Skip to content
Post Views: 117
அவள் உள்ளே நுழைந்தது தெரிந்தும் அவன் தலை நிமிர்த்தாமல் இருக்கவும் “சார்” என்றாள் மெல்லியக்குரலில்.
அந்த குரல்…அவனிற்கு ஏற்கனவே பரிச்சயமான ஒரு குரல்…
Advertisement
சட்டென தலையுயர்த்தி அவளை அங்கு பார்த்தவனின் முகத்தில் ஆனந்த அதிர்ச்சி!
புதையலைத் தேடி சுற்றிக்கொண்டிருந்தவனின் முன்பு அந்த பொக்கிஷமே கண் முன்னால் வந்து நின்றால் உண்டாகுமே அப்படியொரு ஆர்ப்பரிப்பு அவனுள்!
Advertisement
Advertisement
ஆனால் அவற்றினை முகத்தில் காட்டிக் கொண்டால் அது சேரன் செங்குட்டுவன் அல்லவே?
தனது உணர்வுகளை மற்றவரிடமிருந்து மறைத்து வாழவே பழக்கப்பட்டவன் அவன்.
Advertisement
அதனால் தனது மகிழ்ச்சியை உள்ளுக்குள் அடக்கிக்கொண்டு “என்ன விஷயம்?” என்று அழுத்தமாக வினவினான்.
தேவியோ தன் வாழ்நாளில் யாரை சந்திக்கவே கூடாது என்று எண்ணினாளோ அவனிடமே அவளை கோர்த்துவிட்ட விதியை அக்கணம் நொந்துக்கொண்டாள்.
அவளின் கையில் இருந்த கோப்புகள் உடலின் நடுக்கத்தில் அசைந்தாலும்,அதனை இறுக்கி பிடித்துக் கட்டுப்படுத்தியவள் “சூர்ய குமார் சார் உங்ககிட்ட இந்த டாக்குமெண்ட்ஸ் கொடுத்திட்டு சைன் வாங்கிட்டு வர சொன்னாரு” என எச்சிலை கூட்டி விழுங்கியப்படி உரைத்தாள்.
அவனோ ஒரே பார்வையில் அவளின் பயத்தை அனுமானித்திருந்தான்.
‘நான் என்ன சிங்கமா புலியா?இப்படி பயந்து நடுங்கிறாள்’ என கோபமுற்றவன்,எதையும் முகத்தில் காட்டவில்லை.
“கொடுங்க” என அவளிடமிருந்து கோப்பை வாங்கி அவன் அவற்றினை புரட்ட ஆரம்பித்தான்.
அவன் கோப்பை பார்வையிடும் நேரம் வரையிலும்,அவளை அவன் இருக்கையில் அமர சொல்லவே இல்லை.
வேண்டுமென்றே அவளின் மீதுள்ள கோபத்தில் நிற்க வைத்திருந்தான்.
அவளும் அங்கு அமர விருப்பமில்லாமல் ஒரு பெருமூச்சுடன் நின்றிருந்தாள்.
எதேச்சையாக அவளின் பார்வை அவனது மேசையின் மீதிருந்த பெயர்ப்பலகையின் மேல் பதிந்தது.
‘சேரன் செங்குட்டுவன் பி.ஏ…எல்.எல்.எம்(ஃபேமிலி லா)அட்வகேட் அன்ட் லீகல் கன்செல்ட்டென்ட்’ என தங்க நிற எழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருந்த பெயரின் பின்னாலிருந்த படிப்பை பார்த்தவளின் மனதில் ஏக்கம் சூழ்ந்தது.
சிறு வயதிலிருந்து நன்றாக படிக்கக்கூடிய பெண் தான் தேவி.
ஆனால் பதினெட்டு வயதிலே திருமணம் செய்து வைத்து விட்டதால் அவளின் ஆசையும் கனவும் பாதியிலே தடைப்பட்டுப்போயிருந்தது.
அதனால் ஒரு வித ஏக்கத்துடன் அந்த பெயர்ப்பலகையை அவள் பார்த்திருக்க,அதற்குள் கோப்பை பார்வையிட்டு முடித்த சேரனின் விழிகள் அவளை ஆராய்ச்சியுடன் நோக்கியது.
