அத்தியாயம் 8.2_தேவனுக்கேற்ற தேவியோ_கார்த்திகா கார்த்திகேயன்
போகும் போது “அக்கா இப்ப எதுக்கு பிரக்னன்சி கிட்?”, என்று கேட்டாள் திவ்யா.
“எனக்கு செக் பண்ணனும்னு தோணுது?”
Advertisement
“அப்படின்னா அன்னைக்கு?”, என்று திகைப்பாக கேட்க தலை குனிந்த படி “ஆமா”, என்றாள்.
“பைத்தியமா நீ? இருக்குற பிரச்சனைல? ஏன் கா இப்படி பண்ணின?”
Advertisement
Advertisement
“வேணும்னு பண்ணியிருப்பேன்னு நினைக்கிறியா?”
“அமர் மச்சான் மேல இருந்த மரியாதையே போச்சு அக்கா. இப்படி பண்ணிட்டு எப்படி உன்னை வேண்டாம்னு சொல்ல மனசு வந்துச்சு அவங்களுக்கு?”
Advertisement
“அவரை ஏதாவது சொன்னா நான் உன் கிட்ட பேசுறது இது தான் கடைசியா இருக்கும் திவி”, என்று சொல்ல அவளை திகைத்துப் போய்ப் பார்த்தவளுக்கு அவள் காதலை எண்ணி இன்னும் ஆச்சரியம் தான்.
“அமர் மச்சான் மேல கோபமே வரலையா?”
“எதுக்கு வரணும்? இது அவங்களுக்குமே தெரியாது தானே? இதை சரின்னு சொல்லலை திவி. ஆனா அதுக்கு அவங்க மட்டுமே பொறுப்புன்னு சொல்ல மாட்டேன்”
“புரியுது. இப்ப வீட்ல என்ன சொல்றது?”
“தெரியலை, பயமா தான் இருக்கு. ஏற்கனவே அவங்களோட அப்பா தகாத வார்த்தையை பேசிட்டாங்க. இனி அம்மா அப்பா என்ன சொல்லுவாங்களோ?”
“அக்கா என்ன நடந்தாலும் தப்பான முடிவு எதுவும் எடுக்க மாட்ட தானே?”
“அப்படி தப்பான முடிவு எடுத்தா எப்படி அவங்களை லவ் பண்ண?”, என்று கேட்க திவ்யாவுக்கு அடுத்த வார்த்தை பேச வரவில்லை.
“உண்மைலே குழந்தையா இருந்தா என்ன பண்ணுவ? கலைச்சிருவியா?”
“ஒரு உயிரை எப்படி திவி கொல்ல முடியும்? சத்தியமா அந்த பாவத்தை நான் செய்ய மாட்டேன். அதுவும் அமர் எனக்கு கொடுத்த பரிசு இது”
“அப்ப இந்த செயின் பரிசு இல்லையா?”
“இதுவா? இது கொடுத்த அப்புறம் தான் அப்படி எல்லாம் ஆச்சு”
“அப்படின்னா இதை உன் தாலின்னு சொல்லு. பத்திரமா வச்சிக்கோ. அம்மா பாத்துற கூடாது”
“ம்ம்”
“இன்னும் நீ தைரியமா இருக்கணும் அக்கா. அம்மா அப்பா என்ன பேசினாலும் நான் உன் கூட இருப்பேன் சரியா?”
“தேங்க்ஸ் திவி. என் மேல உனக்கு வெறுப்பு வரலை தானே? என்னை.. என்னை தப்பா நினைக்கிறியா?”
“நீ என் அக்கா. உன்னை எப்படி வெறுப்பேன்? ஆனா உன்னைப் பாத்தா பாவமா இருக்கு. என்ன பண்ண போறியோன்னு?”
“நீ இருக்கல்ல, சமாளிக்கலாம்”, என்று சொல்ல திவ்யாவும் அவளுக்கு நம்பிக்கையை கொடுத்தாள்.
வீட்டுக்கு போனதும் “வரதுக்கு இவ்வளவு நேரமா?”, என்று கேட்ட மஞ்சு வேறு எதுவும் சொல்ல வில்லை.
இருவரும் அவசரமாக அறைக்குள் சென்றார்கள். அவர்களுக்கு ஆயிரம் சந்தேகம் வர சேர்ந்து பேசி யோசித்து ரதி செக் செய்ய செல்ல எந்த சந்தேகமும் இன்றி கற்பம் என்று தான் கோடு காட்டியது.
