Skip to content
Post Views: 3,326
“மாமா..மாமா.. வைத்தி மாமா” என்று கூவியபடி தன் நண்பனின் பைக்கில் இருந்து இறங்கி வைத்தியை நோக்கி வேகமாக வந்தான் ஜீவன்!
ஜீவன் தற்போது ஊருக்கு வந்திருந்தான், அம்மா, ஆச்சியைப் பார்த்து விட்டு வரவென்று!
வந்தவன் மான்சியை அழைத்து பேச, அவளோ இப்போது இருக்கும் சூழ்நிலையைப் பற்றி சொல்லி, பிருந்தாவை வீட்டுக்கு அழைத்து வந்த பின் வந்து அவனிடம் பேசுவதாக சொல்லியிருந்தாள்!
உடனே ஜீவன், ரிஷியை அழைத்து விட்டான்.
Advertisement
“அத்தான் நானும் உங்க கூட ஹெல்புக்கு வரட்டுமா?” என்று!
ரிஷியின் கூட இருந்த கரீம், “எஸ் ப்ரோ, உங்க வீட்டு ஆளுங்க இன்னொருத்தர் ஹெல்ப்பும் தேவைதான்!” என்றவன், தாங்கள் அந்த ஜம்மிக்கு விரித்திருக்கும் வலையைப் பற்றி சொல்லி,
“அவளும் அந்த வைத்தியும் கொஞ்ச நேரம் பேசிக்காம இருக்கணும்!
Advertisement
வைத்தி அவகிட்ட பேசிட்டான்னா, அலர்ட் ஆகிடுவான்!
Advertisement
ஸோ, நீங்க அவனை எங்கே பார்த்தாலும் பேச்சுக் கொடுத்து கொஞ்ச நேரத்துக்கு அவனை டைவர்ட் பண்ணுங்க.
நம்ம நல்ல நேரம், அவனும் ஜம்மிய போனில் கூப்பிடல, அந்த ஜம்மியும் இன்னும் பேசல!
ஆனா ரொம்ப நேரம் அப்படியே இருந்துட மாட்டாங்க! ஸோ, ஜீவன் நீங்க ஹெல்ப் பண்ணனும்னு நினைச்சா, அந்த வைத்திய பாலோ பண்ணுங்க!”
Advertisement
“ஓகே சார். நீங்க உங்க சைட் எல்லாம் ஓகே ஆனவுடன் எனக்கு டெக்ஸ்ட் பண்ணுங்க.
நான் அந்த வைத்திய தேடிப் போறேன்” என்று சொல்லி விட்டு அன்வர் சாரின் கடைசி மகன், ஜீவனின் நண்பன் அந்த சமீரின் பைக்கில் ஏறிக் கொண்டு வைத்தியை தேடி அலைந்து கொண்டிருந்தான்!
ஆனால் அவன் நல்லநேரம், ரொம்ப நேரம் அலையாமலே, பைபாஸ் ரோடை ஒட்டிய ஒரு சர்வீஸ் ரோடின் அருகில் ஓரமாக தான் ஓட்டிவந்த பைக்கை நிறுத்தி வைத்துக் கொண்டு போனில் யாருக்கோ அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தான் வைத்தி.
பிருந்தாவையும் ஜம்மியையும் காரில் கூட்டிப் போய் லாட்ஜில் விட்டவன் தன் காரை நண்பன் ஒருவன் கடையில் விட்டு விட்டு அவனது பைக்கை எடுத்துக் கொண்டு போலிஸ் ஸ்டேஷன் சென்று அவனுக்கு நன்கு பழக்கமான எஸ்ஐ ஒருவனிடம் கற்பக விநாயகா லாட்ஜுக்கு ரெய்டு போக சொல்லி பிருந்தாவின் போட்டோவையும் காண்பித்து விட்டு வந்தான்.
“நான் அங்க போய்ட்டு உனக்கு கால் பண்றேன். நானும் பிருந்தாவும் தனியே அந்த ரூமில் இருக்கும் போது நீ வந்து பிடிக்கணும்!
லோக்கல் நியூஸ் பேப்பர்காரன் ஒருத்தன் கிட்டயும், யூடுயூபர் ஒருத்தன் கிட்டயும் காசு கொடுத்து வர சொல்லியிருக்கேன்! அவங்களும் வந்துடுவாங்க!
