Skip to content
Post Views: 9,805
வீரணனுக்கு தான் மிகுந்த சங்கடம். என்னதான் தூக்கி வளர்த்த பிள்ளையாக இருந்தாலும் நிறையிடம் தன் அசௌகரியங்களை சொல்ல முடிய வில்லை. மகன்களும் வாரத்தில் ஒரு நாள் தான் வர முடிந்தது. கல்யாணியால் தொடர்ந்து கவனிக்க முடியவில்லை. ஒரு பொம்பளையா எப்படி அவ்வளவு பெரிய உருவத்தை கணவனே ஆனாலும் கை தூக்கி பாத்ரூம் எல்லாம் அழைத்துச் செல்ல முடியும். நிறை தான் உடன் இருப்பது…
குளுக்கோஸ் வேற தொடர்ந்து ஏறிக்கொண்டே இருக்க, அவரையும் மீறி படுக்கை நனைந்து விட்டது. வீரணனுக்கு அந்த வயதில் கண்ணெல்லாம் கலங்கிப் போனது. எவ்வளவு திடகாத்திரமான மனிதர்.. மூன்று ஆண் மக்களைப் பெற்று வளர்த்து நல்ல முறையில் திருமணம் செய்து கொடுத்தவர். இன்று தன்னால் முடியாமல் தளர்ந்து போனதே அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
கல்யாணி அவரை தாங்கிப் பிடிக்க, சிறு முகச்சுளிப்பும் இல்லாமல் நிறை தான் எல்லாவற்றையும் துவைத்துப் போட்டது.
“ஏதாவது மருந்து மாத்திரை இருந்தா எனக்கு கொடுத்துடுங்க. நிம்மதியா சாகுறேன்.. என்னால இப்படி எல்லாம் வாழ முடியாது கல்யாணி. நல்ல முறையில் செஞ்சு என்னை தெக்க அனுப்பி வைங்க” மனம் தளர்ந்து போய் வீரணன் சொல்ல, கல்யாணிக்கு அழுகை தான் வந்தது.
Advertisement
அவரும் என்ன சொல்வார்.. யாரையும் குற்றம் சொல்ல முடியாத அளவுக்கு மகன்களும் செலவு செய்கிறார்கள். தள்ளாத வயது, தயங்கி நிற்க, மேலே செல்ல யோகம் வர வில்லை. இன்னும் காலம் கிடக்க நடமாட்டம் குறுகிப்போனது. போராடி பார்க்க வயது துணை இல்லை. வயதாகிற்று என்பதற்காக சாவை எண்ண முடியுமா?
“குத்துக்கல் மாதிரி பொண்டாட்டி நான் நிக்கும் போது என்ன பேச்சு? உங்களுக்கு சங்கடமா இருந்தா உங்க மருமகளை வர வேணாம்னு சொல்லிடுறேன்” என்றதும்,
“என்ன சங்கடம்.. நான் அவருக்கு மருமக மட்டும் தானா? அவர் தூக்கி வளர்த்த தங்கச்சி மக இல்லையா? யாரோ மாதிரியே மனசுக்குள்ள நினைச்சுகிட்டு இருக்காரு மாமன். சின்னப் பிள்ளையில்ல எத்தனை தடவை என்னை தூக்கி சுத்தம் பண்ணி இருக்காங்க. தாய்மாமனா இருந்தாலும் தகப்பன் மாதிரி தாங்குனது இவர்தான்… என் தாய் மாமனை தகப்பன் ஸ்தானத்துல வச்சு தான் பார்த்தேன். அதனாலதான் கொஞ்சம் கோபம். அதுக்காக ரத்த பாசம் விட்டுப் போகுமா? எங்க அப்பனுக்கு ஒன்னுனா நான் தள்ளியா நிப்பேன். இனி இந்த மாதிரி ஒரு வார்த்தை வரக்கூடாது” கண்டிப்பாக சொல்லி விட்டாள் நிறை.
Advertisement
அவள் மனதிலும் அந்த எண்ணம்தான். ஆயிரம் சடவு இருந்தாலும், என்னை தோளிலும், நெஞ்சிலும் தூக்கி வளர்த்த என் மாமன். அவரை என்னால் ஒதுக்கி வைக்க இயலுமா?…
Advertisement
கல்யாணிக்கு மனதில் அவ்வளவு நிறைவு. ரத்த சொந்தம் தனி என்பதை நிறை காட்டிவிட்டாள். மற்ற மருமகள்களை அவர் குறையாக நினைக்கவில்லை. சினேகா தான் இப்போது வரை சமையல் செய்து கொடுப்பது. ஜனாவை கூட அவள்தான் பார்த்துக் கொள்கிறாள். ஆனால், அவளால் நிறை மாதிரி சகித்து தன்மையோடு வேலை செய்ய இயலாது.
