அழைக்காமலே ரம்யாவின் மனநிலையைத் தெரிந்துகொள்ள தன்னிடம் வழி உள்ளது என்றவள், ‘டயாப்பர் வாங்கி அனுப்பினதுக்கு தாங்க்ஸ் ‘க்கா,’ எனக் குறுஞ்செய்தியைத் தட்டிவிட்டாள்.
Advertisement
மறுமுனையில் அதைப் படித்தவளோ, தன்னவன் பத்திரமாக வீட்டிற்குச் சென்றுவிட்டான் என்ற மறைமுக செய்தியை உணர, பனித்த கண்களுடன் கடவுளுக்கு நன்றி உரைத்து, உத்ராவிற்குப் பதில் அனுப்பினாள்.
நொடிகளில் வந்த பதிலில் நிம்மதியுற்ற ஜோடியும் லேசான மனத்துடன் உறங்கச் சென்றனர்.
கனமழையும் மின்வெட்டும் இரவு முழுவதும் நீடிக்க, வசிப்பறையின் சோஃபாவிலேயே படுத்துக்கொண்ட ரம்யா உறக்கம் இல்லாமல் தவித்தாள்.
Advertisement
இப்படியும் அப்படியும் புரண்டு தவித்தவள் அதிகாலை நான்கு மணியளவில் கண்ணசரவும், மின்சாரம் மீண்டு அவள் துயிலைக் கலைக்கவும் சரியாக இருந்தது.
ஷ்ரவனிடமிருந்து அழைப்போ குறுஞ்செய்தியோ வந்திருக்கிறாதா என்ற நப்பாசையில் அலைபேசியை உயிர்ப்பித்தாள். வெற்றுத்திரை அவளைப் பார்த்து இளித்தது.
கனத்த மனத்தோடு குளித்து முடித்து வந்தவள், பூஜை அறையைச் சுத்தம் செய்து சோமவார விரதத்திற்கான நிவேதனங்களைச் செய்ய அடுப்படிக்குள் நுழைந்தாள்.
பழங்களை வெட்டியபடி பால் காய்ச்சிக் கொண்டிருந்தவளின் சிந்தனை மட்டும் தன்னவனையே தழுவி இருந்தது.
கல்லூரியில் சேர்ந்த அன்று எதிர்பாராத விதமாக கணவன் கைகோத்து ஈஸ்வரனை தரிசித்ததில் துளிர்விட்ட அவா. பார்வதி தேவி சிவபெருமானை மணக்க வேண்டி கடைப்பிடித்த விரதம் என விரதத்தின் மகிமையை அறிந்திருந்தவள், தன்னுடைய ஷ்ரவனும் நினைவுகள் திரும்பி தன்னிடம் வந்துவிட வேண்டுமென்ற பிரார்த்தனைகளுடன் அடுத்து வந்த திங்கட்கிழமை அன்றே பூஜையைத் துவங்கியிருந்தாள்.
முன்தினம் தன்னைத் தேடி திரையரங்கத்திற்கு ஓடிவந்தவன், குணமாகிவிட்டான் என்றே ஒரு கணம் நம்பிவிட்டாள். இல்லை என்ற நிதர்சனம் மண்டையில் உரைக்க, ஏமாற்றம் கோபமாய் உருமாறியிருந்தது.
சோதனைகளும் கஷ்டங்களும் நம் மனவுறுதிக்கான பரிட்சை என்ற தத்துவத்தை நினைவுகூர்ந்தவளுக்குக் கண்ணெதிரே பொங்கி வரும் பாலின் வெளுமையான தோற்றத்தைக் கண்டதும் தீர்வு கிடைத்தது.
தன்னவனுக்கு மிகவும் பிடித்த பால்பாயசத்தையே அன்றைய பூஜைக்கு நிவேதனம் செய்யத் தீர்மானித்தவள், அகம் மகிழ்ந்து ஈஸ்வரனை வழிபட்டாள்.
விடிந்தும் விடியாத காலைப் பொழுதில் வாசலில் வந்து நிற்கும் ரம்யாவைக் கண்ட உத்ரா பேரதிர்வில் உறைந்து நின்றாள். அசடுவழிய வீட்டிற்குள் நுழைந்தவளின் முகம் நொடியில் மாறியது. வெகுநாட்களுக்குப் பிறகுக் கண்களுக்கும் நாசிகளுக்கும் விருந்தான புகுந்த வீட்டின் காட்சியும் வாசமும் அவளை இனம்புரியாத உணர்வுகளில் கட்டிப்போட்டன.
