காலையில் உத்ரா செய்த குளறுபிடிகளில் சுபாஷினியின் முகம் வருத்தத்தில் தோய்ந்தது நினைவுக்கு வர, “எல்லாம் சரியானதும் நீ அவங்களோட நிறைய நாள் தங்கிட்டு வா,” என்றான் மானசீகமாக.
“பார்த்துக்கலாம் தருண். அண்ணா குணமாகுறது தான் நம்மளோட ஃப்ர்ஸ்ட் ப்ரையாரிடி,” அவன் கன்னத்தை வருடி நினைவூட்டினாள்.
Advertisement
மெல்ல தலையசைத்தவன், தொட்டிலில் உறங்கிக்கொண்டிருந்த தன் தேவதையின் உச்சந்தலை முகர்ந்து,
Advertisement
“பெரியம்மா பெரியப்பா கண்டதையும் யோசிச்சுக் குழம்பாத அளவுக்கு அவங்கள பிஸியா வச்சுக்கப்போகுறது உன் பொறுப்பு விரூகுட்டி,” அவள் காதோரம் கிசுகிசுத்தான்.
தந்தை சொல் தட்டாத பிள்ளையாக மறுநாளே களத்தில் இறங்கினாள் அவர்கள் குட்டித் தேவதை. அன்னையின் வாசம், தூளி, தொட்டில், பாட்டிகளின் மடி என எதற்கும் மசியாதவள், மார்போடு சேர்த்து அரவணைத்துத் தட்டிக்கொடுத்த பெரியப்பாவின் கைச்சூட்டில் இமைக்கும் நொடியில் கண் அசர்ந்தாள்.
குளிப்பது, சீவி சிங்காரித்துக் கொள்வது என அனைத்தையும் பெரியம்மாவிடம் சொகுசாய் செய்துகொண்டாள்.
Advertisement
பகலில் குழந்தையும் கையுமாக; இரவில் குறுக்கெழுத்தும் பேனாவுமாக என நாட்கள் நகர, இல்லறம் தாண்டி பேசிப்பழகிய அவர்களுக்கு இடையில் தயக்கங்கள் மறைந்து நட்பு மலரத் தொடங்கியிருந்தது.
“யாரோட பேசிட்டு இருக்க ரம்யா? இந்த க்ராஸ்வர்ட் முடிய இன்னும் இருபது நிமிஷம்தான் இருக்கு,” இருப்புக்கொள்ளாதவனாக ஐபேட் திரையை மேலும் கீழுமாகத் தள்ளி, கண்டுபிடிக்க வேண்டிய புதிர்களை எண்ணிக்கொண்டிருந்தான்.
ஆம்! உத்ராவின் உபயத்தால், அலைபேசியில் படம்பிடிக்கக் கற்றுக்கொண்டவன், இலவச இணைப்பாக, ஐபேடையும் திறம்பட இயக்கக் கற்றுக்கொண்டிருந்தான். அதன் விளைவாக, தினம் ஒரு க்ராஸ்வர்ட் இலவசமாக விளையாடக்கூடிய ஆப்ப் பதிவிறக்கம் செய்துக்கொள்ளக் கூடிய அளவிற்குத் தேறியிருந்தான்.
“சரி! நாளைக்குப் பார்க்கலாம்,” என அழைப்பைத் துண்டித்தவள், அவனருகில் வந்தமர,
“டைம் அவுட்! புது பசில் வந்துடுச்சு,” முகம் சுருக்கினான்.
“ஷர்மிலா நாளைக்கு ஆஸ்த்ரேலியாவுக்குக் கிளம்புறா. அவளுக்கு சென்ட் ஆஃப் தர ஏர்போர்ட் போகணும்,” அறிவித்தாள், திரையிலிருந்து விழிகள் அகலாமல்.
“அம்மா! இன்னைக்கு ஈவினிங்க் என் ஃப்ரெண்ட் ஆஸ்திரேலியா கிளம்புறா ‘ம்மா. நானும் இவரும் ஏர்போர்ட் போயிட்டு வரலாம்னு இருக்கோம்,” காலை உணவு வேளையில் ரம்யா திலகாவிடம் கூற,
‘ஷர்மிலா வா?’ அண்ணனுக்கு வாயசைத்தான் தருண். அவனும் ஆமாம் எனத் தலையாட்ட, “ஈவினிங்க் தானே! நான் உங்கள அழைச்சிட்டுப் போகுறேன் ரம்யா,” என்றான்.
