Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நீங்காத உறவே!...

நீங்காத உறவே!… அத்தியாயம் 13

நீங்காத உறவே!…

அத்தியாயம் 13

 பிரபாகரன் தன் தந்தையோடு போய் புதிய வண்டியை எடுத்துக் கொண்டான். அவள் உடன் செல்லவில்லை என்றாலும் நிறைக்கு அவ்வளவு மகிழ்ச்சி. கடன் இல்லாமல் கஷ்டப்படாமல் சேமிப்பைக் கொண்டு தங்களுக்கு என்று ஒன்றை வாங்குகிறார்கள்.

பிரபா, வண்டி எடுத்ததும் முதலில் மனைவியிடம் தான் காட்ட ஓடி வந்தான்.



Advertisement

“பிடிச்சு இருக்க?”

“ம்ம், நல்லா இருக்கு..” என்றவள்,

“என் கிட்ட ஓட்டி காட்டுங்க”

Advertisement

“நீயும் வா நிறை, கோயில் போயிட்டு, அப்படியே ஹோட்டல் போலாம்”

Advertisement

மனைவியை வண்டியில் அமர்த்தி மெல்ல நகர்த்தினான். மாலை வேலை என்பதால் ஜில்லென்ற காற்று வீசியது. பிரபாகரன் மிக நன்றாகவே வண்டி ஓட்டினான். அதில், நிறைக்கு அவ்வளவு பெருமை. வண்டியை தொட்டுப் பார்த்துக் கொண்டாள். தங்களின் முதல் சொத்து என்பதில் அவ்வளவு நிறைவு.

“இப்படியே கொஞ்சம் கொஞ்சமா முன்னேறனுங்க”

“முன்னேறலாம் நிறை, நிதானமா படிப்படியா முன்னேறலாம்”

Advertisement

“எனக்கும் கூட நம்பிக்கை வந்துருச்சு. விஷயம் சின்னதா இருந்தாலும் நம்ம வாழ்க்கை ஒரு படி முன்னாடி போகுது இல்ல. அது ரொம்ப பெரிய விஷயம். என்னவோ கொஞ்சம் நிம்மதியா இருக்கு வாழ்க்கை” மனதார சொன்னாள் நிறை.

அப்பா மாறவில்லை, அம்மாவும் அப்படியே தான். உடன் பிறந்தவள் என்று தங்கையும் பெரிதாக அக்காவை கண்டு கொள்ளவில்லை. ஆனாலும், நிறைக்கு என்னவோ வாழ்க்கை அமைதியாக செல்வது போல் ஒரு எண்ணம்.

பிரபாகரனிடம் அனாவசிய செயல்களோ, அலட்டல்களோ எதுவும் இருக்காது. அவனுக்கு நட்பு வட்டம் இருந்தாலும் தன் அண்ணன்மார்கள் போல அவர்களோடே விடுமுறை நாட்களை கழிக்க மாட்டான். கணவன் மனைவி இருவரும் வேலைக்கு சென்று வருவதால், விடுமுறை நாட்களில் பிரபா தன் மனைவியோடு நேரத்தை செலவிட விரும்புவான்.

அவர்கள் திட்டப்படி வாஷிங் மெஷின் வாங்காமல் போனதால் நிறை துணி துவைக்கும் போது நிச்சயம் பிரபா உடன் இருப்பான். எப்படியும் வாரத்தில் ஒரு நாள் தான் இவளுக்கு துணி துவைக்க முடியும். அந்த நாளிலே பிரபாவும் வீட்டில் இருப்பதால் மனைவிக்கு உதவி செய்வான்.

 “நீயே முடியாதவன் தண்ணிக்குள்ள நிக்காத பிரபா. நாலு துணி தானே அவ துவைக்க மாட்டாளா?” என்று தாய் அதட்டினாலும்,

“நிறையும் தான்ம்மா என்னை போல வேலைக்கு போறா. நிறைக்கும் ஒரு நாள்தான் லீவு. ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு வேலையை செஞ்சா, ஓய்வு எடுக்க நேரம் இருக்குமில்லைம்மா” என்றவன்,

சமையல் தொடங்கி துணி துவைப்பது வரை மனைவியோடு உடன் இருப்பான். அவர்களுக்குள் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கும். எதையாவது பேசிக்கொண்டே ஆளுக்கு ஒரு வேலையாக செய்து முடிப்பார்கள்.

