விரக்தியின் உச்சத்திலிருந்த தன் வாழ்க்கையில் இத்தனை பேரதிசயங்கள் நிகழ்ந்திருக்கிறதா என அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் தவித்த ஷ்ரவன், ஒளிவுமறைவு என்ற வார்த்தைக்கே இடமில்லாது ஒன்றிப் பழகிய பெண்களின் புரிதலை நேரில் கண்டதும் பேச்சற்றுப் போனான்.
ரம்யாவின் உற்ற தோழியாக மாறியிருக்கும் ஷர்மிலாவின் போதனைகளை மீண்டும் மீண்டும் அசைபோட்டவனுக்கு, மனையாள் உண்மைகளை மறைத்துவிட்டாள் என்ற வருத்தம் மறைந்து அவளை இக்கட்டான சூழலில் நிர்க்கதியாக விட்டுவிட்டேனே எனத் தன்னைத்தானே பழித்துக்கொள்ளத் தான் தோன்றியது.
‘ஆறுதல் கூடச் சொல்லமுடியாத அளவிற்கு ஞாபகமறதி குறுக்கே நிற்கிறதே! இதிலிருந்து என்று மீள்வேன்,” குமுறியபடி மண்டையை அழுந்த பிடித்த வண்ணம் அமர்ந்திருந்தவனை,
அவர்களுக்கு ஒப்பிட்டு விளக்க வசதியாக, மாதாந்திர மூளை ஸ்கேன்களை மேஜையில் பரப்பிய உளச்சிகிச்சையாளர், “உங்க பிரெயின் ஹெல்த்ல நல்ல இம்ப்ரூவ்மென்ட் இருக்கு,” எனச் சில பகுதிகளைக் குறிப்பிட்டுக் காட்டினார்.
“எல்லாம் இவ சொல்லிச் சொல்லித்தான் புரிஞ்சுக்கிறேனே தவிர, நானா சொந்தமா எதையும் சிந்திக்கமாட்டேன்றேனே,” மனம்நொந்தான் ஷ்ரவன்.
Advertisement
“இட்ஸ் அப்சல்யூட்லி ஃபைன் ஷ்ரவன்,” அவர் தொடங்க,
Advertisement
“என்ன ஃபைன் டாக்டர். நான்தான் உங்க மனைவி; நாம இப்படித்தான் சிரிச்சோம்; சண்டைபோட்டோம்; சேர்ந்தோம்னு ஒவ்வொண்ணுத்தையும் இவ கதையா சொல்லி, அதையே நான் நடிக்க இது ஒண்ணும் சினிமா இல்ல;” பொறுமையிழந்து கத்தினான்.
“ஷ்ரவன்…..” ரம்யா அவன் கரம்கோத்து ஆசுவாசப்படுத்த,
“உங்க ஆதங்கம் புரியுது ஷ்ரவன். நீங்க உட்கொள்ளும் மருந்துகள் எல்லாம் வெறும் மூளைக்குத் தேவையான ஊட்டச்சத்தைத் தர மட்டும்தான்.
Advertisement
உங்களுக்கு வந்திருக்கும் இந்த பின்னோக்கு மறதியினால், பிரேயின்ஸ் ஸர்ச் இஞ்சின்னு சொல்லக்கூடிய ஹிப்போகேம்பஸ் சேதமாகியிருக்கு. இதுக்கு ஒரே சிகிச்சை, மூளையைத் தூண்டிவிடக்கூடிய கடந்தகால நிகழ்வுகள், பழக்கங்களை உங்க கவனத்துக்கு கொண்டு வரணும்.
அப்படி அந்தப் பரிச்சயமான விஷயங்களைப்பற்றி நீங்க கேட்கும்போதும், பார்க்கும்போதும், சிந்திக்கும்போதும், அந்த உணர்வுகள் உங்க மூளைக்கு சிக்னல் தந்து தூங்கிட்டு இருக்கும் பாகங்களைத் தூண்டி, தட்டி எழுப்பும். சுருக்கமா சொல்லணும்னா, பேட்டரி ட்ரெயின் ஆன காரை ஜம்ப் ஸ்டார்ட் பண்றமாதிரி,” பொறுமையாக விளக்கினார்.
