Skip to content
Post Views: 67
ரிதம் 27
காலம் மாறிவிட்டது, இப்போது அனைவரும் கண் விழிக்கும் உபகரணமாக அலைபேசி ஆகிவிட்டது.
Advertisement
இரவு எத்தனை மணி நேரம் ரிகர்சல் செய்தாலும், காலையில் விழித்துவிடும் பழக்கம் உடையவன் கௌதம்.
அன்றும் கண்களைத் தேய்த்துக்கொண்டே எழுந்தவன், தன் கண் எதிரே மாட்டப்பட்டிருந்த தாயின் புகைப்படத்தைப் பார்த்தான். மெல்லிய புன்னகையைச் சிந்திவிட்டு, டேபிளின் புறம் அவன் பார்வை திரும்பியது. அங்கு அலைபேசிக்கு மிக அருகில் இருந்த புகைப்படத்தைக் கையில் எடுத்தான். இளநகையுடன் அந்தப் புகைப்படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தவன்,
Advertisement
Advertisement
அதை எடுத்த இடத்தில் வைத்துவிட்டு, அதன் பிறகுதான் அவன் அலைபேசியை எடுத்தான். (பரவாயில்லை, மற்றவர்களை விட அவனுக்கு நல்ல பழக்கம்தான்!)
நோட்டிபிகேஷனில் பெயரில்லாத ஒரு எண்ணிலிருந்து குறுஞ்செய்தி வந்திருப்பதைக்காட்டியது. எப்போதும் போல அதைப் புறந்தள்ளியவன், அலைபேசியை வைத்துவிட்டுக் காலைக் கடன்களை முடித்துவிட்டு வந்தான்.
Advertisement
மீண்டும் அலைபேசியை எடுத்தபடி கட்டிலின் மீது அமர்ந்தவனுக்கு வாட்ஸப்பிலும் அதே எண் காட்டியது. புருவம் இடுங்க அந்தப் புகைப்படத்தை ஆராய்ந்து பார்த்தவனுக்கு, அது ராகினி என்று தெரிந்தது.
இதழ்களில் மெல்லிய புன்னகை படர, அவள் அனுப்பியிருந்த குறுஞ்செய்தியைப் பார்த்தான்.
‘சார், எழுந்துட்டீங்கன்னா எனக்குக் கால் பண்ணுங்க. ஒரு முக்கியமான விஷயம் பேசணும்’ என்று முதல் செய்தியிருந்தது.
அடுத்த செய்தியில், ‘நான் ராகினி’ என்றிருந்தது.
அதற்கும் அடுத்தடுத்த மூன்று செய்திகள், ‘எழுந்துட்டீங்களா? எழுந்துட்டீங்களா? எழுந்துட்டீங்களா?’ என்று.
‘என்ன ஆனது இந்தப் பெண்ணிற்கு?? முதலில் தன்னை ஆர்வமாகப் பார்த்தாள், பிறகு தன்னை ஆராயும் பார்வை பார்த்தாள். இப்பொழுது எதற்காக இத்தனை படபடப்பு?? இவள் எதையாவது சொல்லிவிடப் போகிறாள்?? அதற்கு முன்னால் தான் விழித்துக்கொள்ள வேண்டும்’ என்று சிந்தித்தவன்,
அலைபேசியை வைத்துவிட்டு அங்கேயே இருந்த சிறிய உடற்பயிற்சிக் கூடத்திற்குள் நுழைந்து வொர்க் அவுட் செய்ய ஆரம்பித்தான்.
சற்று நேரத்தில் அழைப்பு வந்திருக்க, அவனும் அந்த அறையிலிருந்து வெளியில் வந்து, கட்டிலின் அருகில் சென்று அதை எடுத்துப் பார்த்தான்.
ராகினியிடமிருந்துதான் அழைப்பு வந்திருந்தது. முதலில் பொறுமையாகப் பேசிக்கொள்ளலாம் என்று நினைத்தான். ஆனால் அவளே அழைத்துவிட்டதனால், அதை உதாசீனப்படுத்த மனமின்றி அட்டெண்ட் செய்தான்.
……….
“உன்னை இங்க வரச்சொன்னது நான். என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லணும்னு உனக்குத் தோணலையா?” அழுத்தமாகக் கேட்டான் கெளதம்.
அவளிடம் பதில் இல்லை.
“அந்தப் பாடலை எழுதினது நான், இசையமைச்சதும் நான். பாட வச்சதும் நான். அதனால உனக்கு ஒரு பிரச்சினைன்னா அதை ஹேண்டில் பண்ண எனக்குத் தெரியாதா?? இல்ல என்னை கையாலாகாதவன்னு நினைச்சுட்டியா?” அவ்வளவு ஆவேசமான கௌதமை அவள் இதுவரை பார்த்ததில்லை.
