Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நீங்காத உறவே!...

நீங்காத உறவே!… அத்தியாயம் 21

நீங்காத உறவே!…

அத்தியாயம் 21

கல்யாணி மருமகள்களை குறை சொல்லவில்லை. எங்களுக்குள் ஒத்துவரவில்லை தள்ளி நிற்கிறோம் என்ற பின் வற்புறுத்தி ஒன்றாக இணைத்து என்னவாக போகிறது. தொண்டைக்கு கீழ் சென்றால் ருசி அறியாத உணவிற்கே அவ்வளவு கணக்கு பார்க்கும் போது நிறையை மட்டும் குறை சொல்ல என்ன இருக்கு…

இதிலும் ஒரு விஷயத்தை கல்யாணி மனம் ஒப்புக்கொண்டது. சொந்தமாக இருக்க போய் தான் கல்யாணி என்ன குறை சொன்னாலும் நிறைபொருத்து போகிறாள். என்ன இருந்தாலும் தன் அத்தை தன்னைத் தூக்கி வளர்த்தவர் என்று… நிறையை நேராக குறை சொல்லியவரால் மற்ற மருமகள்களை அப்படி சொல்ல முடியாது. நிறை கோபத்தில் இருந்தாலும் தான் தள்ளி இருந்திருக்கக் கூடாது என்று மனம் வருந்த,



Advertisement

“நிறை, உனக்கு என்ன வேணும்? மாமா கிட்ட மீனுக்கு சொல்லி அனுப்பட்டுமா?” என்று கேட்டார்.

“நான் இந்த பழைய சோறு சாப்பிடறதுனால அப்படி சொல்றீங்களா அத்தை. நாக்கு என்னவோ இந்த ருசி தான் தேடுது. உங்க சின்ன மகன் அப்படி ஒன்னும் பொண்டாட்டிய விட்டுட மாட்டாரு” என்றாள்,

“என்ன சொல்கிறாள் இவள்?” என்று மாமியார் பார்க்க,

Advertisement

 சிறிது நேரத்திலே பிரபாவின் நண்பன் வினோத் வந்தான். அவன் கையில் பை இருக்க,

Advertisement

“மீனும், இறாலும் இருக்கு நிறை” என்று கொடுத்து போனான்.

“என்னடி இது?” என்றார் மாமியார்.

“அவர்தான் அத்தை. நம்ம வீட்டுல அசைவம் சமைக்கிற நாள் அவருக்கு தெரியும். நான் ஏங்கிற கூடாதுன்னு அவங்க பிரண்டு கிட்ட சொல்லி வாங்கி தர சொல்லுவாங்க” அவள் வெளியில் சொல்லாமல் விட்டது நிறையின் பிடிவாதம், அத்தோடு குடும்ப ஆட்களின் நடவடிக்கை. அவர்கள் செய்வார்கள் என்றெல்லாம் அவனுக்கு தோன்றவில்லை.

Advertisement

கல்யாணி தான் தன் மகனின் நடவடிக்கையை யோசித்து அமர்ந்திருந்தார்.

நிறை மதியத்திற்கு மேல் தான் உணவு சமைத்தாள். மறக்காம தன் அத்தை, மாமாவிற்கு எடுத்து வைக்க,

“இன்னும் மருமகள் கையை எதிர்பார்க்கிற அளவுக்கு கடவுள் எங்களை விடலை” என்று விட்டு போனார் கல்யாணி.

அதன் பின் நிறை எதுவும் பேச வில்லை. ஒரே குடும்பமாக இருந்தாலும் நிறைய முரண்பாடுகள் இருந்தது. அதை கவனத்தில் கொள்ளாமல் இருந்தால் மட்டுமே அவர்கள் வாழ்க்கை ஓடும்.