இருவருக்கும் அதிர்ச்சி தான். அடுத்து என்ன செய்ய என்று கூட தெரிய வில்லை. “இப்ப என்ன அக்கா செய்யுறது?”, என்று கேட்டாள் திவ்யா. எப்போதும் தெளிவாக இருக்கும் அவளே குழம்பித் தான் போனாள்.
பிரச்சனைக்கு காரணமானவன் இனி வர மாட்டேன் என்று சொல்லி விட்டுச் சென்று விட்டான். அவனைத் தேடிச் சென்றாலும் அவனுடைய தந்தையால் ஒன்று அசிங்கப் பட வேண்டும். இல்லையென்றால் உயிரை விட வேண்டும். ரதியோ அப்படியே தளர்ந்து போய் அமர்ந்து விட்டாள்.
அடுத்த இரண்டு நாட்கள் எப்போதும் போல கடக்க இருவரும் அறைக்குள்ளே முடங்கிக் கிடந்தார்கள். எப்படி வீட்டில் சொல்ல என்று ரதி யோசித்தாளே தவிர குழந்தையை அழிக்க வேண்டும் என்று யோசிக்கவே இல்லை.
கிட்டதட்ட இருவருக்கும் பைத்தியம் பிடிக்காத குறை தான். அவர்கள் நல்ல நேரமா கெட்ட நேரமா தெரியாது. அன்று ஒரு திருமணத்திற்கு சென்று விட்டார்கள் தாமோதரன் மற்றும் மஞ்சு இருவரும்.
இது தான் சமயம் என்று எண்ணி திவ்யாவை வெளியே கிளம்பச் சொன்னாள் ரதி.
“எங்க போக போறோம்? மச்சானை பாக்கவா?”
“இல்லை அவங்க அப்பாவை பாக்க? வா அம்மா அப்பா வரதுக்குள்ள வந்துறலாம்?”
“அவங்களை எங்க போய் பாக்குறது? விளையாடுறியா?”
“வேற வழி இல்லை திவி. நாம அவர் கிட்ட பேசியே ஆகணும்?”
“அக்கா, அரவிந்த் மாமா கிட்ட ஹெல்ப் கேக்கவா? வேற வழி இல்லை அக்கா”
“மாமா என்னை தப்பா நினைப்பான் திவி. நான் லவ் பண்ணது தெரிஞ்சதுல இருந்து அர்வி என் கிட்ட பேசவே இல்லை. இதுவும் தெரிஞ்சா என்னை கேவலமா பாப்பான்”
“அவனை விட்டா வேற வழி இருக்குன்னு நினைக்கிறியா?”
“சரி அவனுக்கே சொல்லு”, என்று சொல்ல அடுத்த ஒரு மணி நேரத்தில் அரவிந்த் இவர்கள் வீட்டில் இருந்தான்.
அவன் வந்ததும் அவசர அவசரமாக அவனிடம் மொட்டை கட்டையாக தருமரைப் பார்க்க வேண்டும் என்று சொல்ல அவனோ குழம்பி போனான். பின் அவனுக்கு பொறுமையாக விளக்கிச் சொல்ல நெஞ்சில் கை வைத்து அமர்ந்து விட்டான்.
இதை அவன் சுத்தமாக எதிர் பார்க்க வில்லை. ஏற்கனவே ரதி தனக்கு இல்லை என்ற விரக்தியில் இருந்தவனுக்கு இந்த செய்தி இடியாக தான் இருந்தது.
அவன் அமைதியாக இருக்க “இந்த விஷயத்துல உன்னை விட வேற யாராலயும் உதவி செய்ய முடியாது மாமா. பிளீஸ் ஹெல்ப் பண்ணு”, என்றாள் திவ்யா. ரதி அவனை நிமிர்ந்து பார்க்கவே இல்லை.
“அத்தை மாமாவுக்கு தெரிஞ்சா என்ன ஆகும் தெரியுமா? அதை விட அந்த அமர் குடும்பம்? அவன் அப்பன் என்ன பேச்சு பேசிருக்கான்? அவனையே பாக்கணும்னு சொல்ற?”, என்று கேட்டான்.
“அக்காவுக்கு வேற வழி இல்லை மாமா. பிளீஸ் புரிஞ்சிக்கோ”
“சந்தர்ப்பம் கிடைச்சதும் நல்லா யூஸ் பண்ணிக்கிட்டு ஓடிட்டான். கேட்டா தெய்வீக காதலாம்?”, என்று அரவிந்த் அமரை திட்ட ரதி எதுவுமே பேச வில்லை. பேசக் கூடிய சூழ்நிலையில் அவள் இல்லையே.
