Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நிழலை திருடும் இருள்

நிழலை திருடும் இருள் – 13

அத்தியாயம் – 13

‘ நீ சொன்னால் நான் வந்திடனுமா..?? கொஞ்சமாவது நடைமுறையை யோசிச்சு பேசணும்.. மனசில் பெரிய மன்மதன் நினைப்பு.. ஒரு வாரத்தில் பேசி என் மனசை மாத்திடுவாராம்.. இதில் நீ வருவேன்னு அதிகாரம் வேற.. யார்கிட்ட இந்த கமலி கிட்டயேவா.. ஆங்…’

உதட்டை சுழித்து கித்தாப்பாய் அவள் தனக்குள்ளே பேசிக் கொண்டிருந்த நேரம் வீடே ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த வைகறை பொழுதினில் தான்..!!!



Advertisement

அவளின் சிந்தனைக்கும் செயலுக்கும் சம்மந்தமே இல்லை என்பது போல்
தூக்கமின்றி மெத்தையில் புரண்டு புரண்டு படுத்தவள் ஒரு அளவிற்கு மேல் பொறுக்க முடியாமல் எழுந்து அமர்ந்தாள்.

‘எவ்வளவு கண்ணியமா தன்னோட மனசை வெளிப்படுத்தினாங்க.. அந்த மரியாதைக்காகவாச்சும் போனால் தான் என்ன..??’

என்று அவள் மனமே இப்போது மாத்தி பேச தன் உள்ளங்கையில் தலை சாய்த்து யோசனையோடே அமர்ந்து இருந்தவளுக்கு கடிகாரமுள் நகர நகர தவிப்பாக இறுதியாய் முகத்தில் விழும் முடிக்கற்றை விலக்கி கூந்தலை கொண்டையாக அள்ளி முடிந்து சத்தமே இன்றி வெளியே வந்தாள்.

Advertisement

இன்னும் யாரும் விழித்த அறிகுறி இல்லை என்றதும் ஸ்க்ரூட்ரைவரை எடுத்துக் கொண்டு தன் ஸ்கூட்டியை நிறுத்தி வைக்கும் இடத்திற்கு வர அதுவோ தலையை திருப்பி அவளை பாவமாக பார்ப்பது போல் இருந்தது.

Advertisement

‘நேத்தி தான் ரொம்ப தங்கமாட்டம் சொற்பொழிவு எல்லாம் வாரி வழங்கினேன்.. இப்ப சொந்த வீட்டில்லே இப்படி களவாணிதனம் பண்ண வைக்கிறானா..!! இதெல்லாம் அந்த நாலு பிசாசுக்கும் தெரிஞ்சால் என் நிலைமை…!!’

என்ற உள்ள குமுறலோடு ஸ்கூட்டியின் சக்கரத்தை குத்தி பஞ்சராக்கிவிட்டு மீண்டும் நல்லபிள்ளையாய் வந்த வழி திரும்பிவிட்டாள்.

*

Advertisement

அந்த மாலை வேளையில் பேருந்தில் ஏறி அமர்ந்த தினகரனுக்கு கமலினி வருவாள் என்று இன்னமும் நம்பிக்கை இல்லை. ஏனெனில் நேற்று கோவிலில் இருந்து கிளம்பும் வரையிலும் அவளின் முகத்தில் எந்த இளகலும் இல்லாமல் உர்ரென்று தான் இருந்தாள். டீனேஜ் பையன் போல் சிறுபிள்ளை தனமாக அவனின் யோசனை இருந்தாலும் இதனை தவிர கமலினியை தனியாக சந்தித்து பேச வேறு வழியும் இருக்கவில்லை.

அடுத்த நிறுத்தம் அவர்கள் கடைகள் இருக்கும் சாலை.!!

‘அவள் வருவாளா மாட்டாளா..??’ என்று வேகமாய் துடிக்கும் இதயத்தோடு தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் மாணவனாய் அலைபுறுதலுடன் தினகரன் அமர்ந்திருக்க அவனின் தவிப்பை எல்லாம் சட்டையே செய்யாமல் ஆடி அசைந்து மெதுவாய் நிறுத்தத்தில் வந்து நின்றது பேருந்து..!!

