Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நீங்காத உறவே!...

நீங்காத உறவே!… அத்தியாயம் 4

நீங்காத உறவே!…

அத்தியாயம் 4

 திருநிறைச்செல்வியின் திருமணம் எந்த ஆடம்பரமும் இல்லாமல் மிக எளிமையாக கோவிலில் வைத்து முடித்துக் கொண்டார்கள். வீரணன் பிள்ளைகள் மூவருக்கும் முருகன் கோயில் தான் திருமணம் நடந்தது. ஆனால், என்ன மற்ற பிள்ளைகளுக்கு இருந்த ஆடம்பரமும் ஆர்ப்பாட்டமும் இல்லாமல் மிக எளிமையாக நடந்தது.

நிறை மிக அமைதியாக இருந்தாள். மனதில் பெரிய அழுத்தம் இருந்தாலும், வெளியில் எதையும் காட்டிக் கொள்ளவில்லை. அவளோடு துணைக்கு இருந்தது திவ்யா தான். மதியம் ஒரு மணிக்கே ஆட்கள் கிளம்ப, நிறை அருகில் வந்த அவளின் சித்தி,



Advertisement

“என்ன நிறை இது? உங்க அம்மா ஏன் தான் இப்படி பண்றாங்களோ?” என்றாள் கடுப்பாக,

 “என்ன சித்தி என்ன ஆச்சு?” என்றாள் நிறை.

“மறு வீட்டு விருந்த இன்னைக்கே முடிச்சு இருக்காங்களாம்”

Advertisement

“அப்படியா? ஏன்?”

Advertisement

“அது உங்க அம்மாவை தான் கேட்கணும்” என்று சொல்லும்போதே திலகா வந்துவிட்டார்.

“என்ன திலகா?” என்றார் கல்யாணி.

“மதினி இன்னைக்கே மறு வீடு, சீர் எல்லாம் முடிச்சுக்குவோம். அடுத்த பிள்ளைக்கும் கல்யாணம் வச்சிருக்கேன். அந்த கல்யாண வேலையும் பாக்கணும் தானே”

Advertisement

“என்ன திலகா இப்படி சொல்ற? ஒரு ரெண்டு நாளாவது பிள்ளைகளை உன் வீட்டில் வைத்து பார்க்க மாட்டியா? நிறைக்கும் பொறந்த வீட்டுல சீராட ஆசை இருக்காதா?” அவருக்கு ஒரு ரெண்டு நாளாவது தன் மகன் மாமியார் வீட்டில் சீராட வேண்டும் என்று எண்ணம்.

“ஆனா, என்ன மதினி பண்ண, பின்னாடியே சின்னவ கல்யாணம் இருக்கே. வெளி சம்மந்தம் நிறைய எதிர்பார்க்கிறாங்க. அவளுக்கு நல்லபடியா முடிக்கணும் தானே. நிறை எங்க போக போறா என் பொறந்த வீட்டுக்கு தானே” ஒரு அசால்ட் பதில் வந்தது.

அதன்பின் நிறை ஒரு வார்த்தை கூட பேசவில்லை. கோவிலில் இருந்தே அம்மா வீட்டுக்கு சென்று பால் பழம் உண்ட பின், அவர்கள் சீர் என்று கொடுத்தவற்றை வாங்கிக் கொண்டு மறுபேச்சு இல்லாமல் அன்று இரவே கணவன் வீடு திரும்பி விட்டாள்.

 பெரிதாக ஆடம்பரப் பொருட்களோ தற்போதைய நாகரீக பொருட்களோ இல்லை. மெதுவாக இருவர் புழங்கும் அளவுக்கு சில்வர் பாத்திரங்கள் மட்டும்தான். நிறை கொண்டு வந்த சீரில் யாருக்கும் திருப்தி இல்லை.