வார்த்தையில் இருந்த ஆக்ரோஷம், அவன் மூச்சுக்காற்று வழியாக அவள் முகத்தில் பட்டுத் தெரித்தது.
“இல்ல சார்” என்று அவள் தலையை ஆட்டினாள்.
“என்ன இல்ல?? நீ இங்க வரும்போது நீ என்னோட பொறுப்புன்னு உங்க அம்மாவுக்கும் இதோ உன் பிரண்டு, உன் அண்ணன் எல்லாருக்கும் வாக்கு கொடுத்திருக்கேன். மறந்துட்டியா?? மத்தவங்க எனக்கு எப்படியோ, அப்படித்தான் நீயும். ஆனா நீ எனக்கு ஒரு படி மேலதான். எல்லாரோட பாதுகாப்பும் என் கட்டுப்பாட்டுலதான் இருக்கு. அதுல உன்னுடையதும் சேர்த்துதான். மதுரைக்கு ஓடிட்டா இவங்க எல்லாம் சும்மா விட்டுடுவாங்கன்னு நினைச்சியா?? இங்கேயாவது உனக்குத் துணை புரியுறதுக்குக் கீழ ரமேஷோட குடும்பம் இருக்கு, ஒரு குரல் கொடுத்தா வர்றதுக்கு நான் இருக்கேன், அங்க உனக்கு யார் இருக்கா?”
அந்த வார்த்தை உண்மைதான் என்றாலும், அது அவளை வலிக்கச் செய்தது. நிதர்சனத்தை நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல உணர்த்தியிருந்தான்.
“வீடு புகுந்து உன்னைத் தூக்கிட்டுப் போனாங்கன்னா உங்களால யாராவது ஏதாவது பண்ண முடியுமா? வெளியில இருக்கிறவங்க எல்லாம் வந்து காப்பாத்துவாங்கன்னு நினைச்சியா?? இல்ல அவங்க அப்படிப் பண்ணக்கூடிய ஆளுங்க இல்லைன்னு நினைச்சியா??”
அவனுடைய தொடர்வண்டியான கேள்விகளுக்கு அவளிடம் பதில் இல்லை. இப்படியெல்லாம் கூடச் செய்வார்களா என்றுதான் தோன்றியது. ஆனால் செய்யக்கூடியவர்கள்தான் என்று அவன் கூறிக்கொண்டிருக்கிறானே??
“உங்களால் அவங்களைத் தடுக்க முடியுமா?? எங்க அக்காவைப் பாதுகாக்க முடியுமா?? எங்க குடும்பத்துக்குப் புரொடக்ஷன் கொடுக்க முடியுமா??” அவர்கள் இருவருக்கும் இடையே வந்து நின்று கேட்டாள் ராகினி.
அவள் பக்கம் திரும்பினான், அவளை ஆழமாகப் பார்த்தான். “கொடுக்க முடியும்ன்ற நம்பிக்கை உனக்கு இருந்ததாலதானே எனக்குக் கால் பண்ண?” என்று அதே அழுத்தத்துடன் கேட்டான்.
அவள் ‘ஆம்’ என்று மேலும் கீழும் தலையை ஆட்டினாள்.
“உனக்கு என் மேல இருந்த நம்பிக்கை, உன் அக்காவுக்கு இல்ல போல”? என்று நக்கலாகக் கூறிக்கொண்டே நத்தாஷாவைப் பார்த்தான்.
“இல்ல சார், என்னால உங்க யாருக்கும் பிரச்சினை வேணாம்னு நினைச்சேன். உங்களை நம்பி நிறையப் பேர் இருக்காங்க சார்.”
அவள் எதையோ கூற வர, தன் வலது கையை உயர்த்தி ‘போதும்’ என்ற ரீதியில் அவளை அழுத்தமாகப் பார்த்தான். அவள் வாய் கப்பென்று மூடியது.
“நீ என்ன நினைச்சியோ, என்ன பேசுனியோ எல்லாத்தையும் நான் கேட்டேன். நீ என்ன பேசுற, நீ என்ன நினைக்கிறேன்றது முக்கியம் இல்ல. நாங்க எல்லாம் என்ன நினைக்கிறோமென்றதுக்கும் நீ முக்கியத்துவம் கொடுக்கணும்.”
