Skip to content
Post Views: 7,423
அத்தியாயம் 4
“இன்டர்வியுல இப்படித்தான் நடந்துப்பிங்களா?” என முறைத்தார் ரூபலஷ்மி.
முதலில் ரூபலஷ்மி தனது இருப்பிடத்திற்கு வந்ததே பிடிக்கவில்லை. இதில் உரிமையாக மிரட்டுவது சுத்தமாக பிடிக்காமல் போகவே பதில் சொல்லாமல் இறுக்கமாக அமர்ந்திருந்தான் திருனேஷ்வரன்.
Advertisement
“கேக்குறேன்ல? பதில் சொல்லுங்க திரு” என்றதும் உறுத்துப்பார்த்தான் ரூபலஷ்மியை.
பெயரை சுருக்கி அழைத்தது பிடிக்காமல்தான் முறைக்கிறான் எனப்புரிந்தபோதும், “ஏன் நான் அப்படி கூப்பிடக்கூடாதா?” என்றார் உரிமையாக.
“கூப்பிடக்கூடாதுங்க மேடம்” என்றான் கட்டளையாக.
Advertisement
ரூபலஷ்மி கோபப்படுவார் என்று பார்த்தால் சுவரசியமாக முகத்தை வைத்துக்கொண்டு “ஓஹோ…” என்றவர், “ஆனா எனக்கு அப்படி கூப்பிட பிடிச்சிருக்கே” என்றார் சின்ன சிரிப்போடு.
Advertisement
சிறைவாசிகளுக்கான பெரிய தண்டனையே உணவுதான். அங்கு கொடுக்கும் உணவை உண்பது அத்தனை கொடுமையாக இருக்கும் என்பதை ரூபலஷ்மி அறிவார்.
தண்டனையிலிருந்து திருனேஷ்வரன் தப்பமுடியாது என்ற நிலை வந்த பின்னே, திருனேஷ்வரனின் எதிர்காலத்தை நினைத்து மிகவும் வருந்தினார் ரூபலஷ்மி.
தன்னால் முடிந்த உதவியாக, உணவகத்திலிருந்து தினமும் திருனேஷ்வரனுக்கு உணவு செல்ல ஏற்பாடு செய்தார். ஆம்… சட்டத்திற்கு புறம்பாக ரூபலஷ்மி செய்த முதல் காரியம்…
Advertisement
முதல்நாள் மட்டுமே மரியாதை நிமித்தமாக அந்த உணவை உண்டான். அடுத்தநாளே வேண்டாம் என்று மறுத்துவிட்டான். விசயம் ரூபலஷ்மிக்கு தெரிவர, நான்தான் ஏற்பாடு செய்தேன். நீ குற்றமற்றவன், இப்படி உணவுண்பது தவறல்ல, இனி உனக்கு வரும் உணவை சாப்பிடு என்று சிறைக்காவலர் மூலமாக கைப்பேசியில் பேசினார் ரூபலஷ்மி.
இங்கு நிறைய கைதிகள் இருக்கிறார்கள். அனைவரும் ஒன்றை உண்ணும்போது நான் மட்டும் இப்படி உண்ண மனம் வரவில்லை. இப்படி உணவு வேண்டாம் என்று கெஞ்சலாகவே மறுத்துவிட்டான் திருனேஷ்வரன்.
அதன் பின்னேயும் வெளியிலிருந்து உணவு வரவழைக்காமல் சிறை உணவகத்திலாவது வாங்கிக்கொள். நான் பணம் அனுப்பிவிடுகிறேன், வெளியில் வந்தபின்னே கடனை வசூலித்துக்கொள்கிறேன் என்றிருந்தார்.
திருனேஷ்வரனுக்கும் சிறையில் கொடுக்கப்படும் உணவை உண்பது பெரும் தண்டனையாக இருக்கவே, ரூபலஷ்மியின் இரண்டாவது கோரிக்கைக்கு ஒப்புகொண்டான்.
அவ்வுணவும் அத்தனை சுவையாகவெல்லாம் இருக்காது. ஆனால் சிறையில் கொடுக்கப்படும் உணவை விட சிறைக்கேண்டீனில் வழங்கும் உணவு சற்றே பரவாயில்லையாக இருக்க, ஐந்து வருடங்களாக அங்குதான் வாங்கி உண்டான் திருனேஷ்வரன்.