இப்போதெல்லாம் குறைந்த விலையில் வீட்டு உபயோக பொருட்கள் எல்லாம் கிடைக்க, அதுலையும் குறைவாக கொண்டு வந்தால்?… வீரணன் கூற்றை நிரூபிப்பது போல் இருந்தது திலகாவின் நடத்தை…

மகள் முகம் பார்த்த திலகா, “நிறை மனசுல எதுவும் வச்சுக்காத… அந்த வளர மட்டும் கல்யாணம் பண்ணி அனுப்பி வச்சிட்டேன், எனக்கு வேற எந்த கடமையும் இல்லை. அடுத்து எனக்கும், உங்க அப்பாவும் உன்னை பார்க்கிறது விட வேற எங்களுக்கு என்ன இருக்கு. நீ பெரிய பொண்ணு நம்ம குடும்ப நிலைமைக்கு தக்க சூழ்நிலையை சரிகட்டி போயிருவ… ஆனா, அவ அப்படி இல்லை. நம்மள விட பெரிய இடம், வெளி ஆட்கள், அதனாலதான் எல்லாம் பார்க்க வேண்டி இருக்கு. நீ எதையும் நினைச்சுக்காத” என்று மகளை சமாதானம் செய்து கணவனோடு வெளியேற,

நிறை முகத்தில் ஒரு சலனமும் இல்லை. அதுதான் பெற்றவளுக்கு ஒரு மாதிரி மனதை அழுத்தியது. என்னதான் சொந்த தாய்மாமன் வீடு என்றாலும் பெற்றவர்கள் கிளம்பும்பொழுது நிறை கண்ணிலிருந்து ஒரு சொட்டு கண்ணீர் கூட வரவில்லை. திலகா கூட லேசாக விசும்பினார். நிறை அழுத்தமாக நின்று கொண்டாள்.

அதற்கு அடுத்தும் அப்படித்தான்.. மிக மிக அமைதியாக இருந்து கொண்டாள். மற்றவர்கள் என்ன சொன்னார்களோ அதை செய்தாள். இரவு 11 மணிக்கு மேல் நல்ல நேரம் என்று நிறையை அறைக்கு அனுப்பி வைத்தார்கள். நிறை முன்பே முடிவு செய்திருந்தாள். பிரபாகரன் கையால் தாலி வாங்கிய பின், ஒரு மனைவியாக அவன் விருப்பத்திற்கு உடன்படுவது என்று… அதனால் மனதைத் திடப்படுத்திக் கொண்டு நிற்கும்போதே,

“நிறை, நீங்க தூங்குங்க. எனக்கு தூக்கம் வரல, நான் வெளியே இருக்கேன்” என்று பின்பக்க கதவை திறந்து கொண்டு வெளித் திண்ணையில் அமர்ந்து கொண்டான்.

கணவன் மனைவி இருவருக்குமே சூழ்நிலை புரிந்தது. பெரியவர்கள் பார்த்து திருமண பந்தத்திற்குள் நுழைத்து விட்டாலும், இந்த உறவை ஏற்றுக் கொண்டு வழி நடத்துவது அவ்வளவு எளிதல்ல என்று… பிரபாகரன் எட்டு மாதத்திற்கு இளையவன் என்பதையும் தாண்டி தன் அண்ணன் மனைவி என்று மனதில் நினைத்து வைத்திருந்தவள். திருமணத்திற்கு முன்பு வரை மதனி என்றுதான் அழைப்பான். விவரம் தெரிந்த போது இருந்தே தன் அண்ணனுக்கு மனைவியாக வரப்போகிறவள் என்று பார்த்ததால் அத்தை மகள் என்ற கேலி கிண்டல் எல்லாம் இருக்காது. ஒரு மரியாதை தன்மை தான் அவள் மேல் வரும். இப்பொழுது நிறை தன் மனைவி, தாம்பத்திய வாழ்க்கை, தங்களுக்கான குடும்ப அமைப்பு என்றெல்லாம் யோசிக்கும் பொழுது அவனுக்கு மிகுந்த பயமாக இருந்தது.