நாற்காலியில் சாவகாசமாக சாய்ந்து அமர்ந்து அவளையே பார்த்திருந்த சேரனின் மனதில் ‘இவ எப்படி சீனியர் ஆபிஸ்லே…அதுவும் ஓ.ஏவா(உதவி அலுவலக பணியாளர்)? பெரிசா எதுவும் படிக்கலையா?இல்லை…குடும்ப கஷ்டத்தினாலே இங்க வேலையிலே இருக்காளா?இவ புருஷன் எதுக்கு இப்படியொரு வேலைக்கு இவளை அனுப்பியிருக்கான்?என்ன காரணமா இருக்கும்?’ என பல்வேறு கேள்விகள் முளைத்தன.
கூடவே,அவள் அணிந்திருந்த வெளிர் நீல நிற சாதாரண பருத்திப்புடவை மற்றும் கழுத்தில் அணிந்திருந்த மூன்று சவரன் தங்க சங்கிலி,அவளின் காதில் இருந்த ஒரு சிறிய கவரிங் தோடு இதையெல்லாம் பார்க்கும் போது அவனிற்கு ஒரு மாதிரியாக இருந்தது.
அவளது ஏழ்மை நிலைமை அவனது முகத்தில் அறைந்தது.
‘பாவம் என் பேபி கேர்ள் அங்க ரொம்ப கஷ்டப்படறாளோ?அவங்க குடும்ப நிலை என்னனு தெரியலையே’ என நினைக்கும் போதே அவனையும் அறியாமல் அவன் இதயம் துடித்தது.
தேவியோ அதற்குள் தன்னை சுதாரித்து இருந்தவள்,அவனது பார்வையை கவனித்துவிட்டு மீண்டும் தடுமாறினாள்.
அவள் அவசரமாக “சார்” என பதற்றத்துடன் அழைத்ததும் ‘என்ன?’ என்று அவளின் முகத்தை ஏறிட்டான்.
அவனின் பரிதாபப் பார்வையை அவள் தவறாக புரிந்துக்கொண்டாள்.
அதனால் அவளின் முகம் சட்டென இறுக “சார் சைன் பண்ணிட்டால் நான் கிளம்பிடுவேன்” என அழுத்தமான குரலில் அவன் முகத்தை பார்த்து உரைக்க,
அவனோ “என்ன அவசரம்?பேபி கேர்ள் எப்படி இருக்கா?” என சாதாரணமாக குழந்தையைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்துவிட்டான்.
அவளோ அவனிடம் எவ்வித பதிலும் கூறாமல் மௌனமாக இருக்க,அவனிற்கு இப்போது கோபம் வந்துவிட்டது.
ஏற்கனவே அவளின் மீது கடும் கோபத்தில் இருப்பவன்…இப்போது சொல்லவும் வேண்டுமா?
அவளிடம் வெளிப்படையாகவே காய ஆரம்பித்துவிட்டான்.
“இப்போ நான் உங்களை என்ன பண்ணிட்டேன்னு முகத்தை அப்படி வைச்சிட்டு இருக்கீங்க மிசஸ்…” என நேர்ப்பார்வையாக அவளை நோக்கி அவன் வினவ,
அவளோ “சார் கையெழுத்து போட்டு கொடுத்திட்டீங்கன்னா நான் கிளம்பிட்டே இருப்பேன்” என்றாள் அதே இறுக்கமான பாவனையில்…
அவனிற்கு வந்த ஆத்திரத்திற்கு அளவே இல்லை.
அவனிற்கு ஸ்ருதியைப் பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டும்.அதற்காகவே அவளிடம் நிதானமாக பேசிக்கொண்டிருக்கிறான்.
ஆனால் அவளோ அவனது பொறுமையை அதிகமாக சோதித்தாள்.
‘சைன் பண்ண முடியாது போடி’ என்றப்படி அவளின் முகத்தில் கோப்பை வீசியெறியடிக்கும் அளவு அவனிற்கு ஆத்திரம் வந்தது.
ஆயினும்,அவள் ஸ்ருதியின் அன்னை என்ற காரணத்திற்காக பொறுத்துக்கொண்டான்.
