Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

தேடிவருவேன் ♥️43

சுப்ப கிருஷ்ணா வந்ததில் குடும்பமே மகிழ்ச்சியில் திளைத்தது.

அம்மா நாங்க இங்கே இருக்கிறது சரியா வராது. அடிக்கடி வந்து போறோம். நீங்களும் வந்து பாருங்க என்றான் சுப்பு.

என்ன சொல்ற சுப்பு? நீ போக நான் அனுமதிக்க மாட்டேன். உன்னை பிரிந்து நான் தவித்ததும் துடித்ததும் போதும்.

இல்லம்மா நானாக்கு…. அவன் தயங்கினான்.



Advertisement

சுப்பு நீ உன் நானாவை புரிஞ்சுக்கிட்டது அவ்வளவு தானா? நான் பொம்பள அழுது புலம்பி என் வேதனையை தீர்த்துகிட்டேன் உன் நானா உள்ளுக்குள்ளே மருகி கிடக்கிறாரு.

ம்ம்மா..!

நிஜம் தான் பாபு. தலை மகனை தள்ளி வச்சுட்டு அவர் நெருப்பில் நிற்கிற மாதிரி தத்தளிச்சுட்டாரு. உன் ஏக்கத்தில் தான் அவரால் தொழிலை சரியா கவனிக்க முடியாம போச்சு!

Advertisement

ம்மா விஜய தாரணி நீயாவது உன் புருஷனுக்கு எடுத்து சொல்லி புரிய வைம்மா… மாமியாரின் கெஞ்சல் பார்வையில் உருகிதான் போனாள் தாரு.

Advertisement

இங்கேயே இருந்துவிடலாம் என்று கண்களால் செய்தி சொன்னாள் கணவனிடம்.

தன் மனைவிக்கு இங்கு ஏதேனும் அவமானம் நேர்ந்துவிடுமோ என்ற கவலை தான் சுப்புவிற்கு.

அவன் எண்ணமும் சரிதானே ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்த மருமகளை பெரிய குடும்பத்தில் எப்படி நடத்துவார்கள் என்ற அச்சம் இருக்க தானே செய்யும்?

Advertisement

“——————“

ராமகிருஷ்ணா மகனிடமோ மருமகளிடமோ எந்த பேச்சும் வைத்துக் கொள்வதில்லை. அதேசமயம் அவர் பார்வை வட்டத்திற்குள் தான் அவர்கள் இருக்கும்படி பார்த்துக் கொண்டார்.

சுப்புவும் பழையபடி தொழிலை கையில் எடுத்துக் கொண்டான்.

தங்கள் குல வாரிசை சுமந்து கொண்டிருக்கும் தாரணியை தங்கமாய் தாங்கினார்கள் கிருஷ்ணா குடும்பத்தினர்.

ஷியாமளாவிற்கு தான் வெந்து தணிந்து கொண்டிருந்தது.

ராமகிருஷ்ணா சுப்புவிடமும் தாரணியிடமும் நேரடியாக பேசுவதில்லை. எவ்வளவு முயன்றும் அவர் மனக்கசப்பு குறையவில்லை. ஆயினும் சுப்புவை அவர் வெறுக்கவும் இல்லை.

தாரணியின் பெற்றோர்கள் வந்து பார்க்கவில்லை. அவர்களுக்கு பயம் எப்படி அவர்கள் வீட்டு வாயிலை மிதிப்பது என்று.

மனையாளின் முகவாட்டம் கொண்டே புரிந்து கொண்ட சுப்பு தாயிடம் வேண்டுகோள் வைத்தான்.

ம்ம்ம்மா நாம என்னதான் நல்லா பார்த்துகிட்டாலும் இந்த நேரத்துல அவ அம்மா மடியை தேடும் தானே…?

சரி சுப்பு அவங்க அம்மா அப்பாவை வந்து பார்த்துட்டு போக சொல்லு! நான் நாயனாகிட்ட பேசுகிறேன் என்றார் லீலா.

மகளுக்கு பிடித்த பக்குவத்தில் அவள் விரும்பி உண்ணும் இனிப்பு காரம் எல்லாம் செய்து கொண்டு பூ பழம் வாங்கி கொண்டு வந்திருந்தனர் அவள் குடும்பத்தார்.

எல்லாம் நன்றாக தான் போய் கொண்டிருந்தது. விஜிமா அம்மா உனக்கு ஜிமிக்கி கம்மலும் செயினும் வாங்கிட்டு வந்திருக்கேன் என்று ஆசையாய் அவள் அன்னை மகள் கழுத்தில் இரண்டு பவுன் சங்கிலியை பூட்ட…. எகத்தாளமாய் சிரித்து வைத்தாள் ஷியாமளா.

எல்லோரும் சங்கடமாய் பார்க்க… இந்த கிருஷ்ணா குடும்பத்து மருமகளுக்கு வந்திருக்க பிறந்த இடத்து சீரை கின்னஸ் ரெக்கார்டுக்கு தான் அனுப்பனும்… மீண்டும் உதடு கோணி நக்கல் சிரிப்பை உதிர்த்தாள்.

ஷியாமளா… உள்ளே போ! பல்லை கடித்தார் லீலா.

உண்மையை தானே சொன்னேன்? நானெல்லாம் இருநூறு பவுன் போட்டுக்கிட்டு வந்தேன்… நானும் இந்த வீட்டு மருமகன்னு தான் சொல்லிக்கிறேன். வெறுங்கையோட ஓடிவந்தவ இவளும் இந்த வீட்டு மருமகன்னு தான் பெருமை பீத்திக்கிறா… அதுவும் மூத்த மருமகள்… என்னை விட ரெண்டு வயது இளையவ எனக்கு மூத்த ஓர்படி… வெடித்து வந்த வன்மத்தை வார்த்தைகளில் கொட்டி கவிழ்த்து விட்டு சுப்புவை முறைத்துக் கொண்டே உள்ளே சென்றாள் ஷியாமளா.

கண்கள் சிவக்க கைமுஷ்டியை இறுக்கி அமர்ந்து இருந்தான் சுப்பு.

தான் எதையாவது பேசி அமைதியாய் இருக்கும் குடும்பத்தில் பிரச்சனை வெடித்துவிடுமோ என்று பொறுமையாக பல்லை கடித்து அமர்ந்து இருந்தான்.

என்னதான் தாரணி அவனிடம் எந்த விஷயத்தையும் கூறாமல் அமைதியாக இருந்தாலும் ஷியாமளாவின் ஒவ்வொரு நடவடிக்கையையும் அவன் கூர்ந்து கவனித்துக் கொண்டுதான் இருக்கிறான்.

தம்பியின் முகத்திற்காக தங்கள் குடும்பத்தின் கௌரவத்திற்காக என்று பொறுத்துப் போகிறான்

தாரணியின் பெற்றோர் அவமானத்தில் முகம் கறுத்து அமர்ந்திருக்க

கண்ணீர் முட்டிக்கொண்டு வந்த போதும் அதை அணையிட்டு உள்ளிழுத்து வைத்துக்கொண்டு பெற்றவர்களை உபசரித்தவள் அம்மா நான் உங்க பொண்ணு தான் நம்ம வீட்டுக்கு வரும்போது…. இங்கே கிருஷ்ணா குடும்பத்து மருமகள். உங்க பொண்ணை பார்க்க நீங்க இங்கே வரணும்னு இல்லை…. நானே வருவேன்!  இனி இங்கே வராதீர்கள் என்பதை அவளுக்கு தெரிந்த வகையில் சொல்லி விட்டாள்.

ஷியாமளா உன் பேச்சு கொஞ்சம் கூட சரியில்லை லீலாவதி முறைத்தார்.

என்ன சரியில்லை? எகத்தாளமாய் கேட்டாள்.

நீ ஏன் தாரணியை எதிரியா பார்க்கிற?

