Skip to content
Post Views: 14,332
நீங்காத உறவே!…
அத்தியாயம் 24
வளைகாப்பு முடிந்தாலும் நிறை தாய் வீட்டிலே இருக்கவில்லை. அன்று ஒரு நாள் தான் பிறந்த வீடு என்று இருந்தது. அதற்கு அடுத்த நாளே பிரபா மனைவியை அழைத்துக்கொண்டு வந்து விட்டான். இன்னும் வளர் குழந்தை பெற்று தாய் வீட்டில் தான் இருக்கிறாள். நிச்சயம் அவர்களால் நிறையை பார்த்துக் கொள்ள முடியாது. இங்கும் பிரபா உடன் இருக்கப் போவதில்லை தான். ஆனால், நிறைக்கான சுதந்திரம் இருக்கும். அவள் விருப்பம் போல உறங்க, எழுந்து கொள்ள, சாப்பிட என்று நிறை சௌகரியத்திற்கு இருந்து கொள்ளலாம்.
அங்கு, நிறைவீட்டில் என்றால் ஒரு அறை தான். பிள்ளை பெற்ற வளரை தள்ளிப் போக சொல்ல முடியாது. நிறையும் ஓய்வில் இருக்க முடியாது. அதனால் எப்பவும் போல நிறை தன் வீட்டில் இருந்து கொண்டாள். பிரபா தன் தாயிடம் சொல்லி இருக்க, கல்யாணி மருமகளிடம் கண்டிப்பாக சொல்லிவிட்டார்.
Advertisement
“பிள்ளை பெத்து நீ எந்திரிச்சதுக்கு அப்புறம் உன் வீடு, உன் சமையல் இருந்துக்க.. இனி ஒரே சமையல் தான். வெட்டி கவுரவம் கூடாது” என்றதும்,
“எங்க அத்தை கிட்ட எனக்கு என்ன வீம்பு. நான் எதுவும் சொல்ல கிடையாது. நீங்கதான் தனியா பிரிச்சு விட்டீங்க” அவளும் முறுக்கி கொண்டு தான் சொன்னாள்.
நிறை மிகவும் வைராக்கியம் பிடித்த ஆளெல்லாம் இல்லை. அந்த நேர கோபத்தில் கத்துபவள் தான். அதன்பின் சகஜம் ஆகி விடுவாள்.
Advertisement
பிரபா வேலைக்கு போகக்கூடாது என்று உறுதியாக சொல்ல.. தன் வயிற்றைப் பார்த்து நிறையும் வேலையை விட்டு விட்டாள். கல்யாணிக்கு நல்ல கை பக்குவம். கருவாட்டுக் குழம்பு, மீன் குழம்பு, கறி தொக்கு, மாவடு ஊறுகாய், புளிதண்ணி சாறு என்று நிறை நாக்கு ருசிக்கேற்ப விதவிதமாக செய்து கொடுத்தார். வீரணனும் வெளியில் சென்று விட்டு வந்தால் ஏதாவது ஒன்று அவர் கையில் இருக்கும். திலகாவும் மகளை உடன் வைத்துப் பார்த்துக் கொள்ளவில்லையே என்ற நினைப்பில் வாரத்துக்கு ஒரு முறை இருக்கும் பழங்களை எல்லாம் அள்ளிக் கொண்டு வந்து விடுவார்.
Advertisement
கணவன் உடன் இல்லை என்பதை தவிர நிறைக்கு பெரிதாக எந்த கவலைகளும் இல்லை. நல்ல உறக்கம், ஓய்வு, குழந்தை பற்றிய கனவு என்று நிம்மதியாக தான் நாட்களை கழித்தாள்.
குழந்தை பிறப்பிற்கு ஐந்து நாட்கள் இருக்கும் நிலையில் பிரபா ஊருக்கு கிளம்ப ஆயத்தமானான். அன்று இரவு அவன் கிளம்பும்போதே, இங்கு நிறைக்கு நீர் குடம் உடைந்து விட்டது. மூன்று மகன்களை சுகமாக பெத்த மகராசி தான் கல்யாணி. ஆனாலும், மருமகளுக்கு நீர் குடம் உடைந்ததும் பயந்து போனார். அவருக்கே கை கால் எல்லாம் வெடவெடத்து போனது.
