Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நிழலை திருடும் இருள்

நிழலை திருடும் இருள் – 6(1)

அத்தியாயம் – 6

மதில் மேல் போடப்பட்டிருந்த ஏணியில் நின்றிருந்த தினகரன் காம்பௌன்ட் அருகில் இருந்த சுவரின் உட்கூறையில் ஏற்கெனவே குறியிட்டு இருந்த இடத்தில் புதிய சிசிடிவி கேமராவை வைத்து ஸ்க்ரூ செய்தான் தினகரன்.

கண்காணிப்பு கேமராக்களின் மொத்த வியாபாரம் செய்யும் அவன் பொதுவாய் கேமரா நிறுவும் பணிக்கு தன் தொடர்பில் உள்ள ஆட்களை தான் அனுப்பி வைப்பான் என்றாலும் அந்த வழக்கறிஞர் அனந்தராமன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தானே வந்திருந்தான்.



Advertisement

புதிய கேமராவை பொருத்தியதும் இறங்கியவன் பக்க திண்டில் சற்றுமுன் தான் கழற்றி வைத்த அந்த உடைந்த கேமராவையும் எடுத்துச் சென்று அனந்தராமனிடம் ஒப்படைத்தான்.

“நல்ல கனமான ‘ராட்’ வைத்து அடிச்சு இருக்கணும் சர்.. இல்லைனா புல்லட் கேமரா அவ்வளவு ஈஸியா உடையாது.. லென்ஸ் மட்டும் அதிகம் டேமேஜ் ஆகியிருக்கு..!! பிடிச்சிட்டாங்களா சர்.. திருட வந்தவனா..?? இல்ல தெரிஞ்ச யாருமா..?”

கணினியில் புதிய கேமராவின் ஃபோகஸ் சரியாக உள்ளதா என்று பார்த்துக் கொண்டே அவரிடம் தன் அனுமானத்தை கூறி விபரம் கேட்டான் தினகரன். அவருடன் நெடுநாள் பழக்கம் என்பதாலும் உடைந்த கேமராவும் அவனிடம் வாங்கியது தான் என்பதாலும் அவர்களின் சொந்த விபரம் கேட்பதில் தயக்கமில்லை..!!

Advertisement

அவன் அருகில் நின்றிருந்த அனந்தராமனும்,

Advertisement

“ரெண்டுமே தான்..” என அவன் கேள்விக்கு பதில் கூறிய பின்,

“நாங்க இரண்டு நாள் ஊரில் இருக்க மாட்டோம்ன்னு தெரிஞ்சு தான் உள்ள நுழைய முயற்சி பண்ணி இருக்காணுங்க தீனா… முன்னாடி செக்யூரிட்டி இருந்ததால பின்னாடி உள்ள சுவர் வழியா வந்திருக்கானுங்க.!! நீ சொல்றதை வைத்து பார்த்தால் அங்க கதவு கிட்ட இந்த கேமரா இருக்கவும்.. அதில் பதியாம இருக்க பதட்டத்தில் உடைக்க  ட்ரை பண்ணி இருக்கணும்.. முட்டாள்.. சத்தம் கேட்டு அலெர்ட் ஆகி செக்யூரிட்டி வரவும் ஓடிட்டான்..”

என்று நடந்தவையை சொன்னவர் அந்த கணினியிலே பதிந்திருந்த காட்சிகளை காட்டி,

Advertisement

“இது இன்னோர் கேமரால சுவர் ஏறி குதிக்கும்போது ரெக்கார்ட் ஆனது.. ரெண்டு பேரும் மாஸ்க் போட்டு இருப்பதால் முகம் தெரியல.. பட் யார்னு கெஸ்ஸிங் இருக்கு..” என்றார் விளக்கமாய்..

“ஹோ.. சரிங்க சர்.. இன்னும் வாரன்ட்டி இருக்கு.. அதனால் நானே எடுத்துக்கிறேன்…”

“நோ.. நோ தீனா.. எனக்காக யோசிக்காத.. ரூல்ஸ்.. ரூல்ஸ் தான்.. இது இன்டன்டெடா பண்ணது.. நீ என்ன செய்வ..!! இப்ப என் சிச்வேஷன்ல யாரையும் நம்ப இஷ்டம் இல்ல.. அதனால தான்..
நீ தான் வரணும்னு சொன்னேன்..” என்றவர்,

“தேங்க்ஸ் பா.. உடனே வந்ததற்கு…”
என நட்பாய் புன்னகைத்தார். மேலும் சில விபரங்கள் பேசி விடைபெற்று வெளியே வர ஆதவனும் சரியாய் அழைத்தான்.

