Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

88. வித்யா வெங்கடேஷ் - நிழலாடும் நின் நினைவில்

நிழலாடும் நின் நினைவில் – 12

ஓம் ஸ்ரீ சாய்ராம்

வழிநெடுக மௌனம் சாதித்த தருண், அலுவலகம் வந்தும் கூட நேராக அவன் அறைக்குள் நடந்தான்.

பதினோரு மணியளவில் ரம்யாவைத் தேடி வந்தவன், “சப்ளையர்ஸ்க்கு செட்டில் பண்ண வேண்டிய பில்ஸ்,” என ஐந்து காசோலைகளையும், அதை விரிவாக விளக்கும் கணக்கு வழக்குகளையும் பணி மேஜையில் வைத்தான்.

இரண்டையும் ஒப்பிட்டுப்பார்த்து அவள் கையொப்பமிட்டதும், அவற்றைத் திரட்டிக்கொண்டு அமைதியாக நகர,



Advertisement

“காலையில் நடந்தத பத்தி நீ ஒரு வார்த்தைக் கூடக் கேட்கலையே தருண். எனக்கொண்ணுன்னா, நீதானேடா முதல் ஆளா வந்து நிப்ப. இப்போ நீயும் என்னைவிட்டு விலகிப்போகுறியே…” தேம்பி அழுதாள்.

‘பேசவேண்டிய நேரம் வந்துவிட்டது!’ எனப் பெருமூச்சுவிட்டவன், அறையின் கதவைத் தாளிட்டு, அவளருகே வந்தான்.

அவள் வாடிய முகத்தைக் கண்பார்க்க பிடித்துக்கொண்டவன், “உனக்காக நிக்கணும்தான் எனக்கும் ஆசை ரம்யா. ஆனால் ‘உன் தம்பி மகள்’ன்னு பிரிச்சுப் பேசி சண்டைபோட்ட நீ, என்கிட்டயும் ‘நீ யாரு என் விஷயத்துல தலையிட’ன்னு கேட்டுடுவியோன்னு பயம வந்துடுச்சு,” கூற,

Advertisement

நிலை தடுமாறி எத்தனை பெரிய வார்த்தையை உதிர்த்திருக்கிறாள் எனத் தன் தவறை எண்ணி, அவன் உள்ளங்கையில் முகம் புதைத்து மன்னிப்பை யாசித்தாள்.

Advertisement

“எனக்கு உன் சாரி வேண்டாம் ரம்யா. உன் மனசை அறுக்குற விஷயத்தை நேரடியா சொல்லு,” எனக் கட்டளையிட்டான்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லடா; அவர் தோசை சாப்பிட வரலன்ற எரிச்சலில் கத்திட்டேன்,” சமாளித்தவள், தன்னையே கண்கொட்டாமல் ஏறிடும் நண்பனின் கருவிழிகளை எதிர்கொள்ள முடியாமல் திணறினாள்.

“என் பொண்ணு என்ன பண்ணா? அவளை ஏன் அவாய்ட் பண்ணற?” நேரடியாகவே விஷயத்திற்கு வந்தான்.

Advertisement

“என்னடா பேசுற? எனக்கொண்ணும் புரியல,” அவள் உதடுகள் தந்தியடிக்க,

“நடிக்காத ரம்யா. நாங்க எல்லாரும் குழந்தையோட விளையாடும்போது, சமைக்கணும், தூக்கம் வருதுன்னு நீ நழுவினத எல்லாம் ஷ்ரவன் வேணும்னா உண்மைன்னு நம்பியிருக்கலாம். உத்ராவும் மத்தவங்களும் வேணும்னா கவனிக்காம இருந்திருக்கலாம். ஆனால் உன்னப்பத்தி இன்ச் இன்சா தெரிஞ்சு வச்சிருக்க என்னை ஏமாத்த முடியாது,” அழுத்தமாக உரைத்தான்.

“இன்ச் இன்சா தெரியும்னு சொல்றல. நான் அவாய்ட் பண்ணறேன்னு தெரிஞ்சதும் நேரடியா கேட்டிருக்க வேண்டியதுதானே. இத்தனை நாள் ஏன் காத்திட்டு இருந்த,” மிரட்டியவளுக்கு, எத்தனை முட்டாள்தனமாக கற்பனை செய்திருக்கிறாள் என நினைத்துப் பார்க்கக் கூட அருவருப்பாய் இருந்தது.