“அனுபவிக்கும் எனக்குத்தானே அதன் வலி என்னவென்று தெரியும்!’ நொந்தவன் அரைமனத்தாகத் தலையசைக்க,
“நான் பாத்துக்குறேன் டாக்டர்,” மென்னகையுடன் நன்றி கூறினாள் ரம்யா.
“நடந்தது நடந்துபோச்சு. கில்டினஸ்ஸோட யோசிக்காம, ரிலாக்ஸ்டா யோசிக்கப் பழகுங்க,” அவன் வண்டியை சாலையில் திருப்பியதும் மெல்ல பேச்சுக்கொடுத்தாள் ரம்யா.
“பாயின்ட்ஸ் நோட்டட் மை லார்ட்,” அவனும் ஒருவழியாக மென்னகைத்தான்.
வீட்டிற்கு வந்தவர்களை இன்பதிர்ச்சியில் ஆழ்த்தினர், சொல்லாமல் கொள்ளாமல் இந்தியாவிற்குத் திரும்பியிருந்த ரம்யாவின் பெற்றோர்கள்.
“அம்மா! அப்பா! ஏன் முன்னாடியே சொல்லல,” என ஓடிச்சென்று அவர்களைச் சேர்த்து அணைத்துக்கொண்டாள் ரம்யா.
“என் மனசெல்லாம் இங்கதான்டி இருந்துது. வரோம்னு சொன்னால், நான் பாத்துக்குறேன்னு தருண் தடை போடுவான். நீயும் அவனுக்கு ஜால்ரா அடிப்ப. அதான் யாருக்கும் சொல்லாம கிளம்பிட்டோம்,” புலம்பினார் சாருலதா.
ரம்யாவின் பிரசவம் சேர வரவிருந்தனர் அவர்கள். பார்க்கும் கடைகளில் எல்லாம், புத்தாடை, விளையாட்டுப் பொருட்கள் எனப் பொழுதுக்கும் பேரப்பிள்ளையின் நினைவாகவே இருந்தவர்களுக்கு மகளையும் மாப்பிள்ளையையும் இந்த நிலையில் கண்டதும்,
சோக கீதம் பாடி உத்ராவைத் தர்மசங்கடத்தில் தள்ளுகிறேனே எனச் சுதாரித்துக்கொண்ட ரம்யா, விறுவிறுவென கண்களைத் துடைத்துக்கொண்டு விரூபாவைத் தூக்கிவந்து, அம்மாவின் கைக்கு மாற்றிவிட்டு,
“முதல்ல இந்த பேத்தியைத் தூக்கிப் பழகி பிராக்டிஸ் பண்ணுங்க,” எனச் சிரித்தாள்.
மகள் பற்றிய துயரத்தில், உத்ராவின் குழந்தைக்கு என எதுவுமே வாங்கி வரவில்லையே எனத் தன் சுயநலத்தை எண்ணி வருந்தினார் சாருலதா.
அவர் மனப்போராட்டத்தை உணர்ந்தவர்போல, வாலட்டிலிருந்து நாலு ஐநூறு ரூபாய் தாள்களை எடுத்துச் சுருட்டிய ரவிச்சந்திரன், “தீர்க்காயுஷ்மான் பவ,” என வாழ்த்திக்கொண்டே குழந்தையின் குட்டி உள்ளங்கையில் மடித்தார்.
சங்கடம் நீங்கியவராய் புன்னகைத்தார் சாருலதா.
குழந்தைக்குப் பசியாற்ற உத்ரா மாடிக்குச் செல்ல, பெண்கள் சமையலறைக்கும், ஆண்கள் வசிப்பறையிலும் என இரண்டு கூட்டணிகளாகப் பிரிந்து அளவளாவிக்கொண்டிருந்தனர்.
தொழில் நிர்வாகத்தில் ஊறிப்போயிருக்கும் தந்தைமார்களின் பேச்சு இரண்டே நிமிடத்தில் அலுவல் சார்ந்த விஷயங்களுக்குத் தாவியது.
வெளியூர் பயணத்தில் சேகரித்திருக்கும் புதுத் திட்டங்களைப் பற்றி முழு நீளமாகப் பேசிய ரவிச்சந்திரன்,
“உங்களுக்கு எப்படிப் போயிட்டு இருக்கு தாமு,” என வினவினார்.
