Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நீங்காத உறவே!...

நீங்காத உறவே!… அத்தியாயம் 23 2

வளைகாப்பு நல்ல பிரம்மாண்டமாக நடந்தது. முன்பு வீர ராகவன் திருமணம் நடந்த மண்டபம் தான். அன்று ஒரு நாள் அந்த மண்டபத்தை பார்த்து கண்மணி தெரியாமல் அழுது கொண்டு ரோட்டில் நடந்தது நினைவு வந்தது. லேசான நினைவு மட்டும் தான் பெரிய அளவில் எந்த பாதிப்பும் அவளுக்கு இல்லை.
“நம்ம வாழ்க்கையில எந்த தப்பும் செய்யாம ஒரு கஷ்டத்தை எதிர்கொண்டா? கண்டிப்பா அதுக்கு பிரதிபலனா மிகப்பெரிய சந்தோஷம் கிடைக்கும்” மனதில் நினைத்து சாமியை வணங்கி விட்டு, கணவனின் கைப்பிடித்து மனையில் அமர்ந்தாள். பிரபா ஆசையாக எடுத்துக் கொடுத்த சேலையை தான் அணிந்திருந்தாள்.
 பிரபா வேலையே முன்பு ஊர் ஊராக அலைவதுதான். நிறைய மக்கள் பழக்கம் அவனுக்கு… இவர்கள்தான் என்றில்லாமல் பெரியார்கள் கிராமத்து ஆட்கள் என்று எல்லோரும் அவன் வட்டத்தில் வருவார்கள். ஒருவரையும் விடாமல் அவன் அழைத்தும் இருந்தான். இங்கு வளர்க்கு கூட இவ்வளவு விமர்சையாக வளைகாப்பு செய்யவில்லை.
ரோகினி, சினேகா தொடங்கி அவன் அண்ணன்கள் வரை எல்லோருக்கும் ஆச்சரியம்தான். மிகப்பெரிய மனிதனாக தன் மனைவியின் வளைகாப்பை நடத்திக் கொண்டிருந்தான்.


Advertisement

அன்றைய மனநிலையில் ரோகினிக்கு நிறை மீது இருந்த பொறாமை எல்லாம் மாறிப்போனது. தனக்கு எப்போது இப்படி விமர்சையாக வளைகாப்பு நடக்கும் என்று மனம் ஏங்க ஆரம்பித்தது. நிறை பின்னே போய் தன் வாரிசை எதிர்பார்த்தாள். முழுதாக எட்டு வருடம் முடியப்போகிறது.
அவன் தந்தையும் பிரமிப்பாக தன் சின்ன மகனை பார்த்தார். “வீட்டில் வாய் பேசாமல் தாய் பின்னால் ஒளிந்து கொள்பவன். இன்று எவ்வளவு ஆட்களை பழகி இருக்கிறான்”. ஆம், அவர் நினைப்புக்கு தக்க அவ்வளவு பேர் பிரபாவின் பழக்கவழக்கத்திற்கு வந்திருந்தார்கள். நிறைக்குத்தான் மனம் இறக்கை கட்டி பறந்தது. இதெல்லாம் சும்மா கற்பனையாக கூட அவள் நினைத்தது இல்லை.
இதுதான் வாழ்க்கை என்ற பின் அதை நல்ல முறையில் அமைத்துக் கொள்ளத்தான் நினைத்தாள், இவ்வளவு சிறப்பாக அமையும் என்று நினைக்கவில்லை.

Advertisement

கர்ப்பிணி பெண்ணின் முகம் பார்க்காமல் தான் கணவன் வழி அனுப்பி வைக்க வேண்டும். அவள் முந்தி சேலையில் தங்கள் வீட்டு குலதெய்வ திருநீறு வைத்து கல்யாணி வழி அனுப்பி வைக்க, கணவனை காணாமல் முகம் சுருங்கி போனது நிறைக்கு…