“ஷ்ரவனால நீ கஷ்டப்படுறது போதாதா; நானும் உன்னைக் கேள்வி கேட்டு உன் மனசை நோகடிக்கணும்னான்னுதான் கண்டும் காணாமல் இருந்தேன்,” அவன் விளக்க,

“நீ கவனிச்ச உடனே என்னைத் தட்டிக் கேட்டிருந்தா நான் இவ்வளவு கேவலமா எல்லாம் யோசிச்சிருக்கவே மாட்டேன்டா,”

பிள்ளைவரம் இழந்த தன் அவலநிலையை எண்ணி தனக்குள் தாழ்வு மனப்பான்மை, பயம், பிரிவு, பதபதப்பு எனச் சகலத்தையும் வளர்த்துக்கொண்டதை ஒரே மூச்சில் ஒப்பித்து வீரிட்டு அழுதவளுக்கு அவன் முகத்தைப் பார்க்கக் கூடத் துணிவில்லை.

மனதளவில் புழுங்கிப் புழுங்கி எத்தனை மனவுளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறாள் என உணர்ந்தவன்,

“தப்புதான் ரம்யா. நானும் அலட்சியமா இருந்திருக்கக்கூடாது,” தேற்றியவன்,

“உங்களுக்கு இப்படி ஆனதில் எனக்கு உத்ராக்கும் நிறைய வருத்தம்தான். விரூபாவோட நீங்க நேரம் செலவிட்டா, அது உங்களுக்கு டிஸ்ட்ரக்ஷன்னா இருக்கும்னு நெனச்சோம். ஆனால் அது உங்களுக்குள்ள இந்தளவுக்கு விரிசலை ஏற்படுத்தும்ன்னு நான் கனவிலும் நினைக்கல,” வருந்தினான்.

“நீங்க செஞ்சது ரொம்பச் சரி தருண். எதுக்கெடுத்தாலும் தயங்கி தயங்கி பேசிட்டிருந்த ஷ்ரவன் பழையபடி சிரிச்சுப்பேச ஆரம்பிச்சதே குழந்தை வீட்டுக்கு வந்த பிறகுதான். நான்தான் தேவையில்லாத பயத்தை எல்லாம் வளர்த்துட்டு நானும் சந்தோஷமா இல்லாம, உங்க சந்தோஷத்தையும் கெடுத்துட்டு இருந்திருக்கேன்,” அவன் தயக்கத்தைக் களைந்து கண்களைத் துடைத்துக்கொண்டு புன்னகைத்தாள்.

“இப்படியே சிரிச்சிட்டு இரு ரம்யா. எல்லாம் கைகூடி வரும்,” என அவள் கன்னத்தில் தட்டிக்கொடுத்து புறப்பட எழுந்தான் தருண்.

“தருண்! உன்கிட்ட இன்னொரு முக்கியமான விஷயம் பேசணும்டா. இப்போ பேசலாமா,” என்றாள் பாவை.

“நீ என்கிட்ட ஓபனா பேசமாட்டியான்னு தானே நானும் ஏங்கிட்டு இருந்தேன்,” ஆழ்மனத்திலிருந்து வந்தது அவன் பதில்.

நாற்காலியை அவள் அருகில் இழுத்துப் போட்டுக்கொண்டு அமர்ந்தான்.

நண்பனின் கைகளைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டவள், “நிதானமா, நல்லா யோசிச்சுத்தான் இந்த முடிவுக்கு வந்திருக்கேன். இதைக்கேட்டு நீ என்னைத் திட்டவோ என்மேல் கோபப்படவோ இல்லை என்னைக் கன்வின்ஸ் பண்ணவோ முயற்சி செய்யக்கூடாது,” என்றாள் பீடிகையுடன்.

சற்று நிமிர்ந்து அமர்ந்தவன், “மொத்தத்துல தலையாட்டச் சொல்ற; இதுக்கு இவ்வளவு பில்டப் ஆ?” எனச் சலித்துக்கொண்டான்.

“கிட்டத்தட்ட அப்படித்தான்,” உதட்டைச் சுழித்தவள், “கொஞ்ச நாளைக்கு அம்மா அப்பாவோட இருந்துட்டு வரலாம்னு நினைக்கிறேன்டா,” என்றாள் உள்ளிழுத்துக்கொண்ட குரலில்.