“நிறைய ப்ராஜெக்ட்ஸ் வரத்தான் செய்யுது. ஆனால் அதுக்கான மேன்பவர்தான் இல்லை,” பெருமூச்சுவிட்டார் தாமோதரன்.
“குழந்தைதான் ஃப்ர்ஸ்ட்,” இருவரையும் கண்டித்தார் திலகா.
“பேலன்ஸ் பண்ணுவேன் ‘ம்மா. நான் கொஞ்சம் ஹெல்ப் பண்ணா, அப்பாவும் தருணும் எட்டு மணிக்காவது வீட்டுக்கு வருவாங்கல,” கண்கள் சுருக்கினாள்.
நாள்தோறும் பத்து மணிக்கு மேல் வரும் ஆண்களின் பணிப்பளுவைக் கருத்தில் கொண்ட திலகா, ஆமோதிப்பாய் தலையசைத்தார்.
அவற்றை அமைதியாய் அசைபோட்டுக் கொண்டிருந்த ரம்யா, “அப்பா, நானும் உங்களுக்கு உதவியா ஆபீஸ்ஸுக்கு வந்தால், நீங்க ரெண்டு பேரும் எப்பவும்போல ஆறு மணிக்கு வீட்டுக்கு வர முடியுமா,” என்றாள் மெல்லமாக.
‘இதை ஏன் நான் யோசிக்கவில்லை,’ ஷ்ரவன் சிந்திக்க,
“குட் டிசிஷன் ரம்யா,” மெச்சினார் ரவிச்சந்திரன்.
“நிஜமாவா!” வாயைப்பிளந்தான் தருண்.
“நிஜமாவா அக்கா!” கட்டிக்கொண்டாள் உத்ரா.
“இது உன் ஆபீஸ் ரம்யா,” பெருமிதம் பொங்க உரைத்த தாமோதரன், மனையாளை நல்லநாள் பார்த்துத் தருமாறு கேட்டார்.
“நாளைக்கே நல்ல முகூர்த்த நாள்தான்,” கூறி மருமகளின் கன்னத்தில் திருஷ்டி வழித்தார் திலகா.
“இப்பதான் எழுந்து வரன்னு நெனச்சேன்,” வாயைப்பிளந்தான் ஷ்ரவன்.
விடியற்காலையில் எழுந்து திலகாவிற்கு உதவிவிட்டு, மீண்டுமொரு குட்டித் தூக்கம் போட்டுவிட்டு வருவதாகக் கண்சிமிட்டினாள்.
“இன்னைக்கு என்ன ஸ்பெஷல்?” கேட்டான் ஷ்ரவன்.
“இது என்ன இப்படிக் கேக்குறீங்க அண்ணா. அக்கா முதல்முதலா ஆபீஸ்க்கு வர சம்மதிச்சிருக்காங்க; அப்பா எவ்வளவு சந்தோஷமா இருக்காரு; இதை நாம செலிப்ரேட் பண்ண வேண்டாமா,” உற்சாகம் பொங்க பேசினாள் உத்ரா.
“இந்த நாளுக்காகத்தானே நாமளும் காத்துட்டு இருந்தோம்டா,” பூரித்த தாமோதரன், “எல்லாம் அந்த முருகன் செயல்,” எனக் கூற,
வாரநாள் என்றும் பாராமல் கோவிலுக்குச் சென்றுவர நினைத்த தந்தையின் நோக்கத்தை உணர்ந்தான்.
தனக்கும் தருணுக்கும் வரும் வாழ்க்கைத்துணைகளும் நிர்வாகப் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்ற தந்தையின் ஆசையை முன்னமே அறிந்திருந்தான் ஷ்ரவன். அவரின் இந்த எதிர்பார்ப்பு, தன் காதலுக்குத் தடையாக இருக்குமோ என்று கூட அஞ்சியிருந்தான்.
ஆனால் கணக்கியல் படித்திருந்தும் ரம்யா ஏன் இத்தனை வருடங்களாக அலுவலகப் பொறுப்புகளை ஏற்கவில்லை எனக் குழம்பினான்.
சற்றுமுன் திலகா கடுகடுத்தது நினைவுக்கு வர, “ஏன்ம்மா! ரம்யா ஆபிஸுக்குப் போகுறதுல உனக்கு விருப்பமில்லையா,” என மெல்ல பேச்சுக்கொடுத்தான்.