எதிரியா? எனக்கு அவ எதிரியா? உதட்டை கோணி ஒரு நக்கல் சிரிப்பை உதிர்த்தாள்.

இதோ பார் ஷியாமளா.. இந்த வீட்டுல உனக்கு இருக்கும் உரிமை அவளுக்கும் இருக்கு. அவளை எப்போவுமே மட்டம் தட்டிட்டு இருக்க. அந்த பொண்ணு அமைதியா போயிட்டு இருக்கு.

மூத்த மருமகளுக்கு சப்போர்ட்டா அத்தம்மா ? இடக்காக கேட்டாள்.

நான் யாருக்கும் சப்போர்ட் இல்லை. நியாயத்தை சொன்னேன். பொம்பளைங்க சண்டையில் ஆம்பளைக தலையிட்டா குடும்பம் குடும்பமா இருக்காது.

இந்த கிருஷ்ணா குடும்பத்துல சொத்துபத்து சேர்க்கிறது ஆம்பிளைங்க கையில் இருக்கு.மானம் மரியாதையை கட்டி காபந்து பண்றது எல்லாம் இந்த வீட்டு பொம்பளைங்க கையில் தான் இருக்கு. என் மாமியார் எனக்கு சொன்னதை தான் இப்போ உனக்கு சொல்றேன். லீலாவதி பொறிந்து தள்ளிவிட்டு போய் விட்டார்.

“—————“

தான் பெரிய குடும்பத்து மருமகள் என்ற கர்வம் துளி கூட தாரணிக்கு வந்ததே இல்லை.

அவளது பேச்சு, நடை உடை பாவனை அனைத்துமே எளிமை தான். உனது எனது என்ற பிரிவினையும் அவள் பேச்சிலோ செயலிலோ இல்லை.

குடும்ப விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது, பெரியவர்களுக்கு உரிய மரியாதை கொடுப்பது, தான் உண்டு தன் வேலை உண்டு என்று அடக்கமாக இருப்பது என அனைத்து வகையிலுமே பெரியவர்களின் மனம் கவர்ந்த மருமகளாகிப் போனாள் தாரணி.

நாளடைவில் தாரணியின் பேச்சு பழக்க வழக்கம் புரிந்து கொண்ட லீலாவதியும் ராமகிருஷ்ணனும் அவளை மெச்சிக்கொண்டனர் .

அவ்வப்போது விஷத்தை கக்கும் ஷியாமளாவின் பேச்சை பொருட்படுத்தாது பெருந்தன்மையாய் நடந்து கொண்டாள் தாரணி.

நாத்தனாரின் மகளாகி போன இளைய மருமகளை அதிகம் கடிந்து கொள்ள முடியவில்லை லீலாவதிக்கு.

ஆண்களின் காதுக்கு குடும்பத்தின் சிறு சிறு பூசல்களை கொண்டு செல்வதில்லை அவ்வீட்டு பெண்கள்.

தாரணியை கண்டால் எரிகிறதோ இல்லையோ சுப்புவை கண்டாலே பற்றி எரியும் ஷியாமளாவிற்கு. இந்த தாரணியை விட தான் எந்த வகையில் குறைந்து போனோம் என்ற ஆதங்கமே அவளை அவமானம் கொண்டதாக குன்றி போக செய்யும்.

“——————–“

தாய் தந்தையரை பார்க்க தோன்றினால் கணவனுடன் சென்று பார்த்து வருவாள் தாரணி.

தாரணியை எந்த குறையும் இல்லாமல் தாங்கி பிடித்தான் சுப்பு.

நாட்கள் மெல்ல நகர்ந்தோட விஜயதாரணிக்கு சீமந்தம் செய்யும் முடிவிற்கு வந்தனர் குடும்பத்தார்.

திருமணமே பெரியவர்களி ளின்றி  எளிமையாக நடந்து விட்ட படியால் சீமந்தத்தை பெரிய அளவில் செய்து பார்க்க ஆசை கொண்டனர்.

மாமய்யா என்று குரல் கொடுத்து வீட்டிற்குள் நுழைந்த சுப்பு மாமியாரை கண்டு வணக்கம் கூறி அவர் கொடுத்த நீரை அருந்தி அமர்ந்து விட புன்னகையுடன் வரவேற்று அருகில் வந்தமர்ந்த மாமனாரின் கரத்தில் நகை பெட்டி ஒன்றை திணித்தான்.

இது… தடுமாற்றத்துடன் பிரித்து பார்த்தார் தாரணியின் தந்தை. அழகிய இரு சோடி பொன்வளையல்கள். தாருக்கு உங்க சார்பாக போட்டுடுங்க!

இல்ல மாப்பிள்ளை.. நாங்க எங்க சக்திக்கு… அவர் பதறினார்.

தவறா எடுத்துக்காதீங்க மாமய்யா நீங்க தயங்க எதுவுமில்லை இது என் வருமானத்தில் என் மனைவிக்கு நான் வாங்கினது. இதை நீங்க வாங்கிட்டா நான் சந்தோஷப்படுவேன். இதை நீங்க போட்டா தாருவும் சந்தோஷப்படுவா. நான் போட்டால் என்ன நீங்க போட்டால் என்ன? அழகாய் பேசி மாமனார் வீட்டில் கொடுத்து சென்றான்.

சிறப்பாக சீமந்தம் முடிந்து பிறந்த வீட்டிற்கு சென்ற தாரணியை ஒரு வாரம் கழித்து தன் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டான் சுப்பு.

அடுத்த மாதமே விஜயதாரணிக்கு சுகப்பிரசவத்தில் கொழு கொழுவென்று அழகிய ஆண் குழந்தை பிறந்தது.

குழந்தையின் அழகில் மொத்த குடும்பமே மயங்கி போனது. குட்டி கிருஷ்ணன் போல் பேரழகாய் இருந்த குழந்தைக்கு ஹரிச்சரண் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.

அழகிய முரண் என்னவென்றால் சுப்புவை கண்டாலே ஆகாது என்றிருக்கும் ஷியாமளா குழந்தை ஹரியை அவ்வளவு கொஞ்சி மகிழ்ந்தாள்.

அதே தான் ராம கிருஷ்ணாவின் நிலையும், மகன் மருமகளிடம் முகத்தை திருப்பி செல்லும் அவர் பேரனை மட்டும் கொண்டாடி மகிழ்ந்தார்.

தலைமகனின் முதல் குழந்தைக்கு தங்க ஆபரணமாய் பூட்டி அழகு பார்த்தார் லீலாவதி.

ஹரிச்சரண் என்ற அந்த இளவரசன் கிருஷ்ணா சாம்ராஜ்யத்தின் உயிர் மூச்சாகிப் போனான்.

“——————“

சுப்புவின் மனதில் அவ்வளவு நிம்மதி, ஆனந்தம். காதல் மனைவி, தெய்வ சிலை போல் அழகிய பிள்ளை, உறவுகளின் பிணைப்பு. இதைவிட வேறென்ன வேண்டும்?

அழகாய் வண்ணம் பூசிக் கொண்டது கிருஷ்ணா இல்லம்.

மூத்தமகன் என்று சுப்புவும் மூத்த மருமகள் என்று தாரணியும் முன்னிலை படுத்தப்படும்போதெல்லாம் குமைந்து போனது ஷியாமளாவிற்கு.

நாட்கள் இப்படியாய் செல்ல… ஷியாமளா தாய்மை அடைந்தாள். இன்னும் குதூகலம் அடைந்தது கிருஷ்ணா குடும்பம்.

ஒற்றைக் குழந்தை கொடுத்த இன்பமே அவர்களை வேறொரு உலகத்தில் இன்ப மயக்கத்தில் வைத்திருக்க… இப்போது அடுத்த வரவு.

