நிழலாடும் நின் நினைவில் – 13
ஓம் ஸ்ரீ சாய்ராம்
திடீரென வந்து இன்பதிர்ச்சி தந்திருக்கும் தன் முதாலாளியைக் கண்ட ஊழியர்கள் தலைகால் புரியாத சந்தோஷத்தில் மிதந்தனர். நலன் விசாரிப்புகள், வாழ்த்துகள் என ஷ்ரவனைத் தேனியாய் மொய்த்தனர்.
நெருங்கிப் பழகி வந்த சிலர், கண்ணீரும் சிரிப்புமாக அவன் உடல் நலத்தைப்பற்றி விசாரித்தும், இத்தனை நாளாய் தங்களை நேரில் வரவிடாமல் ஏன் தடுத்தான் எனவும் உரிமை சண்டை போட்டு, தேக்கிவைத்திருந்த உணர்வுகளைக் கொட்டித் தீர்த்தனர்.
ரம்யாவிற்கு முன்; ரம்யாவிற்குப் பின்; என்ற ரீதியில் மறதியில் தத்தளித்தவனோ, பரிச்சயமானவர்களிடம் சகஜமாக அளவளாவியும், மற்றவர்களிடம் புன்சிரிப்புடன் அசடுவழிந்துமென ஒப்பேற்றிக் கொண்டிருந்தான்.
Advertisement
ஷ்ரவனுகுப் பரிச்சயமில்லாத நபர்களை வேண்டுமென்றே அழுந்த பெயர் சொல்லி அழைத்தும், அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு முந்திரி கொட்டையாய் பதிலளித்தும் என ரம்யாவும் தருணும் சமாளித்துக் கொண்டிருந்தனர்.
அவர்களைத் தாண்டி தன் அலுவல் அறைக்குள் வரவே ஒருமணி நேரமானது.
‘ரம்யாயவிற்குப் பின்’ புதுப்பிக்கப் பட்டிருந்து அறை என்பதால், கடுகளவு கூட நினைவில்லை அவனுக்கு. நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்டிருக்கும் அறையை அங்குலம் அங்குலமாக வியந்து ரசித்தவன்,
Advertisement
“இது… இது என்ன ரம்யா, ஆபீஸ் ரூமா இல்ல நம்ம கம்பனியோட மாடல் ஹவுஸா? கிச்சன், லிவிங்க் ரூம், பூஜை அறைன்னு ஒரு மினி அபார்ட்மென்ட் மாதிரி இருக்கு?” மலைத்துக் கேட்டான்.
Advertisement
அவன் பாவனையில் அவளுக்குச் சிரிப்புத்தான் வந்தது.
“லைஃப் பார்ட்னர்ர பிஸினஸ் பார்ட்னர் ஆக்குறேன்னு சாக்குச்சொல்லி, தனிக்குடித்தனம் நடத்த, ஐயா போட்ட பிளான்,” தன்னையும் மீறி நக்கல் செய்தாள்.
கண்களுக்கும் செவிகளுக்கும் விருந்தான காதல் பரிபாஷையில் உறைந்தவனாய் அவன் நிற்க,
Advertisement
“எனக்கு என்ன பிடிக்கும் பிடிக்காதுன்னு தெரிஞ்சுகிட்டு எனக்காகப் பார்த்துப் பார்த்து டிசைன் பண்ணிருக்கீங்க ஷ்ரவன். இதை எல்லாம் பார்த்தா உங்களுக்கு ஏதாவது ஞாபகம் வருதா?” ஏக்கம் பொங்க கேட்டாள்.
அவளுக்காகத் தான் இத்தனை மாற்றங்களை செய்திருக்கிறான் என்பதைத் தாண்டி அவனுக்கு எதுவுமே புலப்படவில்லை.
சுற்றி முற்றி பார்த்து மூளையைக் கசக்கியபோதும், கணக்கியல் படித்திருக்கிறாள்; அதனால் அந்த துறை சார்ந்த சான்றிதழ்கள் என தர்க்கரீதியாகப் பொருத்த முடிந்ததே தவிர, பூஜை அலமாரி எதற்கு; உணவு உண்ணும் அறை எதற்கு; எனத் தொடர்புபடுத்த முடியவில்லை.
ஒன்றை மட்டும் உறுதியாக உணர்ந்தான்! அவளைக் கண்மூடித்தனமாக நேசித்திருக்கிறான் என்று!
“நான் இத்தனை மெனக்கெட்டு பால்கோவா கிண்டினதுக்கு, கொஞ்சமாவது சாப்பிட்டிருக்கலாமே,” அவன் முகம் சுருக்கி ஜாடை பேச,
பக்கென்று சிரித்துவிட்டாள் பேதை.
“மூணு மாசமா சாப்டுட்டுத்தான் இருக்கேன். நீங்க வந்து பார்க்கலேன்னா நான் என்ன செய்யமுடியும்,” தோள்களைக் குலுக்கிக்கொண்டாள் பாவை.
“அதான் இப்போ வந்திருக்கேனே…” ஏக்கம் வழிய கேட்க,
அவனிடம் தாவிச் செல்ல துடிதுடித்த மனத்தை இழுத்துப்பிடிக்க பிரயத்தனப்பட்டாள் பெண்.
மௌனத்தில் கரைந்தவளின் அருகில் வந்தவன், “அன்னைக்கே வாய்திறந்து கேட்டிருந்தா, நீ இந்த முடிவுக்கு வந்திருக்க மாட்டல ரம்யா,” வினவினான் ஆற்றாமையில்.
“ப்ளீஸ் ஷ்ரவன்,” எனக் கண்களை இறுக மூடிக்கொண்டவள்,
“என்னை எந்தக் கேள்வியும் கேட்காதீங்க. கொஞ்ச நாள் பிரிஞ்சிருக்கிறது தான் நம்ம ரெண்டு பேருக்கும் நல்லது,” என இரு கரங்களையும் கூப்பி மன்றாடினாள்.
