Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

88. வித்யா வெங்கடேஷ் - நிழலாடும் நின் நினைவில்

நிழலாடும் நின் நினைவில் – 24

ஓம் ஸ்ரீ சாய்ராம்

தூக்கம் கலையாத நிலையில் “பெப்பா! பெப்பா!” என ஷ்ரவனைத் தேடி அறைக்குள் வந்த விரூபா, அங்கு ரம்யாவைக் கண்டதும், யோசனையாக நின்றாள்.

ரம்யாவைக் கண்கொட்டாமல் பார்த்தபடி, “பெ..ப்..பா,” விளித்தவளின் ஸ்ருதி இறங்கியது.

குழந்தையின் மழலை மொழியில் மங்கையின் ஏக்கம் பெருக, “பெப்பா 99டேஸ்ல வந்துடுவார் தங்கம்,” என குழந்தையுடன் சேர்த்துத் தனக்கும் சமாதானம் சொல்லிக்கொண்டாள்.



Advertisement

பெரியம்மாவின் விழிகளில் தாரை தாரையாகக் கண்ணீர் வழிந்தோடுவதைக் கண்ட குழந்தை, அவள் மடியில் ஏறிக்கொண்டு “நோ… நோ…” தன் குட்டி ஆள்காட்டி விரலில் கண்களைத் துடைத்துவிட்டு இளித்தாள்.

கண்ணீரும் சிரிப்புமாய் குழந்தையின் நெற்றிமுட்டி தலையாட்டினாள் ரம்யா.

“அப்படிச் சொல்லு செல்லக்குட்டி! உன் பேச்சையாவது கேக்குறாளான்னு பார்ப்போம்,” உரக்கச் சொன்னபடி உள்ளே நுழைந்தான் தருண்.

Advertisement

“உன் பேச்சையும் கேட்டதுனால தானே உன்னோடவே கிளம்பி வந்துட்டேன்,” இடித்துக்காட்டி குழந்தையை மார்போடு சேர்த்து அணைத்துக்கொண்டாள்.

Advertisement

“என்னையும் இலவச இணைப்பா அழைச்சிட்டு வந்ததையும் உன் ஃப்ரெண்டுக்கு நியாபகப்படுத்து,” ஈரத்துண்டால் தலையைத் துவட்டிக்கொண்டபடி பால்கனியிலிருந்து ஆஜரானார் சாருலதா.

முன்தினம் ஷ்ரவனை வழியனுப்ப ரயில் நிலையத்திற்கு வந்திருந்தவள், ரயில் புறப்பட்ட கால்மணி நேரத்திற்குப் பிறகும் பயணிகளின் இருக்கையில் அமர்ந்தபடி கேவி கேவி அழ, அவளை அந்த நிலையில் அம்மா வீட்டிற்கு அனுப்ப மனமில்லாமல், தன்னுடனே அழைத்து வர தீர்மானித்தான் தருண்.

மாதக்கணகாய் பிரிந்த வாழும் தம்பதிகளின் உண்மையான மனஸ்தாபம் பற்றி அன்றுதான் தெரிந்துகொண்டனர் சாருலதாவும் ரவிச்சந்திரனும்.

Advertisement

ரவிச்சந்திரன் நிதர்சனங்களைப் பக்குவமாய் உள்வாங்கி மகளுக்கு நம்பிக்கை வார்த்தைகள் கூறினார். ஆனால் அதிரிச்சியிலிருந்து மீளாதவராய் சாருலதா பித்துப் பிடித்ததுப்போல உட்கார்ந்துவிட்டார். அதனால் அவரையும் வலுக்கட்டாயமாகத் தன்னுடன் அழைத்து வந்திருந்தான் தருண்.

அன்றைய நினைவுகளில் மெல்லச் சிரித்தவன், “அடுத்த மூணு மாசத்துக்கு உங்க பொண்ணை ஆசை தீர சீராட்டிக்கோங்க. என் அண்ணன் முழுசா ரம்யாதாசனா வந்த பிறகு நம்ம யாரையும் அவ பக்கத்துல நெருங்க விடமாட்டான்,” தோழியின் பூரிப்பை ஓரக்கண்ணால் பருகினான்.

அவன் விளையாட்டாய் சொன்னபோதும், அதுதானே வேண்டுமென உளமார பிரார்த்தித்தனர் அன்னையும் மகளும்.

