Skip to content
Post Views: 3,899
மூங்கில் 2:
தான் தங்கும் இடத்திற்கு வந்த பிறகும் கூட வெற்றியால் ஒருநிலையில் இருக்க முடியவில்லை. மீண்டும் மனதிற்குள் இருந்த எண்ணங்கள் தலைதூக்க, என்ன செய்வதென்று தெரியாமல் குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டிருந்தான்.
“எதுக்கு வெற்றி இப்படி நடந்துகிட்டு இருக்க..?” என்றது அவனின் மனம்.
‘காரணம் உனக்குத் தெரியாதா..?’ என்றான் பதிலாய்.
Advertisement
“காரணமெல்லாம் தெரியத்தான் செய்யுது. நடந்து முடிஞ்சதைப் பத்தி எத்தனை தடவை யோசிச்சாலும் அது மாறப்போறது இல்லை..” என்றது மனம்.
‘அது எனக்கும் தெரியும். இந்த வெற்றி நினைச்சா எதையும் மாத்துவான்..’ என்றான் வீராப்பாய்.
“நீ கிழிச்சதைத் தான் நானும் பார்த்தேன்ல..” என்றது மனம் நக்கலாய்.
Advertisement
‘நீ கொஞ்ச நேரம் பேசாம இரு..’ என்று கத்திவிட்டான்.
Advertisement
“சார்..! நான் அமைதியா தான் சார் இருக்கேன்..” என்றான் பிகாரி.
அப்போது தான் வெற்றிக்குத் தானாக பேசிக்கொண்டிருப்பது புரிந்தது. தலைமுடியைக் கோதி தன்னை சமன் செய்தவன்,
“உன்னை சொல்லலை பிகாரி..” என்றான் கொஞ்சம் அமைதியான குரலில்.
Advertisement
“எனக்கென்னவோ பயமா இருக்கு வெற்றி சார்…! நீங்க தனியாவே தான் பேசிட்டு இருக்கீங்க..? முதல்ல உங்களுக்குப் போய் மந்திரிக்கணும்..” என்றான் பிகாரி.
“நீ இன்னும் இங்க என்ன பண்ணிட்டு இருக்க..?” என்றான் வெற்றி எரிச்சலுடன். பிகாரி அருகில் இருந்த வீட்டில் தங்கியிருந்தான். வீடு என்று சொல்வதைக் காட்டிலும் அறை என்று தான் சொல்ல வேண்டும். வெற்றி அதிகாரி ரேஞ்ச் என்பதால் அவனுக்குக் கொடுக்கப்பட்டிருந்த அந்த மர வீடு கொஞ்சம் வசதியுடன் தான் இருந்தது. பிகாரி தூங்கும் நேரம் தவிர, வெற்றியுடன் தான் இருப்பான்.
“நீங்க இன்னும் சாப்பிடலை சார். அதான் நானும் சாப்பிடாம வெயிட் பண்ணிட்டு இருக்கேன்..” என்றான் பிகாரி.
“நீ சாப்பிட்டு கிளம்பு பிகாரி. நான் அப்பறம் சாப்பிட்டுக்கிறேன்..!” என்று அவன் சொல்லி விட்டு வெளியே வந்தான் வெற்றி.
நன்றாக இருள் சூழ்ந்திருந்தது. தூரத்தில் அவர்கள் டென்ட் முன்னால் தீ மூட்டி அதைச் சுற்றி அவர்கள் அனைவரும் அமர்ந்திருப்பது சிறு புள்ளியாய் தெரிந்தது.
அவர்களின் முகங்கள் தெளிவாக தெரியாவிட்டாலும், வர்ணிகா சற்று தள்ளி தனியாக அமர்ந்திருப்பது தெளிவாய்த் தெரிந்தது அவனுக்கு.
“அப்படி ரூல்ஸ் பேசுனா..? இப்ப எதுக்கு தனியா உட்கார்ந்திருக்கா..?” என்று யோசித்தான் வெற்றி.
அந்த பகுதி அப்படி ஒன்றும் பயமான பகுதி கிடையாது. இரவில் விலங்குகள் நடமாட்டம் இருக்கும் அவ்வளவுதான்.
“பிகாரி..!” என்றான்.
“சொல்லுங்க சார்..!” என்றபடி அவனும் வெளியே வந்தான்.
“அங்க இருக்குறவங்க எல்லாம் சாப்பிட்டாங்களா..?” என்றான் வெற்றி.
