Skip to content
Post Views: 198
காரிருளை நோக்கி தன் ஒளியினை வீசும் நிலவும் இன்று விடுப்பெடுத்து கொண்டு மேகத்திற்குள் ஒலிந்து கொண்டது. இங்கு அறையிலிருக்கும் மெத்தையில் தன் கட்டை விரலை சப்பியாவறு துயில் கொள்ளும் ஆதவ் கிருஷ்ணனை விழியகலாமல் பார்த்து கொண்டிருந்த ஆழினியின் மனமானது கோபத்தில் அனலாய் கொதித்து கொண்டிருந்தது.
இத்தனை நாட்களாய் விஜய சிவமாறனின் முன்னாள் மனைவி இறந்துவிட்டாள் என்று நினைத்தவள் இன்று அவளை நேரில் கண்டதும் குறிப்பாக விஜய சிவமாறனிடம் அவள் பேசிய விதமும் ஆழினியின் இதயத்தை ரெண்டு துண்டாக உடைத்துவிட்டது.
Advertisement
அன்று செல்வி அக்காவிடம் விஜய சிவமாறன் மற்றும் ஷைலஜாவின் திருமண புகைப்படத்தை கண்டு வினவியவளிடம்
“அந்த பொண்ணுக்கு சிவா தம்பியோட வாழ குடுத்துவைக்கல….” என்று கூறியவரின் கூற்றில் ஷைலஜா இறந்துவிட்டதாக கருதிய தன் மடத்தனத்தை என்னவென்று கூறுவது என்று நினைத்து தன்னையே வெறுக்க தொடங்கிவிட்டாள் ஆழினி.
Advertisement
Advertisement
காலையிலிருந்து மாலை வரை, அதாவது ஷைலஜாவின் வருகையை காண்பதற்கு முன்பு வரை தன்னவனின் அருகாமையை இரசித்தவளின் மனம் இப்பொழுது அவனை முற்றிலுமாய் ஒதுக்கிவிட்டது. இவை அனைத்திற்கும் காரணமான தன் கணவன் மீது ஆழினியின் கோபமானது மீண்டும் விருட்சமாய் வளர ஆரம்பிக்க, அதை அழிக்கும் விதமாய் அறைக்குள் நுழைந்திருந்தான் விஜய சிவமாறன்.
அறைக்குள் நுழைந்தவனை கண்டதும் மெத்தையிலிருந்து சட்டென்று எழுந்தவள் பால்கனி நோக்கி சென்றுவிட, ஆதவ் கிருஷ்ணனின் அருகில் சென்று அவனது நெற்றியில் முத்தம் பதித்த விஜய சிவமாறனும் ஆழினியிடம் பேசுவதற்கு பால்கனிக்கு சென்றிருந்தான்.
Advertisement
இருள் படிந்த வானத்தை வெறித்தவளின் அருகில் சென்றவன்
“செல்லம்மா…. நான்….” என்று விஜய சிவமாறன் ஏதோ கூற வருவதற்குள் அவ்விடமே அதிரும் வண்ணம்
“என்னை அப்படி கூப்பிடாத….” என்று கத்திய ஆழினியை விழியகலாமல் பார்த்து கொண்டிருந்தான் அவளவன்.
“உன் முதல் பொண்டாட்டி உயிரோட இருக்கான்னு ஏன் என் கிட்ட சொல்லல? தப்பு தப்பு, என் மேல தான் தப்பு…. நீ என் கிட்ட சொல்ல வந்த ஆனா நான்தான் உன்னை தடுத்துட்டேன் இல்ல? எனக்கு ஒன்னு மட்டும் சொல்லு, அவளை மறந்துட்டு தான் எனக்கு தாலி கட்டுனியா இல்ல….” என்று ஆழினி முழுவதுமாய் கூறி முடிப்பதற்குள்
“ஆழினி….” என்று கோபமாக அழைத்த விஜய சிவமாறனின் குரலில் சிறிதும் பயம் கொள்ளாது அவனை நிமிர்வுடன் பார்த்தவள் ஏதோ நினைவு வந்து அவன் அணைந்திருந்த சட்டையை வேகமாக விலக்கியவளின் கண்களிலிருந்து கண்ணீர் துளிகள் யாவும் மடைத்திருந்த வெள்ளம் போல் வழிய தொடங்கிவிட்டது.