இப்போதெல்லாம் வீட்டில் எல்லோர் பார்வையும் அவர்கள் மீதுதான். அந்த வீட்டில் மற்ற யாரைப் பற்றியும் அவர்களுக்கு கவலை கிடையாது. தங்களின் பிழைப்பு என்னவோ அதை மட்டுமே பார்த்துக் கொள்கிறார்கள்.

சினேகா கூட சொல்வாள், “இவங்களுக்குள்ள சண்டை வருமா, வராதா? அவங்க ரூம்ல இருந்து ஒரு நாளும் சத்தம் கேட்டு கூட நான் பார்த்ததில்லை. அவங்க ரெண்டு பேரும் சிரிக்கிறதோ, சண்டை போடுறதோ எல்லாம் அந்த நாலு செவுத்துக்குள்ள தான். நானும், அவரும் ஒரு அரை மணி நேரம் கூட சேர்ந்து பேச முடியாது. ஏதாவது ஒரு விஷயத்துக்கு முட்டிக்குவோம்” என்றாள் ரோகினியிடம்,

“நீங்க பரவாயில்ல உங்க மாமா எல்லாம் என்னை பார்த்தாலே சண்டை போடுவாரு. அது எப்படி ஒரு சண்டை சத்தமே வராமல் புருஷன் பொண்டாட்டி வாழ முடியும். அந்த வாழ்க்கை எல்லாம் பொய்யா தான் இருக்கும்” என்றாள் ரோகினி.

கல்யாணம் முடிஞ்சு கிட்டத்தட்ட ஏழு மாசத்திற்கு மேல் ஆக போது இதுவரைக்கும் ஒரு சின்ன சத்தம் கூட அந்த ரூமை தாண்டி வெளியே வந்ததில்லை. அப்படி எப்படி வாழ முடியும். அதுதான் அந்த வீட்டு ஆட்களின் பெரிய கேள்வி?…

கணவன் மனைவி இருவரும் அனுசரித்தால் அப்படி ஒரு வாழ்க்கை வாழலாம் என்று அவர்களுக்கு புரியவில்லை. எல்லா தம்பதிகளைப் போல நிறை பிரபாகரனுக்குள்ளும் சில சில கருத்து வேறுபாடுகளும், வாக்குவாதமும் ஏற்படும்.

மனைவியின் சத்தம் கொஞ்சம் உயரும்போதே பிரபாகரன் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுவான். பின் வாசலில் அமர்பவன் மனைவியின் கோபம் குறைந்து நிதானம் பெருகும் போது அவளிடம் தன் நியாயங்களை முன் வைப்பான்.

அதேபோலத்தான் நிறையும்… கணவன் அழுத்தமாக ஒரு விஷயத்தை சொல்லும் பொழுது அதை மீறி வாக்குவாதம் செய்ய மாட்டாள். நிறைய இடங்களில் விட்டுக் கொடுத்துப் போகும் கணவன் ஏதோ ஒரு இடத்தில் அழுத்தமாக நின்றால் அதற்கு அடிபணிந்து விடுவாள். வீம்பும், பிடிவாதமும், என் சொல் தான் உயர்ந்திருக்க வேண்டும் என்று நினைப்பும், எனக்கு மட்டுமே எல்லா விவரமும் தெரியும் என்ற அகங்காரமும் இல்லாமல் என் வாழ்க்கைத் துணை நீ…

என்னைப் போலவே உயிரும், உணர்வும், உரிமையும் உள்ள ஆள் நீ… என்னை பிரதிபலிக்கும் கண்ணாடி நீ.. என்னிடமே நான் எவ்வாறு கோபத்தையும், அதிகாரத்தையும் காட்ட முடியும். அது என்னையே திரும்ப பாதிக்கும் அல்லவா!… என்னில் சரி பாதி என் துணை. உன்னுடைய கஷ்டமும் , வலியும் என்னை பாதிக்கும் பொழுது அதற்கான வழியை நான் எப்படி முன்மொழிவது என்ற தாம்பத்தியத்தின் அடிப்படை தார்பரியமே பிரபாகரன் கை கொண்டது.

