Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

பூத்தூவுதே வானம்!

பூத்தூவுதே வானம் – 03

மூக்கில் பெரிய வட்ட வடிவ ரீடிங் கிளாஸ்சும், கையில் மருத்துவ ஆராய்ச்சிகள் சம்பந்தப்பட்ட தடித்த ஒரு புத்தகமுமாக சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தான், வாசுதேவ பிரதாப்.

ஏதேனும் தலை போகிற அவசரமாக இருந்தால் மாத்திரம் தன்னைத் தொடர்பு கொண்டு அழைக்குமாறு ஹாஸ்பிடலில் கூறிவிட்டு இன்று வீட்டோடு இருந்து கொண்டவனுக்கு மனதில் பெரும் புயல் அடித்துக் கொண்டிருந்தது.

என்றும் ஆழ்ந்து வியக்கும் ஆய்வுகளில் கூட இன்று மனம் லயிக்கவில்லை.



Advertisement

அவ்வப்போது இப்படித்தான்! காரணம் எப்படியும் அவனது சித்துக் குட்டியாகத் தான் இருப்பாள்.

விழிப்பு தட்டியதில் இருந்தே இன்று அவளின் நினைவு! கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு முன்பு வரை காலை நேர அலாரம் அவளாகத் தான் இருந்தாள். டாடி, டாடி என மழலையில் கூவிக் கூவியே அவனின் தூக்கத்தைத் திருடிக் கொள்வாள்.

“சித்து..” என அவன் பாவமாக அதட்டினால் அழகாக பற்களைக் காட்டி சிரிக்கும் அந்தச் சிரிப்பு இன்னும் மறையாமல் கண்ணுக்குள்ளே இருப்பதாய் தோன்றியது, வாசுதேவனுக்கு.

Advertisement

மற்றவர்கள் எப்படியோ, சித்து டாடிஸ் பிரின்ஸஸ் தான். எதை செய்தாலும் அவளுக்கு தந்தை வேண்டும். எதற்குமே தந்தை!

Advertisement

“நானும் தானே இவளை விடிஞ்சு அந்தி படற வரைக்கும் பாத்துக்கறேன், கொஞ்சமாவது என்னைத் தேடறாளா பாரு!” என ரித்திகா கூட பெரிதாக சலித்துக் கொள்வதுண்டு.

அப்போது, மன வளர்ச்சிக் குறைபாடு இருந்தாலும் எந்த ஒன்றுக்கும் தன்னைத் தேடும் அவளின் அன்பில் மெய் சிலிர்த்துப் போய் வீல் ஷேரில் அமர்ந்திருப்பவளை அள்ளி அணைத்து முத்தமிடுவான் வாசுதேவன்.

மனவளர்ச்சிக் குறைபாடா? ஆமாம், அதாவது டோவ்ன் சிண்ட்ரம்!

Advertisement

மனதில் மட்டுமன்றி உடலிலும் ஊனம். பார்த்த கணத்திலே புரிந்து கொள்ள முடியுமான தோற்றம். மற்ற குழந்தைகளை விட உள்வாங்கும் திறன் குறைவாக இருந்தாலும் எதையும் அறிந்து கொள்ளும் ஆவலும், ஆசையும் அவளிடம் நிறையவே இருந்தது.

அதைப் புரிந்து கொண்டு அவளுக்கென ஆஸ்தான வழிகாட்டிகளைக் கூட தனிப்பட்ட முறையில் நியமித்து வைத்திருந்தான் வாசு. நினைக்கும் போதே ஆழ்ந்த வேதனைப் பெருமூச்சொன்று வெளிப்பட்டது அவனிடமிருந்து.

புத்தகத்தை மூடி வைத்து விட்டு இருக்கையில் கண் மூடி சாய்ந்தான்.

அவளிருந்த போது தனிமை, அமைதி என்ற வார்த்தைக்கான அர்த்தங்கள் கூட மறந்து போயிருந்தனவே!