விஜய சிவமாறனின் மார்பினது இடது பக்கத்தில் ‘செல்லம்மா’ என்று தமிழில் பச்சை குத்தியிருப்பதை கண்டு முற்றிலுமாய் உடைந்தவள்
“இதுக்கு என்ன அர்த்தம்? இதை பார்த்தாலே தெரியுது இந்த டாட்டூ ரொம்ப நாள் முன்னாடி போட்டதுன்னு…. என்னை செல்லம்மான்னு கூப்பிட ஆரம்பிச்சு ரெண்டு வாரம் தான் ஆகுது ஆனா இது…. இது எப்படி? இது யாரு? உங்க மனைவி ஷைலஜாவா? இல்ல, எங்க ரெண்டு பேருக்கும் முன்னாடி வேற யாரையாவது….” என்று ஆழினி தன் கூற்றை கூறி முடிப்பதற்குள் அவ்வறையே அதிரும் வண்ணம்
“ஆழினி….” என்று கர்ஜித்த விஜய சிவமாறனின் குரலை கேட்டதும் ஆழினியின் உடல் பயத்தில் சிலிர்க்க தொடங்கிவிட்டது.
ஆழினியின் கன்னத்தை தன் வலது கரத்தினால் அழுந்த பற்றியவன் இடது கரத்தினால் தன் இதயமிருக்கும் இடத்தை சுட்டிக்காட்டி
“இந்த இடம் எப்பயும் என் செல்லம்மா ஒருத்திக்காக மட்டும் தான்…. அது நீ தான்…. நீ தான் என் செல்லம்மா….” என்று தீர்க்கமாகவும் உறுதியாகவும் கூறியவன் அவளிடமிருந்து விலகி தன் கோபத்தை கட்டுப்படுத்த வழியறியாது அங்கிருக்கும் சுவற்றை வலது கரத்தினால் வேகமாக குத்திவிட்டு அமைதியாக நின்றிருக்க, அவனை இமைக்காமல் பார்த்தவளை உற்று நோக்கியவன் தனது நீண்ட பெருமூச்சை உள்ளிழுத்து வெளியில் விடுவித்துவிட்டு தன் கடந்த கால வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை கூற தொடங்கியிருந்தான் விஜய சிவமாறன்.
எட்டு வருடங்களுக்கு முன்பு….
விஜய சிவமாறனின் தந்தை விஜய திருநாவுக்கரசர். சென்னையில் வசிக்கும் பிரபலமான செல்வந்தர்களுள் ஒருவர். விஜயாஸ் ஹோட்டல், விஜயாஸ் கஃபே என்று பரம்பரை பரம்பரையாக நடத்தும் உணவகத்திற்கு சொந்தக்காரர். இந்திய விடுதலைக்காக போராடிய மக்களுக்கு இலவசமாய் உணவளிப்பதற்காக அவரின் பாட்டனார் தொடங்கிய இடம் தான் விஜயாஸ் உணவகம்.
அதனை பரம்பரையாய் வழிநடத்தி, பாரம்பரியத்துடன் பாதுக்காத்து சென்னையின் முக்கிய இடங்களில் கிளைகளை நிறுவியிருந்தார் விஜய திருநாவுக்கரசர். அவரின் மனைவி பருவதம், கணவரின் தொழிலுக்கு உதவி செய்து இல்லத்திலும் வெளியுலகத்திலும் ராணியாய் திகழும் பாசக்காரர். செல்வத்தின் மீதும், புகழின் மீதும் நாட்டமில்லாதவர்கள் இயலாதவர்களுக்கு உதவி புரிந்து அதில் பெறும் மகிழ்ச்சியே தங்கள் வாழ்வின் பெறும் செல்வமாக கருதினர். அவர்களின் ஒரே மகனான விஜய சிவமாறனையும் அப்படி தான் வளர்த்தனர்.