நிறைக்கு வீட்டிலே நன்றாக வலி வந்து விட்டது. கணவன் உடன் இருந்தால் அது வேறு.. பெற்றவரும் அருகில் இல்லாமல் சங்கட பட்டு போனாள். ரோகினி, சினேகாவுக்கும் இதுதான் முதல் முறை என்பதால் அவர்களும் பயந்து போய் தான் நிறையை பார்த்தார்கள். நிறை முகமே காட்டி கொடுத்தது வலியை அடக்கி கொண்டு உள்ளால் என்று…
Advertisement
வீர சிவாவும், ராகவனும் தான் நிறையை கை தாங்கலாக பிடித்து அழைத்து வந்தது. நிறைக்கு இடுப்பில் அப்படி ஒரு வலி. கட்டியிருக்கும் சேலை கூட அசௌகர்யமாக இருந்தது. கத்தி அழுது, குதிக்கணும் போல இருந்தது.. தன் கணவனின் அண்ணன்கள், மாமனார் வரை பார்த்து கொண்டு நிற்க, பல்லை கடித்து வலி பொறுத்தாள்.
இந்த ஊரில் இருக்கும் சிறு சுகாதார நிலையத்திற்குத்தான் முதலில் அழைத்து வந்தார்கள். அங்கு கொண்டு வந்து விட்டதே அவர்களுக்கு பெரிய அசுவாசமாக இருந்தது. அப்பாடா என்று பெருமூச்சு விட, அந்த வலியிலும் நிறைக்கு லேசாக சிரிப்பு வந்தது. அவளுக்கு நிமிடத்திற்கு நிமிடம் வலி அதிகரிக்க, இவர்களுக்கு சுகாதார நிலையம் வந்தது பெரிய நிம்மதி. பின்ன அவர்கள் வீட்டுக்கு இதுதான் முதல் பிரசவம். நிறையின் முகத்தைப் பார்த்து எல்லோரும் பயந்து போயிருந்தார்கள்.
கல்யாணி மகனுக்கு சொல்லணும் என்று கணவனிடம் சொல்லிக் கொண்டிருக்க, நிறை தடுத்து விட்டாள்.
“வேணாம் அத்தை. கார்த்திகை மாதம் இடி, மழையும் அதிகமா இருக்கு. நீங்க போன் பண்ணி அந்த மனுஷன் அவசரமா எதுல ஏறி வருவாரோ? நான் பிள்ளை பெற நேரம், அவருக்கு முடியாம போச்சுன்னா.. அவருக்கு பதட்டத்தை கொடுக்காதீங்க. அவருக்கு மூச்சு திணறல் வரும் ஒத்தையில கிடக்கிற மனுஷன். யார் கூட இருந்தாலும் பிள்ளையை நான் தானே பெறனும்” என்றாள்.
“என்ன இருந்தாலும் அவனுக்கு ஒரு வார்த்தை சொல்லணும் நிறை. அவனும் கிளம்பி இருப்பான்” என்றார்,
“அவர் சாவகாசமா வரட்டும் அத்தை. அவர்கிட்ட சொல்லி அவசரப்படுத்தாதீங்க. தல பிரசவம் உடனே எல்லாம் பிள்ளை பிறக்காது.. உங்க மகன் கூட இருந்தா மட்டும், என் வலியை அவரா சுமக்க போறாரு?.. அழுதாலும் பிள்ளை நான் பெறணும். பார்த்துக்கலாம் விடுங்க” என்று உறுதியாக சொல்ல, யாரும் எதுவும் சொல்ல முடியவில்லை.
எல்லோரும் பார்த்து தான் நின்று இருந்தார்கள், நிறை நிற்க, நடக்க, உட்கார என்று வலியை பொறுத்து பெரும் அவஸ்தைப்பட்டாள். நேரம் அதிகமாக வலி கூடியதே தவிர, பிள்ளை தலை வெளியே வர காணம். நிறையும் தளர்ந்து விட்டாள்.