ஆனால் இப்போது அப்படியா.. வெறுமையும், தனிமையும் அவனுக்குச் சொந்தமாகி – காலப் போக்கில் நிரந்தமாகியும் அல்லவா போயிருக்கிறது?

வாழவே பிடித்தமில்லை. நினைக்கத் தகாத ஏதேதோ யோசனைகள் தலையைக் கிறுகிறுக்க வைத்தன.

ஆழிப் பேரலையாக அவை அவனை தனக்குள் மொத்தமாகச் சுருட்டிக் கொள்ள முயன்ற நேரம் பார்த்து தெய்வாதீனமாக அறைக் கதவு தட்டப்பட்டது.

அந்த தட்டுதலில் இருந்த வேகம், இது முதலாவது முறை அல்ல என்பதை உறுதிப் படுத்துவதாக இருந்ததில் தலையை இருபுறமாக ஆட்டி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு மெல்ல எழுந்தான்.

கதவருகே சுந்தரம் நின்றிருந்தான்.

“என்ன சுந்தரம்?” – அலட்டிக் கொள்ளாத சாதாரண குரலில், சோம்பல் முறித்தபடி வினவினான்.

“தூங்கிட்டு இருந்திங்களா டாக்டர்? சாரி, நான் தான் எழுப்பி விட்டுட்டேன் போல. அது வந்து.. யாரோ ஒரு பொண்ணு உங்களைத் தேடி வந்திருக்காங்க..”

அவனது மன்னிப்பு இறைஞ்சுதலை சிறு மறுப்பான தலை அசைப்பின் மூலம் இலகுவாகக் கடந்தபடி, “என்னைத் தேடி வந்திருக்காங்களா?” என்றான்.

“ஆமாங்க டாக்டர், நீங்க தான் வர சொல்லி இருந்திங்களாம்னு சொன்னாங்க..”

நானா.. இல்லையே என மறுப்பதற்கு வாய் திறந்தவன், அரைமணி நேரத்துக்கு முன்பு ஹாஸ்பிடல் ரிசெப்ஷன் பெண் அழைப்பு விடுத்துக் கூறிய தகவல் மூளையில் உரைத்ததும் நிதானித்தான்.

உடனே, “ஆங், நான்தான். மறந்துட்டேன் சுந்தரம், அவங்களை வெயிட் பண்ண சொல்லுங்க! வந்திடறேன்..” என்றவன் முகத்தைக் கழுவிக் கொண்டு கூடத்துக்கு விரைந்தான்.

பழங்கால அமைப்பில் கட்டப்பட்டிருந்த வீடு என்றபடியால் கூடத்துக்கும் – அவனது அறைக்கும் இடையே மிகப் பெரிய இடைவெளி இருந்தது. கூட்டுக் குடும்பமொன்று வசிக்கும் அளவுக்கான வீடு! எப்படியும் விஷாலமான நாலைந்து அறைகளாவது இருக்கும்.

ஆங்காங்கு தூசு படிந்து கிடக்காமல் சுத்தம் செய்வதற்கு வாரம் இருமுறை வேலையாட்களை வர வைப்பான். சுந்தரம் வீட்டுக் காவல், அந்த இந்த எடுபிடி வேலைகள், எப்போதாவது சமையல் என அங்கேயே தான் சுற்றிக் கொண்டிருப்பான். நல்ல நம்பிக்கையான ஆள்! வெளியே வந்த வாசுதேவனைக் கண்டதும் ஓடி வந்து அருகே நின்று கொண்டான்.

“அந்த பொண்ணு..”

“தோட்டம் பக்கம் நின்னுட்டு இருக்குது, இதோ கூப்பிடறேன் டாக்டர்..” என்றவன் சிட்டென நகர, சோபாவில் கால் நீட்டி சொகுசாக அமர்ந்து கொண்டவன் லேசர் விழிகளால் நாலாபுறத்தையும் ஆராய்ந்தான்.

