Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நீங்காத உறவே!...

நீங்காத உறவே!… அத்தியாயம் 14

நீங்காத உறவே!…
அத்தியாயம் 14
நிறை தன்னையே நிந்தித்து கொண்டாள். கணவனுக்கு தன் தோற்றம்தான் காரணமோ என்ற எண்ணம் அதிகமாக உருவானது. அடுத்த நாள் முதல் தன் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இறங்கி விட்டாள்.
இருவர் இருந்தால் அதில் ஒருவருக்கொருவர் ஆதரவாகவும், அன்பாகவும் இருந்து கொள்ளலாம். ஆனால், கணவன் மனைவிகளிடையே அது மட்டுமே போதுமானதாக இருக்காது. நிறைக்கு இயல்பாகவே தன் கணவன் மீது ஆசையும், காதலும் வந்தது. அவனோடு ஒரு நல்வாழ்க்கை தொடங்கவே விரும்பினாள்.


Advertisement

விரும்பிய உணவுகளை உண்ணுவதை குறைத்தாள். ஆரம்பத்தில் நிறைக்கு அவ்வளவு சிரமமாக இருந்தது பசியை அடக்குவதற்கு… மனைவி தன்னை வறுத்தி கொள்கிறாள் என்று கணவன் உணரவே இல்லை. ஏனெனில் குடும்ப பொறுப்பை முழுதும் பார்ப்பது நிறை தான். அடுத்த வேலை உணவுக்கு என்ன தேவை என்பது வரை பட்டியல் போடுவதும் அவள்தான்… கணவனுக்கான உணவுத் தேவையை பார்ப்பதும் அவள் என்பதால் உடல் குறைப்பில் மனைவி இருக்கிறாள் என்பது அவனுக்கு தெரியவில்லை.
நிறையும் தம் கட்டி ஒரு மாதத்தை கடந்து விட்டாள். ஆனால், அவளுக்கு உடலில் பெரிய அளவில் வித்தியாசம் இல்லாததைப் போன்ற உணர்வு. நிறை ரொம்பவும் குண்டு என்று சொல்லும் அளவில் எல்லாம் கிடையாது. ஆனால், பிரபாகரனோடு பார்க்கும் பொழுது அவள் மனதில் ஜோடி பொருத்தம் இல்லையோ என்ற நினைப்பு.
கணவன் வாய் வார்த்தையாக எதுவும் சொல்லாத போதும் சேலை அவனுக்கு விருப்பம் என்று அறிந்தவள்… சமீப நாட்களில் அதைத்தான் தொடர்ந்து அணிவது. தற்போது ஒரு எண்ணம் ஒருவேளை சேலையில் தான் கொஞ்சம் குண்டாக தெரிகிறோமோ என்று… காசை பார்க்காமல் விதவிதமாக சுடிதார் எடுத்தாள். தொடர்ந்து தன்னை அழகுபடுத்திக் கொண்டாள். என் கணவன் அவனுக்காக அவன் பார்க்கத்தானே என்று தன்னை சமாதானம் செய்து கொண்டாள்.

Advertisement

முன்பு அவளுக்கு நிறைய செலவுகளும், பொறுப்புகளும் இருக்கும். தற்போது சேமிப்பு மிஞ்ச, தனக்காக என்று நிறைய செலவு செய்தாள்.

Advertisement

அன்று பிரபா வேலை முடிந்து மனைவியை அழைத்துச் செல்ல வந்தான்.. கடையில் நிறை இல்லாமல் போக அவளுக்கு போன் செய்தான்.
“நிறை, நான் வந்துட்டேன். எங்க இருக்க?”
“ஒரு கால் மணி நேரம் இருங்க. நான் பார்லர் வந்து இருக்கேன்” என்றதும் அதிர்ந்து போனான்.