திலகாவும் அவசரமாக வந்துவிட, கல்யாணி ரோகினி, சினேகா இருவரையும் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். அவர்களுக்கு இனிமேல் தான் பிள்ளைப்பேறு பயந்து விடக்கூடாது அல்லவா!…
அது ஒரு கிராமத்து சுகாதார நிலையம். சுகப்பிரசவம் ஆகும் கேஸ் மட்டுமே எடுப்பார்கள். நிறைக்கு சிரமமாக இருக்க, வெளி ஹாஸ்டலுக்கு அனுப்ப முடிவெடுத்தார்கள். நிறைக்கு நிலைமை புரிந்தாலும், திலகாவின் மனநிலையும் கண்டு கொண்டார்.
வளரும் தாய் வீட்டில் இருப்பதால் தொடர்ந்து நிறைய செலவுகள். கண்டிப்பாக நிறைக்கு என்று சேர்த்து வைத்திருக்க மாட்டார்கள். ஏதேனும் ஒரு பெரிய ஹாஸ்பிடலில் சேர்ந்த பின் திலகா கையை பிசைந்து கொண்டு நின்றால் முழு செலவும் பிரபாகரன் பக்கம் தான் திரும்பும். ஏற்கனவே இடம் வாங்க, வளைகாப்பு என்று நிறைய செலவுகள் கணவனுக்கு…
நிறை தன்னை சுக பிரசவத்துக்கு தயார் செய்தாள். அங்கிருக்கும் மருத்துவர் சொல்லியும் நிறை கேட்கவில்லை. பிடிவாதமாக அங்கேயே இருந்து வலியை தள்ளிக் கொடுத்தாள். மூன்று மணி நேரம் மிகப் பெரிய போராட்டம் அவளுக்கு… இடையில் ஒரு முறை பிரபாகரன் போன் செய்ய, கல்யாணி சொல்லி விட்டார்.
“அம்மா அவ கிட்ட போன குடுங்க” என்றான்.
நிறைக்கு பேசும் அளவுக்கு கூட தெம்பு இல்லை. மிக வைராக்கியமாக அங்கு இருக்கும் ஜன்னல் கம்பியை பிடித்து நின்றவள் தான். அவள் உடல் எல்லாம் சிவந்து போனது. அசையாமல் ஒரே இடத்தில் மரம் போல நின்று வலியை கடத்தி, அதிகாலை மூன்று மணிக்கு தன் மகனை வெளி கொண்டு வந்து விட்டாள்.
பிள்ளை தன்னை விட்டு வெளியேறும் வரை உடலில் ஒவ்வொரு அணுவும் அப்படி வலித்தது. பிள்ளை வெளியேறிய நொடி உடலில் அப்படி ஒரு சுகம். பெரிய அயர்ச்சி.. அதற்குப் பின் மருத்துவர் போட்ட தையல் கூட அவளுக்கு வலிக்கவில்லை. லேசாக அரை கண்ணில் மகனை பார்த்தாள். பார்த்ததும் தெரிந்தது கணவனின் ஜாடை என்று… சுகமாக கண் மூடி கொண்டாள்.
வெளியில் காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு கொண்டாட்டம் தாங்கவில்லை. தங்கள் வீட்டின் முதல் வாரிசு. எல்லோருக்குமே சந்தோசம். கல்யாணி தான் முதலில் கையில் வாங்கினார். அதன்பின் தான் ஒவ்வொருவராக பார்த்தது. இரண்டு மணி நேரத்திற்கு பின் தான் நிறை தன் மகனைப் பார்த்தாள். அதற்கு முன்பு வரை அவர்கள் வீட்டு ஆட்கள் தான் தூக்கி வைத்திருந்தது.
காலையிலே பிரபா வந்து விட்டான். முன்பே தாய் போன் செய்து சொல்லிவிட்டார் மகன் பிறந்திருக்கிறான் என்று… பிரபா வந்ததும் மனைவியை தான் பார்த்தான். நிறை நல்ல உறக்கத்தில்.. பின் மகனை ஒரு பார்வை பார்த்து வந்தான்.