எல்லாத்துக்கும் டைமிங் முக்கியம்! நீ உன் டீமை ரெடி பண்ணிக்கோ” என்று சொல்லி காசு கொடுத்து விட்டு தான் வந்தான்.
அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போது, “இந்த ஜம்மி வேற டொய்ங் டொய்ங்ன்னு சும்மா போன் அடிச்சுட்டே இருந்தா! அதான் சைலன்ட்ல போடுற மாதிரி ஆகிடுச்சு!
இப்ப நாம கால் பண்ணலாம்னா, போன் ஸ்விட்ச் ஆப் ஆகிடுச்சு!
சனியன், எவ்வளவு காசு அந்த பிருந்தா கிட்ட ஏமாத்தி பிடுங்கிட்டு இருக்கும்!
ஒரு நல்ல போனா வாங்கறதுக்கு என்ன! இப்படி ஒரு மணி நேரம் கூட சார்ஜ் நிக்காத போன்! பேட்டரிய கழட்டிப் பார்த்தா, நல்ல புள்ளதாச்சி வயிராட்டம் உப்பிப் போய் இருக்கு!
இதில பொழுதன்னிக்கும் ப்ளூடூத் வேற ஆன்லயே இருக்கும், இருக்கும் பேட்டரிய சாப்பிட!
ச்சே.” அலுத்துக் கொண்டான் வைத்தி!
வரும் வழியில் ஒரு டீக்கடையில் கேட்டு சார்ஜ் போட்டான்!
டீ வடை சாப்பிட்டு விட்டு, இப்போது தான் ஒரு வழியாக போன் ஆன் பண்ணி ஜம்மிக்கு போன் பண்ணலாம்னு நினச்சேன்! அப்படி என்ன தலை போற விசயத்துக்கு அப்படி அததனை வாட்டி போன் பண்ணினான்னு தெரியல!
போன் பேச விடாம, இவன் வேற!
அந்த மான்சியோட அண்ணன்ல இவன்! இவனைத் தானே பிருந்தா ஜம்மி பேச்சைக் கேட்டுக் கொண்டு அடிச்சுப் போட்டது!
இவனுக்கு நம்ம கிட்ட என்ன வேலை என்பது போல ஜீவனைப் பார்த்தான்!
என்ன என்பது போல பார்த்தவனிடம்,
“மாமா, நீங்க வைத்தி மாமா தானே நீங்க! உங்கள தான் மீட் பண்ணும்னும் நினைச்சேன்!
உங்க நம்பர் இல்ல என்கிட்ட! நம்ம சொந்தக்காரர்களில் நல்லா படிச்சு லாயரா இருக்கிற உங்கள நினைச்சா பெருமையா இருக்கும் எனக்கு!
மாமா நீங்கதான் எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும்!”
“ஹெல்ப்பா? நானா? சரிப்பா. நீ சண்டே வீட்டுக்கு வா, நல்லா பொறுமையா உக்காந்து பேசுவோம்! நான் இப்ப அவசரமா ஒரு இடத்துக்குப் போயிட்டு இருக்கேன்!”
“ஓ.. சாரி மாமா, ஆனா எனக்கு உங்க வீடு தெரியாதே! அட்ரஸ் சொல்லுங்க ப்ளீஸ்”.
“அட்ரஸ்.. இருப்பா என் கார்ட் தரேன். என்றவன், அய்யோ அது காரில் இருக்கு! பர்சில் இருந்த கார்ட் முடிஞ்சு போச்சு! நாம் இன்னொரு நாள் மீட் பண்ணுவோம்!”
“ஓகே மாமா, உங்க நம்பர் சொல்லுங்க.. வேண்டாம், உங்க போனை இப்படி கொடுங்க, நானே என் போனுக்கு ஒரு மிஸ்டு கால் கொடுத்து சேவ் பண்ணிக்கிறேன்!”
“அய்யோ, இது என் போன் இல்ல” என்றான் வைத்தி!
“என்ன மாமா இப்படி, உங்க கையில் இருக்கிற போனை உங்களோடது இல்லன்னு சொல்றீங்க! ஹெல்ப் பண்ண இஷ்டம் இல்லையா மாமா!
சாரி, மாமா, நான் இன்னும் ரெண்டு நாளில் டெல்லி போய்டுவேன்! அதுக்குள்ள என்னை அடிச்சுப் போட்ட அந்த பிருந்தாவை எதாச்சும் செய்யணும்!