Advertisement

“யார் என்ன சொன்னாலும் அவர் வந்து நின்று இருக்க வேணாமா?” நினைத்து கொண்டே தான் கிளம்பினாள்.
ஆண் அவனைப் போய் ஒளிந்து கொள்ளும் போது, நான் என் புருஷன் முகத்தை பார்ப்பேன் என்று எப்படி வாயாட முடியும். வாயை மூடி கிளம்பி விட்டாள். அன்று மாலையே மனைவியை பார்க்க பிரபா கிளம்பினான் தான்.
ஆனால், கல்யாணி தான் கண்டிப்பாக ஒரு இரவு பிரிந்திருக்க வேண்டும் என்று விட்டார். பிரபா அப்போது தான் வெளியில் அமர்ந்து மனைவியோடு பேசி முடித்தான். அவள் சடவ பேசியதை எல்லாம் சமாளித்து சரி கட்டி நிமிர, வீர ராகவன் நின்று இருந்தான்.

Advertisement

“என்ன அண்ணா?”
 “நீ கொஞ்சம் அவசரப்பட்டிட்டியோன்னு தோணுது பிரபா” என்றான்.
“என்னாச்சு அண்ணா?”
“இப்ப எதுக்காக லோன் போடணும், அத்தோடு நிறை பேருல சொத்து வாங்கணும். நீ இப்போதான் மேனேஜர் ஆயிருக்க, கொஞ்சம் நிலையா நின்ன பின்னாடி இதெல்லாம் பார்த்து இருக்கலாம்” அக்கறையில் தான் அண்ணன் சொன்னான்.
“வேற எப்படி யோசிச்சு இருக்கணும்.. இதை விட்டா வேற வழி எங்களுக்கு கிடையாது. அவங்க வீட்டு பிரச்சனையில நான் தலையிடாம இருந்தா, நிச்சயம் நிறை தான் தலையிட்டு இருப்பா.. எல்லாருக்கும் சாதகமா, யாரையும் பாதிக்காமல் ஒரு முடிவு எடுக்கணுமே…”
“வேலைக்கு சேர்ந்து அஞ்சு ஆறு மாசத்திலேயே இவ்வளவு பெரிய அமவுண்ட்ல லோன் போடுறது கொஞ்சம் ரிஸ்க் தான் இல்ல” என்றான் அண்ணன்.
“ரிஸ்க்கு தான். ஆனா நிறைக்காக செய்யலாம்” என்ற தம்பியை ஆச்சர்யமாக பார்த்தான் அண்ணன்.
“நீங்க எனக்கு அண்ணன். எனக்காக யோசிக்கிறீங்க. ஆனா, நிறை பக்கம் இருந்து யோசிச்சு பாருங்க.. நம்மளோட அத்தை பொண்ணுதானே. அவளோட எதிர்பார்ப்பு எல்லாம் நமக்கு தெரியும்”
“அது மட்டுமா அவளோட ஆசைகளும் தெரியும்” என்று மனதில் நினைத்துக் கொண்டான் ராகவன்.
“நம்மல்ல நிறைய பேருக்கு ஆசைப்பட்ட வாழ்க்கையோ இல்லை எதிர்பார்த்த வாழ்க்கையோ அமைவதில்லை. வேற மாதிரி அமைஞ்சாலும் அதை சரியா எத்தனை பேர் கொண்டு போறாங்க. நாலாம் தடுமாறி திணறி நிற்கிற ஆளு… எனக்குள்ள நிறைய காம்ப்ளக்ஸ் இருந்துச்சு” என்றதும்,
“என்னடா பிரபா?” என்று அருகில் வந்தான் அண்ணன்.
 “ஆமா, வீட்ல கடைசியா பொறந்ததால பெருசா எனக்கு எந்த பொறுப்பும் கிடையாது. அப்பா ஆசைப்பட்ட மாதிரி என்னால கவர்மெண்ட் வேலைக்கு போக முடியல. எனக்கு மூத்த ரெண்டு பேரு நல்ல வேலை, சம்பளம், நல்ல பெயரோட இருக்கும்போது.. நான் ஒரு யூஸ்லசா ஃபீல் பண்ணேன். நமக்கு எதுக்குமே அதிர்ஷ்டம் இல்லையே அப்படின்ற ஒரு காம்ப்ளக்ஸ் எனக்கு இருந்துச்சு. வெளிய பார்க்க நான் அமைதியா இருந்தாலும் என்னையெல்லாம் சரிகட்டி வாழ்றதெல்லாம் பெரிய விஷயம். அதுவும் நிறை.. அவளோட என் வாழ்க்கை, எங்க கல்யாணம் நடந்த விதம், என்னோட நிலையற்ற தன்மை எதுவும் அவளுக்கு பெருசா ஒரு நம்பிக்கையை கொடுத்து இருக்காது”