தொழிலைப் பொறுத்தவரை சுப்பு எடுப்பது தான் முடிவு. ராமகிருஷ்ணாவை ஏதாவது கேட்டாலும் எனக்கு என்ன தெரியும் சுப்புவை கேளுங்கள் என்பதோடு நிறுத்திக் கொண்டார். வெங்கட கிருஷ்ணாவும் அண்ணன் சொல்லுக்கு மறுபேச்சு பேசும் தம்பி இல்லை.

மொத்தத் தொழிலையும் கட்டி காப்பாற்றினாலும் சுப்பு தனக்கென்று தனியே எடுத்து வைக்கும் பழக்கம் இல்லாதவன்.

ஹரிசரணுக்கு மூன்று வயதாக இருக்கும்போது ஷியாமளாவிற்கு  அழகிய பெண் குழந்தை பிறந்தது.

இதிலும் ஷியாமளாவிற்கு வருத்தமே…. தாரணிக்கு முதல் குழந்தை ஆண் குழந்தையாக பிறந்து விட்டதே.நமக்கு மட்டும் ஏன் பெண் பிறக்க வேண்டும்?

தேவதை பிறந்து விட்டதாக எண்ணி தான் கிருஷ்ணா குடும்பம் கொண்டாடியது.

குழந்தைக்கு நிவேதா என்று பெயர் சூட்டினாள் ஷியாமளா.

குழந்தைகளுக்குள் பாகுபாடு கிடையாது. ஆண் என்றோ பெண் என்றோ மூத்த வாரிசு, இளைய வாரிசு என்றெல்லாம் அங்கு வேறுபாடு இல்லை.

தம்பி மகளை தன்மகளாய் எண்ணி அள்ளி அணைத்து கொஞ்சி தீர்ப்பான் சுப்பு.

தாரணிக்கும் பெண் குழந்தை மிகவும் பிடிக்கும் என்பதால் அவளும் குழந்தையை அப்படி கொஞ்சுவாள்.

சில விஷயங்கள் மட்டும் அந்த குடும்பத்தில் மாறவே இல்லை. ராமகிருஷ்ணன் மகன் மருமகளிடம் இன்னும் பேசுவதில்லை. ஷியாமளாவின் வெறுப்பு உமிழும் பார்வை சுப்புவை பொசுக்கிக் கொண்டு தான் இருக்கிறது.

இரு குழந்தைகளாக இருந்த வீட்டில் மூன்றாவது வரவாக தாரணி மீண்டும் கர்பமுற்றாள்.

பெண் குழந்தை வேண்டும் என்று சுப்புவும் தாரணியும் வேண்டாத தெய்வம் இல்லை…. கடவுள் அவர்களின் வேண்டுதலுக்கு செவி மடுக்கவில்லை.

இந்தக் குழந்தையும் ஆண் குழந்தையாகவே பிறந்து விட்டது. தாரணிக்கு அது மிகப்பெரிய மனக்குறை தான். குழந்தைக்கு ராம் சரண் என்று பெயர் சூட்டினார்கள்.

ராம்சரணுக்கு பொட்டிட்டு பூவைத்து கவுன் போட்டு பெண் பிள்ளை போல் அலங்கரித்து மகிழ்வாள் தாரணி.

மூன்றாவது குழந்தை பெற்றுக் கொள்ள தாரணி ரெடி தான். சுப்பு முடியாது என்று சொல்லிவிட்டானே…

“————–“

ஹரிசரண் படிப்பில் படுகெட்டி, விளையாட்டிலும் படுசுட்டி.

ராம் சரண் அமைதியான குழந்தையாகவே இருந்தான்.

ஹரி, நிவேதா,ராம் மூவரும் ஒற்றுமையாகவே வளர்ந்தனர்.

ஷியாமளா சுப்புவை தான் வெறுத்தாளே தவிர சுப்பு பெற்ற மகன்களை அவ்வளவு பிடிக்கும். பெரியவர்கள் பிரச்னைக்கு குழந்தைகள் என்ன செய்வார்கள்?

அவர்களுக்கும் ஷியா பின்னி இருந்தால் போதும். ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் தான்.

தாரும்மாவை பிள்ளைகளுக்கு அவ்வளவு பிடிக்கும். எவ்வளவு அட்டகாசம் செய்தாலும் அதட்டாது மிரட்டாது அழகாய் சிரித்து  முத்தமிட்டு செல்லும் தாரணியை ஏன் பிடிக்காது?

தாரணிக்கு குரல் உயர்த்தி பேசவே வராது. கனிவு மட்டுமே அவளுக்கு தெரியும்! மாறாக ஷியாமளா கண்டிப்பான தாயாகவே இருப்பாள்.

“—————–“

குழந்தைகள் வளர்ந்து வந்தனர் தொழிலும் விரிவடைந்தது.

கோகுல கிருஷ்ணா படிப்பு முடிந்து வந்து இரு அண்ணன்களோடு இணைந்து தொழிலை கொஞ்ச காலம் கவனித்து வந்தான்.

அண்ணன் தம்பி மூவரில் கோகுல கிருஷ்ணா நல்ல அழகு.. கவர்ச்சிகரமான தோற்றமும் கூட….

ராமகிருஷ்ணாவின்  ஆஸ்தி அந்தஸ்திற்கும் கோகுலின் அழகுக்கும் பெண் கொடுக்க போட்டி போட்டனர்.

கோடீஸ்வர குடும்பத்தில் இருந்து வந்து மாப்பிள்ளை கேட்டனர்.

பெண் வந்தனாவும் நல்ல அழகு. ஒரே பெண் என்பதால் தங்கள் தொழிலை கவனிக்கும் மாப்பிள்ளையாக வீட்டோடு வரும்படி கேட்டனர்.

தன் கடைக்குட்டி மகன் வீட்டோடு மாப்பிள்ளை ஆக செல்வதில் ராமகிருஷ்ணாவிற்கு துளியும் விருப்பமில்லை.

கோகுலுக்கு பெண்ணின் புகைப்படத்தை பார்த்த உடனே பிடித்து விட்டது.

சுப்புவிடம் நேரடியாகவே தன் விருப்பத்தை தெரிவித்து விட்டான். அண்ணையா இந்த கிராமத்து வாழ்க்கை எனக்கு சரியா வராது. நான் ஹைதராபாத்தில் பிசினஸ் பார்த்து செட்டில் ஆகிவிடறேன்…. அந்தப் பெண்ணையே பேசி முடிக்க சொல்லுங்க என்று வெளிப்படையாக பேசுபவனிடம் என்ன சொல்ல முடியும்?

இளைய மகன் மீது மிகுந்த வருத்தம் ராமகிருஷ்ணாவிற்கு. சுப்புவும் வெங்கியும் தான் நாயனாவை ஆறுதல் படுத்தி திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தனர்.

திருமணம் முடிந்து மாதம் ஒருமுறை வந்து சென்ற கோகுல்…. பிறகு மூன்று நான்கு மாதத்திற்கு ஒருமுறை வந்து சென்றான்.

கல்லூரி படிப்பில் சிட்டி வாழ்க்கையை ரசிக்க தொடங்கிய கோகுலுக்கு அந்த நவநாகரிகமும் ஆடம்பரமும் பிடித்து விட்டது.

திருமணம் செய்து கொண்டு சிட்டியில் செட்டில் ஆகிவிடவேண்டும் என்று ஏற்கனவே திட்டமிட்டிருந்தான்.

அவன் திட்டபடியே ஹைதராபாத்தில் தொழில் தொடங்கி சுகபோகமாய் வாழ்க்கையை அனுபவித்து வாழ்பவனுக்கு எர்ரபள்ளி பிடிக்குமா?

“—————“

ஷியாமளா இரண்டாவது முறை கர்ப்பம் தரிக்க இம்முறை அவள் ஏங்கி தவித்து காத்திருந்த ஆண் மகவே பிறந்தது.