“அதெல்லாம் ரெடியா தான் சார் வந்திருப்பாங்க. இப்படி கேம்ப்,ட்ரக்கிங் வர்றவங்க எல்லாம், அவங்க தேவைகளுக்கு எல்லாமே வச்சிருப்பாங்களே சார்..” என்றான் பிகாரி.
“இது எனக்குத் தெரியாதா..?” என்றான் வெற்றி முறைப்புடன்.
“சாரி சார்..” என்றான் பிகாரி.
“போய், அவங்க சாப்பிட்டாங்களான்னு கேட்டுட்டு வா..” என்றான்.
“சார்..! இருட்டுனதுக்கு அப்பறம், நீங்க இல்லாம நான் எங்க தனியா போயிருக்கேன்..” என்றான் பிகாரி. விட்டால் அழுதுவிடும் நிலையில் இருந்தான் அவன்.
“இப்ப போறியா..? இல்லையா..?” என்று ஒரு அதட்டல் போட,
“போறேன் சார்” என்ற பிகாரி,
“இவருக்கு என்ன ஆச்சுன்னே தெரியலை. அது தெரியறதுக்குள்ள என் உசுரு போய்டும் போல. முதல்ல இங்க இருந்து டிரான்ஸ்பர் வாங்கிட்டு கிளம்பனும்..” என்று புலம்பியபடியே சென்றான் பிகாரி.
“இப்ப அவங்க சாப்பிட்டா என்ன? சாப்பிடலைன்னா உனக்கென்ன..? இங்க வர்றவங்க எல்லாரையும் நீ இப்படித்தான் கவனிக்கிறியா..?” என்றது அவனின் மனசாட்சி.
“அது என்னோட தனிப்பட்ட விஷயம்..” என்றான் மனதிடம். அப்போது பார்த்து அவனின் செல்போன் குரல் எழுப்பியது. அதை எடுத்தவன், எரிச்சலுடன் காதில் வைத்தான்.
“அம்மா, இந்த நேரத்துல எதுக்காக போன் பண்றிங்க..?” என்று எரிந்து விழுந்தான்.
“எப்படிப்பா இருக்க வெற்றி..?” என்றார் பொன்னி, எதிர்முனையில்.
“இன்னும் ஏன் இருக்கேன்னு கேளுங்க..” என்றான்.
“இன்னும் உன்னோட கோபம் கொஞ்சம் கூட குறையலையா வெற்றி. உங்கப்பா மேலதான் கோபம்ன்னா, அதுக்கு என் கூடவும் ஏன் பேசாம இருக்க..?” என்றார் பொன்னி, பாசம் தோய்ந்த குரலில்.
“இப்ப எதுக்கும்மா நீங்க என்கிட்டே பேசுறிங்க. இது உங்க புருஷனுக்குத் தெரிஞ்சா அதுக்கும் அந்த மனுஷன் என்னைத்தான் பேசுவாரு. என்னைக்குத் தான் என்னைப் பத்தி நல்லவிதமா யோசிச்சிருக்காரு..” என்றான் வெற்றி.
“நடந்தது நடந்து போய்டுச்சு. அதுக்காக இன்னும் இப்படி வீம்பாவே இருந்தா எப்படி வெற்றி. எத்தனை நாளைக்கு இப்படி இருக்க முடியும். நான் சொல்றதை கேளு வெற்றி..” என்று பொன்னி எதையோ சொல்ல வர,
“நீங்க எதுவும் சொல்ல வேண்டாம்மா. நீங்க சொன்ன வரைக்கும் போதும்,நானும் பட்ட வரைக்கும் போதும்.இனியாவது என் வாழ்க்கையில் என் இஷ்ட்டம் போல இருக்க விடுங்க..” என்றான் கோபமாய்.
“அப்போ உனக்கு இந்த அம்மா வேண்டாமா வெற்றி..?” என்றார் பொன்னி அழுதுவிடும் குரலில்.
“நான் எப்பம்மா அப்படி சொன்னேன்..? நீங்க என் கூட பேசுறது தெரிஞ்சா அதுக்கும் நீங்கதான் திட்டு வாங்கணும். அதுக்காகத் தான் சொன்னேன்.” என்றான்.
“நீ வீட்டுக்கு வந்து ஆறுமாசம் ஆகப் போகுது வெற்றி. அப்பா கோபத்தைப் பத்தித் தான் உனக்குத் தெரியுமே. அதையெல்லாம் விட்டுத் தள்ளு. இப்பவே சொந்த பந்தம் எல்லாம் ஒரு மாதிரி பேச ஆரம்பிச்சுட்டாங்க..” என்றார் பொன்னி.