விடுதலையான பின்னேயும், சிறியிலிருந்து உடுத்தி வந்த உடையைத் தவிர, மற்ற அனைத்தும் ரூபலஷ்மி வாங்கிக்கொடுத்தது ஆகையால், “நீங்க இல்லைனா இன்னும் அஞ்சாறு கேஸ் போட்டு ஆயுள் வரை உள்ளயிருக்க மாதிரி செய்திருப்பாங்க. இல்லைனா அடிச்சே கொன்னுருப்பாங்க, இப்படி என்னவேணா நடந்திருக்கும்.
நீங்க எனக்காக செய்த உதவி என் உயிர் உள்ளவரை மறக்க முடியாதது. மறக்கவும் மாட்டேன். அந்த நன்றி கடனுக்காக உங்க வீட்டு வேலைக்காரனா இருக்கக்கூட நான் தயாராத்தான் இருக்கேன். ஆனா நீங்க நினைக்கிறது என் உயிரே போனாலும் நடக்காது. தயவு செய்து என்னை விட்டுடுங்க” என்றான் வெளிப்படையாகவே.
கோபமே வரவில்லை ரூபலஷ்மிக்கு. “நான் என்ன நினைக்கிறேன்னு உங்களுக்கு புரியுதா?” என்றார் ஆச்சர்யமாக.
“புரியாததுக்கு நானென்ன சின்ன பையனாங்க மேடம்? எனக்கு முப்பது வயசு. எல்லாம் புரியுற வயசு மட்டும் இல்ல, பிடிக்காத விசயத்தை எத்தனை பலம் வாய்ந்தவங்க சொன்னாலும், தைரியமா அவாய்ட் பண்ற வயசும் கூட.
உங்களோட மைன்ட்தாட் தெரிஞ்ச பின்னயும் உங்களை அவாய்ட் பண்ணாம இருக்க காரணம், நான் உங்களுக்கு பட்டுருக்க நன்றிக்கடன். நன்றிக்கடன் மட்டும்தான். இதே நிலைமை நீடிச்சா நன்றி கெட்டவனாகுறதைத் தவிர எனக்கு வேற வழியில்ல” என்றான்.
“உங்ககிட்ட எனக்கான தேவை நன்றிக்கடன் இல்லை” என்றார்.
ஆழ மூச்செடுத்து தனது கோபம் குறைத்து “எனக்கு உங்க ஹஸ்பண்டை பார்க்கனும்” என்றான்.
“பார்க்குறது அப்புறம் செய்யலாம், முதல்ல உன்னால முடிஞ்சா பேசு பார்ப்போம்” என்று கணவனுக்கு அழைப்பு விடுத்து ஸ்பீக்கரை ஆன் செய்தார் ரூபலஷ்மி.
இதனை சுத்தமாய் எதிர்பார்க்கவில்லை திருனேஷ்வரன். என்ன பேசுவது இவரிடம்? மேடம் ஏன் கணவரை நிராகரிக்க நினைக்கிறார் என்று அறியத்தானே நான் அவரிடம் பேச நினைத்தேன், இவர் முன்னே எப்படி பேச? என யோசித்திருக்க, “என்ன?” என்ற குரல் ஒலித்தது கர்ஜனையாக.
“அஃபிஸியலா எனக்கு உங்க சஜஸன் தேவைப்படுது” என்று ரூபலஷ்மி தனது தேவையை முழுதாக சொல்லும் முன்னே, “படிச்சு மெரிட்லதான டி.எஸ்.பி ஆன? நீயே யோசிச்சு முடிவெடு” என்றதும் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது.
இது அறிந்த விசயம்தான் ஆதலால் மீண்டும் கணவருக்கு அழைத்தார். அழைப்பை ஏற்றவர் “என்ன பிரச்சனை உனக்கு? நான் பிஸியா இருக்கேன்” என கத்த, “அஃபிஸியல் விசயத்தை நானே பார்த்துக்கிறேன், நம்ம பசங்க விசயமா கொஞ்சம் பேசனும். ரொம்ப இம்பார்ட்டண்ட். அவசரமும் கூட. இன்னைக்கு வீட்டுக்கு வரிங்களா?” என்றார் பொறுமையாகவே.