வளருக்கு அன்று இரவே வலி வந்து விட்டதாக திலகா போன் செய்து சொல்லி இருந்தார். நிறைக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவளால் தனியாக செல்லவும் முடியாது. அத்தோடு பொறுப்பு எடுத்துப் பார்க்க அவளுக்கு ஒன்றும் தெரியாது. நிறைக்கே தற்போது தான் மூன்று மாதம்.

“நான் காலையில சீக்கிரம் வாரேன்ம்மா.. உங்களுக்கு சாப்பாடு வேற பாக்கணும் தானே” என்றதும்,

“என்னடி நீயும் இப்படி சொல்ற.. நான் ஒத்த ஆளா ஓடிட்டு கிடக்கேன் நிறை. வளர் கூட இருக்க கூட யாரும் இல்லை. நீ இல்லாம எனக்கு ஒண்ணுமே செய்ய தோணாது. அவ வேற ரொம்ப அழுகுறா.. எல்லாத்துக்கும் உங்க அப்பாவையே தேட முடியாது நிறை. பொம்பளை துணை வேணும்” என்றார்.

அப்படி சொன்ன பின் அவளுக்கு எவ்வாறு மனம் நிற்கும்…

“அத்தை” என்றாள்,

இரவு நேரம் என்பதால் அழைத்ததும், “என்னடி, உனக்கு உடம்புக்கு எதுவும் பண்ணனுதா” என்றார் பயந்து…

மதியம் வேற மீனை வறுத்து உண்டிருந்தாள்.

“எனக்கு ஒன்னும் இல்லை அத்தை. நான் நல்லாத்தான் இருக்கேன். வளருக்கு வலி வந்துருச்சாம்”

“அப்படியா, எப்போ” என்று விவரம் கேட்டவர், அவள் சொன்னதும்,

“எப்படியும் காலையில தான் பிள்ளை பொறக்கும். நீ போய் தூங்கு” என்றார்.

“அங்க துணைக்கு ஆள் இல்லை போல அத்தை. இனி வளருக்கும் கூட பொறந்தது நான் மட்டும் தானே.. அம்மா ஒத்தையில என்ன பண்ணுவாங்க”

“அவ புருஷ விட்டு ஆளுக இல்லையா என்ன? நீயும் மாசமா இருக்கேன் என்றது உங்க அம்மா மறந்துட்டாளா? உன் புருஷன் இருந்தா உன்னை விட மாட்டான்” என்றாலும் நிறை உறுதியாக இருக்க,

 வேற வழி இல்லாமல் தெரிந்த ஆட்டோவை அழைத்துக் கொண்டு கல்யாணியும் உடன் கிளம்பிவிட்டார். மருமகள் வீடு என்பதையும் தாண்டி தன் நாத்தனார் வீடு. விஷயம் கேள்விப்பட்ட பின் வீட்டில் இருக்க முடியாது.

நிறை சென்றபோது அப்போதுதான் லேசாக வலி விட்டு விட்டு வர தொடங்கியது. நிறைக்கே ஒன்றும் தெரியவில்லை. அவளும் எதுவும் புரியாமல் தான் தங்கை அருகில் நின்று இருந்தாள். வளருக்கு தள்ளிக் கொடுக்க முடியாமல் கத்த தொடங்கி விட்டாள். அது நிறைக்கு அவ்வளவு பயத்தை கொடுத்தது.

“ரெண்டு பிள்ளை பெத்த உனக்கே ஒன்னும் தெரியல. நிறைக்கு என்ன விவரம் தெரியும்னு அவளை நிக்க வெச்சிருக்க” என்றார் கல்யாணி.

 “இல்லை மதினி, அவன்னா கொஞ்சம் தைரியமா இருப்பா” என்றார் திலகா.

“வாய் பேசிதிரிஞ்சா தைரியமான ஆளா? உன் பெரிய மகளும் மாசமா இருக்கா.. தல பிரசவம், அவ மனசு எம்புட்டு பயப்படும்” என்றவர், நிறையை அனுப்பி விட்டு கல்யாணி உடன் நின்றார்.