“கொஞ்ச நாள்ன்னா,” புரிந்தும் புரியாததுபோல இழுத்தான்.

“அது… அது அவருக்குக் குணமாகும் வரை…” அவன் கண்பார்க்க முடியவில்லை அவளால்.

“ஸோ! உன் புகுந்த வீட்டுல உனக்கு உன் புருஷன் மட்டும்தான் கண்ணுக்குத் தெரியுறான்ல. உன்னையே சுத்தி சுத்தி வர நாங்கலாம் யாரோ தானே,” வெடுக்கென்று கைகளைத் திருப்பிக்கொண்டான்.

“ப்ளீஸ்டா! உன்கிட்ட மனச திறந்து பேசணும்னு நினைக்கிறேன். எடுத்தோம் கவுத்தோம்னு கோபப்பட்டா எப்படி,” கெஞ்சலும் அதட்டலுமாக அவன் கைகளை இழுத்துப் பிடித்துக்கொண்டாள்.

“சொல்லு!” என்றவனின் முகத்தில் எரிச்சல் மண்டியது.

“இது இன்னைக்கு எடுத்த முடிவில்ல; ஆனால் இன்னைக்கு ஃபைனலைஸ் பண்ண முடிவு. ஆன்ட், இது விரூபானால எடுத்த முடிவுமில்ல;” மறுபடியும் பல புதிர்களை அடுக்கினாள்.

“சரி! விஷயத்துக்கு வா,” முறைத்தான் தருண்.

“இது நாங்க ஒவ்வொரு முறை ரீக்ரியேட் பண்ணும்போதும் எனக்குத் தோணும்.

நான் சொல்றத அப்படியே உள்வாங்கி என்னுடைய ஒவ்வொரு வார்த்தைக்கும் முக்கியத்துவம் தந்து என்னோட பழகுறாரு. ஆனால் நான்தான் அதைப் புரிஞ்சுக்காம கடந்த காலத்துக்கும் நிகழ் காலத்துக்கும் முடிச்சுப்போட்டு, மதில்

மேல் பூனையா தள்ளாடி, ஏத்துக்கவும் முடியாம தள்ளியும் போகாம அவரை இன்னும் குழப்பிடுறேன்.

குணமாகி என்னோட சேர்ந்து வாழணும்ன்ற அவர் முயற்சிக்கு முதல் எதிரியே நான்தான். அவரை இயல்பா இருக்கவிடாம, நான், என் மனசுல என்ன நினைக்கிறேனோ அதையே அவரும் செய்யணும், சொல்லணும்னு எதிர்பார்க்குறேன். அவர் அப்படிச் செய்யலேனா எனக்குக் கோபம் வருது. வார்த்தைகளைக் கொட்டிடுறேன். அவர் அப்புறம் பயந்து பயந்து தன் நோக்கத்தைச் சொல்லும்போது, ‘இதை எப்படி மறந்தேன்’னு எனக்கே அசிங்கமா இருக்கும்டா,” என்றவள்,

உதாரணமாக, ஷ்ரவன் அலுவலகம் வராததற்குத் தான் யூகித்த காரணத்தையும், அவன் சொன்ன காரணத்தையும் விளக்கி,

“இதே நிலைமை நீடிச்சா, எங்க என்னை அவர் மொத்தமா வெறுத்துடுவாரோன்னு பயமா இருக்கு தருண்,” கவலை கப்பிய விழிகளுடன் மனமுடைந்தாள்.

அவனுக்கு அவள் உணர்வுகள் புரிந்தது என்றாலும், “உனக்குத்தான் இப்போ உன் பிராப்லம் என்னன்னு புரிஞ்சுடுத்தே ரம்யா. ஏன் அவனைப் பிரிஞ்சு போகணும்னு நினைக்குற,” தன்மையாகவே கேட்டான்.

“இந்தத் தெளிவெல்லாம் அவர் பக்கத்துல இருக்காத போதுதான் வருதுடா.

அதுவும் அவர் நான் நினைக்கிறத செய்யாமல் போனால், தெரியாம செய்யறாருன்னு மனசுக்குப் புரியும்போதும், ‘உன்னை மறந்தவரை ஏன் மன்னிக்குற’ன்னு மண்டை காய்ஞ்சு உடம்பெல்லாம் அனலா கொதிக்குது.