கண்மூடி படுத்திருந்த நிறைக்கும் மனதில் அவ்வளவு அழுத்தம்… பொதுவாக பிரபாகரன் மிக நல்ல மனிதன். அதைத் தாண்டி கணவன் என்ற வரையறைக்குள் அவன் எப்படி என்று கணிக்க முடியவில்லை. காதல் வசனம் பேசி காலத்திற்கும் நீதான் என்றவனே முதுகில் குத்தி போகும் பொழுது, பிரபாகரனோடு, தங்களுக்கான உறவை மேல் எடுத்துச் செல்ல தெரியவில்லை.

அவளின் வரி வடிவமான நிழலில் இருந்தே அழுகிறாள் என்று புரிந்தது பிரபாகரனுக்கு… நிச்சயம் பாவம் தான் திருநிறைச்செல்வி. காதல் என்ற உணர்வு இயல்பானது, பொதுவானது.. எல்லோருக்கும் நிறைவேறாதது. ஆனால் ஏதோ ஒரு பிடித்தம், எதார்த்தம் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டு போய் விடும். அதே சொந்தத்தில் காதல் என்பது நிறைய உறவுமுறை சிக்கலை கொண்டு வரும்.

அப்படித்தான் நிறை வாழ்க்கையும்.. அந்த அளவுக்கு புரிதல் பிரபாகரனுக்கு அவள் மேல் உண்டு. காதலித்த இருவர் பிரிந்து சென்றாலும், சொந்தமாக இருக்கையில் நிறைய சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். ஆனால், இது ஒரே வீட்டில் வெவ்வேறு துணையோடு இருக்கும் பொழுது நிறைய வலியை கொடுக்கும்.

பிரபாகரன் திரும்பி மனைவியை பார்த்தான். அழுது ஓய்ந்து லேசாக தூக்கத்திற்கு கண்களை மூடினாள். வீரராகவன், திருநிறைச்செல்வியை நிராகரித்தவன். நம்பிக்கை கொடுத்து ஏமாற்றியவன். அப்படி இருக்க இயல்பாக மனித மனப்பான்மை என்னவாக இருக்கும்.

நீ என்னை நிராகரித்தால் நான் ஒன்றும் தோற்று போய் விட வில்லை. என் வாழ்க்கை நன்றாக தான் இருக்கிறது என்று தூக்கி காட்ட நினைப்பார்கள்.

அப்படி ஒரு பெருமை தன்னால் நிறைக்கு இல்லையோ!… தான் ஒன்றும் அவ்வளவு சிறந்தவன் இல்லையே… கடவுள் அந்த பெண்ணை கொஞ்சம் அசிர்வதித்திருக்கலாம் என்று வருந்தினான்.

நிறையும் அதை தான் நினைத்தாள். என்ன ஒன்று பிரபாகரனை கொண்டு அல்ல, தன் பெற்றோர்களை கொண்டு… ஏதோ தன் கடமையை முடித்தால் போதும் என்று தள்ளி விட்டது போல் உணர்ந்தாள். வீட்டின் மூத்த மகளாக கஷ்டத்தை உணர்ந்து பெற்றவர்களை தாங்கியதுதான் தவறோ!… அதனால் தான், தன்னைக் குறித்து பெரிதாக அவர்கள் கவலைப்படவில்லை.

திருநிறை செல்வி நன்றாக உறங்கிய பின் அறைக்கு வந்தவன், இருவர் வாசமும் இருவரும் உணராத வண்ணம் தள்ளி படுத்துக்கொண்டான்.

காலையில் எப்பவும் போல விழித்துக் கொண்ட நிறை, புதுமணப்பெண் போல் தள்ளி நிற்காமல் தன் அத்தையோடு சேர்ந்து வீட்டு வேலைகளை பார்க்க ஆரம்பித்தாள். வீட்டு ஆண் மக்கள் ஒவ்வொருவராக வெளியே வர, நிறை அடுப்படியிலே நின்று கொண்டாள்.

மூத்த மருமகள் ரோகினி மட்டும் நிறையை குறுகுறுவென பார்க்க, அவள் கண்டு கொள்ள வில்லை. ரோகினி சினேகா இருவரும் பெரிதாக நிறையிடம் நெருக்கம் காட்டவில்லை.