“வீட்டுல வாடகைக்கு இருக்கவங்களைக் காலி பண்ண வச்சு, அவங்க அப்பாவைக் காம்ப்ரமைஸ் பண்ணி, உன்னைக் கூட்டிட்டு வந்து இந்த வீட்ல வச்சிருக்காங்க. அவங்களுக்கு ஒரு மரியாதை கொடுக்கணும்னு உனக்குத் தோணல?”
“மதுரையில இருக்கிறது உன் வீடுதான். ஆனா நீ போனவுடனே உன்னை வீட்டுக்குள்ள அனுமதிச்சிருவாங்களா?? உடனே வீட்டுக்குள்ள போயிடுவியா?? அங்க வாடகைக்கு விட்டிருக்கிறவங்களை என்ன பண்ணுவ?? அவங்க காலி பண்றதுக்குக் குறைந்தது மூணு மாசம் டைம் கொடுக்கணும். அதுவரைக்கும் நடுத்தெருவுல நிப்பியா? இல்ல டெம்போலேயே தூங்கி எந்திரிப்பியா?” என்று கேட்டான்.
அதைப்பற்றி அவள் சிந்திக்கவில்லையே, இப்பொழுது கேட்கும்போதுதானே அவளுடைய தவறு புரிந்தது!
“எல்லாத்துக்கும் மேல உன் மேல நம்பிக்கை வச்சு, உன்னைப் பாட வச்சு, இந்த வருஷத்தோட ‘ஐகான் ஆஃப் தி இயரா’ உன்னைக் காட்டணும்னு நினைச்சுட்டிருக்க என் முகத்தில் கரியைப் பூசிட்டுப் போகணும்னு நினைக்கிறல்ல?” என்று அவன் கூற,
“இல்ல சார், கனவுல கூட நான் அப்படியெல்லாம் நினைக்க மாட்டேன்” என்று பரிதவித்தாள் நத்தாஷா.
“நீ பண்ணிட்டிருக்கிறதுக்குப்பேரு அதுதான் நத்தாஷா. பூவுன்னு இருந்தா வண்டுகள் தேடி வரத்தான் செய்யும்னு கேவலமான டயலாக் விட மாட்டேன். ஆனால் எதிர்த்து நிற்கத் தெரியணும். ஒரு ராகவுக்கு நீ ஓடிப்போனா, பல ஆயிரம் பேர் இதுபோல வந்து நிப்பாங்க. நீ உன்னையும் காப்பாத்திட்டு, உன் தங்கச்சியையும் காப்பாத்திட்டு, உங்க அம்மாவையும் புரொடெக்ட் பண்ணனும். உன்னால அது முடியும், எனக்கும் அது தெரியும். ஆனா எங்களோட நம்பிக்கையையெல்லாம் குழிதோண்டிப் புதைச்சுட்டுப் போகணும்னு நினைச்ச உன்னை நான் என்னைக்கும் மன்னிக்க மாட்டேன்.”
“அம்மா, டிரக்குல இருக்கிற சாமானையெல்லாம் வீட்டுல எடுத்து வைங்க. இந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்டிட்டு நான் வர்றேன்” என்றபடி அவள் கையைப் பிடித்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தான்.
அவன் இழுப்பிற்கு நடக்க ஆரம்பித்தவள், தன் தாய், தங்கை என்று பார்த்துவிட்டு, ரமேஷ், ப்ரீத்தி என்று பார்த்தாள்.
ரமேஷ் அவன் அருகில் வந்தான், “நான் உங்க கூட வர்றேன்” என்றான்.
“வேண்டாம் ரமேஷ், உங்களுக்கு என் மேல நம்பிக்கை இருக்குல்ல?” என்று கேட்டான்.
அவன் ‘இருக்கிறது’ என்று தலையாட்டினான்.
“நத்தாஷா சொன்னது போல அவங்க பெரிய ஆளுங்கதான். பழிவாங்கணும்னு இறங்குனாங்கன்னா உங்களைப் பழிவாங்க உங்க வேலையும் இல்லாமல் செய்றதுக்கு வாய்ப்பிருக்கு. இந்தப் பிரச்சினையை நான் டீல் பண்ணிக்கிறேன், என்னால டீல் பண்ண முடியும். என்னோட பேக்ரவுண்டை நான் என்னோட கேரியருக்கு யூஸ் பண்ணல, ஆனா என்னோட பேக்ரவுண்ட் எனக்கு எப்பயும் சப்போர்ட்டாதான் இருக்கு. நான் பாத்துக்குறேன்” என்றான்.
அதற்குள் ராகினி வந்து நின்றாள், “நான் உங்க கூட வர்றேன். நான் வேற ஃபேமிலி இல்ல, அவங்க என்னைப் பழிவாங்கவும் முடியாது. அக்காவுக்குத் துணையா நானும் கூட வர்றேனே?”