குழந்தைக்கு தேவ்சரண் என்று பெயர் சூட்டினர்.

கூட்டு குடும்பமாக பிரிக்கப்படாத ஏக போக சொத்துக்களுடன் ஓகோவென்று தழைத்துக் கொண்டிருந்தது கிருஷ்ணா இல்லமும், தொழிலும்.

பிள்ளைகள் படிப்பை முன்னிட்டு டவுனில் வீடு இருந்தால் நன்றாக இருக்கும் என்று யோசித்து கரீம்நகரில் மனை வாங்கி வீடு கட்டினார்கள்.

பிள்ளைகளிடையே ஓரவஞ்சனை இருக்கக் கூடாது என்று மூன்று மகன்களுக்குமாய் சேர்த்து தான் வீடு கட்டினார் ராமகிருஷ்ணா.

கோகுல் மெல்ல மெல்ல குடும்பத்தை விட்டு விலகியே விட்டான்.

அவனால் விலக்க முடிந்தது. பெற்றவர்களால் முடியவில்லையே…

“——————“

வீட்டோடு மாப்பிள்ளை ஆக ஹைதராபாத்தில் செட்டில் ஆகிவிட்ட கோகுல கிருஷ்ணாவிற்கு ஆண் ஒன்று பெண் ஒன்று என்று இரண்டு குழந்தைகள்.

அந்த இரண்டு குழந்தைகளுக்கும் எர்ரபள்ளி குடும்பத்தோடு பெரிய நெருக்கம் ஏற்படவில்லை.

சுப்பு வெங்கி குழந்தைகளிடையே இருக்கும் இணக்கமும் பிணைப்பும் விருந்தாளிகளாக வந்து செல்லும் அந்த இரு குழந்தைகளுடன்  ஏற்படவில்லை.

குழந்தைகள் வளர்ந்து விரும்பிய படிப்பை தேர்ந்தெடுத்து படித்துக் கொண்டிருந்தனர்.

வயோதிகத்தின் தளர்ச்சியில் ராமகிருஷ்ணா ஓய்வெடுக்க தொடங்கி விட்டார்.

ஹரிசரணிடம் மிகுந்த பாசம் கொண்டவர் அவர்.

ஹரியும் தாத்தா சொல் தட்டாத பெயரன்.

ஹரி நீ மூத்த குழந்தை… உனக்கு கீழ் உள்ள தம்பி தங்கைகளை அரவணைத்து செல்லணும்! கிருஷ்ணா குடும்பம் என்றைக்குமே ஒற்றுமையா இருக்கணும். அடிக்கடி அவனிடம் போதிப்பார்.

ஹரியும் சின்நாயனா குழந்தைகள் என்று பிரித்து பார்த்ததே இல்லை.

லீலாவதியும் மெல்ல மெல்ல பொறுப்புகளை மூத்த மருமகளிடம் ஒப்படைக்க தொடங்கினார்.

ஷியாமளா லபோ திபோவென்று கத்துவாள்.

எனக்கும் என் புருஷனுக்கும் இந்த குடும்பத்தில் என்ன தான் வேலை…?

அத்தம்மா வரவு செலவு யார் பார்த்தால் என்ன? என்னை விட அவங்க நிறைய படித்தவங்க. பெரியவங்க அவங்க பார்க்கட்டும் என்று தன்மையாய் பேசி நகர்ந்து விடுவாள் தாரணி.

குடும்பத் தொழிலையே செய்து கொண்டிருக்காமல் கணிப்பொறித் துறையில் சாதிக்க வேண்டும் என்று விரும்பி IIT தேர்ச்சி பெற்று ஹைதராபத்தில் பொறியியல் படித்து வருகிறான் ஹரி.

கட் ஆஃப் கொஞ்சம் குறைந்து விட நிவேதாவிற்கு மெடிக்கல் சீட் கிடைக்கவில்லை. மெடிக்கல் தான் படிப்பேன் என்று அடமாய் இரண்டு நாள் உண்ணாவிரதம் இருந்தாள் நிவேதா.

ஹரிக்கு என்ன பணம் கொடுத்தா சீட் வாங்கினோம்? அவன் எவ்வளவு ஆர்வமும் அக்கறையுமா படித்தான்.

பேமெண்ட் சீட் எல்லாம் வாங்க முடியாது. டிகிரி ஏதாவது படி என்றார் வெங்கி.

தங்கையின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு கட்டாயம் மெடிக்கல் சேர்க்க வேண்டும் என்று கூறிவிட்டான் ஹரி. மேனேஜ்மென்ட் கோட்டாவில் பணம் கட்டி தான் சீட் வாங்கினார்கள்.

நிவேதாவிற்கு பேமெண்ட் சீட் வாங்கிய செய்தி தெரிந்து கோகுல் மனைவி குழந்தைகள் சகிதம் வந்துவிட்டான்.

அவன் மனைவி கோடீஸ்வர குடும்பத்தில் பிறந்தாலும் பொறாமை யாரை விட்டது.

உங்கள் அண்ணன் பெண்ணுக்கு இலட்சக்கணக்கில் செலவு செய்து டாக்டருக்கு படிக்க வைக்கிறாங்க.நம் பங்கு சொத்து எங்கே? அவள் படுத்திய பாட்டில் அழைத்து வந்து விட்டான் கோகுல்.

நிறுத்தி நிதானமாக இளைய மகனுக்கு சொல்ல வேண்டிய பதிலை ஆணித்தரமாக சொல்லிவிட்டார் ராமகிருஷ்ணா.

கோகுல் நீ இந்த குடும்பத்தை பிரிந்து சென்று 15 வருடமாகிறது.

பிரிந்து போயிட்டா அப்படியே போயிடுன்னு விட்டுவிடுவிங்களா?

உன்னை யாரும் போக சொல்லலையே?

நான் இங்கே இருந்து என்ன பண்ண…? ரைஸ் மில்லில் தவிடு அள்ளவா? மிளகாய் மண்டியில் மசாலா அரைக்கவா?

எனக்கு பிடித்த தொழில் செய்ய எனக்கு தோதா இருக்கணும்னு சிட்டியில் செட்டில் ஆகிட்டேன்.

அதே தான் நானும் சொல்றேன்….நீ உனக்கு பிடித்த மாதிரி தனியே தொழில் செய்து கொண்டிருக்கிறாய். அதேபோல் இவர்கள் செய்யும் தொழிலுக்கு உனக்கு கணக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

இவங்க செய்யும் தொழில்  இவர்கள் சொந்த உழைப்பில் உருவானது இல்லை மனைவி சொல்லிக் கொடுத்தபடியே கேட்டு வைத்தான் கோகுல்.

தொழில் ஆரம்பித்தது நானாக இருந்தாலும் அதை இத்தனை ஆண்டுகள் கட்டி காப்பாற்றி நஷ்டத்தில் இருந்த தொழிலை தூக்கி நிறுத்தியது இந்த இரண்டு பேரும் தான்.

தனக்கென்று 10 பைசா இவர்கள் எடுத்துக் கொண்டதில்லை.

இத்தனை வருடம் தொழில் நடத்தியதற்கு அவர்களுக்கு கொடுக்க வேண்டிய பங்கை கணக்கிட்டு கொடுக்க வேண்டும் என்றால் இந்த கிருஷ்ணா குடும்பத்து சொத்து முக்கால் பங்கும் அவர்களுக்கே சென்று சேர வேண்டும். ராமகிருஷ்ணா போட்ட போடில் பேயரைந்தது போல் நின்று நின்று விட்டனர் கோகுலும் அவன் மனையாளும்.

கோகுல் பரம்பரை சொத்தும்,நான் சம்பாதித்த சொத்தும் உனக்கு கிடைக்க வேண்டிய நேரத்தில் கண்டிப்பாக கிடைக்கும் வேதனையுடன் வாக்குறுதி கொடுத்தார் ராமகிருஷ்ணா.