 அதனால் தான் அரைகுறை மனதோடு, நிறைய வலியோடு தன் கனவு கலைந்து போன துக்கத்தோடு பிரபாகரனுக்கு கழுத்தை நீட்டிய நிறை… இன்று அவனுக்கு தோள் கொடுத்து துணை நிற்கிறாள். ஏனெனில், பிரபாகரன் மனைவியிடம் முதலில் இறங்கி போக தயக்கம் காட்டுவதே இல்லை. குருடனுக்கு குருடன் வழிகாட்ட முடியுமா என்ற மற்றவர்களின் வாதத்தை கொஞ்சம் கொஞ்சமாக முறியடித்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த தம்பதிகள்.

அன்று நிறையை பார்க்க அவள் வேலை செய்யும் கடைக்கே வந்திருந்தார் திலகா.

“என்னம்மா”

“தலை தீபாவளி சீர் செய்யணும் நிறை”

 “காசு இல்லைம்மா?”

“காசு எல்லாம் இருக்கு நிறை” என்ற சங்கடப்பட்டவர் நிமிர்ந்து “கொஞ்சம் கம்மியா இருக்கு நிறை” என்றார்.

“என்ன கம்மியா இருக்கு எனக்கு புரியல”

“அது உன் தங்கச்சிக்கு துணி எடுத்துக் கொடுக்கப் போனேன்” நிறைத்து ஓரளவு விஷயம் புரிந்தது மேலே சொல்லுங்கள் என்பது போல் பார்க்க,

“ரெண்டு பேருக்கும் சரிசமமா தான் காசு வச்சிருந்தேன். ஆனா, அவ மாப்பிள்ளைக்கும் அவளுக்கும் காசு கூட போட்டு எடுத்துட்டா.. ரொம்ப நாள் அப்புறம் அவங்க சரியாகி தல தீபாவளிக்கு தான் வீட்டுக்கு வாரேன்னு சொல்லி இருக்காங்க” என்றார் கையை பிசைந்து கொண்டு,

நிறைக்கு நிலவரம் புரிந்தது,

“என்ன சொல்ல வாறீங்க”

“கையில கொஞ்சமா தான் காசு இருக்கு.. இருக்கிற பணத்துல நீயும், உன் புருசனும் துணி எடுத்துக்கணும்” திலகாவும் வேற என்ன செய்வார். அவர் போட்ட கணக்கு வேற…

ஆனால், சண்டை போட்டு சென்ற சின்ன மகள் தற்போது தான் வீட்டுக்கு வாரேன் என்று இருக்கிறாள்.

 “நிறை நீன்னா கொஞ்சம் அனுசரிச்சு போவ.. உன் தங்கச்சியை பத்தி உனக்கு தெரியும் தானே. கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போ நிறை” பெரிய மகள் கோபித்துக் கொள்ளப் போகிறார்கள் என்று தயங்கியே சொன்னார்.

“கையில எவ்வளவு வச்சிருக்கீங்க?”

“ஆறாயிரம்”

“உங்க சின்ன மாப்பிள்ளைக்கு எவ்வளவு ரூபாய்க்கு டிரஸ் எடுத்தீங்க”

 கொஞ்சம் சங்கடப்பட்டு கொண்டே “எட்டாயிரம்” என்றார்.

அவளுக்கு ஒரு பெருமூச்சு வந்தது. என்ன சொன்னாலும் புரிந்து கொள்ள மாட்டார்.

“அம்மா உங்க சின்ன மகளுக்கு நீங்க எவ்வளவும் செய்யுங்க. நான் தடுக்கல. ஆனா, வரவுக்கு தாக்கத்தான் செலவு இருக்கணும். கடன் வாங்கி கூட பெருமையா உங்க மகளுக்கு செய்ங்க. ஆனா, கடன கழிக்கிற அளவுக்கு வசதி இருக்கணும். அப்படி இல்லாம வெட்டி பந்தா பண்ண கூடாது” என்றவள்,

“நான் பல தடவை சொல்லிட்டேன். நாம பெத்த பிள்ளைக்கு செஞ்சாலும், நம்ம சக்திக்கு மீறி செய்ய கூடாதும்மா” என்றவள், தாயை அழைத்து கொண்டு துணி கடைக்கு சென்றாள்.

தன் தங்கச்சி கணவருக்கு எந்த விலையில் துணி எடுத்தார்களோ அதே விலையில் தன் கணவனுக்கும் எடுத்துக் கொண்டாள்.