கொரோனா பெருந்தொற்றை கடந்துவரும் காலத்தில் மக்கள் கூட்டம் பேருந்தில் பாதி கூட நிரம்பாமல் காலியாக காட்சியளிக்க தன் புருவத்தை நீவிக் கொண்டே பேருந்து படியை இமைக்காமல் பார்த்து இருந்தவன் கண்ணில் இறுதியாய் தரிசனம் கொடுத்தாள் கமலினி.

முககவசத்தின் பயனால் பிரதானமாய் தெரிந்த மான் விழிகளில் அவனுக்கான தேடலை உணர்ந்தபோது எம்பி குதித்து தன் இருப்பை சொல்ல தவிக்கும் இதயத்தை அடக்கி அவள் பார்வையை சந்திக்க காத்திருக்க அவளுக்கும் கூட்டமே இல்லாத பேருந்தில் அவனை கண்டுக்கொள்ள சிரமம் எதுவும் இல்லை.

நொடி பொழுது அவன் விழியோடு கலந்தாலும் மறுநொடி வெகு இயல்பாய் நடந்து அவனை நோக்கிவர அருகில் வந்ததும் அந்த இருவர் அமரும் இருக்கையில் தினகரன் அவளுக்கு இடம் விட்டு தள்ளி அமரவும் ஒரு முறைப்போடு கடந்து அவனுக்கு பின்னால் காலியாக இருந்த இருக்கையில் அமர்ந்துக் கொண்டாள்.

“அதானே.. பேராசை தான் டா உனக்கு…”
என நக்கலடித்த மனசாட்சியை டீலில்
விட்டு அவள் பக்கமாய் திரும்பியவன்,

“நம்பவே முடியல கமலி.. நீ வரவே மாட்டேன்னு தான் நினைச்சேன்…”
என தன் வியப்பை மறைக்காமல் வெளிப்படுத்த,

“அப்படியா..?? அப்புறம் எதுக்கு வந்து காத்து இருக்கீங்களாம்..!”

என்று புருவம் உயர்த்தி அவள் சந்தேகமாய் கேட்கவும் சின்ன சிரிப்போடு தலை அசைத்து,

“அதிசயத்தில் அதிசயமா என்மேல ஒரு ஃபீலிங் வந்து நீ என்னை தேடி வந்துட்டா..?? அந்த ஒரு சதவீத வாய்ப்பை இழக்க வேண்டாமேன்னு தான்..”
என்று சொல்ல அவனை விழி எடுக்காமல் பார்த்தவள்,

“ஹலோ.. நான் இப்ப வந்தது கூட அப்பாக்கும் தாத்தக்கும் நடுவுல இருக்கிற பிரச்சனை தீரணும்ன்னு தான்.. உங்களுக்காக ஒன்னும் இல்ல.. நீங்க சொன்ன மாதிரி தினமும் எல்லாம் வருவேன்னு எதிர்பார்க்க கூடாது..”
என்று வேண்டுமென்றே சொல்ல அப்போதும் அவனின் உற்சாகத்தில் பெரிதாக மாற்றமில்லை.

“நாளைக்கு கதையை நாளைக்கு பார்ப்போம்…” என்று தீனா கண்சிமிட்ட,

“தினகரன் தானா நீங்க..? உங்களுக்கு என்ன தான் ஆச்சு.. எப்படி திடீர்னு நீங்க இப்படி மாறுனீங்க…” என்று நம்ப முடியாமல் கமலினி கேட்க தன் முக கவசத்தை எடுத்துவிட்டு,

“சந்தேகமே வேண்டாம்.. நானே தான்..” என்று சொல்லவும்,

” நக்கலா..?” என அவள் முறைக்கவே,

“சும்மா.. சும்மா..” என்று சரண்டராகிய பின்,

“என்ன மாறினேன்.. எப்படி மாறினேன்ன்னு எனக்கும் தான் தெரியல.. நீ தான் கண்டு பிடிச்சு சொல்லேன்..” என ஆசை மிளிர புன்னகைக்க அதில் அடி வயிற்றில் சில்லென்று உணர்வு அவளை தாக்கிச் சென்றது.

சட்டென்று கமலினி ஜன்னல் வெளியே  பார்வையை திருப்பிக் கொள்ள புன்னகை மாறாமல் அவளையே பார்த்து இருந்தான்.