விட்டுப்பிடிக்க விழைந்தவன், ‘இரண்டு வாரங்கள் இருக்கிறதே!’ நம்பிக்கையுடன் மடிக்கணினியை உயிர்ப்பித்தான்.
விடாப்பிடியாக விலக நினைத்தவளோ, ‘இரண்டு வாரத்தை எப்படித் தள்ளப்போகிறேன்!’ பெருமூச்சுடன் தன்னெதிரே குவிந்திருந்த கோப்புகளில் முதல் கோப்பினைத் திறந்தாள்.
இரண்டே நாட்களில் யாருடைய உதவியும் இல்லாமல் ஊழியர்களுடன் சகஜமாக அலுவல் விஷயங்களை கலந்துரையாட ஆரம்பித்திருந்தான் ஷ்ரவன்.
ஊருக்குத் திரும்பிய தாமோதரன், நற்செய்தி அறிந்து பூரித்தார். மகன் மருமகள் இருவரும் ஜோடியாகப் பணியாற்றுவதை கண்குளிர கண்டு நெகிழ்ந்தார்.
அன்று, நிறுவனத்திற்குப் பெரும் அங்கீகாரத்தையும் லாபத்தையும் ஈட்டக்கூடிய, மென்பொருள் நிறுவனத்திற்கான கட்டிடம் எழுப்பும் நெடுநாள் பணித்திட்டத்தை, தங்களுக்குச் சாதகாமப் பேசி முடித்திருந்தான் ஷ்ரவன். அதற்கான குழு, குழுவினரின் பொறுப்புகள், பணியை முடிக்க, நீண்ட மற்றும் குறுங்கால திட்டங்கள் என அனைத்தையும் அன்றே வடிவமைத்திருந்தான்.
கலந்துரையாடலில் பங்கேற்க வந்திருந்தவர்களில், அனுபவத்திலும் வயதிலும் முதிர்ந்த ஊழியர் ஒருவர்,
“நீங்க வந்ததும் தான் தம்பி, அப்பா முகத்துல சிரிப்பே வருது,” என மெச்சினார்.
தாமோதரன், மகனுக்குப் புன்னகை முகமாகத் தலையசைக்க, அந்த ஊழியரே மேலும் பேசினார்.
“நீங்க யாரும் ஓவர்டைம் பார்க்காமலே, அவங்க கேட்டத கேட்ட நேரத்துல செஞ்சு தர, ஷ்ரவன் எப்படிப் புத்திசாலித்தனமா பேச்சுவார்த்தை நடத்தினாருன்னு கவனிச்சீங்களா. இதுக்காகத்தான் ஷ்ரவன் வந்ததும் பார்த்துக்கலாம்னு தாமோதரன் பிராஜெக்ட்ட ஒத்திப்போட்டுட்டு இருந்தாரு,” எனப் பாராட்டினார்.
“ஓவர்டைம்மா?” ஷ்ரவன் வியந்து கேட்க,
“பிராஜக்ட் எடுத்துக்கச் சொல்லி இவங்க ரெண்டு மாசமா அப்பாகிட்ட கேட்டுட்டு இருக்காங்க சார். தேவைப்பட்டால், நாங்க கூட ஓவர்டைம் வேலை பார்க்கவும் தயார்ன்னு சொன்னோம். முடியவே முடியாதுன்னு சொல்லிட்டிருந்த தாமோதரன் சார், நீங்க ஆபீஸுக்கு வந்ததும் அவங்கள மீட்டிங்க்கு கூப்பிட்டிருக்காரு. ரெண்டு பேருக்கும் சாதகமான பிளான் சொல்லி அசத்திட்டீங்க,” விவரித்து மெச்சினார் நடுத்தர வயதுடைய மற்றொருவர்.
“ஹோட்டல், ரெசிடென்ஷியல் பிள்டிங்க்ன்னா கண்ண மூடிட்டு ஓகே சொல்லிருப்பேன் ஷ்ரவன். இது ஐ.டி கம்பனி கன்ஸ்ட்ரக்ஷன். உனக்குத்தான் நிறைய எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு. இதுவரைக்கும் நீ பொறுப்பேத்துட்டிருந்த எட்டு பிராஜக்ட்லையும் நான் தள்ளியிருந்துதான் வேலை பார்த்திருக்கேன்.
அரைகுறையா தெரிஞ்ச விஷயத்துல மூக்கை நுழைச்சு, இவங்களையும் ஓவர்டைம் செய்ய வச்சுன்னு ஸ்ட்ரெஸ் ஏத்துக்க வேண்டாம்னுதான் கமிட் பண்ணிக்கல,” அவர் விவரிக்க,
“சொல்லப்போனால், அவங்க வெயிட் பண்ணறேன்னு சொன்ன டெட்லைன் அடுத்த வாரத்தோட முடியப்போகுது சார். நீங்க இந்த வாரம் ஆபீஸுக்கு வந்தது ரொம்ப நல்லதா போச்சு. இது எனக்கு ட்ரீம் கம் ட்ரூ பிராஜெக்ட் சார்,” சமீபத்தில் நிறுவனத்தில் சேர்ந்திருந்த ஒரு துடிதுடிப்பான ஊழியர் உணர்ச்சிப்பூர்வமாக உரைத்தார்.
தன் வருகையால், தந்தை முதல் சாதிக்கத் துடிக்கும் இளைஞன் வரை எத்தனை பேர் மகிழ்ந்து பூரிக்கிறார்கள் எனக் கண்ணெதிரே பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு, தான் அலுவலகத்திற்கு வர நேரிட்ட சுழ்நிலையை நினைக்காமல் இருக்க முடியவில்லை.