தந்தை மற்றும் தாயின் மறு உருவமாய் திகழும் விஜய சிவமாறனை கண்டதும் அனைவருக்கும் உடனே பிடித்துவிடும். அவனது துறுதுறு பேச்சும், விவேகமான செயலும் காண்போரை அவனின் பக்கம் காந்தம் போல் இழுத்துவிடும். அதில் அவனுக்கென குவியும் பெண்களின் கூட்டத்தை பற்றி கூற ஒரு நாள் போதது. ஆனால் அவனது பார்வை எந்த பெண்ணின் மீதும் இதுநாள் வரை பதிந்ததில்லை.
“ஒரு லவ்வு கிவ்வுன்னு பண்ணி அம்மாவுக்கு நல்ல பெயர் வாங்கி கொடுக்குறதை விட்டுட்டு உங்க அப்பா நினைச்ச மாதிரி அரேஞ்ச் மேரேஜ் பண்ணி என்னை ஏமாத்த போறியா சிவா? இதெல்லாம் சரியேயில்ல சொல்லிட்டேன்….” என்று குறை கூறும் தன் அன்னை பருவதத்தை கண்களிடுங்க முறைத்தவன்
“நீயெல்லாம் ஒரு தாயா? அங்கங்க இருக்குற அம்மா எல்லாம் தன்னோட பையன் எவ கிட்டயும் சிக்க கூடாதுன்னு சாமி கிட்ட வேண்டிக்கிட்டு தீச்சட்டி எடுக்குறாங்க, நீ என்னென்னா இப்படி சொல்ற? நான் உன்னை தீச்சட்டி எடுக்க சொல்லல, அட்லீஸ்ட் பூச்சட்டியாவது எடுக்கலாம்ல?” என்று தீவிரமாக கூறும் விஜய சிவமாறனின் தலையில் கொட்டியவர் அவனின் பேச்சில் தன்னை தொலைத்து தான் கூற வந்த கூற்றை மறந்தது எல்லாம் வேறு கதை.
பரம்பரை பரம்பரையாக நடத்தும் தங்களின் குடும்ப தொழிலை உலகளவில் கிளைகள் நிறுவ வேண்டும் என்று இலட்சியம் கொண்ட விஜய சிவமாறன் அதற்கான ஆரம்ப புள்ளியை தன் படிப்பிலிருந்து தொடங்கியிருந்தான். பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வில் மாநில அளவில் முதல் மாணவனாய் வெற்றி பெற்றாலும் தன் கனவான ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பை தேர்ந்தெடுத்து அதை சிறப்பாக பயில்வதற்கு இந்தியாவிலேயே சிறந்ததாய் விளங்கும் முதல் பத்து கல்லூரிகளில் ஒன்றான மும்பையிலிருக்கும் கல்லூரியில் தன் இளங்கலை படிப்பை முடித்த கையோடு, முதுகலையில் ஹாஸ்பிடலிட்டி பிஸ்னஸ் மேனேஜ்மெனன்ட் படிப்பினை லண்டனில் அமைந்துள்ள புகழ்பெற்ற க்ளியோன் கல்லூரியில் படித்து முடித்து வியாபார நுணுக்கங்களையும் சுவையின் மேலுள்ள பலதரப்பட்ட மக்களின் நாட்டத்தையும் கண்டறியும் முனைப்போடு ஓர் உணவகத்தில் வேலை செய்ய தொடங்கினான்.