மிகவும் முடியாமல் ஆபரேஷனுக்கு நேரம் குறித்தார் டாக்டர்.

“என்ன ஆபரேஷனா?” திகைத்தார் திலகா. எவ்வளவு பணம் செலவாகும் தெரியலையே.. மகள் உயிர் முக்கியமாக பட, பேசாமல் தன் தாலியைக் கூட விற்று விடுவோம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்.

இந்த முடிவு எடுத்த பின் நிறைவுக்கு எவ்வாறு மனம் தாங்கும்.. அவள் தன் பிரசவ செலவுக்கு என்று சேமித்து வைத்திருந்த பணத்தை கட்டி விட்டாள். பின் வருவதை அப்போது பார்த்துக் கொள்வோம். தற்போது தங்கை முக்கியமாக பட்டாள்.

தன் அத்தையை பார்த்து தயங்கிக் கொண்டே, “இது என்னோட சம்பள பணம் அத்தை” என்றாள்,

“நான் எதுவும் கேட்கல நிறை” என்றவர்,

“பிள்ளை மாசமாகும்போதே காசை சேர்த்து வைக்கணும்னு தெரியாதா? அது சரி அம்புட்டு விபரம் இருந்தால் நீ எதுக்கு பெரிய மகளை வைத்து சின்ன மகளை கட்டி கொடுத்து இருப்ப.. எம் மருமகளுக்கும் நாங்க தான் பார்க்கணும் போல…” என்றதும், திலகாவுக்கு அவமானமாக இருந்தது.

அவரிடம் கொஞ்சம் பணம் இருக்கிறது. சுகப்பிரசவத்திற்கு சரியாக இருக்கும் என்று நினைத்திருந்தார். இப்படி எல்லாம் யோசிக்கவில்லை. அவர் வைத்திருந்ததோடு தன் கையில் இருந்ததையும் சேர்த்து போட்டு தான் வளர்க்கு பிரசவம் பார்த்தார்கள்.

அதிகாலை பெண் குழந்தை பிறந்தது. அப்போதுதான் நிறை மூச்சு விட்டாள். தற்போது தானே மூன்று மாதம்.. பெரிதாகப் பிரசவம் குறித்த பயமில்லை. ஆனால், இங்கு வந்ததிலிருந்து அந்தப் பிரசவ அறை, மற்ற பிரசவ வலி வந்த பெண்களைப் பார்த்ததும் அவர்களின் அழுகையை கண்டு ஒரு மாறி படபடப்பு, பயம் இருந்தது. தங்கை நன்றாக இருக்கிறாள் என்று தெரிந்த பின் தானாக ஒரு தெம்பு வந்தது.

அதன் பின் தான் கவனித்தாள். வளர் வீட்டில் இருந்து ஒருவரும் வரவில்லை என்பதை…

“அம்மா, வளர் வீட்டுக்கு சொல்லிட்டீங்களா?”

“வலி வந்ததும் சொல்லிட்டேன் நிறை. இப்ப குழந்தை பிறந்த பிறகும் சொல்லிட்டேன்” என்றார். சரி பார்ப்போம் என்று நிறை காத்திருக்க, வளர் கண்விழித்துப் பிள்ளையை வாங்கிக் கொண்டாள். ஆனால், அவள் கணவன் வரவில்லை.

இனி அமைதியாக இருக்க முடியாது என்று நினைத்தவள், “வளரு உன் புருஷனுக்கு போன் பண்ணி சொல்லு” என்றதும், அவள் கண்களில் நீர் கொட்டியது.

“என்னாச்சு” என்றாள் பதறி போய்..

“என்ன ஆகணும், மருமகன் வீட்டுல வர முடியாதுன்னு சொல்லிட்டாங்களாம்”

“என்ன” திகைத்தவள், “ஏன்?”

“என்னத்த சொல்ல எல்லாம் உங்க அப்பன் தான்” என்றார் திலகா.

தங்கையை பார்த்தவள், பயந்து போய், “என்னம்மா?”