Advertisement

அப்படியெல்லாம் செலவு செய்யும் ஆள் கிடையாது தன் மனைவி.. அதுவும் பார்லர் எல்லாம் அவளை பொறுத்தவரை வீண் செலவு. அப்படி இருக்க என்னவானது.. எல்லாவற்றையும் மனதில் நினைத்தாலே தவிர மனைவியை பார்த்து ஒன்றும் கேட்கவில்லை. சக பெண் பிள்ளையாக அவளுக்கு இருக்கும் ஆசை போல என்று நினைத்துக் கொண்டான். அதில் எல்லாம் தடை சொல்லவில்லை. பிரபாவுக்கு தன் மனைவி மீது மிகுந்த நம்பிக்கை. அவள் என்ன செய்தாலும் சரியாக இருக்கும் என்ற எண்ணம் மிகுந்திருந்தது. அதனால், அவள் செயல்களுக்கெல்லாம் தடை போடவும் இல்லை. கேள்வி கேட்கவும் இல்லை.
 ஆனால், நிறை நடவடிக்கை தான் எல்லை தாண்டி சென்று கொண்டிருந்தது. கணவனிடம் உன்னை விரும்புகிறேன் என்றோ இல்லை உன்னுடைய அருகாமைக்கு ஏங்குகிறேன் என்றோ சொல்லாமல்.. கணவனாக தன்னை நெருங்கி வரவேண்டும் என்று நினைத்தாள்.
திருமணமாகி எட்டு மாதங்கள் தொடப்போகும் நிலையில் இயல்பாக மனைவி மேல் ஆசைகளும், எதிர்பார்ப்புகளும் ஏன் தன் கணவனுக்கு எழவில்லை. தன் அண்ணனை காதலித்த பெண். அவனுக்காக உருகிய பெண் என்று நினைக்கிறானோ!… ஏனெனில் திருமணத்திற்கு முன் பலமுறை இவனிடமே சொல்லி இருக்கிறாள் நான் உனக்கு மதினி என்று…
அப்போ நாம்தான் சரியில்லையோ! வெகு சீக்கிரமாகவே தன் மனதை மாற்றிக் கொண்டோமோ!.. நிறைய மன உளைச்சலில் இருந்தாள். அந்த மாத செலவுகள் அதிகமாகியது. என்னதான் நிறை குடும்ப பொறுப்பை பார்த்துக் கொண்டாலும் என்ன என்ன செலவுகள் என்று பிரபாகரனிடம் ஒரு வார்த்தை சொல்லிவிடுவாள்.
பிரபாவும் எதிலும் தலையிட மாட்டானே தவிர அவன் பார்வையில் இருந்து தப்பாது. இதுவரை கணவன் கண்டிக்கும்படி மனைவி ஒரு முறை கூட நடந்து கொண்டதில்லை. நிறைய செலவு செய்கிறோம் என்று நினைத்தாலும், கணவனைக் குறித்து அவளுக்கு பெரிதாக பயமில்லை. சத்தம் போட்டு பேசத் தெரியாதவன் சண்டையா போடப் போகிறான். ஒரு ஆசால்ட்டு தான்.
ஆனால், அந்த மாத செலவுகள் கையை மீறி போகவும் கவனித்தான் பிரபாகரன். தேவைக்கு அதிகமாக அனாவசிய செலவுகளில் மனைவி ஈடுபடுவது தெரிய, நன்றாக பிடித்து சத்தம் போட்டு விட்டான்.
“என்ன பண்ணி வச்சிருக்க நீ.. எதுக்கு இவ்வளவு செலவு. சிக்கனம், சேமிப்புன்னு பக்கம் பக்கமா பேசிட்டு.. இப்போ அதுக்கெல்லாம் அர்த்தம் கூட தெரியாது போல உனக்கு” நிறை வாயவே திறக்க வில்லை.
அவன் இவ்வளவு கோபப்படுவான் என்று இன்று தான் அறிந்தாள். இதுவரை மனைவியிடம் குரலை உயர்த்தி கூட பேசியதில்லை கணவன். இன்றும் சத்தம் எல்லாம் உயரவில்லை. ஆனால், கணவன் முகம் காட்டிய கோபத்தில் தன்னால் வாயை மூடி கொண்டாள் நிறை. தொடர்ந்து வெடித்துக் கொண்டிருந்தான் கணவன். தன்னுடைய தவறு தெரிந்து அமைதியாக இருந்தவள், அவனின் கோபம் தொடரவும்,
“நான் ஒன்னும் எனக்காக வாங்கல” வாயை திறந்தாள் நிறை.
