Skip to content
Post Views: 11,055
நீங்காத உறவே!…
அத்தியாயம் 5
நிறை, தன் கணவனையே பார்த்துக் கொண்டிருக்க மாமனார் சொல்லை தட்டாமல் இறங்கி வந்தான் பிரபாகரன். வேகமாக அவர்களை நெருங்கியவள், “எங்க போறீங்க?” என்றாள் கணவனை பார்த்து,
“பொருட்களை இறக்கி வைக்க நிறை”
Advertisement
“அது அவங்க பாத்துப்பாங்க. நீங்க போகத் தேவையில்லை. எனக்கு பசிக்குது வாங்க சாப்பிட போகலாம். நீங்களும் காலையில இருந்து சாப்பிடல தானே” என்றாள் பட்டென்று,
மனைவிக்கு பசி என்றதும் பிரபாகரன் யோசிக்க,
“இப்ப சாப்பிட என்ன அவசரம் நிறை? வந்ததும் லேட். இந்த வேலையை முடிச்சுட்டு, பொறுமையா சாப்பிடலாம்” பேசுவது சரியா என்று கூட யோசிக்காமல் சொன்னார் தெய்வம்.
Advertisement
“எந்த வேலையும் சொல்றீங்க. நாங்க உங்ககிட்ட கூலிக்கு வேலைக்கு வந்து இருக்குமா?” முகம் சிவந்திருந்தது.
Advertisement
“என்ன பேசுற நிறை?” அப்போதுதான் தெய்வம் மகளின் முகத்தையே பார்த்தார்.
“வேலைக்கு வந்தவங்களத்தான் வேலையை முடி காசு தரேன், சாப்பாடு போடுறேன் சொல்லுவாங்க. உங்க சின்ன மகள் வீட்டில் நாங்க சாப்பிடுவதற்கு, நீங்க சொல்ற வேலையை முடிக்கணுமா?” என்றதும்,
திகைத்துப் போனார் தெய்வம். அவர் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை. அது நிறைக்கும் தெரியும். ஆனால், மூத்த மருமகன் என்ற மரியாதையையும் கொடுக்கவில்லையே.
Advertisement
பிரபாகரனுக்கு விஷயம் புரியவில்லை. “என்ன பேசுற.. வளர் நம்ம வீட்டு பொண்ணு, நான் செய்யறதுல என்ன இருக்கு”
“நீங்க செய்றது எல்லாம் ஒன்னும் இல்லை. ஆனா, நீங்க மட்டும் தான் செய்யணும்னு என்ன இருக்கு?”
“நீ பேசறது எனக்கு புரியல” என்றான் பிரபாகரன் உண்மையாகவே அவனுக்கு தெரியவில்லை.
தெய்வம் வேகமாக மனைவியை தேடி சென்றார். ஆனால், நிறை அடுத்து நிற்கவில்லை.
“வாங்க போகலாம்”
“எங்க?”
“வீட்டுக்கு” என்றதும் திகைத்துப் போனவன் சுற்றி முற்றிப் பார்த்தான் அத்தனை உறவுகள் இருந்தது. கணவனின் பார்வையை உணர்ந்து “நீங்க இருங்க நான் போறேன்” என்று நகர,
சங்கடப்பட்டு கொண்டே பிரபாகரனும் மனைவியை பின்தொடர்ந்தான். அவனுக்கு இதெல்லாம் ஒரு பெரிய விஷயமாகவே தெரியவில்லை. சொந்தத்தில் ஒரே வீட்டுக்குள் செய்வது தானே… அதைத்தான் நிறையும் சொல்கிறாள். சொந்தம் என்றால் செய்வதுதான். ஆனால் பிரபாகரன் மட்டும் ஏன் செய்ய வேண்டும்.
திலகா ஓடி வந்தார் நிறை “என்னடி இது சம்பந்த காரங்க வீட்டு முன்னாடி எங்கள் அசிங்கப்படுத்துறியா? பேசாம போ உள்ள… பிரபா வா நீ வந்து சாப்பிடு” என்று அழைக்க, நிறைய பின்வாங்கவில்லை.