ரோகினியின் பார்வையெல்லாம் நிறை, ராகவன் மேல் தான் இருந்தது. முன்னாள் காதலர்கள் எப்படி எதிர் கொள்கிறார்கள் என்பதை சுவாரசியமாக பார்த்துக் கொண்டிருந்தாள். ராகவனும் நிறை பக்கம் திரும்பவில்லை. நிறை அப்படி ஒருவன் இருந்தது போல கூட காட்டிக் கொள்ளவில்லை.

திருநிறைச்செல்வி பார்ப்பதற்கு சாதாரண அப்பாவி பெண்ணாக இருந்தாலும் நிறைய மன தைரியம் கொண்டவள். இதுதான் வாழ்க்கை என்று தெரிந்துதான் உள்நுழைந்தது, அதனால் மனதில் எவ்வளவு அழுத்தம் இருந்தாலும் வெளியில் என்னை எதுவும் பாதிக்கவில்லை என்று திடமாக நின்றாள். என் கணவனின் அண்ணன் என்ற வரையறையை மட்டுமே முன்னெடுத்தினாள்… தாய் மாமன் மகன் என்று உரிமையைக் கூட துறந்து விட்டாள்.

மூன்று மகன்கள் மூன்று மருமகள் கொண்ட பெரிய வீட்டின் வரவு செலவு என்னவென்று நிறைக்கு தெரியவில்லை. எப்படியும் சொல்வார்கள், அப்போது பார்த்துக்கொள்ளலாம்.

பிரபாகரன் உணவு உண்ண வர, நிறை தான் தோசை வார்த்துக் கொண்டிருந்தாள். கல்யாணி தான் முதல் இரண்டு தோசைகளை கொண்டு போய் மகனுக்கு வைத்தது. அடுத்த ரெண்டு தோசைகளை அவசரமாக ஊற்றி வைத்தாள் நிறை. ஆனால், அவள் கணவனோ ஒன்றை தோசையிலேயே எழுந்து கொண்டான்.

“என்ன அவ்வளவு தான இவன் பசி?” என்று திகைத்து போய் நிறை பார்க்க,

“கோழி கொத்துற மாதிரி தான் கொத்துவான் சின்னவன்” என்றார் கல்யாணி.

 அடுத்தடுத்து உணவு வேளைகளிலும் பிரபாகரன் அவ்வாறே உண்டான். நிறை தன் கணவனை லேசாக கவனித்தாள். அடுத்த இரண்டு நாட்களும் சொந்தங்களின் வருகை என்று ஓடிப்போனது. அடுத்த நாளிலிருந்து கல்யாண வீடு இயல்பு நிலைக்குத் திரும்பியது. கல்யாணியே மூவருக்கும் வேலைகளைப் பிரித்துக் கொடுத்தார்.

புகுந்த வீட்டுக்கு வந்த மூன்று நாட்களும் உறவுகளோடு சேர்ந்து இருந்ததால் துணி ஏதும் துவைக்காமல் அப்படியே இருந்தது. தன் துணிகளை ஊற வைக்கும் போது பிரபாகரன் துணிகளையும் சேர்த்து ஊற வைத்து விட்டாள். கணவன் என்ற பின் இது மனைவிகளின் கடமைகளில் ஒன்றாகிவிட்டது.

தங்கள் அறைக்கு பின் வாசலில் இருக்கும் பாத்ரூம் இவர்களுடையது… முற்றம் கொள்ளைப்புரம் வைத்து அந்தக் காலத்து நிலையிலும், உள் நுழைந்த பின் கூடம் மேலே இருந்த இரு அறைகளும் நவீன வசதியோடு இருக்கும். அது பிரபாகரன் அண்ணனோடது… அவர்கள் வசதிக்கு தக்க மேல எடுத்துக் கொண்டார்கள்.

