெனக்கெடவில்லை.
Advertisement
‘கடமை என்றாயே வாங்கி கொடு’ என எண்ணிக்கொண்டாள்.
Advertisement
“எப்பவும் சாரீ தானா, சுடி, டீ-ஷர்ட் எல்லாம்?”
“போடுவேன்” என்றாள் அவனை பார்க்காமல்.
“சரி இன்னும் கொஞ்சம் எடுத்துக்கோ, நான் வர்றேன்” பத்து நிமிடம் கழித்து வந்த அர்ஜுன் பின்னே ஒரு பெண்.
Advertisement
அவள் கையில் மலை போல் துணிகள். “உனக்கு இதுல எது புடிச்சிருக்கோ எடுத்துக்கோ” டிரையல் ரூமை கண் காட்டினான். அதிலிருந்து மூன்று உடையை தேர்வு செய்து வந்தாள். அனைத்துமே சுடிதார் வகை தான்.
“போதும்” என்றாள்.
அவளை சட்டை செய்யாமல் அவனே இன்னும் சில உடைகளை தேர்வு செய்து அடுத்த கடைக்கு அழைத்து வெளியே நின்றுகொண்டான்.
சங்கடமாக உணர்ந்தவள் உள்ளாடைகளை தானே வேகமாக எடுத்து வெளியே வந்து பார்க்கும் பொழுது ராதா, ராமகிருஷ்ணன் சற்று தூரம் அர்ஜுனோடு தள்ளி நின்று பேசுவதை கண்டவள் சிரிப்போடு அவர்களை நெருங்கினாள்.
“வணக்கம் தாத்தா… வணக்கம் பாட்டி” கைகூப்பி இருவரையும் சிரிப்போடு வரவேற்றவள், “எப்படி இருக்கீங்க” என கேட்டாள் கணவன் மேல் இருந்த கோவத்தை ஓரம் வைத்து.
“நல்லா இருக்கேன்டா, ஹாஸ்பிடல்ல உன் காபி இல்லாம இவர் ரெண்டு நாளா ஒரே புலம்பல்” ராதா கூற சின்ன புன்னகை மட்டுமே இலக்கியாவிடமிருந்து.
“ட்ரிப் எல்லாம் எப்டி இருந்துச்சு? வேளைக்கு தான் போயிருக்கான் ஆனாலும் உன்ன கொஞ்சமாவது வெளிய கூட்டிட்டு போனானா?”
விஷயத்தை கூறாமல் ஏதோ பொய் கூறியுள்ளான் என கணவனை பார்த்தாள். அவன் இவளை அசையாமல் பார்த்திருக்க, “போனோம் தாத்தா, டின்னர் லஞ்ச் வெளிய போனோம்” சரளமாக பொய்யுரைத்தாள் சிரிப்போடு.
“சரி வாங்க தாத்தா” அர்ஜுன் ராமகிருஷ்ணனோடு முன்னே நடக்க, ராதாவின் வேகத்திற்கு ஈடு கொடுக்க பொறுமையாக அவரோடு பின்னே நடந்தாள் இலக்கியா.
“இல்ல பாட்டி, வீட்டுல சுடிதார் போடுவேன். வெளிய அவர்கூட வந்ததால இது போட்ருக்கேன்”
ராதாவிற்கு முகம் எல்லாம் சிரிப்பு. அவருக்கு இலக்கியாவை பார்க்க பார்க்க அத்தனை பிடித்திருந்தது. வீட்டிற்கு எப்படிப்பட்ட பெண் வேண்டுமென நினைத்தாரோ அத்தனை குணமும் அவளிடம் இருந்தது.
பொறுமை, நிதானம், பொறுப்பு, அக்கறை… தன் காலம் போன பிறகு இவள் இந்த வீட்டினை பொறுப்பாக பார்த்துக்கொள்வாள் என்கிற நம்பிக்கை. நால்வரும் நகைக்டையுள்ளே நடக்க இது தனக்கானது அல்ல என்பது திண்ணமாக உணர தலை கவிழ்ந்து அமைதியாகிவிட்டாள்.
“பாரும்மா உனக்கு புடிச்சது தான் எடுக்கணும், அர்ஜுன்காக எல்லாம் யோசிக்காத” என்றார் ராதா அவள் முன்பு மின்னும் அந்த தங்க நகைகளை வைத்து.