“நிறை, என் கையில காசு குறையுது”

 “மிச்ச காசு நான் போட்டுக்கிறேன்”

“அப்போ உனக்கு புது துணி”

“எனக்கு புது துணி எதுவும் வேணாம்” என்றதும் பதறியவர்,

 “என்னடி சொல்ற தல தீபாவளி அதுவுமா புது துணி போடாம இருக்கலாமா? பிரபாவுக்கு எதுக்கு இவ்வளவு விலை துணி?” என்றதும் கோபம் கனன்றது நிறைக்கு…

“அப்போ உன் சின்ன மருமகன் போடலாம். என் புருஷன் அதுக்கும் குறைஞ்சு போயிட்டாரா?” என்றாள் கோபமாக,

“அது இல்லடி உனக்கு துணி” என்று இழுக்க,

“இங்க பாருமா நான் தான் உனக்கு பொண்ணு. உன் கஷ்டத்தை பார்த்து நான் தான் அனுசரிச்சு போக முடியும். அதுக்காக என்னை கட்டிக்கிட்ட அந்த மனுசரையும் எல்லா இடத்திலும் கீழே இறக்காத…”

“வளரு, என் தங்கச்சி அவளுக்காக நான் எல்லா இடத்திலும் விட்டுக் கொடுத்து போறேன். அவளுக்காக என் வீட்டுக்காரரையும் விட்டுக் கொடுத்து போக சொல்லாத..” என்றவள், பிரபாவுக்கு மட்டுமே புது துணி எடுத்துக் கொண்டாள்.

 திலகாவுக்கு என்னவோ முகம் சுருங்கி போனது. அவரது இயலாமை ஒரு பக்கம் இருந்தாலும் மகள் விட்டுக் கொடுக்கவில்லை என்று தோன்றினாலும் கூட தனக்கென்று அவள் ஏதும் எடுக்காமல் விட்டாளே என்ற வருத்தமும் இருந்தது.

“அம்மா அப்புறம் எனக்கு நீ எந்த தீபாவளி சீரும் கொண்டு வர வேண்டாம். நீங்க வளருக்கு செஞ்சா போதும். நானும் முன்ன மாதிரி வேலைக்கு போக முடியல.. வருமானமும் ரொம்ப குறைவா தான் வருது. வீட்டுக்கு தேவையான அரிசி, மளிகை மட்டும் மாசம் நான் வாங்கி போட்டு விடுவேன். வேற எதுக்கும் என்னால முடியாதும்மா.. என்னோட வருமானத்தை எடுத்துக் கொடுக்க தான் எனக்கு உரிமை இருக்கு. தேவைக்கு அதிகமா உங்க சின்ன மகளுக்கு செஞ்சுட்டு என்கிட்ட எதிர்பாக்காதீங்க. என் புருஷன் கிட்ட எல்லாம் என்னால எதுவும் பேச முடியாது” நிறை முன்பே தீர்க்கமாக சொல்லிவிட்டாள்.

அவளுக்கு தெரியும் இனி வளைகாப்பு, பிள்ளை பேரு என்று தொடர்ந்து செலவுகள் வரும். இவளால் முடிந்த அளவுக்கு தான் பிறந்த வீட்டுக்கு செய்ய முடியும்.

திலகாவும் வேறு ஒன்றும் மகளிடம் பேசவில்லை. அவள் சொல்வதே சரி என்று தோன்றியது. ஏனெனில் வளர் திருமணத்துக்கு வாங்கிய கடனை அடைக்க இன்னும் சிரமப்பட்டு கொண்டிருக்கிறார்கள். இதில் மேலும் மேலும் கடனை சுமக்க அவர்களால் முடியாது.

கையில் பையோடு வீட்டுக்குள் நுழையும் மருமகளை பார்த்த கல்யாணி,

“கையில என்ன நிறை?”

“புது துணி அத்தை. உங்க மகனுக்கு அம்மா எடுத்துக் கொடுத்து விட்டாங்க” குரலில் கொஞ்சம் பெருமை வழிந்தது.

“தீபாவளி சீர் கொடுக்கும் போது கொண்டு வந்தா போதாதா நிறை” எல்லாம் தெரிந்தே வார்த்தையை விட்டார் கல்யாணி.

நிறை முகத்தில் அவ்வளவு இயலாமை. தெரியாதவர் அல்லவோ எல்லாம் தெரிந்தவர். அவள் வீட்டு நிலவரம் அறிந்து தான் பெண் கேட்டது. அவள் முகம் பார்த்தே, “சரி உள்ள போ” என்றதும் வந்து விட்டாள்.