அதனால் கீழ் இருக்கும் அறையும், பின்புறத்தையும் நிறை பயன்படுத்தி கொண்டாள். இன்று முதல் பிரபாகரன் வேலைக்கு செல்கிறான். குளிப்பதற்காக பாத்ரூம் சென்றவன் அங்கிருந்த வாசலில் நிறை  துணிகளோடு, தன் உடைகள் இருப்பதை பார்த்தவன், தன் உடைகளை மட்டும் தனியே எடுத்து துவைத்து காய போட்டான்.

இதெல்லாம் மனைவியின் கடமை தானே என்று தள்ள தெரியவில்லை. என்றோ ஒரு நாள் இருவரும் தங்கள் வாழ்க்கையை தொடங்கத்தான் போகிறார்கள். அதில் மாற்றுக் கருத்து இல்லை. திருநிறைச்செல்வி தன் மனைவி என்பதும் அவன் மனதில் நிற்கிறது. ஆனால் தற்போதைய தங்களது உறவுமுறை கொஞ்சம் விசித்திரமானது. ஒரு ஆணின் போட்டு கழட்டி போட்ட உடைகளையும், உள்ளாடைகளையும் விகல்பம் பார்க்காமல் ஒரு பெண் துவைப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. என் புருஷனின் உடை என்ற ஆசையும், விருப்பமும் இருக்கணும்… அப்படி இல்லாத பட்சத்தில் நிறை அவனுக்கு செய்வது உதவி. அந்த உதவி தற்போது அவனுக்கு தேவையில்லை.

நிறை கவனித்தாலும் ஏன் என்று கேட்கவில்லை. உரிமையோடு கேட்டு தற்போது உறவை ஏற்படுத்திக் கொள்ள அவள் மனம் ஒப்பவில்லை. இன்றைய காலை உணவு இட்லி, எல்லாவற்றையும் நிறை எடுத்து வைக்க.. பிரபாகரன் இரண்டு இட்லிகளை மட்டுமே தன் தட்டில் எடுத்துக் கொண்டான். மற்ற ஆண்களும் கூடத்தில் அமர்ந்து தான் உண்டு கொண்டிருந்தார்கள். எல்லோரும் அவரவர் வேலையை பார்க்க செல்ல வேண்டுமே…

காரச் சட்னியை தாளித்து எடுத்து வந்த நிறை, ரெண்டு இட்லியை திருப்திகரமாக உண்டு எழுந்து கொள்ளப் போனவனை பார்த்தவள். மேலும், ரெண்டு இட்லியை அவன் தட்டில் வைத்தவள், சாம்பார் சட்னியை ஊற்றினாள். என்னடா இது என்று திகைத்து போய் பிரபாகரன் மனைவியை பார்க்க, அவள் கண்டுகொள்ளாமல் உள்ளே சென்று விட்டாள்.

சாதாரணமாகவே அவன் உணவு அவ்வளவுதான். வீரணன், கல்யாணியை பார்த்தார். பிரபாகரன் நிமிர்ந்து மனைவியை தேட அவள் அங்கில்லை. புது கல்யாணமான தம்பதிகள், எல்லோரும் அங்கு இருக்க, அவள் வைத்த உணவை நிராகரிப்பது சரி இல்லை. அது தன் மனைவியை அவமதிப்பது போல் அல்லவா இருக்கும் அதுவும் தன் குடும்பத்தார் மத்தியில், சரி கட்டி ரெண்டு இட்லியை உள்ளே இறக்கினான் பிரபாகரன்.

ராகவன் தன் அண்ணனுக்கு கண்ணை காட்டினான். ஒருவழியாக உணவை உள்ளே தள்ளி நிமிரும் பொழுது சூடான சீரகத் தண்ணீர் கொண்டு வந்து வைத்தாள் நிறை. அவளுக்கு தெரியும் அவனுக்கு கொஞ்சம் ஜீரணக் கோளாறு உண்டு என்று… அதை சரி செய்யாமல் உணவை குறைத்து என்ன பயன். சூடான நீரை மெது மெதுவாக அருந்த, சாப்பிட்ட வயிறு லேசானது.