ரம்யா தன்னிடம் எறிந்து விழுந்தது நன்மைக்கே எனத் தனக்குள் சிரித்துக்கொண்டான். மங்கை எதிர்பார்க்கும் பிரிவும் நல்லதில் முடியட்டும் என்ற பிரார்த்தனையோடு தங்கள் அலுவலக அறைக்குத் திரும்பினான்.
கதவு திறக்கும் சத்தம் கூடக் கேட்காமல், அலமாரி பக்கம் சிலையாக நின்றுகொண்டிருந்தவளின் அருகில் நடந்தான் ஷ்ரவன்.
தாலி கட்டும்போது எடுத்திருந்த புகைப்படத்தில் அவன் முகத்தை வருடியவாறு சிந்தனையில் கரைந்திருந்தாள்.
“ம்க்கும்!” காதோரம் ஒலித்த தொண்டை கரகரப்பில் திடுக்கிட்டுத் திரும்பினாள்.
“எ…எப்… எப்போ வந்தீங்க,” புகைப்படத்தை பின்னால் மறைத்தாள்.
“என் கன்னத்துக்கு இத்தோட இருபது சுத்து மஸாஜ் செஞ்சிட்ட,” புகைப்படத்தை லாவகமாய் பிடுங்கினான் அவன்.
“அது…அது… அலமாரி எல்லாம் ஒரே தூசியா இருந்துதுன்னு துடைச்சிட்டு இருந்தேன்,” சமாளித்தாள்.
“ஓ சரி!” எந்த எதிர்வினையும் காட்டாமல் அமைதியாகத் தன் இருக்கையில் அமர்ந்து கொண்டவனை யோசனையாக ஏறிட்டாள்.
ஷ்ரவனோ, கலந்துரையாடலில் சேகரித்த குறிப்புகளைப் பரப்பிவைத்து, அவற்றை ஒழுங்குபடுத்திச் சேமிப்பதில் முனைப்பாக இருந்தான்.
வரைப்படங்களும், எண்களுமாக நிறைந்திருந்த அந்தத் தாள்களில், தந்தையின் பெருமிதம் மின்னும் முகம் நிழலாட, தன்னை அலுவகத்திற்கு இழுத்துவந்த மனையாளுக்கு நன்றி சொல்லும் வகையில்,
“என்னோட சண்டை போட்டு ஆபீஸ்க்கு வர வெச்சதுக்கு ரொம்ப தாங்க்ஸ் ரம்யா,” தாள்களை விசிறியபடி பேசினான்.
சற்றுமுன் நடந்ததைப் பற்றிய யோசனையில் இருந்தவளுக்கோ சுருக்கென்று குத்தியது.
“நாளைக்கு நம்ம கல்யாண நாள் ஷ்ரவன். அதுக்குள்ள உங்களுக்கு ஞாபகம் வந்துடாதான்னு நப்பாசையில்தான் நம்ம கல்யாண ஃபோட்டோவையே உத்துப்பாத்துட்டு இருந்தேன். போதுமா!” குளமான கண்களுடன் உறுமியவள், உணவருந்தும் அறைக்குள் பதுங்கினாள்.
அவள் கோபமாக இருக்கிறாள் எனப் புரிந்துகொள்ளவே அவனுக்குச் சில நொடிகள் ஆனது. அதற்குப் பின்தான் அவள் உறுமிய சொற்களையே உள்வாங்கினான்.
‘ஓ மை காட்!’ எனச் சுதாரித்துக்கொண்டவன், அவளைத் தேடி விரைந்தான்.
உம்மென்ற முகத்துடன் ஜன்னல் வெளியே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
“உள்ள வந்ததுக் கூடக் கவனிக்காம யோசனையில் இருந்தியேன்னு கேஸுலா தான் பேசினேன் ரம்யா. நீயும் விளையாட்டா பதில் சொல்றன்னுதான் நெனச்சேன்,” கதவருகிலிருந்து விளக்கினான்.
அசைவின்றி சிலையாக நின்றிருந்தாள் பாவை.
பணித்திட்டத்தின் ஆவணங்களை மேஜையிலிருந்து திரட்டிக்கொண்டு வந்து அவள் கையில் திணித்தவன்,
“நான் இந்த வாரம் ஆபீஸுக்கு வராமல் இருந்திருந்தா, அப்பா இந்த பிராஜக்ட் எடுத்திருக்க மாட்டாரு ரம்யா. அப்பா, நம்ம ஸ்டாஃப் எல்லாரும் எவ்வளவு ஹாப்பியா இருக்காங்க தெரியுமா,” விவரிக்க,
முதலீட்டுத் தொகை, அந்த முதலீட்டின் மீதான வருமானம், அத்திட்டத்தால் பயன்பெறவிருக்கும் ஊழியர்களின் எண்ணிக்கை என விவரங்களைக் கவனித்தவளுக்கு அதன் முக்கியத்துவம் புரிந்தது. ஆர்வம் மின்ன மற்ற பக்கங்களைப் புரட்டி ஆராய்ந்தாள்.
“உனக்குத்தான் இந்த க்ரெடிட்,” அவள் காதோரம் கிசுகிசுத்தான்.
“எதுக்கு… சண்டை போட்டதுக்கா?” பதிலுக்குச் சீண்டினாள்.
இயல்பாய் பேசுகிறாள் என நிம்மதி அடைந்தவன், “நீ எது செஞ்சாலும் அது என் நல்லதுக்குத்தான்னு புரியுது ரம்யா,” இடைநிறுத்தி,
“பிரிஞ்சு இருக்கணும்னு நீ சொன்னதுலையும் நல்லது நடக்கப்போகுதுன்னு என் உள்மனசு சொல்லுது,” அடிமனத்திலிருந்து உரைத்தான்.