கல்லூரி படிப்பில் காலடி வைத்த நிமிடம் முதலே வியாபாரத்தை இப்படி மாற்ற வேண்டும், இங்குங்கு கிளைகள் திறக்க வேண்டும், குறிப்பாக மக்களின் சுவை அறிந்து அவர்களின் மனதின் சுவையை வெல்ல வேண்டும் என்று பல சிந்தனைகள் கூறி தந்தைக்கு உதவி புரியும் விஜய சிவமாறனை விஜய திருநாவுக்கரசரும் பருவதமும் பெருமிதமாக பார்த்தனர்.
“தானத்திலேயே சிறந்த தானம் அன்னதானம் தான் தெரியுமா? இவ்வளவு ஏன், கர்ணன் தன் வாழ்நாள்ல எத்தனை பேருக்கு இல்லன்னு சொல்லாம தானம் பண்ணிருக்காரு…. ஆனா அவருக்கே, அன்னதானம் பண்ணாததுனால சொர்கத்துல அவ்வளவு சீக்கிரம் இடம் கிடைக்கலையாம்…. பசின்னு வந்தவங்களுக்கு சாப்பாடு போடுறவங்க சிறந்தவங்கன்னா, அந்த சாப்பாட்டை நாமே நம்ம கையால செய்து மத்தவங்களுக்கு கொடுக்குறோமே அப்படிப்பட்ட இந்த படிப்பும் வேலையும் எவ்வளவு புனிதமானதுன்னு தெரிஞ்சிக்கோங்க…. அதை விட்டுட்டு எப்போப்பாரு இதை பணம் சம்பாதிக்கிற கண்ணோட்டதிலேயே பார்க்காதீங்க….” என்று விஜய சிவமாறன் தன் நண்பர்களுக்கு அறிவுரை கூறி தீய வழியில் செல்ல இருந்தவர்களை நல்வழியை புகட்டி அதனை பின்பற்ற உதவி புரிந்தான்.
விஜய சிவமாறன் லண்டனிலுள்ள ஓர் புகழ்பெற்ற உணவகத்தில் வேலை செய்து கொண்டிருந்த நேரமது. பள்ளியிலிருந்து தன்னுடன் ஒன்றாக பயின்ற உயிர் தோழனின் திருமணத்திற்காக ஒரு வாரம் விடுப்பு எடுத்து இந்தியாவிற்கு வந்திருந்தான்.
“இன்னும் ஒரு மாசத்துல வேலையை விட்டுட்டு இங்க வரப்போற, எதுக்கு தான் தேவையில்லாம லீவ் போட்டு இங்க வந்தியோ? இப்போ உன் வேலை சீக்கிரம் முடியாம எக்ஸ்டென்ட் ஆகும் இது தேவையா உனக்கு?” என்று பருவதம் கூறி அவன் கைகளில் தேநீரை திணித்துவிட்டு தன் கணவருக்கு வழங்கியவரிடம்
“அவன் என் பெஸ்ட் ஃபிரண்ட் பரு, அவன் கல்யாணத்துக்கு எப்படி நான் போகாம இருக்க முடியும் சொல்லு?” என்று கூறிய விஜய சிவமாறனை தீயாய் முறைத்தவர்
“பல்ல தட்டி கையில கொடுத்துடுவேன் பார்த்துக்க, எத்தனை தடவை சொல்றது என்னை பெயர் சொல்லி கூப்பிடாதன்னு….” என்று பருவதம் கூறி விஜய சிவமாறனை முறைக்க, இது எப்பொழுதும் நடக்கும் நிகழ்வு தான் என்று அறிந்த விஜய திருநாவுக்கரசர் அவர்களின் சம்பாஷனைகளை இன்றும் இரசித்து கொண்டிருந்தார்.
“சிவா, நம்ம தரகர் ஃபோன் பண்ணாரு…. ‘நிறையா வரன் வருது, அவங்களுக்கு என்ன பதில் சொல்லட்டும்னு’ கேக்குறாரு…. நீ என்னப்பா சொல்ற? பொண்ணு பார்க்கட்டுமா?” என்று விஜய திருநாவுக்கரசர் வினவ
“உங்க இஷ்ட்டம் அப்பா, பொண்ணு, உங்களுக்கும் அம்மாவுக்கும் பிடிச்சிருந்தாலே போதும்….” என்று விஜய சிவமாறன் கூறியதை கேட்டு தன் தலையில் அடித்து கொண்டார் பருவதம்.