காற்றில் அசைந்தாடும் காதோர கூந்தலும் அதனை அடிக்கடி ஒதுக்கிவிடும் விரல்களும் பேருந்தின் தாளத்திற்கு தலையாட்டும் அவள் காது ஜிமிக்கியும் பூசிய கன்னக் கதூப்பையும் தினகரனை கட்டி இழுத்தது. எந்த பெண்ணையும் இத்தனை ஆழமாய் அவன் பார்த்தது இல்லை. கமலினி அவன் கண்களில் பேரழகியாய் தெரிய அவளோடு நகரும் ஒவ்வொரு நொடியையும் இரசித்தான்.

வெளியே பார்த்து இருந்தாலும் கமலினிக்கும் அவனின் பார்வை புரியாமல் இல்லை. கோபத்திற்கு பதில் கூச்சமே எட்டிப் பார்க்க,

“இப்படி பார்த்துட்டே இருக்க தான் வர வைச்சீங்களா..??”

என்று கேட்டவளிடம் தீனா ஆமோதித்து தலையசைக்க,

“ஆங்..” என அவள் விழிகளை உருட்டவும் சிரிப்போடு இல்லை என்னும் விதமாய் கண்களை சுருக்கி சமிக்ஞை செய்தவன்,

“என்னை வேண்டாம்ன்னு ஏன் இவ்வளவு பிடிவாதமா இருக்க கமலி..? துளிக் கூட என்னை உன்னோட வாழ்க்கை துணையா வைச்சு பார்க்க தோணலையா..? என்ன கோபம் என்மேல உனக்கு..”
என்று அமைதியாய் வினவினான்.
அவனின் கேள்விக்கு உடனே அவளால் பதில் சொல்ல முடியவில்லை.

வெளியே பார்த்தபடியே,

“உங்களுக்கு நான் எப்படி புரிய வைப்பேன்.. எனக்கு உங்க மேல பெரிசா நல்ல அபிப்ராயம் இருந்தது இல்ல தினகரன்..  என் அப்பா தான் என்னோட ஹீரோ..  அவருக்கு பிடிக்காத ஒருத்தர் மேல எனக்கும் ஒரு பிடித்தமின்மை இயல்பா என் மனசில் பதிஞ்சுடுச்சு… அதிலும் நீங்க என் அப்பா கிட்ட பேசும் முறையில் இருக்கும் அலட்சியம் என்னை செம்மையாக காண்டாக்கும்..!! அப்படி இருக்க திடீர்ன்னு உங்களை தான் நான் கல்யாணம் பண்ணிக்கனும் பேச்சு எழவும் என்னால அக்சப்ட் பண்ணிக்கவே முடியல..”

என்று சொல்லிவிட்டு அவனை பார்க்க தினகரனுக்கும் அவளின் மனநிலை புரிந்தது.

மேலும் அவளே தொடர்ந்தாள்,

“இப்ப.. இப்ப கொஞ்சமே கொஞ்சம் உங்களை நல்லவிதமா என் மனசு பார்க்குது.. அது தான் உங்க வார்த்தையை மதிச்சு என்னை இங்க வர வைச்சு இருக்கலாம்.. ஆனால் கல்யாணம் பண்ணிக்கிற அளவு உங்களை நெருக்கமா யோசிக்க முடியல.. உங்களை நினைச்சாலே அப்பா தான் கண் முன்னால வரார்..”

“உன்னோட ஹீரோ.. என் கதையில் எப்பவுமே வில்லனா மட்டும் தான் நிற்கிறார்.. இதென்ன சாபமோ தெரியல..”

“தினகரன்…”

“எனக்கும் உங்க அப்பா மேல நிறைய கோபம் இருக்கு கமலி.. என் பக்கம் அதுக்கு நியாயமும் இருக்கு.. அதுக்குன்னு அவரை வைச்சு உன்னை நானும் எடை போட மாட்டேன்..!! என் பார்வையில் கமலினி.. கமலினி மட்டும் தான்..”

“என்ன பாக்கிற..?? நான் உண்மையை தான் சொல்றேன்..!! உங்க அப்பா யாரை தப்புன்னு சொன்னாலும் அவங்க அப்படி தான்னு முடிவு பண்ணிடுவியா..?? புத்திசாலி தானே நீ..?? ஏன் உங்க அப்பா செய்யிற தப்பு எல்லாம் உன் கண்ணில் படாதா..?”

சுந்தரமூர்த்தியை பற்றி பேச்சு திரும்பவுமே தினகரனின் முகம் முசுடாக கடுகடுவென அவன் கேள்வியை வீசினான்.