“ஏன், உனக்கு என் மேல நம்பிக்கை இல்லையா?” என்று அவன் கேட்க,
“அய்யோ! அப்படி இல்ல சார்” என்று அவள் எதையோ கூற வர,
“காலேஜ் விட்டு வெளியே பஸ் ஏறுறதுக்குள்ள உன்னை யாராவது கடத்திட்டுப் போனா என்ன பண்ணுவ?” என்று அவன் கேட்டு வைக்க, அவள் கண்களை உருட்டினாள்.
“நான் தான் காலேஜ் பஸ்ல வர்றேனே??”
“ஏன், காலேஜ் கேம்பஸ்க்குள்ள அவங்களால வர முடியாதா?? இல்ல காலேஜ் பஸ்சை நிறுத்தி உன்னைக் கடத்த முடியாதா?” என்று அவன் கேட்டு வைக்க,
அவள் நாலாப்புறமும் சங்கடமாகத் தலையை ஆட்டினாள்.
நத்தாஷாவைப் பிடித்திருந்தவன், அப்படியே அவள் தாயின் புறம் திரும்பினான். “அம்மா, உங்களுக்கு என் மேல நம்பிக்கை இருக்குல்ல?? உங்க பொண்ணை எப்படிக் கூட்டிட்டுப் போறேனோ, அதே மாதிரி கூட்டிட்டு வந்து உங்க கையில ஒப்படைப்பேன். அப்படி நம்பிக்கை இல்லைன்னா நீங்க என் கூட வரலாம், வேற யாரும் வர வேண்டாம்” என்றான்.
“நம்பிக்கை இருக்குப்பா” என்று கூறினார் புஷ்பவல்லி.
“நன்றி அம்மா, ஆனா உங்க பொண்ணு என் கூடத் தனியா வர பயப்படுவாள். அதனால நீங்க என் கூட வாங்க” என்று அவரையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டான்.
வாகனத்தில் எதுவுமே பேசவில்லை, அதற்கு மேல் எந்தக் கேள்வியும் அவளைக் கேட்கவில்லை. தாயும் மகளும் பின்னால் அமர்ந்திருக்க, அவன் முன்னால் அமர்ந்து வாகனத்தை அதிவேகத்தில் ஓட்டினான்.
சென்னையை விட்டுச் சற்றுத் தள்ளி வந்து ஒரு பெரிய தோப்பு வீட்டின் வாசலில் நிறுத்தியவன், கார் கண்ணாடியை மட்டும் இறக்கி அவன் முகத்தைக் காட்டினான்.
“மியூசிக் டைரக்டர் கௌதம் வந்திருக்கேன்னு சொல்லுங்க” என்றான்.
உடனே ஐந்து நிமிடத்தில் கேட் திறந்தது.
அதே வேகத்தில் உள்ளே சென்றவன், “அம்மா, நீங்க கார்லயே உக்காந்துருங்க. ஒருவேளை கைகலப்பானா எனக்கு இவளைக் கூட்டிட்டு வர்றதுக்கு ஈஸியா இருக்கும். அதுபோல ஆகாம நான் பாத்துக்குறேன். முக்கியமா பயப்படாதீங்க” என்று கூற,
அவர் சம்மதமாகத் தலையாட்டிவிட்டு அங்கே அமர்ந்திருந்தார்.
அவள் பக்கக் கார் கதவைத் திறந்து, அவளைத் தன் வலது கையில் பிடித்தபடி உள்ளே அழைத்துச் சென்றான் கௌதம்.
……
“ச்சே! நம்ம ஹீரோ அடி வாங்குவதைப் பார்க்கலாம்னு நினைச்சேன். ஒரு சூப்பர் ஃபைட் சீன் மிஸ்ஸாயிடுச்சு” என்று வலக்கையில் இடக்கையைக் குத்திக்கொண்டே பேசிக்கொண்டிருந்தாள் ராகினி.
“எங்களுக்கெல்லாம் பதட்டமாயிருக்கு, நீ ரொம்ப கூலா எதையோ பேசிட்டிருக்க” என்று ப்ரீத்தி கேட்டு வைக்க,
“படத்துல ஹீரோவா நடிக்கிறவங்க எல்லாம் நிஜத்துல ஹீரோவா இருக்க மாட்டாங்க, வில்லனாதான் இருப்பாங்க. சோ, நம்ம ஹீரோ கௌதம் சார்கிட்ட அவங்க கண்டிப்பா அடி வாங்குவாங்க. அதைப் பாக்குறதுக்குப்போக முடியாம போயிடுச்சு” என்றாள்.