“இருபத்தியெட்டு வயசாகுது இன்னும் ஒரு தடவை கூட லவ் பண்ணல, போயும் போயும் அரேஞ்ச் மேரேஜ் பண்றியே உன்னை என்னென்னு சொல்றது? ஏன் செல்வி, நீயும் லவ் பண்ணி கல்யாணம் பண்ணவ தான? இவனுக்கு கொஞ்சம் புத்திமதி சொல்லக்கூடாதா?” என்று கூறிய பருவதம் தன் துணைக்கு செல்வியை அழைத்து கொள்ள, அவரை கண்டு சிரிதவர்
“நீங்க என்னம்மா இப்படி இருக்கீங்க? அங்கங்க புள்ளைய பெத்தவங்க ‘என் புள்ள எங்க போய் எவள இழுத்துட்டு வருவனோன்னு’ நினைச்சு பயந்துட்டு இருக்காங்க, நீங்க என்னடான்னா சிவா தம்பியை பத்தி இப்படி சொல்றீங்க? நீங்க இதையே சொல்லிட்டு இருந்தீங்கன்னா, என்னிக்காவது ஒருநாள் சிவா தம்பி ஒரு பொண்ணோட வந்து வாசல்ல நிக்க போறாரு பாருங்க….” என்று செல்வி கூறியதை கேட்டு அவரை முறைத்தவர்
“யாரு? இவன் ஒரு பொண்ணை இங்க இழுத்துட்டு வருவானா? காமெடி பண்ணாத செல்வி…. இவனெல்லாம் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டான்….” என்று பருவதம் நக்கலாக கூறியதை கேட்டு விஜய திருநாவுக்கரசரும் செல்வியும் பட்டென்று சிரித்துவிட, அவர்களை விஜய சிவமாறனால் முறைக்க மட்டுமே முடிந்தது.
தன் இருச்சக்கர வாகனமான ராயல் என்ஃபில்ட்டை ஓட்டி கொண்டு காதில் வைத்திருக்கும் காதொலிப்பான் உதவியுடன் பாடல்களை கேட்டவாறு சாலையில் சீறி பாய்ந்து சென்றிருந்தான் விஜய சிவமாறன். இன்னும் மூன்று நாட்களில் லண்டன் செல்லவிருப்பதால் தன் நண்பர்களை கண்டுவிட்டு வீடு நோக்கி செல்லும் விஜய சிவமாறனை பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்தது ஓர் இருச்சக்கர வாகனம். சிறிது நேரத்தில் அவனது வாகனத்தை முந்திவிட்டு நேரெதிராக நின்றிருக்கும் ஸ்பெலன்டர் வாகனத்தை கண்டு திடுக்கிட்டு சட்டென்று தன் வாகனத்தை நிறுத்தியிருந்தவன் செவிகளில் அவனெதிரிலிருந்த பெண்ணின் பேச்சுகள் அனைத்தும் பாடலாய் ஒலித்தது.
தட்டுக் கேட்டு மனசு தானாக வெடிக்க
மொட்ட வெயில் கூட குளிராக அடிக்க
உச்சந்தலை ஏறி உசுரோட உருக்க
பச்சை இதயத்தை அவ பாத்த வச்சு எரிக்க
கல்லுக்குள்ள அனல பூ போல தெரிச்சா
உள்ளுக்குள்ள நுழைஞ்சு சேர்ந்தே தான் துடிச்சா
கட்டு கட்டா ஆசை நூறாக வெதச்சா
கத்தி முனை கண்ண வச்சு கண்டபடி கிழிச்சா….