காலையில் கண்விழித்த நிறை கண்டது தன்னையே பார்த்திருக்கும் கணவனை தான். உடலில் சோர்வு இருந்தாலும், முகத்தில் நிறைவு தெரிந்தது.
“ரொம்ப கஷ்டப்பட்டுடியா? என்கிட்ட சொல்லி இருக்கலாம் இல்ல?” என்றான் ஆதங்கமாக.
“சொன்னா?” எதிர்கேள்வி வந்தது.
“உன் கூட இருந்து இருப்பேன்”
“நீங்க என் கூட இருந்தாலும், என் வலிய நீங்க சுமக்க முடியுமா? பிள்ளையை நான் தான் பெறணும்” என்றதும், கணவன் முறைத்து பார்க்க,
“நெஜமா நான் உங்களை பாத்து இருந்தா ரொம்ப அழுது இருப்பேன். இவ்வளவு தூரம் வலியை தள்ளி கொடுத்து இருக்க மாட்டேன். என்னோட பலம், பலவீனம் ரெண்டுமே நீங்கதான்” மனைவியின் கைகளை பிடித்து கொண்டான்.
“நான் வெளியே இருக்கேன். நீ ரெஸ்ட் எடு” அந்த மருத்துவமனையில் பிரவேசி எல்லாம் பார்க்க முடியாது.
“எனக்கு பசிக்குது” என்றாள்,
“என்ன?” அவன் புரியாமல் பார்த்தான். கல்யாணி சொல்லி இருந்தார் நிறைப்பட்ட கஷ்டத்தை..
“நேத்து காலையில இருந்து ஒன்னும் முடியல, சாப்பிடவே இல்ல. குழந்தை பிறந்ததுல இருந்து என்னை யாரும் கண்டுக்கல… எனக்கு பசி காது அடைக்குது” என்றதும் பதறி போனான்.
தாயை தேடி போனவன், “என்னம்மா பண்றீங்க அவளை பாக்காம? அவளுக்கு என்ன வேணும்னு கவனிக்க மாட்டீங்களா?”
“அட என்னடா நீ.. நானே என் பேரனை நினைச்சு கவலையில இருக்கேன்” என்றதும்,
“என்னம்மா?”
“குழந்தை வெயிட் குறைவா இருக்கான்டா” என்றார்.
பிரபாவுக்கு ஒன்றும் புரியாமல் நேராக டாக்டரையே சென்று பார்க்க, ஆரோக்கியமான குழந்தை தான் எடை மட்டுமே குறைவாக ரெண்டு இருநூறு இருந்தான்.
கல்யாணி நிறையைத்தான் சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்.
“அம்மா என்ன பண்றீங்க தம்பி நல்லாத்தான் இருக்கான்” என்றாலும்,
“இவ வயிறு ரொம்ப பெருசா இருந்துச்சுடா.. நான் என் பேரன் பெரிய பையனா இருப்பான்னு நினைச்சேன். கடைசில எலி குஞ்சு மாதிரி பெத்து போட்டுட்டா” அவருக்கு அதில் நிறைய வருத்தம்.
பிள்ளை அப்படியே பிரபாவை கொண்டு பிறந்திருந்தது. பிரபாவை வைத்து அவர் பட்ட பாடு பத்தாதா? அந்த கவலை. நிறைக்கு அதெல்லாம் எதுவும் இல்லை. தன் கணவன் ஜாடையில் தான் குழந்தை வேண்டும் என்று ஆசைப்பட்டாள். அது பிரபாவுக்கு தெரியும்.
வீரணன் கூட தன் முதல் வாரிசு என்று தூக்கி வைத்துக்கொண்டார். கல்யாணிக்கு மட்டுமே வருத்தம். அவர் தொடர்ந்து நிறையை தான் குற்றம் சொல்லிக் கொண்டிருந்தார்.