இருவரும் லேசான மனத்துடன் அலுவல் மேஜைக்குத் திரும்பினர். அலமாரியைக் கடந்து வந்தவனுக்கு, அவள் தங்கள் திருமண நாளைப்பற்றி சொன்னது உரைக்க,
“நாளைக்குள்ள எனக்கு குணமாகுமான்னு தெரியாது ரம்யா. வருஷா வருஷம் நம்ம வெட்டிங்க் டே அன்னைக்கு என்ன செய்வேன்னும் தெரியல; அடுத்த வருஷம் பார்த்துக்கலாம்னு விடவும் முடியல. அதனால…” மென்று விழுங்கினான்.
“உங்க சிக்னேசர் ரெசிப்பி ஹோம்மேட் பால்கோவாவோடத்தான் என்னோட நாள் விடியும். உங்களுக்கு நானும், எனக்கு நீங்களும் சர்ப்ரைஸா ட்ரெஸ் வாங்கி வச்சிருப்போம். அன்னைக்கு முழுக்க கிச்சன்லையும் உங்க ராஜ்ஜியம்தான். எங்கள யாரையும் உள்ள விடமாட்டீங்க. ஈவினிங்க் எல்லாருமா சேர்ந்து கோவிலுக்குப் போயிட்டு வருவோம். அந்த வருஷத்துக்கான 365 டேஸ் க்ராஸ்வர்ட் புக், நம்ம வெட்டிங்க் டே அன்னைக்குத்தான் வாங்கித் தருவீங்க,” படபடவென்று ஒப்பித்தாள்.
அவற்றை உள்வாங்கிய வண்ணம் அவன் தலைகுனிந்து மௌனத்தில் கரைய,
“உங்க சிகிச்சைக்கு உதவும்ன்னா, நாம கட்டாயம் ரீக்ரியேட் பண்ணலாம்,” என்றாள் கனிவாக.
அப்போதும் அவனிடம் அதே மௌனம்.
“எனக்கும், அடுத்த வருஷம் பார்த்துக்கலாம்னு விட மனசில்ல ஷ்ரவன். முடிஞ்ச அளவுக்கு ரியலிஸ்டிக்கா ரீக்ரியேட் பண்ணலாமே,” வாய்விட்டுச் சொன்னவளை விழி உயர்த்திப் பார்த்தான்.
“யெஸ் ஆர் நோ! ஏதாவது பதில்சொல்லுங்க ஷ்ரவன்,” அவள் பொறுமை இழக்க,
“எல்லாம் ஓகே ரம்யா. ஆனால் எனக்கு பால்கோவா எப்படிச் செய்யறதுனும் மறந்துபோச்சு; அதை மட்டும் கடையிலிருந்து வாங்கித்தரவா,” அவன் அப்பாவியாக முகம்வைத்துக் கேட்க,
“இதுக்காகவா இவ்வளவு பிள்டப் கொடுத்தீங்க,” எனக் கண்களில் நீர் வழிய குலுங்கிக் குலுங்கிச் சிரித்தாள்.
விபத்திலிருந்து மீண்டு வந்த பிறகு அவள் இத்தனை சந்தோஷமாக சிரித்துப் பார்த்ததே இல்லை அவன். மனையாளின் சிரிப்பொலியில் லயித்தவனாக ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தவனின் விழிகள், மீண்டும் அவள் பின்னாலிருந்த அலமாரியைத் தழுவியது.
திருமண வரவேற்பு விழா புகைப்படத்திலும் இப்படித்தான் கண்களில் நீர்வர சிரித்துக்கொண்டிருந்தாள். அதற்கு மூலக்காரணம் தானே என்பதையும், மங்கையின் பக்கவாட்டில் அவன் நெற்றியோடு நெற்றிமுட்டி, இடது கரத்தால் வாய்பொத்தி அவள் காதோரம் கிசுகிசுத்துக் கொண்டிருந்த நெருக்கத்திலும் புரிந்துகொண்டான்.
என்ன சொல்லியிருப்பான் என்பது நினைவுக்கு வரமால் அதைத் தெரிந்துகொள்ளும் ஆர்வமும் மேலோங்கியது.
“கல்யாணா நாள் பரிசா இன்னொரு விஷயம் கேட்கவா,” பீடிகையுடன் தொடங்கினான்.
வசியமான காதல் பரிபாஷைகளில் தன்னை நாணத்தில் நனைத்துவிடுவான் எனத் தெரிந்தபோதும், இம்முறை பதற்றம் கொள்ளவில்லை பெண். கண்ணியத்திற்குப் பெயர்போனவன் வரம்பு மீறமாட்டான் எனப் பெரும் நம்பிக்கை கொண்டிருந்ததால்!
“கேளுங்க ஷ்ரவன். முடியும் முடியாதுன்னு நானும் வெளிப்படையா சொல்லிடுறேன்,” தெளிந்த மனத்துடன் பதிலளித்தாள்.
அலமாரியிலிருந்து அந்தப் புகைப்படத்தை எடுத்து வந்தவன்,
“அப்படியென்ன சொன்னேன் ரம்யா? விழுந்து விழுந்து சிரிச்சிட்டிருக்க!”
“உங்களுக்கு வர வர எதுக்கெல்லாம் பிள்டப் பண்ணறதுன்னு ஒரு அளவே இல்லாமல் போச்சு,” பொய்கோபத்தில் முறைத்தாள் பாவை.
“உனக்கு இது சின்ன விஷயமா தெரியலாம் ரம்யா. ஆனால் நீ என் வாழ்க்கையில் வந்ததுக்கு அப்புறம் என் சுபாவத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்குன்னு என்னால புரிஞ்சுக்க முடிஞ்சும் அது என்ன ஏது எப்படின்னு தெரியாமல் மண்டையே வெடிக்குது,” விவரித்தான்.