அருவறுத்து ஒதுங்கும் அளவுக்கு அசுத்தம் இல்லை என்றாலும் ஆங்காங்கு தூசு துணிக்கைகள் படிந்திருந்ததில், அவன் முகத்தில் சிறு அதிருப்தி!

எவ்வளவு தான் கூலி கொடுத்து வேலையை செய்வித்தாலும் மேற்கண்காணிப்பு சரியாக நடக்காது விட்டால் இப்படிதானோ என்று கூடத் தோன்றிற்று!

அதற்குள், “கார்டன்லாம் ஏன் இப்படி எம்ட்டியா இருக்கு. இடமிருக்கு, வசதி இருக்குனா அழகா மரஞ்செடி கொடியெல்லாம் நடலாமே! உடம்புக்கும் நல்லது, மனசுக்கும் நல்லது..” எனக் கூறியபடி உள்ளே வந்தாள் அவள்.

சுந்தரம் சிரிக்க,

“பரவால்லயே! அதுக்குள்ள சுத்தி பார்த்துட்டிங்க போலருக்கு..” என வாசுதேவன் குரல் தூக்கி மெச்ச என.. வந்தவள் அதிர்ந்து – திடீரென கால் தடுக்கித் தடுமாறி நின்றாள்.

“உட்காருங்க..” – இன்னதெனப் புரியாத முறுவலுடன் சோபாவைக் கை காட்டினான், வாசுதேவன்.

“வ்.. வணக்கம் டாக்டர்!” என விழித்தபடி அமர்ந்தவளுக்கு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ளவே ஒருசில நிமிடங்கள் தேவைப்பட்டன. முதல் சந்திப்பிலே இப்படி அதிகப்பிரசங்கித் தனமாக நடந்து கொள்ள வேண்டுமா என சுயத்தை வைது கொண்டாள்.

வாசுதேவன் அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

வட்ட முகம், சமாளிப்பாகச் சிரிக்கும் போது குவிந்து சிவந்த கன்னக் கதுப்புகள், மை தீட்டிய நயனங்கள், செதுக்கியது போன்றான கூர்நாசி.. பார்க்க அழகாகத் தான் இருந்தாள்.

இவை எல்லாவற்றையும் தூக்கி சாப்பிடுவது போல் இதழுக்கு சற்றுக் கீழே வைக்கப்பட்டிருந்த சிறு செயற்கை மச்சம் வேறு கவர்ச்சிகரமாக இருந்தது.

ஐந்தரை அடி உயரத்தில், டாப் ஜீன்ஸ் அணிந்து கூந்தலை பின்னி முடிச்சிட்டு வந்திருந்தாள். ஆரம்பத்திலேயே, எதையும் துணிந்து வெளிப்படையாக பேசும் ரகம் என வாசுவுக்குப் புரிந்தது.

குறை சொல்வதற்கு இல்லை, ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட ஆளுமை உண்டு! வெளிப்படையாகத் துணிந்து பேசுவது என்பதே ஒரு தனிப்பண்பு தானே.. அது எல்லோராலும் முடிந்த காரியமும் அல்லவே!

மெல்ல நிமிர்ந்து, சோபாவில் சற்று வசதியாக அமர்ந்து கொண்டவன், “ஸோ.. சொல்லுங்க மிஸ்..” என ரப்பர் நாடாவாக இழுக்க,

“சாருலதா!” என்றாள், முறுவலித்த முகபாவனையுடன்.

வாசுதேவன் தலை அசைத்தான்.

“டாக்டர், நான் உங்க கிட்ட ரொம்ப முக்கியமா கொஞ்சம் பேசணும்..” என அவள் ஆரம்பிக்க,

“கொஞ்சம் தானா?” என இலகுவாகக் கேட்டபடி இதழ் விரித்தான், வாசுதேவன்.