மிகுந்த ரோஷம் பார்ப்பவள். வாய் வார்த்தையாக என்றாலும் தந்தை சொன்னதை ஏற்க முடியவில்லை. திலகா சொல்லியும் கேட்காமல் கிளம்பி விட்டாள். அவள் செல்லவும் தடுமாறி நின்றாலும் பிரபாகரனும் மனைவியை பின்தொடர்ந்தான். ஓரளவுக்கு மேல் திலகாவால் மகளை அதட்ட முடியவில்லை. சுற்றிலும் சொந்தங்கள் இருக்க காட்சி பொருள் ஆகி விடுவோம். ஏற்கனவே நிறைக்கு எதுவும் செய்யவில்லை என்ற பேச்சு இருக்கு. இதில், இந்த விவரம் கெட்ட மனுஷன் வேற கண்டதையும் பேசி வைத்திருக்கிறார். நொந்து கொண்டார் திலகா.
ஒரு ஆட்டோ பிடித்து வீட்டுக்கு வந்ததும் அவசரமாக அடுப்படிக்குள் நுழைந்தாள் நிறை. அரிசி பருப்பு ரெண்டையும் ஒன்றாக போட்டு அவசரத்தில் சாதமும் அப்பளமும் பொறித்தெடுத்து இருவரும் உண்டு கொண்டார்கள்.
பிரபாகரனுக்கு இவள் ஏன் இவ்வளவு ரோஷம் பார்க்கிறாள் என்று இருந்தது. இவன் இப்போது நடந்தவற்றை கொண்டு யோசிக்க… அவள் முன்பிருந்தே அழுத்தத்தில் உள்ளால் என்பதை கணிக்க முடியவில்லை. சாப்பிட்டதும் நிறைவுக்கு நல்ல உறக்கம். எதையும் யோசிக்காமல் உறங்கி விட்டாள். வேலைக்கு சென்ற காலத்தில் இருந்தே மதிய உறக்கம் என்பது குதிரை கொம்பு. இதில் வாய்ப்பு கிடைக்கும் போது நன்றாக உறங்கி விட்டாள்.
அவள் எழுந்து வரும் பொழுது திலகா முற்றத்தில் அமர்ந்திருந்தார். அவர் வைத்திருந்த பை நிறைய சீர் பலகாரங்கள்.
“நீங்க என்னன்னு கேளுங்க மதினி. அந்த மனுசன் ஏதோ சொன்னார்ன்னு, அடுத்த வீடுன்னு கூட பாக்காம புருஷனை பிடித்து இழுத்துக்குவாறா…” என்று கல்யாணியிடம் சொல்ல,
“அம்மா இந்த சரி கட்டற பேச்சு எல்லாம் வேணாம். அப்பா பேசுனத நியாயப்படுத்தாதே” நேராகவே பதில் சொன்னாள் நிறை.
“உங்க அப்பன் ஒரு விவஸ்தை கெட்ட மனுசன் நிறை. எது நல்லது கெட்டதுன்னு பேசத் தெரியாது” என்றதும்,
தாயைப் பார்த்தவள் “நான் சாப்பிடவில்லைன்னு சொல்கிறேன். காலையில இருந்து அவரும் சாப்பிடலன்னு சொல்றேன். நியாயமா ஒரு அப்பாவா, மாமனாரா என்ன சொல்லி இருக்கணும். முதல்ல மகளும், மருமகனும் சாப்பிடனும் தானே சொல்லி இருக்கணும். ஆனா, அவர் சொன்ன தோரண ஒரு அசால்ட்டு. நான் சொல்றதை நீ செய் அப்படி என்ற கட்டளை. இதெல்லாம் எதுக்கு? விவரம் தெரியாத மனுஷன் எல்லாம் கிடையாதும்மா”
“நானும் முதல்ல அப்பாவை அப்படித்தான் நினைச்சிருந்தேன். எங்கள பார்த்து சொன்ன வார்த்தையை சின்ன மகளையும், மருமகனையும் பார்த்து சொல்லுவாரா? சொல்ல மாட்டாரு. ஏன்னா, அந்த மருமகன் பணக்கார மருமகன். அவன் நாளைக்கு உதவி செய்கிறானோ இல்லையோ!.. ஆனாலும், படிப்புக்கும், வசதிக்கும் ஒரு மரியாதை”
“பிரபா, என்னோட சொந்த அண்ணன் பையன் நிறை. சின்ன வயசுல இருந்து பார்த்தவங்க. அந்த உரிமைல தான்”
“அப்பா, என்னை வச்சாவது யோசிச்சி இருக்கணும் தானே. சின்ன மக கல்யாணத்தை எடுத்து நடத்திட்டாரு. இதுக்கு முன்னால… ஒன்பது வருஷமா அந்த குடும்பத்தை தூக்கி சுமந்தேல்ல. பொம்பள பிள்ளை மாதிரி அழுதுட்டு எனக்கு எதுவும் தெரியாதுன்னு அடங்கி வீட்டுக்குள்ள உட்காராம.. வீட்டுக்கு மூத்த பிள்ளை நாமதான் பொறுப்பு எடுத்துக்கணும்னு வேலைக்கு போய் அவரோட கடனுக்கும் சேர்த்து நான் கைகட்டி நின்னேன். இன்னைக்கு என்னை பார்த்து உனக்கு சாப்பிட என்ன அவசரம்னு கேக்குறாரு?”