அவன் பக்கத்திலிருந்து யோசித்தவளுக்கு அவன் படும் அவஸ்தைகளும் புரிந்தது.
“என் கையிலிருக்கும் கிஃப்ட் பாக்ஸ் கவனிச்சீங்களா?” சுட்டிக்காட்டினாள்.
பளபளக்கும் தங்க ஜிக்னா காகிதத்தினால் சுத்தப்பட்டிருந்த சதுரங்க டப்பா அது. கைகொள்ளா அளவிற்குப் பெரிதாகவும் இருந்தது.
“ம்ம்” என்றான்.
“நாலைஞ்சு பேர் வந்தாங்க. நம்ம ரெண்டு பேருக்குமே அவங்கள யாரு என்னன்னு தெரியல. அவங்க பாட்டுக்கு உங்ககிட்ட கிஃப்ட் தந்துட்டு, ஃபோட்டோக்கு போஸ் கொடுக்க இங்கும் அங்குமா நகர, டப்பா சைஸ் பார்த்து, ‘நான் ஒரு கை கொடுக்கட்டுமா?’ ன்னு அக்கறையா கேட்டேன்.
காலி டப்பாவைத் தூக்க ரெண்டு பேரான்னு நீங்க என் காதுல ஓதி, அந்த டப்பாவை என் கைக்கு மாத்திவிட்டுட்டீங்க.
அட ஆமாம் ஷ்ரவன்! உள்ள ஏதாவது இருக்கான்னு கூடச் சந்தேகமா இருக்குன்னு நான் அதை நாசுக்கா ஆட்டிப்பார்த்துட்டிருக்க,
ஒரு ஃபார்மலிட்டிக்காகவாது அது ஹெவியா இருக்குற மாதிரி பிடிச்சுக்க. பயில்வான் மாதிரி நீ அதை பந்தாடுறதுல மிரண்டு போய், பயப்புள்ள ஃபோட்டோக்குச் சிரிக்கக் கூட மாட்டேங்குறாங்கன்னு, டிவில ஓடிட்டிருந்த வீடியோ ரெகார்டிங்க் காட்டினீங்க.
அவனைப் பாரு எப்படி முழிக்கிறான்; இவனை விட்டால் அழுதுடுவான் போலன்னு ஒவ்வொருத்தர பற்றியும் ஓயாமல் கமென்ட்ரி கொடுத்துட்டு இருந்தீங்க.
பாக்குறவங்களுக்கு நீங்க என்கிட்ட கேஸுலா பேசிட்டு இருந்தா மாதிரிதான் தெரிஞ்சிருக்கும். ஆனால் உங்களாலான காரியம் என்னால சிரிப்பை அடக்கவே முடியல,” என அந்தநாள் ஞாபகத்தில் விவரித்தாள்.
கதை கேட்டவன் யார் அவர்கள், டப்பாவில் என்ன அடைத்து வைத்திருந்தார்கள் என அறிவதற்குத் தவித்தான்.
“எல்லாத்தையும் நானே சொல்லமுடியுமா. உங்க மூளைக்கும் கொஞ்சம் வேலை கொடுங்க பாஸ்,” என நமுட்டாகச் சிரித்தாள்.
“ம்ப்ச்… பேசிப்பழகினவங்கள பத்தின ஞாபகமே இல்லையாம். இதுல அழையா விருந்தாளியா வந்தவங்கள பத்தி எப்படிமா கண்டுபிடிக்க முடியும்,” சலித்துக்கொண்டவன்,
“ஆவுட் ஆஃப் சிலபஸ்லேந்து கேள்வி கேக்குற டீச்சர் உன்கிட்ட படிக்கிற ஸ்டூடென்ட்ஸ் ரொம்பப் பாவம் ரம்யா,” என முணுமுணுத்தான்.
“என்ன சொன்னீங்க? என்ன சொன்னீங்க?” அவள் படபடக்கவும்,
“சும்மா… விளையாட்டுக்குத்தான் ரம்யா,” பம்மினான் ஷ்ரவன்.
“ம்ப்ச்… தெரியும் ஷ்ரவன். என்ன சொன்னீங்கன்னு ரிபீட் பண்ணுங்க,” அவசரப்படுத்தினாள்.
“அது, ஆவுட் ஆஃப் சிலபஸலேந்து கேள்வி கேக்குற டீச்சர் உன்கிட்ட படிக்கிற ஸ்டூடென்ட்ஸ் ரொம்பப் பாவம்னு சொன்னேன்,” மெல்லிய குரலில் உரைத்தான்.
“குட் ஷ்ரவன். அன்னைக்கு வந்த பசங்க என் காலேஜ் ஸ்டுடென்ட்ஸ் தான். தருண் க்ளாஸ்மேட்ஸ். தருண் சொல்லித் தெரிஞ்சுகிட்டோம்,” என்றவள்,
“உங்களையும் அறியாமல் எல்லாம் ஞாபகம் வருது பாருங்க ஷ்ரவன்,” என்றவளுக்குக் கண்களில் நீர் கோத்துக்கொண்டது.
தற்செயலாக சொன்ன ஒரு வார்த்தைக்கே இத்தனை தூரம் நெகிழ்கிறாளே என அவள்மேல் காதல் பெருகியது அவனுக்கு. எப்போது குணமடைவேன் என அவன் சிந்தனையில் கரைய,
“கிஃப்ட் பத்தி ஒரேவொரு க்ளு தரேன் ஷ்ரவன். நமக்காக பார்த்துப் பார்த்துச் செஞ்சி எடுத்துட்டு வந்திருந்தாங்க. அதைப் பத்திரமா கொண்டுவரத்தான் பபிள் ராப் பண்ணி அத்தனை பெரிய டப்பால எடுத்துட்டு வந்தாங்க,” என்றவள்,
“அது இன்னும் நம்ம வீட்டுலதான் இருக்கு,” என்றாள்.