அவனுக்கும் தருமரை பார்ப்பதை தவிர வேற வழி தோன்ற வில்லை. ஆனால் அவனுக்கு நன்கு தெரியும் அந்த ஆள் ஒன்று குழந்தையை கலைக்கச் சொல்லுவான். இல்லையென்றால் இது அவர்கள் வீட்டு வாரிசே இல்லை என்று சொல்லுவான். ஆனாலும் முயற்சி செய்து பார்ப்போமே? என்று எண்ணி ஒரு ஆட்டோ பிடித்தவன் அவர்களை அழைத்துச் சென்றான்.
அமரின் வீட்டுக்கு எல்லாம் அவர்கள் செல்ல வில்லை. அவர்கள் சென்றது தருமரின் கட்சி அலுவலகத்துக்கு தான். அந்த நேரம் தருமர் அங்கே இருந்ததால் உடனே அனுமதி கிடைத்தது. ஆனால் அவரோ அவர்கள் வந்திருப்பதை எண்ணி கோபத்தில் கொதித்துப் போனார்.
அவர்கள் மூவரும் உள்ளே வந்ததும் அப்படி ஒரு சத்தம் போட்டார். அவ்வளவு அசிங்கமாக பணத்துக்காக வந்திருப்பதாக எல்லாம் பேச ஒரு கட்டத்தில் அரவிந்த் தான் கோபத்தில் பொங்கி விட்டான்.
“உன் பையன் லட்சணம் தெரியாம எங்க வீட்டு பொண்ணு மேல பழி போடுறியா? யாருக்கு வேணும் பணம்? எங்களுக்கு நியாயம் தான் வேணும். உன் பிள்ளையோட வாரிசு இவ வயித்துல வளருது. அதுக்கு என்ன சொல்ல போற?”, என்று எரிச்சலுடன் கேட்டான்.
“இது அவன் பிள்ளை தான்னு எப்படி நம்ப முடியும்? ஒரு வேளை அவன் பிள்ளையா இருந்தாலும் அதை கலைக்க எவ்வளவு வேணும்னு சொல்லு. பணத்தை அள்ளி கொட்டுறேன். வாங்கிட்டு ஒடுங்க”, என்றார்.
அதற்கு அரவிந்த் ஏதோ சொல்ல வர அவன் கையைப் பற்றி தடுத்த ரதி “பின்னாடி உண்மையை மறைச்சிட்டோம்ன்னு பேச்சு வந்துறக் கூடாதுன்னு தான் சொல்றதுக்கு வந்தேன். உங்க பணத்துக்காக இல்லை. நாங்க வறோம்”, என்று சொல்லி விட்டு திவ்யா கை பற்றி அழைத்துக் கொண்டு சென்று விட்டாள்.
அரவிந்தும் அவர்கள் பின்னே சென்றான். பின் என்ன நினைத்தானோ மீண்டும் தருமரைப் பார்க்க செல்ல அவரோ அவரது அடியாளிடம் “பேசாம இவளை முடிச்சிருவோமா? நாளைக்கு பிள்ளையை தூக்கிட்டு வந்தா என்ன பண்ண?”, என்று கேட்டார்.
“கொஞ்சம் பொறுங்க ஐயா. அவங்க வீட்லயே குழந்தையை அழிக்கச் சொல்லிருவாங்க. அப்படி ஒரு வேளை அந்த பொண்ணு வயித்துல குழந்தை வளந்தா கூட ரெண்டையும் சேத்து முடிச்சி விட்டுறலாம். ஆனா இப்ப வேண்டாம். எலக்ஷன்க்கு இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கு. அது வரை பொறுமையா இருங்க”, என்று சொல்ல அவரும் சரி என்றார்.
அதைக் கேட்டு அதிர்ந்து அப்படியே திரும்பிச் சென்றான் அரவிந்த். திவ்யாவுக்கு பாதுகாப்பு இல்லை என்று புரிந்தது. அந்த பாதுகாப்பை தான் மட்டுமே கொடுக்க முடியும் என்று எண்ணியவன் அவளை திருமணம் செய்வது பற்றி பேச வேண்டும் என்று முடிவு எடுத்தான்.
இருவரும் சோர்ந்து போய் இருக்க ஒரு ஜூஸ் கடைக்கு அவர்களை அழைத்துச் சென்றான். “இப்ப என்ன செய்ய போற ரதி?”, என்று நேரடியாக அவளிடமே கேட்டான். திவ்யா ஏதோ சொல்ல வர “வாயை மூடு. அவ கிட்ட தானே பேசுறேன்?”, என்று எரிந்து விழுந்தான்.