“என்னை கூட விடுங்க நான் உங்க மக, இவர் யாரு? அவரோட பேச்சிலே ஒரு அதட்டல். ஏதோ சின்ன பையன் வேலை ஏவுற மாதிரி” மகள் கேள்வி கேட்க திலகாவால் ஒன்றும் பதில் சொல்ல முடியவில்லை.
நிறை அவள் கையில் இருந்த தின்பண்டத்தை வாங்கவே இல்லை. திரும்ப பெற்றவள் கையிலே கொடுத்துவிட்டாள். வீரணனும் பார்த்து தான் இருந்தார். தன் மகன் மரியாதைக்காக பேசும் மருமகளை நினைத்து அவருக்கு பெருமையே…
“நிறை என்ன என்னவோ பேசுற?” என்றான் பிரபாகரன்.
“எனக்கே தெரியல என்னமோ ரொம்ப பேசி குழப்புறேன்னு தோணுது. எதுவுமே சொல்லாம ஒதுங்கி போய் இருக்கணுமோ?.. இவ்வளவு நாளா அவங்கள வச்சு, அவங்கள யோசிச்சு அவங்களுக்காகவே என் வாழ்க்கை கட்டமச்சுட்டேன். இன்னைக்கு என்னை எடுத்தெறிஞ்சு நிக்கிறது என்னால தாங்கிக்க முடியல போல.. நான் தான் சரி இல்லையா?” அவனிடமே கேட்டாள்.
“சில விஷயங்களைக் கடந்து அமைதியா போ.. நீதான் அவங்கள பார்த்துகிட்ட, அது உண்மை. அதுக்காக உன்னை வச்சு மட்டுமே அவங்க கிடையாது”
“என்னை வச்சுத்தான் அந்த வீட்ல எல்லாம்ன்னு நான் சொல்ல வரல. ஆனா, என்கிட்ட எதுவுமே சொல்லல. என்னை ஒரு பொருட்டா கூட நினைக்கல. அது ரொம்ப கஷ்டமா இருக்கு. அவ்வளவு தானா நான்…” ஆதங்கமாக நிறை கேட்க
“நீ அவ்வளவுதான்னு உனக்கு காட்டுனா, அந்த எல்லையிலே நில்லு… உன் குடும்பம் நல்லா இருக்காங்க. உனக்கான சுமை குறைஞ்சிருக்கு. சின்னப்பிள்ளை மாதிரி நியாயம் கேட்டு நிக்காத” என்றதும் சிரிப்பு வந்தது நிறைக்கு…
பாரேன் பிள்ளை பூச்சி எல்லாம் அட்வைஸ் பண்ணுது. அவனுக்கு எங்கே தெரியும் தன் தகப்பனை பற்றி… இன்னும் ஒரு மாதத்தில் எல்லாம் அவள் தலையில் தான் வந்து நிற்கும். நல்லவேளை வீட்டில் சினேகா, ரோகிணி என்று யாரும் இல்லை. இருந்திருந்தால் இன்னும் அசிங்கம்.