அதனால் அவளை உச்சக்கட்ட ஆத்திரத்துடன் பார்த்துவிட்டு கோப்பில் அவன் கையெழுத்திட்டுவிட்டு அவளின் புறம் வெடுக்கென்று தள்ள,அவளோ கோப்பை மடித்து கையில் எடுத்துக்கொண்டாள்.
அவள் அப்படியே சென்றிருந்தால் கூட அவனின் கோபம் கட்டுப்பட்டு இருக்கும்.
ஆனால் அவளோ “இது அன்னைக்கு என் பொண்ணுக்கிட்ட நீங்க கொடுத்த ஐந்நூறு ரூபாய்” என அவனது மேசையின் மீது பணத்தை வைக்க,அவனிற்கு வந்த ஆத்திரத்திற்கு அளவே இல்லை எனலாம்.
அவனை காண வருவது அறிந்து பணத்தை கையுடன் எடுத்து வந்திருந்தாள்.
அவள் கொடுத்த பணத்தை பார்த்தவனது முகமெல்லாம் கடும்பாறையென இறுகிவிட்டன.
தனது கைமுஷ்டியை இறுக்கி சினத்தைக் கட்டுப்படுத்திய சேரன் ஒரு முறை விழி மூடி திறந்தான்.
மேசையின் மீது வைக்கப்பட்டிருந்த அந்த ஐந்நூறு ரூபாய் தாளை வெறித்துப் பார்த்தான் சேரன்.
அது வெறும் பணம் அல்ல…
தான் விரும்பி, மனநிறைவோடு அவனது குட்டித் தேவதைக்கு கொடுத்த பிறந்தநாள் பரிசு.
அதை இவ்வாறு அவள் திருப்பிக் கொடுத்த விதம்,அவனது மனதை அதிகம் பாதித்தது.
மெதுவாக தலையுயர்த்தி தேவியை நோக்கியவனின் முகத்தில் அப்படியொரு சீற்றம்!
அவளோ அவனது முகத்தில் தெரிந்த உணர்வுகளை கண்டு அஞ்சி விழிகளை தாழ்த்தியிருந்தாள்.
அவனோ அடக்கப்பட்ட சினத்துடன் “எதுக்கு திருப்பி தர்றே?” என ஒற்றை வார்த்தையில் பணத்தை சுட்டிக்காட்டி கேட்டான்.
அவளோ தலையுயர்த்தாமல் “இது எங்களுக்கு தேவையில்லை சார்” என மென்குரலில் அதே சமயம் அழுத்தமாகவும் உரைத்தாள்.
அவளை உறுத்து விழித்த சேரன் “நான் இந்த பணத்தை உங்களுக்கு கொடுக்கலை…உங்க பொண்ணுக்காக கொடுத்தேன்” என்று அவளிற்கு குறையாத அழுத்தத்துடன் அவனும் பதில் கூறினான்.
அவளோ ஒரு கணம் மௌனமாகி விட்டாள்.
பிறகு மெதுவாக தலையுயர்த்தி
“தெரியாதவங்க யார்க்கிட்ட இருந்தும் காசு வாங்கக்கூடாதுனு நான் என் பொண்ணுக்கு பழக்கியிருக்கேன் சார்…அப்படியிருக்கும் போது இதை எப்படி என்னாலே ஆதரிக்க முடியும்?” என்று அமைதியாக வினவினாள்.
அதைக்கேட்டதும் அவன் முகம் மாறிட ‘நான் என்ன யாரோவா?’ என்று கேட்டுவிட அவனது நாவு துடித்தது.
ஆனாலும் சிகையை அழுந்தக்கோதி “இங்க பாருங்க மிசஸ்…நான் இந்த பணத்தை தான தர்மம் பண்ணறதுக்காக ஒண்ணும் உங்களுக்கு கொடுக்கலை…உங்க குழந்தைக்கு பிறந்தநாள் பரிசா கொடுத்தேன்…அன்பளிப்பா கொடுத்த எதையும் திருப்பி வாங்கற பழக்கம் எனக்கில்லை” என அவளிற்கு இணையான தன்மானத்துடன் அவனும் நிதானமாக மொழிந்தான்.