“பின்ன, இந்த சுடிதார் எல்லாம் எனக்காக வாங்கினியா” என்றான் பிரபா.
“ஆமா”
“என்னது” அதிர்ந்து போய் கணவன் பார்க்க,
“உங்களுக்காகன்னா உங்களுக்காக இல்லை. உங்களுக்குப் பிடிக்குமேனு வாங்கினேன்”
“நான் எப்போ அப்படி சொன்னேன்”
“சொன்னாதானா”
 “பின்ன”
“எனக்கா தோணுச்சு” என்றாள் முகத்தை தூக்கி கொண்டு,
“உனக்கா அப்படி என்ன தான் தோணுச்சு”
“இப்படி எல்லாம் டிரஸ் பண்ணா தான், நீங்க என்ன பாப்பீங்கன்னு” அவன் முகம் பார்க்காமல் சொன்னாள்.
“இவ்வளவு எக்ஸ்பென்சிவான பொண்டாட்டியா?” ஆச்சர்ய பட்டவன்,
“இப்படி எல்லாம் டிரஸ் பண்ணனும்னு நான் உன்கிட்ட கேட்டேனா?”
“கேட்டாதானா”
“நிறை” என்று பல்லை கடித்தவன், “நல்லா தான இருந்த, என்ன ஆச்சு உனக்கு?”
“உங்களுக்கு என்னை பிடிக்கல” லேசாக கண் கலங்கும் போல இருந்தது. தான் என்ன செய்தாலும் ஆதரிக்கும் கணவன். இன்று பயங்கரமாக திட்டி விட்டான்.
“உனக்கு என்ன? உன்னை ஏன் எனக்கு பிடிக்காது. என்னைக்காவது அப்படி நடந்து இருக்கேனா?”
“நடந்தாதானா” என்று மூக்கை உறிஞ்ச,
“அடிங்” என்றவன், “உனக்கு யாரோ, என்னமோ சொல்லி கொடுக்குறாங்க”
“அப்படி எல்லாம் யாரும் கிடையாது. நானே தான் கண்டு பிடிச்சேன்”
“ஆமா, இவ பெரிய சிபிஐ ஆபிசர், கண்டு பிடிச்சாளாம். என்னத்தவாது டிவி சீரியல் பார்த்து உளறாத”
“இதையும் தான் நினைச்சேன்”
“என்னன்னு”
“நான் படிக்கல. அது கூட உங்களுக்கு குறைவா தெரியலாம்” என்ற மனைவியை ஆழ்ந்து பார்த்தான் கணவன்.
அஞ்சு நிமிசத்துக்கு மேல் அவன் பார்வையை எதிர் கொள்ள முடியாமல் வேற பக்கம் பார்த்தாள்.
“உனக்கு என்ன பிரச்சனை?” என்றான் தெளிவாக,
“உங்களுக்கு என் கூட வாழ பிடிக்கலை”
“எதை வச்சு சொல்ற”
“உங்க நடத்தையை வச்சு” என்றதும் பெரிதும் அதிர்ந்து போனான்.
“நான் அப்படி என்ன பண்ணேன். உன்னை தாண்டி கூட நின்னது கிடையாதே…”
அவளுக்கு எப்படி சொல்வது என்று தெரிய வில்லை. உன் நெருக்கம் வேண்டும் என்று சொல்ல முடியாமல் சுத்தி வந்து பேசி கொண்டிருந்தாள்.
“என் மேல எதுவும் சந்தேகமா நிறை”
“ஐயோ! அப்படி எல்லாம் கிடையாது” பதறி போய் பதில் வந்தது.