“யாருக்கும் தெரியாம மருமகன் கிட்ட காசு வாங்கி இருக்காரு.. அவங்க வீட்ல தெரிஞ்சு பெரிய பிரச்சனை” என்றார்.

“திரும்பவும் ஆரம்பித்து விட்டாரா? எவ்வளவு புத்தி சொன்னாலும் திருந்த மாட்டீங்க. வாங்குன பணத்தை கொடுக்க வேண்டியது தானே. மருமகன் கிட்ட கை நீட்டுற அளவுக்கு தரம் தாழ்ந்து போயாச்சு” என்றாள் வெறுப்பாக,

“அது வந்து.. தொகை கொஞ்சம் அதிகம்”

“எவ்வளவு பணம்? அப்படி என்ன செலவு?” என்றாள் புரியாமல்..

“அஞ்சு லட்சம்” என்றதும்,

“என்ன?” என்று நெஞ்சில் கை வைத்தாள்.

தந்தையின் அதிகபட்ச செலவே அவர் குடிப்பதற்கு மட்டும்தான். மற்றபடி குடும்பத்திற்கு எதுவும் தர மாட்டார். அவருக்கும் பெரிய செலவு எதுவும் இருக்காது.

“என்னம்மா சொல்றீங்க? அவ்வளவு பணம் வாங்கி அவர் என்ன செலவு செய்தார்” என்றாள் அதிர்ச்சியாக,

பெரிய மகளை பார்த்து தயங்கியவர், “ஆமா நிறை, நம்ம வளர கல்யாணத்துக்கு வாங்குன சீர் மொத்தமும் கடன் தான். வட்டி மட்டும் தான் கட்ட முடிஞ்சுச்சு முழுசா சமாளிக்க முடியல. உங்க அப்பா தானே பொறுப்பெடுத்தது.. மருமகன் கொஞ்சம் உதவி செஞ்சா, நம்ம மேக்கால இருக்க தோட்டத்தை வித்து கூட காசு கொடுத்து விடலாம் என்று பார்த்தோம்”

 “ஆக, உங்களுக்கும் எல்லாம் தெரிஞ்சிருக்கு.. எப்படிம்மா வீட்டுக்கு வந்த மருமகன் கிட்ட பணம் கேட்டீங்க” என்றாள் சலிப்பாக,

திலகாவுக்கும் பெரிய மகளை பார்த்து பேச முடியவில்லை. பின்ன எத்தனை முறை சொல்லி இருப்பாள், தங்கள் தகுதிக்கு மீறி செலவு செய்யாதீர்கள் என்று… ஆனால், வேலைக்கார மருமகன் ஆடம்பரமாக செலவு செய்தார்கள். ஆரம்பத்தில் தெரியவில்லை, நாள் போக போக நன்றாக மாட்டிக் கொண்டார்கள். வட்டிக்கடன் என்பதால் முழுதாக அடக்க முடியாமல் மிகவும் சிரமப்பட, நிறைமுன்பே சொல்லிவிட்டதால் அவளிடமும் எதிர்பார்க்க முடியவில்லை.

வளருக்கு தெரியாமல் சின்ன மருமகனிடம் தான் வாங்கி இருந்தார்கள். தற்போது இரண்டாவது சம்மந்தி வீட்டில் மரியாதை போய்விட்டது. பணத்தை கொடுத்தால் தான் உறவு என்றாகி விட்ட நிலை.

“உன் சின்ன மகளும் சேர்ந்து தான் ஆடி இருக்கா” என்றார் கல்யாணி.

உண்மைதான். அது வேணும் இது வேணும் என்று லிஸ்ட் போட்டு வாங்கி போனது வளரு தான்.