அதில் அவளுக்கும் டென்ஷன் ஆக,

“இது தான் என் பிரச்சனையே தினகரன்..!! இப்ப நீங்க கரெக்ட்டா.. இல்ல.. என் அப்பா கரெக்ட்டான்னு வாழ்க்கை முழுசும் உங்க நடுவில் மாட்டி தீர்ப்பு எழுதிட்டு இருக்க முடியாது என்னால.. என்னோட லைப் சிக்கல் எதுவும் இல்லாம நிம்மதியா இருக்கணும்னு நான் ஆசைப்படுறேன்..”

என்று கண்களை உருட்டி அழுத்தமாய் சொல்ல தலையை கோதிக் கொண்டு பெருமூச்சு விட்டவன்,

“ஓகே.. ஃபைன்.. என்னால உன் நிம்மதி கெட வேண்டாம்.. சந்தோஷமா இரு..” என்று கோபமாய் சொல்லி,

“நான் அப்படி மீன் பண்ணல..” என கமலினி ஏதோ சொல்ல வந்ததை காதிலே வாங்காமல்  பட்டென்று எழுந்து விட்டான்.

அவள் அவ்வாறு சொன்னது அவனின் மனதை காயப்படுத்தி இருக்க அவளிடம் மேற்கொண்டு பேசி வார்த்தைகளை விட்டுவிட கூடாது என்றே விலகி நின்றான்.

கமலினி பேச்சும் உடனே நின்றுவிட அவனை அதிர்ச்சியாய் நோக்கினாள்.

மூக்கு விடைக்க கோபத்தை கட்டுப்படுத்தி நின்றவன் அவளிடம் திரும்பவே இல்லை. கமலினி இறங்க வேண்டிய நிறுத்தம் வந்ததும் அவளுக்கு முன்பாக இறங்கி சாலையில் நடந்து சென்றுவிட பின்னோடு இறங்கியவள் தானும் மிதம் மிஞ்சிய கோபத்தோடு தன் வீட்டை நோக்கி நடந்தாள்.

“போனா போயேன்.. யாருக்கு நஷ்டம்..!! நிம்மதி கெட வேண்டாமாம்.. ரொம்ப அக்கறை தான்.. சந்தோஷமா இருக்க எனக்கு தெரியும்.. அதை அவன் சொல்ல தேவையில்லை.. இனி என் பக்கம் வராமல் அப்படியே போகட்டும்..”

என்று தனக்குள்ளே ஏதேதோ முணுமுணுத்து வந்தாள். ஆனாலும் அவளுக்கு மனது ஆறவே இல்லை.

அவள் அவ்வாறு சொல்லவும் தினகரன் அவளுக்கு நம்பிக்கை கொடுத்து சமாதானம் செய்வான் என்று எதிர்பார்த்தாலோ.. என்னவோ..!
ஆனால் அவன் சட்டென்று பேச்சை முறித்து கோபமாய் திரும்பியும் பாராமல் சென்றது இன்னமும் அதிர்ச்சியாக தான் இருந்தது.

“கமலி.. என்னடி ஒரு மாதிரி இருக்க..? பஸ்ல வந்தது டயர்டா இருக்கா..?”

வீட்டிற்குள் வந்ததுமே அவளின் வாடிய முகத்தை கண்டு அம்பிகா கேட்க அமிர்தமும் பேத்தியை பார்த்து,

“ரொம்ப கூட்டமா இருந்ததோ..” என்று கேட்க ஆம் என்பதாய் தலையை மட்டும் அசைத்தாள்.

‘ உனக்காக என் ஸ்கூட்டியை பஞ்சர் பண்ணி.. வீட்டில் பொய் சொல்லி.. எனக்கு தேவை தான்..’
அவன்மேல் கோபம் பற்றிக் கொண்டு தான் வந்தது.

“நான் அதுக்கு தான்.. சுந்தரத்தை உன்னை அழைச்சுட்டு வந்து வீட்டில் விட்டுட்டு அப்புறம் போக சொன்னேன்..”

“ஐயோ பாட்டி…. நான் என்ன குழந்தையா..?? ஒரு  நாள் பஸ்ஸில் வந்தா ஒன்னும் கரைஞ்சுட மாட்டேன்..”