எப்போ கிடைக்கும்? வெடுக்கென கேட்டு வைத்தாள் இளைய மருமகள்.

நான் இறந்த பிறகு… சிரிப்பு மாறாமல் கூறிய தந்தையை வருத்தமுடன் பார்த்தனர் மூத்த மகன்கள்.

உண்மை தான் சொல்றேன். நான் உயிரோடு இருக்கும் வரை என் சொத்துக்களை பிரிக்க அனுமதிக்க மாட்டேன். இந்தக் குடும்பம் என் மூச்சு உள்ளவரை கிருஷ்ணா குடும்பமாகத்தான் இருக்க வேண்டும்.

என் மரணத்துக்கு பிறகு எது வேண்டுமானாலும் நடக்கட்டும் அது பற்றி எனக்கு கவலை இல்லை. உறுதியாக பேசும் தந்தையை எதிர்க்க துணிவின்றி கோகுல் சென்று விட்டான்.

“—————“

ஹரி இறுதி ஆண்டு படிக்கும்போது கேம்பஸ் இன்டர்வியூவில் செலக்ட் ஆகியிருந்தான்.

மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொள்ள இனிப்புடன் வந்து நிற்கும் பேரனை கண்டு உள்ளம் வருந்தினார் ராமகிருஷ்ணா.

தாத்தா உங்க முகத்தில் மகிழ்ச்சியே இல்லையே… சந்தேகமுடன் கேட்டான் ஹரி.

ஹரி உனக்கு மாசம் எவ்வளவு சம்பளம் கிடைக்கும்?

மூன்று லட்சத்துக்கு மேல் கிடைக்கும் தாத்தா… பெருமையாக கூறினான்.

நம்ம கிட்ட எத்தனை பேர் வேலை செய்றாங்க தெரியுமா? உன் நானா எத்தனை லட்சம் சம்பளம் கொடுக்கிறார் தெரியுமா?

தாத்தா…! தன் கனவு தகர்ந்து விடுமோ என்று அஞ்சினான் ஹரி.

ஹரி நம்ம ஊரில் என்ன இல்லை? எதுக்காக பிழைப்பு தேடி இன்னொரு நாட்டுக்கு போகணும்?

பரம்பரையா நம்ம குடும்பம் தொழில் செய்யும் குடும்பம். இங்கேயே ஒரு தொழிலை தொடங்கு 100 பேருக்கு வேலை கொடு!

தாத்தாவின் கெஞ்சல் பார்வையும் உறுதியான பேச்சும் ஹரியின் பிடியை தளர்த்தியது.

நண்பர்களோடு சேர்ந்து சிறிய அளவில் IT கம்பெனி தொடங்கினான்.

தங்கள் வீட்டிலேயே 100 பசுவிற்கு மேல் இருக்கும் போது பாலை ஏன் ஸ்டோரில் ஊற்ற வேண்டும்? நாமே ஏன் பால்பண்ணை தொடங்கக்கூடாது என்ற எண்ணம் தோன்றியது.

“கிருஷ்ணா பால்” என்ற பண்ணை உருவானது.

பெயரனின் உழைப்பும் புத்திசாலித்தனமும் கண்டு அத்தனை கர்வம் அந்த முதியவருக்கு.

தன்னைப் போல் தன் மகனும் தொழிலில் ஆர்வமாய் இருப்பது கண்டு சுப்புவிற்கு மட்டற்ற மகிழ்ச்சி.

ஹரியின் ஹீரோ அவன் நானா தான். எந்நேரமும் காலில் சக்கரம் கட்டி சுழலும் நாயனாவை பிரம்மிப்புடன் பார்ப்பான்.

“——————“

மருத்துவ படிப்பு முடித்து வந்த நிவேதாவிற்கு நல்ல இடத்தில் வரன் தேடி டாக்டர் மாப்பிள்ளையாக பார்த்து பெரிய அளவில் சீர் செய்து கோலாகலமாக திருமணம் முடித்து வைத்தனர்.

எம்பிஏ படிப்பை முடித்து வந்த ராம்சரணும், தேவ் சரணும் அண்ணனுடன் இணைந்து கொண்டனர்.

நாட்கள் நகர்ந்து செல்ல…. பெற்ற பிள்ளை பேரப்பிள்ளை என்று வாழ்வாங்கு வாழ்ந்த ராமகிருஷ்ணா நோய்வாய்ப்பட்டு இறைவனடி சேர்ந்தார்.

சுப்புவும்,வெங்கியும் பரம்பரை தொழிலை கவனிக்க…. ஹரி,ராம், தேவ் மூவருமாய் பால் பண்ணை தொழிலை விரிவுப்படுத்தி பால் பொருட்கள் ஏற்றுமதியை தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வந்தனர்.

சுப்புவிற்கு அடுத்து ஹரி தான்.

அதே பிசினஸ் மைண்ட், அதே சுறுசுறுப்பு.

தாரணிக்கு அவ்வளவு ஆனந்தம். என் மகன் இவனென்று. முன்னெல்லாம் கணவனை கண்டு பூரித்து நிற்பாள். இப்போது அந்த லிஸ்டில் மகனும்.

“—————-“

தந்தையின் இறப்பிற்கு வந்த கோகுல் தன்னுடைய பங்கை பிரித்து கொடுக்கும்படி கேட்க…. ஏற்கனவே தயாராய் பிரித்து உயில் எழுதி வைத்து விட்டே சென்று இருந்தார் ராமகிருஷ்ணா.

இந்த கிராமத்தில் நமக்கு எதற்கு சொத்து என்று கோகுல் மனைவி பாட்டு பாடவே…. அண்ணன்களிடமே சொத்தை விற்று சென்று விட்டான் கோகுல்.

ராமகிருஷ்ணா இறந்து ஓராண்டுகள் கூட லீலாவதி உயிரை இழுத்து பிடிக்கவில்லை. கணவரை தேடி அவரும் பரமபதம் அடைந்து விட்டார்.

கரீம் நகரில் சிறிய நர்சரி பள்ளி ஒன்று விலைக்கு வர அதை வாங்கிவிட்ட ஷியாமளா தலைமையேற்று நடத்தி வருகிறார்.

இப்போது குடும்பத்தின் மூத்தமருமகளாக பொறுப்புகளை ஏற்று நடத்த வேண்டிய கட்டாயத்தில் தாரணி இருக்கிறார்.

சொந்தம் பந்தம் உறவுகள் என்று வருவோர் போவோரை கவனிக்க வேண்டும்… கிருஷ்ணா குடும்பத்தின் சார்பில் நல்லது கெட்டதுகளில் கலந்து கொள்ள வேண்டும். வீட்டு வேலையாட்கள், பண்ணையில் வேலை செய்யும் ஆட்களுக்கு கணக்கு வழக்கு எழுதி சம்பளம் கொடுக்க வேண்டும்…. மளிகை வாங்குவதில் இருந்து பண்டிகை கொண்டாடுவது வரை எல்லாமே தாரணி தான்.

தாரணியின் பொறுப்புகள் கூடியிருந்தது. மிகுந்த பொறுப்புகள் கூடி சுமையாகி விட்டது என்று கூட சொல்லலாம்.

ஓடிக் கொண்டே இருக்கும் வாழ்க்கை ஓட்டத்தில் சிறு சலிப்பு தொடங்கி விட்டது தாரணிக்கு. வயதும் 45 ஐ கடந்து விட்டது. சீரற்ற மாதவிடாய் மன உளைச்சலை கொடுத்திருந்தது.