நிறைக்கு இதில் என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஏதாவது யோசனை சொல்லி தானும் மாற்ற விரும்பவில்லை. அப்படியெல்லாம் எளிதாக அடக்கக்கூடிய அளவுக்கு தொகை சிறியதும் கிடையாது. கடன் வாங்கி செலவு செய்யும்போது பணத்தின் அருமை தெரியவில்லை. வட்டி எட்டும் போது தெரிந்த என்ன பயன்.

பிள்ளையை மடியில் வைத்துக் கொண்டு அழும் தங்கையை பார்த்து அவளுக்கு பாவமாகத்தான் இருந்தது.

“ம்ச்.. அழுகாத வளரு, தையல் பிரியும்”

“குழந்தை பிறந்தது தெரிந்தும் இந்த பச்ச பிள்ளை முகத்தை கூட பார்க்க வரவில்லை” என்று அழுதாள்.

“சரி விடு பார்க்கலாம்” உறுதியாக இல்லாமல் பொதுவாக சொன்னாள். பின்ன அவ்வளவு பெரிய தொகைக்கு தான் உறுதி சொல்ல முடியுமா?…

“என்னத்த சொல்ல.. நல்ல பெத்தவங்க? ஊரு உலகத்துல பிள்ளைகளுக்காகவே வாழ்றாங்க. நாடு விட்டு நாடு போய் கூட பொண்டாட்டி பிள்ளையை விட்டுட்டு சம்பாதிக்கிறது யாருக்காக பெத்த பிள்ளைகளுக்காக.. இங்க என்னடான்னா பெத்ததுக்கு கூலி கேப்பீங்க போல” என்றார் கல்யாணி.

வீட்டின் முதல் வாரிசு. சந்தோசமாக வரவேற்க முடியாத நிலை..

“மதினி, இந்த குடிகாரன் நம்பி இம்புட்டு காலம் இழுத்ததே பெருசு” என்றார் திலகா.

“நீ பேசாத திலகா. தப்பு முழுக்க உன் பேர்ல தான். இத்தனை வருஷம் என்னத்த நீ சம்பாதிச்ச? படிப்ப நிப்பாட்டிட்டு அவ்வளவு வேலைக்கு அனுப்பின.. அவள வச்சு கடன கழிச்சு உன் சின்ன மகளை கட்டியும் கொடுத்த.. அவளை சொந்தம்னு காதுல என்ன இருக்கோ அதோடு கட்டி கொடுத்துட்ட.. அப்ப புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேரும் நீங்க எதுக்கு இருக்கீங்க” பதில் இல்லை திலகாவிடம்,

 தெய்வமும் தலை குனிந்து தான் அமர்ந்து இருந்தார். அவருக்கு கல்யாணம் அக்கா முறை…

“குடிகாரன் வேணான்னு தனியா நின்னு இருந்தா கூட நாலு காசு கையில இருந்திருக்கும். அவரையும் கூட வச்சுக்கிட்டு, அவர் சொல்ற எல்லாத்துக்கும் சரின்னுட்டு, பெத்த பிள்ளைகளுக்கு எதுவும் செய்யாம அவங்க கிட்ட எப்படி எதிர்பார்க்க முடியும்”

“மூணு ஆம்பள பிள்ளை வச்சிருக்கிற நாங்க இன்ன வரைக்கும் மகன்ங்க கையை எதிர்பார்க்கவில்லை. பெத்த பிள்ளைகளை தள்ளி போற காலத்துல, மருமகன் வந்து பார்ப்பான் எப்படி நினைச்ச? பொம்பள பிள்ளைகளுக்கு பத்து ரூபாய் கூட நம்ம தான் செய்யணும்.. உங்களுக்கு என்ன வயசு ஆச்சு. இன்னும் ஐம்பது வயசு கூட ஆகல.. இப்பவே மகள், மருமகன் கையை எதிர்பார்த்து என்னைக்கு உங்க காலம் போக… பிள்ளையை மடியில வச்சுக்கிட்டு அழுகிறா, அவளுக்கு என்ன பதில்?”