அன்று மாலை வீட்டிற்குத் திரும்பியதிலிருந்தே அதே வேலையாகத்தான் இருந்தான். பபிள் ராப், டப்பாவின் அளவு என முக்கிய விஷயங்களைக் கருத்தில் கொண்டவன், வீட்டிலிருந்த அலங்காரப் பொருட்கள், கண்ணாடி பாத்திரங்கள் என எளிதில் உடையக்கூடிய பொருட்களை துப்பறியும் நிபுணர் கணக்காக ஆராய்ந்து கொண்டிருந்தான்.
“என்னடா செஞ்சிட்டிருக்க,” பொறியில் அகப்பட்ட எலிபோல, ஷோகேஸின் இடுக்கில் தலையை விட்டுக்கொண்டிருந்தவனின் பின்முதுகில் தட்டினான் தருண்.
“உன் க்ளாஸ்மேட்ஸ் எங்க கல்யாணத்துக்குத் தந்த கிஃப்ட்,” தொடங்கியவன், பரிசுப்பொருள் பற்றி தனக்குத் தெரிந்தவற்றை கூற,
“ஓ! பிரதாபும் கேங்கும் கொடுத்த பரிசா!” கண்டுகொண்டவன், “இங்க தேடினா எப்படிக் கிடைக்கும்? என்னோட வா,” அவன் இழுக்க,
“என்னன்னு சொல்லாத! நானே கண்டுபிடிக்கணும்,” தடுத்தான் ஷ்ரவன்.
“ஹான்….” தருண் முழிக்க,
அலுவலகத்தில் மனையாளுடன் பேசிக்கொண்டதை ஒன்று விடாமல் சொல்ல வேண்டியதாயிற்று.
“நல்லா ரீக்ரியேட் பண்ணறிங்கடா,” நக்கல் செய்த தருண்,
“கிரிக்கெட் மேட்ச் ஆரம்பிக்கப்போகுது. நீ அப்புறம் தேடு,” எனத் தொலைக்காட்சியை உயிர்ப்பித்தான்.
“எட்டுமணி ஆயிடுச்சா?” பதறியவன், வாசலுக்குப் பறந்தான்.
அரைமணி நேரத்தில் பால்கோவாவுடன் வந்தவனை ஏற இறக்கப் பார்த்தனர் மொத்த குடும்பத்தினரும்.
மறுநாளும் அதே உற்சாகத்துடன் வலம் வந்தான் ஷ்ரவன். புத்தாடையும், குறுக்கெழுத்துப் புத்தகத்தையும் தவிர மற்ற வழக்கங்களை ஒன்றுவிடாமல் செய்தனர். மாலையில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலுக்கு வந்த குடும்பத்தினர், ஜோடி ஜோடியாகப் பிரகாரத்தைச் சுற்றி வந்தனர்.
ஷ்ரவனின் கைகளில் சவாரி செய்துகொண்டிருந்த அவர்கள் வீட்டின் தாரகை, தன்னிடம் வரச்சொல்லி ஆசையாகக் கைநீட்டி கெஞ்சி அழைத்துக்கொண்டிருக்கும் ரம்யாவிடம் போகாமல் போக்குக் காட்டிக்கொண்டிருந்தாள்.
குழந்தையிடம் தோற்றுப்போய் சிணுங்கும் மனையாளை கேலி செய்து சிரித்துக்கொண்டிருந்தான் ஷ்ரவன்.
இருவரின் பரிபாஷைகளைக் கண்டு வாயைப்பிளந்தாள் உத்ரா.
“ஏதோ புயல் சுனாமின்னு பயமுறுத்தின. புயல், டேக் டைவர்ஷ்ன்னு இருக்குமிடம் தெரியாமல் கடல்ல… இல்ல இல்ல காதல்ல கலந்திருச்சு பாரு,” சிரிப்பில் சங்கமித்திருக்கும் ஜோடியைச் சுட்டிகாட்டினாள்.
“புயலும் சுனாமியும் சேர்ந்து பூகம்பம் வெடிக்கப்போகுது,” அவர்களை பார்த்த வண்ணம் பேசினான் தருண்.
“உனக்குத்தான் எல்லாமே தெரியும்ன்ற மாதிரி பேசாதேடா. அவங்க கண்டிப்பா சமாதானமாயிட்டாங்க. காலையிலேந்து கல்யாண நாள்ள எத்தனை சந்தோஷமா கொண்டாடுறாங்கன்னு பாரு,” என அவன் புஜத்தில் கிள்ளினாள்.
சொன்னால் புரியாது என நினைத்தவன் அமைதிகாத்தான்.
தொடர்ந்து வந்த நாட்களிலும் இருவருக்கிடையே நிலவிய பரஸ்பரத்தைக் கண்டு நெகிழ்ந்தாள் உத்ரா. குழந்தையும் ரம்யாவிடம் ஒட்டிக்கொள்ள, நல்ல சகுணமாகத் தோன்றியது அவளுக்கு. ஆனால் தோழியின் வைராக்கியம் பற்றி அறிந்திருந்த தருணோ, அவையாவும் கண்துடைப்பு நாடகங்களே எனத் தீர்மானமாக இருந்தான்.
அன்றோடு ஷ்ரவன் அலுவலகம் வந்து இரண்டு வாரங்கள் பூர்த்தியாகி இருந்தது. அவளை அம்மா வீட்டிற்கு அனுப்ப தோதான காரணங்கள் கிடைக்காமல் திண்டாடிக் கொண்டிருந்தான்.
எந்நேரமும் எரிமலையாக வெடிக்கப் போகிறாள் என்ற எதிர்பார்ப்புடனே கண்விழித்தான்.