“நீ கூப்பிடுற நேரமெல்லாம் வீட்டுக்கு வர முடியாது, ஃப்ரீ ஆகிட்டு கூப்பிடறேன்” என்று இணைப்பை துண்டித்தார்.
“திரும்ப கூப்பிட்டா அட்டன் பண்ணமாட்டார்” என்று திருனேஷ்வரனிடம் சொல்லியே மீண்டும் கணவருக்கு அழைக்க, அவர் அழைப்பை ஏற்கவில்லை.
“என் புருசன் வீட்டுக்கு வரும்போது உங்களுக்கு கால் பண்றேன், என்ன பேசனுமோ நேர்லயே பேசிக்கலாம். இப்போ நம்ம விசயத்துக்கு வரலாங்களா?”
“ம்ப்ச்… தயவு செய்து என்னை வாங்க போங்கனு பேசாதிங்க, அதுவே எனக்கு இரிட்டேட்டிங்கா இருக்கு. பேர் சொல்லி பேசுங்க, முழுபேர் சொல்லி பேசுங்க, உங்களுக்கு ஒரு தம்பியிருந்தா எப்படி நீ, வா, போனு பேசுவிங்களோ.. அப்படி பேசுங்க”
“நீ வா போனு பேசுறது உங்களுக்கு பிடிக்கும்னா அப்படி பேசுறதுல எனக்கு அப்ஜக்ஷன் இல்லை… அதுக்காக தம்பி மாதிரிலாம் உங்களை… ம்ச் உன்கிட்ட பேச முடியாது” என்று மலர்ந்த முகத்தோடு சொன்னதும் திருனேஷ்வரன் முகம் அத்தனை கடினமாக மாறியது.
“ஹ..ஹ… ஒகே கூல்… இப்போதைக்கு லெட்ஸ் பி ஃப்ரண்ட்ஸ்?” என்று தலையை ஒருபுறமாக சாய்த்து கைகுலுக்கலுக்கு ஏதுவாக தனது கையை நீட்டினார் ரூபலஷ்மி.
“ஓஹ்… ஃப்ரண்ட்ஸா? ஹம்… அதுக்கு சில கண்டிஷன்ஸ் இருக்குங்க மேடம். உங்களுக்கு தெரிஞ்சவங்க யாரும் என்னை இனி சார்னு கூப்பிடக்கூடாது. உங்க பசங்க என்னை அண்ணானு சொல்லனும், இல்லைனா அங்கிள்னு கூப்பிடனும். முதல்ல இந்த இரண்டு கண்டிஷனை அக்ஸப்ட் பண்ணுங்க. ஃப்ரண்ட்ஸா இருக்க ட்ரை பண்றேன்” என்றான்.
தனது பிள்ளைகள் திருனேஷ்வரனை அண்ணா என்றழைத்தால் இவன் தனக்கு மகன் முறையாகிவிடும், மாமா என்றழைத்தால் தனக்கு தம்பி முறையாகிவிடும், இதனை மனதில் வைத்தே இப்படி கேட்கிறான் எனப்புரிந்ததும், சில நொடிகள்தான் என்றாலும் ரூபலஷ்மி முகம் அவமானத்தில் குன்றிவிட, பாவமாகிப்போனது திருனேஷ்வரனுக்கு.
ம் ரூபலஷ்மி மீது எத்தனை கோபம், ஒவ்வாமை இருந்தபோதும், அவர் அவமானப்பட்டதும் பாவமாகித்தான் போனது. ஏனெனில் ரூபலஷ்மியின் வெளியுலக மதிப்பை நன்கறிந்தவன் திருனேஷ்வரன்.
பணியில் அத்தனை நேர்மையானவர் எனபதோடு, யாருக்கும் பயப்படாமல் தனது பணியினை செவ்வனே செய்பவர்.