“எங்க கூடத்தான இருந்த?? அதுக்குள்ள எப்படி கால் பண்ண?” என்று கேட்டான் ரமேஷ்.
“அதுவா அண்ணா, நான் நைட்ல இருந்தே அவருக்கு மெசேஜ் போட்டுட்டுத்தான் இருந்தேன். தூக்கத்துல டிஸ்டர்ப் பண்ண வேணாம், காலையில பாத்துக்கலாம்னு தான் யோசிச்சேன். ப்ரீத்தி அக்காவுக்கும் மெசேஜ் பண்ணேன். ஆனா அதுக்குள்ள அந்த மாமா பையன் வந்துட்டான், டிரக்குகாரனும் வந்துட்டான். அதான் என்ன பண்றதுன்னு தெரியாம அவருக்குக் கால் பண்ணிட்டேன்” என்றாள் ராகினி.
“அது யாரடி மாமா பையன்?” என்று கேட்டு வைத்தாள் ப்ரீத்தி.
“அதுதான் அக்கா, சுப்ரீம் ஹீரோ ராகவோட அசிஸ்டன்ட். அவன் மாமா வேலை பார்க்கத்தானே வந்திருந்தான்?” என்று ராகினி கேட்டு வைக்க,
“எனக்கு என்னமோ பயமாயிருக்கு” என்றாள் ப்ரீத்தி.
ஆனால் ரமேஷ் தைரியமாக இருந்தான். அன்று வேலைக்குக் கூடச் செல்லவில்லை, அவர்களுக்குத் துணையாக அங்கேயே இருந்தான்.
இவர்கள் அங்கே சென்றிருக்க, யாராவது இங்கே வந்துவிட்டால் என்ன செய்வது??
புஷ்பவல்லி வேறு இல்லை, ராகினி மட்டும் தனியாக இருப்பாள். தன் தந்தையால் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்ள முடியாது. அதனால் வேலைக்கு விடுப்பு எடுத்துவிட்டு வீட்டில்தான் இருந்தான்.
……
நேராக அவளை இழுத்துக்கொண்டு சென்றவன், காரியதரிசியிடம் ராகவ்வை வரச் சொல்லி அழைத்தான்.
“வாட்? நத்தாஷாவோட கௌதமும் வந்திருக்கானா? அவனுக்கு எப்படி அதுக்குள்ள விஷயம் போச்சு? அதுவும் ஒரே ராத்திரிக்குள்ள?”
“தெரியல பாஸ். நீங்க கீழ வரலன்னா அவன் மேல வருவேன்னு சொல்றான். இவ்வளவு நாள் பார்த்த அம்பி மாதிரியில்ல, அந்நியன் மாதிரி தெரியுறான். சீக்கிரம் வந்துருங்க” என்றான்.
தன்னறையிலிருந்து வெளியில் வந்தான்.
மாடிப்படிகளில் இறங்கும்போது, உக்கிரமாகப் பார்த்துக்கொண்டிருந்தவனின் பார்வையை எதிர்கொண்டான்.
“வாவ் கௌதம்! வாட் ஏ பிக் சர்ப்ரைஸ்?? நீ வருவேன்னு சொல்லியிருந்தா நான் இன்னும் கிராண்டா பார்ட்டி ஏற்பாடு பண்ணியிருப்பேனே?” என்றான்.
எவ்வளவுதான் முகத்தைச் சாதாரணமாக வைத்துக்கொள்ள நினைத்தாலும், ராகவுடைய முகம் அசடு வழிந்தது.
“உங்க படத்துல வந்த அந்த ஃபேமஸான பாடலை உங்க எதிர்க்கப் பாடிக்காட்டணும்னு சொன்னீங்களாமே?? அதுவும் கெஸ்ட் ஹவுஸ் வந்துதான் பாடிக்காட்டணும்னு சொன்னீங்களாமே? அந்த டூயட் சாங்தானே? அதுதான் சோலோவா பாட முடியாதுன்னு, டூயட் பாடறதுக்கு என்னையும் சேர்த்து கூட்டிட்டு வந்திருக்காள்” என்றபடி அவனை உக்கிரமாகப் பார்த்தான்.
“நோ கௌதம், ஐ திங்க் ஷி இஸ் மிஸ் அண்டர்ஸ்டுட். அவங்களை நேர்ல பாடச் சொல்லி கேட்கணும்னு நினைச்சேன். அதுதான் சொன்னேன். கெஸ்ட் ஹவுஸ்னு நான் சொல்லலையே?” என்றான் ராகவ் என்கிற சுப்ரீம் ஹீரோ.
error: Content is protected !!