பழி வாங்கணும்!
லீகலா இல்லன்னா இல்லீகலா!
ஆனா அது என் தங்கச்சியோட வாழ்க்கைக்கு ஒரு பிரச்சினையும் வந்திடக் கூடாது! ரொம்ப சேபா ப்ளே பண்ணனும்!
அதுக்கு தான் ஒரு லீகல் அட்வைஸ் உங்ககிட்ட கேக்கலாம்னு வந்தேன்!
ஏன்னா, உங்களுக்கும் பிருந்தா பேமிலி மேல கோபம் உண்டுன்னு எனக்கும் தெரியும்!
நீங்க பொண்ணு கேட்டு அவங்க கொடுக்கலன்னு! அதான் மாமா நீங்க தான் ட்ரஸ்ட்ஒர்த்தியான, அதே சமயம் நல்ல திறமையான ஆள்ன்னு உங்கள் தேடிட்டு இருந்தேன்! என்னோட லக் உங்கள இப்படி வழியில மீட் பண்ணிட்டேன்!
ஆனா நீங்க தான் எனக்கு ஹெல்ப் பண்ண மனசு வைக்க மாட்டேங்கிறீங்க!
சரிங்க மாமா! உங்க இஷ்டம்! ஆனா ப்ளீஸ், நான் இப்படி உங்ககிட்ட ரிக்வெஸ்ட் பண்ணினது வேற யாருக்கும் தெரிய வேண்டாம்” என்று சொல்லி முடித்து, வைத்தியின் கையைப் பற்றி குலுக்கி விட்டு நகர்ந்தான் ஜீவன்!
அவனுக்கு அதற்குள் சிக்னல் வந்து விட்டது கரீமிடம் இருந்து!
“எங்கேருந்துடா வர்றீங்க! ஆனா லேட்டா வந்திருக்க! முன்னாடியே அவன் நம்மகிட்ட வந்திருந்தா, இவனை வச்சே வேலையை முடிச்சு இருக்கலாம்!
ம்ம்.” என்று பெருமூச்சு விட்டபடி ஜம்மியை அழைத்தான்!
“சார். என்ன சார், போன் பண்ணினா எடுக்கவே மாட்டேங்கிறீங்க?” சலித்துக் கொண்டாள் ஜம்மி!
“ஆமா நான் எஸ்ஐ கிட்ட நம்ம திட்டத்தை எடுத்து சொல்லிட்டு இருக்கிறப்போ சும்மா சும்மா போன் அடிச்சுட்டே இருந்தா நான் என்ன பண்றது?” வைத்தியும் கடுப்படித்தான்!
“சொல்லு அப்படி என்ன தலைப் போற விசயம்?”
“சார், உங்க கிளையன்ட் ஒருத்தர் ஒரு கிராமத்து ஆள், உங்களுக்கு பீஸ் கேஷா கொண்டு வந்துருக்கார்! அத கொடுக்க உங்கள தேடிட்டு வீட்டுக்கு போயிருக்கார்! வீடு பூட்டி இருக்கவும், போன் பண்ணினார்.
நாம இருக்கிற இடத்துக்கு வந்தே கொடுக்கிறேன்னு தான் சொன்னார்! நான் தான் அவரோட இடத்த சொல்ல சொல்லி, இப்ப அவர் தங்கியிருக்கிற லாட்ஜுக்கு வந்திருக்கேன்!
மொத்தம் இருபத்து அஞ்சு ஆயிரம்! ஒரே நூறு ரூபா, இருபது பத்துமா மஞ்சப் பை நிறைய கொண்டு வந்து கொடுத்து இருக்கார்! எண்ணிட்டு இருக்கேன்!”
“க்ளையன்ட்டா, கேஷ் பேமென்டா? என்ன சொல்ற?
அப்படி ஒண்ணும் எனக்கு யாரும் தர வேண்டியது இல்லையே!
ஏய்.. ஜம்மி, நான் உன்னை என்ன சொன்னேன்? நீ என்ன செஞ்சுட்டு இருக்க?
உன்னை பிருந்தாவுக்கு காவலா இரு, நான் வர வரைக்கும் தானே சொல்லிட்டு வந்தேன்!
அவள அங்க தனியா விட்டுட்டு, நீ எதுக்கு வெளியே வந்த? காசு தர்றேன்னு சொன்னா, உடனே நாக்கைத் தொங்கப் போட்டுட்டு வந்திடுவியா?