சாருலதா வந்ததில் திலகாவிற்கும் கூட ஒரு வகையில் நல்ல மாறுதலாகவே இருந்தது. வழிபாடுகள், கோவில் பயணங்கள், கச்சேரிகள், கதாகாலட்சேபங்கள் என இருவரும் ஜோடிபோட்டு சென்னையைச் சுற்றிவர, மார்கழியின் முப்பது நாட்களும் கண்திறப்பதற்குள் நகர்ந்திருந்தது.

கணவரையும் வீட்டையும் கவனித்து ஒரு மாதத்திற்கு மேலானது எனக் கூறி பொங்கல் பண்டிகை சேர புறப்பட்டார் சாருலதா. ஷ்ரவன் வீட்டில் இல்லாததில் யாருக்குமே பண்டிகை கொண்டாட தோன்றாத நிலையில், சம்பிரதாயத்திற்காக பொங்கப் பானை வைத்தார் திலகா.


அந்த வருடத்தின் பொங்கல் பண்டிகை நாட்களைத் தொடர்ந்து வாரயிறுதி நாட்களும் சேர, சுளையாய் ஒருவாரம் விடுப்பு நாட்கள் கிடைத்திருந்தது. அம்மா வீட்டிற்குச் சென்றுவர நினைத்திருந்த உத்ரா, ரம்யாவும் தங்களுடன் வர வேண்டுமென அடம்பிடித்தாள்.

புறப்பட்டு அரைமணி நேரம் கூட கடந்திருக்காது. குழந்தைகளுக்கு எனப் பிரத்யேகமாகப் பொருத்தப்பட்டிருக்கும் கார் சீட்டில் அமரமாட்டேன் எனச் சண்டித்தனம் செய்து, பின்னிருக்கையில் அமர்ந்துகொண்டிருந்த ரம்யாவின் மடிக்கு நைச்சியமாகத் தாவியிருந்தாள் விரூபா.

காரின் ஒலிப்பெருக்கியில் அலறிக்கொண்டிருந்த ரைம்ஸ்க்கு ஏற்றவாறு குழந்தையின் கைகளைப் பிடித்து ரம்யா அசைத்து விளையாட,

விரூபாவோ, “மம் மம் மம் மாஆஆஆ,” என ஓயாமல் தனி ஒரு கச்சேரி நடத்திக்கொண்டிருந்தாள்.

“விரூகுட்டி ‘ரம்யா’ சொல்லு,” தருண் முன்னாலிருந்து குரல் கொடுக்க,

“அழகா பெரியம்மான்னு கூப்பிடச் சொலித்தாடா,” நறுக்கென்று புஜத்தில் கிள்ளினாள் அவன் சரிபாதி.

“கூப்பிடத்தானே பேரு வச்சிருக்காங்க. அதைவிட்டுட்டு பெரியம்மா பெரியப்பான்னு….” அவன் கேலி செய்ய,

“நீ என்னை ரம்யான்னே கூப்பிடு தங்கம். உன் அப்பா கூட என்னை அப்படிக் கூப்பிட்டுத்தான் எங்களுக்குள்ள ஒரு சூப்பர் ஃப்ரெண்ட்ஷிப் உருவாச்சு,” ஒத்தூதினாள் ரம்யா.

பெரியவர்கள் பஞ்சாயத்தைச் சற்றும் பொருட்படுத்தாமல் அவள் போக்கில், “மம்.. மம்..ஆஆஆ…” என இசைத்துக் கொண்டிருந்தாள்.


ஒருவார விடுப்பில் ஊருக்கு வந்தவர்களை தலைகால் புரியாத சந்தோஷத்துடன் உபசரித்தார் சுபாஷினி.

திருக்கருகாவூர் கர்ப்பரக்ஷாம்பிகை கோவிலுக்கு அழைத்துச்சென்று அனைத்து விசேஷ பூஜைகளையும் பரிகாரங்களையும் உடன் இருந்து செய்த அவரிடம் தன் அவலநிலையை எடுத்துச்சொல்ல துணிவில்லாமல் உள்ளுக்குள் புழுங்கினாள் ரம்யா.

“அடுத்த மாசம் 24ஆம் தேதி குழந்தையோட நட்சத்திர பிறந்தநாள் வருது. இங்க்லீஷ் பர்த்டே ஒரு வாரத்துக்கு முன்னாடியே வந்துடு. என்ன பிளான் வச்சிருக்கீங்க,” உத்ராவின் தந்தை ரமணன் கேட்க,

கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்து முழித்தனர்.