காலையில் வீட்டில் நிகழ்ந்த சம்பவத்தால் பெரிதும் பாதிப்புற்று இருந்தலோ அல்லது அவனது அன்பளிப்பை தவறான நோக்குடன் கருதியதினாலோ “சார் எங்களுக்கு உங்க பணம் தேவையில்லை…நீங்களே வைச்சுக்கோங்க” என தீர்மானமாக கூறிவிட்டு விறுவிறுவென அவள் கதவை வரை சென்று விட்டாள்.
அதுவரை இழுத்துப்பிடித்திருந்த அவனது பொறுமையெல்லாம் ஒரேயடியாய் காற்றில் பறந்திட,அவனது ஆத்திரமும் கரையைக் கடந்திருந்தது.
“ஹே ஒரு நிமிஷம் நில்லு” என கர்ஜனையுடன் அவ்வறையே அதிர அவன் குரல் ஒலித்திட,அதில் திடுக்கிட்டு பெண்ணவள் நின்றுவிட்டாள்.
அதற்குள் தன் இருக்கையை பின்னால் தள்ளிவிட்டு ஆவேசமாக எழுந்த நின்றிருந்த சேரனோ “உன் மனசுலே நீ என்ன நினைச்சிட்டு இருக்கே?என் இடத்துக்கு வந்து என்னையே அவமானப்படுத்திட்டு நீ பாட்டுக்கு போயிட்டே இருக்கே?” என உறுமலாக கேட்டுக்கொண்டே அவளை அவன் நெருங்க,
அவளோ அவனின் பேச்சை கேட்டு அதிர்ந்து திரும்பிப் பார்த்தாள்.
“நான் பொறுமையா போக நினைச்சாலும் நீ என் பொறுமைய ரொம்பவே சோதிக்கிறே?முதல்ல இந்த பணத்தை கையிலே எடுத்திட்டு கிளம்பு” என மேசையின் மீதிருந்த பணத்தை அவன் சுட்டிக்காட்டி கட்டளையிட,
அவளோ அழுத்தமாக அவ்விடத்திலே நின்றிருக்கவும் “ப்ச்…” என சலிப்பாக கழுத்தை நீவியவன் “ஹலோ மிசஸ்…நான் ஒண்ணும் உங்களுக்காக இதை கொடுக்கலை…எனக்கு பிடிச்ச என்னோட பேபி கேர்ளுக்காக இந்த பரிசை கொடுத்தேன்…இதை நீங்க திருப்பிக் கொடுக்க முடியாது…அதை திருப்பி கொடுக்கிற உரிமை உங்களுக்கு கிடையவும் கிடையாது…முதல்ல பணத்தை கையிலே எடுங்க…” என விரல் சொடுக்கி அவளை மிரட்ட,அவளிற்கு ஒரு மாதிரியாகிவிட்டது.
“அவ குழந்தை அவளுக்கு ஒண்ணும் தெரியாது…” என அப்போதும் அவள் பயத்துடன் தயங்க,
“அதையே தான் நானும் கேட்கறேன்?குழந்தைக்கு கொடுத்த பரிசை நீ ஏன் கொஞ்சமும் நாகரீகம் இல்லாமல் திருப்பி கொடுக்கறே?” என அவளிற்கு தக்கப்பதிலடி கொடுத்தான்.
இப்போது இருவருக்கும் இடையே ஒரு கனமான அமைதி நிலவின.
சில நொடிகள் கழித்து அவனே தொண்டையைச் செருமி பேசினான்.
அவளை ஆழ்ந்து நோக்கி “கடைசி முறையா சொல்லறேன்…இந்த காசை கையிலே எடு…” என்றான் அதிகார தொனியில்.
அவனை விட அவள் வயதில் சிறிய பெண் என்பதால் பன்மை விளிப்பு விடைப்பெற்றிருந்தது.
அதை அவளும் கவனிக்கவே செய்தாள்.
ஆயினும்,பணத்தை கையில் எடுக்காமல் அவள் தன் கரத்தை இறுக மூடிக்கொள்வதை கண்ட சேரன் ‘ஆனாலும் இவளுக்கு இவ்வளவு நெஞ்சழுத்தமாகாது’ என உள்ளுக்குள் திட்டிக்கொண்டே,வேறுவழியின்றி “சரி போ” என்றான் எரிச்சலாக..