அடிக்கடி கோபம் சிடுசிடுப்பு தன்னை பற்றி உடல் நலம் பற்றிய அக்கறையின்மை…. எந்நேரமும் வேலை வேலை என்ற பரபரப்பு… மொத்தத்தில் விஜயதாரணி அதிக பொறுப்பை சுமக்கும் குடும்பஸ்திரியாக மாறிவிட்டிருந்தார்.

ஆசையும் காதலுமாய் சுப்பு மனைவியை அணுகும் போது… இன்னும் 16 என்று நினைப்பா?பையனுக்கு கல்யாண வயது வந்தாச்சு…. விலகி படுத்து விடுவார் தாரணி.

உடலும் உள்ளமும் தளர்ந்து விட்ட உணர்வு அவருக்கு.

மெனோபாஸ் அறிகுறிகள் வேறு ஆரம்பித்துவிட்டது.

நாள் முழுவதும் அலைந்து திரிந்து வேலை பார்த்து வரும் சுப்புவிற்கு மனைவியின் மடி சாயவேண்டும் என்ற ஏக்கம்.

ஏனோ தெரியவில்லை இப்போதெல்லாம் அடிக்கடி மனைவியை நாட சொல்கிறது அவர் மனது.

50 வயது கிழடா? அவ்வளவுதானா வாழ்க்கை? சுப்புவிற்கு வருத்தம்.

40 வயதுக்கு பிறகு பெண்ணுக்கு தாம்பத்தியத்தில் நாட்டம் இருப்பதில்லை… குடும்பம் குழந்தை என்ற நெருக்கடியான வாழ்க்கை சூழல் ஒரு காரணமாக இருக்கலாம்.

ஆனால் ஆண்களுக்கு நாற்பதுக்கு மேல் நாட்டம் அதிகரிக்கிறது.

ஓடி ஓடி களைத்துப் போகும் வாழ்க்கையில் ஒரு இளைப்பாறலாக அந்த சுகத்தை நினைக்க கூடுமோ…?

“—————–“

நிவேதா கர்ப்பம் அடைந்திருக்க சீமந்தம் செய்து பிரசவத்திற்கு தாய் வீட்டுக்கு அழைத்து வந்திருந்தனர்.

ஹரிக்கும் இருப்பத்தேழு ஆரம்பிக்கப் போகுது சீக்கிரம் விவாகம் செய்ய வேண்டும் என்று நச்சரிக்க தொடங்கினார் தாரணி.

இப்போ என்னம்மா அவசரம் என்று நழுவிக் கொண்டிருந்தான் ஹரி.

அண்ணையா சீக்கிரம் முடிங்க அப்போதான் எங்க ரூட்டு கிளியர் ஆகும் என்று ராமும் தேவும் கண்சிமிட்டி சிரித்தனர்.

“———————-“

நிவேதாவை கவனிக்க அலமேலு என்ற பெண்ணை வேலைக்கு வைத்தனர்.

கணவனை இழந்த பெண் அலமேலுவிற்கு வறுமையான குடும்பம். இரு குழந்தைகளை வளர்க்க படாதபாடு படுகிறாள்.

பாவம் என்று வேலைக்கு அவளை சேர்த்ததே தாரணி தான்.

வேலைக்காரியாக கடனே என்று இல்லாமல் நிவேதாவை பொறுப்பாக கவனித்துக் கொண்டாள் அலமு.

சுத்தபத்தமாகவும்  சுறுசுறுப்பாகவும் வேலை செய்யும் அலமுவை  வீட்டில் ஒருத்தியாக தான் பார்த்தார் தாரணி.

தாரணி இவளுக்கு நீ ரொம்ப இடம் கொடுக்குற… ஷியாமளா எச்சரிக்கை விடுத்தார்.

அப்படிலாம் இல்லை என்று நழுவி விடுவார் தாரணி.

அம்மா பெதம்மாக்கு எல்லாம் தெரியும்! நீங்க ஏன் எப்போவுமே அவங்களை குற்றம் சொல்லிட்டே இருக்கீங்க? சப்போர்ட் பேசினாள் நிவேதா.

ஏய் அலமு பாவாக்கு செய்ய தாரணி இருக்கா… உன்னை யாரு தண்ணீர் கொடுக்க சொன்னது? காட்டமாக கத்தினார் ஷியாமளா.

ஏய் ஷியாமளா… உனக்கு என்ன பைத்தியமா? நீ பேசுறதோட அர்த்தம் உனக்கு புரியுதா? வெங்கட கிருஷ்ணா கடுமையாக முறைத்தார்.

ஏன் புரியாம? அந்த அலமு பார்வை சரியில்லை சொல்லிட்டேன். உங்க அண்ணையா பார்வையும் தான். ஏதோ தப்பா நடக்கப் போகுது சொல்லிட்டேன்.

ஏய்… உன்னை… மனைவியை அடிக்க கையை ஓங்கிவிட்டார் வெங்கி.

இங்க பாருங்க என் புருஷனை பற்றி எனக்கு தெரியும்!  அவர் உலகமே நான் தான். இந்த வயசுக்கு மேல என் பாவா இன்னொரு பெண்ணை தேடப் போகிறாரா?

புருஷன் இல்லாம இருக்கிற அந்த பெண்ணை தவறா பார்க்கிறது பாவம். தயவு செய்து இப்படி பேசாதீங்க நான் பொறுத்துக்க மாட்டேன்.

என் பாவாவை உங்களுக்கு பிடிக்காதுங்கிறதுக்காக அசிங்கமா பேசாதீங்க!தாரணி இவ்வளவு கடிந்து இதுவரை பேசியதே இல்லை.

தன் ஆருயிர் கணவனை ஒருத்தி சந்தேகப்பட்டு பேசிடலாகுமா?

“————–“

நிவேதாவிற்கு ஆண்குழந்தை பிறந்தது.

தாய் மாமன்கள் மூவரும் கொண்டாடி தீர்த்துவிட்டனர்.

பிறந்த குழந்தையை கண்விழித்து பராமரிக்க அலமேலுவை கொஞ்சநாள் வீட்டோடு தங்கும்படி தாரணி கேட்டுக்கொண்டார்.

அன்று இரவு பதினோரு மணிக்கு மேல் இருக்கும். அடிப்பாவி…. எச்ச பொறுக்கி நாயே… என்ன ஜென்மம் நீ! உன்னை வெட்டி புதைக்கணும். ஷியாமளாவின் கத்தல் அந்தகார அமைதியை கிழித்து கொண்டு எதிரொலித்தது.

நாய் ஊளையிட்டு கத்த தொடங்கியது. அயர்ந்து உறங்கிய குடும்பத்தார் அடித்து பிடித்து எழுந்து தோட்டத்து பக்கம் விளக்கு போட்டு ஓடிவந்தனர்.

அங்கே மாட்டு தொழுவத்தின் பின்னே வைக்கோல் போருக்கு அருகில் இழுத்து போர்த்திக் கொண்டு அலமேலு தலைக்கவிழ்ந்து நிற்க… வேட்டியின்றி அண்டர்வேருடன் பிடிபட்ட வேதனையில் கூசி நின்றார் சுப்பகிருஷ்ணா.

அவர் உடல் நடுங்கியது… அவமானத்தில் அணு அணுவாய் இறந்து கொண்டிருந்தார். பெரியமனுஷன் குடும்பதலைவன் செய்யும் செயலா இது?

அய்யோ எல்லாரையும் எப்படி ஏறிட்டு பார்ப்பேன்….?

பெதநயனா…. தேவ் மெல்லிதாய் அதிர்ச்சியில் முணுமுணுக்க… ஹரிக்கு பூமி காலுக்கு அடியில் நழுவியது.

தான் கதாநாயகனாய் நினைக்கும் தன் தந்தை ஒரு ஆயம்மாவோடு தகாத உறவில்…. அவன் இதயம் அதிவேகமாய் துடித்தது.