“என் மகன் என்னென்ன வாங்கி கொடுத்தான். இவளும் நல்லா தானே சாப்பிட்டா… பிள்ளையும் நல்லா பிறக்கும் நினைத்தேன்”
“இட்லி குண்டா கூட தான் பெருசா இருக்கு. அதுல இருக்கிற இட்லி சின்னதா இல்ல. உங்க மகன பெத்துட்டு நீங்க பேசலாமா?” என்று நிறையும் பேச,
“நேத்து கோழி குஞ்சு மாதிரி சுருண்டு கிடந்ததெல்லாம் மறந்துட்டா உன் பொண்டாட்டி”
“அம்மா போதும் அவளுக்கு பசிக்குதாம். என்ன குடுக்கலாம்”
“அட ஆமா ஆபரேஷன் பண்ணா தான் சாப்பிடக்கூடாது. சுகப்பிரசவம் எழுந்தே நடக்கலாம். இந்தா உடனே சினேகாவுக்கு போன் பண்றேன்” என்று வெளியே போக, அதுவரை மனைவி பசி தாங்க மாட்டாள் என்று புரிந்தவன் வெளியில் என்ன இருக்கும் என்று பார்க்க கிளம்பி விட்டான்.
கல்யாணி பார்த்துக் கொண்ட அளவுக்கு கூட திலகா பார்க்கவில்லை. அவருக்கு வீட்டிலேயே வளரும் இருக்க, அவளைப் பார்க்க வேண்டிய கட்டாயம். அதனால் பெரிய மகள் அவள் மாமியாரை வைத்து சமாளித்துக் கொள்வாள் என்று அவ்வப்போது வந்து பார்த்துக் கொண்டார்.
நிறைக்கு பிள்ளை பெற்று தாய்வீடு செல்லவே விருப்பமில்லை. எதுவும் சொல்ல முடியாமல் தான், தன் மகனோடு தாய்வீடு சென்றாள். முதல் ஒரு வாரம் நன்றாக தான் போனது. நிறையும் தாய்க்கு சிரமம் கொடுக்காமல் மகனை தானே பார்த்துக் கொண்டாள். அப்படி இருந்தும் திலகாவால் சமாளிக்க முடியவில்லை.
வீட்டோடு ரெண்டு மகள்களும் குழந்தையை வைத்துக் கொண்டு இருக்க யாரைப் பார்க்க, யாருக்கு சமையல் செய்து கொடுக்க, எந்த குழந்தையை தூக்க, யாரின் துணியை துவைக்க… அதைத்தொடர்ந்து வரும் செலவுகள் என்று திலகா திண்டாடி விட்டார்.
வளரும் ஆபரேஷன் செய்து குழந்தை பெற்றவள். நிறை சுகப்பிரசவம் தான் என்றாலும் ஒரு மாதமாவது அவளுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் அல்லவா… உண்மையில் வளருக்கு அவள் சௌகரியத்தை விட்டுக் கொடுக்க மனதில்லை. ஆறு மாதத்திற்கு மேலாகியும் தாய் வீட்டை விட்டு செல்ல மனமும் இல்லை.
திலகா முணுமுணுக்க தொடங்கவும், நிறை மெல்ல அமர்ந்து கொண்டு பிள்ளைகள் துணியை துவைத்து போட்டாள். இருவது நாளிலே சமையல் அறை வரை வேலை செய்ய தொடங்கி விட்டாள். அவளால் வளர் போல தாய் பார்த்துக் கொள்ளட்டும் என்று கண்டு கொள்ளாமல் இருக்க முடியாது. அது அவள் பிறவி குணம் ஆகிவிட்டது.
திலகாவாலும் வேண்டாம் என்று சொல்ல முடியவில்லை. அவருக்கு வளரின் பிள்ளையை கவனிப்பதே பெரிய வேலையாக இருந்தது. கல்யாணியும் தொடர்ந்து பேரனை பார்க்க வந்தவர், மகனிடம் சொல்லி விட்டார்.
அடுத்த நாளை பிரபா ஊருக்கு வந்து விட்டான். நிறை எப்போதும் போலத்தான் குழந்தையை பார்க்க வந்திருக்கிறார்கள் என்று நினைக்க, ஒரு மாதம் கூட முடியவில்லை, பிரபா தன் மனைவி, மகனை தன் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டான். கல்யாணியும் கூடவே வந்ததால் திலகாவால் வாய் கொடுக்கவே முடியவில்லை.
அவருக்கே உள்ளம் குத்தியது போல… கண் எல்லாம் கலங்கியது. நன்றாக தெரியும் நிறையை கவனிக்கவில்லை என்று..