என்று சோர்வாய் சொல்லிவிட்டு தன் அறைக்கு செல்ல அங்கே கமலினியின் வருகைக்காகவே காத்திருந்த அனன்யா,

“கமலி.. உன்கிட்ட கொஞ்சம் பேசணும்..”
என்று அருகில் வந்து நின்றாள்.

“என்ன அனு..” என்று கமலினி கேட்ட தொனியே அத்தனை அலுப்பாக இருக்க தான் யோசித்து வைத்து இருந்த வார்த்தை எதுவும் வாயில் வரவில்லை.

“அது.. அது வந்து…” என தயங்கி தயங்கி நின்றவள் கமலினி முகத்தில் என்ன கண்டாளோ,

“நீ போய் ஃப்ரெஷ் ஆகிட்டு வா.. சொல்றேன்..” என்க கமலினியும் எதையும் ஆராயும் மனநிலையில் இல்லையே..!! குளியலறை சென்று வந்தவள் தன் போக்கில் கட்டிலில் படுத்துவிட்டாள்.

அம்பிகா டீ குடிக்க அழைத்தபோதும் மறுத்துவிட்டு படுத்தே இருந்தாள். சிந்தனை முழுவதும் நிம்மதியாக இரு என்று சொல்லி சென்றவன் பின்னே நிம்மதி இன்றி சுத்தி வந்தது.

அவன் வெடுக்கென்று சொல்லி சென்ற தோரணைக்கு மீண்டும் அவளை நாடி வரமாட்டான் என்று உள்ளம் உறுதியாய் சொல்ல அதில் மகிழ முடியவில்லை. மாறாக தான் சொல்ல வந்ததையே புரிந்துக் கொள்ளாமல் அவனாக ஒன்றை அர்த்தம் பண்ணிக் கொண்டு கோபித்துக் கொண்டானே என்று ஆதங்கமாக தான் இருந்தது.

தன் கவலையில் தன்னையே பார்த்து  இருக்கும் அனன்யாவை அவள் கவனிக்கவே இல்லை.

கமலினி வரும் முன் அனைத்தையும் சொல்லிவிடலாம் என அனன்யா சேர்த்து வைத்த தைரியம் எல்லாம் அவளை கண்டதும்  காற்றோடு போயிருந்தது.

குளியலறையில் இருந்து வந்தபின் அவள் கேட்டால் என்ன சொல்வது என்று அனன்யா நின்றிருக்க கமலினியோ இவள் கூறியதையே மறந்தவளாய் போய் படுத்துவிட்டாள்.

அது ஒரு பக்கம் நிம்மதி என்றாலும் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தவிப்பாக இருந்தது. தன் வீட்டினரை ஏற்கெனவே நிறைய ஏமாற்றி விட்டோம்.. மறுபடியும் மறுபடியும் அதனையே செய்வதா..?
என அவள் மனசாட்சியே கொலையாய் கொன்றது.

‘உன்கிட்ட நல்லா பேசுற நல்லா பழகுற எல்லாரும் நல்லவங்களா தான் தெரிவாங்க.. ஆனா அது அப்படி இல்லைன்னு  இந்த உலகத்தை தாண்டி பார்க்கும் போது தான் புரியும்..!!’

கமலினி சொன்னது எத்தனை சத்தியமான வார்த்தை..!! கவலைகள் இன்றி சுற்றி திரிய வேண்டிய பருவத்தில் பாறாங்கல்லை கட்டிக் கொண்டது போல் இந்த பாரத்தை சுமக்க முடியவில்லை. ஆனால் காலம் கடந்து கிட்டிய ஞானத்தில் எந்த பலனும் இல்லையே..!!

அனன்யா கரிகாலனை தவிர்க்க தவிர்க்க அவன் இன்னும் மூர்க்கமாய் அவளை இறுக்கி பிடித்தான்.

கண்ட நேரத்தில் அழைப்பதும் அசிங்கமாய் அவளை பேசுவதும் என தொல்லை கொடுத்தவன் இப்போது சில நாட்களாய் பணம் பணம் என்று அவளை நச்சரிக்க ஆரம்பித்து உள்ளான் கரிகாலன்.

அம்மாவிற்காக அண்ணனிற்காக என்று அவன் சொல்லும் காரணம் எதிலும் அவளுக்கு நம்பிக்கை இல்லை.