வசிப்பறைக்குச் செல்வதற்கு முன் வாய்தா வாங்குவது நல்லது என எண்ணியவன்,
“உன்னை ஏமாத்தணும்னு இல்ல ரம்யா. உண்மையிலேயே அம்மா அப்பாகிட்ட என்ன காரணம் சொல்றதுன்னு தெரியல. நீயே ஏதாவது யோசனை சொல்லேன்,” பல்துலக்கிவிட்டு வந்தவளை குளியலறை வாசலிலேயே மடக்கி, பொறுப்பையும் அவளிடமே ஒப்படைத்தான்.
அவளுக்கும் அதுதானே சவாலாகப்பட்டது. அம்மா வீட்டிற்குச் செல் எனக் கழுத்தைப் பிடித்துத் தள்ளினாலும் போகாத ரகம் அவள்.
“எனக்கும் எதுவும் தோணல. பார்ப்போம்; இன்னும் ஒரு வாரம் ஆனாலும் நிதானமா யோசிச்சு தகுந்த காரணம் சொல்லுங்க,” அவள் தழைந்துபோக,
“ஒரு வாரத்துக்கு அப்புறமும் எந்தக் காரணமும் கிடைக்கலேனா,” தாளாத சந்தோஷத்தில் குறும்பு செய்தான்.
வெட்டும் பார்வையைப் பதிலாகத் தந்துவிட்டு நகர்ந்தாள் பாவை.
தேர்வு ஒத்திப்போன அறிவிப்பை அறிந்த மாணவன் போல உள்ளுக்குள் சிலர்த்துக்கொண்டிருந்தவனுக்கோ அது எல்லாம் ஒரு பொருட்டாகவே இல்லை.
வெற்றிப் புன்னகையுடன் குளியலறைக்குள் புகுந்தான்.
அலுவலகம் வந்த பிறகும் பெண்மான் இடைவெளி கடைப்பிடிப்பதை உணரவே செய்தான் ஷ்ரவன். பேசாமல் இருப்பதே நல்லது என அவன் வேலையில் மூழ்க, கதவு தட்டும் சத்தத்தில் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
“உள்ளே வாங்க,” ஷ்ரவன் குரல் கொடுக்க, புன்னகை முகமாய் அவர்களை நோக்கி நடந்தார் குருமூர்த்தி.
தந்தை காலத்திலிருந்து நிறுவனத்தில் பணியாற்றி வரும் கைதேர்ந்த மனிதர் அவர்.
“வாங்க அங்கிள்,” என மரியாதை செலுத்தும் விதமாக இருவரும் எழுந்து நின்றனர்.
“என் மூணாவது பொண்ணு வசுமதிக்கு அடுத்த மாசம் இருபதாம் தேதி கல்யாணம் நிச்சயமாகிருக்கு. நீங்க ரெண்டு பேரும் அவசியம் வரணும்,” அன்பு ததும்ப அழைப்பிதழை நீட்டினார்.
இருவரும் ஒன்றுசேர பெற்றுக்கொண்டு அவரையும் அமரச்சொல்லி பணிவன்புடன் கேட்டுக்கொண்டனர்.
“கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு,” ரம்யா கூற,
பத்திரைக்கையில் கண்களைச் சுழலவிட்டுக் கொண்டிருந்த ஷ்ரவன்,
“நாட்கள் எவ்வளவு வேகமா நகருது அங்கிள். வசுமதி, டுவெல்த்ல ஸ்டேட் ஃப்ர்ஸ் வந்தது நேத்து நடந்தா மாதிரி இருக்கு. ஆனால் அதுக்குள்ள டபுள் டிகிரி முடிச்சு ரிசர்ச் சைன்டிஸ்ட்டா நல்ல பொசிஷன்ல வேலை செஞ்சுட்டு, இப்போ கல்யாணமும் ஆகப்போகுது,” பூரித்தான் ஷ்ரவன்.
“அட! டுவெல்த் ஸ்டேட் ஃப்ர்ஸ்ட் வந்தத இன்னும் மறக்காம சொல்றியே,” நெகிழ்ந்தார் குருமூர்த்தி.
“எப்படி மறப்பேன் அங்கிள்! அவ கையாலே செஞ்சு எடுத்துட்டு வந்த லட்டோட டேஸ்ட் கூட மறக்கல,” தன் நினைவாற்றலைப் பற்றி பெருமையடித்துக் கொண்டிருந்தவன், தன்னையே ஏறிட்டுக் கொண்டிருக்கும் ரம்யாவைப் பார்க்க மறந்தான்.
“உனக்கு அபாரமான ஞாபகசக்தி ஷ்ரவன்,” அவர் மெச்சிய போதுதான் அவனுக்கு உரைத்தது.
முகத்தில் அசடுவழிய ரம்யாவை நோக்கினான்.
‘என்னைத் தவிர மத்தவங்க எல்லாரையும் நியாபகம் வச்சிருக்கீங்க,’ அவள் கருவிழிகள் அவனைச் சுட்டெரித்தது.
திடுக்கிட்டு குருமூர்த்தி பக்கம் தலையைத் திருப்பியவன், “அப்புறம், மாப்பிள்ளை டாக்டர் போல; எந்த ஊரு,” லாவகமாய் பேச்சை திசைதிருப்பினான்.
அந்தக் கேள்வியே அவன் வாழ்க்கை பாதையையும் திசைதிருப்பும் வில்லங்கமானது.
ஆம் என்றவர், “கேட்க மறந்துட்டேன் ரம்யா. அம்மாக்கு இப்போ உடம்புக்கு எப்படி இருக்கு,” அக்கறையாக விசாரித்தார்.
‘அம்மாவுக்கா! என்ன உடம்பு! பேசி நாலுநாள் ஆச்சே!’ மண்டைக்குள் ஆராய்ந்தவள் விடை தெரியாமல் முழிக்க, அவரே எடுத்துக்கொடுத்தார்.