அச்சத்துடன் பின்னே திரும்பி பார்த்தான் அங்கே தொழுவத்தின் கல்தூணை பற்றிக் கொண்டு துவண்டு நின்றாள் தாரணி.

என் பாவா….!? தன் இதயம் வெடிக்க போகிறதோ என்பது போல் இருந்தது.

நான் சொன்னப்போ யாருமே நம்பலையே… இப்போ கையும் களவுமா பிடித்திருக்கேன் என்ன பதில் சொல்வீங்க? ஷியாமளா பேசிக் கொண்டிருக்க அங்கே நிற்கவில்லை தாரணி.

அழுது கொண்டே உள்ளே ஓடினார் தாரணி.

அம்மா….அம்மா … விபரீதம் புரிந்து பின்னால் ஓடினான் ஹரி.

அம்மா கதவை திறங்க ப்ளீஸ்… ஹரி கண்ணீருடன் கதறினான்.

அம்மா வெளிய வாங்க… ராம் தேம்பி அழுதான்.

தாரு…. என்னை மன்னிச்சுடும்மா… கதவை தட்டி கெஞ்சினார் சுப்பு.

தாரு என்ற அவர் குரலில் இன்னும் இன்னும் வேதனை அதிகமாகியது தாராணிக்கு.

நான் உன்னுடைய தாரு இல்லை. இருந்திருந்தால் இத்தனை வயதிற்கு பிறகு இன்னொருத்தியை உன்னால் நினைக்க முடியுமா?

நீயும் நானும் வாழ்ந்த வாழ்க்கை பொய்யா? நான் தோற்று விட்டேனே… ஷியாமளா சொன்னபோது நான் நம்பவில்லையே… என் நம்பிக்கை பொய்யா… என் பாவா பொய்யா?

தாரு நான் சபலத்தில் பண்ணிட்டேன். என்னை மன்னிச்சுடும்மா… சுப்பு கதற… ஆத்திரம் தலைக்கேற ரெளத்திரனாய் நின்ற ஹரி காலில் அணிந்திருந்த செருப்பை கழட்டி சகட்டு மேனிக்கு அடிக்க தொடங்கினான். தோல் செருப்பு பிய்ந்து தொங்கியது.

யாரும் தடுக்கவில்லை… ஏன் சுப்புவும் தடுக்கவில்லை. சிலையாய் நின்று வாங்கி கொண்டார்.

அண்ணையா… மனம் கேட்காது தேவ் குறுக்கே புகுந்து தடுத்தான்.

எங்கம்மாக்கு எப்படி துரோகம் செய்ய முடிஞ்சது? மகனுக்கு விவாகம் செய்ய வேண்டிய வயசுல இந்தாளுக்கு பொம்பள  தேவைப்படுதா….? ஹரியின் ஆவேசத்தில் கூனி குறுகி… உயிர் பிரிந்து விட்டால் நன்றாக இருக்கும் என்று தவித்து நின்றுவிட்டார் சுப்பு.

எல்லோரும் சுதாரிக்கும் முன் ஆஆஆஆ என்ற அலறல் ஸ்டோர் ரூமில் இருந்து.

அம்மா… மகன்கள் அழுது அரற்றி கதவை உடைத்து உள்ளே சென்றனர். மண்ணெண்ணெயில் எரிந்து கொண்டிருந்தார் தாரணி.

அருகில் இருந்த சாக்குபையை அள்ளி போட்டு நெருப்பை அணைத்து வலியில் துடித்த தாரணியை காரில் ஏற்றினார்கள்.

தாரு… தலையில் அடித்துக் கொண்டு சுப்பு ஓடிவர… டேய் தேவ் எங்கம்மாக்கு ஏதாவது ஆச்சு இந்த ஆளை நான் பெட்ரோல் ஊத்தி கொளுத்திடுவேன். போய் சாக சொல்லு! கர்ஜித்தான் ஹரி.

அப்போது தான் மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திக் கொண்டதாலும் முகம் மார்பு பகுதி என்று எங்கும் தீக்காயம் பரவவில்லை.

வலது பக்கம் கழுத்து, காது, முதுகுபுறம்,தோள்பட்டை என்று காயம் இருந்தது. கழுத்தில் பட்ட தீ சற்று மேலே பரவி முகவாய் வரை லேசாய் தோல் வழன்று விட்டது.

உயிருக்கு ஆபத்தில்லை என்று தெரிந்து நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

மனைவியை பார்க்க ஓடிவந்த சுப்புவை வாயிலில் வைத்தே விரட்டி அடித்தான் ஹரி.

உனக்கு யாரு பாரியாள்…? ஆயம்மாவை தேடின உனக்கு எங்கம்மா முகத்தை பார்க்கும் அருகதை இல்லை… போயிடு…. மருத்துவமனை என்றும் பாராமல் பாய்ந்துவிட்டான்.

“—————“

பிளாஸ்டிக் சர்ஜரி செய்யலாம் என்று மருத்துவர்கள் கூறியும் தாரணி ஒப்புக்கொள்ளவில்லை.

இனி நான் எப்படி இருந்தால் என்ன என்று முடித்துக் கொண்டார்.

தன் தாய் கொள்ளை அழகு என்று மஞ்சள் பூசி மங்களகரமாக நடமாடும் தாரணியை பூரித்து ரசிப்பான் ஹரி.

தன் தாயை போல் அன்பும் அழகுமான பெண்ணாக தனக்கு அமைய வேண்டும் என்று ஆசை கொண்டான்.

அந்த அழகு தாயின் வெந்து கருகிய கழுத்தும் விகாரமாய் தெரிந்த காதோரமும் ஹரியால் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை.

பாரியாளிடம் மன்னிப்பு கேட்க பல வகையிலும் முயற்சித்து பார்த்துவிட்டார் சுப்பு.

பாவா என்று காதல் சொறியும் அந்த அழகிய கண்கள் அவரை ஏறிட்டு பார்ப்பதேயில்லை.

ம்ம்மா இந்த ஆளை பார்த்தாலே எனக்கு எரியுது… தாயின் தீக்காயத்தை கண்டு துடித்தான் ஹரி.

அமைதியா இரு ஹரி….!

ம்ம்மா நம்ம இந்த வீட்டை விட்டு போயிடலாம்.

எங்கே?அமைதியாக கேட்டார் தாரணி.

அம்மா நான் பார்த்துக்கிறேன். உங்களை ராணி மாதிரி பார்த்துக்கிறேன்.

ம்கூம் என்று தலையசைத்தார் தாரணி.

ஹரி எங்க அண்ணையா பண்ணினது சரின்னு நான் சொல்லல…. ஆனா அதையே பிடிச்சு தொங்கிட்டு இருக்க வேண்டாம்.

வேறென்ன பண்ணனும்? சின்நாயனாவிடம் சினந்தான்.

செய்த தவறை நினைத்து அவர் உள்ளுக்குள்ளே துடித்துகிட்டு இருக்காரு…. அவர் முகத்தை கொஞ்சம் பாரு… கண்ணில் உயிரை வச்சு எலும்பும் தோலுமா நடமாடிட்டு இருக்காரு.

என்ன சின்நாயனா அண்ணையாக்கு சப்போர்ட்டா?

ஹரி ஏன் இப்படி அடம் பிடிக்குற? சலித்துக் கொண்டார் வெங்கி.

உங்க அண்ணையா செய்த தப்பை எங்கம்மா செய்திருந்தா என்ன பண்ணியிருப்பீங்க?

அண்ணன் மகனின் சவுக்கடி கேள்விக்கு பதில் கூற முடியாமல் வெங்கி திகைத்து நின்றார்.

அப்படி கேளு ஹரி…. கைகட்டி  கம்பீரமாய் நின்றார் ஷியாமளா.

வாயை மூடு சொல்லிட்டேன். இந்த பிரச்னைக்கு நீதான் மூலக்காரணம் மனைவியிடம் எகிறினார்.