அதனை வெளிப்படையாக காட்டிக் கொள்ளாமல் தன்னிடம் பணம் இல்லை என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்து விட்டாள். நயந்து கெஞ்சலாய் கேட்டுக் கொண்டிருந்தவன் அதிகாரமாய் மிரட்ட தொடங்கி இருந்தான்.

“இதுக்கு முன்னாடி வீட்டில் தெரியாம பணம் எடுத்து குடுத்த தானே.. இப்பவும் அப்படியே குடு..!! என்னவோ ஒன்னும் தெரியாதவ மாதிரி ஸீன் போடாத.. நீ எவ்வளவு பெரிய கேடின்னு எனக்கு தெரியும்..”

“வார்த்தையை அளந்து பேசு கேகே..!! நான் ஒன்னும் திருடி கொடுக்கல… என் பணத்தை தான் கொடுத்தேன்.. அதையே நீ இன்னும் திருப்பி தரலை… மறந்துடாத..”

“சொல்லி காட்டுறீயா டி…?? என்ன நான் ரோஷப்படுவேன்னு நினைக்கிறீயா? உன்கிட்ட அதெல்லாம் எதுவும் கிடையாது செல்லம்..!!  எவ்வளவு வேணுமோ பேசிக்கோ.. ஆனால் நான் கேட்ட பணத்தை கொடுத்துட்டு பேசு..”

என வழிசலாய் அவன் பேசியதில்  அனன்யா முகம் சுழிக்க,

“அறிவு இருக்கா இல்லையா..? என்கிட்ட பணம் இல்லைன்னு நான் எத்தனை தடவை தான் சொல்றது..”

என கத்திவிடவும் ஒரு நிமிடம் மௌனம் காத்தவன்,

“உன்கிட்ட இல்லைன்னா விடு.. நான் உன் கஸின்.. அவ பேர் என்ன.. ஆங்.. அபூர்வா.. அவ கிட்ட கேட்கிறேன்..”

என சாதாரணமாய் சொல்ல,

“பைத்தியமா உனக்கு..” என கீச்சிட்டாள்.

“நீ தானே சொன்ன.. உனக்காக அவ உயிரே கொடுப்பான்னு.. பணம் கொடுக்க மாட்டாளா என்ன..? நான் யார் என்னானு எல்லாம் அவளுக்கு எடுத்துச் சொல்லி என் தேவையை சொல்றேன்.. சிம்பிள்..” என்று நக்கலாய் சொல்லி அவள் கோபத்தில் குளிர் காய்ந்தான்.

‘எங்கு அடித்தால் அவள் உடைவாள் என்று அறிந்தவன் ஆகிற்றே..!!’

கரிகாலன் விஷயம் மற்றவர்களுக்கு தெரிவது அவளுக்கு அவமானமாக தான் எண்ணினாள்.

‘தான் செய்த மிக பெரிய பாவம் கரிகாலன்..!! அந்த தவறால் யார் பார்வையிலும் தன் பிம்பம் தாழ்ந்து போவதை கற்பனையில் நினைத்தாலும் கூசியது. அதனாலே முடிந்தளவு யாருக்கும் தெரியாமல் அவனை பற்றி மறைத்து ஒழித்து வைக்க நினைக்க அவ்வெண்ணம் அவனுக்கு சாதகமாய் இருந்தது.

ஆனால் கரிகாலனை போன்ற ஈனபிறவிகளிடம் இறங்கி போவதற்கு பதிலாக தன்மேல் அக்கறை கொண்ட உள்ளங்கள் முன்னால் எவ்வளவு தாழ்ந்தாலும் தவறில்லை என்ற நிதர்சனத்தை பேதை மனம் உணரவில்லை.

இதுவரை அவனுக்கு கொடுத்த பணம் எல்லாம் அவள் சேமித்து வைத்தது தான்.. தன் கல்லூரி தோழிகள் மூலம் ஏதேதோ காரணம் சொல்லி அவர்களை ‘ஜீ பேவில்’ அனுப்ப வைத்து தன் பணத்தை தோழிகளுக்கு கொடுத்து விடுவாள்.

ஆனால் இப்போது அவன் கேட்கும் பதினைந்தாயிரம் அவள் அளவில் பெரிய தொகை தான்..!!

இப்போதும் கமலினியிடம் உண்மையை சொல்லி விடலாம் என்று வந்தவள் அதனை சொல்ல தைரியம் இல்லாமல் மீண்டும் தவறான பாதையையே தேர்ந்தெடுத்தாள்.