‘இத்துணை நேரமாக தன்னிடம் வாதாடிக்கொண்டிருந்தவன் எளிதாக அவளை அனுப்பி வைக்கிறானா?’ என சந்தேகமாக அவனை ஏறிட்டு நோக்க,
அவனோ அவளை எவ்வித உணர்ச்சியுமின்றி பார்த்திருந்தானே ஒழிய,அவளிடம் எதுவும் பேசவில்லை.
அவளோ “தேங்க் யூ சார்” என அவசரமாக கூறிவிட்டு அறையின் கதவை திறந்து வெளியேறினாள்.
அதேநேரம் திறந்த கதவு இடுக்கின் வழியே கேட்ட “ஆன்ட்டி அம்மா எப்போ வதுவாங்க?” என்ற ஸ்ருதியின் மழலை குரலில் அவனது உலகமே அசையாமல் ஒரு கணம் நின்றுப்போனது.
வெளியே வந்த அன்னையை பார்த்ததும் ஓடி வந்த ஸ்ருதி “அம்மா” என அவளின் காலை கட்டிக்கொள்ள,அதனை இடுக்கின் வழியே பார்த்தவனின் உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்தது.
ஸ்ருதி!
அவனது பேபி கேர்ள்…
அவளுமே திறந்திருந்த கதவு இடுக்கின் வழியே அவனை பார்த்திருக்கக்கூடும் போலும்..
“அம்மா அது அது…” என விழிகள் விரிய குதூகலமாக அறையை சுட்டிக்காட்டி கேட்க,
மகள் அவனை கண்டுக்கொண்டது அறிந்து “அம்மு வா போகலாம்” என அவசரமாக அவளை அங்கிருந்து அழைத்துச் செல்ல பரபரத்தாள்.
அடுத்த நொடியே படாரென்று கதவு திறந்தது.
கதவு திறந்த சத்தம் கேட்டு அனைவரும் திகைத்துப்போய் திரும்பினார்கள்.
கதவை திறந்து அதன் வாசலில் நின்றிருந்தான் சேரன்.
அவனது விழிகள் அசையாமல் அவனது குட்டித்தேவதையை பார்த்திருந்தது.
காணக்கிடைக்காத அரியதொரு காட்சி…
அவனது வாழ்வின் பொக்கிஷம் கைகளில் கிடைத்தது போல் அவன் உள்ளத்திலோ ஒரு பெரும் ஆர்ப்பரிப்பு…
அவளது விழிகளும் கூட நேராக சேரன் மீதே விழுந்தன.
ஒரு நொடி குழந்தையும் அதிர்ச்சியில் உறைந்துப்போனாள்.
ஆனால் அடுத்த கணமே அவளது மைதீட்டிய விழிகளில் மின்னல் பாய்ந்திட “ஹீரோ அங்கிள்” என்று மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்து அவனிடம் ஓடி சென்றாள்.
அதுவரை நெருப்பாய் கனன்ற சேரனின் இதயமோ அந்த ஒற்றை அழைப்பில் பனிக்கட்டியாய் குளிர்ந்துப்போனது.
தேவியோ அதிர்ச்சியில் ஸ்தம்பித்துப்போனாள்.
ஏனெனில்,ஸ்ருதி அவள் பற்றியிருந்த கரத்தை கூட உதறிவிட்டு நேராக சேரனை நோக்கி ஓடத் தொடங்கியிருந்தாள்.
காவ்யாவோ ‘என்ன நடக்குது இங்க’ என்ற திகைப்போடு அனைத்தையும் பார்த்திருந்தாள்.
சேரனும் ஒரு அடி முன் வைத்து “பேபி கேர்ள்” என முணுமுணுத்தப்படி அவளை தனது கைகளில் ஏந்தியிருந்தான்.
அவளுமே “ஹீரோ அங்கிள்” என பரவசமிக்க குரலில் அழைத்து அவனின் கழுத்தை கட்டிக்கொண்டாள்.
அவளின் சிகையை வருடிய சேரனின் விரல்கள் இலேசாக நடுங்கியது.