நடு ஹாலில் சிலையாக நிற்கும் ரம்யாவிடம், “நேத்து ராத்திரியே வந்திருக்கலாம்ல,” கேட்டு அவள் தோளினை உலுக்கினாள் உத்ரா.
மென்சிரிப்புடன், வயர் கூடையை மேஜை மேல் வைத்தவளின் விழிகள், தன்னவனைத் தேடி அலைபாய்ந்தது.
பெண்களின் பேச்சு சத்தம் கேட்டு கீழே இறங்கி வந்தது என்னமோ தருணும் அவன் செல்ல மகளும்தான்.
புன்னகை முகமாய் விரூபாவின் தலைகோதி முத்தமிட்ட ரம்யா, குழந்தையின் நெற்றியில் திருநீறு பூசி, அவள் கண்களில் விழாதவாறு கைவிரல்களை குழந்தையின் புருவங்கள் மேல் பரப்பி ஊதிவிட்டாள்.
பெரியம்மா ஏதோ விளையாட்டுக் காட்டுவதுபோல பொக்கை வாய் விரிய கிளுகிளுத்தாள் விரூபா.
தனக்கும் அதேமாதிரி திருநீறு இட்டுவிடச் சொல்லி தலைசாய்த்தான் தருண்.
“முதல்ல குளிச்சிட்டு வாடா,” ரம்யா அவனை விரட்ட, கூடையிலிருந்த பூஜைப் பொருட்களை ஆராய்ந்த உத்ரா, வெண்கல தூக்கில் ஏலக்காய் மணக்கும் பால்பாயசத்தைக் கண்டதும்,
“வாவ்! இன்னைக்கு என்ன ஸ்பெஷல் அக்கா?” எனத் துள்ளினாள்.
பதில்சொல்ல முடியாமல் ரம்யா திருதிருவென முழிக்க, “வேண்டுதலா?” எனத் தோழியை ஏறிட்டான் தருண்.
அவளும் ஆம் என்று மட்டும் தலையசைக்க, அவள் வழக்கத்தை நினைவுகூர்ந்த உத்ரா, “சரி! சரி! வேண்டுதல் முடிஞ்சதுமே பதில் சொல்லுங்க. ஆனால் பூஜைக்கு என்ன ஸ்வீட் பண்ணாலும் கொண்டு வந்துடணும்,” என்றாள்.
தருணின் கை வளைவிலிருந்த விரூபா திடீரென இறங்கிக்கொள்ள பரபரத்ததும், குழந்தை பார்க்கும் திசையில் கணவனின் தரிசனத்தைப் பெற்றாள் மங்கை.
சந்தோஷம், பயம், தயக்கம் என உணர்ச்சிகளின் பிடியில் அவள் தத்தளிக்க,
“பக்திப்பழம் பொண்டாட்டி வரது தெரிஞ்சு சீக்கிரமே குளிச்சிட்டியாடா,” நீல நிற முழுக்கைச் சட்டையும் அடர்சாம்பல் நிற பேன்டுமெனத் தயாராகி வந்து நிற்பவனைக் கண்டதும் கலாய்த்தான் தருண்.
ஷ்ரவன் முறைக்கும் விதத்திலேயே அவன் கோபம் துளியும் குறையவில்லை எனப் புரிந்துகொண்டாள் ரம்யா.
“இதுதான் நீ சொன்ன முக்கிய காரணமா?” அழுத்தமான குரலில் கேட்டான்.
வாய்விட்டுச் சொன்னால் வேண்டுதல் பலிக்காதே எனத் தயங்கியவளுக்கு வாய்திறந்து பேசாவிட்டாலும் பிரச்சனை எனத் தோன்ற, “அது… அது…” எனத் தடுமாறினாள்.
“பூஜையை இந்த வீட்டுல செஞ்சா உன் சாமி ஏத்துக்காதா?” நாத்திகன் கணக்காய் அவன் பேச, வெகுநேரமாக இங்குதான் நின்றிருக்கிறான் என உணர்ந்தாள்.
“அப்படிப்பட்ட விரதமே எனக்கு வேண்டாம்;” கர்ஜித்தவன் வந்த வழியே மாடியேறினான்.