திடுக்கிட்டது அவள் மனது, “இல்ல… இல்ல வேணாம் பாட்டி. ஏற்கனவே நீங்க கொடுத்தது நிறையா இருக்கு” அவளால் அவர்களிடமிருந்து வரும் நகையை ஏற்க முடியவில்லை.
திருமணத்தன்று அர்ஜுன் பார்த்து சிரித்த அந்த சிரிப்பின் தாக்கம் இன்னும் அவளுள் வடுவாக தான் உள்ளது, இதில் இன்னும் ஒரு நகையை நினைத்து கூட பார்க்க முடியவில்லை.
“அப்றம் ஏன் ம்மா இந்த வெள்ளி செயின் மட்டும் எப்பவும் போட்ருக்க?”
“என… எனக்கு தங்கம் சேராது பாட்டி” என்றவள் கன்னத்தில் குத்திய அர்ஜுனின் பார்வையில் அவனை திரும்பி பார்த்தாள்.
தன்னை அவள் நோக்கிவிட்டாள் என அறிந்த பிறகு அவன் பார்வை அவள் கழுத்திலிருந்த பொன் தாலியில் விழ தொண்டையை சரி செய்து மீண்டும் பாட்டியிடம் திரும்பிட்டாள் கெஞ்சும் விழிகளோடு.
“உன்கிட்ட ஒவ்வொரு விஷயத்துக்கும் நாங்க கெஞ்சிட்டே இருக்கணுமா? வாங்கிற அவ்வளவு தான்” அவள் விருப்பம் இப்பொழுதும் எடுபடாமல் போனது.
அர்ஜுன் தானே அவளுக்கு ஒரு அழகிய மயில்கள் ஆடிய ஆரத்தினை தேர்ந்தெடுத்திருந்தான். பல லட்சங்கள் தாண்டியது போல, அவளுக்கு மட்டுமல்லாது வீட்டில் பெண்கள் அனைவருக்கும் அதே போல் வெவ்வேறு மாடலில் வாங்கினார் மூவரும்.
“இது எங்க வழக்கம் ம்மா. அசையா சொத்து ஒரு பக்கம் இருந்தாலும் இதையும் வாங்கணும்னு உன் தாத்தா சொல்லுவார். அதான் மூணு மாசத்துக்கு ஒரு தடவை எல்லாருக்கும் நகை எடுப்போம்.
இன்னைக்கு அர்ஜுன் வர சொல்லவும் உன்னையும் வச்சு வாங்கிடலாம்னு வாங்கியாச்சு, அதுவும் அவனே வாங்கிருக்கான் உனக்கு. என்ன கொஞ்சம் பொறுமையா சொல்லிருக்கலாம். இந்த பையனுக்கு பொறுமை சில நேரம் இப்டி தான் எங்கையாவது ஓடிரும்” என்றார் ராதா பக்கமாக பேரனை பார்த்து.
அவளால் உண்மையாக சிரிக்க கூட முடியவில்லை. வரவேற்ற புன்னகையோடு சிரித்தாள். இதுவே நேரம் இரவு எட்டை கடந்திருந்தது. வெளியே உண்ணலாம் என கேட்டால் அர்ஜுன் ஒரேடியாக மாட்டேன் என்றுவிட்டான்.
“இவனும் சாப்பிட மாட்டான், நம்மளையும் விட மாட்டான்” புலம்பிக்கொண்டே தான் வந்தார் ராதா.
இலக்கியாவிற்கு அவரது சிறுபிள்ளை பிடிவாதத்தால் சிரிப்பு தான். பார்க்கிங் வந்தவர்கள் அவரவர் வாகனத்தை நோக்கி நடக்க, “நம்ம கார் அங்க நிக்கிது இலக்கியா”
அவள் கவனிக்கவில்லையா என நினைத்து ராமகிருஷ்ணன் அவர் வாகனம் நின்ற இடத்தை கை நீட்டி காட்டினார். அர்ஜுன் வாகனத்தினை நோக்கி போனவள் அப்படியே அதிர்ந்து நின்று கணவனை பார்த்தாள்.