“யாரு அந்த சொந்த பந்தம்மா..? அந்த வீணாப் போன நாலு பேரா..?அவனுக தான் என்னோட பிரச்சனையே. எனக்குன்னு இல்ல, பாதிப்பேருக்கு அவனுக தான் பஞ்சாயத்தே. அவனுக பேச்சைக் கேட்டு உங்க புருஷன் வேணும்ன்னா ஆட்டம் போடலாம். ஆனா, என்னால முடியாது. பணம்ன்னா போதும் அவருக்கு. அவருக்கு ஒத்துழைச்சா நான் நல்ல பையன். இல்லைன்னா ஆகாத பையனா… என்னைத் தேவையில்லாம பேச வைக்காதிங்கம்மா..” என்றவன் பட்டென்று போனை வைத்து விட்டான்.
“என்ன நினைச்சுகிட்டு இருக்காங்க என்னைப் பத்தி..?” என்று கோபத்தில் கனன்றவனுக்கு, மனதில் நிம்மதி என்பது துளியும் இல்லை. ஏதோ பாரமாய் உணர்ந்தான்.
வெளியே வானம் இருட்டிக் கொண்டு, மழை பெய்வதற்கு தயாராய் இருந்தது.
“ஹேய் நிகா…! மழை வரும் போல இருக்குப்பா..” என்றாள் ஜெர்சி.
“நம்ம தான் டென்ட் போட்ருக்கோமே. அதனால் ஒன்னும் பிரச்சனையில்லை..” என்றான் ஒருவன்.
“இடி இடிக்கிறதைப் பார்த்தா, பெரிய மழையா வரும் போல இருக்கு. நாம இந்த நேரத்துல இங்க இருக்குறது சேப் இல்லை..” என்றான் மற்றொருவன்.
“இதுக்குத்தான் அந்த சார் அப்பவே சொன்னார். நீங்க தான் கேட்கலை. நல்ல வேலை இதுக்குமேல போகாம விட்டோம்..” என்று வெற்றியை சைட் அடித்த பெண் சொல்லிக் கொண்டிருந்தாள்.
இவர்கள் பேசுவதற்கு எந்த பிரதிபலிப்பும் இல்லாமல் இருந்தாள் வர்ணிகா.
“என்ன நிகா..? நாங்க பேசிட்டே இருக்கோம். நீ அமைதியா இருக்க..?” என்றாள் ஜெர்சி.
“நாம இதுக்கு முன்னாடி இப்படி மழையில மாட்டினதே இல்லையா..? என்னமோ புதுசா நடக்குற மாதிரி கவலைப் படுறிங்க.. சும்மா சின்னப் பிள்ளைங்க மாதிரி..” என்று அதட்டல் பேச்சில் பேசிவிட்டு அமைதியாக திரும்பிக் கொண்டாள்.
அங்கே வெற்றியோ, பிகாரி இன்னும் வராமல் இருப்பது கண்டு கடுப்பில் இருந்தான்.
“இவனுக்கு போனா போன இடம், வந்தா வந்த இடம். மழை வேற வர்ற மாதிரி இருக்கு. இன்னும் என்ன பண்றான்..?” என்று யோசித்தவன், டார்ச் லைட் சகிதம் எடுத்துக் கொண்டு தானே கிளம்பிவிட்டான்.
அவன் கிளம்பும் போதே,லேசாக தூறல் போட்டுக் கொண்டிருந்தது. வெற்றி சிறிது தூரம் தான் சென்றிருப்பான். மழை லேசாக வலுக்கத் தொடங்கியது. அங்கிருந்த மரத்தின் அடியில் நின்றிருந்தான் பிகாரி. அவனை அங்கு பார்த்த வெற்றி மீண்டும் கோபமானான்.
“நான் என்ன சொன்னேன்..? நீ என்ன பண்ணிட்டு இருக்க..?” என்றான்.
“மழை வர்ற மாதிரி இருக்கவும் இங்கயே நின்னுட்டேன் சார்..” என்றான் பிகாரி.
“இல்லைன்னாலும் இந்நேரம் நீ போயிருப்ப..? உன்கிட்ட ஒருவேலை சொன்னா இந்த லட்சணத்துல தான் நடக்கும்ன்னு நான் முன்னாடியே யோசிச்சிருக்கணும்..” என்று தலையிலடித்தவன், அவனைத் தாண்டி செல்ல முற்பட,
“சார், பெரிய மழையா வரும் போல சார்..! நாம ரூம்க்கே போயிடலாம்..” என்றான் பிகாரி.