“எனக்கு எப்படித் தெரியும்னு யோசிக்கிறியா மா. என் வருங்கால மாப்பிள்ளை கிட்ட தான் கன்சல்டேஷன்க்கு வந்திருந்தாங்க. கல்யாண விஷயமா பேச நானும் அங்க போயிருந்தேன்,” விளக்கினார்.
அம்மாவிடம் பிறகு பேசிக் கேட்டுக்கொள்ளலாம் என நினைத்தவள், “ஓ அப்படியா அங்கிள். இப்ப பரவாயில்லன்னு சொன்னாங்க,” எனச் சமாளித்தாள்.
“வைரல் ஃபீவர் விட்டுவிட்டு வரும்; நல்லா ரெஸ்ட் எடுத்துக்கச் சொல்லுமா,” அக்கறையாகப் பேசினார்.
மேலும் சில நிமிடங்கள் பேசிவிட்டு அவர் புறப்பட, அம்மாவை அழைத்தாள் ரம்யா.
“சாதாரண ஜுரம் தான்டி. ரெண்டு நாள் ரெஸ்ட் எடுத்துட்டா சரியா போயிடும். நீ கவலைப்படாதே,” என்றவர் புகுந்த வீட்டினரைப் பற்றி நலன்விசாரித்து அழைப்பைத் துண்டித்தார்.
அன்னையுடன் பேசி முடித்தவள் சர்வசாதாரணமாக அலுவலக வேலைக்குத் திரும்ப, அவளைப் பிரமிப்பாய் பார்த்தான் ஷ்ரவன்.
பிறந்த வீட்டிற்குச் செல்லத் துடிதுடிப்பவள், தகுந்த காரணம் கிடைத்தும் அமைதியாக இருக்கிறாளே என வியந்தான்.
தன்னைப் பிரிந்து செல்ல மனமில்லையோ எனக் காதல் தலைக்கேறியது. தான் முன்வந்து கேட்கவேண்டும் என எதிர்பார்க்கிறாளோ என்றும் கூட உறுத்தியது.
கண்டும் காணாமலும் இருக்கவும் முடியாமல் ஊசலாடிக் கொண்டிருந்தான். நம்பி காத்திருப்பவளைக் காக்கவைப்பது அழகு அல்ல எனத் தெளிந்தவன்,
“இதுதான் சூப்பர் சான்ஸ் ரம்யா, நீ உங்க வீட்டுக்குப்போக,” எனத் தொடங்கினான்.
“உடம்புக்கு ஒண்ணுமில்ல; பார்க்கக் கூட வரவேண்டாம்னு சொல்றவங்க தங்க அனுமதிப்பாங்களா,” அன்னையிடம் பேசியதை பகிர்ந்தாள்.
“அவங்க அப்படித்தான் சொல்லுவாங்க ரம்யா. அதுக்காக அப்படியே விட்டுட முடியுமா,” சுட்டிக்காட்டினான்.
“ம்ப்ச்.. அப்படியே போய் தங்கினாலும் ரெண்டு நாளுல துரத்திவிட்டுடுவாங்க ஷ்ரவன். வேற ஏதாவது ஸ்ட்ராங்க் ரீசன் யோசிக்கலாம்,” அவள் சலித்துக்கொள்ள,
பிரிந்து செல்லவதில் தீர்மானமாக இருக்கிறாள் என உணர்ந்தவனுக்கு மனம் வலித்தது.
“முதல்ல இந்த வீக்கென்ட் போய் தங்கு ரம்யா. அதுக்குள்ள வேற ஏதாவது சாக்குச்சொல்லி உன்னை அங்கேயே தங்க வைக்கிறது என் பொறுப்பு,” கனத்த மனத்துடன் உரைத்தான்.
இதே நாடகத்தை வீட்டிற்கு வந்து அரங்கேற்றினர்.
“ரெண்டு நாளுல வந்துடறேன் ‘ம்மா,” என்ற மருமகளின் கன்னத்தில் வருடி, ஆமோதிப்பாய் தலையசைத்தார் திலகா.
“அவளை விட்டுட்டு வந்துடறேன்,” ஷ்ரவன் கூற,
“வீகெண்ட் தானேடா. நீயும் அவளோட தங்கிட்டு வாயேன்,” யோசனை சொன்னார் தாமோதரன்.
“இல்லப்பா! புது பிராஜ்க்ட் வேலை நிறைய இருக்கு. தேவைப்பட்டால் ஆபீஸுக்குக் கூடப் போயிட்டு வர வேண்டியிருக்கும்,” சாக்குகளை அடுக்கி அவர் வாயடைத்தான் ஷ்ரவன்.
விரூபாவின் நெற்றியில் முத்தமிட்டவள், நண்பனின் நேர்கொண்ட பார்வையை எதிர்கொள்ள முடியாமல்,
“போயிட்டு வரேன்,” என உத்ராவிடம் மெல்லியக் குரலில் உரைத்துப் புறப்பட்டாள்.
சாலையில் கலந்த வண்டியை கண்ணுக்கெட்டும் தூரம் வரை பார்த்து நின்ற தருண், “பூகம்பம் வெடிக்கும் நேரம் வந்தாச்சு உத்ரா,” என மனமுடைந்தான்.
அன்புறவாட விழைகிறேன்; அகன்று செல்கிறாய்;
அனுசரணை பழகுகிறேன்; ஆதங்கப் படுகிறாய்;
அவகாசம் கேட்கிறேன்; அவசரப் படுத்துகிறாய்;
அமைதியைத் தழுவிகிறேன்; ஆவேசம் கொள்கிறாய்;
அன்னமே! உன் மனத்தை அலைக்கழிக்கும்,
அந்த நெருடல்தான் என்னவோ- விடை தேடுகிறேன்
அனைத்துமானவளே! நிழலாடும் நின் நினைவில்…