நிறை, அடுப்படியில் பொருட்களை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தாள். தன் வேலைக்கு கிளம்பி வெளியே வந்தவன், மனைவி அங்கில்லை என்று கண்டதும், கிட்சன் வந்து,

“நிறை நான் வேலைக்கு கிளம்புறேன்” என்று தேடி வந்து சொல்ல, கிச்சன் விட்டு வெளியே வந்து, “போயிட்டு வாங்க” என்று அனுப்பி வைத்தாள்.

 சினேகா தன் கொழுந்தனை ஆச்சரியமாக பார்த்தாள். ராகவனுக்கெல்லாம் அவன் வேலைக்கு கிளம்பும் வரை அவன் பின்னாடி சுற்றிக் கொண்டிருக்க வேண்டும். ஏதேனும் அவசர வேலை என்று நகர்ந்தால் கூட, “ நீ வீட்ல தான் இருக்க, நான் வேலைக்கு போற வரைக்கும் என்னைய கவனிச்சு அனுப்ப கூடாதா” என்ற பேச்சு வரும். ஒருநாளும் மனைவி இருக்கும் இடம் தேடி வந்த சொல்லிச் செல்ல மாட்டான்.

அடுத்து இரண்டு நாளில் நிறையும் வேலைக்கு கிளம்பி விட்டாள். வேலைக்கு கிளம்பும் அன்றைய நாள் மட்டும் லேசான அழுகை இருந்தது நிறைக்கு… இனி வயிற்றுக்கும் பத்தாமல், கைகளிலும் மிச்சம் இல்லாமல் போராட்டமான வாழ்க்கை. கல்யாணத்திற்கு பின் ஒரு நல் வாழ்க்கையை எதிர்பார்த்து காத்து இருந்தவளுக்கு, கழுத்தில் கிடக்கும் தாலியைத் தவிர பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. அம்மா வீட்டில் இருந்து வேலை செய்யும் கடை மிக பக்கம், இங்கு என்றால் ஒரு பஸ் பிடித்து செல்ல வேண்டும். அதனால் வீட்டு வேலையும், அலைச்சலும் மிகுந்திருந்தது. வீட்டில் வேலைக்கு செல்லாதே என்று யாரும் சொல்லவில்லை. அவளுக்கே தெரியும் பிரபாகரன் வருமானம் அப்படி ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை.

வீர பிரபாகரன், திருநிறைச்செல்வி வாழ்க்கை மூடு மந்திரமாகவே இருந்தது. ரொம்ப அன்னோனிய தம்பதிகள் என்றும் சொல்ல முடியாது, அவர்களுக்குள் தள்ளி நிக்கிறார்கள் என்று கணிக்கவும் முடியாது. பிரிந்தும் நின்றார்கள், சேர்ந்தே இருந்தார்கள்.

நிறை, அவள் அம்மா வீடு இருக்கும் இடத்தில் இறங்கித்தான் மறுபுறம் நடந்து செல்ல வேண்டும். வேலைக்கு செல்ல ஆரம்பித்தாலும் தாய்வீடு செல்ல மனம் வரவில்லை. எங்களுக்கு கல்யாண வேலை இருக்கு நீ உன் வீட்டில் இருந்துகொள் என்றவர்களை தேடி செல்ல மனமில்லை.

 தங்கையின் திருமணத்திற்கும் தன் கணவன் வீட்டு ஆட்களோடு சேர்ந்து தான் சென்றாள்.

“எப்படி இருக்க நிறை?” என்றார் தாய்.

“நல்லா இருக்கேம்மா”

“உன் தங்கச்சி கல்யாணம் நிறை. ரெண்டு நாளைக்கு முன்னாடி வர வேணாமா? வீட்டில் எவ்வளவு வேலை, எல்லாத்தையும் நானே பாக்குற மாதிரி இருக்கு.. அவளுக்கு அக்கா நீ, உன் சொந்த தங்கச்சி மேல உனக்கு என்ன?” என்று கேட்க.