“ஒரு சின்ன பிரச்சனை தீனா..”
என்று எடுத்த எடுப்பில் கூற,

“காலைலயே வா.. என்ன டா..” என்றான் பதிலுக்கு சலிப்போடு..

“அன்னைக்கு சொன்னேன்ல.. தாத்தா வீட்ல ரொம்ப சண்டை போட்டு இருந்தார்னு.. இப்ப கால் பண்ணி என்னை உங்க வீட்டுக்கு அழைச்சுட்டு போக சொல்றார் டா..

அவருக்கு மனசு உறுத்தலாவே இருக்காம்.. மாமாவை பார்த்து பேசினால் தான் நிம்மதின்னு சொல்றார்..”

என்று அவன் கூறியதை கேட்டு கோபம் தான் வந்தது.

“டேய் உன்னால வந்தது.. உன்னை யார் தாத்தாகிட்ட போய் உளற சொன்னா..”

“அதான் நீயே சொல்றீயே உளறல்ன்னு.. யாராவது வேணும்னே உளறுவாங்களா..”

“ம்ம்ம்.. இந்த வியாக்கியானம் எல்லாம் நல்லா பேசு.. அம்மாவே இப்ப தான் இதை எல்லாம் மறந்துட்டு நார்மலா இருக்காங்க.. அவங்களுக்கு இந்த விஷயமே தெரியாது.. இப்ப தாத்தா வந்து சொல்லி அது புது பிரச்சனை ஆகவா..??? வேண்டாம்ன்னு சொல்லிடு..”

“நான் சொன்னால் கேட்கிற ஆளா டா அவர்.. நான் வேலை இருக்கு இன்னோர் நாள் போலாம்னு சொன்னதற்கே,

‘நீ வரலைனா பரவாயில்லை.. நானே போயிகிறேன்னு சொல்றார்..’
தான் மட்டும் போய் என்ன பேசி வைப்பாரோன்னு பயந்து தான் நானும் வரேன்னு கிளம்பிட்டேன்.. நீ எங்க இருக்க கடைலையா..??”

சிவசுப்ரமணியத்தின் குணம் தினகரனுக்கும் தெரியுமே..! ஆதவனும் தான் என்ன செய்வான்..

“சரி டா.. நான் இங்க அவங்க ஏரியால தான் ஒரு வேலையா வந்து இருக்கேன்..”
என்றவன் அருகில் உள்ள ஒரு பூங்காவின் பெயரை சொல்லி அங்கே தாத்தாவை அழைத்து வருமாறு கூறி தானும் கிளம்பினான்.

தினகரன் பூங்காவின் உள்ளே வந்து அவர்களை கண்டபோது இருவருமே ஏதோ வாக்குவாதத்தில் இருப்பது தெரிய இவனை கண்டதும்,

“இதோ.. தீனாவே வந்துட்டான்..”
என அவனை கைகாட்டி தப்பித்துக் கொண்டான்.

அருகில் வந்த தினகரன்,

“எப்படி இருக்கீங்க தாத்தா..”

என்று சாதாரணமாகவே விசாரித்தபடி லேசாய் குனிந்து அவர் காலை தொட்டு நிமிர்ந்தான். லாக்டவுன் பின்னர் சிவசுப்ரமணிய தாத்தாவை சந்திக்க நேரிடவே இல்லை. இன்று தான் பார்க்கிறான்.

“நல்லா இரு ப்பா..” என்று அனிச்சையாய் கூறியவருக்கு சட்டென்று தன் கோபத்தை வெளிப்படுத்த வரவில்லை. என்ன இருந்தாலும் ஆதவனிடம் பேசுவது போல் அவ்வளவு நெருக்கம் இல்லாத தினகரனிடம் பேச முடியாதே..!!

ஆனால் அந்த கவலை வேண்டாம் என்பது போல் ஆதவனே,

“தாத்தா என்னை கேட்டீங்கள்ல.. இவன் தான் அங்க வேண்டாம்ன்னு உங்களை இங்க அழைச்சுட்டு வர சொன்னான்.. ஏன்னு அவனையே கேட்டுக்கோங்க..”

என்று சரியாய் எடுத்து கொடுக்க திரும்பி தினகரன் பார்த்த பார்வையில் அப்படியே வானில் பறப்பது காக்காவா.. குருவியா என்ற ஆராய்ச்சியில் இறங்கிவிட்டான்.