மனைவியை நெருங்கி வந்து தோள் மேல் கையை போட்டான். அவள் நிமிர்ந்து பார்க்க,
“தேவையில்லாம எதையும் நினைக்காத நிறை. நம்ம வாழ்க்கை நல்லா போகுது” எனும் போதே, கலங்கிய கண்களுடன் இல்லை என்று தலையாட்டினாள்.
தற்போது பிரபா மனைவியோடு சேர்ந்து தான் நிற்கிறேன். அவன் கை அவள் தோள் அணைத்து இருக்கிறது. அவனின் மூச்சு காற்று தேகம் தொட உரசும் போது அவனோடு இணைந்து இருக்க விரும்புகிறாள். நல்ல புரிதல் உள்ள தம்பதிகளாக இருந்த போதும் அன்யோனியமான தம்பதிகளாக இருக்கவில்லை.
தன்னை மறந்து அசந்து உறங்கும் போது கூட கணவனை ஒட்டி உறங்காமல் ஜாக்கிரதையாக தள்ளி உறங்குவது அவளுக்கு பிடிக்கவில்லை. அவளுள் எழும் அவனுக்கான தேடல் கணவனுக்கு இல்லை எனும் பொழுது தன்னை கீழாக உணருகிறாள். தன் மேல் இவ்வளவு அன்பாக இருக்கும் கணவன், காதலை வெளிப்படுத்த மட்டும் தயங்குவது ஏன்? காரணம் தெரியாமல் நிறைய யோசித்து நொந்தவள்.. இனி நேரடியாகவே கேட்டு விட முடிவு செய்தாள்.
“உங்களுக்கு என் கூட வாழ விருப்பமில்லையா?”
“நான் உன்கிட்ட விருப்பமில்லாமல் தான் வாழ்ந்துட்டு இருக்கேனா? நீ அப்படியா நினைக்கிற நிறை”
“எனக்கு பதில் சொல்லுங்க.. நேரடியான பதில் வேணும். நம்ம கல்யாணம் நடந்தது ரெண்டு பேர் விருப்பத்தை மீறி தான். ஆனாலும், எட்டு மாசம் வாழ்ந்து இருக்கோம் இல்லையா?… நமக்குள்ள வெறுப்பு, சண்டை, ஒதுக்கம் எதுவும் கிடையாது. நீங்க என் புருசன், நான் உங்க பொண்டாட்டின்னு தான் வாழ்க்கையை வாழ்ந்து இருக்கோம்”
“ஆமா” என்றான் பிரபா. ஓரளவு புரிந்தது போல…
“ரெண்டு பேர் கல்யாணம் பண்ணிகிறாங்க, சந்தோசமா அவங்க வாழ்க்கையை தொடங்குறாங்க. இனி என்ன நடந்தாலும் உனக்கு நான் எனக்கு நீ.. இந்த வாழ்க்கையில வர கஷ்ட, நஷ்டத்தை ரெண்டு பேரும் சேர்ந்து கிடப்போம். சந்தோஷமா பிள்ளைகளை பெத்துப்போம், நல்லபடியா வளர்த்து அடுத்த தலைமுறைக்கு வழி விடுவோம், கணவன் மனைவி ரெண்டு பேர்ல யாரோ ஒருத்தர் முன்ன பின்ன இந்த உலகத்தை விட்டு போற வரைக்கும் ஒருத்தருக்கு ஒருத்தர் துணையாக நிற்போம். இதுதான் தாம்பத்தியம். உங்க கையால தாலி வாங்கறதுக்கு முன்னாடி என் மனசுல என்ன இருந்தாலும், உங்க கை தாலி என் கழுத்துக்கு வந்ததுக்கு அப்புறம் நீங்க மட்டும் தான் நான் உறுதியா இருக்கேன்”
“எனக்கும் நீ மட்டும் தான் நிறை. உன்னை தாண்டி நான் என்ன யோசிக்க போறேன்” என்றதும்,