அறிவில்ல உனக்கு! எனக்கு என்னமோ இது கவுதம் வேலையா இருக்கும்னு நினைக்கிறேன்! நீ முதல்ல அந்த கிளையன்ட் கிட்ட போனைக் கொடு”
“அவர் இல்ல இங்க! எனக்கு டீ வாங்கிட்டு வரேன் மேடம்னு சொல்லிட்டு வெளியே போயிருக்கார்!”
“அறிவு.. முதல்ல அங்க இருந்து கிளம்பு!” என்று கத்தினான் வைத்தி.
“அய்யோ” என்றபடி, அவ்வளவு அவசரத்திலும் அந்த மஞ்சப்பை பணத்தையும் எடுத்துக் கொண்டு வெளியேற கதவைத் திறந்தாள் ஜம்மி!
அது வெளிப்புறம் லாக் பண்ணியிருந்தது!
“சார். வெளியே லாக் பண்ணி இருக்காங்க!”
“சரியா போச்சு போ! நல்லா அவங்க வலையில சிக்கி இருக்க நீ!
என்னமோ பண்ணிக்கோ!
நீ பண்ணின தப்புக்கு நான் ஆள் இல்லை!
நான் இப்பவே பிருந்தா இருக்கும் இடத்துக்கு போகணும்! இன்னும் கொஞ்ச நேரத்தில் அங்க போலிஸ் வரப் போகுது!”
“சார்.. சார், என்னை இப்படியே விட்டுடாதீங்க சார். நான் உங்கள நம்பி தானே இவ்வளவும் செய்தேன்!” கெஞ்சினாள் ஜம்மி!
“அதுக்கு நான் என்ன பண்ண? இப்ப நான் உன்னை பார்க்க அங்க வந்தா, என் பிளான் சொதப்பிடும்! நீ எதாச்சும் பண்ணி தப்பிச்சுக்கோ!”
“சார். நான் என்ன பண்ண முடியும் இங்க? நீங்க தான் ஹெல்ப் பண்ணனும்!”
“என்னால ஒண்ணும் பண்ண முடியாது ஜம்மி!”
“சார். முடியாது முடியாதுன்னு சொல்லாதீங்க, இப்ப கூட உங்க போன் என்கிட்ட தான் இருக்கு! நான் அப்ரூவரா மாறிடுவேன் பார்த்துக்கங்க!” ஜம்மியும் மிரட்டினாள் வைத்தியை!
“அய்யோ!” தலையில் அடித்துக் கொண்டான் வைத்தி!
மண்டை மேல் இருக்கும் கொண்டையை மறந்துட்டமே! என் போனில் ஏகப்பட்டது இருக்கே! எனக்கு என்னோட போன் முக்கியம்!
அது தான் இப்போ ப்ரையாரிட்டி! பிருந்தா மேட்டரை சில மணி நேரம் தள்ளிப் போடலாம் என்று நினைத்துக் கொண்டு, ஜம்மி இருக்கும் லாட்ஜ் லோகேசன் கேட்டுக் கொண்டு அங்கே விரைந்தான் வைத்தி!
அந்த லாட்ஜ் ரிசப்சனில் சேர் போட்டு உட்கார்ந்து இருந்தான் கரீம்! உள்ளே சற்று மறைவாக ரிஷி! ஜம்மியும், வைத்தியும் கண்டு கொள்ளாமல் இருக்க!
அவர்கள் வைத்தி வருகைக்காக காத்திருந்தார்கள்!
அரைமணி நேரம் முன்பு, ஜம்மி ஆட்டோவில் இருந்து இறங்குவதைக் கண்டு விட்ட ரிஷி, கரீமுக்கு அவளை அடையாளம் காட்டினான்!
அவர்கள் வரும் வழியில் ரிஷியின் வீட்டு ஆயில் மில்லுக்கு போய் நூறு ரூபாய், இருபது ரூபாய் நோட்டுகளாக அங்கு பாங்கில் டெப்பாசிட் பண்ண வைத்திருந்த பணம் முப்பதாயிரத்தை ஒரு மஞ்சள் பையில் போட்டு வாங்கிக் கொண்டு வந்திருந்தனர்!