அதைப்பற்றி அவர்களும் யோசிக்காமல் இல்லை. சொல்லப்போனால் குழந்தையின் பிறந்தநாளை பிரம்மாண்டமான முறையில் கொண்டாட, மூன்று நட்சத்திர விடுதி ஒன்றில் முன்பதிவு கூடச் செய்திருந்தனர். ஆனால் ஷ்ரவனின் திடீர் முடிவில் அனைத்தும் ஆட்டம் கண்டது.

அவன் ஊருக்குத் திரும்பிய பிறகுதான் குழந்தையின் பிறந்தநாளை கொண்டாட வேண்டும் என்பதில் இருவரும் தீர்மானமாக இருந்தனர். நேரம் வரும்போது சொல்லிக்கொள்ளலாம் என இருந்தவர்கள், ரமணன் திடுதிப்பென்று கேட்டதும், திருதிருவென முழித்தனர்.

“அப்பா கேக்குறார்ல, சொல்லுடி!” மகளின் தோளில் தட்டினார் சுபாஷினி.

“அப்பா! அது… அது ஷ்ரவன் அண்ணா ஊருக்கு வந்த பிறகு கொண்டாலாம்னு இருக்கோம்,” மென்று விழுங்கினாள் உத்ரா.

உத்ராவுக்கும் தருணுக்கும் அதில் துளியும் விருப்பமில்லை என அவர்கள் முகமே காட்டிக்கொடுத்தது.

புகுந்த வீட்டாருடன் புரிதலுடன் பழகி வரும் மகளின் நல்வாழ்வில் குழப்பம் ஏற்படுத்த விரும்பாத சுபாஷினியும் ரமணனும், ஆசைகளை மனத்தில் புதைத்து அமைதிகாத்தனர்.

“ரெண்டு பேரும் என்னைப் பாருங்க,” முகம் பார்க்கத் தவிர்த்து தலைகுனிந்து கிடந்தவர்களை அதட்டிய ரம்யா,

“நான் உங்க பேச்சைக் கேக்குற மாதிரி, நீங்களும் என் பேச்சைக் கேளுங்க. இல்லேன்னா இப்பவே நான் அம்மா வீட்டுக்குக் கிளம்புறேன்,” அடம்பிடிக்கும் இளையவர்களை அவர்கள் வழியிலேயே மடக்கினாள்.

“ரம்யா ப்ளீஸ்….” தருண் கண்களைச் சுருக்க,

“அக்கா! குழந்தை முதல் முதலா கூப்பிட்டதே ஷ்ரவன் அண்ணாவைத் தானே. அண்ணா இல்லாமல் எப்படி,” உருகினாள் உத்ரா.

பெற்றவர்கள் நியாயப்படுத்துவது போதாதென்று, ஷ்ரவனின் பெயர் காதில் விழுந்ததும், “பெப்பா பெப்பா” என உத்ராவின் முகத்தில் வருடி துள்ளினாள் அவர்கள் தாரகை.

“நோ வே தருண்! பர்த்டே கொண்டாடுறேன்னு சொல்லுங்க!” தீர்மானமாக உரைத்தாள் ரம்யா.

தங்களால் அவர்களுக்குள் மனஸ்தாபம் வேண்டாமென நினைத்த ரமணன்,

“எங்களுக்கும் நீங்க வேற ஷ்ரவன் வேறன்னு இல்ல தருண். அவர் வந்தபிறகே பிறந்தநாள் கொண்டாடலாம். நட்சத்திர பிறந்தநாள் அன்னைக்கு ஆயுஷ்ஹோமம் பூஜை மட்டும் வீட்டோட செஞ்சிக்கலாமா. அது குழந்தையின் நல்லதுக்காகச் செய்யறது. நட்சத்திரம் அன்னைக்கு மட்டும்தான் செய்யணும்,” எனப் பணிவாகக் கேட்டார்.

“சரி ‘ப்பா. அப்படின்னா அந்த பூஜையை இங்கேயே செஞ்சிக்கலாம். நீங்களே எல்லா ஏற்பாடுகளையும் செய்யறீங்களா?” நொடியில் சம்மதித்தான் தருண்.

“ஸ்யூர் ஸ்யூர்! தருண்!” பூரித்தார் ரமணன்.

அப்போதும் ரம்யா அவனைப் பார்வையால் சுட்டெரித்தாள்.