இனி எல்லாவற்றுக்கும் தான் தான் பேச வேண்டும் என்று எண்ணிய ரதி “எனக்கு இந்த குழந்தை வேணும் மாமா. என்னால இதை எதுவும் செய்ய முடியாது”, என்றாள்.
“அத்தை மாமாவுக்கு இந்த விஷயம் தெரிஞ்சா இதுக்கு ஒத்துக்குவாங்கன்னு நினைக்கிறியா?”
“அந்த குழப்பத்துல தானே நாங்க இருக்கோம். ஐடியா கொடுப்பேன்னு பாத்தா நீயும் கேள்வியா கேக்குற?”, என்றாள் திவ்யா. அவளை முறைத்துப் பார்த்தவன் “இப்போதைக்கு ரெண்டு வழி தான் இருக்கு”, என்றான்.
இருவரும் அவனைப் பார்க்க “ஒண்ணு குழந்தையை யாருக்கும் தெரியாம கலைக்கிறது. அப்படி இல்லைன்னா ரதி என்னைக் கல்யாணம் பண்ணனும். யாருக்கும் இந்த உண்மை தெரியாம பாத்துக்கலாம்”, என்று சொல்ல இருவரும் அதிர்ந்து போனார்கள்.
“என்ன வாழ்க்கை பிச்சை போடுறியா மாமா?”, என்று கேட்டாள் திவ்யா.
“இல்லை நம்ம ரதி அசிங்க படக் கூடாது, நம்ம குடும்ப மானம் போக கூடாதுன்னு சொல்றேன்”
“அப்ப உன் வாழ்க்கை?”
“ஏன்? என்னோட வாழ்க்கைக்கு என்ன? நாம எல்லாரும் ஒரே குடும்பம் தான். கால போக்குல ரதிக்கு என் கூட வாழணும்னு தோணுச்சுனா வாழட்டும். இல்லைன்னா இத்தனை வருஷம் உங்களுக்கு எப்படி பாதுகாப்பா இருந்தேனோ அதே போல அவளுக்கு துணையா அவ குழந்தைக்கு அப்பாவா இருந்துக்குறேன்”, என்று சாதாரணமாக சொல்ல அவனை மெய் சிலிர்த்து போய் பார்த்தார்கள்.
அவன் சொல்வது பெரிய விஷயமாக இருக்கலாம். ஆனால் ரதி அதை ஏற்க வேண்டுமே? திவ்யா மற்றும் அரவிந்த் இருவரும் அவள் முகத்தைப் பார்க்க “என்னால அமரைத் தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ண முடியாது. நான் அம்மா அப்பா கிட்ட பேசிக்கிறேன்”, என்று சொல்லி எழுந்து கொண்டாள்.
அடுத்து யாரும் எதுவும் பேச வில்லை. ஆனால் ஒரு மருத்துவமனைக்கு மட்டும் இருவரையும் அழைத்துச் சென்றான். ரதிக்குமே குழந்தை ஆரோக்கியம் முக்கியம் என்பதால் சென்றாள்.
அரவிந்தை அவளுடைய கணவன் என்று மருத்துவமனையில் நினைத்ததால் எந்த பேச்சு வார்த்தையும் இல்லாமல் அவளுக்கு சோதனை நடந்தது. குழந்தையின் அன்னையாக அவளுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் தேவையான மருந்துகளையும் வாங்கிக் கொண்டாள் ரதி.
மூவரும் வீட்டுக்கு வர தாமோதரன் மற்றும் மஞ்சு இருவரும் ஹாலில் கோபத்துடன் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் முன்னே இருந்த டேபிளில் அழகாக அமர்ந்திருந்தது ரதி பரிசோதித்த சோதனை அட்டை.
அதைக் கண்டு மூவருக்கும் திகைப்பு தான். ரதி மெதுவாக திவ்யா பின்னால் ஒழிய “குடியை கெடுக்க வந்த கோடாரி காம்பு. சந்தி சிரிக்க வச்சிட்டியே டி”, என்று ஆங்காரமாக கத்திய படி எழுந்து வந்த மஞ்சு திவ்யாவை இழுத்து தள்ளி விட்டு ரதியை அடிக்க வந்தாள். வந்த வேகத்தில் அடித்திருந்தால் ரதி நிச்சயம் மயங்கி இருப்பாள். ஆனால் அவளை சரியாக இழுத்து தன் கைகளுக்குள் பொத்திக் கொண்டான் அரவிந்த். மஞ்சு அடித்த அடி அவன் முதுகில் தான் விழுந்தது.