“தருண்! எங்களை ஸ்டேஷன்ல விடுறதா சொன்னீங்களே,” சுபாஷினி இடைபுக, அப்போதுதான் மாமியாரும் மாமனாரும் ஊருக்குக் கிளம்புகிறார்கள் என்ற நினைவே வந்தது அவனுக்கு.
“நான்தான் உங்களோட வரேன்னே ‘ம்மா. அவர் அவங்கள அழைச்சிட்டுப் போகட்டும்,” சூழ்நிலை அறிந்து சமாளித்தாள் உத்ரா.
‘இவர்கள் பாசத்திற்கு அளவே இல்லை!’ அசைபோட்ட ரம்யா,
“ஏர்ப்போர்ட் தானேடா. நாங்க போயிட்டு வந்துக்கறோம்,” கூறி, மறுத்துப்பேசாதே எனக் கண்களை உருட்டினாள்.
வாஞ்சையாக ரம்யாவின் கன்னத்தை வருடிய சுபாஷினி, “கருக்கலைஞ்சத பத்தி வருத்தப்படாத ரம்யா. அந்த உசுருதான் உன் புருஷன மீட்டுத் தந்திருக்குன்னு நெனச்சுக்க.
நாற்பெத்தெட்டு நாளுக்கு இந்த குங்கமத்தை இட்டுட்டு, நெய் பிரசாதத்தைச் சாப்பிட்டிட்டு வா. அந்த அம்மன் அருளால அதே குழந்தை உன் வயிற்றில் ஜனிக்கும் பாரு,” என்றவர், ஷ்ரவன் பக்கம் திரும்பி,
“உங்களுக்கு முடிஞ்சபோது தஞ்சாவூர் வந்து கர்பரக்ஷாம்பிகையைத் தரிசனம் செய்யுங்க,” வாழ்த்த, வெளிர்ந்த முகமாகத் தலையசைத்தான் ஷ்ரவன்.
எந்த நேரமும் எரிமலையாக வெடிப்பான் என யூகித்த ரம்யா, சுபாஷினியிடம் மென்னகையுடன் நன்றி கூறி, “உங்களுக்கு நேரமாகுது உத்ரா நீங்க கிளம்புங்க,” எனக் கண்ணசைத்தாள்.
தருணும் உத்ராவும் அவர்களுடன் அரைமனதாகக் கிளம்ப, தப்பித்தால் போதுமென அவர்களை வழியனுப்பும் சாக்கில் வாசலுக்கு ஓடினார் திலகா.
மறதியின் வலியை முதல் முதலாக அனுபவித்தான் ஷ்ரவன். ஒளிவுமறைவின்றி பகிர வேண்டியவளே மௌனம் சாதிக்க, யாரைப்போய் கேட்பது என நொந்தவன் அமைதியாக மாடியை நோக்கி நடந்தான். உள்ளுக்குள் குமுறும் அவன் மனவேதனையை உணர்ந்த ரம்யா அவனருகே ஓடினாள்.
“மறைக்கணும்னு எண்ணமில்ல ஷ்ரவன். நீங்க இப்ப இருக்கும் நிலையில் அவசியமில்லன்னு தோணித்து. குணமானதும் சொல்லலாம்னு இருந்தேன்,” உண்மை காரணத்தைக் கண்பார்த்து உரைத்தாள்.
“நம்ம அந்தரங்கத்தைப் பற்றி மூணாவது மனுஷங்க சொல்லித் தெரிஞ்சுக்குற நிலைமைக்கு என்னைத் தள்ளிட்டியே ரம்யா,” அவன் மனம்நொந்து கண்ணீர் வடிக்கவும்தான் அவன் பக்கத்து வலியை உணர்ந்தாள்.
“தப்புதான் ஷ்ரவன்! இந்தக் கேள்விக்குமட்டுமில்ல… நீங்க நேத்து கேட்ட கேள்விக்கும் சேர்த்துப் போகுற வழியில் பதில்சொல்றேன். ப்ளீஸ் கிளம்பலாம்,” என அவன் மணிக்கட்டை அழுந்த பிடித்தாள்.
முதலில் டாக்சியில் செல்வது எனத் திட்டமிட்டிருந்தாள். தனிமையில் பேச தங்கள் வண்டியில் செல்வதுதான் உத்தமம் என வண்டிச்சாவியை எடுத்தாள்.
சமரசமாகி புறப்படும் ஜோடிகளைக் கண்ட திலகாவின் மனம் குளிரவே செய்தது.