ரூபலஷ்மி அழகு, அறிவு, கம்பீரம் என அனைத்திலும் சிறந்து விளங்குபவர். உடல் தேவைக்காக மட்டும் என்றால் காவல் துறையிலேயே ரூபலஷ்மியின் சிறு பார்வைக்காக காத்திருப்பவர்கள் ஏராளம். அதனை ரூபலஷ்மியும் அறிவார். பார்வையில் தன்னை நெருங்குபவனுக்கு அல்ல… நெருங்க நினைப்பனுக்கு கூட தகுந்த பாடம் கற்றுத்தரும் வல்லமை உடையவர்.
அப்படிபட்ட அதிகாரியை, பொறுப்புள்ள அன்னையை, எப்படி கவர்ந்தேன் என்பதை திருனேஷ்வரன் அறியான். அன்று நான் குற்றமற்றவன் என்பதை பெற்றோர் கூட நம்பவில்லை. ஆனால் இவர் தன்னை அறிந்து தனக்காக நின்றார்.
‘அந்த பொண்ணை மிரட்டி உண்மையை சொல்ல வைக்கலாம், மேல்முறையீடு செய்யலாம், எளிதாக விடுதலையாகி விடுவாய்’ என்றுதான் ரூபலஷ்மி சொன்னார்.
பொன்மணி கற்பழிக்கப்பட்டாள் என்றபோதும், கற்பழிப்பு முயற்சி என்பதுதான் அனைவரும் அறிந்தது. அவள் சிறு பெண்… மிரட்டலுக்கு பயந்து பொய் சொல்லியிருக்கிறாள். எத்தனை மிரட்டி கேட்டாலும் இதையேதான் மீண்டும் சொல்வாள்.
பள்ளி படிக்கும் பெண்ணிற்கு அந்த நிகழ்விலிருந்து வெளிவரவே வெகுகாலம் ஆகும். எத்தனை விசாரித்தாலும் அவள் பொய்யுரைப்பதை மாற்றப்போவதில்லை. மாற்றி சொல்ல பொன்மணியின் பெற்றோரும், உண்மை குற்றவாளியும் அனுமதிக்கமாட்டார்கள்.
வெளிவராத உண்மை சம்பவத்திற்காக விசாரணை என்ற பெயரில் மீண்டும் மீண்டும் அப்பெண்ணை வார்த்தையால் கற்பழிக்கவேண்டாம்’ என்றுவிட்டான் திருனேஷ்வரன்.
ஆகினும் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் மீண்டும் பேசிப்பார்த்துவிட்டார் ரூபலஷ்மி. திருனேஷ்வரன் சொன்னதுதான் நடந்தது.
ஆம்… திருனேஷ்வரன்தான் உண்மை குற்றவாளி என்றும், அவனை தப்பிக்கவைக்க என் மகளை பொய்யுரைக்க வைக்க முயற்சி செய்கிறார்கள் என்றும் பொன்மணியின் பெற்றோர் கண்ணீர் வடித்தனர்.
உண்மை குற்றவாளிக்கு பயந்து பொன்மணியும் முன்பு சொன்னதையேதான் சொன்னாள். அபாண்டமாக குற்றம் சுமத்தும் பெண்ணுக்காக எப்படி யோசிக்க மனம் வருகிறது திருனேஷ்வரனுக்கு என்று ஆச்சர்யப்பட்டார் ரூபலஷ்மி.
தண்டனை காலத்தின்போதும் கூட, முகமறியா உண்மை குற்றவாளி மீதும், பொன்மணியின் பெற்றோர் மீதும் ஆத்திரம் வந்ததே அன்றி, பொன்மணி மீது ஏனோ திருனேஷ்வரனுக்கு கோபமே வரவில்லை.
அவன் மனதில் பதிந்ததெல்லாம் பொன்மணி பள்ளி படிக்கும் சிறுபெண். அவளின் வாழ்வில் நடக்கக்கூடாத நிகழ்வு நடந்துவிட்டது. மிகுந்த பயத்தில் இருப்பாள். தன்னை காப்பாற்றிக்கொள்வது மட்டும்தான் அவளின் நினைப்பாக இருக்கும் என்று அவளின் நிலையை புரிந்திருந்தான்.