“எதுக்கு முறைக்குற? ஷ்ரவன் இல்லாமல் சென்னையில் கொண்டாட எனக்கு இஷ்டமில்ல போதுமா,” சிடுசிடுத்தான்.

அவர்கள் நேசப் பரிமாற்றங்களை உளமார ரசித்த சுபாஷினி, “அப்பா அம்மாகிட்டயும் கலந்து பேசிட்டு டிசைட் பண்ணுங்க தருண்,” என எடுத்துச்சொல்லி அனைவரையும் இரவு உணவு உண்ண அழைத்தார்.


தருணின் எண்ணம் சரியே என்று திலகாவும் தாமோதரனும் மனமுவந்து சம்மதிக்க, குழந்தையின் ஆயூஷ்ஹோமத்தை யாருக்கும் எந்தக் குறையும் இல்லாமல் நிகழ்ந்து முடிந்தது.

“வந்து தங்கறேன்னு சொல்லிட்டு குழந்தையோட முதல் பிறந்தநாளும் முடிஞ்சுடுத்துடி. இனி ஆபீஸ்ல ஜாயின் பண்ணிட்டா உன்னைக் கையிலேயே பிடிக்க முடியாது,” சுபாஷினி மகளிடம் குறைப்படுவது பின் தோட்டத்தில் அமர்ந்திருந்த திலகா மற்றும் ரம்யாவின் காதுகளிலும் விழவே செய்தது.

“அவங்களுக்கும் ஆசை இருக்கத்தானே செய்யும் ‘ம்மா,” ரம்யா திலகாவிடம் கூற,

“அவ எங்க என் பேச்சைக் கேக்குறா. குழந்தை ஸ்கூலுக்குப் போகுற வரைக்குமாவது ஆபீஸ் பக்கம் போகாதேன்னு சொல்றேன். அரைநாள் போயிட்டு வரேன்னு தாஜா பண்ணறா. அதுக்கு உன் மாமனாரும் ஃப்ரெண்டும் ஃபுல் சப்போர்ட்.

ஏதாவது மறுத்துப்பேசினா, உன் விருப்பத்துக்கும் உன் பெரிய மருமகள் விருப்பத்திற்கும் என்னைக்காவது குறுக்கே நிக்குறோமான்னு என்னையே கார்னர் பண்ணறாங்க,” திலகா மென்னகையுடன் சலித்துக்கொள்ள, ரம்யாவும் மிதமாய் புன்னகைத்தாள்.

விட்டுத்தள்ள முடியாத அளவிற்கு சுபாஷினியின் ஆதங்கம் மண்டையில் ஓடிக்கொண்டே இருந்தது ரம்யாவிற்கு.

அன்று மாலை, அக்கம் பக்கத்து குழந்தைகளுடன் “பெப்பா! பெப்பா!” என்று ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தையின் மழலையில் அவள் ஏக்கம் கூடியது. கூடவே உத்ராவை அம்மா வீட்டில் தங்கவைக்க ஒரு யோசனையும் உதித்தது.

“ஷ்ரவன் திரும்பி வரவரைக்கும் நீ தஞ்சாவூருலேயே இரு,” என்றாள்.

உடனே சுபாஷினியின் முகம் பிரகாசிக்க, அதைக் கண்டுகொண்ட உத்ரா, “முடியாதுன்னு சொன்னதும் அக்காகிட்ட போட்டுக் கொடுத்தியா,” அன்னையிடம் எகிறினாள்.

சுபாஷனி இல்லையென்று முகம் சுருக்க, உத்ராவின் முகத்தைத் தன் பக்கம் திருப்பினாள் ரம்யா.

“அவங்க எதுவும் சொல்லல. குழந்தை நல்லதுக்குத்தான் சொல்றேன்,”

“என்ன திடீர்ன்னு?” புருவங்களை வளைத்தாள் உத்ரா.

“இப்ப இங்க அவளுக்கு விளையாட நிறைய குழந்தைங்க இருக்காங்க. நேரம் போகுறதே தெரியாம விளையாடிட்டு இருக்குறா. அங்க வந்ததும் முதல்ல ஷ்ரவனைத்தான் தேடுவா. இல்லன்னு தெரிஞ்சா ரொம்ப மனசுடைஞ்சு போயிடுவாடி,” ரம்யா விளக்க,

“ஆமாம் உத்ரா. உனக்கு நினைவிருக்கா! அவன் கிளம்பினதும் ரெண்டு வாரத்துக்கு சரியா சாப்பிடாம குழந்தை எவ்வளவு மெலிஞ்சு போயிருந்தா. மறுபடியும் குழந்தையை ஏமாத்துறதுக்குப் பதிலா, அவன் ஊருக்கு வந்ததும் அழைச்சிட்டு வா,” மூத்தவளின் எண்ணம் புரிந்தவராய் ஒத்தூதி இளையவளின் மனத்தைக் கரைத்தார் திலகா.