நாட்கள் நகர திருநிறை செல்விக்கு அடுத்து ஒரு பஞ்சாயத்து வந்து நின்றது. அது என்னவென்றால் அவள் வாரத்தில் ஒரு நாள் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம்.அவள் புதன்கிழமை விடுமுறை எடுத்துக் கொள்வாள். ஆனால், ஞாயிற்றுக்கிழமை கட்டாயம் கடை உண்டு.
பிரபாகரனுக்கு ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் தான் லீவு. அவள் இருக்கும் நேரம் இவனும், இவள் இருக்கும் நேரம் அவனும் இருப்பதில்லை. அது இருவருக்கும் பெரிதாக பாதிப்பில்லை தான். ஆனால் கல்யாணிக்கு பிடிக்கவில்லை.
“இது என்ன ஒரு நாள் கூட சந்தோசமா பொண்டாட்டி கூட இருக்க விடாம ஒரு வேலை” நிறையை பிடித்து சத்தம் போட்டு விட்டார்.
“ஒன்னு ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இரு.. இல்லைனா வேலையை விட்டு வீட்டை பாரு” என்று மாமியாராக மாறி கட்டளை இட, அவர் சொல்வதில் நியாயம் இருந்ததால் நிறையும் அமைதியாகிக் கொண்டாள். அதற்காக வேலையை விடும் எண்ணமெல்லாம் இல்லை. தங்களின் வருமானத்திற்கு இருவரும் வேலைக்கு சென்றால் மட்டும் தான் ஏதோ ஓரளவு முன்னேற முடியும். கடை ஓனர் நன்றாக தெரிந்தவர் என்பதால் சம்பளத்தில் பிடித்துக் கொள்ள சொல்லி ஞாயிற்றுக்கிழமை லீவு வாங்கிவிட்டாள். பத்தாயிரம் இருந்த சம்பளம் திரும்ப எட்டாயிரமாக மாறிப்போனது. அதில் நிறைவுக்கு அவ்வளவு வருத்தம். வேலை என்னவோ ஒன்றுதான். ஆனால், வருமானம் குறைவாகி போனதே…
அன்று விடுமுறை என்பதால் கூடத்தில் அமர்ந்து துவைத்த துணிகளை மடித்து கொண்டு இருந்தாள் நிறை, அருகில் ரோகிணியும், சினேகாவும் அமர்ந்திருந்தார்கள். லேசான பேச்சு இருக்குமே தவிர நெருக்கமான உறவு வரவில்லை. அவர்கள் இருவரும் நிறையை ஒரு எல்லைக்குள் நிறுத்தினார்கள்.
நிறைக்கு வேலையை சரியாக இருப்பதால் இவர்களை கவனிக்கவெல்லாம் நேரமில்லை.
“எனக்கு, எங்க அப்பா கட்டில் எல்லாம் முன்னாடியே ஆர்டர் குடுத்துட்டாரு. எல்லாமே தேக்கு தான்”என்றாள் ரோகினி.
“நாங்க பொருள் எல்லாம் ரெடிமேடா தான் எடுத்தோம். ஆனா, நகை தான் எங்க அப்பா முன்னாடியே செய்ய குடுத்து வாங்கி இருந்தாரு” என்றாள் சினேகா.
“நான் பார்த்தேன் உன்னோட காசு மாலை ரொம்ப அழகா இருந்துச்சு”
“வளையல், மாப்பிள்ளைக்கு போட்ட செயினில் இருந்து எல்லாமே ஸ்பெஷலா பார்த்து ஆர்டர் பண்ணது”
“உன்னை மாதிரி எனக்கு நகை நிறைய போடல. ஆனா, இடம் கொடுத்து இருக்காங்க… அது பின்னாடி நல்ல விலைக்கு போகும்” என்று அவர்களுக்குள் பேசிக் கொண்டிருக்க, நிறை வேலை முடித்து அறைக்கு வந்துவிட்டாள்.