எந்த பதிலும் சொல்லாமல் தன் மாமியார் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள். தாயாவது சில வார்த்தைகள் கேட்டார். தந்தை அவளை கண்டு கொண்ட மாதிரி கூட தெரியவில்லை. அவருக்கு ஊரில் பெருமை பேசும் அளவுக்கு ஒரு மாப்பிள்ளை. அதுவே, போதுமானதாக இருந்தது. மாப்பிள்ளை வீட்டாரை சுற்றியே ஓடிக்கொண்டிருந்தார்.

தங்கையும் அக்காவை பெரிதாக கண்டு கொண்டது போல் தெரியவில்லை. பார்த்ததும் சிரித்தாள், நலம் விசாரித்தால் அவ்வளவுதான். ஆனால், அவ்வளவுதானா திருநிறை செல்வி. எனக்கு காலேஜ் பீஸ் கட்டணும், என் பிரண்ட்ஸ்க்கு பர்த்டே பார்ட்டி, தீபாவளிக்கு இரண்டு டிரஸ் வேணும் இப்படி எல்லாவற்றுக்கும் அக்காவை துணை பிடிக்கும் தங்கையை காணோம்.

திருமணம் முடிந்ததும் தன் வீட்டவர்களோடு கிளம்ப ஆரம்பித்த நிறையை, “நிறை நீ வீட்ல இரு. இனி மறு வீடு, விருந்துன்னு நிறைய வேலை இருக்கும். நான் ஒரு ஆளா ஓட முடியாது. நீ கூட இருந்தா நல்லா இருக்கும்” என்றதும்,

“இல்லம்மா எனக்கு வேலை இருக்கு. அவங்களும் வேலைக்கு போகணும்” என்றவளை,

“என்னடி, உன் சொந்த தங்கச்சி கல்யாணம்” என்று ஆரம்பித்தவரை தடுத்த அவள் சித்தி,

“திலகா, நம்ம நிறையும் புது பொண்ணுதான். அவளுக்கும் கல்யாணம் ஆகி இருவது நாள் தான் ஆகுது. புரியாம என்னத்தவாவது பேசாத” என்று கடிந்து கொள்ள,

“அது எங்க அண்ணன் வீடு தானே. பிரபா என் சொந்த அண்ணன் மகன் தான” என்று மேலும் சொல்ல,

“இன்னும் உன் மூத்த மகளையும் மருமகனையும் விருந்துக்கு நீ கூப்பிடல. உன் ரெண்டாவது மருமகனுக்கு விருந்து வைக்க அவ வந்து வேலை செய்யணுமா? நல்லா இருக்குற பிள்ளைக்கு நீயே சூது சொல்லிக் கொடுப்ப” என்றதும் வாய் மூடி கொண்டார்.

 கல்யாண மண்டபத்தில் இருந்து வீட்டுக்கு வந்தவள், மறுவீடு, சீருக்கு தங்கையின் கணவன் வீட்டுக்கு வந்து விட்டாள். தாய்வீடு சென்று அங்கு வரவில்லை. நேராகவே தங்கை வீட்டுக்கு வந்து விட்டாள்.