அம்மா வீட்டில் தங்கப்போவதாக மனையாள் அறிவிக்க அவள் திடீர் முடிவிற்கான காரணத்தைக் கேட்டறிந்த தருண், தோழியைத் தேடி வந்தான்.

நட்சத்திரங்களை எண்ணியபடி மொட்டை மாடியின் மதில் சுவற்றில் சாய்ந்துகொண்டிருந்தவள் பின்னால் ஓசையில்லாமல் வந்தவன், “ஏக்கம் என் பொண்ணுக்கா? உனக்கா?” தோழியை வம்பிழுத்தான்.

“ரெண்டு பேருக்கும்தான்,” அசராமல் பதில்சொன்னவள், உண்மை காரணத்தையும் கூறினாள்.

“அட ஆமாம் ரம்யா! நாங்களும் இத்தனை நாளா இங்க வந்து தங்கணும்னு வாயிலேயே வடை சுட்டுட்டு இருந்தோம்,” ஆமோதித்தவனின் மனத்திலும் தெளிவு பிறந்தது.


சுபாஷினிக்காகச் சிந்தித்துப் பேசியவளை சென்னையின் தனிமை வாட்டியெடுத்தது. உத்ராவின் கலகலப்பிலும், குழந்தையின் மழலை மொழியிலும் தான் கவலைகள் மறந்தவளாக நாட்களை கழித்துக்கொண்டிருந்தாள் ரம்யா.

இன்னும் நான்கு வாரங்களை ஓட்ட வேண்டுமே என்ற பெருமூச்சுடன் இயந்திர கதியாக பூஜை அறையைச் சுத்தம் செய்துகொண்டிருந்தவளின் கண்ணில் தென்பட்டது, சாயி பாபாவின் ஒன்பது வார விரதப் புத்தகம்.

தன்னிச்சையாகத் திறந்த பக்கத்தில், விரதத்தின் அற்புத மகிமைகள் என்ற தலைப்பின் கீழ் கொடுக்கப்பட்டிருந்த கதை ஒன்றைப் படித்தவளுக்கு உள்ளுக்குள் இனம்புரியாத உணர்வுகள் மலர திலகாவைத் தேடி ஓடினாள்.

“ரொம்ப சிம்பிள் பூஜைதான் ரம்யா,” என்றவர், செய்முறைகளைச் சொல்ல, தொடர்ந்து வந்த வியாழக்கிழமை அன்றே விரதமிருக்க தொடங்கியிருந்தாள் பேதை.


நான்காவது வார பூஜையில் அமர்ந்திருந்தவளின் கவனத்தைக் கலைத்தது அந்த அலைபேசி அழைப்பு.

‘ஷ்ரவன்!’ என்ற தருணின் உற்சாகக் குரலில் பேதையின் இதயம் துடிக்க மறந்தது.

பூஜையின் நடுவில் எழுந்துகொள்ளக்கூடாது எனப் பிரயத்தனப்பட்டு அமர்ந்திருந்தாள். ஆனால் மனமோ நற்செய்தியைக் கேட்க பரிதவித்தது.

கண்களை இறுக மூடிக்கொண்டவளின் செவிகள் மட்டும், தருணின் குரல் வரும் திசையில் வளைந்தன.

“….”

“ரம்யா பூஜை பண்ணிட்டு இருக்குறா. அரை மணி நேரத்துல கூப்பிடு,”

“….”

“ஓ அப்படியா! சரி சொல்லிடறேன்!”

“….”

“நீ ஜாக்கிரதையா கிளம்பி வா!”

“….”

“நாளைக்குப் பார்க்கலாம்!”

என்ற நண்பனின் தெளிவில்லாத பதில்களில் அவள் பரிதவிப்பு கூடியதுதான் மிச்சம்.

உணர்வுகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு பூஜையை பூர்த்தி செய்து முடித்தாள்.

கற்பூர ஆரத்தித் தட்டை நீட்டும் தோழியின் விழிகளில் நிறைந்திருந்த தவிப்பைக் கண்டுகொண்டான் தருண்.