அதே சினேகாவை ஏற்றுக் கொண்டாள். ஒரு நாள் இரவு வந்து தங்கியவள் தான். அவளால் நிச்சயம் ஜீரணிக்கவே முடியவில்லை. தன் மாமனார் நல்ல மனிதர் தான். அவருக்கு செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணம் இருந்தாலும், முடியவில்லை. நிறையும் மாமனாராக பார்த்தால் செய்வாலோ என்னவோ?
மிகவும் போராடித்தான் வீரணனின் கால்களை காப்பாற்றினார்கள். கையில் ஸ்டிக் வைத்துத்தான் நடக்க முடியும். ஓரளவு குணமாகி தான் வீடு திரும்பியது. அதில் முழு பங்கு கல்யாணி, திருநிறை செல்வியை சாரும். சொந்தத்தின் அருமையை கொஞ்சம் உணர்ந்தார் மனிதர்.
Advertisement
தந்தையின் உடல் நிலைக்குப் பின் மிகவும் உயர்ந்து பிரபா சொந்த ஊருக்கு மாற்றல் வாங்கிக் கொண்டு வந்து விட்டான். நிச்சயம் பெரியவர்களோடு யாராவது இருக்க வேண்டுமே?… நிறைக்கு அந்த ஊர் சௌகரியம் என்பதால் பிரபாவுக்கு மாற்றுக் கருத்து இல்லை. அவன் அண்ணன்களைப் போல நாகரிக வாழ்க்கையை அவன் ஆதரிக்கவும் இல்லை.
கணவன் பழையபடி சொந்த ஊரில் வேலைக்கு வந்தபின் நிறைக்கு அவ்வளவு தெம்பு வந்தது. இந்த கொஞ்ச நாளில் ஒற்றை ஆளாக அவ்வளவு பார்த்தாள். தற்போது தனி தனி சமையல் எல்லாம் இல்லை. வீட்டை முழுதாக நிறையே பார்த்துக் கொண்டாள்.
முன்பு போல வீரணன் வேலைக்கு செல்ல மகன்கள் அனுமதிக்கவில்லை. பெற்றவர்களை பிரபா பார்ப்பதால், மற்ற மகன்கள் பணம் கொடுக்க முன் வந்தார்கள். பிரபா தம்பதிகள் மறுத்து விட்டார்கள்,
“பெரிய செலவு சமாளிக்க முடியாதது அப்படின்னா நீங்க செய்ங்க.. அத விட்டு நம்மள பெத்தவங்களுக்கு சாப்பாடு போடுறதுக்கு பங்கு கொடுக்காதீங்க” என்று கண்டிப்போடு சொல்லி விட்டான் பிரபா.
வாழ்க்கை சுழல, குடும்ப பொறுப்பு பிரபா கையில் வந்து விட்டது. சொந்த ஊரில் மேனேஜர் என்பதால் அவனுக்கு நிறைய மரியாதை… அலைந்து திரியும் வேலையை விட்டு மெதுவாக ஊரளவில் நடக்கும் சின்ன சின்ன வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார் வீரணன். அவரால் எந்த வேலையும் செய்யாமல் வீட்டிலே இருக்க முடியாது.
விவசாய கடனுக்காக தன் கூட்டாளிகளோடு பேங்க் சென்றார் வீரணன். அவருக்கு தெரியும் இங்க தான் மகன் வேலை செய்கிறான் என்று… ஆனால், இவர் தான் மேனேஜரின் அப்பா என்று அங்குள்ளவர்களுக்கு தெரியாதே.
வெளிப்புறம் இருக்கும் கண்ணாடியில் இருந்து மகன் உள்ளே உள்ளான் என்று தெரிந்தும் விருவிருவென மனிதர் உள்ளே நுழைந்து விட்டார். அவர் தடுப்பை தாண்டி செல்லும் முன்னே தடுத்தான் ஒருத்தன்…
“என்ன சார் உங்க சொந்த வீடு மாதிரி வந்தது விருதுன்னு உள்ள போறீங்க? விவசாய கடன் தானே, உட்காருங்க கூப்பிடும்போது உள்ள போங்க. அப்படியே நேராவும் மேனேஜர் எல்லாம் பார்க்க முடியாது. அங்க ஒருத்தர் உட்கார்ந்திருக்காரு பாருங்க அவர் கிட்ட பேசுங்க. மேனேஜர் பாக்குறதுக்கு எல்லாம் முன்னாடியே அனுமதி வாங்கி இருக்கணும் சார் உள்ள மீட்டிங் நடக்குது” என்று சத்தம் போட,
வீரணனுக்கு பேச்சே வரவில்லை. அவருக்கு மகன் மட்டும்தான் கண்ணில் தெரிந்தான். இதுவரை அவன் பதவி தெரியவில்லை. இன்று நன்றாக தெரிந்தது. ஒரு எட்டு பேர் சுற்றி நிற்க, நடுவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான். கையை ஆட்டி அவன் பேசிய தோரணை பெரிய ஆளாக காட்டியது. அட! என் மகன் அவ்வளவு பெரிய மனிதனா!..