“தள்ளு டா அரவிந்த் இவளை அடிச்சு கொன்னா தான் என் மனசு ஆறும்? படிக்கிற பிள்ளை சின்ன பிள்ளைன்னு பாத்தா கண்டவன் கூட படுத்து பிள்ளை உண்டாகி இருக்கா. இனி இவ ஒரு நிமிஷம் கூட உயிரோட இருக்க கூடாது”, என்று சொன்னவள் மீண்டும் மீண்டும் அடிக்க வர அனைவரையும் சமாதானப் படுத்தி ரதியையும் திவ்யாவையும் உள்ளே அனுப்பி வைத்தவன் “அத்தை அவ வீக்கா இருக்கா. அடிச்சு வச்சு அவளுக்கு ஏதாவது வந்திரப் போகுது”, என்றான்.
“எப்படி டா இவ்வளவு கேவலமான பொண்ணு என் வயித்துல வந்து பிறந்தா? அசிங்கமா இருக்கு டா. திவியாவது வாயடிப்பா. ஆனா இவ யாரையும் நிமிந்து கூட பாக்க மாட்டா. ஊமை மாதிரி இருந்தாளே. ஊமை ஊரைக் கெடுக்கும்ன்னு காட்டிட்டாளே டா. ஐயோ இப்ப என்ன செய்ய? வெளிய தெரிஞ்சா தலை காட்ட முடியாதே?”, என்று மஞ்சு புலம்ப தாமோதரனோ தலையில் கை வைத்து இடிந்து அமர்ந்திருந்தார்.
வெளியே தெரிந்தால் என்ன நினைப்பார்கள் என்ன பேசுவார்கள் என்று அசிங்கமாக இருந்தது. அவர்கள் நிலையை உணர்ந்தவன் அவர்களுக்கு மாறி மாறி சமாதானம் செய்து கொண்டிருந்தான். இன்று ஹாஸ்டலுக்கு கூட அவன் செல்ல வில்லை. இங்கிருந்து சென்றால் இங்கே என்ன வேண்டும் என்றாலும் நடக்கும் என்பதால் அங்கேயே தங்கிக் கொண்டான்.
“ஒரு ரெண்டு நாள் அமைதியா இருங்க அத்தை. நாம அவ கிட்ட பேசலாம், ஏதாவது தீர்வு கிடைக்கும்”, என்று சொல்லி சமாதானப் படுத்தினான். யாருமே அன்று இரவு உணவு உண்ண வில்லை. அரவிந்த் வாங்கி வந்த உணவு அப்படியே இருக்க திவ்யாவிடம் கொடுத்து ரதியை உண்ண வைக்கச் சொன்னான். அவள் மறுக்க குழந்தை பெயரைச் சொல்லி ஊட்டி விட்டாள்.
இரவு முழுவதும் கணவன் மனைவி என்ன பேசினார்களோ தெரியாது. காலையில் அரவிந்த் போனுக்கு அவனது அன்னை போன் செய்தாள்.
தூக்க கலக்கத்தில் “சொல்லு மா”, என்றான்.
“எங்க டா இருக்க?”
“மாமா வீட்ல?”
“அங்க என்ன பண்ணுற?”
“அது.. அது வந்து.. இங்க ஒரு இன்டர்வியூ இருக்கு. அதான் நேத்தே வந்துட்டேன்”
“நல்லதா போச்சு. இன்னைக்கு சாயங்காலம் அங்க வந்துருவேன். நீ அங்கயே இரு,. முடிஞ்சா பஸ் ஸ்டாண்ட்க்கு கூப்பிட வா”, என்று சொல்ல அவனுக்கு திகைப்பு தான்.
“நீ எதுக்கு திடீர்னு இங்க வர?”, என்று அதிர்ச்சியாக கேட்டான். ஏனென்றால் அன்னை வந்தால் ரதி பற்றி தெரிந்து விடுமே என்று பயமாக இருந்தது.
“நீ என்ன டா வர வேண்டாம்னு சொல்லிருவ போல? உன் மாமா தான் போன் பண்ணி வரச் சொன்னான்”, என்று சொல்ல அரவிந்தின் தூக்கம் அனைத்தும் தூரப் போனது.
ஒரு வேளை ரதியை தனக்கு திருமணம் செய்து வைப்பார்களா என்று ஒரு மனம் ஆனந்தப் பட உண்மை தெரிந்தால் அவன் அன்னை என்னவெல்லாம் பேசுவாளோ என்று பயமாகவும் இருந்தது.
தொடரும்..