“இன்னும் ஒரு மாசத்துல வளர அவ வீட்டுக்கு அனுப்பி விடுவேன்” என்றவரிடம்,
“என் வீட்டு வாரிசு நான் பாத்துட்டு போறேன்” முகத்தை பார்க்காமல் சொல்லி முடித்தார் கல்யாணி.
அவருக்கு இதையெல்லாம் சகஜமாக எடுக்க முடியவில்லை. கொஞ்சம் அனுசரித்து செல்லும் பெண் என்றால் எவ்வளவு தூரத்துக்கு தான் வளைப்பார்கள். பிரபாவும் செலவை பார்க்காமல் வாஷிங் மெஷின், பிரிட்ஜ், ஏர் கூலர் என்று மனைவி மகனுக்கு வசதிகளை செய்து கொடுத்தான். இவ்வளவு செலவு வேண்டாம் என்ற மனைவியின் பேச்சை அவன் காதிலே வாங்கவில்லை.
ரோகினி எப்படியும் தன்னிடத்தை விட்டுக் கொடுக்க மாட்டாள். தங்களுக்கு என்று வேண்டும்தானே… வீரணன் மகனுக்கு பிரித்துக் கொடுத்த இடத்திலே, பிரபா கொஞ்சம் எடுத்துக்கட்ட தொடங்கினான். முன்பு போல மகனை வைத்துக்கொண்டு ஒற்றை அறையில் இருக்க முடியாது.
கணவன் வீடு வந்தும் நிறை தன் வேலைகளை தானே பார்த்துக் கொண்டாள். தன்னை அழைத்து வந்து பார்த்துக் கொள்ளும் பெருந்தன்மையே போதுமானதாக அவளுக்கு இருந்தது. பிள்ளையை கவனித்துக் கொள்ள வீடு முழுக்க ஆள் இருக்க, நிறை தன் வேலைகளை பார்த்துக் கொண்டாள்.
ரோகினி, வீரசிவா தொடங்கி எல்லோருமே பிள்ளையை பார்த்துக் கொண்டார்கள். ரோகினிக்கு குழந்தையின் வாசம், நெருக்கம் தனக்குப் பிள்ளை வரத்தை கொடுக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. குழந்தை விஷயத்தில் நிறை யாரிடமும் வேறுபாடு காட்டவில்லை. வீர ஜனார்த்தன், பிரபாவின் மகன். அந்த வீட்டின் முதல் வாரிசு. எல்லோருக்கும் மகனாகவே வளர்ந்தான். பிரபா வேலையை மாற்றி வரவில்லை. இன்னும் வெளியூர் வாசம் தான்.
நிறை பொறுப்பாக கணவன் குழந்தை வரவு, செலவு என்று கட்டுக்குள் நின்றாள். திலகா அவ்வப்போது வருவார். ஆனால், நிறை தள்ளி நின்று கொண்டாள். அவளுக்கு தன்னை கவனிக்காதது கூட பெரிய விஷயமாக படவில்லை.
நிறை தான் எப்போதும் பெரிய பெண்ணாக அம்மா, தங்கை என்று கட்டி இழுப்பது.. தன்னை கவனிக்காமல் தங்கையை கவனித்தது கூட அவளுக்கு வலிக்கவில்லை. ஆனால் தன் பிள்ளையிடமும் அந்த வேறுபாடு காட்டப்பட ஒதுங்கி கொண்டாள். உள்ளங்கையில் வைத்து தாங்க என் கணவன் இருக்கும்போது நான் எதற்கு கவலைப்பட வேண்டும்.
ஜனாவின் எட்டு மாதத்தில் ரோகினிக்கு நாள் தள்ளி போனது. வீட்டில் எல்லோருக்கும் அவ்வளவு சந்தோஷம். அவளுக்கு மருத்துவம் பார்த்த மருத்துவமனை தாய் வீட்டு அருகில் என்பதால் தன் கணவனோடு அங்கு செல்லவே திட்டமிட்டாள். யாரும் தடுக்க வில்லை.