அவ்வளவுதான்! கோபம் சுள்ளுன்னு ஏறி, படபடன்னு பேசிக் காயப்படுத்திடுறேன்.

இதுவரை எங்க ரூமுக்குள்ள மட்டுமே வெளிப்பட்ட கோபம் இன்னைக்கு உங்க முன்னாடி அரங்கேறியாச்சு. அது அம்மா அப்பா கண்முன்னாடி நடக்காம இருக்கணும்னா நாங்க பிரிஞ்சு இருக்கிறதுதான் நல்லது தருண், ” மனம் திறந்து ஒப்புக்கொண்டவள்,

“இதே நிலைமை நீடிச்சுதுனா, அப்புறம் அவர்தான் என்னை சைகோதெரபி ட்ரீட்மென்ட்க்குக் கூட்டிட்டுப்போக வேண்டியதா இருக்கும்,” என முகம் சுருக்கினாள்.

“சரி! குணமாகும் வரைன்னு சொல்றியே…. அவனுக்குக் குணமே ஆகலேனா…” தொடங்கியவனின் வாய்பொத்தியவள்,

“பேச்சுக்கும் அப்படிச் சொல்லாதேடா. என் ஷ்ரவனுக்குச் சீக்கிரம் குணமாகி என்னோட பழையபடி காதலா உறவாடணும்,” மனமுருகி பிரார்த்தித்தாள்.

வாய்தான் பிரிந்து செல்கிறேன் எனச் சொல்லுகிறது என உள்ளுக்குள் சிரித்துக்கொண்டவன்,

“நீ கொடுக்கப்போகுற இந்த ஷாக் ட்ரீட்மென்ட்ல என் அண்ணனுக்கு நினைவு திரும்பி, என் பொண்டாட்டி எங்கன்னு உன் பின்னாடியே வந்து நிக்கப்போகுறான் பாரு,” எனக் கண்சிமிட்டினான்.

“உன் வாக்கு பலிக்கட்டும்,” கண்ணீர் மல்க உரைத்தாள்.

பெரும் பாரத்தை இறக்கிவைத்ததைப்போல உணர்ந்தவள் ஜரூராக வேலையில் மூழ்க, திரும்பிப் பார்ப்பதற்குள் ஆறு மணி ஆகியிருந்தது.

“உத்ரா குழந்தைய வச்சிட்டுத் தனியா கஷ்டப்படுவாடா. டின்னர் பண்ணனும். கிளம்பலாம் வா,” நண்பனை விரட்டினாள்.


வாசலில் விரூபாவைத் தூக்கிவைத்தபடி நடைப்பயின்று கொண்டிருந்த ஷ்ரவன், நீல நிற மாருதி ஸ்விஃப்ட் வீட்டு வாசற்கதவு முன் வந்து நின்றதும் திருதிருவென அசடுவழிந்தான்.

குழந்தையை ஒரு கையில் தாங்கியபடி அவன் ஒரு பக்கத்துக் கதவைத் திறந்துவிட, அதற்குள் வண்டியிலிருந்து இறங்கிய ரம்யா, தன்னவனையே ஏறிட்டவாறு மறுபக்கத்துக் கதவைத் திறந்துவிட்டாள்.

இதற்கிடையில் வண்டி சத்தம் கேட்டு, வாசலுக்குப் பதறியடித்து வந்த உத்ரா,

“மசாலா பொடி வறுத்துட்டிருந்தேன்,” நடுங்கும் குரலில் விளக்கிக்கொண்டே குழந்தையைத் தூக்கிக்கொள்ளப் போக,

“அச்சூஊஊஊ,” எனத் தும்பல் போட்டாள் அவர்கள் தாரகை.

“தீர்க்காயுசு,” என குழந்தையின் காதோரம் முணுமுணுத்தபடி, “மிளகாய் வறுத்த கையோட குழந்தையைத் தூக்காதடி,” தடுத்த ரம்யா,

“போய்! மீதி சமையல முடிச்சிட்டு வா. அதுவரைக்கும் குழந்தையை நாங்க பாத்துக்கிறோம்,” என அதட்டினாள்.

காண்பது கனவா நிஜமா என ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர் ஷ்ரவனும் உத்ராவும்.