விஜய சிவமாறனின் காதிலிருக்கும் காதொலிப்பானானது எதிரிலிருக்கும் பெண்ணின் குரலை கூட கேட்கவிடாமல் அதனின் வேலையை செய்து கொண்டிருக்க, தன்னெதிரில் நின்றிருந்தவளை இமைக்காமல் பார்த்தவனை வாய்க்கு வந்த வார்த்தைகளால் கொட்டித்தீர்த்து திட்டியவளிடம்
“ஆழினி, கத்தாத டி…. வீட்டுக்கு போகலாம் வா….” என்று இன்பன் அவளது காதில் மெதுவாக கூற, தன் பின்னால் அமர்ந்திருந்தவனை தீயாய் முறைத்துவிட்டு, தன்னை பார்வையாலே பொசுக்கி கொண்டிருந்தவளின் விழிகளில் சிக்குண்டவனின் செவிகளுக்குள்
கண்ணு ரெண்ட உருட்டி
கட்டி போட்டா ஒருத்தி..
கண்ணு ரெண்ட உருட்டி
கட்டி போட்டா ஒருத்தி
காதல் அறை ஒன்னு விழுந்துச்சு
தானா மனசு தான் சிவந்துச்சு
காதல் அறை ஒன்னு விழுந்துச்சு
தானா மனசு தான் சிவந்துச்சு….
என்ற பாடலை அவனின் காதொலிப்பான் செவ்வனே இயக்கி கொண்டிருக்க, தன்னெதிரிலிருந்தவனிடம் ‘காதிலிருக்கும் காதொலிப்பானை நீக்கு’ என்று தன் கைகளால் சைகை செய்த ஆழினியின் நயனங்களை நோக்கியவாறு தன் காதொலிப்பானை நீக்கிய விஜய சிவமாறனை கண்டபடி திட்ட தொடங்கிவிட்டாள் பெண்ணவள்.
“மனசுல என்ன பெரிய அலைபாயுதே மாதவன்னு நினைப்பா? ஹெட்செட் போடாம வண்டி ஓட்ட முடியாதோ? கால்மணிநேரமா உங்களை கூப்பிட்டுட்டு ஃபாலோ பண்ணி வந்துட்டு இருக்கேன்…. இது ஆக்ஸிடென்ட் சோன் தெரியும் தான? ஹெட்செட் போட்டுட்டு வண்டி ஓட்டிட்டு இருக்கீங்க? முதல வண்டியோட ஸ்டான்ட் எடுத்துட்டு ஒழுங்கா வண்டி ஓட்ட பழகுங்க….” என்று கோபமாக திட்டிய ஆழினியிடம்
“அக்கா போதும்…. வீட்டுக்கு போகலாம் வா…. எல்லாரும் நம்மளையே பார்க்குற மாதிரி இருக்கு….” என்று இன்பன் கூறியதை கேட்டு சிடுசிடுத்தவள்
“நீ சும்மா இருடா பன்னு…. இவங்களை மாதிரி ஆளுங்களை சும்மா விடக்கூடாது…. ஹெட்செட் போட்டதும் இல்லாம எவ்வளவு வேகமா வண்டி ஓட்டிட்டு போறான்….” என்று கூறி தன்னெதிரிலிருப்பவனை முறைத்தவள்
“இந்நேரம் நாங்க எங்க வீட்டுல இருந்திருப்போம் உன்னால இப்போ இருபது நிமிஷம் லேட் ஆகிடுச்சு…. என் ஃபலூடாவுல இருந்த ஐஸ்கிரீம் இந்நேரம் உருகி போயிருக்கும்…. எல்லாம் உன்னால தான்….” என்று கூறிய தன் தமக்கையை
“அட அல்ப்பையே….” என்று இன்பன் நினைத்து தலையில் அடித்து கொள்ள, அவள் கூறியதை கேட்டு குறுநகை புரிந்திருந்தான் விஜய சிவமாறன்.