“யோவ்..! உனக்கு கொஞ்சமாவது மண்டையில ஏதாவது இருக்கா இல்லையா..? அவங்க டென்ட் போட்டிருக்க இடம் மழைக்கு சேப் இல்லைன்னு உனக்குத் தெரியாது. வா, போய் அவங்ககிட்ட இன்பார்ம் பண்ணி கூட்டிட்டு வரலாம்..” என்றான் வெற்றி.வேறுவழியில்லாமல் வெற்றியுடன் சென்றான் பிகாரி.
“இதுக்குத்தான் நான் அப்பவே சொன்னேன்..! எவ்வளவு திமிரா பேசினா..? கேட்டா மேலிடத்துல பர்மிஷன் வாங்கிட்டாங்களாம். அங்க இருக்கவங்களுக்கு என்ன தெரியும்? காட்டுக்குள்ள இருக்குறவங்களுக்கு தானே தெரியும் உண்மையான நிலைமை..” என்று கோபமாக பேசிக் கொண்டே சென்றான்.
‘சார் என்ன.. அந்த பொண்ணை மரியாதை இல்லாம பேசுறாரு..? பொதுவா யாரையும் இப்படி பேசமாட்டாரே..?’ என்று மனதிற்குள் நினைத்த பிகாரி அதை வெளியே கேட்கவில்லை. அப்படியே கேட்டாலும், வெற்றி மானாவாரியாக திட்டுவான் என்பது தான் அவனுக்குத் தெரியுமே.
அவர்கள் எதிர்பார்க்காத அளவிற்கு மழை பெய்யத் தொடங்க, முதலில் சமாளித்து விடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தவர்களின் மனதில் லேசாக பதட்டம் தொற்றிக் கொண்டது. பலமான காற்றுடன் மழை பெய்து கொண்டிருந்தது.
“ஜெர்சி.. அங்க தூரத்துல டார்ச் வெளிச்சம் தெரியுது..! யாரா இருக்கும்..?” என்றான் ஒருவன்.
“எனக்கு என்னடா தெரியும்..? நானும் உங்க கூடத்தான இருக்கேன்..” என்றாள் ஜெர்சி.
அனைவரும் டெண்ட்டிற்குள் ஒதுங்கியிருந்தனர். டார்ச் வெளிச்சம் அவர்களுக்கு அருகில் வரவும் அவர்களுக்குத் தெரிந்து போனது வந்தது யாரென்று. ஏனோ அவனின் வருகை வர்ணிகாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.
“நான் அவ்வளவு சொல்லியும் கேட்காம, ரூல்ஸ் பேசுனிங்க..! மழை இப்போதைக்கு விடாது. என்ன பண்ண போறீங்க..?” என்றான் வெற்றி. அவனும் அவர்களின் கூடாரத்திற்குள் நுழைந்திருந்தான். அதற்குள் அவனும் முழுமையாக நனைந்திருந்தான். அவனுக்கு இருந்த சிந்தனையில் அவனுக்கு ரெயின் கோட் அணிய வேண்டும் என்பதே மறந்து போயிருந்தது.
“சாரி சார்..! தப்பு எங்களோடது தான். ஒரு ஆர்வக் கோளாறுல..” என்று ஒருவன் இழுக்க,
“மத்தவங்க எல்லாம் எங்க..?” என்றான் வெற்றி.
“பக்கத்து டெண்ட்ல இருக்காங்க சார்..” என்றான் மற்றொருவன்.
“எல்லாரும் சாப்பிட்டிங்களா..?” என்றான்.
“நாங்க சமைக்கலாம்ன்னு நினைச்சோம் சார். ஆனா, அதுக்குள்ளே மழை வந்திடுச்சு. அது ஒன்னும் பிரச்சனையில்லை. எங்க கிட்ட பிஸ்கட் ஐட்டம்ஸ் இருக்கு. அதை வச்சு மேனேஜ் பண்ணிப்போம்..” என்றாள் ஜெர்சி.
ஜெர்சியைப் பார்த்தவன், அருகில் இருந்த வர்ணிகாவைப் பார்த்தான், பார்த்துக் கொண்டே இருந்தான்.
“அப்போ அவ்ளோ பேசுனாங்க. இப்ப என்னமோ பம்மிகிட்டு நிக்கிறாங்க..?” என்றான் வர்ணிகாவைப் பார்த்து. அவளும் லேசாக நனைந்திருப்பாள் போல, லேசான ஈரத்துடன் நின்றிருந்தாள்.
“எல்லார்கிட்டயும் ரெயின் கோட் இருக்கா..?” என்றான் வெற்றி.
“இருக்கு சார்..!”