‘நீயும் எனக்கு வேண்டாம்!’ என்றும் சொல்லத் தோன்றியது அவனுக்கு. ஆனால் ஏதோவொரு சக்தி அவனைக் கட்டிப்போட்டது.
இத்தனை வருடங்களில் ஒருநாளும் தங்கள் மனஸ்தாபங்களை மற்றவர்கள் முன் காட்டியதே இல்லையே என வருந்தியவள், ஷ்ரவனின் இந்தப் புது அவதாரத்தில் கூனிக்குறுகிப் போனாள். எத்தனை முயன்றும் குபுகுபுவென்று வழிந்தோடிய கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. வாசலை நோக்கி நடந்தாள்.
தோழியின் முடிவில் அதிருப்தி கொண்ட தருண், “மாடிக்குப்போ!” தீர்மானக் குரலில் உரைத்தான்.
மனையாளின் உருவத்தைக் கண்டதுமே, “உன்னுடைய எந்த விளக்கத்தையும் கேட்க நான் தயாரா இல்ல,” என விரட்டினான்.
“நானும் எந்த விளக்கமும் கொடுக்க வரல ஷ்ரவன், ” என்றபடி அவனருகே நெருங்கி வந்தவள், “நீங்க கேட்டது நியாம்தான்னு உங்க கேள்விக்குப் பதில்சொல்லிட்டுப் போக வந்தேன்,” என்றாள் மனம் தெளிந்து.
மன்னிக்கச் சொல்லி அவன் மனம் தூண்ட, நாள்முழுக்க அலையவிட்டதை அதற்குள் மறந்துவிட்டாயா எனப் புத்தி உசுப்பேற்றியது.
மேஜையைக் கடந்து வந்தவளின் கவனத்தை ஈர்த்தன இரண்டு 5ஸ்டார் சாக்லேட் பார்கள்.
‘பை டுகெட் ஒன் ஃப்ரீ ஆஃபர் போட்டதே எனக்காகத்தான் போல,’ விரக்திப் புன்னகை உதிர்த்து, தோள்பையில் வைத்திருந்த மூன்றாவது சாக்லேட்டையும் அதன் பக்கத்தில் வைத்து நகர்ந்தாள்.
‘சரியான லூஸா இருப்பாப்போல! இன்ஸ்டால்மென்ட்ல இத்தனை சாக்லேட் தந்துட்டு இருக்குறா. இவ சாக்லேட் தந்ததும், ‘ஐ லவ் யூ ரம்யா மிஸ்ன்னு’ பல் இளிச்சிட்டு அவ பின்னாடியே வால்மாதிரி போக நான் என்ன சின்ன குழந்தையா,’ திட்டியபடி அலுவலகம் புறப்பட தயாரானான்.
போன வேகத்தில் திரும்பிய தோழியைக் கண்ட தருண், “இவனுக்கு என்ன அத்தனை கோபம்,” ஆவேசம் பொங்க மாடியேறினான்.
“நில்லுடா!” என அவன் கையைப் பிடித்துத் தடுத்த ரம்யா, “சொல்ல வேண்டியத சொல்லிட்டேன். யோசிக்க கொஞ்சம் டைம் கொடுக்கலாம்,” என்றாள்.
கலங்கிய நீர் தெளிவடைய காத்திருக்கத்தானே வேண்டுமென அவனும் அமைதியானான்.
ஆனால் அது சீண்டுவார் இல்லாமல் இருந்ததில், தம்பதிகளுக்குள் மனஸ்தாபம் என்றும் உணர்ந்துகொண்டார். உத்ராவை மடக்கி அனைத்தையும் அறிந்துகொண்டவர், ஷ்ரவன் வீட்டிற்கு வர காத்திருந்தார்.
மாலையில் வீடு திரும்பியவன் நேராகத் தன் அறைக்குச் சென்றான். வழக்கமான் தினப்படி உடைகளை அணியாமல், பிஸ்தா நிற டீஷர்ட்டும் ஜீன்ஸுமாகத் தயாராகி வர, ரம்யாவைச் சந்திக்கப் புறப்படுகிறான் என மகிழ்ந்தார் அன்னை.
ஆனால் அவனோ, பொம்மைகளுடன் பொம்மையாகப் பாயில் ஐக்கியமாகிருந்த விரூபா அருகில் அமர்ந்து விளையாடத் தொடங்கவும், யோசனையாக நின்றார்.