“ஆனா, என்னை தள்ளி வச்சிருக்கீங்களே.. கணவன் மனைவியா நாம ஒற்றுமையா இருப்கோம், ஒருத்தருக்கு ஒருத்தர் ஆறுதலா இருக்கோம், பக்க பலமா இருக்கோம். ஆனா அனோன்யமா இல்லையே? உரிமையா என்னால உங்களை தொட்டு பேச முடியல, நீங்க என் பக்கத்துல இருந்தாலும் எந்த தயக்கமும் இல்லாம என்னால டிரஸ் மாற்ற முடியல, நைட்டு ஷர்டோட தூங்குறீங்க. உங்களுக்கு ரொம்ப வேர்க்குது. ஒரு மனைவியா அதைத் துடைக்கவோ, ஷிர்ட்ட கழட்டி விடவோ என்னால முடியல. நான் தயங்கி நிற்கிறேன். ரெண்டு பேரும் ஒரே அறையில் தான் இருக்கோம். என் புருஷன் தானே அப்படின்ற உரிமை இல்லாம ஒரு வெளி ஆள் கிட்ட இருக்கிற மாதிரி ஜாக்கிரதையா இருக்கேன். இப்படி இருக்க எனக்கு பிடிக்கல”
“நிறை” என்றான் தவிப்பாக,
“உங்களோட சம்பளத்தில் இருக்குற உரிமையை விட, உங்க மேல எனக்கு உரிமை வேணும். ஒருவேளை நான் உங்களை விட எட்டு மாசத்துக்கு மூத்த பொண்ணுன்னு தயங்குகிறீர்களோ? உங்களோட பாக்கும் போது நான் பெரிய பொண்ணா தெரியுறேன். உங்க கண்ணுக்கு நான் அழகா தெரியலையோ? ஏதோ எண்ணம். அதான் இந்த கிறுக்குத்தனம் எல்லாம்… இதுக்கும் மேல வேற என்ன” அடுத்து பேச தயங்கினாள். அவளுக்கு எப்படி ராகவன் விஷயத்தை உடைத்து பேச என்று தெரியவில்லை.
யாரோ கண் காணாத தெரியாத ஒருத்தராக இருந்தால் கூட பரவாயில்லை. ஒரே வீடு கணவனின் அண்ணன் வேற… அதன் பாதிப்பு இருக்குமோ என்று பேச தடுமாற, மனைவி சொல்ல வந்ததன் அர்த்தம் உணர்ந்து அவள் வாயை கைவைத்து மூடினான்.
“நிறை, நிறை, நிறை.. உனக்குள்ள இருக்கிற தவிப்பு, ஏக்கம், ஆசை எல்லாம் எனக்கும் இருக்கு” என்று கணவன் சொன்னதும் நிமிர்ந்து பார்த்தாள் மனைவி.
“உன்னோட எனக்கான வாழ்க்கை ரொம்ப திருப்தி. நீ நீயா இருக்கிற திருநிறைச்செல்வியை தான் எனக்கு பிடிக்கும். இந்த எட்டு மாசம் யாரை என் மனைவியா பார்த்தேனோ, அந்த பொண்ணு தான் என் மனசுல இருக்காங்க. இவ்வளவு நாள் உன் கூட வாழ்ந்து இருக்கேன். என் அன்பை உணரவே இல்லையா நிறை” என்றதும்,
கணவனை நம்ப முடியாமல் பார்த்தாள் நிறை. ஆனால், அவ்வளவு அன்பு இருந்தும் ஏன் தள்ளி நின்றான்.
மனைவியின் முகத்தை பார்த்தே அவள் கேள்வியை உணர்ந்தவன், அவளை லேசாக அணைத்து, அவளோடு நெருங்கி அமர்ந்தான். இதோ இப்படி தான் உரிமையாக சில நேரம் நெருங்கி வருவான். அவனின் வாசம் நாசியை தொட, அவளை தூண்டி விடுவான். அடுத்து எதுவும் அவனை பாதிக்காதது போல கடந்து விடுவான். பெண் தான் தவித்து போவாள்.