முகத்தில் நமுட்டுச் சிரிப்பு தாண்டவமாட, “டென் மினிட்ஸ் டா. குளிச்சிட்டு வந்து பாப்புவை வாங்கிக்கிறேன்,” பொறுப்பான தந்தையாகப் பேசினான் தருண்.

“ஒண்ணும் அவசரமில்ல. நீ குளிச்சிட்டுப் போய் உன் பொண்டாட்டிக்கு கிட்ச்சன்ல ஹெல்ப் பண்ணு,” நண்பனையும் சரமாரியாக விரட்டினாள் பெண்.

“ஓகே!” எனத் தோள்களைக் குலுக்கிய வண்ணம், “டின்னருக்கு என்ன ஸ்பெஷல்,” மனையாளின் தோள் சுற்றி அணைத்தபடி வீட்டிற்குள் நுழைந்தான் தருண்.

“அதெல்லாம் ரெடி பண்ணியாச்சு. என்னடா நடக்குது இங்க?” உத்ராவிற்குத் தலையே வெடித்தது.

“புயலுக்கு முன் அமைதின்னு கேள்விப்பட்டதில்லையா!” அவன் பொடிவைத்துப் பதில்சொல்ல,

“சுத்தி வளைக்காம விஷயத்துக்கு வா தருண். காலையிலிருந்து ஒரு ஃபோன் கூட பண்ணல நீ. அண்ணா முகத்தைப் பார்க்கவே முடியல.

என்ன ஏதுன்னு தெரியாம நானிருந்த குழப்பத்துல குழந்தையைத் தூக்கிட்டு அம்மா வீட்டுக்குக் கிளம்பிடலாமான்னு கூடத் தோணித்துத் தெரியுமா,” அழுகையே வந்துவிடும் போலிருந்தது அவளுக்கு.

“என்னடி ஆளாளுக்கு அம்மா வீட்டுக்குக் கிளம்பிடுவேன்னு கார்னர் பண்ணறீங்க. உங்களுக்கு மட்டும் புகுந்து வீடு பிறந்த வீடுன்னு ரெண்டு வீடு இருக்குன்ற திமிரா!” பதிலுக்கு எகிறினான்.

“ஆளாளுக்கா… அப்படின்னா அக்காவுமா… இதுக்குத்தான் புயல் அமைதின்னு எல்லாம் பிள்டப் பண்ணியா,” புதிரைக் கண்டறிந்தாள் உத்ரா.

ரம்யாவிடம் பேசிய அனைத்தையும் ஒன்றுவிடாமல் விளக்கினான்.

“அவங்களத் தடுக்காம நீயும் மண்டையை மண்டையை ஆட்டிட்டு வந்திருக்கியேடா.”

“விட்டுப்பிடிக்கலாம் உத்ரா. அவங்களால ரொம்ப நாளைக்கெல்லாம் ஒருத்தர ஒருத்தர பிரிஞ்சு இருக்க முடியாது,” அதீத நம்பிக்கையுடன் உரைத்தான்.


‘இவள் ஏன் என்னுடன் நடைப்பயில இணைந்துகொண்டாள்!’ எனத் துவண்டுபோனான், ரம்யா இடியென தலையில் இறக்கிய செய்தியைக் கேட்டு.

அதிரடியாக அறிவித்தால் தன்னவனுக்கு நினைவு திரும்பும் என்ற நப்பாசையில் காத்திருந்தவளின் இதயத்தை, அவன் மௌனம் குத்திக் கிழித்தது.

“ஏதாவது சொல்லுங்க ஷ்ரவன்,” சிடுசிடுத்தாள்.

“மூச்சுமுட்டுது ரம்யா,” அவன் குரல் வலுவிழக்கவும்,

“என்ன பண்ணுது ஷ்ரவன்,” படபடத்தவள், அவன் நெஞ்சை நீவிவிட்டாள்.

‘என்மேல் இத்தனை காதல் கொண்டுள்ள பெண் பிரிந்து செல்ல நினைப்பது ஏன்,’ குமுறியவனுக்கு அப்போதுதான் நெஞ்சம் கனத்தது.

‘இது காதலா? கருணையான்னு யோசி?’ மனசாட்சி ஏளனம் செய்ய,

“நடக்கும்போது பேசினா மூச்சுமுட்டுதுன்னு சொல்ல வந்தேன்,” அவள் கையை நாசுக்காய் விலக்கிவிட்டான்.