“மழை வரமாதிரி இருக்கு ‘ண்ணா; நான் மாடிக்குப்போய் துணி எடுத்துட்டு வந்துடறேன்,” உத்ரா எழுந்துகொள்ள,
“வேற ஏதாவது வேலை இருந்தாலும் முடிச்சிட்டு வா. நான் இந்த ரவுடியோட விளையாடிட்டு இருக்கேன்,” சொல்லிக்கொண்டே கண்ணாலேயே சிரித்து மயக்கும் தாரகையைத் தூக்கி அவள் கழுத்தில் முகம் புதைத்து கிச்சுகிக்சு மூட்டினான்.
கலகலத்துச் சிரித்த குழந்தையும் அவன் தலைமுடியைக் கொத்தாய்ப் பிடித்து விளையாட, மென்னகையுடன் மாடியேறினாள் உத்ரா.
வசிப்பறைக்கு யோசனயாக நடந்தார் திலகா. அன்னையைக் கண்டதும் அவர்கள் பயணத்தைப் பற்றி விசாரித்த ஷ்ரவன்,
“நம்ம மேனேஜர் ரகுநாதன் அவர் பையன் காலேஜ் விஷயமா பேச ஆறு மணியளவில் வரேன்னு சொல்லிருக்காரு ‘ம்மா,” பேச்சோடு பேச்சாகக் கூறினான்.
‘இதுதான் இவன் டிப்டாப்பாகத் தயாராகி வந்ததற்குக் காரணமா,’ கணக்கிட்டவர், சரியென்று தலையசைத்து சமையலறைக்குள் சென்றார்.
ஐந்து நிமிடங்களில் சுடச்சுட பால்பாயசம் எடுத்துவந்தவர், “இதை முதல்ல குடி. அவங்க வந்ததும் எல்லாருக்கும் சேர்த்து காபி போடுறேன்,” என்றார்.
அம்மா தங்கள் சண்டையைப்பற்றி எந்தளவிற்கு அறிந்திருப்பார் எனத் தெரியாத நிலையில், பாயசம் வேண்டாமென மட்டும் மறுத்தான்.
“ரம்யா உனக்காக விரதமிருந்து பூஜை செய்யறாடா. அடம்பிடிக்காம குடி,” திலகா கூற, அன்னைக்குச் சாவி கொடுப்பது யார் எனப் புரிந்துகொண்டான்.
“முதல்ல அவகிட்ட என்னை ஒரு மனுஷனா மதிச்சு என் மனச நோகடிக்காம இருக்கச்சொல்லு; அப்புறம் எனக்காக விரதம் இருக்கட்டும்,” ஏளனமாகப் பேச,
“உன்னோட வரக்கூடாதுன்னு இல்லடா. எந்த வீட்டுல விரதத்தைத் தொடங்குறாளோ அங்கேயே தொடர்ந்து செய்யறதுதான் அவ வழக்கம்,” விளக்கினார் திலகா.
“அதை என்கிட்ட வாய்திறந்து சொல்லிருக்கலாம்ல. முக்கியமான வேலைன்னு ஏன் பூசிமெழுகணும்,” சுட்டிக்காட்டினான்.
“வாய்விட்டுச் சொன்னால் விரதம் பலிக்காதுன்றது அவ நம்பிக்கை,” திலகா பதிலுக்குப் பதில் பேச,
எதையும் கேட்கும் மனநிலையில் இல்லாதவன், “அவ செய்யற எல்லாத்துக்கும் நீ இப்படிச் சப்பைக்கட்டு கட்டுறதுனாலதான் அவ இஷ்டப்படி ஆடுறா. என் ஃபீல்ங்க்ஸ்க்கு கொஞ்சம் கூட மதிப்புக் கொடுக்கிறதில்ல,” நொந்து பேசினான்.
“பால்பாயசத்தைக் குடிச்சுப் பார்த்தா தானே அவ உன் ஃபீலிங்க்ஸ்க்கு எந்தளவுக்கு மதிப்பு கொடுக்குறான்னு தெரியும்,” மகனுக்கு இணையாக எகிறினார்.