 கணவனை முறைத்து பார்த்தவள், தள்ளி அமர்ந்தாள். அவளை திரும்பி பார்த்து சிரித்தான்,
“எனக்கு தெரியவே இல்லை நிறை. நீ என்னை தேடுவன்னு நான் யோசிக்கவே இல்லை. நான் வேற ஒன்னை நோக்கி ஓடிட்டு இருந்தேன்” என்ற கணவனை கேள்வியாக பார்த்தாள் மனைவி.
“உனக்காக தான்” என்றதும்,
“என்ன?” என்றாள் அதிர்ந்து,
“ஆமா, நீ ஆசைப்பட்ட வாழ்க்கையை உனக்கு கொடுப்பதற்காக. நீ எப்படி வாழனும்னு ஆசைப்பட்டேன்னு எனக்கு தெரியும். அப்படி ஒரு வாழ்க்கையை உனக்கு கொடுக்காம நான் எப்படி உன்னை எடுத்துக்க முடியும் நிறை” என்ற கணவனை அதிர்ச்சியாக பார்த்தாள் நிறை.
கல்யாண வாழ்க்கையை குறித்து அவளுக்கு நிறைய கனவுகளும், ஆசைகளும் இருந்தது உண்மைதான். ஆனால், அது எல்லாம் ராகவன் மாப்பிள்ளையாக இருக்கும் பொழுது… காதலில் தோற்று, நிறைய அழுது, விதிவசத்தால் ஒரு கல்யாண வாழ்க்கை. இதுவரை தான் எதிர்பார்த்த வாழ்க்கை இது இல்லையே என்றெல்லாம் நினைத்து ஏங்கியதில்லை. பெரிய அளவில் வசதி வாய்ப்புகள் இல்லை. இன்னும் அதே வேலைக்கு ஓடிக் கொண்டிருக்கிறாள்.
பொருளாதார ரீதியான கஷ்டத்தை தாண்டி கணவனாக பிரபாவிடம் அவளுக்கு எந்த கஷ்டமும் கிடையாது. அவள் தலையில் என்ன எழுதப்பட்டதோ அதை நிறைவாக வாழ கற்றுக் கொண்டாள். அதனால் தானோ என்னவோ ஒரே வீட்டில் இருந்தும் ராகவனின் வசதியை பார்த்து அவளுக்கு பொறாமை, ஏக்கம் எல்லாம் இல்லை. சகஜமாக பழக முடியவில்லை தவிர, யாரோவாக ஒதுக்கித் தள்ள முடிந்தது.
தற்போது நிறைவுக்கு கிடைத்திருக்கும் வாழ்க்கையின் நல்ல விஷயங்களை மனதில் கொண்டு நல்லபடியாக குடும்பம் நடத்த விரும்புகிறாள். கணவன் ஏன் அவ்வாறு யோசித்தான் என்று புரியவில்லை அவளுக்கு… ஆனால், பிரபா வேற சொன்னான்.
“நீ என்ன மாதிரி வாழனும்னு ஆசைப்பட்டாயோ அந்த வாழ்க்கையை நான் உனக்கு அமைச்சு  கொடுக்கிறது தான் எனக்கான உன் மேல உள்ள அன்பு. நான் இப்ப வேலை பாக்குற கம்பெனியில் மேலே முன்னேறுவதற்கு வழி பார்த்துட்டு இருக்கேன். அதுக்காக கடுமையா போராடிட்டு இருக்கேன் நிறை. உனக்கு ஒரு மன நிம்மதியான வாழ்க்கையை கொடுக்கணும். என் கூட சேர்ந்து நீயும் தோள் கொடுக்கிற.. இதே வீட்ல இருக்கிற எங்க அண்ணிங்க ரெண்டு பேரும் ஃப்ரீயா வீட்டுல இருக்கும்போது, நீ காலைல அவசர அவசரமா வேலைக்கு ஓடுற.. அப்படி இருந்தும் அவங்க அளவுக்கு உன்னை வசதியா என்னால கொண்டு வர முடியல” பிரபாவின் கண்களில் இயலாமை தெரிந்தது,
நிறை அவனை நெருங்கி வந்து கணவனின் கைகளை பிடித்துக் கொண்டாள்.