திருனேஷ்வரனின் இக்குணமே ரூபலஷ்மியை ஈர்க்க ஆரம்பித்தது. முதல்முறை பார்த்தபோதே அவனின் கம்பீரம், தைரியம், ஈர்த்தபோதும், தற்போது தானாக தன் நினைப்பை வெளிப்படுத்தியபோதும் தன்னை நெருங்காமல் இருப்பதோடு, விலகியும் செல்லாமல் தன்னை பண்படுத்த நினைக்கும் அவனின் பண்பும், சுய ஒழுக்கமும் மேலும் ஈர்த்தது ரூபலஷ்மியை.
ரூபலஷ்மியின் நேசப் பார்வையை சகிக்க முடியாமல், “எனக்கு வெளில கிளம்பனும் மேடம்” என்றான்.
தன் மீதுள்ள கோபத்தில் கிடைத்த பெரிய வாய்ப்பை தவற விட்டுவிட்டானே என, “ஏன் இன்டர்வியுல அப்படி நடந்துக்கிட்ட? இப்படிலாம் நான் யாருக்கும் ரெக்கமண்ட் பண்ணினதில்ல” என்றார் உண்மைக்கோபமாக.
ரூபலஷ்மி ஏற்பாடு செய்த வேலைக்கு செல்ல விருப்பம் இல்லாமல் போகவே, நேர்காணலில் கேட்ட சுலபமான கேள்விகளுக்கும் தவறான விடையை சொல்லி, தான் இந்த வேலைக்கு தகுதியில்லாதவன் என்பதை உணர்த்தியிருந்தான்.
“அவங்க கேட்ட கேள்விக்கு உண்மையாவே எனக்கு ஆன்ஸர் தெரியலைங்க மேடம். அந்த கம்பெனிக்கு வேலைக்கு போக எனக்கு தகுதி இல்ல. தகுதியில்லாத இடத்துல வெட்டியா சம்பளம் வாங்க எனக்கு விருப்பமும் இல்லைங்க மேடம். எனக்கு தகுதியான வேலையை நானே பார்த்துக்கிறேன்” என்றான்.
“ஆக… நான் ஏற்பாடு பண்ற வேலைக்கு போகமாட்ட” என்றார் முறைப்பாக.
தற்போதும் கூட ரூபலஷ்மி முறைப்பில் உண்மையில்லை. நான் சுயமாக இருப்பதை பாராட்டும் வகையிலான மெச்சுதலான முறைப்பாக இருக்க, இதுவும் கசந்தது திருனேஷ்வரனுக்கு.
இவர்களிடமிருந்து எப்படி தப்பிப்பது என ஆயாசமாக நினைக்க, அழைப்புமணி ஒலிக்கும் சத்தம் கேட்டது.
திருனேஷ்வரன் வெளியே சென்று பார்க்க, குரியர் வந்திருந்தது. அனுப்புனர் முகவரியைப் பார்த்ததுமே தனது சான்றிதழ்கள்தான் வந்திருக்கிறது என்பதை அறிந்துகொண்டான்.
அதனை வாங்கிக்கொண்டு கையொட்பமிடும் நேரம் அவனின் கையிலிருந்து அதனை பறித்துக்கொண்டு உள்ளே சென்று பிரித்துப்பார்த்தவர், “ஓஹ்” என்ற ஆச்சர்ய பாவனை காட்டி, “இது என்கிட்ட இருக்கட்டும்” என்று தனது கைப்பையில் வைத்துக்கொண்டு வெளியேற எத்தனித்தார்.
“மேடம் அதை கொடுத்துட்டு போங்க” என்று அவருக்கு முன்னே வந்து நின்றான் திருனேஷ்வரன்.
சின்னதாய் சிரித்தபடி வெளியே செல்லும் வழியில் ரூபலஷ்மி முன்னேற, அங்கேயே நின்றால் தன்மீது மோதிக்கொள்ளும் நிலை வரவே திருனேஷ்வரன்தான் விலகி நின்றான் கடுப்போடு.
வெளியே சென்று காரில் அமர்ந்தவர், “ஈவ்னிங் வீட்டுக்கு வந்து வாங்கிக்கோ திரு” என்று, “திருனேஷ்வரன்” என்று திருத்தி சொல்லி கிளம்பினார் ரூபலஷ்மி.
error: Content is protected !!