இப்போதெல்லாம் அத்தை குத்தி காட்டுவது போல் பேசி விடுகிறார். அவர் பார்த்துக் கொண்டு வந்த மருமகள் எதிர்த்துப் பேசிவிட்டால், நன்றி கெட்டதனமாகி விடுமோ என்று பயந்தாள். இருவருக்கும் இடையே பெரிய அளவில் சண்டை கருத்து வேறுபாடு என்றெல்லாம் இல்லை. பிரபாகரனின் மனைவி மீதான அதிக அக்கறையும், அன்பும், அவளுக்கு கொடுக்கப்பட்ட உரிமையும் மாமியாரை சில நேரங்களில் தட்டி அடக்கி விட சொன்னது போல…

அன்றிரவு பிரபா வரும் பொழுது அவன் கையிலும் ஒரு பார்சல் இருந்தது. நிறை, அவனுக்கான உடையை கொடுத்து விடுவோம் என்று காத்திருக்க.. அதற்கு முன்பே பிரபா அவள் கையில் கொடுத்திருந்தான்.

 என்னவோ என்று பிரித்துப் பார்த்த அவளின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தது. அது இவள் ஆசைப்பட்ட சாப்ட் சில்க் சாரி.. நிறையின் ஒரு மாத சம்பளத்தை விட அதிகம். அதனால அந்த சேலையின் படத்தை ஆசையாக பார்த்துக் கொள்வாளே தவிர, அதை வாங்க முயற்சித்ததில்லை.

நிறை முகத்தில் ஆரம்ப ஆச்சரியம் போய் கேள்வியாக கணவனை முகத்தைப் பார்த்தாள். ஏனெனில் வீட்டை நிர்வாகிப்பது நிறை தான். பணப்புழக்கமும் அவள் கையில்தான். அப்படி இருக்க.. இதை வாங்க கணவனுக்கு ஏது பணம்.

“தீபாவளி போனஸ்” என்றதும்,

“ஏன் எனக்கு சொல்லல. என் கையிலயும் கொடுக்கல” என்று முகத்தை தூக்கி பேச,

“உன் கையில காசு போனா திரும்ப வராதே” என்றான் சிரித்தபடி,

உண்மைதான். நிறை கையிலிருந்து செலவழிக்க நிறைய யோசிப்பாள். அதுவும் கையில் இருந்து காசு கொடுக்க மனசே வராது. அதனால் தான் பிரபாகரன் அவளிடம் சொல்லாமல் அவளுக்கு எடுத்து வந்தான்.

இந்த சேலையை அவன் மிகவும் தேடி எடுத்து வந்திருக்க வேண்டும். முன்பே அவனிடம் சாயத் தொடங்கிய மனம். தற்போது முழுவதுமாக விழுந்தது.

நிறையும், அதேபோல அவனுக்கு எடுத்ததை கொடுக்க.. அதன் விலையை பார்த்தே கண்டு கொண்டான் கண்டிப்பாக மனைவி எடுத்திருக்க மாட்டாள் என்று…

“உன் தங்கச்சி கூட போட்டி போட்டு உங்க அம்மா அப்பாவை கஷ்டப்படுத்தாத நிறை”

“அப்படி எல்லாம் போட்டி போடுற ஆளா நானு? எனக்கு, என் தங்கச்சி புருஷன் முன்னாடி நீங்க தாழ்ந்து போகக்கூடாது”

“அதுக்காக அவங்களை சிரம படுத்தலாமா?”

 பின்ன மாச சம்பளம் வாங்கும் இவன் கூட எடுக்க தயங்குவான்.

“நீங்க நல்லவரா இருங்க. சில நேரத்துல என்ன கெட்டவளா இருக்க விடுங்க” என்றாள் அழுத்தமாக.

நிறையா பெற்றவர்களை சிரமப்படுத்துவாள். அவளுக்கு எதுவும் தேவையில்லை. அவள் கணவன் சமமாக பார்க்கப்பட வேண்டும் என்று நினைத்தாள். அவ்வளவு தான்.