“உன் டிரஸ் எல்லாம் அங்க ஏற்கனவே வச்சிட்டான்ம்மா அர்ஜுன்” அவள் அவனை பார்த்ததன் அர்த்தம் இதுவாக தான் இருக்குமென எண்ணி அதற்கும் பதில் கொடுத்தார் ராமகிருஷ்ணன்.
“தாத்தா நீங்க போங்க நான் அவளை வந்து விடுறேன்” இலக்கியாவின் பார்வை உணர்ந்தவன் பெரியவர்களை அனுப்பி வைத்து அவள் கையில் வேறொரு பையை நீட்டினான்.
பார்க்கவே தெரிந்தது புது கைபேசி என்று.
“என்கிட்ட இருக்கு” உர்ரென கூறினாள்.
“இந்த காலத்துல வயசானவங்க கூட பட்டன் மொபைல் வசிக்குறது இல்ல. பிடி” மிரட்டினான் கொஞ்சமும் அசையாதவளை பார்த்து.
“ஏன் குடுத்த லஞ்சம் போதாதா?” ஏதோ ஊர் மூலையில் அவளுக்காக அவன் தேர்ந்தெடுத்தது என நினைத்தது எல்லாம் அவளை துரத்தும் வழிகள்.
ஏமாற்றம் பெரிதாய் ஆட்கொண்டு கண்ணீரை சுரக்க செய்ய, காரணமானவனிடமே அதனை காட்ட விருப்பமில்லாமல் திரும்பி நடந்தவள் கையை பிடித்து நிறுத்தினான்.
“இதை வாங்கிட்டு போ, புது சிம், எல்லாரோட…” அவனை பேச விடாமல் கையை உதறி திரும்பியே பார்க்காமல் நடந்தாள்.
“ரொம்ப தான்டி ஓவரா பண்ற” அவன் கோவ வார்த்தைகள் காதில் கேட்டாலும் நிற்காமல் சென்று பெரியவர்களின் வாகனத்தில் ஏறிக்கொண்டாள்.
இவன் எதற்கு கோவம் கொள்கிறான், கோவிப்பதற்கும் என்ன உரிமை உள்ளது அவனுக்கு?
எத்தனை நாட்கள் தீட்டிய திட்டமோ, அவனே அழைத்து வந்தான், உடை வாங்கி கொடுத்தான், நகை எடுத்து கொடுத்தான், இப்பொழுது யாரோ போல் அவள் விருப்பமே கேட்காமல் எங்கோ அனுப்பியும் வைக்கிறான்.
கோவத்தை காட்ட வேண்டியவள் அதிகப்படியாக நடந்துகொள்வதாக புகார் வேறு. அவளை இங்கு அனுப்பும் முடிவு அவனுடையதாக இருந்தாலும், மீண்டும் அங்கு செல்வது அவளுடைய முடிவு மட்டுமே என அவனுக்கே புரிய வைக்க காத்திருந்தாள்.
ராமகிருஷ்ணன் இல்லம் வந்த இலக்கியாவிற்கு வரவேற்பு அமோகமாக நடந்தது. குடும்பத்தின் அரவணைப்பே இல்லாமல் இருந்தவளுக்கு அவன் குடும்பம் நெருங்கிய உறவாய் அவளை வரவேற்றது.
வழியில் செல்லும் பொழுதே அவளுக்கு பிடித்த உணவு எது என கேட்டு ராதா அதனை செய்ய கூறிவிட்டார். ஒன்பது மணிக்கு ஆகியது இல்லம் செல்ல. பரிமளா, சுந்தராஜன் என அனைவரும் அங்கு வந்துவிட்டனர். அர்ஜுனை தவிர மற்ற அனைவரும் அங்கு ஒன்றுகூடிவிட்டனர்.
தடபுடலாக உணவு வகைகள் உணவு மேஜையை ஆக்கிரமிக்க, அத்தனையும் சத்தாகவும், ருசியாகவும் இருந்தது. மருத்துவ குடும்பம் அல்லவா, எதிலும் ஒரு அழகான கட்டுப்பாடு தான். அர்ஜுனோடு இருந்து அவளுக்கு ஓரளவு அதுவும் பழகியிருந்தது.
“எப்ப ம்மா குலதெய்வ கோவிலுக்கு போறோம்?” வரதராஜன் அன்னையிடம் கேள்வி எழுப்பினார்.