அவன் தவிர்த்த விதம் அவளைச் சுருக்கென்று குத்த, அமைதியாய் தலையாட்டினாள் பாவை.

விஷயம் தெரிந்த தருண் மெல்ல பேச்செடுப்பான் என ரம்யா நினைக்க, முடிவைப் பகிரங்கமாய் அறிவிப்பாள் என மற்ற மூவரும் பதற்றத்துடன் காத்திருக்க, மாலை நேரம் முழுவதும் கண்ணாமூச்சி ஆட்டத்திலேயே கழிந்தது.


“இப்போ பேசலாமே?” மெத்தையில் சயனித்துக்கொண்ட கணவனுக்கு எதிரே வம்படியாக நின்றாள்.

“அதான் ஆபீஸ்க்கு ஏன் வரலன்ற காரணத்தைக் காலையிலேயே சொல்லிட்டேனே ரம்யா,” கசந்த குரலில் நினைவூட்டினான்.

“என் முடிவுக்கு அதுமட்டும் காரணமில்ல ஷ்ரவன்,” சுவற்றைப் பார்த்தபடி பதிலளித்தாள்.

தன் யூகம் சரியென்று அசைபோட்டவன், எழுந்து அவள் எதிரே வந்தான்.

“உன் மனச அறுத்துட்டு இருக்குற விஷயம் எனக்குப் புரியாம இல்ல ரம்யா. இல்லைன்னு ஆனத பற்றி திரும்பப் திரும்பப் பேசினால் மட்டும் வந்துடவா போகுதுன்னு அமைதியா இருந்தேன் ரம்யா,” என்றவனின் விழிகள் அவள் அடிவயிற்றில் படர்ந்தது.

“என்ன… என்ன சொல்றிங்கன்னு புரியல,” இரண்டடி பின்னுக்கு நகர்ந்தாள்.

“உடம்பாலும் மனசாலும் நீ படும் அவஸ்தையைப்பத்திக் கொஞ்சமும் நினைக்காம, பொழுதுக்கும் விரூபாவோட கொஞ்சி விளையாடுறேன்னு தானே இன்னைக்கு ‘தம்பி மகள்’ன்னு சொல்லிக்காட்டின…”

அவன் விளக்கம் தர, வீரிட்டு அழுதாள் பேதை.

தரிசு நிலமாகிப்போய்விட்ட விரக்தியில் குமுறியவளுக்கு, பிரசவ நாளைப்பற்றி எல்லாம் கிஞ்சித்தும் நினைவே இல்லை. தனக்காக இத்தனை தூரத்திற்கு யோசித்திருக்கிறானா என மீண்டும் குற்றவுணர்ச்சியில் மூழ்கினாள் பெண்.

“பாரு பாரு இதுக்காகத்தான் இத்தனை நாளா இந்தப் பேச்சையே எடுக்கல,” ஆறுதலாக அவன் அவள் கன்னத்தில் வருட, மின்சாரம் பாய்ந்ததுபோல விலகினாள் பெண்.

அழுந்த கண்களைத் துடைத்துக்கொண்டவள், “இது இன்னைக்கு நடந்தத மட்டும் வச்சு எடுத்த முடிவில்ல ஷ்ரவன். ரொம்ப நாளா மனசுல ஓடிட்டு இருக்குற விஷயம்.

ஒவ்வொரு விஷயத்தையும் நான் ஒண்ணு நினைச்சிட்டு சொல்ல… நீங்க வேற மாதிரி புரிஞ்சுக்க… ரெண்டு பேரும் மாத்தி மாத்தி மன்னிப்புக் கேட்டுக்குறோம்.

இயல்பா பேசிப்பழக வேண்டிய நாம இப்படி ஒருத்தர் கிட்ட ஒருத்தர் யோசிச்சு யோகிச்சுப் பேசும்போது, வாழ்க்கையில் ஒரு பிடிமானமே இல்லாம போகுது,” நொந்து பேசினாள்.

“இதையே தானே ரம்யா நான் அன்னைக்கு டாக்டர்கிட்ட கேட்டேன். ‘நான் பாத்துக்கிறேன்னு’ டாக்டர்கிட்ட என்னைப் பேசவிடாம தடுத்துட்டு, இன்னைக்கு நீ அதையே காரணம் காட்டி விலகிப்போக நினைக்குறியே,” அவன் குரலிலும் அதே வலி.