“என்னைப் பார்த்தால் மருமகளைக் கொடுமைப்படுத்தும் மாமியார் மாதிரியா தெரியுது உனக்கு,” திலகா எகிற,
“நாலு மணிக்கெல்லாம் எழுந்து சமைச்சிட்டு, உன் அப்பாவோட கோவிலுக்கும் போயிட்டு வந்திருக்கேன்! வாய்சுளுவா ஹோட்டல் சாப்பாடான்னு கேட்டால் கோபம் வராதா என்ன,” திலகா கண்களை உருட்ட,
“ரம்யா ஏன் நம்ம ஆபீஸ் வேலை ஏத்துக்க மறுத்தான்னு உனக்கு நியாபகமில்லையாடா,” கசந்த குரலில் கேட்டார் தாமோதரன்.
“இல்லப்பா,” ஷ்ரவனின் முகம் சுருங்கியது.
“சமீபத்து நிகழ்வுகள் தானே மறந்ததா சொன்ன… இது உங்களுக்குக் கல்யாணமான ரெண்டே மாசத்துல நடந்த விஷயமாச்சேடா,” கவலையில் தோய்ந்தார் மனிதர்.
சட்டென்று அவர் அப்படிக்கேட்க, வசமாய் மாட்டிக்கொண்டேன் எனத் திணறினான் ஷ்ரவன்.
“ரிலாக்ஸ் ‘ண்ணா,” அவன் பின்முதுகில் வருடிக்கொடுத்த உத்ரா, மாமனார் பக்கம் திரும்பி,
“அப்பா! சமீபத்து விஷயங்கள் மட்டும்தான் மறந்திருக்காரு. ஆனால் திடீர்திடீர்ன்னு இப்படி ப்ளாகவுட் ஆகி அதுவே சரியாகிடும்னு டாக்டர் சொல்லிருக்காரு,” சமாளித்தாள்.
“அப்படியே உன்னோட அம்மாவின் வைராக்கியம் ரம்யாக்கு,” அந்தநாள் நினைவில் தாமோதரன் பேச,
“எங்க பிடிவாதத்துனாலதான் இந்தக் குடும்பத்தின் அஸ்திவாரம் பலமா இருக்கு; நீங்க அடுக்குற செங்கலிலோ பூசுற சிமென்ட்டிலோ இல்ல,” திலகா ஏட்டிக்குப்போட்டி பதில்கொடுக்க, பக்கென்று சிரித்துவிட்டார் தாமோதரன்.
“இப்போ ரம்யா அக்கா எங்க கட்சி மாமியாரே,” உத்ராவும் சேர்ந்துகொள்ள, ஆட்டம் களைகட்டியது.
“ஏற்கனவே குழம்பிப் போயிருக்கேன்; எதையும் தெளிவா பேசமாட்டீங்களா,” சிடுசிடுத்தான்.
கைக்கடிகாரத்தில் நேரம் பார்த்த தாமோதரன், “என் மருமகளுக்கு பஞ்சுவாலிட்டி ரொம்ப முக்கியம். எல்லாத்தையும் அம்மாகிட்ட கேட்டுக்கோ,” என வாஞ்சையாக மகனின் கன்னத்தில் தட்டிக்கொடுத்துப் புறப்பட்டார்.
உத்ரா உணவுப் பாத்திரங்களுடன் சமையலறைக்குள் நகர, ரிமோட்டும் கையுமாக தொலைக்காட்சி முன் ஐக்கியமானார் திலகா.
வாலென அன்னையைப் பின்தொடர்ந்தவன் அவர் கையிலிருந்து ரிமோட்டைப் பிடுங்கிக்கொண்டு பதில் சொல்லுமாறு நச்சரித்தான்.
“டேய்! டேய்! சீரியல் ஆரம்பிச்சிடும்… முக்கியமான சஸ்பென்ஸ்… நடுவுல பார்க்கலேனா கதை புரியாதுடா…. ரெண்டே சீரியல்தான்,” கண்களைச் சுருக்கிக் கெஞ்சினார்.
“என் கதையே ஒரு முடிவில்லாம நீளுது. இதுல உனக்குத் தனியா ஒரு சீரியல் பார்க்கணுமா,” ஷ்ரவன் கொந்தளிக்க,