அவள் சென்றதை கவனித்து சினேகா, “நாம பேசுறது அவங்களுக்கு ஒரு மாதிரி இருந்திருக்கும் போல”
“அதுக்கு என்ன பண்ண முடியும் சினேகா. படிச்சவங்களுக்கு, படிச்ச மாப்பிள்ளை. வசதியா இருக்கவங்களுக்கு அதற்கு தகுந்த வசதியான மாப்பிள்ளை. அப்படி பார்க்கும்போது நிறைக்கு நம்ம கொழுந்தன் வசதியான மாப்பிள்ளை தான்” என்றவள்,
“எப்படியாவது என் வீட்டுக்காரரை கல்யாணம் பண்ணனும்னு நெனச்சா?” என்று ரோகினி சொல்லும் போதே,
“தெரியும் ஜாதகம் சரியில்லை” என்றாள் சினேகா.
“அது காரணம் இல்லை. படிக்காத பிள்ளையை கட்ட மாட்டேன்னு என் வீட்டுக்காரர் சொல்லிட்டாரு. அதனாலதான் வெளியே ஜாதகத்தை காரணம் சொன்னாங்க. அப்புறம் உன் வீட்டுக்காரர்” என்று கேலியாக சொல்ல,
“அந்த கதையும் எனக்கு தெரியும்”
“பின்ன தம்பி, என் வீட்டுக்காரரை விட அதிகம் படிச்சிருக்கு. அது எப்படி மளிகை கடையில் பொட்டலம் போடுற புள்ளைய கட்டும், தம்பிக்கு எவ்வளவு கவுரவ குறைச்சல். யோசனை வேணாம்” என்று ரோகினி சொல்லும்போதே மீதம் இருந்த துணிகளை எடுக்க வந்த நிறையை பார்த்து வாயை மூடி கொண்டார்கள்.
“அண்ணிங்க ரெண்டு பேரும் வெளியே தான் இருக்காங்க நிறை, உனக்கும் ஒரு நாள் தானே லீவு போய் அவங்களோட சேர்ந்து பேசு” என்றான் பிரபாகரன்.
“என்ன பேச? அவங்க நகை பத்தி, கொண்டு வந்த சீர்வரிசை பத்தி பேசுறாங்க. நான் எப்படி அவங்களோட கலந்துக்க… நான் ஒண்ணுமே கொண்டு வரல, எனக்கு நிறைய சங்கடமா இருக்கு. சகஜமா அவங்களோட பேச முடியல” என்றதும்,
மனைவியே பார்த்திருந்தான் பிரபாகரன்.
“என்னுடைய யோசனை தான். எனக்கு ஏதோ ஒரு காம்ப்ளக்ஸ். என்கிட்ட ஒன்னும் இல்லன்னா, யார்கிட்டயும் எதுவும் இருக்கக் கூடாதா என்ன?.. ஆனாலும், ஒரு சங்கடம். அவங்க பேசும்போது என்னால சகஜமா உள்ள நுழைந்து எதுவும் பேச முடியல” என்றதும் அவன் வற்புறுத்த வில்லை. ஏதோ ஒரே குடும்பம், சண்டை இல்லாமல் போனால் சரிதான்.
நிறை வேலை செய்யும் கடையில் பில் போடுவதோடு, எல்லா வேலையும் அவர்களே தான் செய்ய வேண்டும். திவ்யாவும் இவளும் மாற்றி மாற்றி செய்து கொள்வார்கள். இன்று மாப் போடும் வேலை நிறைக்கு… மாவு மூட்டை, அரிசி முட்டை தூக்கும் பொழுது தூசி படாமல் இருக்க மேலே நீல நிற கோட் மாதிரி நிறை, திவ்யா இருவரும் போட்டுக் கொள்வார்கள். மாப் போடும் பொழுது அழுக்கு தண்ணீர் தெரிக்காமால் இருக்க நிறை போட்டுக் கொண்டாள். இரவு கடையடைக்கும் நேரம் இப்பொழுது சுத்தம் செய்தால்தான் காலையில் பளிச்சென்று இருக்கும். பஸ் சென்றுவிடும் என்ற பயத்தில் வேகவேகமாக துடைத்துக் கொண்டிருந்தாள் நிறை.