ஓ…. அந்த அசிங்கத்தை நான் அம்பலப்படுத்திட்டேன்னு இந்த ஆட்டமா? இப்போ கூட உங்க அண்ணையா பண்ணின அசிங்கம் தவறில்லை அதை கண்டுப்பிடிச்சு எல்லாருக்கும் நான் தெரியவச்சது தான் தப்புன்னு நினைக்கிறீங்க…இது என்ன மனோபாவம்?

ஆமா… உனக்கு தெரிந்ததை என்கிட்ட ரகசியமா சொல்லி இருந்தா வேற மாதிரி இந்த பிரச்னையை தீர்திருக்கலாம்.

எப்படி கூசாம பேசறீங்க? சுப்பு பாவா பண்ணினது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம். தாரணியை காதலித்தது பொய்யா? வயசாகிட்டா காதல் மாறிடுமா?

நீ உள்ளே போ…! மனைவியை விரட்டியவர் ஹரி இனி இந்த பிரச்னையை பேச வேண்டாம்.

அந்த அலமுவுக்கு ஒரு தொகை கொடுத்து ஊரை விட்டே அனுப்பிட்டேன். இனி அவளால் எந்த பிரச்னையும் வராது.

ச்சீ… இப்படி பேச உங்களுக்கு அசிங்கமா இல்லை. நீங்க உங்க அண்ணையாக்காக பண்ணின காரியத்துக்கு பேரு வேற….

ஹரி…. ஓங்கி அறைந்திருந்தார் வெங்கி.

தேவும் ராமும் இருவரையும் சமாதானம் செய்ய முயன்றனர்.

என்னடா பெரிய இவனாட்டம் துள்ளுறான். என்ன ஊரு உலகத்துல நடக்காததா? கஷ்டப்படாம வளர்த்தாச்சுள்ள அது தான் இவ்வளவு திமிரு கூடியிருக்கு… பெத்த தகப்பனை அடிக்கிற அளவுக்கு வளர்ந்து நிக்கிறாரு.

ஏதோ ஆகாத நேரம் பெரிய மனுஷன் சபலத்தில் சறுக்கிட்டார். அதுக்கு மன்னிப்பே கிடையாதா?

நீங்க நியாயம் பேசாதீங்க சொல்லிட்டேன்… விரல் நீட்டி எச்சரித்தவன். நீங்க கஷ்டப்படாம வளர்த்த வரைக்கும் போதும்.

அம்மா என்னால இங்கே இருக்க முடியாது… நான் கிளம்புறேன்!

ஹரி… வேண்டாம் பாபு…. தாரணி கதறினார்.

வாங்க போகலாம்!

நான் வரல…!

ம்ம்ம்மா இந்த அசிங்கம் பிடித்த ஆளு கூட வாழணுமா?

ஹரி இந்த வயசுக்கு மேல நான் வாழா வெட்டியா போகணுமா?

ஏம்மா இந்த காலத்துல இப்படி பேசிட்டு இருக்கீங்க?

ஹரி இந்த வீட்டுல என்ன நடந்துச்சுனு நம்மை தவிர யாருக்கும் தெரியாது. தெரியவும் கூடாது.

கௌரவமா வாழனும்னு நினைக்கிற உங்களுக்கு இப்படி ஒரு புருஷன்? நக்கலாய் சிரித்தான்.

ஹரி என்னோட அத்தம்மா எனக்கு சொன்னது… இந்த கிருஷ்ணா குடும்பத்தோட மானம் மரியாதை வீட்டு மருமகள் கையில் தான் இருக்குது.

அந்த மனுஷனுக்கு மானம் மரியாதை பற்றி கவலை இல்லாமல் இருக்கலாம் எனக்கு இருக்கு.

நான் சாகும் வரை இந்த வீட்டில் தான் இருப்பேன் சுப்ப கிருஷ்ணாவின் பாரியாலா இல்லை உங்க ரெண்டு பேரோட அம்மாவா.

சரிம்மா நீங்க வரவேண்டாம்… நான் போறேன் .

எனக்கு உங்க குடும்ப பெருமை வேண்டாம்.

குடும்ப பெருமை வேண்டாம்… குடும்ப சொத்து மட்டும் வேணும்! கேலியாய் சிரித்தார் வெங்கட கிருஷ்ணா.

வேண்டாம்… உங்க குடும்பமும் வேண்டாம் உங்க சொத்தும் வேண்டாம்.

பாபு…. அழுது கொண்டே பின்னாலே ஓடினார் தாரணி.

ம்ம்ம்மா.. இங்கே இருந்தா அந்த ஆளை நான் கொன்னுட்டு ஜெயிலுக்கு போயிடுவேன். என்னால தாங்க முடியலம்மா… என்ன கேடுகெட்ட மனுஷங்க இவங்க….!

நான் கிளம்புறேன்….! என் சர்டிப்பிக்கெட்ஸ் தவிர வேறெதுவும் கொண்டு போகலை…

இந்த படிப்பு யாரு கொடுத்தது? நக்கலாய் கேட்டார் வெங்கி.

நீங்க படிக்க வைத்ததை விட அதிகம் சம்பாதிச்சு கொடுத்துட்டேன்.

ம்ம்மா நான் வரேன்…!

பாபு…. வேண்டாம்… சுப்ப கிருஷ்ணா கையெடுத்து கும்பிட்டார்.

ச்சீ… உன் முகத்தில் முழிக்கிறதே பாவம்! வேகமாய் கிளம்பிவிட்டான்.

அமெரிக்கவில் இருக்கும் அகிலனை தொடர்பு கொண்டு வேலைக்கு ஏற்பாடு செய்து கொண்டு கிளம்பிவிட்டான்.

குடும்பத்தினருடனான தொடர்பை துண்டித்துக் கொண்டான்.

தாயை மட்டும் அவனால் விலக்க முடியவில்லை.

தாரணி கணவன் வீட்டில் வாழ்கிறார் அவ்வளவு தான் கணவனுடன் வாழவில்லை.

கணவன் ஒருவன் இருக்கிறான் என்பதை அவர் நினைப்பதே இல்லை.

சுப்புவும் நடை பிணமாக தான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்.

செய்த தவறு ஒவ்வொரு நாளும் அவர் உயிரை குறைத்துக் கொண்டிருந்தது என்பது உண்மை.

“——————-“

ஹரிசரணுக்கு விவாகம் முடிக்காமல் ராம் சரணுக்கு எப்படி முடிப்பது…?

ராமுக்கு இன்னும் ஏழுமாதத்தில் விவாகம் முடிக்காவிட்டால் மூன்று வருடத்திற்கு செய்ய முடியாது என்று கூறிவிட்டனர்.

பாபு உனக்கு முப்பது ஆகப்போகுது….தாரணி மகனிடம் கெஞ்சினார்.

ம்ம்மா என்னை பற்றி யோசிக்க வேண்டாம். நீங்க ராமுக்கு பாருங்க! திட்டவட்டமாய் கூறிவிட்டான் ஹரி.

சொந்தத்திலே பெண் பார்த்து முடிவு செய்து திருமணத்திற்கு அவனை அழைக்க… அப்போதும் வர மறுத்து விட்டான்.

எப்படி அந்த வீட்டு வாயிலை மிதிப்பது? நடந்த எதை மறந்து விட முடியும் ?

வைராக்கியமாய் மூன்றாண்டுகள் இருந்து விட்டவன் தாயின் கண்ணீருக்கு கரைந்து வீட்டுக்கு செல்ல முடிவெடுத்தான்.

கூடவே பவித்ராவின் காதல் அவனை இறங்கி செல்ல வைத்தது.

நடந்ததை சொல்லி முடித்தவன் பவித்ராவின் மடியை நனைத்திருந்தான்.


————–தொடரும் ———–

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!