கமலினியின் திறன்பேசியை மெதுவாக எடுத்துக் கொண்டு அறையைவிட்டு வெளியே வந்தவள் மிகுந்த பயத்துடன் அவளின் வங்கி கணக்கில் இருந்து அவனுக்கு பதினைந்தாயிரம் அனுப்பி வைத்தாள். அதனை செய்து முடிப்பதற்குள் உள்ளுக்குள் உதறல் எடுத்தது தான்.. ஆனால் அவளுக்கு வேறு வழி தெரியவில்லை.

வங்கியில் இருந்து வந்த குறுஞ்செய்தியை அழித்துவிட்டு திறன்பேசியை மீண்டும் அதன் இடத்திலே வைத்துவிட்டாள். பணம் குறைவது சில நாட்களுக்கு கமலினிக்கு தெரிய வாய்ப்பில்லை. தெரிந்தாலும் அவள் அனன்யாவை சந்தேகப்பட போவது இல்லை. அதனை  திட்டமிட்டே இவ்வாறு செய்தாள்.

தன் சொந்த அக்காவிடமே திருட வைத்து விட்டானே என்று அழுகை பொங்க யார் கண்ணிலும் படாமல் குளியலறையில் ஷ்வர் அடியில் நின்று தேம்பி தேம்பி அழுதாள்.

‘ ஸாரி கமலி.. கண்டிப்பா இந்த பணத்தை நான் எப்படியாவது மறுபடியும் வைச்சிடுவேன்…’ என்று அழுகையாய் தானாக சொல்லிக் கொண்டவள்,

‘இதுவே முதலும் கடைசியுமாக இருக்கணும்.. இதன்பின் எப்படியாவது அவனிடம் இருந்து பிரச்சனை இன்றி நல்ல முறையிலே பிரேக் அப் செய்து விலகிவிட வேண்டும்’ என தன்னையே தேற்றிக் கொண்டாள். அவன் இவளை போன்று எத்தனை பெண்களை பார்த்து இருக்கிறான் என்பது பாவம் அவளுக்கு தெரியவில்லை.

மறுநாள் காலையில் சுந்தரமூர்த்தி தன்னோடு கிளம்பிய மகளிடம்,

“மதியம் ஸ்கூட்டியை சரி பண்ணி கடையிலே வந்து விட்டுடுறேன்னு சேகர் சொன்னான் மா.. இன்னைக்கு உன் வண்டி வந்திடும் பஸ்ஸில் போக அவசியம் இருக்காது..”

என்று சொல்ல திருதிருவென முழித்தாள். அவர் சொன்னதோடு தன் அடுத்த வேலையை பார்க்க நகரவும்,

“அப்பா..” என்று பக்கத்தில் வந்தவள்,

“ஸ்கூட்டியை வீட்டிலே கொண்டு வந்து விட சொல்லுங்க ப்பா.. நான் பஸ்ஸிலே வந்திடுறேன்..”
என நெற்றியை சுரண்டி தயக்கமாய் கூறினாள்.

அவளை கேள்வியாக பார்த்த சுந்தரமூர்த்தி,

“ஏன் மா.. நேத்தே நீ ரொம்ப சோர்வா இருந்தேன்னு பாட்டி சொல்லிட்டு இருந்தாங்க.. அதனால தான் சேகரை உடனே சரி பண்ணி அனுப்ப சொல்லி இருந்தேன்.. நீ இப்படி சொல்ற..”

என்று கேட்க என்ன பதில் சொல்வது தெரியவில்லை. அவளுக்கே தன்னுடைய மனதின் போக்கு புரியாத போது அவருக்கு எங்கனம் சொல்வாள்.

“இல்ல ப்பா.. எனக்கு பிடிச்சு இருக்கு.. சும்மா ஒரு மாறுதலுக்கு ஒரு வாரம் பஸ்ல வரேனே.. ப்ளீஸ்.. வேண்டாம் சொல்லாதீங்க..”

என கிட்டதட்ட கெஞ்சியவளை
வினோதமாய் பார்த்தாலும்,

“சரி டா.. உன் விருப்பம்..” என்றுவிட அப்பாவை மீறி உன்னை யோசிக்க முடியாது என்ற பெண் இன்று அதே அப்பாவிடம் அவனுக்காக பொய் சொல்லி நிற்கிறாள் எனில்…!!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!