 தீபாவளி காலை நன்றாக விடிந்தது. இன்று தனி சாப்பாடு கிடையாது. கூட்டுக்குடும்பமாக ஒரே சமையல் தான். எல்லாவற்றையும் வீரணன் பார்த்துக் கொள்வார். இன்று தான் மூன்று மகன் மருமகளோடு குடும்பமாக நிற்கிறார்கள். ஆளுக்கு ஒரு வேலையாக பிரித்து போட்டு செய்யத் தொடங்கினார்கள். நிறை பரபரப்பாக தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை முடித்துக் கொண்டு தயாரானாள்.

அவளுக்கு நேற்றிலிருந்து அந்த சேலையை தொட்டுப்பார்த்துக் கொண்டிருந்தாள். நாளை கட்டி அழகு பார்க்க… தன்னை தயார் செய்து கொண்டு லேசாக தலையை நீட்டி வெளியே எட்டிப் பார்த்தாள்.

 வீரராகவன் தான் போன் பார்த்துக் கொண்டிருந்தான். நிறைக்கு பெரிய ஏமாற்றம். தான் தயாராகி வருவதாக சொல்லி உள்ளே சென்றதும், அவன் தன்னைக் காண ஆவலாக இருக்க வேண்டாமா?… இன்று கூட எப்பவும் போல விலகித்தான் நிற்க வேண்டுமா?

நிறை தலையை மட்டும் நீட்டி சுற்றி முற்றி பார்ப்பதை பார்த்தா ராகவன், “என்ன நிறை?”என்றான்.

 ஒரே வீட்டில் இருந்தாலும் அடிக்கடி பார்க்கும் சந்தர்ப்பம் நேர்ந்தாலும் பேசும்படியான சூழ்நிலையை நிறை கொண்டு வரவே இல்லை. தற்போதைய வாழ்க்கை அவளுக்கு குறைவில்லை என்றாலும் வீரராகவன் குறித்த ஏமாற்றத்தின் வலி நிறைக்கு இன்னமும் உண்டு.

வீர சிவா உடன் திருமண பேச்சு வந்து உறுதியில்லாமல் பொதுவாக பேசியது தான். ஆனால் வீரராகவன் உடனான திருமண பேச்சு வீட்டு உறுப்பினர்கள் அங்கீகரித்தவுடன், அவனும் அதற்கான உரிமையை தந்தான். என்றைக்கா இருந்தாலும் நீ தான் என் மனைவி என்று ஆசையை விதைத்து கனவுகளை வளர்த்தவன், நீ எனக்கு தகுதி இல்லை என்று ஒதுக்கி தள்ளியதை ஒரு நாளும் அவளால் மறக்க முடியாது.

ஆனாலும், இருவரும் ஒரே வீட்டில் திருமணம் செய்து வந்தாயிற்று… என்ன ஒன்று அவரவர் வேறு வேறு துணையோடு இருக்கிறார்கள். தன் கணவனின் அண்ணன் என்ற முறையில் நேரடியாக கூட ஒதுங்கி நிற்க முடியாது. நியாயமான மனதின் கோபம் கூட வேறொரு துணையோடு இருக்கும் பொழுது அர்த்தமற்றதாகிவிடும். பிரபாகரன் என்ற ஒற்றை மனிதனுக்காகவே வீரராகவனை அவள் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. ஒருத்தருக்கு ஒருத்தர் முகம் பார்த்து பேசும் சந்தர்ப்பத்தையும் வளர்த்துக் கொள்ளவில்லை. இன்று ராகவன், நிறையை பார்த்து கேட்டதும்…

 “அவங்க இங்க தானே மாமா இருந்தாங்க. அவங்களை தான் தேடுறேன்” என்றாள் நிறை.

“யாரு?”

“என் வீட்டுக்காரர்” என்றதும் அவன் முகம் லேசாக மாறியது. நொடியில் சமாளித்து கொண்டவன்,

“பிரபா” என்று சத்தமாக அழைத்தான். ஏனெனில் முன்பு நிறை, ராகவன் நம்பரை தன் போனில் அவ்வாறு தான் சேவ் செய்து வைத்து இருந்தாள். தற்போது அவளுக்கு வீட்டுக்காரர் என்றால் பிரபாவை தான் நினைப்பு வரும். ராகவன், அவள் முகத்தில் மாற்றம் இல்லாததை கண்டு அவளுக்கு ஞாபகம் இல்லை என்று எண்ணிக் கொண்டான்.