அங்கு வந்ததும் அவளுக்கு பெரிய அதிர்ச்சியும், ஆச்சரியமும் காத்திருந்தது. எதுவும் குறை இல்லை என்ற அளவுக்கு சீரை அள்ளி நிறைத்து இருந்தார்கள் திலகா தம்பதிகள். யாரும் குறை சொல்லாத அளவுக்கு அவ்வளவு நிறைவாக செய்திருந்தார்கள்.
நிறைக்கு அதிர்ச்சி குறைந்து ஏக்கமும், பொறாமையும் வந்தது. ரோகினி, சினேகாவுக்கு கூட நிறையை பார்க்கும்போது பாவமாக இருந்தது. நம்மிடம் எதுவும் இல்லை இருப்பதை இருவரும் சமமாக பகிர்ந்து கொள்ளுங்கள் என்றால் சரிதான். ஆனால், மூத்தவள் நீ, இளையவளுக்கு விட்டுக் கொடுத்துப் போ என்பது எந்த வகையில் சரியாகும்.
எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தவள் மனதில் வேறொரு விஷயம் பட்டென்று தோன்றியது. தான் திருமணம் செய்து வந்தே இருவது நாட்களுக்கு மேல் தான் ஆகிறது. அப்போதே அவர்கள் வீட்டு வரவு செலவு அவள் கையில்தான். இவ்வளவு சீர் செய்யும் அளவுக்கு பணம் எல்லாம் அவர்களிடம் கிடையாது. அப்புறம் எப்படி?…
தங்கையைப் போல தன் தேவை நிறைவேறினால் சரிதான் என்று கண்டுகொள்ளாமல் இருக்க முடியவில்லை. ஐயோ! எங்கு சென்று கடன் வாங்கினார்களோ!.. ஒரு சாதாரண கடையை வைத்துக்கொண்டு இவ்வளவு கடன் எப்படி சமாளிப்பார்கள்.
“அம்மா”
“என்ன நிறை?” என்றார் சந்தோஷமாக,
“இவ்வளவு சீர் செஞ்சீங்களே அதுக்கு ஏது பணம்?” நேராக விஷயத்திற்கு வந்தாள்.
“நிறை” என்று சங்கடமாக பார்த்தவர், “உங்க அப்பா தான் கவர்ன்மென்ட் மாப்பிள்ளை. நகை கம்மியா போட்டாலும் செய்ற சீர் ஊர்மெச்ச செய்யணும்னு சொல்லி அவங்களுக்கு தெரிஞ்சவங்க கிட்ட கடன் வாங்கி வந்தார்”
 தாயை அழுத்தமாக பார்த்தவள் வேறு எதுவும் பேசவில்லை. இதுவரை இது அவள் குடும்பம். பொறுப்பு அவள் கையில் இருந்தது. இப்போது அவர்கள் சுயமாக நிற்கும் பொழுது நாம் தள்ளி நின்று கொள்வதுதான் நல்லது.
“என்ன நிறை எதுவும் சொல்ல மாட்ற?”
“நான் சொல்றதுக்கு என்னம்மா இருக்கு.. உங்க மகள் கல்யாணம் நீங்க செலவு செய்றீங்க, கடன் வாங்கி கூட நல்லதா செய்றீங். நாளைக்கு நீங்க தான் கடன் அடைக்கவும் போறீங்க, முடிவு உங்க கையில.. நான் சொல்றதுக்கு என்ன இருக்கு” என்று ஒதுங்கி கொண்டாள்.
 “நிறை” என்று திலகா திகைத்துப் போய் பார்க்க,
இதை நான் என் தலையில் போட்டுக் கொள்ள மாட்டேன் என்று ஒதுங்கிக் கொண்டாள் திருநிறை செல்வி.
பின்ன அவ்வளவு கோபம் தாய் மீது நிறைக்கு… தந்தைக்கு என்று தான் பொறுப்பு இருந்தது. அவர் ஒரு பந்தா பேர்வழி. கவர்மெண்ட் மாப்பிள்ளை என்றதும் பணத்தை அள்ளி தெளிக்கிறார். ஆனால், நமக்கு தெரியுமே நம் குடும்ப நிலைமை இவர்கள் இஷ்டத்துக்கு கடன் வாங்கி வைத்து, தன்னை கை காட்டினால் தன்னால் முடியுமா?
 சற்று தள்ளி வந்து நிற்க, தந்தை சத்தம் கேட்டது.
“பிரபா இங்க வா நீ, கீழ இறக்கி வச்ச அந்த பீரோவையும் கட்டிலும் மேல தூக்கி கொண்டு போய் மாப்பிள்ளை ரூம்ல வை…” என்று தன் கணவனுக்கு வேலையேவி கொண்டிருக்கும் தந்தையை பார்த்ததும் முகம் மாறிப்போனது.
யார் வீட்டுக்கு வந்து யார் வேலை செய்வது? மற்ற இருவரும் நாங்கள் பெரிய ஆபிஸர்ஸ் என்று மரியாதையாக அமர்ந்திருக்க, வேலையாள் போல தன் கணவனை ஏவும் தந்தையை பார்த்து அவ்வளவு கோபம் வந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!