“நான் வீட்டிற்கு வருவது கூட பிடிக்கலைனா நேரடியாவே சொல்லி இருக்கலாம் தீனா.. இவர் கூட எதுவும் கேட்கலையேன்னு சுந்தரம் மேல உள்ள கோபத்தைவிட என் மேல அதிகம் இருக்கும்னு தெரியும்..!! அந்த மன பாரம் தாங்க முடியாம தான் பார்க்கணும்னு நினைச்சேன்.. உனக்கு பிடிக்காதபோது கட்டாயப்படுத்தி சந்திக்க எனக்கும் பிடிக்கலை.. இங்க இருந்து கிளம்ப விடாமல்  இந்த கடங்காரன் தான் பிடிச்சு வைச்சு இருக்கான்..”
என்று வருத்தமாய் அவர் சொல்ல வேகமாய் மறுத்து தலையசைத்த தீனா,

“அப்படி எல்லாம் எதுவும் இல்ல தாத்தா.. எனக்கு உங்க கிட்ட பேசணும்.. வீட்டில் இருந்தால் என்னால் பேச முடியாது.. அதான் இங்க வர சொன்னேன்..”

என்று சொல்லி குழப்பமாய் பார்த்தவரோடு அருகில் இருந்த பெஞ்சில் சென்று அமர்ந்தான். ஆதவனும் தாத்தாவின் மறுபுறம் சென்று அமர்ந்துக் கொண்டான்.

“அப்பா அம்மாவிற்கு இது எதுவும் தெரியாது தாத்தா.. பெரியப்பா தான் இப்படி செஞ்சதுன்னு நினைச்சுட்டு இருக்காங்க.. நானும் அப்படியே இருக்கட்டும்ன்னு விட்டுட்டேன்..”

ஆதவன் இது குறித்து எதுவும் கூறியிருக்கவில்லை. எனவே திகைப்போடு,

“ஏன் தீனா..?? உண்மையை மறைக்கிறது தப்பு பா… தேவை இல்லாமல் உன் பெரியப்பா மேல வெறுப்பு தான் அதிகம் ஆகும்.. நீ ஏன் சுந்தரம் செய்ததை மறைக்க நினைக்கிற..”
என்றார் நம்ப முடியாமல்..

‘எதற்காக சுந்தரமூர்த்தியை பற்றி சொல்லாமல் இருக்க வேண்டும்..’
என்ற கேள்வியே குடைய அவனே தெளிவு படுத்தினான்.

“எங்க அப்பாவோட அண்ணன்க இப்படி தான்னு அவங்களுக்கு தெரியும்.. நிறைய பஞ்சாயத்து பார்த்தாச்சு.. அதனால அந்த நேர கோபத்தை வெளிப் படுத்தினாலும் பெருசா சண்டைக்கு எல்லாம் போக மாட்டாங்க தாத்தா..!! ஒதுங்கி தான் போவாங்க.. ஆனா உங்க மகன் விஷயம் அப்படி இல்லையே..??? இன்னமும் உங்களை கொண்டு பாசமா தான் இருக்காங்க..

இவரும் இப்படி தான்னு தெரிஞ்சால் ரெண்டு பேருக்குமே ரொம்ப கஷ்டமாகிடும்.. அவங்க சொந்தங்களால நிறைய துரோகம் பார்த்துட்டாங்க.. போதுமேன்னு நினைச்சேன்..”

என்று அலட்டிக் கொள்ளாமல் அவன் சொன்ன விஷயத்தில் அவருக்கு தான் என்னவோ போல் ஆனது..!!

மேலே தொடர்ந்து,

“அம்மா வந்து கண்டிப்பா சண்டை போட்டு இருப்பாங்க தாத்தா..!! உங்க உறவும் இல்லாம போயிட்டால்..?? அப்பா பாவம்..!!

இதை எல்லாம் பெரிசு பண்ணி எல்லாருக்கும் மன கசப்பை கொடுக்க தேவை இல்லை.. இந்த பிரச்சனையை இங்கேயே இப்படியே விட்டுடுங்க தாத்தா..”

என்று கூறியவனை புதிதாய் புதிராய் தான் பார்த்து இருந்தார். அவனின் முரட்டு பிம்பத்தின் உள்ளே இந்த நிதானமான அணுகுமுறையை எதிர்பார்க்கவில்லை..!!

“ஆமா டா… பெரிய அமைதி தூதுவன்னு உனக்கு பட்டம் கொடுக்க போறாங்க..”
என்று நக்கலாய் இடையிட்டான் ஆதவன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!