தெரிந்த குரலாக இருக்க நிமிர்ந்து பார்த்தால் பிரபாகரன். அவன் நட்பு வட்டத்தோடு வந்து கொண்டிருந்தான். பிரபா எப்போதும் உடையில் மிக ஒழுங்காக இருப்பான். பேங்க் வேலையின் நேர்த்தி அவனிடம் தெரியும். நிறை, கணவன் என்று அவனிடம் பேச முற்படவில்லை.
அழுக்கு வாளியும், கையில் மாப்பும் வைத்து அவன் அருகில் போனால், அவன் நண்பர்கள் மத்தியில் கணவனுக்கு எவ்வளவு கௌரவ குறைச்சல். எதற்கு தேவையில்லாத சங்கடத்தை கொடுக்கணும் அவள் அமைதியாக தன் வேலையை பார்த்துக்கொண்டாள். பிரபாகரனை தெரிந்த மாதிரி கூட காட்டிக் கொள்ளவில்லை.
தன் வேலையை முடித்துக் கொண்டு அவள் நகர,
“நிறை வேலையை முடிச்சிட்டியா” என்றான் பிரபா.
“ஆம், முடிஞ்சது இனி கிளம்பிடுவேன்”
“சரி நான் நிக்கிறேன். நீ வா” என்றான்.
“யாருடா அது?” என்று ஒரு சத்தம் கேட்க.
“என் வைஃப்டா. கல்யாணம் கோவில்ல இருந்ததனால யாரையும் கூப்பிட முடியல” படிகளில் இறங்கும் பொழுது நிறை காதில் விழுந்தது,
வேகமாக கீழே ஓய்வு அறைக்கு வந்தவள், முகத்தை மூன்று முறை தேய்த்து கழுவினாள். திவ்யா அவளை வித்தியாசமாக பார்க்க,
“திவி, பவுடர் எதுவும் வச்சிருக்கியாடி” என்றதும் அதிர்ந்து பார்த்தவள்,
“நீயா கேட்கிற நிறை” என்றாள் கேலியாக.
“அது அவங்க வந்திருக்காங்க. அவங்க பிரெண்ட்ஸ் கிட்ட என்ன காட்டனுமாம்”
“எவங்க வந்து இருக்காங்க” என்றவளை கண்டு கொள்ளாமல்,
“நான் அவங்க கூட வீட்டுக்கு போயிடுவேன். நீ தனியா போய் விடுவதான? உன்னை ஆட்டோ ஏத்தி விடுறேன்”
“எனக்கு உள்ளூர். நான் போய்ட்டுவேன். நீ தான் பஸ் மாறணும். ஆனா, உன்னை கூட்டிட்டு போக அப்படி யார் வந்திருக்குது” என்று ஆர்வமாக கேட்க.
நிறைக்கு என் கணவன் என்று பதில் சொல்ல முடியவில்லை. ஒரு மாதிரி தயக்கமாக இருந்தது.
யார் என்று பார்த்த திவ்யாவும், “என் புருசன்னு சொல்ல வேண்டியது தானடி”
“அப்படி எல்லாம் சொல்ல முடியாது” என்றவாறு பிரபாகரனை நெருங்கி வந்தாள்.
யாரையும் அசால்டாக எதிர்கொள்ளும் நிறை, அன்று கொஞ்சம் தயங்கியே எல்லோரிடமும் அறிமுகமாகி கொண்டாள்.
திவ்யாவிடம் சொல்லிவிட்டு இருவரும் மெல்ல நடக்கத் தொடங்கினார்கள்.
“நீங்க எப்படி என்னை அப்படி சொன்னீங்க?” என்றாள் நிறை.
“உங்களை எப்படி சொன்னாங்க?” புரியாமல் பார்த்தான்.
“அதான் என் வைஃப்ன்னு” என்று இழுக்க,
“வேற என்ன சொல்லி இருக்கணும். நீங்க என் வைஃப் தானே. வேற எப்படி தங்கச்சின்னா சொல்ல முடியும்” என்றதும், லேசான வெட்கத்தோடு அவனை முறைத்துப் பார்த்தாள் திருநிறைச்செல்வி.
error: Content is protected !!