சினேகாவோடு அவளுக்கு அவ்வளவு நெருக்கம். சினேகா தான் ரோகினி உடன் இருந்து அனுப்பி வைத்தது.. ரோகினி தன்னுடைய அறையில் தான் வாங்கி வைத்த பொருள்கள், கொண்டுவந்த சீர் என்று எல்லாவற்றையும் அடைத்து பத்திரப்படுத்திவிட்டு தாய் வீடு சென்றாள்.
அதில் சினேகாவுக்கு தான் வருத்தம். இதில் என்ன இருக்கு?… எடுத்து உபயோகப்படுத்தினாலும் இந்த வீட்டு ஆட்கள் தானே.. அப்படி என்ன யாருக்கும் எதையும் விட்டு தராத குணம். ரோகினியும் சென்றபின் சினேகாவுக்கு முழு நேரமும் ஜனாவுடன் தான் சென்றது.
அவ்வப்போது கல்யாணியோடு வீட்டு ஆட்கள் சென்று ரோகினியை பார்த்து வந்தார்கள். ரோகினி எல்லாவற்றிக்கும் தாய் வீட்டில் இருந்து கொண்டாள். அவளோடு தான் வீரசிவாவும் இருக்க வேண்டியதாகி போனது.
அவர்களுக்குப் பெண் குழந்தை பிறந்தது. கல்யாணியை கொஞ்ச நாட்கள் அங்கேயே இருக்க விட்டார் வீரணன். அடுத்து ஒரு பெண் குழந்தை குடும்பமே கொண்டாடியது. சிட்டி வாழ்க்கையை உணர்ந்த பின் ரோகினிக்கு திரும்ப கூட்டுக் குடும்பத்திற்குள் செல்ல விருப்ப மில்லை.
அவளை யாரும் தடுக்கவும் இல்லை. குடும்பம் பெருகிய பின் அவரவர் சௌகரியம் போல முடிவெடுக்க விட்டு விட்டார்கள். சினேகாவுக்குத் தான் ஆச்சரியம். ரோகினி எப்போதும் முதல் மரியாதையை விரும்பும் பெண். நான் இந்த வீட்டின் மூத்த மருமகள், எனக்குத்தான் முன்னிறுமை, எனக்குத்தான் வீட்டில் உரிமை உள்ளது. இது என்னுடைய இடம் என்று எப்போதும் முன் நிற்கும் ஆள்.
அப்படிப்பட்ட ரோகினியா தன்னிடத்தை விட்டுக் கொடுப்பது?… அந்த கவலை எல்லாம் ரோகினிக்கு இல்லை. அவள் சந்தோஷமாகத்தான் வெளியேறினாள். என்ன ஒன்று எந்த பொருள்களை பத்திரப்படுத்தினாலோ அது எல்லாம் துருப்பிடித்து உபயோகம் இல்லாமல் போனது.
“பிரிட்ஜ், வாஷிங் மெஷின் எதுவும் ஓடல சினேகா. பண்ட பாத்திரம் கூட துருப்பிடிச்சு போச்சு. இனி எல்லாம் புதுசு தான் வாங்கணும்” என்றவளை அற்பமாக பார்த்தாள் சினேகா.
இப்படி தூக்கி போடும் பொருட்களை தான் நிறை உபயோகிப்படுத்தி விடக் கூடாது என்று பாதுகாத்தாள். வயிற்றுப் பிள்ளைக்காரி என்று கூட அவளுக்கு எந்த வசதியும் செய்து கொடுத்தது கிடையாது. பாத்ரூம் கூட நடு ராத்திரியில் நிறை வெளியில்தான் வரவேண்டும். என் வீடு, என் கணவன் எடுத்து கட்டியது என்று பிரபாவை கூட அந்த பக்கம் விட மாட்டாள்.
அதனால் தான் பிரபாவும் கஷ்டத்தோடு கஷ்டமாக தன் பக்க இடத்தை எடுத்து கட்டியது. இன்று அவளுக்கு அதெல்லாம் தேவையே இல்லை. இன்று ரோகினி பூட்டாமல் போனாலும் யாரும் உபயோகப்படுத்த மாட்டார்கள்.
error: Content is protected !!