தான் ஆசைப்பட்ட கவர்மெண்ட் வேலைக்கு போகவில்லை என்று ஒதுக்கி வைத்த மகன். அவனுக்கு ஒரு விவரமும் தெரியாது என்று முன் நிற்க விடாமல் தட்டியே வைத்திருப்பார். பெரிய அளவில் அவன் வேலைக்கு மதிப்பு மரியாதை எல்லாம் கொடுத்தது கிடையாது. எங்கு சென்றால் என்ன? திறமை இருக்க எங்கும் உயர்ந்து நிக்கலாம்..
பத்து பேர் அமரும் இடத்தில் நூறு பேர் கூட போட்டி போடலாம். ஆனால், பத்து பேர் தானே அமர முடியும். வழிகள் நூறு கிடக்க யோசித்தால் வாழ்க்கை முன்னேற்றம் தான். மீட்டிங் முடிந்த பின் தான் தந்தை வெளியில அமர்ந்திருப்பதையே பார்த்தான் பிரபா.
அவன் வேகமாக வெளியில் வர, மற்றவர்களும் பரபரப்பானார்கள். அந்த மரியாதையே தந்தைக்கு குளிர்ந்து போனது.
“என்னப்பா? எப்படி தனியாவா வந்தீங்க”
“சும்மா விவசாய கடன் என்னவென்று கேட்க வந்தேன்பா. நீ வேலைய பாரு.. என் கூட்டாளி நிக்கிறாங்க அவங்களோட நான் எல்லாம் நடந்து வீட்டுக்கு போறேன்” மனிதர் முகத்தில் அப்படி ஒரு புன்னகை. பிரபாக்கு புரியவில்லை.
நிறை குடும்பத்தை பார்ப்பதோடு மட்டுமில்லாமல் ஓரளவு பணம் சேர்ந்ததும் தன் கணவனிடம் சொல்லி தங்களின் தோட்டத்தில் நீர்வரத்து வர ஏற்பாடு செய்து விட்டாள். அவர்கள் தாத்தா பாட்டி காலத்தில் தொடர்ந்த விவசாயம். அவள் தந்தை விட்டு விட்டார். ஆனால், அவளுக்கு விட மனதில்லை.
என்னதான் கணவன் உயர்ந்த பதவியில் இருந்தாலும் நல்ல வருமானத்தில் இருந்தாலும் தனக்கென்று ஒரு அடையாளத்தை வேண்டியது மனம். அது சின்னதாக இருந்தாலும் தொடர நினைத்தாள். பிள்ளையை பார்த்துக் கொள்ள, அவள் சுமையை குறைக்க என்று வீட்டில் ஆள் இருக்க… தயங்காமல் தங்கள் நிலத்தை புதுப்பிக்க தொடங்கினாள்.
நிறையின் பெற்றோர்களை பொறுத்த வரை எந்த மாற்றமும் இல்லை. அதிலும் நிறை வாழ்க்கை நன்றாக செல்ல.. அவர்கள் கவனமெல்லாம் சின்ன மகள் மீதுதான். ஒரு ஆயிரம் ரூபாய் கையில் இருந்தாலும் சின்ன மகளை தேடி ஓடி வருவார்கள். நிறையும் நிறைய தடவை சொல்லிப் பார்த்து விட்டாள்.
“உங்களுக்குன்னு பணத்த மிச்சம் பண்ணுங்க.. கையில என்ன இருந்தாலும் உடனே மகள் கிட்ட கொடுக்காதீங்க. கடைசி காலம் உங்களுக்கும் நாலு காசு வேணும்” என்ன சொன்னாலும், கேட்பார்கள் செயல்படுத்த மாட்டார்கள்.