“அப்போ அதை மாட்டிட்டு எல்லாரும் கிளம்புங்க..அங்க எங்களுக்கு அலார்ட் பண்ண வுட் ஹவுஸ் இருக்கு. அங்க போகலாம்..” என்றான் வெற்றி.
“ரொம்பத் தேங்க்ஸ் சார். கேர்ள்ஸ் இருக்காங்க, என்ன பண்றதுன்னு யோசிச்சுட்டு இருந்தோம். நல்லவேளை நீங்களே வந்து உதவி பண்றிங்க சார்..” என்றான் ஒருவன்.
“அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை.. நாங்க எங்கயும் வரலை..” என்றாள் வர்ணிகா பட்டென்று.
“என்ன நிகா பேசுற..? மழையப் பார்த்த தானே, அடிக்கிற காத்துக்கு டெண்ட் பிச்சுகிட்டு போனாலும் ஆச்சர்யப்படுறதுக்கு இல்லை. கொஞ்ச நேரம் நீ பேசாம இரு..” என்றாள் ஜெர்சி. அருகில் இருந்த மற்றோருத்தியோ,
“எனக்கு ஓகே தான் ஹேண்ட்சம் ஆபீசர்..” என்றாள் முகம் முழுவதும் புன்னகையாக.
“ரொம்ப வழியுது, முதல்ல துடை..” என்று வார்த்தைகளை கடித்துத் துப்பினாள் வர்ணிகா.
“வர்றவங்க வாங்க. இருக்குறவங்க இருங்க. என்ன, மழை நின்னாலும் கூட, மலைப் பாம்புகள் அதிகமா அலையும்..” என்று போற போக்கில் சொல்லிவிட்டு அமைதியாய் நின்றான் வெற்றி.
“பாம்பா..” என்ற வர்ணிகாவுக்கு உள்ளுக்குள் லேசாக உதறல் எடுத்தது.
“அடம் பிடிக்காம ரெயின் கோட்டை போடு நிகா..” என்ற ஜெர்சி,
அனைவரும் அவரவர் கவனித்தில் இருக்க, திரும்பியவளின் அருகில் நின்றிருந்தான் வெற்றி. அவன்மீது பட்டென்று இடித்துவிட்டாள் வர்ணிகா.
“என்ன..?” என்றாள் கோபமாக.
“புரியலை..?” என்றான் வெற்றி.
“இப்ப எதுக்கு சார், பக்கத்துல வந்து உரசுறிங்க..?” என்றாள் கோபமாக. அவள் முகம் சிவந்து போக, வெற்றியோ அவள் முகத்தில் இருந்து பார்வையை எடுக்கவில்லை.
“உங்களைத்தான் சார்..” என்றாள் அழுத்தி. அந்த அழுத்தத்தில் விடுபட்டவன்,
“என்னைப் பார்த்தா எப்படித் தெரியுது உனக்கு..? இந்த டெண்ட்குள்ள இத்தனை பேர் நிற்கிறதே பெரிசு. வெளிச்சமும் கம்மியா இருக்கு. இதுல நான் ஆராய்ச்சியா பண்ணிட்டு இருக்க முடியும்..?” என்றான் வெற்றி கோபமாக.
ஆனால் வர்ணிகாவுக்கு அவன் எதார்த்தமாய் தன்னருகில் வந்ததைப் போல் தெரியவில்லை. உடலில் ஏற்பட்ட குளிருக்கு அவனின் அருகில் நிற்பது இதமாக இருந்தாலும் மூளைக்குள் அபாய மணி அடித்தது அவளுக்கு. பார்க்காததைப் போல் அவனைப் பார்த்து வைக்க, மலையில் நனைந்திருவனின் தேகம் சிறிதும் நடுங்காமல், திண்ணென்று நின்றிருந்தான்.
“ஜெர்சி சொன்ன மாதிரி இவன் கொஞ்சம் ஹேன்ட்சம் பிகர் தான்..” என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டாள். அதுவும் போனால் போகிறதென்று.
வெற்றிக்குத் தான் உள்ளுக்குள் பல கலவையான எண்ணங்கள். நியாபக இடுக்குகளில் பல சம்பவங்கள் வந்து செல்ல, அவளுக்கு அருகில் நிற்கும் போது, தன்னைக் கட்டுப் படுத்த முடியாமல் திணறியவன், பட்டென்று அந்த கொட்டுகிற மழையில் வெளியே வந்துவிட்டான்.
“சார்..!” என்று அனைவரும் கூப்பிட,
“எல்லாம் ரெடின்னா, வாங்க போகலாம்..!” என்று முன்னே நடக்கத் தொடங்கினான் வெற்றி.
error: Content is protected !!