“சாரி…. இனிமேல் இந்த மாதிரி பண்ணமாட்டேன்….” என்று விஜய சிவமாறன் கூறியதை கேட்டு சற்று மனமிறங்கியவள்
“எனக்கு பிடிச்ச ராயல் என்ஃபில்ட் பைக் வச்சிருக்கியேன்னு உன்னை சும்மா விட்டுட்டு போறேன்….” என்று கூறிவிட்டு தன் இருச்சக்கர வாகனத்தின் கிக்கரை அதிவேகமாய் உதைத்து இயக்கியவள் தன் தம்பியுடன் அவ்விடத்திலிருந்து பறந்துவிட்டாள்.
அவளது பேச்சிலும், வாகனத்தை இயக்கிய அழகிலும் குறிப்பாக அவளின் கண்களின் நயனங்களிலும் விழுந்தவன் அடுத்த ஐந்தாவது நொடிகளில் அவளை பின்தொடர்ந்து சென்றிருந்தான். ஆனால் அவள் சென்ற வழியிலிருந்த போக்குவரத்து மின்விளக்கானது சரியாக விஜய சிவமாறன் சென்ற போது சிவப்பு நிறத்தை ஒளிர விட்டதினால் அவளை பின்தொடர நினைத்தவனின் எண்ணமானது தோல்வியடைந்துவிட்டது.
அன்றைய நாள் முழுவதும் அவனது நினைவையும் நிகழ்காலத்தையும் ஆக்கிரமிக்க தொடங்கிவிட்டாள் பெண்ணவள். ஆனால் அடுத்தடுத்து வந்த வேலைகளிலும் நண்பனின் திருமணத்திலும் ஈடுப்பட்டவன் அவளை தற்சமயம் மறந்துவிட்டிருந்தான்.
விஜய சிவமாறன் லண்டனுக்கு வருகை புரிந்து இன்றோடு இருபது நாட்களாகிவிட்டது. இன்னும் பத்து நாட்களில் இந்தியா செல்லவிருக்கும் விஜய சிவமாறனின் அலைபேசிக்கு அவனது தந்தை விஜய திருநாவுக்கரசர் அழைப்பு விடுத்திருந்தார்.
தன் தந்தையினது அலைபேசியை ஏற்றவன்
“ஹலோ, சொல்லுங்க அப்பா?” என்று விஜய சிவமாறன் வினவ
“சிவா, ஃபிரியா இருக்கியா? உன் கிட்ட பேசணும்….”
“சொல்லுங்க அப்பா, ரூம்ல தான் இருக்கேன்….”
“நல்லதா போச்சு, உன் மெயிலுக்கு ஒரு ஃபோட்டோ அனுப்பியிருக்கேன் பார்த்துட்டு பிடிச்சிருக்கா சொல்லு….”
“இதோட இது பத்தாவது பொண்ணா இருக்கும், இல்லப்பா?”
“கணக்கு தப்பு, இது பதினாலாவது பொண்ணு…. இந்த பொண்ணாவது உனக்கு பிடிச்சிருக்கா சொல்லு….”
“என்னப்பா ரொம்ப சலிச்சிக்குறீங்க? கல்யாணம் என்பது ஆயிரம் காலத்து பயிருன்னு உங்களுக்கு தெரியாதா? பரு இதெல்லாம் உங்களுக்கு சொல்லி கொடுக்கலையா?”
“எல்லாம் என் நேரம்டா…. நான் லைன்ல வெயிட் பண்றேன் பொண்ணு ஃபோட்டோ பார்த்துட்டு ‘பிடிச்சிருக்கு, பிடிக்கலன்னு’ எதையவது சொல்லு….”
“பார்க்குறேன் பார்க்குறேன்….” என்று சலித்தவாறு கூறிய விஜய சிவமாறன் தன் கணினியை இயக்கி தன் தந்தையின் மின்னஞ்சல் முகவரியிலிருந்து தனது மின்னஞ்சல் முகவரிக்கு வந்திருந்த புகைப்படத்தை பதிவிறக்கியவனின் கண்களுக்குள் நிறைந்திருந்தாள் ஆழினி.
ஒளி வீசும்….
error: Content is protected !!