“இதே வீட்ல இருக்க மத்த ரெண்டு மருமகள் கிட்ட எல்லா வசதியும் இருக்கு… ஆனா, உனக்குன்னு நான் எதுவும் செய்யல. இன்னமும் நீ கைல தான் துவைக்கிற, உன் கழுத்துல நகை இல்லை. பெருசா எதுவும் வேணாம். தாலி செயின் குள்ள ஒரு குட்டி செயின், ரெண்டு வளையல் வாங்கி போடணும். இந்த கண்ணாடி வளையல் இல்லாமல் எப்பவும் நீ கழட்டாமல் போட்டுக்கிற மாதிரி ரெண்டு தங்க வளையல் வாங்கணும். நமக்கு மேல இருக்கிற கூரை நமக்கு மட்டுமே சொந்தமானதா இருக்கணும். நீ வேலைக்கு போய் சம்பாதிக்கிற சம்பளம் இல்லாம என்னுடைய சம்பாத்தியத்திலே ஒரு நிறைவான வாழ்க்கையை கொண்டு வரணும். அதுக்கு நான் என்னுடைய தகுதியை உயர்த்தனும்.. ஒரு கணவனா என்னுடைய தகுதியை நான் உயர்த்தாம எப்படி மனைவிகிட்ட உரிமை எடுத்துக்க முடியும். இந்த வீட்டில நம்மளும் இருக்கோம். சொந்த வீட்டிலேயே ஏற்றத்தாழ்வு பார்க்கும் போது, வெளியில எல்லாம் என்ன சொல்ல? ஒரு நாள் நீ வேலை பாக்குற கடைக்கு நான் வரும்போது நீ தரையை தொடச்சிட்டு இருந்த.. என்ன நம்பி வந்த உன்னை நான் எந்த விதத்திலும் நன்றாக பார்த்துக்கொள்ளலையோ? உங்க அம்மா வீட்டுல நீ என்ன கஷ்டப்பட்டயோ அதே கஷ்டம் நீ என் மனைவியானதுக்கு அப்புறம் படுற.. அதை மாத்தாம என்னால ஒரு கணவனா உன்னை நெருங்க முடியாது நிறை” கண்களில் நீர் பொங்க கணவனையே பார்த்திருந்தாள் நிறை.
“எங்க அம்மா கூட ஈஸியா உன்னை பேசிடுவாங்க. ஆனா, மத்த மருமகளை பேச யோசிப்பாங்க. ஏன்னா எங்க அண்ணனுங்க அப்படி… கட்டுன புருஷனை வச்சு தான் ஒரு பொண்ணுக்கு மரியாதை என்னும்போது அந்த மரியாதையை நான் ஏற்படுத்திக் கொடுக்கணும். நம்ம வீடாவே இருந்தாலும் உன்னை யாரும் இளக்காரமா நினைக்க கூடாது. நாம நிறைய முன்னேறனும் நிறை. என் அண்ணன் பிள்ளைகளோட, நம்ம பிள்ளைகளும் சமமா நிக்கணும். எந்த இடத்திலும் உன்னை தாழ்த்தர மாதிரி நான் விடக்கூடாது. இதெல்லாம் உடனே நடக்காது கொஞ்சம் காலம் ஆகும். ஆனா, ஒரு நாள் எல்லாத்தையும் நான் மாத்திடுவேன்”
கலங்கிய கண்களை துடைக்காமல், “பணத்தை எப்ப வேணா சம்பாதிக்கலாங்க. ஆனா வாழ்க்கை போனா திரும்ப வாங்க முடியாது. இந்த வயசு போனாலும் திரும்ப எடுக்க முடியாது. உங்களோட கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை”என்றவள், கணவனை கெட்டியாக அணைத்து கொண்டாள்.
நீ என்ன கொண்டு வந்திருக்க என்று கேட்கிற ஆண்களுக்கு மத்தியில், உனக்கான எல்லாத்தையும் நான் கொடுக்கணும். அதற்காகத்தான் உழைக்கிறேன் என்ற கணவனை நினைத்து பெருமை பொங்கியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!