“அவசியமில்ல! அதை என் கண்ணு முன்னாடி வச்சு எரிச்சலைக் கிளப்பாதே!” அவன் தீர்க்கமாக மறுக்கவும், தருண் அலுவலகத்தில் இருந்து வரவும் சரியாக இருந்தது.
தூக்கிக்கொள்ளச் சொல்லி தவழ்ந்து வந்த மகளிடன், “அப்பா குளிச்சிட்டு வந்துடறேன் பாப்பு. அதுவரைக்கும் பெரியப்பாவோட விளையாடு,” என சைகை காட்ட, உறுமிக்கொண்டிருந்த ஷ்ரவனை ஏற இறக்க பார்த்தாள் குழந்தை.
உதட்டில் ஒட்டிக்கொண்ட புன்னகையுடன் குழந்தையிடம் வரச் சொல்லி கை நீட்டினான் ஷ்ரவன்.
நால்வருமாக மகிழ்ந்து புசித்தனர். கண்ணால் பார்த்ததிலேயே மனையாளின் நேசத்தை உணர்ந்தவன், அதை சுவைத்ததும் அவளது அளவுகடந்த காதலை உணர்ந்தான்.
“பூஜைக்குப் பாசுமதி அரிசில செஞ்சிருக்கா,” மெல்லிய குரலில் அன்னையிடம் வினவினான்.
வழிபடும்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் என திலகா விதிக்கும் நூற்றுக்கணக்கான தடைகளில் ஒன்று, விசேஷ நாட்களில் பச்சரிசி தவிர வேறெதையும் உபயோகிக்கக்கூடாது என்பது. மற்றொன்று, செயல்முறைக்குள்ளாக்கப் பட்டிருக்கும் உணவுப் பொருட்களை அரவே தொடக்கூடாது என்பதும்.
வீட்டில், அதுவும் சாதாரண நாட்களில் பாசுமதி அரிசியும், கண்டென்ஸ்ட் மில்க்கும் சேர்த்து பால்பாயசம் செய்து வந்தது ஷ்ரவன் மட்டும்தான்.
அன்னையின் கண்டிப்புகளை மீறி, அதுவும் தன்னைப்போலவே செய்திருக்கிறாளே என வியந்தவன் அன்னையை நோக்க,
“இப்ப புரியுதா! என் மருமகளுக்கு இந்த உலகத்திலேயே புருஷனான உன் விருப்பம்தான் ஃப்ர்ஸ்ட்ன்னு,” எனச் சுட்டிக்காட்டினார்.
புரிகிறது என்றவன், 5ஸ்டாருக்குப் பின்னால் இருக்கும் காதலைப்பற்றி கேட்க,
சாக்லேட்டுகளை ரம்யா தந்த சூழ்நிலைகளை நினைவுகூர்ந்தவனின் முகம் புன்னகையில் விரிந்தது.
“சரி! இப்போ நான் அவள மன்னிச்சிட்டேன்னு வாய்விட்டுச் சொல்லணுமா, பிரிச்சுச் சாப்பிடணுமா இல்ல இதை அவகிட்டயே திருப்பித் தந்துடணுமா,” நமுட்டுச் சிரிப்புடன் வினவினான்.
“மூணு ஆப்ஷனுமே தப்பு ‘ண்ணா,” கிளுகிளுத்த உத்ரா, “நீ பாதி நான் பாதின்னு டூயட் பாடிட்டே சாப்பிடுவீங்க,” எனப் பாடியே காட்டினாள்.
குடும்பத்தினர் முன் இத்தனை வெளிப்படையாகவா பழகியிருக்கிறோம் என மலைப்பாய் இருந்தது அவனுக்கு.
கைக்கடிகாரத்தில் நேரம் பார்த்தவன், ரகுநாதனும் அவர் மகனும் வர கால்மணி நேரம் இருக்கிறது எனக் கவனித்து விறுவிறுவென மாடியேறினான்.
“வாசலுக்கு வழி இந்தப் பக்கம்,” உத்ராவின் கிண்டல் எல்லாம் அவன் செவிகளில் விழவே இல்லை.
மூன்றுமுறை அழைத்தும் பெண் எடுத்தபாடில்லை. கிடைத்த கால்மணி நேரமும் காத்திருப்பதற்கே சரியாகிப்போனது. அலைபேசியின் ஒலியை மொத்தமாய் குறைத்து அதை சார்ஜில் போட்டு மனமில்லாமல் கீழே இறங்கினான்.