தம்பியை புரியாமல் பார்த்தான் ராகவன்,
“நம்ம எதிர்பார்ப்புக்கு தக்க வாழ்க்கை அமையலனா நிறைய பேருக்கு அது ஒரு விரக்தியை கொடுக்கும். அதை சரி பண்ணி வாழ்வோம்னு எவ்வளவு பேரு நினைக்கிறாங்க. நான் வந்து ஒரு சவலை பிள்ளை மாதிரி தான் நிறை கிட்ட இருந்தேன். என்னோட அவளுக்கான வாழ்க்கை பெரிய அளவுல வசதி வாய்ப்பு,சௌகரியம் எதுவும் கிடையாது. இப்ப வரைக்கும் ஒரு மிடில் கிளாஸ் வாழ்க்கை தான். இன்னமும் வேலைக்கு போறா… அத்தோட நான் ஒரு நோயாளி” என்றான்.
“பிரபா என்ன பேச்சு இது?” அதட்டினான் அண்ணன்.
“பெரிய அளவுல பாதிப்பு இல்லாட்டியும் நான் மருந்து மாத்திரை தொடர்ந்து எடுத்துட்டே இருக்கணும். சேர்ந்து ரெண்டு நாள் மழையில என்னால நனைய முடியாது. சாப்பாடுல இருந்து குடிக்கிற காபி வரைக்கும் கண்ட்ரோல்ல வைக்கணும்.. எனக்கு ஒரு சாப்பாடு சேராதுன்னா, அதை வீட்டுல சமைக்கவே மாட்டா. சொல்லும்போது சின்ன விஷயமா தெரியலாம். அதுவே காலத்துக்கும் அப்படின்னா நிறைய அனுசரிப்பு வேணும். எங்களோட வாழ்க்கைய சரி பண்ணது நிறைதான். எனக்கு பிடிக்காத ஒரு வாழ்க்கை அப்படின்னு தள்ளி நிக்காம முடிஞ்ச அளவுக்கு அதை சரியா வாழனும்னு நினைச்சா.. அந்த விஷயம் தான் நிறையோடு என்னை சேர்ந்து நிக்க வச்சது. வாழ்க்கையை நான் வேற மாதிரி யோசிச்சேன்”
“ஆனா, பிரபா. நிறை பக்கமும் குறை இருக்கு. உன்னையே தாழ்வா ஏன் நினைக்கிற…” என்றான் ராகவன். படித்த எனக்கு படித்த பெண் வேண்டும். நிறையை பிடித்து இருந்தாலும் இதையெல்லாம் குறையாக நினைத்துதான் அவளை தள்ளி வைத்தது.
“ஒரு பொண்ணை குறை சொல்லி தன்னை நிறைவாக காட்டுகிறது ஒரு ஆணுக்கு அழகு கிடையாது” ராகவன் முகம் இருண்டது,
 பிரபாவை பொருத்தவரை திருநிறைச்செல்வி அவனின் மனைவி. எந்த இடத்திலும் ராகவனின் மேல் ஆசைப்பட்ட பெண் என்ற கோணத்திலே அவன் நினைக்கவில்லை. அதேதான் நிறையும்… ஆனால், ராகவன் கடந்து விட்டதாக நினைத்தாலும், அவனின் மனதில் தான் ஓரத்தில் உறுத்திக் கொண்டிருந்தது.
“நிறை தான் உன்னோட இந்த முன்னேற்றமான வாழ்க்கைக்கு காரணம்ன்னு சொல்றியாடா?” அதைத்தான் தம்பி சொல்லிக் கொண்டிருக்கிறான் என்று தெரிந்தாலும் கேட்டான் ராகவன்.