ஆனால் வெகுநாட்களுக்குப் பிறகு வண்டி ஓட்டப்போகும் மருமகளைக் கவலையுடன் பார்த்த திலகா, “ஜாக்கிரதை ரம்யா,” என அவள் அடிவயிற்றை வருடிக்கொடுத்தார்.
“ரணம் ஆறிடுத்தும்மா,” அவர் உடல்மொழியை அறிந்தவளாய் ரம்யா பதிலுரைக்க,
எதைப்பற்றி பேசுகிறார்கள் என உணர்ந்துகொண்ட ஷ்ரவன், “கார் ஓட்டுறத்துக்கோ ஏர்போர்ட்டுக்கு வழி மறக்கும் அளவுக்கோ எனக்கு மறதி இல்ல. நானே ஓட்டுறேன்,” இடைபுகுந்தான்.
“இல்ல ஷ்ரவன்… நிறைய ரோட் கன்ஸ்ட்ரக்ஷன்…” ரம்யா தொடங்க,
மகனின் முடிவில் பெருமூச்சுவிட்ட திலகா, “அவனே ஓட்டட்டும் ரம்யா. வழியில் ஏதாவது டைவர்ஷன் இருந்தா நீ சொல்ல சொல்ல ஓட்டப்போறான்,” படபடக்க,
மாமியாரின் பயத்தைக் கருத்தில் கொண்டவள் அமைதியாகப் பயண இருக்கையில் வந்தமர்ந்தாள்.
“ஒரேவொரு வித்தியாசம்! அன்னைக்கு நான் வேண்டாவெறுப்பா கிளம்பினேன். நீங்க சந்திச்சே ஆகணும்னு என்னை இழுத்துட்டுப் போனீங்க,” ரம்யா கூறவும்,
“கட்டாயப்படுத்தினேனா ரம்யா,” நம்ப முடியாத பார்வை பார்த்தான்.
“கண்ணியத்திற்குப் பெயர் போனவர் ஷ்ரவன் நீங்க,” அவள் மென்னகைக்க,
இதுவரை அவர்களுக்குள் நடந்த வாக்குவாதங்களை அசைபோட்டவன், வழக்கமான ஊடலாக இருக்கும் என யூகித்து,
“ஷர்மிலாவை சந்திச்ச கதையை விடு ரம்யா. நான் இருந்த நிலைமையில் நமக்கு எப்படி குழந்தை….பைத்தியம் பிடிக்குற மாதிரி இருக்கு,” கசந்த குரலில் கெஞ்சினான்.
“’நான்’ இருந்த நிலைமையில் ‘உனக்கு’ எப்படி குழந்தைன்னு சந்தேகப்படாமல், ‘நமக்கு’ எப்படின்னு கேக்குறீங்களே ஷ்ரவன்… உங்களுடைய இந்த காதலுக்காகவாவது எனக்கு கருக்கலையாம இருந்திருக்கலாமே,” துக்கம் தொண்டையை அடைக்க, அடிவயிறே கிழியும் அளவிற்கு அழுந்தபிடித்து கதறினாள்.
உணர்ச்சிவசப்படும் இவளை வண்டி ஓட்ட விடாதது நல்லது எனப் பெருமூச்சுவிட்டவன், கண்ணுக்குத் தென்பட்ட மால் ஒன்றின் தரிப்பிடத்தில் வண்டியை நிறுத்தி, அரைமணி நேரம் தாமதமாகப் போனால் எதுவும் ஆகப்போவதில்லை என்றான் திடமாக.
தன் இரு கரங்களையும் அவள் முன்னே படர விரித்தவன்,
“நான் செஞ்சது அத்தனையும் முட்டாள்தனம்னு தெரிஞ்சியிருந்தும், இந்த ஒன்பது விரல் போதும் உங்களோட குடும்பம் நடத்தன்னு என்னைக் கல்யாணம் செஞ்சுகிட்ட உன் காதலை விட என் காதல் எந்தவிதத்திலும் பெருசில்ல ரம்யா,” குற்றவுணர்ச்சியில் கூனிக்குறுகிப் போனான்.
ஆறுதல் சொல்ல தலை நிமிர்த்தியவள், சுற்றி முற்றி பார்த்து, “நாமளே ரீக்ரியேட் பண்ண வேண்டாம்னு நெனச்சாலும், விதி விடுறதா இல்ல,” விரக்தியில் சிரித்தாள்.