விருந்தாளிகளுடன் இன்னொரு டம்ளர் பால்பாயசத்தை சலிக்காமல் பருகும் ஷ்ரவனின் போக்கில் வாயைப்பிளந்தாள் உத்ரா.
பாயசம் மிகவும் ருசியாக இருக்கிறது என ரகுநாதன் பாராட்டியதுதான் மிகப்பெரிய தவறு.
கட்டிடக்கலை பொறியியல் கல்லூரிப் பாடங்கள் பற்றி கொஞ்சமும், கண்டன்ஸ்ட் மில்க் சேர்த்து பால்பாயசம் செய்வது எப்படி எனச் சொற்பொழிவும் ஆற்றிய ஷ்ரவனை ஏற இறக்கப் பார்த்தான் அவர் மகன்.
“ஆபீஸுக்கு வா தம்பி. தியரிடிகலா எக்ஸ்ப்லைன் பண்ணறதவிட பிராக்டிகலா டெமோ கொடுக்கிறதுலதான் என் அண்ணன் எக்ஸ்பர்ட்,” என இடைபுகுந்து அண்ணனின் மானத்தைக் காப்பாற்றினான் தருண்.
அவர்கள் வாசற்படியைத் தாண்டியதும் மாடிக்கு ஓடியவன் அலைபேசியை எடுக்க,
‘ஸாரி! ஸாரி! ஸாரி! நான் ஃபோன் எடுக்காததுக்கு!’
‘நீங்க ஃபோன் செஞ்சப்ப நான் வண்டி ஓட்டிட்டு இருந்தேன். ஸாரி ஷ்ரவன்!’
“ப்ளீச் எனக்காக ஒரெவொரு முறை ஃபோன் எடுத்துப் பேசுங்களேன்!’
என எண்ணிலடங்கா குறுஞ்செய்திகளும் தவரிப்போன அழைப்புகளையும் கண்டவனின் முகம் பரவசத்தில் நிறைந்தது.
அவன் அழைப்பதற்குள் அவனே அழைத்திருந்தாள். அழைப்பு இணைந்த மறுகணமே, “ஸாரி ஸாரி ஸாரி ஷ்ரவன். வேணும்னே செய்யல. வண்டி ஓட்டிட்டு இருந்தேன்,” மூச்சுவிடாமல் படபடத்தான்.
“5ஸ்டார் தந்து மன்னிப்புக் கேட்டாதான் உன் சாரியை அக்செப்ட் பண்ணிப்பேன்,” அவன் குறுக்கிட,
“பிடிக்காமல் இருக்குமா,” என்றவன், தான் கற்றுக்கொடுத்த அதேமாதிரி அவள் செய்திருப்பதை மெச்சி, “ரம்யா! இந்த ரெசிபியை எனக்குக் கத்துக்கொடுத்தது யாருன்னு தெரியுமா,” தயங்கினான்.
“ஷர்மிலாதான்,” அவள் அலட்டலே இல்லாமல் கூறவும், ஆடிப்போனான் அவன்.
மறுமுனையில் மௌனம் நீடிக்க, “கடுகளவு கூட நீங்க உங்க முன்னாள் காதல்பற்றி எங்கிட்ட மறைச்சதில்ல ஷ்ரவன். அப்படியிருக்கும்போது, நீங்க விரும்பிச் சாப்பிடுற ஷீர் குருமா உட்பட மத்த ரம்ஜான் பண்டிகை இனிப்புகள் பற்றியும், அதை உங்களுக்குச் சொல்லித்தந்தது யாருன்றதும் எனக்குத் தெரியாமல் போகுமா,” அவள் கூற, இன்னும் பேச்சற்றுப் போனான்.
“உன் அன்பு புரியாம இந்த ரெண்டு நாளா உன்னை அந்நியாயத்துக்கு டார்ச்சர் பண்ணிட்டேன்.” மனமுருகினான்.
கேட்டவளுக்கும் பதில்சொன்னவனுக்கும் ஆயுள்வரை சேர்ந்துவாழ வேண்டுமென ஆசைப் பல்கிப் பெருகியபோதும், அதை வாய்விட்டுச் சொல்லத் துணிவு வரவில்லை. தடைகள் நீங்கி விரைவில் ஒன்றுசேரவேண்டும் என மானசீகமாகப் பிரார்த்தித்தனர்.