“ஆமா, நம்மளால முடியாத நம்ம ஆசைப்படுற விஷயங்களை கடவுள்கிட்ட வேண்டுதலாகவோ, கோரிக்கையாவோ வைக்கிறோம். எல்லாருக்கும் கடவுள் பதில் கொடுக்கிறது கிடையாது. அப்படித்தான் நிறைக்கும், எனக்கும்… நாங்க எதிர்பார்த்த வாழ்க்கையை கொடுக்காமல், எங்க கையில ஒரு வெள்ளை காகிதத்தைத் தான் கொடுத்தார். உங்க வாழ்க்கைய நீங்களே எழுதிக்கோங்கன்னு.. அது சரியா செயல்படுத்தினது என் மனைவி தான். என் கூட ஒரு வாழ்க்கை எவ்வளவு கஷ்டமா இருக்குன்னு தெரிஞ்சும் முடிஞ்ச அளவுக்கு நல்ல விதமா வாழ்க்கையை தொடங்குவோம் அப்படின்னு முதல் அடியே எடுத்து வச்சது நிறை தான். அதுக்கப்புறம் தான் என்னோட பார்வையும் விரிஞ்சது. ஒரே பக்கமா யோசிக்காம, எல்லா பக்கமும் பார்த்தேன். நான் இருக்கிற இடத்திலிருந்து எப்படி முன்னேற முடியும்னு யோசிச்சேன். அப்பா ஆசைப்பட்ட மாதிரி என்னால கவர்மெண்ட் வேலைக்கு போக முடியாட்டியும், வாழ்க்கையில பின் தங்காம நான் இருக்கிற இடத்திலிருந்து முன்னேற நினைச்சேன். என் மனைவியும் கூட இருந்தாங்க, காலமும் உதவி செஞ்சது”என்றவன்,
“ஒப்கோர்ஸ், வேலைக்கு சேர்ந்து கொஞ்ச நாள்லயே இவ்ளோ லோன் போட்டு இருக்கேன். அது ஒன்னும் பிரச்சனை கிடையாது. என்னோட அதிகமான சம்பளம் எல்லாம் இந்த அஞ்சு ஆறு மாசம் தான். அதுக்கு முன்னாடி நான் வெறும் ஆறாயிரம் கூட என் மனைவி கையில கொடுத்து இருக்கேன். அத வச்சு குடும்பம் பண்ண ஆளு அவ.. ரொம்ப கெட்டி. கண்டிப்பா கீழ விழமாட்டேன்”என்றான் நிம்மதியாக..
மனைவியைப் பற்றிய பெருமை அவன் முகத்தில் நன்றாக தெரிந்தது. பிரபா எழுந்து உள்ளே செல்ல, தற்போது அந்த இடத்தில் இருந்தது ராகவன். உண்மையில் தம்பியின் முன்னேற்றம் அவனுக்கு நிறைவாக இருந்திருக்க வேண்டும். சிவாவாக இருந்தால் அப்படித்தான் நினைத்திருப்பான். ஆனால், ஏனோ ராகவனுக்கு மனதில் ஒரு மாதிரி அழுத்தியது.
 சினேகாவை பொருத்தவரை குறை என்று எதுவும் கிடையாது. அவனின் பேச்சைக் கேட்டு கைக்குள் நிற்கும் பெண். யார் என்ன சொன்னாலும் நம்பி விடுவாள். ரோகினியும் சரி, நிறையும் சரி இருவரையும் ஏற்று கொள்வாள். நிறை போன்ற பக்குவமோ, எதையும் சீர்தூக்கிப் பார்க்கும் எண்ணமோ அவளிடம் கிடையாது. தனித்து அவளால் நிற்கவே முடியாது.
படிக்காத பாமர பெண்ணாக இருந்தாலும் நிறையிடம் இருக்கும் தைரியம், தெளிவு, துணிச்சல் எல்லாம் அவளிடம் கிடையாது. எதற்கு இந்த ஒப்பீடு. அதுவும் தெரியவில்லை. கையில் கிடைத்தது தங்கமாக இருந்தாலும், தொலைத்தது வைரமோ?…
என்னவோ மனதில் கணக்கீடு. ஆனால், வெளியில் துளி காட்டிக் கொள்ள மாட்டான். தம்பி மனைவியாக மட்டுமே நிறை நிற்பாள்.

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!