அதை எடுத்துக் கொண்டு ஒரு அறையின் கட்டிலில் ஒரு தலையணைக்கு அடியில் வைத்து விட்டு, ஜம்மி வருகைக்கு காத்திருந்தனர்!
ஜம்மி வந்தவுடன் கரீமுக்கு அழைப்பு விடுத்தாள்.
“மேடம். அதுக்குள்ள வந்துட்டீங்களா? நான் இங்க வெளியே நின்னு தம் அடிச்சுட்டு இருக்கேன்!
மன்னிச்சுக்கங்க! நீங்க வெளியே எங்கயும் நிக்காதீங்க! லேடிஸ் அப்படி நிக்க கூடாது!
நீங்க ரூம் நம்பர் பத்துக்கு போங்க. அங்க தலகாணிக்கு அடியில ஒரு மஞ்சப்பையில் முப்பதாயிரம் பணம் இருக்கும் எடுத்து எண்ணிட்டு இருங்க. நான் வந்துடறேன்!
வைத்தி சார் கிட்ட ஒரு அஞ்சாயிரம் குறைக்க சொல்லி கேட்டேன் மாட்டேன்னு சொல்லிட்டார்!” என்று அளந்து விட்டான்.
“சரிங்க நீங்க சீக்கிரம் வந்துடுங்க” என்று சொல்லி விட்டு அவன் சொன்ன அறைக்கு சென்று அந்த மஞ்சப்பையில் இருக்கும் பணத்தை எடுத்து எண்ண ஆரம்பித்தாள் ஜம்மி!
முதலில் ஒரு அஞ்சாயிரத்தை எண்ணி எடுத்தவள் அதை தனியே வைத்துக் கொண்டாள்!
வைத்தி சார் கேட்டா, அந்த கிராமத்தான் இருபத்து அஞ்சு ஆயிரம் தான் கொடுத்தான் என்று சொல்லி விடலாம் என்ற ப்ளான்!
எண்ணிக் கொண்டே வைத்திக்கு போன் பண்ணினாள்!
என்ன ஆச்சு இந்த வைத்தி சாருக்கு? ஆட்டோவில் வரும்போதே அவள் வைத்திக்கு இப்படி பணம் வாங்க வருவதை தெரியப்படுத்த போன் பண்ணிக் கொண்டே வந்தாள்!
ஆனால் வைத்தி அங்கு போலிஸ் ஸ்டேசனில் அவனுக்கு வேண்டிய போலிஸ் காரர்களிடம் பேசிக் கொண்டிருந்ததால் எடுக்கவில்லை!
பின் அவன் எடுத்த போது, விவரம் சொன்னாள்!
ஆனால் அவனோ கோபப்பட்டு கத்த ஆரம்பித்து விட்டதோடு, இதில் இருந்து அவளைக் காப்பாத்தவும் முடியாது என்றே சொல்லிவிடவும் ஜம்மிக்கும் கோபம் வந்தது!
அதனால் அவளும் அவனை மிரட்ட வேண்டியதாகி விட்டது!
எப்படியாவது சார் இங்க வரட்டும்! வந்து நல்லபடியா அழைச்சுட்டு போயிரட்டும்!
அப்புறம் அவர் கையில் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுக் கொள்ள வேண்டியது தான் என்று நினைத்துக் கொண்டு வைத்திக்காக அவளும் காத்திருந்தாள்!
போன் அடித்தது. வைத்தி தான்!
வந்து விட்டான்!
ரிசப்சனில் இருந்த கரீம் அலர்ட் ஆனான்.
அவன் சைகை காட்டியவுடன், போனில் ஜம்மியிடம் அவள் இருக்கும் அறை எண்ணைக் கேட்டுக் கொண்டு பேசியபடி, நடந்த வைத்தியின் மேல் ஒருவன் வந்து மோதி விட்டான்!
அவன் கரீம் ஏற்பாடு செய்த ஆள்!
அவன் கையில் கொதிக்க கொதிக்க டீ!
அது அப்படியே வைத்தியின் நெஞ்சுப் பகுதியில் கொட்டி விட்டது!
தீயாக எரிந்தது அவனுக்கு!
வலி பொறுக்க முடியாமல் வேகமாக சென்று வெளிப்புறமாக சும்மா தாழ்ப்பாள் போட்டு இருந்த ஜம்மி இருக்கும் அறைக்கதவை திறந்து கொண்டே உள்ளே போனான்!