வளரை பார்த்து நெஞ்சு துடித்தது. நேற்று வலி வந்ததிலிருந்து மகள் கணவனை தான் எதிர்பார்க்கிறாள். எங்கே? பிள்ளை பிறந்தாவது வருவார்கள் என்று பார்த்தால் அதுவும் இல்லை.

 விடவில்லை கல்யாணி, “எம் பெரிய மருமகளுக்கு என்ன குறை. வசதி நாகை எல்லாம் இருந்தும், பிள்ளை இல்லை. எட்டு வருஷம், எங்களை விட அவங்க வீடுதான் ரொம்ப நொந்து போய் கிடக்காங்க. ஒரு வாரிசுக்கு எட்டு வருஷமா நான் எவ்வளவு தவம் கிடந்தேன் தெரியுமா? உனக்கு என்ன குறை திலகா. நகை, பணம் எதுவும் இல்லாட்டியும் உன் மகள்கள் ரெண்டு பேரும் நல்லா தான் இருக்காங்க. ரெண்டு பேருக்கும் கடவுள் பிள்ளை வரத்துக்கு வழி விட்டுடுச்சு. வேற என்ன வேண்டும். இருக்கிறதை வைத்து சந்தோசப்படாம எதுக்கு இந்த ஊதாரி வாழ்க்கை”

தலை நிமிரவே முடியவில்லை இருவராலும்…

ஏனெனில் மருமகன் வீட்டில் அவ்வளவு அசிங்கப்படுத்தி இருந்தார்கள்.

நிறை எதுவும் பேசவில்லை. இது எல்லாம் அவள் கை மீறிய விஷயம்.

“நான் ஒடச்சி சொல்றேன் கேட்டுக்க திலகா. உங்க சொந்த அண்ணன் தானே, நிறைய எடுக்க அவருக்கு விருப்பம் இல்லை” என்றதும், அதிர்ந்து போய் பார்க்க,

“நிறை மேல எந்த குறையும் இல்லை. அவளை பெத்தவங்க சரியில்ல. மகளுக்கு எதுவும் செய்யாட்டியும் பரவாயில்லை. அவங்களையும் சேர்த்து பார்க்கிற நிலைமை வந்தா? இதை நெனச்சு தான் சொந்த தங்கச்சி மகளை கூட தள்ளி வச்சாரு. இதுலயாவது நீ வாழ்ந்த வழமையான வாழ்க்கையை தெரிஞ்சுக்க” என்றதும், கூனி குறுகி போனார் திலகா.

தற்போதயெல்லாம் தெய்வம் கொஞ்சம் பரவாயில்லை. அடிக்கடி நிறைய தொந்தரவு செய்வதும் கிடையாது. இந்த கடன் வளரின் கல்யாணத்தின் போது வாங்கியது. சமாளிக்க முடியாமல் தான்.. ஆனாலும், தப்பு தான்.

நிறை கவனம் முழுக்க வளரின் மேல் தான் இருந்தது. ஆப்ரேஷன் செய்த உடல், கணவன் வரவில்லை என்றதும் ஏங்கி ஏங்கி அழுக தொடங்கினாள்.

“வளரு, பிள்ளையை பாரு” என்றாலும்,

“செத்துட்டா கூட பெத்தவங்க இல்லைன்னு வாழ்ந்துட்டு போயிடலாம். இவங்க உயிரோட இருந்த நம்மள கஷ்டப்படுத்துறாங்க. என்கிட்ட கூட அப்பா சொல்லலை. என்ன மனுசன் அவரு… பெத்தா மட்டும் போதும் எப்படி நினைச்சாங்க? அவர் வந்து கூப்பிட்டால் போதும் அக்கா, எனக்கு இவங்க உறவே வேணாம். நமக்குன்னு என்ன செஞ்சாங்க. இன்னும் எவ்வளவு கடன் வாங்கின நம்ம தலையில ஏத்த போறாங்களோ?” என்ற சின்ன மகளையும் மறுத்து பேசாத பெரிய மகளை தான் பார்த்தார்கள் பெற்றவர்கள்…

 மனதில் அவ்வளவு பெரிய அடி. அவர்கள் பேசியது உண்மையும் கூட.. பெற்றவர்களாக பிள்ளைக்கு ஒன்றும் செய்யவில்லையே.. தங்கையை கண்டிக்காமல் சமாதானம் தான் செய்தாள் நிறை.