“என்ன அண்ணா?” என்றதும்,

“நிறை தான் தேடுச்சு” முன்பெல்லாம் அத்தை மகள், தன் கட்டிக்க போற பொண்ணு வேற என்று உரிமையாக தான் டீ போட்டு பேசுவான். தற்போது தம்பி மனைவியான பின் வார்த்தைகளில் கவனத்தை கொண்டு வந்தான்.

“என்ன நிறை” என்று கணவன் கேட்டதும், மெல்ல வெளியே வந்தாள்.

அவள் முகத்தில் லேசான தயக்கமும், நிறைய வெட்கமும் இருந்தது. தனக்காக ஆசையாக வாங்கி வந்ததை அவனுக்காக அழகுபடுத்தி வந்தாள். பிரபாகரனின் கண்கள் வியப்பை வெளிப்படுத்தியது.

வாய் வார்த்தையாக சொல்லாமல் அவன் பார்வைக்கு சிவந்து போனாள் நிறை. “நல்லா இருக்காங்க சேலை” என்றதும்,

“நீ அழகா இருக்க நிறை” என்றதும், முகம் கொள்ளா புன்னகையோடு,

“நிஜமாவா?” என்றாள் ஆசையாக…

அவன் பார்க்க தானே அலங்காரம். அப்படி ஒன்றும் பிரபாகரன் பெரிய கலா ரசிகன் எல்லாம் கிடையாது. திருமணம் முடிந்த இத்தனை மாதத்தில் பெரிய அளவில் அவன் பாராட்டு பெற முடியாது. முதல் முறையாக மனம் திறந்து மனைவியை ரசிக்கிறான், உரிமையாக பார்க்கிறான். நிறையை கையிலே பிடிக்க முடியவில்லை.

“எனக்கே நான் அழகா இருக்குற மாதிரி தான் தோணுச்சு”

“அழகா இருக்குற மாதிரி எல்லாம் இல்லை. உண்மையிலேயே அழகா இருக்க நிறை” அவளுக்கு அவ்வளவு திருப்தி. அழகி என்று மற்றவர்கள் பார்க்க வேண்டாம். ஆனால், கட்டிய கணவன் பார்க்க வேண்டுமே!… பிரபா வாய் திறந்து சொன்ன பின் தான் நிறைக்கு முழு திருப்தியே வந்தது.

அன்று முழுவதும் அடிக்கடி தன்னை கண்ணாடியில் பார்த்துக் கொண்டாள். மதியத்திற்கு மேல் வேற ஆடை உடுத்திக் கொண்டு மற்ற இரு மருமகள்களும் தங்கள் தாய்வீடு செல்ல, நிறை மட்டும் புடவையை மாற்றவே இல்லை.

பிரபாகரன் கூட கேட்டான், “உங்க வீட்டுக்கு போயிட்டு வருவோமா நிறை”

“இல்லை வேண்டாங்க நம்ம வீட்டிலேயே இருப்போம்” என்று விட்டாள். அவளுக்கு தெரியும் தன் தாய் வீட்டிற்கு தங்கையும், அவள் கணவனும் வந்திருப்பது. பொதுவாக பார்த்தால் அவள் பெற்றோர்கள் நிறையை நன்றாக பார்ப்பார்கள். அவளுக்கும் தலை தீபாவளி தான். ஆனால், சின்ன மகள் என்று வரும் பொழுது பெரிய மகளுக்கான இடம் குறைந்து போகும்.

அதுவும் வசதியான அரசு உத்தியோகத்தில் இருக்கும் மருமகனுக்கான கவனிப்பு நிச்சயம் பிரபாகரனுக்கு இருக்காது. அதை அவளால் ஏற்றுக் கொள்ளவும் முடியாது. வீட்டின் மூத்த பெண்ணாக தங்கைக்கு விட்டுக் கொடுத்துப் போனவளால், தன் கணவனும், அவள் கணவனுக்கு விட்டுக் கொடுத்துப் போவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வீணாக தாய்வீடு சென்று சங்கடப்பட விரும்பாமல் சந்தோசமாக தன் கணவன் வீட்டில் இருந்து கொண்டாள்.

அவன் அழகாக இருக்கிறது என்று சொன்ன ஒரு காரணத்திற்காகவே அன்று இரவு முழுவதும் நிறை சேலையை மாற்றவே இல்லை. அவளுக்கு நிறைய எதிர்பார்ப்புகள் வந்திருந்தது. முன்பு போல தள்ளி படுக்காமல் இருவரும் ஒரே கட்டிலில் தான் உறக்கம்.