தீப ஆராதனையைத் தொட்டுக் கும்பிட்டபடி, “நாளைக்கு வந்துடுவான் ரம்யா,” அறிவித்தான்.

‘என நினைவு வந்துடுத்தா?’ உதடுகள் கேட்கத் துடிதுடிக்க, காயா பழமா எனப் பதறிய மனம், வார்த்தைகளைத் தொண்டைக் குழியில் சிறைபிடித்தது.

தோழியின் உள்ளத்தைப் படிக்கத் தெரிந்திருந்தவனுக்கு வார்த்தைகள் தேவையிருக்கவில்லை.

“உன்கிட்ட தான் முதல்ல சொல்லணுமாம். நீ பூஜை முடிச்சிட்டு வரதுகுள்ள ட்ரெயின் கிளம்பிடும்னு சொன்னான். அடுத்த ஸ்டாப் வர ராத்திரி ஒருமணியாகிடுமா. பி.சி.ஓ இருக்குமான்னு தெரியாது. அதனால உன்னை நிம்மதியா தூங்கச் சொன்னான். நாளைக்கு ஸ்டேஷன்ல பேசிக்கலாம்னு சொல்லிட்டான்,” ஒன்றுவிடாமல் அத்தனையையும் ஒப்பித்தான்.

தேக்கிவைத்த உணர்வுகள் எல்லாம் விழிநீராய் கரைய, “எல்லாம் நல்ல செய்தியாகத்தான் இருக்கும் ரம்யா. பூஜை முடிச்சிட்டு இப்படி அழலாமா?” மருமகளின் கண்களைத் துடைத்துவிட்டார் திலகா.

இரவெல்லாம் தூங்காமல் தன்னைத்தானே வருத்திக்கொள்வாள் என மருமகளின் சுபாவத்தை அறிந்திருந்த திலகா, அவள் அறையிலேயே படுத்துக்கொண்டார்.

உறங்குவேன் என உறுதி அளித்தவளோ, மறுபக்கம் புரண்டு படுத்து, நிலவொளியில் மங்கலாகத் தெரிந்த ஆளுயர திருமண புகைப்படங்களில் தன்னவனின் பிம்பத்தை வெறித்துப் பார்த்தபடி இரவைக் கழித்தாள்.

ரயில் வர அரைமணி நேரம் முன்னரே அவளை அழைத்து வந்திருந்தான் தருண்.

என்ன அறிவுரை சொன்னாலும், உணர்ச்சிவசத்தில் பொங்கி அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பாள் என அறிந்திருந்தவன் அவள் போக்கிலேயே விட்டான்.

ரயில் வரும் அறிகுறி தெரிந்ததும், அது நிற்க கூடக் காத்திராமல் தண்டவாளத்தை நோக்கி ஓடிய பேதையை இழுத்துப் பிடித்துக்கொண்டவன்,

“மூணு மாசம் காத்திருந்தவ மூணு நிமிஷம் காத்திருக்க மாட்டீயா?” குரலை உயர்த்தி அதட்டினான்.

மனையாளின் தவிப்பைப்பற்றி அறிந்திருந்த ஷ்ரவன், பெட்டியின் கதவருகிலேயே நின்றிருந்தான்.

மெல்ல உருட்டிக்கொண்டு வந்த ரயிலில் அவன் தரிசனம் கிட்டியதும் பேரதிர்ச்சியில் உறைந்து நின்றனர் ரம்யாவும் தருணும்.

மொட்டையடித்த தலை; விழிகள் பிதுங்கி விழும் அளவிற்கு ஒட்டிப்போன கன்னம், எலும்பும் தோலுமாய் தேகம் எனத் தன்னையே உற்று நோக்கிக் கொண்டிருப்பவனின் பொலிவிழந்த உருவத்தைக் கண்டு பேதலித்துப் போனாள்.

கண்கொட்டாமல் ஏறிடும் மனையாளின் விழிகளில் தொக்கி நின்ற கேள்வியை உள்வாங்கியவன், ‘எந்த மாற்றமும் இல்லை!’ என்ற தலையசைப்புடன் உதட்டைப் பிதுக்க, ரயில் ஓசையுடன் அவள் சப்த நாடியும் அடங்கியது.

எடுத்த முயற்சிகள் யாவும் தோல்வியில் முடிய,
என்ன செய்தால் பித்தம் தெளியும் – விடை தேடுகிறேன்
என்னுயிரானவளே! நிழலாடும் நின் நினைவில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!