அவளுக்கும் பெரிய சிக்கல் தான். அவ்வளவு பணத்திற்கு அவள் எங்கே போவாள் கொடுத்து உதவ? தங்கை வாழ்க்கையை எவ்வாறு சரி செய்ய? ஒன்றும் புரியவில்லை. பிறந்த பச்சை குழந்தையை பார்க்கும் பொழுது மனம் கனத்தது. யாரும் சந்தோஷமாக வரவேற்கவில்லையே…

பணத்திற்கு பதில் சொல்லாமல் தங்கையை சமாதானம் செய்து பத்து நாட்களுக்கு மேல் உடனிருந்து வீட்டில் விட்டு வந்தாள். வளரின் கணவன் அதுவரை கூட வரவில்லை. அவள் தான் அழுது கரைகிறாள். பெற்றவர்களுக்கு அவர்கள் தவறு புரிந்தாலும் திருத்திக் கொள்ளும் இடத்தை கடந்து விட்டார்கள்.

நிறைக்கு நான்காம் மாதம் முடிந்து விட்டது. அன்று கார்த்திகை தீபம் என்பதால் வெளி வாசலில் தான் விளக்கு போட்டுக் கொண்டிருந்தாள். சாதாரண சேலை தான், மேடிட்டு இருந்த அவள் வயிறு அழகாக காட்டியது. பூசிய உடல்வாகு என்பதால் வயிறு வெளியே தெரிந்தது. விளக்கு வைத்த பின் மெல்ல வெளி வாசலில் நடந்து கொண்டிருந்தாள்.

அவளுக்கு தங்கள் வீட்டை நோக்கி புதிதாக ஒரு ஆள் வருவது போல் தெரிந்தது. யாராக இருக்கும்… சத்தியமாக கணவன் என்று நினைக்கவில்லை. அவள் அருகே வந்து நிற்கும் வரை கூட அது அவள் கணவன் பிரபாகரன் தான் என்று உணரவில்லை. ஆள் மாறி இருந்தான். முகத்தில் தாடியும் மீசையும் முளைத்திருந்தது. நிறை மாசமாக இருப்பதால் தாடியை எடுக்கவில்லை.

அவனுக்குமே மனைவியின் தோற்றம் அதிர்ச்சி தான். ஆனால், இனிய அதிர்ச்சி. இருவரும் பார்த்து மூன்று மாதத்திற்கு மேல் இருக்கும். கொஞ்ச நாளிலே நிறைய மாற்றம்.

அவளின் தூக்கிக் கொடுத்த வயிறு தன் பிள்ளையின் இருப்பை உணர்த்த, பிரபாகரனின் முகம் கனிந்தது.

“நீங்களா?” என்றாள் கண் நிறைக்க,

“என்னை எதிர்பார்க்கலையா நிறை”

“குரல் கூட மாறி இருக்கு” கண்களில் லேசாக கண்ணீர் வந்தது.

“ம்ச், என்ன இது?” அவள் கண்ணீரை துடைத்து விட்டான்.

“என்னவோ ஒரு மாதிரி படபடப்பா இருக்கு.. திடீர்னு உங்களை பாக்கவும் கால் தள்ளாடுது” என்றவள் திண்ணையில் அமர்ந்தாள். அவனும் மனைவியா அருகே அமர்ந்து லேசாக தோள் அணைத்தான்.

இன்னும் உள்ளே செல்லவில்லை. எதிர்பார்க்காமல் வந்ததால் ஒரு மாதிரி மனம் படபடத்தது.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!