தள்ளி நிற்கும்பொழுது பெரிதாக தோன்றாதது.. கணவனின் மூச்சுக்காற்றை உணர்ந்து அவனின் தேகம் உரச தினமும் உறங்குவதை அவஸ்தையாக எண்ணினாள். அவளையும் மீறி அவனை அணைத்துக்கொள்ள கை பரபரத்தது. சில நேரங்களில் அவனை ஒட்டிக்கொண்டு அவன் மேல் சாய்ந்து கொண்டு உறங்க மனம் உந்தினாலும், ஒரு பெண்ணாக முதல் அடியை எடுத்து வைக்க தயங்கினாள்.

கணவனோடு முழுமையாக ஒரு தாம்பத்திய வாழ்க்கை வாழ நிறைக்கு ஆசை வந்தது. கணவனின் அன்பை மட்டுமே அதிக அளவு பெற்றவளுக்கு அவனின் காதலை காண ஏக்கமாக இருந்தது. மிகவும் மென்மையான கணவனின் வன்மையான அணைப்பை உணர விரும்பினாள். இன்று தான் முதல் முறையாக தன்னை ரசிக்கிறான்.

அன்றைய இரவு அவளுக்கு நிறைய எதிர்பார்ப்பை கொடுத்தது. தயக்கமும் வெட்கமுமாக அவன் அருகே செல்ல, பிரபாகரன் எப்பவும் போல தான் இருந்தான். அவன் முகத்தில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை.

தன் மனதை தானே சமாதானம் செய்து, “என்னங்க, இன்னைக்கு நாள் ரொம்ப நல்லா இருந்துச்சு இல்ல” என்று கணவனை நெருங்கி அமர,

“தீபாவளின்னா ஹாப்பியா தான் இருக்கும் நிறை”

“அதுமட்டுமில்ல எனக்கு இந்த சேலை ரொம்ப பொருத்தமா இருந்துச்சு. அத்தை கூட நல்லா இருக்குன்னு சொன்னாங்க. எனக்கே நான் அழகா இருக்கிற மாதிரி இருக்கு” என்றவாறு அவன் தோள் சாய,

“ஆமா, சேலை கலர் உனக்கு எடுப்பாக இருந்துச்சு” என்றவன்

“தூங்கலாமா நிறை. நாளைக்கு எனக்கு வேலை இருக்கு” என்றவனை ஏமாற்றமாக பார்த்தாள் நிறை. அவளாகவே வலிய சென்று அவனை அணைத்து பிடித்து இருக்கிறாள். அந்த வகையில் அவளுக்கு தலை இறக்கம் தான். அவனாக அல்லவா மனைவியை நெருங்க வேண்டும். மனைவியின் பார்வையின் காதலையும், அவள் கையின் அழுத்தத்தையும் அவன் உணரவே இல்லை. நீட்டி நிமிர்த்து படுத்து விட்டான்.

படுத்ததும் உறங்கி விட்ட கணவனைப் பார்த்து நிறைப்பு பெரிய ஏமாற்றம். இயல்பாக நடந்ததா இல்லை வேண்டுமென்றே தன்னை கணவன் ஒதுக்கிகிறானா? குழப்பமாக இருந்தது. வேகமாக கண்ணாடியில் சென்று தன்னைப் பார்த்தாள். கொஞ்சம் பூசிய உடல்வாகு தான் நிறை.

எட்டு மாதங்கள் பெரிய பெண் என்பதால் தன் தோற்றம் அவனை கவரவில்லையோ?… தான் கொஞ்சம் கலர் கம்மியாக இருக்கிறோமோ?.. அதுவும் இல்லாமல் அவன் அண்ணனை மனதில் நினைத்ததை கணவன் நினைத்து கொண்டிருக்கிறானா? அப்படி ஒரு நினைப்பு நிறைக்கு ஓடிய போது கண்கள் கலங்கிவிட்டது. இது ஒன்னும் காதல் திருமணம் கிடையாது கட்டாய திருமணம். அப்படி இருக்க பிரபாவும் மாமன் மகன் தானே. ஆனால், அவள் மனதில் நினைத்தது என்னவோ அவன் அண்ணனை அல்லவா? அதுதான் கணவன் மனதில் உறுத்திக் கொண்டிருக்கும் விஷயம் என்றால்… பயந்து போனாள் நிறை.

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!