இருவரும் ஒரே ஒரு முறை மட்டுமே வாழ்வில் சந்தித்திருக்கிறார்கள் என்று சத்தியம் செய்தால் கூட யாரும் நம்பமாட்டார்கள் போலும்.
இருவருக்குமிடையே அப்படியொரு பிணைப்பு!
சேரனோ மிகவும் உணர்ச்சிவசப்பட்டிருந்தான்.
ஏன் இந்த தடுமாற்றம் என்று அவன் மனசாட்சி எழுப்பிய கேள்விக்கு அவனிடம் நிச்சயம் பதில் இல்லை.
அவன் காத்திருந்த தருணம் கைக்கு கிடைத்த மகிழ்ச்சியில் திளைத்திருந்தான்.
“பேபி கேர்ள் நீ எப்படி இருக்கே?” என அவன் ஆதுரத்துடன் கேட்டான்.
அவனது குரலில் இதுவரை இல்லாத வகையில் மென்மையும் நெகிழ்ச்சியும் மிகைந்து இருந்தது.
தேவிக்கு சற்று ஆச்சரியமாக தான் இருந்தது.
தன்னிடம் சற்று முன்பு விவாதம் செய்த ஆண்மகனா இவன் என அவள் திகைத்து விழிக்க,
காவ்யாவோ ‘நம்ப சிடுமூஞ்சி சாரா இது?’ என வாயைப் பிளந்தாள்.
“அங்கிள் நான் நல்லா இதுக்கேன்…நீங்க நல்லா இதுக்கீங்களா?”
“நானும் நல்லாயிருக்கேன் பேபி கேர்ள்”
“என்னை ஏன் பாக்க வதலை அங்கிள்?” என அவள் சலுகையை வினவ,
அதற்கு மெல்லியதாக புன்னகைத்த சேரன் “அங்கிளுக்கு உங்களை பத்தி எதுவும் தெரியாது இல்லை பேபி…அதான் பார்க்க வரலை…நீங்க என்னை பார்க்க வந்திருக்கலாமில்லை” என
“நான் உங்களை பாக்க நினைச்சு அம்மாத்த கேட்ட…அம்மா கூத்தித்து வதலை அங்கிள்” என மழலை மொழியில் அன்னையின் மீது அவள் குற்றம் சுமத்த,சடாரென்று சேரன் திரும்பி அவளை பார்வையால் எரித்தான்.
தேவியோ சங்கடமாக தலைக்குனிந்தாள்.
அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு குழந்தையிடம் திரும்பியவன் “சரி விடு பேபி கேர்ள்…இனி அங்கிள் உங்கள் அடிக்கடி பார்க்க வர்றேன்” என்று உறுதிமொழி கூறியதும்,
அவளோ தலை சரித்து “பிராமிஸ்” என அவனின் முன்பு தனது பிஞ்சு கையை நீட்ட,
அவனும் சிறுப் புன்னகையுடன் “பிராமிஸ்” என அவளின் கரம் மேல் தன் முரட்டுக்கரம் பதித்தான்.
உடனே அவள் தனது அரிசிப் பற்கள் பளீரிட சிரிக்க,அதன் அழகில் சொக்கிப்போன சேரன் “பேபி கேர்ள் உனக்கு சாப்பிட என்ன வேணும்?ஐஸ்க்ரீம்…ஜூஸ்…சாக்லேட்…பிஸ்கெட்…” என ஒவ்வொன்றாக கேட்டவாறே அவளை தூக்கிக்கொண்டு உள்ளே செல்ல,
அதைக்கண்டு பதறிய தேவியோ “சார்” என சத்தம் போட்டு அழைத்தாள்.
அவனோ மெதுவாக அவளை நோக்கி திரும்ப “அம்மு” என்று கூறி தன் குழந்தையை வாங்க
முன் வர,
அவளை தீர்க்கமாக நோக்கிய சேரன் “கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க…இல்லையா ஆபிஸ் கிளம்பிப்போங்க…நானே குழந்தைய கொண்டு வந்து விடறேன்” என அழுத்தமாக கூறிவிட்டு தன் அறைக்குள் சென்றுவிட்டான்.
தேவிக்கோ இப்போது ‘என்ன செய்வது?’ என்றே தெரியவில்லை.
error: Content is protected !!