இதே மற்ற சமயமாக இருந்திருந்திருந்தால், ஏன், இப்படி வெளியே பூட்டி சும்மா தாழ் போட்டு இருக்கிறார்கள் என்று யோசித்திருப்பான்!
ஆட்கள் யாராவது தன்னை சுற்றி நின்று கண்காணிக்கிறார்களா என்றும் பார்த்திருப்பான்!
ஆனால் இப்படி கொதிக்கும் டீ கொட்டியதால் உண்டான எரிச்சல் வேதனை அவனை அப்படியெல்லாம் சிந்திக்கவே விட வில்லை!
கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றவன், வேகமாக தன் சட்டையையும் பனியனையும் கழற்றி கட்டிலில் வீசி விட்டு பாத்ரூம் நோக்கி சென்று குளிர்ந்த நீரை எடுத்து மேலே தெளித்து தெளித்து எரிச்சலை அடக்க முயன்றான்!
ஓரளவு ஆசுவாசப்படுத்திக் கொண்டு வெளியே வந்தவனிடம்,
“என்னாச்சு சார்?’ என்றாள் ஜம்மி!
“ம்ம்.உன் தலை..” என்று கடுப்படித்தவன்,
“எவனோ ஒருத்தன் கொதிக்கிற டீயை கொண்டு வந்து என் மேலே ஊத்திட்டான்!” என்றான் கோபமாக!
“சரி,. நீ கிளம்பு,முதல்ல என்னோட போனைக் கொடு. இந்தா உன் போன்!” என்று அவளின் போனை தூக்கிப் போட்டான்!
ஜம்மி அய்யோ இது என்ன இப்படி கோப்படுறார்! ரொம்ப எரியுது போல! நாம இப்ப கொஞ்சம் அவருக்கு அனுசரணையா தான் பேசணும் என்று நினைத்துக் கொண்டு,
“சார்.. என்ன சார்..ரொம்ப எரியுதா?’ என்று கேட்டபடி, அவன் காயத்தை ஊதி குளிர்விக்க எண்ணி அவன் அருகில் குனிந்தாள்!
ரொம்ப சரியாக அப்போது பார்த்து போலிஸ் என்ட்ரி!
போலிஸ் ரெய்டு!
அதிர்ந்து போனார்கள் இருவரும்!
அந்த டீமில் இருந்தவர்களில் வைத்தி காசு வாங்கி கொண்ட அந்த எஸ் ஐ, பெண் பிசியும் அடக்கம்!
அவர்கள் நெற்றியில் விபூதி குங்குமம் வேறு!
ஏதோ கோவிலுக்கு போய் விட்டு வந்தவர்கள் போல!
“யோவ்.. என்னய்யா இது? காசையும் வாங்கிட்டு, இப்ப இங்க வந்து நிக்கிற? உன்னை நான் எங்க வர சொன்னேன்? நீ எங்க வந்திருக்க?” என்று அந்த எஸ்ஐ காதில் மெல்ல கோபத்தை அடக்கியபடி கேட்டான் வைத்தி!
“என்னை அங்க வர சொல்லிட்டு நீங்க ஏங்க இங்க வந்துருக்கீங்க! இது ஏசிபி ஆர்டர்! அவரோட பாட்ச் மேட் இன்னொரு ஏசிபி சொல்லி! நான் என்ன பண்றது?”
“என்னய்யா அங்க டிஸ்கசன்?” கூட வந்த அவன் மேலதிகாரி கேட்கவும், “ஒண்ணுமில்ல சார்! இவர் ஒரு லாயராம்! அத சொல்லிட்டு இருக்காரு!”
“யாரா இருந்தா என்ன? லாயர்ன்னா அப்போ அவருக்கே ரூல்ஸ் தெரியும்! வந்து கோர்ட்ல பேசிக்கட்டும்!” என்று சட்டையில்லாத வைத்தியையும் ஜம்மியையும் போலிஸ் வண்டியில் ஏற்றி சென்றார்கள்!
வைத்தி ஏற்பாடு செய்த போலிஸ் டீம் இங்கே எப்படி?
அப்போ, போலிஸ் டீம் பிருந்தா இருக்கும் லாட்ஜுக்கு செல்ல வில்லையா?
அதெல்லாம் சென்று விட்டு தான் இங்கு வந்திருக்கிறார்கள்!