உள்ளதை உள்ளபடி சொல்லாமல் பொறுமையாய் இருப்பதுபோல நடித்துத் தன்னைத்தானே ஏமாற்றிக்கொண்டது எவ்வளவு தவறு என உணர்ந்தாள்.

“பதில்சொல்லு ரம்யா!” அவன் குரலை உயர்த்த,

“உங்களுக்குக் குணமாகிடும்னு நம்பினேன் ஷ்ரவன்,” அவளும் பொங்கினாள்.

“சரி! ஒருவேளை குணமாகலேன்னா ஒரேடியா பிரிஞ்சு போய்டுவியா,” என்றவனின் விழிகள் சிவந்தன.

ஏனோ, நண்பனிடம் மனம்விட்டுப் பேச முடிந்தவளுக்கு கணவனிடம் வாய்விட்டுச் சொல்ல முடியவில்லை. பொசுக்கென்று கோபம் தலைக்கேறியது.

“இப்படிக் குதர்க்கமா கேள்வி கேட்டு உங்க மறதியை நியாப்படுத்தாதீங்க ஷ்ரவன். நான் கிளம்புறது உறுதி,” ஆணித்தரமாக உரைத்தாள்.

“கோபப்படாத ரம்யா. நமக்கு கல்யாணமானத நான் மறுக்கல; மறந்துட்டேன். பக்கத்துல இருக்க வேண்டிய நீயே விலகிப் போகுறேன்னு சொன்னால் நியாயமா,” தழைந்து பேசினான்.

அதில் அவள் ஆதங்கம் பெருகியதுதான் மிச்சம்.

“நீங்க நம்ம கல்யாணம் செஞ்சுகிட்டத மறுத்திருந்தா, உங்க சட்டையைப் பிடிச்சு உரிமையோட சண்டை போட்டிருப்பேன்,” பொங்கியவள், பெருமூச்சுடன்,

“மறந்தவங்க கிட்ட என்ன உரிமை கொண்டாட முடியும்,” கைகளை விரித்து நொந்து கேட்டாள்.

தீப்பொறி எனத் தெறித்து அடங்கிய அவள் மனக்குரலில், அவள் காதலின் ஆழத்தை உணர்ந்தான். விரைவில் குணமடைய வேண்டுமென மனதார பிரார்த்தித்தபடி,

“அம்மா வீட்டுக்குப் போனாலும் ஆபீஸுக்கு வருவ தானே,” தன்மையாகக் கேட்டான்.

அவன் முகத்தைக் கூடப் பார்த்துப் பேசாதவளுக்கு அவன் மனவோட்டம் எங்கே புரியப்போகிறது.

“பிரிஞ்சு இருக்கணும்னு சொல்றது உங்களுக்குப் புரியுதா இல்லையா ஷ்ரவன்,” சீறினாள் பெண்.

அவள் கோபம் தணிய, பிரிவே மருந்து எனத் தன்னைத்தானே ஆசுவாசப்படுத்திக் கொண்டவன், “கிளம்புறதுக்கு முன்னாடி ஒரேவொரு ஹெல்ப் பண்ணு,” என்றான்.

“என்ன பண்ணனும்?” அதே சலிப்பு அவளிடம்.

“இனி நானே ஆபீஸுக்கும் போயிட்டு வரேன். யாரு என்ன வேலை செஞ்சிட்டு இருக்காங்கன்னு பரிச்சயமாகும் வரைக்குமாவது கூட வா. உனக்கு எப்போ ஓகேன்னு சொல்லு… ஜாயின் பண்ணிக்கிறேன்,” அனைத்தையும் அவள் விருப்பத்திற்கே விட்டான்.

“சரி! நாளைக்கே வாங்க. வெள்ளிக்கிழமை வரைக்கும் நானும் வரேன்,” அவள் கூற,

“நாலு நாள்தானா? வாயைப்பிளந்தான்.

“உங்களால ஒரு நூறு பேரோட பெயரையும் பொறுப்பையும் பற்றி நாலு நாள்ல கத்துக்க முடியாதா ஷ்ரவன்,” சிடுசிடுத்தாள்.

“நாம திடீர்ன்னு இத்தனை மாற்றங்களைச் செஞ்சா அம்மா அப்பா என்ன ஏதுன்னு யோசிக்கமாட்டங்களா,” என்றான்.