“உன் மகன் இன்னும் மலையிறங்கல ப்பா. இன்னும் இந்த பொண்ணுகிட்ட சிடுசிடுன்னு தான் இருக்கான்”
“அதெல்லாம் சரியாகிடும் அத்தை, பிரச்சனை சரியாகாமயா காஞ்சிபுரம் வரைக்கும் கூட்டிட்டு போயிருக்கான். ஹாஸ்பிடல் விஷயமா வெளிய அவன் போற நேரம் ஒரு கால் கூட பண்ண மாட்டான், இதுல இலக்கியாவை கூட்டிட்டு போனது பெரிய முன்னேற்றம் தான்” என்றார் சுந்தராஜன்.
பெரியவர்கள் ஒரு பக்கம் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க சற்று தள்ளி அமர்ந்திருந்த சிறியவர்கள் பார்வை எல்லாம் கேலியாக இலக்கியா மேல் விழுந்தது.
இலக்கியாவிற்கு தலையில் அடித்துக்கொள்ளாம் போல இருந்தது. இவனா இவளை வெளியே அழைத்து செல்வது, பொய்யை கூட இவ்வளவு நேர்த்தியாக செய்வானா என்கிற ஆச்சிரியம் கலந்த கோவம்.
‘நான் காஞ்சிபுரம் போனதே எனக்கு இப்ப தான் தெரியும்’ என எண்ணியவள், “கோவில் போனோம் க்கா. அப்றம் ரெண்டு நாள் வெளிய சாப்பிட்டோம். அவங்க பிஸியா இருந்தாங்க மாக்சிமம்”
“ம்மா, பாட்டி, அத்தை கேட்டிங்களா நம்ம அர்ஜுன் கோவில் போனானாம்…” எழுந்தே சென்று வீட்டினரிடம் தகவல் கொடுத்தாள் நம்பவே முடியாமல்.
“இலக்கியா நிஜமாவா? அர்ஜுன் கோவில் வந்தானா?” தன் பங்கிற்கு விழி விரித்து வருண் கேட்க, “கோவில் வெளிய நின்னானா இல்ல உள்ள வந்தானா, தெளிவா சொல்லு”
வருண் ஒரு பக்கம், ப்ரியதர்ஷன் ஒரு பக்கம் அவளை முற்றுகையிட்டு கேள்வி கேட்க, ‘வெளியே தான்’ என வாய் வரை வந்த வார்த்தை, “உள்ள வந்தார்” என மாற்று வந்துவிட்டது.
“ஓஹோ…” கேலி சிரிப்போடு வருண், தர்ஷன் ஒரே நேரத்தில் ராகம் இழுக்க பெரியவர்களுக்கும் அதே ஆச்சிரியம் தான்.
‘இதில் என்ன?’ என்று தான் இலக்கியாவிற்கு தோன்றியது.
பிறகு, விவரம் தெரிந்த நாள் முதல் கோவிலுக்கே வராதவன், என்று மருத்துவம் எடுத்தானோ அதன் பிறகு வழக்கமாக வரும் எண்ணம் அவனுக்கும் வந்தது. கடவுள் இல்லையாம். அதுவே அவன் எண்ணம். இதில் இவன் கோவிலுக்கு வந்தான் என கூறினால் எவர் நம்புவர்?
“பாருங்களேன் நம்ம கூப்பிட்டு இதுவரை ஒரு நாள் வந்திருப்பானா, இப்ப பாருங்க பொண்டாட்டி கூப்பிடவும் ஒடனே போயிருக்கான்” பானு மகனை செல்லமாக திட்டினாலும் உள்ளுக்குள் ஒரு நிம்மதி, அது அவர் முகத்திலும் பிரதிபலிக்க, இதழில் சிரிப்பு.
“எல்லாம் இலக்கியாவை தான் பாராட்டணும். அப்டியே அவனை கொஞ்சம் குடும்பத்தோட ஓட்ட சொல்லு ம்மா” என்றார் வரதராஜன்.
“எங்க அவன் ஒட்டாம இருக்கான்?” கணவனோடு சண்டைக்கு சென்றார் பானு.
வரதராஜன், “இருக்கான்ல, நம்ம எல்லாரும் இங்க ஒண்ணா இருந்தா உன் மகன் மட்டும் அவன் வீட்டுல தனியா”