வைத்தி ஜம்மியை சந்திக்க வந்திருந்த அதே நேரம், அவன் ஏற்பாடு செய்து இருந்த அந்த எஸ் ஐ, தன் டீமிடம்,
“வாங்க நாம முதல்ல அந்த கற்பக விநாயகா லாட்ஜுக்கு போவோம்!” என்றான்.
“சார். இன்னும் வைத்தி சார்கிட்ட இருந்து போன் வரலையே” என்ற பெண் பிசியிடம்,
“உனக்கு அந்த ஆளைப் பத்தி தெரியாது, நாம இப்படி காசு வாங்கிட்டு சொன்ன நேரத்துக்கு அங்க போகலன்னா, ஆடித் தீர்த்துடுவான்! வாங்க நாம் போகலாம்! அங்க போய் பேசிக்கலாம்” என்று கிளம்பி சென்றவன், அங்கு ப்ருந்தாவோடு கண்டது, கோமதியையும் சுப்பு ஆச்சியையும் கூடவே இருந்த மூதாட்டி சிவனடியார்களையும்!
“என்ன சார்.. வேணும்!” என்றார் கோமதி!
“கோமதி, நம்ம தில்லை ஆச்சி வடக்கே கைலாச யாத்திரை போய்ட்டு வந்திருக்காகன்னு கேள்வி பட்டு திருநாறு பூசிக்க வந்திருக்காக போலிஸ் காரவுக எல்லாம்!” என்றார் சுப்பு ஆச்சி நக்கலாக!
“வாங்க தம்பி. வந்து ஆச்சி கால்ல விழுந்து கும்புடுங்க! அவ்வளவு புண்ணியம்!” என்றார்கள் மற்ற ஆச்சிகளும்!
இதைக் கேட்ட அந்த எஸ் ஐ கூட வந்த ஒரு பெண் பிஸி டக்கென்று ஆச்சி காலில் விழுந்து வணங்கினார்!
“தீர்க்க சுமங்கலியா இரும்மா” என்று அந்த ஆச்சி ஆசிர்வதித்தார்!
உடனே தொப் தொப்பென்று அடுத்து ரெண்டு பிசிக்களும் ஆச்சி காலில் விழ, அப்புறம் அந்த எஸ் ஐயும் விழுந்து கும்பிட்டான்! கும்பிட்டு விட்டு பக்திப் பழமாக வெளியே வந்தவர்களை, குழப்பத்துடன் பார்த்தனர் வைத்தி ஏற்பாடு செய்திருந்த மீடியா ஆட்கள்!
வெளியே வந்த எஸ்ஐக்கு, அவன் மேலதிகாரிகளிடம் இருந்து அழைப்பு! அவர்கள் வர சொன்ன இடத்துக்கு விரைந்தனர் அந்த போலீசார்!
அவர்கள் சென்றவுடன் கோமதி மான்சிக்கு போன் செய்ய அவள் காரை எடுத்துக் கொண்டு வந்து விட்டாள்!
அனைவரையும் அழைத்துக் கொண்டு வீடு நோக்கி சென்றவளை தடுத்தார் பிருந்தா!
மவுனமாக அழுது கொண்டு வந்தவரை தன் தோளில் தாங்கிக் கொண்டிருந்த கோமதி, “மான்சிம்மா, அத்தை கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகணும்! நீ நம்ம வீட்டுக்கே வண்டியை விடு” என்று சொல்லி விட்டார்!
மெல்ல தலையைத் தூக்கி கோமதி முகத்தை நன்றியுடன் பார்த்தார் பிருந்தா!
பின்னே, அவருக்கு இப்போது கோமதியும் சுப்பு ஆச்சியும் தான் தெய்வமாக தெரிந்தார்கள்!
அதிலும் முதலில் சுப்பு ஆச்சியை மட்டும் கண்டவர்க்கு அவ்வளவு பெரிய நம்பிக்கை இல்லை!
ஆனால் ஒரு பெண் சிவனடியார் குழுவோடு, “பிருந்தா” என்று அழைத்தபடி உள்ளே வந்த கோமதியைக் காணவும், தன்னையறியாமல், “அண்ணீ..” என்று கதறிபடி அவரைக் கட்டிக் கொண்டார்!
அப்போது தோள் சாய்ந்தவர் இன்னும் நகரவே இல்லை!
மான்சியின் வீட்டை நோக்கி கார் சென்றது!
error: Content is protected !!