“நம்மளோட இந்த பிரிவுக்கான காரணம் நமக்குள்ளேயே இருக்கணும்னு தான் நானும் நினைக்குறேன்.என்ன செய்யலாம்னு நீங்களே சொல்லுங்க,”

என நொடியில் தழைந்தவளை மலைத்துப் பார்த்தான். அவள் உண்மை சுபாவத்தின் மற்றொரு உதாரணத்தைக் கண்கூடாகப் பார்த்ததில் பெரும் மனநிறைவுகொண்டு புன்னகைத்தான்.

“நீ கேஸுலா அம்மா வீட்டுக்குப் போயிருக்கா மாதிரி ஏதாவது காரணம் சொல்லி சமாளிச்சுக்காலாம். டூ வீக்ஸ் டைம் கொடு,” என்றான்.

மறுநொடியே சம்மதமெனத் தலையசைத்தவள், ‘அதற்குள் அவர் குணமடைந்துவிட வேண்டும்!’ என மனத்தில் பிரார்த்திக்கத் தவறவில்லை.


பெட்டியும் கையுமாகத் தரிசனம் தரப்போகிறாள் என்ற தவிப்புடன், காபி அருந்தியபடி வசிப்பறையில் காத்துக் கொண்டிருந்தனர் உத்ராவும் தருணும்.

ஜோடியாக கீழே இறங்கி வந்தவர்கள், ஆளுக்கொரு செய்தித்தாளுடன் எதிர்பக்கம் அமர,

“வெயிட் ஃபார் தி புயல்,” மனையாளின் காதோரம் கிசுகிசுத்தான் தருண்.

“இன்னைலேந்து ஷ்ரவனும் ஆபீஸ்க்கு வரேன்னு சொல்லிருக்காரு. உன்னால வீட்டுல தனியா சமாளிச்சுக்க முடியுமா, இல்ல அம்மா அப்பா வரவரைக்கும் வெயிட் பண்ணலாமா,” ரம்யா கேட்க,

பேரதிர்ச்சியில் எச்சில் விழுங்கியதற்கே புரையேறியது உத்ராவிற்கு.

சுரத்தே இல்லாமல் அமர்ந்திருக்கும் அண்ணனின் முகத்தைக் கண்டுகொண்ட தருண், மனையாளின் தலையில் தட்டிவிடும் சாக்கில், “புயல் இல்ல; சுனாமியே வரப்போகுது,” கிசுகிசுத்தான்.

“அங்க என்ன உன் பொண்டாட்டியோட காதைக் கடிக்குற,” கண்களை உருட்டினாள் ரம்யா.

“நான் வீட்டுல இருக்கட்டுமான்னு கேட்டேன்,” சமாளித்தான் தருண்.

“நீ வீட்டுல இருந்துட்டா, ஆபீஸ் வேலைகளை யார் பார்ப்பாங்க?”

‘அதுக்குத்தான் நீ இருக்கியே!’ அவன் முணுமுணுத்தது தான் தாமதம்.

“என்ன!!!!” மீண்டும் விரிந்தது ரம்யாவின் கோப விழிகள்.

பம்மி வழியும் கணவனை உளமார ரசித்த உத்ரா, “டூ ஹர்ஸ் போதும் ‘க்கா. கிச்சன் வேலை முடிச்சிட்டு குளிச்சிட்டு வந்துடறேன். அப்புறம் என்னால தனியா ஹேண்டல் பண்ணிக்க முடியும்,” என்றாள்.

“கிச்சன் வேலையை நான் பாத்துக்கறேன். நீ டக்குன்னு குளிச்சிட்டு வா,” இறுதித் தீர்ப்பை உரைத்தாள் ரம்யா.

மணவாழ்க்கையை மறந்து தவிக்கவிட்ட போதிலும்,
மறுகி மறுகி காதலித்தாயே பெண்ணே!
மனமுடைந்து நான் தளர்ந்த போதிலும்,
மனமொத்த தம்பதிகள் என மமதை கொண்டாயே!
மனமுவந்து நான் விதியை வெல்ல துணிந்திட,
மனத்தாங்கல் கொண்டு விலகுவது ஏனோ – விடை தேடுகிறேன்
மனையாளே! நிழலாடும் நின் நினைவில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!