நிறையும் சொல்லி சொல்லி பார்த்து விட்டு விட்டாள். வீர சிவாவுக்கு அந்த வீட்டையும் அதை சுற்றி இருக்கும் இடத்தையும் தன் கடைசி தம்பிக்கே கொடுத்துவிட எண்ணம். மற்றதை தாங்கள் எடுத்துக் கொள்ளலாம் அது தம்பிக்கு என்று இருக்கட்டும் என வீரராகவனிடம் பேசினான். அதில் வீரராகவனுக்கும் மாற்றுக் கருத்து இல்லை.
ரோகினி தான் உடனே சினேகாவுக்கு அழைத்து, “பாத்தியா நம்ம ரெண்டு பேரும் இல்ல, அவதான் ராஜ்ஜியம் பண்றா… இனி நாம எல்லாம் அங்க விருந்தாளி தான்”
ரோகினி பேச்சு சினேகாவுக்கு உடன்பாடு இல்லை. ஹாஸ்பிடலில் இருந்து நிறையை அவள் பார்க்கிறாள். மற்ற மருமக்கள் செய்யவில்லை நான் ஏன் பார்க்க வேண்டும் என்று இல்லாமல், அவ்வளவு நன்றாக அவர்களைப் பார்த்துக் கொண்டாள். கடமையைச் செய்ய முன்வராமல் உரிமைக்கு மட்டும் எப்படி முன் நிற்பது… நிறை பெரியவர்களை நன்றாக பார்த்துக் கொள்கிறாள். கடைசி காலம் வரை பார்ப்பாள். அது எல்லாம் மற்ற மருமகளுக்கு வராது. அதனால் சினேகா, ரோகினி பேச்சுக்கு தலை சாய்க்கவில்லை. அதனால் ரோகிணி வாக்குவாதம் செல்லாக் காசாகிவிட்டது.
இந்த வீட்டையும் சொத்தையும் எதிர்பார்த்து நிறை செய்யவில்லை. தன்னை வளர்த்த தன் மாமனையும், அத்தையையும் நன்றாக பார்த்துக் கொள்கிறாள். கணவன் நன்றாக இருக்கிறான். அவள் குடும்பத்தை கட்டுகிறாள்.
சினேகா தற்போது ஐந்து மாதம். மற்ற அண்ணன்கள் இருவரும் குடும்பத்தின் தேவையை கருதி கார் வாங்கி இருந்தார்கள். பிரபா இன்னும் பைக்கில் தான் சென்று வந்தான். உனக்கும் தன் அண்ணன்களைப் போல கார் வாங்க எண்ணம் இருக்க, உடனே மனைவியிடம் கேட்டு விட்டான்.
“சும்மா அவங்க வாங்கிடாங்க, இவங்க வாங்கிடாங்கன்னு நாம கார் வாங்க கூடாது. நமக்குத் தேவை இருந்தால் நாம வாங்குவோம். அடுத்தவங்கள பாத்து முன்னேறுவதில்லை வாழ்க்கை. நான் என்னை சுத்தி தான் எனக்கு வட்டம் போட்டு வச்சிருக்கேன்”
“என்ன வட்டம்?” புரியாமல் கேட்டான் பிரபா.
“என் வளர்ச்சிக்கான வட்டம். போன வருஷத்த விட இந்த வருஷம் ஒரு அடியாவது முன்னாடி போகணும். என்னை நானே முறியடித்து வளரனும். அடுத்தவங்கள பார்த்து நாம வளர வேணாம். கார் தானே வாங்கணும் நம்ம குடும்பம் பெருசாகட்டும்” சந்தடி சாக்கில் அவள் எண்ணத்தை சொல்ல,
ஜனாவுக்கு ஐந்து வயது ஆகாமல் அடுத்த குழந்தை கூடாது என்று இருந்தான் பிரபா. அதில் நிறைக்கு உடன்பாடு இல்லை. கடவுளாக கொடுக்கும்போது வாங்கிக் கொள்வது சிறந்தது என்று தத்துவம் பேசினாள்.
“இவ்வளவு தூரம் நீ சொன்னதுக்கு அப்புறம் பொண்டாட்டி பேச்சை கேட்கிறது தான் நியாயம். அடுத்த வருஷம் கார் வாங்குறதுக்கு இப்ப ஏற்பாடு பண்ணலாமா?” விசமம் அவன் குரலில்..
“இதுக்கெல்லாம் நான் வெட்கப்படுவேன்னு நினைச்சீங்களாக்கும். உங்களையே ஓவர் டேக் பண்ணுவேன்” என்ற மனைவியை நிறைவாக அனைத்து கொண்டான் நிறையின் பிரபா…
error: Content is protected !!