அவன் சாவகாசமாகப் பேசிச் சிரித்ததும் அவளின் வழக்கமான துடுக்குத்தனம் தலை தூக்கி விட்டது போலும்.

தலை அசைத்து சிரித்தவள், “ஃபர்ஸ்ட் அஃப் ஆல் நான் இதை சொல்லியே ஆகணும். டு பீ ஃபிரான்க் டாக்டர், எல்லாரும் சீப் டாக்டர் வாசுதேவ பிரதாப்னு பேசிக்கிட்டதும் முடி நரைச்சு, அறுபதுகள்ல இருக்கற மாதிரி ஒருத்தரை எதிர்பார்த்து தான் நான் இங்க வந்தேன்..” என்றாள்.

வாசுதேவன் ஒற்றைப் புருவத்தை தூக்கி இறக்கினான்.

“அதுனால இந்த இடத்துல உங்களைப் பார்த்ததும் கொஞ்சம் ஷாக் ஆகிட்டேன், அண்ட் ஆல்சோ.. நீங்க ரொம்ப ஹாண்ட்சமா இருக்கீங்க!”

அவள் கூறிய பாணியில் சுந்தரத்துக்கே வெட்கம் வந்து விட்டதென்றால் பாருங்களேன்,

‘என்ன.. இந்த புள்ள ஏன் இப்படி பச்சை பச்சயா பேசுது?’ என நினைத்தபடி மெல்ல நகர்ந்து கொண்டான்.

வாசுவுக்கும் கூட அதே நிலைமை தான். வீடு வரை வந்தவர் தனக்குக் கீழே வேலை பார்ப்பவராகவோ, தான் மருத்துவம் பார்த்து உடல் நலம் தேறிய நோயாளியாகவோ இருந்தால் கூட எந்தவொரு வேறுபாடும் காட்ட மாட்டான்.

சுருங்கக் கூறின், ஹாஸ்பிடலில் அவன் இருப்பதற்கு அப்படியே எதிர்மறை! விருந்தாளிகளை தெய்வமாக மதிக்கும் குணம் அவனுக்கு. சிரிக்க சிரிக்க பேசுவான். உபசரிப்பிலும் சரி கிஞ்சித்தும் குறை இருக்காது.

அந்த வகையில் தான் சாருவிடமும் இயல்பாகப் பேசினான். அது தான் அவளின் சகஜமான மனநிலையைக் கிளறி விட்டிருந்தது எனலாம்.

“டாக்டர், டீயா.. காஃபியா..” என ஒரு சில நிமிடத்துக்கெல்லாம் சுந்தரம் மீண்டும் வந்து நிற்க, வாசுதேவனின் பார்வை சாருலதாவில் பதிந்தது.

பெரிதாக கசங்காமல், “சுகர் கம்மியா போட்டு ஒரு டீ ஓகே தான்..” என்றவள்,

“ஆக்சுவலி டாக்டர், நான் எதையும் ஓபனா பேசுவேன்..” என்று தன் முந்தைய பேச்சை நினைவு கூர்ந்து சுய விளக்கமளித்தபடி வீட்டிலிருந்து கையோடு கொண்டு வந்திருந்த கோப்பை மெல்ல நீட்டினாள்.

“சீ.வி? நான் இங்க எந்த இன்டெர்வியூவும் நடத்தலயே!”

தெரியும் என்பதாகத் தலை அசைத்தவள், “முதல்ல அதைப் பாருங்க டாக்டர், இதை வைச்சுத் தான் உங்க கிட்ட ஒரு பெரிய ஹெல்ப் எதிர்பார்க்கறேன். என் நம்பிக்கைய வீணாக்கிடாதிங்க, ப்ளீஸ்..” என்றாள். சாருவின் குரல் கெஞ்சுதலின் கடைசி மட்டத்தில் தாழ்ந்து தொங்கியது.

வாசுதேவன் தீவிரமானான்.

“இந்த உதவிய நீங்க பண்ணியே ஆகணும் டாக்டர்!”

தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!